Monday, March 3, 2014

கஞ்சா கருப்புவின் அதிரடிப் பேட்டி

"ரகசியாவின் உதட்டை தெரியாத்தனமாகத்தான் கடிச்சேன்"


வேல்முருகன் போர்வெல் என்ற கஞ்சா கருப்புவின் சொந்தப்படப்பிடிப்பில் அவரை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி

மணி  ஸ்ரீகாந்தன்

வசதி வாய்ப்புகள் வந்து விட்டால் தனது நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்ளும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் அதற்கு விதிவிலக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு.
விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து பெயரும், புகழும் பெற்றிருந்தாலும் இன்றும் அவர் மனதளவில் மிகவும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஜீன்ஸ், டீ ஷர்ட், பெஷன் உடைகள் சகிதம் உயர்ரக காரில் வந்து இறங்கினாலும் அவர் தோளில் ஒரு துண்டோ அல்லது கைக்குட்டையோ கிடக்கத்தான் செய்கிறது. அவர் தன் பழைய வாழ்க்கையை மறக்கத் தயாரில்லை என்பதை நமக்கு புரிய வைக்கிறது.

எம்மை கண்டதும் மிகவும் அடக்கமாக "அண்ணே.... அண்ணே... சாப்பிட்டீங்களா...?" என்று கேட்கும்போது அந்த மனிதனின் வெள்ளந்தி மனசு பளிச்சிடுகிறது. பேச்சில் வெகுளித்தனம், குணத்தில் அடக்கம். யாரைப் பார்த்தாலும் மூச்சுக்கு மூணு தடவை 'அண்ணே... அண்ணே...' இவைதான் கஞ்சாவின் தனித்துவ அடையாளங்கள்.

சென்னை கே. கே. நகர் சிவன் பார்க்கில் நான் அவரை சந்தித்து பேசிய அந்த இனிமையான நிமிடங்களின் சில பகுதிகளை வானவில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"நமக்கு சொந்த ஊரு சிவகங்கை. அங்கே ஒரு சின்ன ஓலைக்குடிசை போட்டு ஒரு சாப்பாட்டுக் கடை நடத்தினேன். அந்த சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட வருபவர்தான் இயக்குநர் பாலா. அப்போதுதான் பாலா எனக்கு அறிமுகமானார். நமக்கு நடிப்பு, சினிமா என்று எதுவுமே தெரியாதுங்க.. ஆனால் திடீரென்று ஒருநாள் சினிமாவில உனக்கு ஒரு வேசம் இருக்கு நடிக்கிறீயா...? என்றார். நானும் பதிலுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்கண்ணே முயற்சி செய்கிறேன்னு சொன்னேன்... அப்போ அவரு தந்ததுதான் 'கஞ்சா கருப்பு' என்கிற வேடம். அன்றிலிருந்து கருப்பு ராஜா என்ற என் நிஜப்பெயர் கஞ்சா கருப்பாக மாறிவிட்டது..." என்று தமது கடந்த கால வாழ்க்கையை விபரித்த கஞ்சா, தற்போது 4 கோடி ரூபா முதலீட்டில் 'வேல்முருகன் போர்வெல்ஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
 நடிகர் கரணை வைத்து 'மலையன்' படத்தை தயாரித்தவர் இயக்குனர் கோபி. அந்தப் படத்தில் கஞ்சா ஒரு நகைச்சுவை வேடம் செய்திருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் கோபிக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. ரொம்பக் காலம் சும்மா இருந்தவர். ஒரு நாள் கஞ்சாவிடம் வந்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கேட்டதும் அவருக்கு கதை 'பச்சக்' என பிடித்துப்போய் விட்டது. உடனே கஞ்சா கருப்பு, தனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளரிடம் கோபியை அறிமுகம் செய்திருக்கிறார்.

கதையைக் கேட்ட தயாரிப்பாளர் படத்தில் நாயகனை மாற்றணும் என்பது உட்பட பல கண்டிஷன்களைப் போட்டிருக்கார். அந்த விசயத்தை கோபி கஞ்சா கருப்பிடம் சொன்ன போது அவருக்கு எரிச்சலும் கோபமும் வந்திருக்கிறது. தண்ணீர் குழாய் (போர்) போடுற பையன் மாதிரி இருக்கிறவன்தான் நடிகர் மகேஷ். அவனை மாற்ற சொல்கிறார்களா? அது சாத்தியம் இல்லை. எனவே அவரே 'போர்வெல்' படத்துக்கு தயாரிப்பாளராகிவிட்டார். இதுதான் கஞ்சா கருப்பு படத்தயாரிப்பாளரான கதையின் பின்னணிக் கதை!

