Wednesday, April 16, 2014

சைவ உணவக வரலாறு -4

கொழும்பில் வேலை செய்ய ஏன் உள்ளுர்த் தொழிலாளர்கள் முன்வரவில்லை?கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்

மணி  ஸ்ரீகாந்தன்   

"அந்தக் காலத்தில் கொழும்பில் இப்போது மாதிரி பெரிய கடைகள் ஏதும் இல்லை. எல்லாம் சின்ன சின்ன ஓட்டுக்கடைகள்தான். இந்த பேங்ஷால் வீதி, மெயின் வீதி செட்டித்தெரு என்று எங்கு பார்த்தாலும் ஓட்டுக்கடைகள்தான் கண்ணில் படும். பெரிய மக்கள் கூட்டம் இல்லை. வீதிகள் பரபரப்பாக இருக்காது. தண்டவாளத்தில் ஓடும் டிரம் கார் அங்கும் இங்குமாக ஓடும். அதோடு மாட்டு வண்டிகள் ஜல்... ஜல்... என சலங்கை சத்தத்தோடு வீதியை கடந்து போகும்.
இப்போ ஆட்டோ மாதிரி... அப்போ மாட்டு வண்டிகள்தான் கொழும்பை ஆக்கிரமித்திருந்தது. கை ரிக் ஷா அப்போது புழக்கத்தில் இருந்தது. கை          ரிக் ஷா  ஸ்டாண்ட் ஒன்று கொழும்பு கார்கில்ஸ் பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. அதில் ரிக் ஷா வரிசையாக அணிவகுத்து நிற்கும். பயணிகளை  ரிக் ஷாவில் அமரவைத்து கொளுத்தும் வெயிலில் காலுக்கு செருப்புக்கூட இல்லாமல்  ரிக் ஷாவை இழுத்துக் கொண்டு ஓடும் தொழிலாளர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஒரே ஒரு முறை நான் கொம்பனி வீதியிலிருந்து பேங்ஷால் வீதி வரை கை  ரிக் ஷாவில் அமர்ந்து வந்திருக்கிறேன். அதற்கு பிறகு நான்  ரிக் ஷாவில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொண்டேன்" என்று சொல்லும் கோல்டன் கபே ராமன் அந்தக் காலத்தில் கொழும்பில் இருந்த பெயர் பெற்ற உணவகங்களை வரிசைப்படுத்தினார். சைவ பிள்ளையார் ஹோட்டல், பிராமணர் ஹோட்டல், உடுப்பிலொட்ஜ், கோமதி விளாஸ், மெட்ராஸ் கபே, சரஸ்வதி கபே ஆரியபவன் என்பன பட்டியலில் அடங்கும்.

"இந்த ஹோட்டல்களில் பெரும்பாலானவை இன்று இல்லை. கால ஓட்டத்தில் எல்லாமே கரைந்து விட்டது" என்கிறார்.

கொழும்பு மாநகரசபையால் வழங்கப்படும் சிறந்த சைவ உணவகத்துக்கான விருதினை 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கோல்டன் கபே உணவகமே பெற்றிருக்கிறது. கோல்டன் கபேயின் தரத்துக்கு ஆதாரமாக போட்டோவையும், சான்றிதழையும் காட்டி பெருமிதமடைந்தார் ராமன்.
இளமையில் மனைவியுடன்
"அப்போது காய்கறிகள் இந்தியாவிலிருந்து படகுகளில் வந்து இறங்கும். அப்போது நம் நாட்டில் உற்பத்தி குறைவாக இருந்தது. அப்படி கிடைக்கும் காய்கறிகளை மெனிங் சந்தையில் வாங்குவோம். இப்போது பீப்பள்ஸ் பார்க் கட்டடம் இருக்கும் இடத்தில் தான் அன்று மெனிங் மார்க்கட் சந்தை அமைந்திருந்தது. அந்த நாட்களில் கடைகளில் வேலை பார்த்த அனைவருமே இந்தியர்கள்தான்.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியதால் பசிக்காகவும், பிழைப்புக்காகவும் கொழும்புக்கு வந்தார்களாம் பெருந்தொகையான ஏழை இந்தியர்கள். தொழிலும், சாப்பாடும் கிடைச்சால் போதும் என்றே நினைத்தார்களாம். அதற்கு பிறகுதான் சம்பளம் எல்லாம். அதனால் பதினாறு மணிநேரம் உழைத்தவர்களுக்கு குறைந்த அளவான சம்பளமே வழங்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை பகிர்ந்து கொண்ட ராமனிடம், அப்போது இந்தியர்களுடன் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் பணியில் இருந்தார்களா? என்று கேட்டோம்.
"இல்லை. அப்படி யாரும் பணியில் இல்லை. தமிழர்களும், மலையாளிகளுமே வேலைபார்த்தார்கள். தொழிலுக்காவே இங்கே வந்திருந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் வசித்து வந்தன. தமது மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டுமே என்ற காரணத்திற்காகவும் அவர்கள் உண்மையாக உழைத்தார்கள். இதே சமயம் உள்ளுர் தொழிலாளர்கள் தமது கிராமங்களையும் சொந்த பந்தங்களையும் விட்டு வெளியே வரவிரும்பவில்லை.

பாரம்பரிய தொழில்கள் தொடர்பான வேலைகளைத்தவிர வேறு வேலைகளைச் செய்வதில் அவர்களுக்கு விருப்பமோ அக்கறையோ இருக்கவில்லை. அந்தக் காலத்தில் உள்ளுர் போக்குவரத்து சிரமமான ஒரு காரியமாக இருந்ததால் வெளியிடங்களில் இருந்து கொழும்புக்கு வரவும் அவர்கள் விரும்பவில்லை. இதனால் வேலையாள் பற்றாக்குறை கொழும்பில் நிலவியது. இந்தியர்களை நம்பியே கொழும்பு வர்த்தக சமூகம் இருந்தது. எனினும் 70பதுகளுக்கு பிறகு பெரும்பாலான இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்ததால் வேலைகள் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. அந்த நேரத்தில் மலை நாட்டிலிருந்து கொழும்புக்கு வந்து எம்மிடம் வேலை கேட்ட பல தமிழர்களை நாம் பணிக்கு அமர்த்தினோம். இன்று வரை அவர்கள்தான் கொழும்பு ஹோட்டல்களில் பணியாற்றுகிறார்கள்.

கோட்டை யோர்க் வீதி கை ரிக் ஷா ஸ்டான்ட்,
மில்லர்ஸ் கட்டடத்தை கவனியுங்கள்,இன்றைய கார்கிள்ஸ்
கட்டடம் கட்டப்படாத காலம்.
அவர்களும் நல்லவர்கள்தான் ஆனால் தைப்பொங்கல், தீபாவளி என்று. ஊருக்கு போனால் மீண்டும் கொழும்பு திரும்ப மாட்டார்கள். அப்படியே வந்தாலும் அதற்கு பல வாரங்கள் ஆகும். அந்த நேரத்தில் நாங்கள் வேறு நபர்களைத் தேடுவோம். டீ மாஸ்டர், சமையல்காரர் ஆகியோரை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஹோட்டல்களில் வேலை செய்த காலத்தை கணக்கில் எடுத்தே தொழில் வழங்குவோம். ஹோட்டல்களில் முக்கியமாக சர்வர்கள் மிகவும் ஒழுக்கமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சுத்தமாக இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காமல் சாப்பிட வருவார்கள். ஒரு உணவகத்துக்கு எப்படி சாப்பாடு சுவையாக இருக்கணுமோ அதே மாதிரி உணவை பறிமாறும் சர்வரும் சுத்தமாக இருக்க வேண்டும்" என்று ராமன் ஒரு நீண்ட விளக்கத்தை தருகிறார்.

கொழும்பு இலக்கிய வட்டத்தில் ராமனுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அநேக இலக்கிய அன்பர்களுக்கு இவரைத் தெரிகிறது. இலக்கிய உலகில் இவர் ஒன்றும் பெரிய படைப்புகளைத் தரவில்லைதான். ஆனாலும் பேங்ஷால் வீதியில் உள்ள கோல்டன் கபேயில் பெயருக்கு தகுந்தாற் போலவே நாவுக்கு ருசியாக உணவையும் அறிவுக்கு தீனியையும் வழங்கி வருகிறார். இவர் தொகுத்தெழுதிய சிதறிய முத்துக்கள். பொன் மொழிகளில் பெண்மணிகள் உள்ளிட்ட இரண்டு நூல்களையும் அவரின் உணவகத்தில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திலேயே முதல் கலர்டீவி ராமனின் வீட்டில்தான் இருந்ததாம். 80களில் பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியில் ஒரு கலர் டீவியை கொழும்பிலிருந்து ராமன் வாங்கி சென்றிருக்கிறார். விசயத்தைக் கேள்விப்பட்ட மக்கள், ராமனின் வீட்டை சூழ்ந்து கலர் டீவியில் ஒளிபரப்பான 'ரூபாவாஹினி' அலைவரிசையை அதியசமாக பார்த்திருக்கிறார்கள். இந்தியாவில் கலர் டீவி பாவனையில் இல்லாத காலம் அது. தமிழ் ஒளிபரப்பு என்றால் அது நம் ஊர் ரூபவாஹினிதான்.... வாணிவிலாஸ் உரிமையாளரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அதனால் அவரின் வீட்டிலும் கலர் டீவி இருந்தது.


"முப்பத்தைந்து வயதில்தான் எனக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. நான் பெண்ணை முதல்முறையாக மணவறையில் தான் பார்த்தேன். அக்காதான் என் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் மனைவியின் பெயர் சரோஜா" என்று தமது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை மீட்டிப்பார்த்த ராமன் சாம்பார் வாளியை தூக்கிக்கொண்டு "கொஞ்சம் இருங்க அந்த நபரோட சாப்பாட்டுல குழம்பு கொஞ்சம் குறைவாக இருக்கு பறிமாறிட்டு வர்ரேன்" என்று கூறியபடியே நகர்ந்தார்.
 

மேலும் வாசிக்க…

கொழும்பின் சைவ உணவக வரலாறு -5

No comments:

Post a Comment