Friday, April 4, 2014

கண்டி மன்னரின் கடைசி வாரிசு மரணம்

"நினைப்பு பிழைப்பை கெடுத்ததாம்..."மன்னர் பரம்பரை வழி தோன்றல் ஜெயகுமாரன் பேசுகிறார்

 

மணி  ஸ்ரீகாந்தன்கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் 1815 ஆம் ஆண்டு கண்டி ராச்சியத்தின் வீழ்ச்சியின் பின்னர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு அவர் தமிழகத்தின் வேலூர் சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே 1832 ஆம் அண்டு உயிர்துறந்தார். கண்டியில் மன்னனுடன் அவரது அரசுடன் தொடர்பு கொண்ட நாயக்க குலத்தவர் எவரும் இருக்கக்கூடாது என்பதற்காக அனைவருமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இன்று அம்மன்னன் பரம்பரையில் வழி வந்தவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரிதிவிராஜன்.

கண்டி மன்னனின் கடைசி வாரிசான பிரிதிவிராஜன் அண்மையில் தமது 75 ஆவது வயதில் வேலூரில் காலமானார். வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பணியாளராக அவர் சில காலம் பணியாற்றினார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, வேலூர் கோட்டையில் நடைபெற்ற ஒரு விழாவில் நான் பிரித்திவிராஜனை சந்தித்துப் பேசினேன். பிரிதிவிராஜனின் கடைசி பத்திரிகை பேட்டி இதுதான்,

"ஆள், அம்பு, அந்தப்புரம்னு வாழ்ந்திருக்க வேண்டிய ஆளுங்க நானு.... ஆனா இன்னைக்கு அஞ்சுக்கும், பத்துக்கும் யாரு யாருகிட்டேயோ கை கட்டி வேலை செய்யிற நிலமையில இருக்கேன். கொஞ்ச காலமா தியேட்டருலதான் வேலை பார்த்தேன். சம்பளம் நமக்கு கட்டுபடியாகலை. அதனால் இப்போது ஒரு கடையில் காவலாளியா இருக்கேன். என்னோட நிலமைய பார்த்தீங்களா....?" என்று அவர் கூறிய போது பரிதாபமாக இருந்தது. ஒரு நாயக்க அரசு பரம்பரையை கால வெள்ளம் எப்படி எல்லாம் இழுத்துச் சென்றிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்! பிரிதிவிராஜன் உடல் தளர்ந்து ரொம்பவும் நொந்து போய் காணப்பட்டார்.
'ஆற்காட்டு நவாப்பின் வாரிசுகளுக்கும், கட்டபொம்மனின் வாரிசுகளுக்கும் இன்னமும் அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால் எங்களுக்குத்தான் ஒன்றும் கிடையாது. நானும் கலைஞருக்கும், அம்மாவுக்கும் அரசு சலுகைகளுக்காக எத்தினையோ கடிதங்கள் அனுப்பிவிட்டேன். ஒன்றுக்கும் பதில் இல்லை. அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தால் கூட நல்ல பதில் கிடைத்திருக்கும்" என்று சொல்லும் போது அவரின் கண்களில் கோபத் தணல்.....

ப்ரிதிவிராஜன் தனது உரையாடலில் வெள்ளைக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. "வெள்ளைக்கார பயலுங்க ரொம்ப மோசமானவனுங்க.... எங்க பாட்டனை கண்டியில் கைது செய்த வெள்ளைக்காரன், அவரோட இரத்த உறவுகள் யாரும் இலங்கையில் இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டு எங்க கூட்டத்தார் எல்லாத்தையும் நாடு கடத்திட்டாங்க.. அப்படி அனுப்பாம இருந்திருந்தா நான் அங்கேயாவது நிம்மதியா இருந்திருப்பேன்" என்று கூறி முடித்த போது ப்ரிதிவியின் கண்கள் கலங்கின.
பிரிதிவி ராஜன் ராஜசிங்கன்
நினைவு நாள் வைபவத்தில்
இந்த உரையாடலுக்கு பிறகு சில மாதங்களில் ப்ரிதிவிராஜன் இறந்து விட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து மன்னரின் வாரிசுகள் யாராவது தமிழகத்தில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தோம். தமிழக எல்லையைக் கடந்து ஆந்திரா, திருப்பதியில் சிக்கினார் ஜெயகுமாரன்.

இவரும் கண்டி மன்னரின் வாரிசுதான். ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கனின் நான்காவது மனைவியின் பெயர் வெங்கட ஜம்மாள். இவரின் மகள் பெயர் சினேகவள்ளி இவருக்கு ஒரு மகள். அவள் பெயர் சுந்தரம்பாள். அவரின் மகள் பெயர் பத்மாவதி. பத்மாவதியின் மகன்தான் இந்த ஜெயகுமாரன். இவர் சன் நெட்வெர்க் நிறுவனத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையின் திருப்பதி செய்தியாளராக பணியாற்றுகிறார்.

இவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தன்னால் பிரிதிவிராஜனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொன்ன அவர் முன்வைத்த கருத்துகள் வித்தியாசமானவை.

"மன்னரை சிறை வைத்த வெள்ளைக்காரர்கள் மன்னரின் வாரிசுகளை நன்றாகவே கவனித்து இருக்கிறார்கள். வேலூர் கொனவட்டத்தில் 12 ஏக்கரில் சொந்தமாக காணி கொடுத்து குடியமர்த்தி இருக்கிறார்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் எங்கள் குடும்பத்திற்கு இலங்கை அரசு மானியம் வழங்கி வந்திருக்கிறது. இலங்கை குடியரசு நாடாக மலர்ந்த பின்னரேயே இந்த மானியம் நிறுத்தப்பட்டது. வேலூரில் அரசுக்கு வரி கட்டிய குடும்பம் எங்கள் குடும்பமாகத்தான் இருந்திருக்கிறது. மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர்கள்.

ஆனால் எங்கள் குடும்ப அதிகாரங்கள் அனைத்தும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கே உரித்தானது. எனவே அரசர்கள் போல அவர்கள் வாழ முடியும். அப்படித்தான் இந்த ஆண் வாரிசுகள். சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள். எப்போதும் மதுவும் மாதுவுமாக வாழ்ந்து அனைத்தையும் இழந்து இன்று ஒன்றுமில்லாதவர்களாகிவிட்டார்கள்.

மன்னர்களின் ஆட்சியில் அவர்களின் கஜானா எப்போதும் நிரம்பி வழியும். அதனால் அவர்கள் மதுவும் அந்தபுரமுமாக கிடக்க முடிந்தது. அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் ஆட்சி இழந்து நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் தங்களை ராஜா என நினைத்து வாழ்ந்தால் எப்படி உருப்படுவார்கள்? கொஞ்சம் கூட சிந்திக்காமல் நாளைக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை தட்டிக் கேட்கவோ அதிகாரத்தை கையில் எடுக்கவோ என் பாட்டிகளுக்கு (பெண் வாரிசுகள்) முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவுதான் அவர்களாலும் முடியும். இப்படி எங்கள் சொத்தை அழித்தவர்களில் பிரிதிவிராஜனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் கொடுத்த காணிகளையெல்லாம் வந்த விலைக்கு விற்று குடித்திருக்கிறார். தஞ்சாவூரில் எங்கள் சொத்தாக இருந்த கண்டி ராஜா அரண்மனையும் இப்படிப் பறிபோய் விட்டது. அதுதான் சொல்வார்களே "நினைப்பு பிழைப்பைக் கெடுத்ததாம்" என்று.... அதுதான் எங்களுக்கு நடந்தது என்று ஒரே மூச்சில் பேசி முடித்து விட்ட ஜெயக்குமாரின் பேச்சில் எதையோ தொலைத்துவிட்ட ஏக்கத்தை என்னால் உணர முடிந்தது.

இறந்து போன பிரிதிவிராஜனுக்கு தான் அறிய மூன்று மனைவிகள் என்று கூறிய ஜெயகுமார், மன்னரின் இரத்த உறவுகள் சென்னை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றும் சுமார் ஐம்பது பேர் வரை இருக்கலாம் என்றும் ஒரு தகவல் சொன்னார். இவர் இலங்கை மன்னரின் வாரிசு என்பது சன்நெட் வேர்க் அலுவலகத்தில் தெரியுமாம். ராஜா வாரிசு என்று சொல்லும் போது பெரும்பான்மையாகத்தான் இருக்கும் என்று கூறி முடித்தார் ஜெயகுமார்.

No comments:

Post a Comment