Thursday, March 6, 2014

இரா. முருகவேளுடன் ஒரு மனந்திறந்த உரையாடல்

“எரியும் பனிக்காட்டுக்கு நியாயம் செய்யாத பரதேசி ஒரு குப்பைப்படம்!”

 

மணி  ஸ்ரீகாந்தன்


'திரைக்கதை, பேசிய அரசியல், கெமரா, இசை, இயக்கம் என எல்லாத் தளங்களிலும் தோல்வியடைந்த வறட்சியான படம் அது'

'ஆசிரியர் டேனியலை பாலாவும் நாஞ்சில்நாடனும் கங்காணி என்று கொச்சைப்படுத்திய விதம் மன்னிக்க முடியாதது'

'அந்த டாக்டர் பாத்திரத்துக்கு அம்பேத்கர் போல உடையணிவித்திருந்தது சகிக்க முடியாதது'
தமிழகத்தின் வரண்ட பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், உலகின் பல பாகங்களுக்கு பயிர்ச்செய்கை மற்றும் சுரங்கத் தொழில் தொழிலாளர்களாக வெள்ளையர்களினால் அழைத்துச் செல்லப்பட்டது. ஒரு கண்ணீர் வரலாறு

இவர்களின் வாழ்க்கை வரலாறு இவர்கள் சென்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இவர்களின் சொந்த நாடான தமிழகம் இவர்களை முற்றிலுமாக மறந்து விட்டது. எந்தவொரு புத்தகமும், பதிவும் கிடையாது. இதனால்தான் சாமானிய தமிழனுக்கு, இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றொரு இனம் வாழ்வதே தெரியாத விஷயமாகி இருக்கிறது.

தமிழகத்திலும் கூட, வரண்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தமிழ்க் குடும்பங்களை மாய வார்த்தைகள் மூலம் மசிய வைத்து மலைப்பாங்கான தேயிலைத் தோட்டங்களுக்கு கங்காணிமார் அழைத்துச் சென்று அடிமைகளைப் போல அவர்களை நடத்தியிருக்கின்றனர்.

இக்கண்ணீர் வரலாறு கூட பதிவு செய்யப்படவில்லை. அதை முதலில் எழுத்தில் கொண்டு வந்து இந்திய படித்த சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். அவர் பெயர் டேனியல். அவர் எழுதிய நாவலின் பெயர் 'ரெட் டீ' என்பதாகும். பிற்காலத்தில் 'எரியும் பனிக்காடு' என்ற பெயரில் இது தமிழில் வந்து, தமிழ் வாசகர்களை உலுக்கிப் போட்டது. இந்நாவலைத் தழுவியே 'பரதேசி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து பெயர் பெற்றார் இயக்குநர் பாலா. ரெட் டீ ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் இரா. முருகவேள்.
அந்தக் கண்ணீர் கதையை முதல் முறையாக படம் பிடித்து வெள்ளித்திரையில் சினிமாவாக காட்டிய பெருமை இயக்குநர் பாலாவை சாரும். 'ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை அப்படியே பாலா பரதேசியாக பதிவு செய்திருந்தார்.

பரதேசி படத்தைப் பார்த்த முருகவேளுக்கு தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. தன் நூலுக்கு பாலா நியாயம் செய்யவில்லையே என்று பதைபதைத்து போனார். இது தொடர்பாக முருகவேளுடன் தொடர்பு கொண்டு பேசினோம்.

கோவையில் சட்டத்தரணியாக பணியாற்றும் முருகவேளுக்கு இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஆர்வம் அதிகம். மனைவி, இரண்டு பெண் குழந்தைகளோடு கோவையில் வசித்து வருகிறார்.

