Thursday, April 17, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 02

இஸ்லாத்தில் இசை ஹலால் என்ற கருத்தை முன்வைத்த புரட்சி மாநாடு!

அருள்  சத்தியநாதன்

கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடக்கப் போகிறது என்ற தகவல் வெளியானதுமே, இலங்கை முஸ்லிம் இலக்கிய உலகில் முட்டு மோதல் தொடங்கி விட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாடுகளிலும் இப்பிரச்சினை எழவே செய்தது. ஆனால் இந்த அளவுக்கு இல்லை. கோவை செம்மொழி மாநாட்டிலும் கூட மனவேதனைகள் இருந்தன. ஆனால் தமிழக அரசு நடத்ததும் விழா என்பதால் பெரிதுபடுத்தாமல் இருந்து விட்டார்கள்.
இலக்கியவாதிகள், படைப்பாளர் எனப்படுவோர் எத்தனை மேதா விலாசமும், படைப்பாற்றலும் அறிவுக் கூர்மையும் கொண்டிருந்தாலும் கூடவே தலைக்கனம், புகழ்ச்சியில் பெருமிதம், தான் என்ற கர்வம் கொண்டவர்களாக விளங்குவதே, இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் காணக்கூடிய காட்சியாக விளங்குகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, லண்டனிலும் ஏகப்பட்ட தமிழ்ச் சங்கங்கள். ஒருவர் நடத்தும் விழாவுக்கு மற்ற குரூப் செல்வதில்லை. ரா.பி சேதுப்பிள்ளை - அண்ணாத்துரை கருத்து வேறுபாடு, புதுமைப் பித்தன் கல்கி கிருஷ்ணமூர்த்தி மோதல், வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடைபெற்ற சமயச் சண்டை எல்லாம் இதற்கு முன்னுதாரணங்கள்.

ஆனால் இவற்றில் விஷயம் இருந்தது. இரு வேறான கருத்துகள் மோதிக் கொண்டன. ரா. பி. சேதுப்பிள்ளை கம்பராமாயண ரசனை மிக்கவர் என்றால் பேரறிஞர் அண்ணாதுரை அதை எரிக்க வேண்டும் என்று வாதாடியவர். வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையிலான சமயச் சண்டையிலும் விஷயம் இருந்தது. இச்சண்டைகள் இறுதியாக வாசகனுக்கு அல்லது பொது மக்களுக்கு அறிவைப் பெற்றுத் தருவதாக இருந்தன.

இப்படித்தான் கருத்து மோதல்கள், இறுதியாக மக்களுக்கு பயன் தருவதாக அமைய வேண்டுமே தவிர, வெறுமனே காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது.

கும்பகோணம் இஸ்லாமிய இலக்கிய மாநாடு தொடர்பாக நிறைய கருத்துகள் வெளிவந்தன. இவற்றை கருத்து மோதல் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இங்கே தெரிவிக்கப்பட்டவை ஒரு பக்கச் சார்பான கருத்துகள் மட்டுமே, சார்பானவர்கள் பக்கத்தில் இருந்து அவர்களின் கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.
பார்வையாளர் வரிசையில் மணிப்புலவர் மஜீத்,
டாக்டர் தாஸிம் அஹமட்
தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு கருத்துகளை எடுத்துக் கொண்டாலும், அவற்றை வாசிக்கும் ஒருவரின் மனதில், இங்கே கருத்து நிலை மோதல் எதுவும் நிகழ்ந்திருப்பதாக தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் எதிர்ப்புகளில் பெரும்பாலானவை, என்னை ஏன் அழைக்கவில்லை? நாங்கள் எந்த வகையில் பொருத்தமற்றவர்கள்? என்ற ரீதியாகவே அமைந்திருந்ததே தவிர, பொருட் குற்றம் காண்பதாக இருக்கவில்லை. இது உலக மாநாடா, மாநில மாநாடா? ஏன் பரந்த அளவில் முன்னறிவிப்பு செய்யவில்லை? எங்களைத்தான் தகுதியற்றவர்கள் என நிராகரித்து விட்டீர்கள். சரி, சென்றவர்கள் அனைவருமே தகுதியுள்ள இஸ்லாமிய இலக்கிய பிரமுகர்கள் தானா? இலங்கையில் அமைப்பாளர் அல்லது பிரதிநிதியாக செயற்பட்டவர்கள் தகுதி உடையவர்கள் தானா? என்பதாகவே இக்கண்டனக் கணைகள் அமைந்திருந்தன.

படைப்பாளர் முத்துமீரான் கவிஞர் இஸ்மாயில்
ஆகியோர் கவிக்கோவை கௌரவிக்க அருகே
பொதுச் செயலாளர் அப்துல் சமது
பொருளாளர் சாஜஹான்,அமர்ந்திருப்பவர் மருத்துவர் ஜாபிர்
அதன் பின்னர் பலர் அரைத்த மாவையே அரைத்தனர். விவாதமும் சப்பென்று போனது. எனினும் எவருமே, கும்பகோண இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் தரத்தை, எடுத்துக்கொண்ட பொருளை, ஆற்றப்பட்டவற்றை குறிப்பிடவும் இல்லை, விமர்சிக்கவும் இல்லை, சவால் விடுக்கவும் இல்லை. எனவே இலங்கையில் எழுந்த கும்பகோண எதிர்ப்பு, வெறுமனே எங்களை ஏன் அழைக்கவில்லை? இது எங்களுக்கு அவமானம் அல்லவா? இனிமேலாவது எங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்ற 'நான்' என்ற தளத்தில் இருந்து எழுப்பப்பட்டவை என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

எனினும் இலங்கையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாகச் சொன்னால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விளம்பரம் செய்யாமல் விட்டதைக் கூறலாம். இங்கிருந்து சென்றோரில் சிலரே பயன்தரும் வகையில் பங்களிப்பு செய்திருந்தனர். மிகக் குறைவான ஆய்வுக் கட்டுரைகளே சமர்ப்பிக்கப்பட்டன. இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால் பயன்தரக்கூடிய பல ஆய்வுக் கட்டுரைகள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்க முடியும். இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சி ஒன்றினையும் மேடையேற்றி இருக்கலாம்.

இம்மாநாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் பங்குபெற அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல தமிழக அரசியல்வாதிகளும் அழைக்கப்படவில்லை. இத்தனைக்கும் இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கலைஞரின் சீடர். மாநாட்டு அனுசரணையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கும்பகோணம் இஸ்லாமிய சோஷியல் வெல்ஃபெயர் அசோஸியேஷன் (கிஸ்வா) பிரமுகர்களும் தி. மு. க., காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்திருக்கலாம்.

ஏழாவது மாநாடு 2007 மே மாதம் சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஆளுநர் பர்னாலா, காங்கிரஸ் அமைச்சர் ஜி. கே. வாசன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் ரஹ்மான்கான் உட்பட பல கழக, காங்கிரஸ் பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த இலங்கை அரசியல்வாதிகள் குறிப்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேடைக்கு அழைக்கப்படவில்லை.

மாநாடு முடிவடைந்ததும், இம்மாநாடு கவிக்கோவின் இஸ்லாமிய இலக்கிய மாநாடா அல்லது அரசியல் மாநாடா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. பலருக்கும் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

"இதைப் பாடமாகக் கொண்டே, எட்டாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு அரசியல் கலப்பற்ற மாநாடாக நடத்த முடிவு செய்தோம்" என்று என்னிடம் கூறினார் பொதுச் செயலாளர் மு. அப்துல் சமது. இலங்கை மீது தமிழகம், குறிப்பாக இரு கழகங்களும் கொண்டிருக்கும் கருத்துக்கு அமைய இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. மேலும், இம்முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்நிலையை புரிந்து கொண்டதால், அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டனர்.
இம்மாநாட்டில் அரசியல்வாதிகள், எனினும், கலந்து கொள்ளவே செய்தனர். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளாக கலந்து கொள்ளாமல் மாநாடுடன் தொடர்புடையவர்களாகவே கலந்து கொண்டிருந்தனர். அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்திருந்தாலும், நடப்பது அம்மா ஆட்சி என்பதால், ஏற்பாட்டாளர்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இஸ்லாமிய இலக்கிய மாநாடு, இதுவரை நடைபெற்ற எல்லா இஸ்லாமிய மாநாடுகளை விடவும் வித்தியாசமானது, மேன்மையானது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தப் புகழை இம்மாநாடு தட்டிச் சென்றிருக்கிறது.

இஸ்லாத்தின் மீது பற்றும் மரியாதையும் கொண்ட அனைத்து முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இருக்கக் கூடிய ஒரு கேள்விதான், இஸ்லாம் இசையை புறக்கணிப்பது ஏன்? என்பதாகும். இக்கேள்வியை இஸ்லாமியரிடம் கேட்டுப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அல்லது, அப்படி எல்லாம் கிடையாதே என்று மழுப்புவார்கள்.

மனிதனால் தவிர்க்க முடியாத விஷயம் தான் இசை. அது மனித உளவியலுடன் சம்பந்தப்பட்டது. அது, மிகுந்த சக்தி வாய்ந்தது.

துறவு காக்கத் தேவையில்லை என்றும், விதவைகள் மறுமணம் செய்யலாம் என்றும் சாதி, குலம் கிடையாது என்றும், கடவுள் என்பவன் ஒருவன் மட்டுமே என்றும் பல புரட்சிகரமான கொள்கைகளை நிறுவிய இஸ்லாத்திலா இந்த இசை மீதான வெறுப்பு? என்ற விடை தெரியாத கேள்வி என்னிலும் அவ்வப்போது எழுந்து அடங்கும். அக்கேள்விக்கான விடையை இம்மாநாடு தெளிவாக அளித்தது. மகிழ்ந்து போனேன் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமன்றி இஸ்லாமியருக்கும் இக் குழப்பம் இருந்தது என்பதை நான் அறிவேன். இந்த வகையில், இம்மாநாடு புரட்சிகரமான இஸ்லாமிய இலக்கிய மாநாடாகவே அமைந்தது. நூற்றாண்டுகளாக கௌவியிருந்த ஒரு மாயையை, தவறான அபிப்பிராயத்தை உடைத்தெறிந்தது. இதற்காகவே இம்மாநாட்டை தலையில் வைத்துக் கொண்டாடலாம்.

ஆனால், இசை இஸ்லாத்தில் ஹலால் அல்ல, ஹராமே என்று வாதிடுவோர் இன்னும் இருக்கவே செய்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை இம்மாநாடு ஹராம். இம்மாநாட்டை விமர்சித்தவர்கள் இது பற்றி எதுவுமே பேசவில்லை. ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பேசியிருந்தால் ஏற்புடையதாக அமைந்திருக்கும்.

நன்றி – வண்ண வானவில், ஏப்ரல் 2014
 கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 03

No comments:

Post a Comment