"நானே படத்தை செய்யலாம்னு இருக்கேன் என்று சொன்னதும் கோபி மிரண்டு போய்விட்டார். அவ்வளவு பணத்துக்கு எங்கேண்ணே போவீங்க? என்றார். நான், பைனான்ஸ் வாங்குவோம்ணே... என்றேன். சட்டுப்புட்டுன்னு கடன்வாங்கி படத்தை எடுத்து முடித்து விட்டோம். இன்று ஆடியோ வெளியீடு வரைக்கும் வந்து விட்டோம். நான் சினிமாவில் நடிப்பேன் என்றோ சொந்தப் படம் எடுப்பேன் என்றோ கனவிலும் நினைச்சுக்கூட பார்த்ததில்லீங்க... எல்லாமே ஏதோ கனவு மாதிரிதான் இருக்கு...." என்று கஞ்சா பெருமூச்சு விடுகிறார்.
மனைவி சங்கீதாவுடன்….
'வேல் முருகன் போர் வெல்' படத்தில் கஞ்சா கருப்பு நடிகை ரகசியாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி. அதை எடுத்தபோது ரகசியாவின் உதட்டை கடித்து விட்டதாகவும் ரகசியா சீறிச் சினந்து ரகளையாகி விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி பற்றி எரிந்ததை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பற்றி அவரிடம் கேட்டேன்.

"அட, அந்த நியூசு சிலோன் வரைக்கும் பரவிடுச்சா...?" என்று வியப்பு காட்டினார் கஞ்சா.

"அப்படி ஒரு சீன் படத்தில் வைக்கிறதா கோபி சொன்ன போது எனக்கு கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. படப்பிடிப்பில் கேமரா ஆக்ஷன் சொன்னப் போது ரகசியாவை கட்டிப்புடிச்சி முத்தமிடுறப்போ என்ன நடந்ததோ தெரியவில்லை. அவசரத்தில ரகசியாவோட உதட்டை கடிச்சுட்டேன்.

அப்புறம் அந்த பொண்ணு காச்சு மூச்சுண்ணு ஏதோ இந்தியில் கத்திச்சி. நமக்கு ஒண்ணும் புரியலீங்க.... அதுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் படப்பிடிப்பு தடைப்பட்டுப் போச்சி" என்று வெள்ளந்தியாக சிரிக்கிறார் கஞ்சா.

அப்போ நீங்க கமலுக்கு போட்டியா? என்று அவரைச் சீண்டினேன். "பெரிய இடத்தோட கோத்துவிட பார்க்கிறீங்களா சாமீ...?" என்று சொல்லி கலகலவென சிரிக்கிறார்.

கஞ்சா கருப்புவின் மனைவியின் பெயர் சங்கீதா. அவர் டொக்டராக பணியாற்றுகிறார். கஞ்சாவின் மகனுக்கு நான்கு வயதாகிறதாம். அவரின் பெயரைத்தான் தமது சினிமா படக்கம்பனிக்கு வைத்திருக்கிறார்.

"எங்கப்பா பேரு காந்திநாதன். அதே பெயரைத்தான் என் பையனுக்கும் வைத்தேன். ஆனா இப்போ சினிமா கம்பனி தொடங்கி விட்டதால் என் பையனுக்கு தருண்காந்த் என்று பெயர் வைத்து விட்டேன். இப்போ என் படக் கம்பனியின் பெயர் தருண்காந்த் பிலிம் பேக்டரி. நான்கு வயசுலேயே அவன் படத் தயாரிப்பாளரா ஆகிட்டான். அவன் யோகக்கார புள்ளங்க. அதோடே  அவன் பெயரிலே ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி காந்த் இருக்கு பார்த்தீங்களா...." என்கிறார் கஞ்சா.
கஞ்சாவின் அம்மாவின் பெயர் லெச்சுமி, இன்னும் அவர் கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறார். கஞ்சாவிற்கு நான்கு உடன் பிறப்புக்கள். அதில் கஞ்சா மூன்றாவதாம்.

அவரின் திருமணம் பற்றிக் கேட்டோம். "மழைக்காக கூட நான் பள்ளிக்கூடம் ஒதுங்கினது கிடையாதுங்க. ஆனா ஒரு டாக்டரை திருமணம் முடித்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகையை கட்டியிருந்தாகூட இவ்வளவு சந்தோசமா இருந்திருக்க மாட்டேன். என்னோட சினிமா சம்பந்தப்பட்ட பணவிவகாரம், கணக்குகள் எல்லாத்தையும் என் மனைவி பார்த்துக் கொள்கிறார். எனது எல்லா முயற்சிகளுக்கும் அவரின் முழு ஆதரவு எனக்கும் கிடைக்கிறது. என்னை திருமணம் முடித்ததற்காக அவரும் ரொம்பவே மகிழ்ச்சியடைகிறாருங்க.." என்று சொல்லும் கஞ்சா, 'வேல் முருகன் போர்வெல்' படத் தயாரிப்புக்கு உதவி செய்த மதுரை டொக்டர் சரவணன், இயக்குநர் வாசு மதுரவன் உள்ளிட்டோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment