Wednesday, April 2, 2014

வேடந்தாங்களில் அதிரும் பறை 03

"சாதி எச்சிலை முகத்தில் இருந்து துடைத்துவிட்டு வந்திருக்கிறேன்"


மணி  ஸ்ரீகாந்தன்

"சாதி வெறி மீதான காதலை இடை மறிப்போம் சாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிப்போம்" என்பது புத்தர் கலைக்குழுவின் முழக்கங்களில் ஒன்று.

"இந்த முழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எமது குழுவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக, சாதி மறுப்பு (அதாவது சாதிக்கு வெளியே சென்று திருமணம் செய்வது) திருமணங்களை செய்யும் எமது தோழர்களுக்கு புத்தர் கலைக்குழு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனாலும், எமது நோக்கம் சாதி மாறி திருமணங்களை செய்து வைப்பது மட்டுமல்ல, காலா காலமாக இந்தப் பறை சாவுக்கானது, சாதியை அடையாளப்படுத்துவது என்று ஓரங்கட்டி வைத்திருந்தார்கள். அந்த பறையை உயர் சாதியினராகத் தம்மைக் கருதும் வன்னியரும், முதலியாரும் 'இது நம்முடைய இசைக் கருவி' என்று சொல்ல வைப்பதுதான் எமது முக்கிய நோக்கம்" என்கிறார் மணிமாறன். அவரது பேச்சில் நம்பிக்கை பளீரிடுகிறது.
"எமது பறை இசை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களில் இருபத்தைந்து சதவீதமானோர் சாதி இந்துக்கள்தான். இதுவும் எமக்குக் கிடைத்த வெற்றிதான். பறை இசை கற்க வரும் ஆர்வலர்களிடம் 'நீங்கள் என்ன குலம், என்ன சாதி என்று நான் ஒருபோதும் கேட்பதில்லை. ஆனால் சமூகத்தால் நீங்கள் என்ன சாதி என்று கேட்பதுண்டு. அதற்குக் காரணம் உண்டு.
சாதி என்பது என் முகத்தில் உமிழ்பட்ட எச்சில் என்றே நான் கருதுகிறேன். அதை துடைத்து விட்டுத்தான், நான் வெளியே வந்திருக்கிறேன். அதனால், நான் சாதி பற்றோடு அதைக் கேட்கவில்லை. எந்தெந்த சாதிக்காரர்களெல்லாம் பறை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம்.
திவ்யா - இளவரசன் காதலால் ஏற்பட்ட தர்மபுரி சாதிக் கலவரம் முடிவடைந்து அதன் கண்ணீர் கூட காய்ந்திருக்காது.... அந்த சமயத்தில்தான் வேடந்தாங்களில் எமது பறை இசை பயிற்சிப் பட்டறை துவங்கியது. அந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த ஆறு வன்னியரும் - ஆறு பறையரும் கை குலுக்கி நட்பு பாராட்டியதோடு, உணவையும், உடையையும் பகிர்ந்து கொண்டார்கள். பறை இசையால் சாதிகளை விரட்டவும் முடியும் என்பதை இந்த சம்பவம் பறை சாற்றுகிறது" என்று மணிமாறன் சொன்னபோது பூரிப்பு முகமெங்கும் அப்பிக் கிடந்தது.

மணிமாறன் புத்தர் கலைக்குழு கோயில் திருவிழா, திருமண வீடுகள், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு பறை முழக்கம் செய்வதால், பறையைப் பற்றி தெரிந்த தமிழ் பற்றாளர்கள் மட்டும்தான் உங்களை விஷேசங்களுக்கு பறை வாசிக்கும் படி அழைக்கிறார்களா? என்று எமது சந்தேகத்தை கேட்டோம்.

"தமிழ் தேசியம் பேசுவோர் மட்டுமே எம்மை அழைக்கிறார்கள் என்றால் பறை இசை அழிவுப் பாதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால், நிலமை அப்படி அல்ல. பிராமணர் வீட்டிலும் சாதி இந்துக்கள் வீட்டிலும் நாம் பறை இசைக்கிறோம். அவர்களாகவே எம்மை அடையாளம் கண்டு அழைக்கிறார்கள். அங்கே தான் எமது வெற்றி தங்கியுள்ளது. ஏனெனில் பறை இசையை மறுபடியும் அதே சமூகத்திடமே கொண்டு சென்று கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் விரிய வேண்டும். அனைத்துத் தமிழர்களின் இசைக்கருவியாக அது மாற வேண்டும். மேலும் எமது குழுவில் நிறைய இளம் பெண்கள் பறை இசைக்கிறார்கள். அவர்களை கச்சேரிகளில் மட்டுமே பறை இசைக்க அனுமதிக்கிறேன். தெருக்களில் வாசிக்க அனுமதிக்க முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால், பெண்கள் மீதான இந்த சமூகத்தின் பார்வை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது மாற இன்னும் கொஞ்சம் காலம் செல்லும்...." என்று சொல்லும் மணிமாறனின் வெறுப்பு இந்த சமூகத்தின் மீதுதான்.

பறை பயிற்சிக்கு வந்திருந்த பெண்களில் சிலர் பறையை அனுபவித்து இசைத்துக் கொண்டிருந்த அழகு எம்மை அவர்கள் பக்கமாக இழுத்துச் சென்றது.

சென்னை கல்லூரி மாணவிகளான கீர்த்தனா, சங்கீதா, காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த திலகவதி, ஹேமாவதி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்கி இருந்தார்கள். தெருக்கூத்து கலைஞரான திலகவதி பறை இசைக்கு அடவு கட்டி ஆடிய ஆட்டம் பிரமிக்க வைத்தது.

"நாங்க தெருக்கூத்து கலையை கட்டைக் கூத்துண்ணுதான் அழைப்போம். அந்தக் கட்டைக்கூத்து கலையை நான் முறையாகக் கற்றுக்கொண்டேன். இப்போது சென்னையில் ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அங்கே சிறுவர்களுக்கு கூத்துக் கலை பற்றியும் சொல்லிக் கொடுக்கிறேன். அதனால் எனக்கு பறை இசை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் மணிமாறனிடம் இப்போது பறை இசையை கற்க வந்திருக்கிறேன்" என்று திலகவதி நிறுத்த கீர்த்தனா தொடர்ந்தார், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இந்த கலைமீது ஆர்வம் அதிகம். ஆனால் கற்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கு. அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவர் சொல்லி முடிக்க அடுத்ததாக உரையாடலில் இணைந்து கொண்டவர் சங்கீதா.

"என்னையும் கீர்த்தனாவையும் எங்கள் நண்பர்கள்தான் ஊக்கப்படுத்தி பறை இசைப்பதை கற்கும்படி அனுப்பி வச்சாங்க,

நாங்க கற்றுக்கொண்டு அவங்களுக்கும் கற்றுக்கொடுக்கணும" என்று கீர்த்தனாவும் சங்கீதாவும் சொன்னப் போதும் அவர்களின் குரலில் இசையால் சாதிக்கப் போகிற ஒரு வேகம் புயலாக எம்மை கடந்து சென்றது.

 "நான் நல்லா பாட்டு எழுதுவேன், பாடுவேன் இன்றைக்குத்தான் மணிமாறன் அண்ணன் கிட்டே பாடிக்காட்டினேன், பாராட்டினார்" என்ற போது ஹேமாவதி குருவின் பாராட்டில் ரொம்பவே உச்சி குளிர்ந்து போய்தான் இருக்கிறார் என்பதை அவரின் ஜிலீர் பேச்சிலிருந்து புரிந்து கொண்டோம்.

"நான் ஹவுஸ் வைப்பா இருக்கேன். என் வீடு காஞ்சிபுரம் தண்டரைப் பேட்டையில இருக்கு. என் கணவரோட முழு ஆதரவும் எனக்கு இருக்கிறது. அவர்தான் என்னை பறை பழக அனுப்பி வைச்சார்! கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் நான் கற்று வந்த பறையை இசைத்துக் காட்டச் சொல்லி ரசிப்பார்" என்று ஹேமாவதி சொல்லும் போது அவரின் முகத்தில் வெட்கம்....

மேலும் வாசிக்க…

வேடந்தாங்களில் அதிரும் பறை 04

No comments:

Post a Comment