"நான் சொந்தமாக சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். எனது 'மிளிர்கல்!' என்ற நாவல் இம்மாதம் வெளிவரவிருக்கிறது. இது தமிழகத்தில் இரத்தினக்கல் விளையும் காங்கேயம் ஊரைப் பற்றிய கதை. இரத்தினக்கல்லோடு வாழ்க்கை நடத்துபவர்கள் பற்றிய ஒரு பதிவு. விரைவில் இதை நீங்கள் படிக்கலாம்; ஒரு ஆவணப்பட முயற்சி தோல்வியடைந்த பலவீனமான   தருணத்தில்      மொழிபெயார்ப்பாளனாக மாறினேன். மற்றபடி மொழிபெயர்ப்பின் மீது பெரிய காதலெல்லாம் கிடையாது." என்கிறார் முருகவேள்.


ரெட் டீ நூலை மொழி பெயர்த்ததற்கு ஏதேனும் காரணம் உண்டா?

"நான் கோயமுத்தூரைச் சேர்ந்தவன். தமிழகத்தில் மிக அதிக தேயிலைத் தோட்டங்கள் உள்ள நீலகிரியும், ஆனைமலைகளும் எங்கள் ஊருக்கு அருகே இருக்கின்றன. எனவே மலைக்கு வேலைக்குப் போகிறவர்கள் மலையிலிருந்து திரும்பியவர்கள் என்று பலர் எப்போதும் இருப்பார்கள். எங்கள் குடும்பத்திலேயே கூட ஒரு எழுத்தாளரைத் திருமணம் செய்து கொண்டு வால்பாறைக்குப் போன எனது பெரிய அத்தை மலேரியா வந்து இறந்த கதையைக் கேட்டிருக்கிறேன்.

மலைகளின் அற்புதமான அழகுக்குப் பின் வேறு ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. 'துன்பக் கேணி'தான் மலைகளின் மறுபக்கத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் அது ஒரு பெரிய சிறுகதை மட்டுமே. ஒரு மாபெரும் சோகத்தை பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கிலேயே தனது வரலாற்றுக் கடமையை ஆற்றும் விதத்திலேயே புதுமைப்பித்தன் அந்தக் காலத்தில் கிடைத்த விவரங்களைக் கொண்டு அற்புதமாக எழுதியிருந்தார். இதை முழுமையான ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தேடியும் படித்தும் வந்தேன். ஆனைமலைத் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களிடம் கேள்வி கேட்டுக் குடையும் போது தொல்லை தாங்காமல் ஒருவர் 'ரெட் டீ' யைக் கொடுத்து, எல்லாமே இதில் இருக்கிறது என்றார். அவர் சொன்னது முழுவதும் சரி.

எவ்வளவு விவரங்கள் தேடிச் சேர்த்தாலும் நேரடியாக வால்பாறையில் வாழ்ந்து போராடிய டேனியல் போல எழுதிவிட முடியாது என்று தோன்றியது. எனவே அதை மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்தேன்" என்றவரிடம் பரதேசி பற்றிக் கேட்டோம்.

"பரதேசி ஒரு குப்பைப்படம். எரியும் பனிக்காட்டை அல்லது ரெட் டீயை அது முழுவதுமாகச் சிதைந்து விட்டது. சொல்லப்போனால் முதல் பாதி முழுவதும் அது வேறு ஏதோ கதை.

திரைக்கதை, பேசிய அரசியல், பாத்திரங்கள், கேமரா, இசை இயக்கம் என எல்லாத் தளங்களிலும் தோல்வியடைந்த வறட்சியான படம் அது. கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து துயரத்தை விற்பனைப் பொருளாக்கும் மலினமான தந்திரம்தான் படம் முழுவதும் தெரிந்தது.

எரியும் பனிக்காட்டில் ஏகாதிபத்தியம் தலித் மக்களை எப்படிக் குறிவைத்துப் பிடித்து சுரண்டுகிறது என்பதும் அதற்கு ஏதுவான சூழல் கிராமங்களில் நிலவுவதும் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். மலைகளின் புவியியல், தட்பவெப்பநிலை, மக்கள் வீடுகள், சுகாதாரம், கொள்ளை நோய்கள் என மலைகளில் உள்ள தேயிலைத் தோட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் டேனியல் தத்ரூபமாக வருணித்திருப்பார்.

கதை மனித நேயத்துடன் அழகியலுடனும் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும். படத்தில் ஆன்மாவே இல்லை. அப்படியொரு வறட்சி.

படத்தில் மன்னிக்கவே முடியாத விஷயம். ஆசிரியர் டேனியலை பாலாவும், நாஞ்சில் நாடனும் கங்காணி என்று கொச்சைப்படுத்தியவிதம். இந்த இருவருக்கும் தங்கள் இந்துத்துவ அரசியலைப் பிரசாரம் செய்யும் நோக்கம் இருந்தால் அதை அவர்கள் தங்கள் சொந்தப் படைப்புகளைக் கொண்டு செய்ய வேண்டும். அதற்கான ஆளுமையோ துணிச்சலோ இல்லாமல் வேறு ஒருவரின் படைப்பில் புகுந்து அதைக் கேவலப்படுத்தித் திரிக்கும் இந்தத் தந்திரம் அயோக்கியத்தனமானது.

அதுவும் அந்த டாக்டர் பாத்திரத்துக்கு அம்பேத்கார் போல உடையணிவித்திருந்தது சகிக்க முடியாதது. அது இந்த நபர்களின் ஆதிக்க சாதி மனோபாவத்திற்குச் சான்று. இவர்கள் உழைக்கும் மக்களின் துயரத்தைக் காட்டி பணம் சேர்க்கும் எண்ணம் கொண்டவர்களே அல்லாமல் அவர்கள் மீது அன்பு கொண்டவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது இந்த பாத்திரப்படைப்பு" என்று பாலா நாஞ்சில் நாடன் மீது ஆத்திரப்பட்டு பேசும் முருகவேள், இன்னொரு வி;டயத்தையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"எரியும் பனிக் காட்டை படமாக்கப் போவதாக பாலா என்னோடு தொடர்பு கொண்டு கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் படம் வெளியான போது அந்த மகிழ்ச்சி தூள்தூளாக சிதறிப்போனது.
அதற்கு பிறகு பாலாவோடு பேசி என்ன பயன்? எனது கருத்தை இணையத்தில் மட்டும் பதிவு செய்தேன்" என்றவரிடம் பாலா ரெட் டீயை அடிப்படையாகக் கொண்டா பரதேசியை உருவாக்கினார்? என்று கேட்டேன்.

"இல்லை அவருக்கு 'ரெட் டீ' நூல் கிடைக்க வாய்ப்பில்லை. அந்த நூல் என்னிடம் மட்டுமே உள்ளது.

பாலாவுக்கு அந்த ஆங்கில நூலை மொழிபெயர்க்கும் அளவிற்கு புலமை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே அவர்  எரியும் பனிக்காட்டைத்தான் தன் படத்துக்கான கதையாக எடுத்துக்கொண்டார். திரையில், கனரா வங்கிக்கு நன்றி என்று ஆங்கிலத்தில் போடுவார்களே. அந்தப் பட்டியலில் எனக்கும் டேனியலுக்கும் சின்னதாக அதுவும் ஆங்கிலத்தில் ஒரு நன்றி போட்டார். அவ்வளவுதான்" என்று சொல்லி சிரிக்கிறார் முருகவேள்.

இலங்கைக்கு வந்து இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

"எப்படி இல்லாமல் இருக்கும்? கட்டாயம் செய்தே ஆகவேண்டிய விஷயம் அல்லவா? மலையத் தமிழர்களின் அரசியல் போராட்டம் வரலாறு இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கு குறித்தெல்லாம் இலங்கையில் நிறையப் படைப்புகள் வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் அது குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதைச் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அற்புதமானதாக இருக்கும்" என்று கூறி முடித்தார் முருகவேள்.

1 comment: