Thursday, March 6, 2014

கொழும்பின் சைவ உணவக வரலாறு -3

கேசரி மட்டும்தான் இனிப்புப் பண்டம்

விசேட ஆர்டருக்குத்தான் பாயாசம்

 

கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்

மணி  ஸ்ரீகாந்தன்

பத்து ரூபா சம்பளத்தில் பற்றுப்பாத்திரம் தேய்த்து, மேசை துடைத்தவர் எப்படி கல்லாவில் உட்கார்ந்து காசு எண்ணினார் என்பதும் ஒரு சுவாரஸ்யமான கதை. கொம்பனி வீதி ஜாவா லேனில் அமைந்திருந்த லட்சுமி விலாஸ் ஹோட்டலுக்கு அருகில் ஒரு பெரிய வீடு இருந்ததாம். அந்த வீட்டுக்கு தினசரி காலை உணவை ராமன்தான் எடுத்துச் செல்வாராம். அந்த வீட்டில் இருந்த துரைக்கு குழந்தைகள் இல்லாததால் ராமன் மீது அவர்களுக்கு மிகுந்த அன்பு. ராமனுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையிலான நட்பு நீண்டக்காலமாக தொடர்ந்திருக்கிறது.

பின்னர் ஒரு சமயத்தில் லட்சுமி விலாசின் நிர்வாகத்தை அந்த பெரிய வீட்டுத் துரை எடுத்து நடத்தியிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தமக்கு விசுவாசமான ராமனை கல்லாவில் அமர்த்தியிருக்கிறார். அதன் பிறகு நீண்டகாலமாகக் கடையின் காசாளராக நேர்மை தவறாது  பணியாற்றி வந்தார் ராமன்.
1953ம் ஆண்டு பேங்சால் வீதியில் கோல்டன் கபே கடையை ராமனின் உறவினர் ஒருவர் பொறுப்பேற்றார் ராமன் கோல்டன் கபேயின் காசாளரானார். அதன் பிறகு அந்தக் கடையின் நிர்வாகத்தை ஆர். கிருஸ்ணமூர்த்தியால் நடத்த முடியாமல் போக, தமக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருந்த ராமனிடம் ஹோட்டலைக் கையளித்து விட்டுச் சென்று விட்டாராம்.
"ஆர். கிருஸ்ணமூர்த்தியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. என்னிடம் ஒரு சதமும் எதிர்பார்க்காமல் இவ்வளவு பெரிய ஹோட்டலை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்ற கிருஸ்ணமூர்த்திக்கு ரொம்பவும் தாராள மனசுங்க" என்று தமக்கு வாழ்க்கை கொடுத்தவரை ராமன் நெஞ்சார வாழ்த்துகிறார்.

ராமன் அன்று
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் சைவ உணவை உண்பவர்களின் தொகைதான் அதிகமாக இருந்தது. அசைவம் ரொம்பவும் குறைவு. அதனால் சைவ உணவகங்களின் தேவையும் அதிகமாக இருந்தது. அப்போது அரிசி மா பாவனையில் இல்லை, கோதுமை மா மட்டும்தான். அந்த நாட்களில் எல்லா ஹோட்டல் உரிமையாளர்களும் கட்டாயம் மாடு வளர்ப்பார்கள். லட்சுமி விலாசுக்கு சொந்தமாக இருபத்தைந்து மாடுகள் ஜாவா லேனில் இருந்தன. கோல்டன் கபேக்கு சொந்தமான மாடுகள் வத்தளையில் வளர்க்கப்பட்டன. பவுடர் பால் புழக்கத்தில் இருந்தாலும் பசும் பால் அருந்துபவர்களின் தொகை அதிகமாக இருந்தது. அப்போது கொழும்பில் பெரும்பாலான இடங்கள் காடுகளாகவும் புல் மண்டிய புதர்களாகவும் இருந்ததால் மாடு வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் கொழும்பில் காணப்பட்டது. இப்போதோ கொழும்பில் மாடு வளர்ப்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது."

கொழும்பில் அப்போது ரொம்பப் பிரபலமான இடமாக 'எலிப்பன்ட் ஹவுஸ்' இருந்தது. அங்கேயும் சில சமயங்களில் சைவ உணவகம் பால் கொள்வனவு செய்யுமாம். ராமன் தன்னுடன் நைட் ஸ்கூலில் படித்த நண்பர்கள் பிரான்சிஸ், அப்புறம் நண்பர், அலி ஆகியோரை தன்னால் மறக்க முடியாது என்கிறார். "பிரான்சிஸ் இந்தியாவுக்கு போயிட்டாரு அலி கொழும்பில ரொம்ப வசதியான ஆளா இருக்கிறாரு.." என்கிறார் ராமன்.


சைவ உணவகங்களில் கண்ணைக் கவரும் வண்ண வண்ண நிறங்களில் பாம்பே சுவீட் வகைகள் கண்ணாடி பெட்டிகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாம், பூந்தி லட்டு, சோன் பப்டி, ஜாங்கிரி என்று அந்த இனிப்பு ஐட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

சொல்லும் போதே நாவில் நீர் சுரக்கிறதே. ஆனால் இந்த இனிப்பு வகைகள் எல்லாம் அண்மைக்காலத்தில் வந்ததென கோல்டன் ராமன் கூறுகிறார்.

"அந்தக் காலத்தில் இப்படியான இனிப்புகள் இல்லை. ஹோட்டல்களில் பாயாசம் கூடக் கிடையாது. யாராவது விசேட ஆர்டர் கொடுத்தால் மட்டுமே செய்து கொடுப்போம்.
இனிப்பு என்று சொன்னால் கேசரிதான் அதைக் கிண்டி வைத்திருப்போம். வாடிக்கையாளர்கள் கேட்டால் கரண்டியில் எடுத்து வாழை இலையில் வைத்து பொட்டலமாக கட்டிக் கொடுப்போம். கேசரியை அழகாக தட்டி நேர்த்தியாக துண்டு துண்டாக வெட்டிக் கொடுக்கும் பழக்கமெல்லாம் பிற்காலத்தில் வந்ததுதான் என்று சொல்லும் ராமன் ஹோட்டல் பணியாளர்கள் சாப்பிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட உணவுகளைப் பற்றியும் எம்மிடம் மனந்திறந்தார்.

"அந்தக்கால இனிப்பு வகைகளில் கொஞ்சம் விலை உயர்ந்ததாக கருதப்பட்டவை தான் கொழுக்கட்டையும், சுசியமும்.

எல்லா சைவ ஹோட்டல்களிலும் இவை கிடைக்கும். குறைவான அளவில் தயாரிக்கப்படுவதால் ஹோட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்கள் இவற்றை சாப்பிடக்கூடாது என்பது ஹோட்டல் உத்தரவு. ஒரு ஹோட்டலில் பணியாளராக சேரும் போது இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட பிறகுதான் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஏனென்றால், ஹோட்டலில் வேலை செய்யும் பத்து ஊழியர்கள் ஆளுக்கு ஒரு கொழுக்கட்டையை எடுத்தால் கம்பனிக்கு கட்டுப்படி ஆகாது. அதுதான் அப்படி ஒரு சட்டம் இருந்தது. ஆனால் இன்று அப்படியெல்லாம் ஒரு சட்டமும் கிடையாது. ஊழியர்கள் விரும்பியதை சாப்பிடலாம்" என்கிறார் ராமன்.

"அந்தக் காலத்தில் நடிகர் எஸ். எஸ். கொக்கோ மிகவும் புகழ்பெற்ற நடிகராக விளங்கினார். ராமனுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். "நான் கொக்கோ மாதிரி வரணும்னுதான் சின்ன வயசுல ஆசைப்பட்டேன். ஆனா அந்த ஆசை நிறைவேறல. இப்போ கோல்டன் கபேக்கு முதலாளியாக இருக்கேன். கொக்கோ - கோல்டன் பாருங்க பெயரிலே ஒரு ஒற்றுமை தெரியுதுல்ல..

சின்ன வயசுல எங்க ஊரு டூரிஸ் டோக்கீஸ் கொட்டகை போட்டால்தான் சினிமா பார்ப்பேன். நண்பர்களோட கூட்டமாக தியேட்டருக்கு வருவேன். அப்போது டிக்கெட் விலை ஐந்து பைசாதான். மணல் தரையில் அமர்ந்து பார்க்கும் போது முன்னால் இருப்பவர் எங்களை மறைத்துக் கொண்டிருப்பார். உடனே அதற்கு நாங்கள் ஒரு ஐடியா செய்வோம். மணலை குவித்து அதன்மேல் உட்கார்ந்து கொள்வோம். இப்போது நாங்கள் பின்னாடி அமர்ந்திருப்பவருக்கு பிரச்சினையாக இருப்போம்.

நாங்கள் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் எங்களை நாங்கள் மறந்திருக்கும் சமயம் பார்த்து எங்களின் மணல் குவியலை பின்னால் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னாலிருந்து பறித்துவிட நாங்கள் அப்படியே பழையபடி கீழே சரிந்து விடுவோம். இந்த விசயம் தரையில் அமர்ந்து படம் பார்த்தவர்களுக்கு புரியும்" என்று சிரிக்கும் ராமனின் நினைவுகளை மீண்டும் சைவக் கடை பக்கத்திற்கு திருப்பினோம்.

48 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆம் ஆண்டுவரை சைவ உணவகத்தில் அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார் ராமன்.

"எனக்குத் தெரிய கொழும்பில் அப்போ வங்கி கிடையாது நாங்கள் வாங்கும் சம்பளத்தில் எங்களின் செலவு போக மிச்சத்தை கடை முதலாளியிடம் கொடுத்து வைப்போம். பிறகு அந்தப் பணத்தை வாங்கி இந்தியாவிற்கு போகும் எனது ஊர்க்கார்களிடம் கொடுத்து எனது வீட்டுக்கு பணம் கொடுக்கச் செய்வேன்.
அப்போ நம்ம நாட்டு பணத்திற்கு ரொம்ப மதிப்பு இருந்தது. சிலோன் ஒரு ரூபாய்க்கு இந்திய பணம் இரண்டு ரூபா தருவார்கள். பணமாற்று முறையெல்லாம் இல்லை. பிறகுதான் கொழும்பில பணம் வைப்பு செய்ய இந்திய வங்கிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் எனக்கு வங்கியில் எப்படி பணத்தை வைப்பு செய்வது என்று தெரியாது. ரொம்ப காலத்துக்குப் பிறகுதான் அந்த விசயத்தை கற்றுக்கொண்டேன். எல்லாம் அனுபவம்தான்.

அப்போது சைவக் கடைகளில் தொழில் செய்வது மிகவும் கஷ்டம். ஏனென்றால் அரைப்பது, இடிப்பது, கரைப்பது என்று எல்லாம் மனித உழைப்புதான். இயந்திரங்கள் கிடையாது. விறகு அடுப்பில் சமைத்தால் பாத்திரங்கள் கரிப்பிடித்துக் காணப்படும். அதைக் கழுவி சுத்தப்படுத்தவே போதும் போதுமென்றாகிவிடும். அப்படி பத்துப்பாத்திரம் தேய்ப்பவர்களின் கரங்கள் காப்புக்காய்ச்சி இருக்கும். ஆனால் இன்று வேலை ரொம்பவும் சுலபமாகி விட்டது. கேஸ் வந்து விட்டதால் பாத்திரங்களில் கரி ஒட்டுவதில்லை. கஷ்டப்படத் தேவையில்லை.

வாழை இலை பாவிக்காத ஹோட்டல்களில் சாப்பாட்டு தட்டுக்கு லன்ச்சீட் போடுவதால் பத்துப்பாத்திரம் கழுவுகிறவருக்கு வேலை மேலும் சுலபமாகி விட்டது.

எனவே அந்தக்காலம் மாதிரி இந்தக்காலம் இல்லை ரொம்பவே மாறிடுச்சு என்றவர் இயந்திர அரவை ஆட்டுக்கல் வந்து விட்டதால் கடையின் ஒரு மூலையில் ஓரங்கட்டப்பட்டு கிடக்கும் ஆட்டுக்கல்லே எம்மிடம் காட்டினார். அப்போ இரண்டு இறாத்தல் உழுந்துபோட்டு இதில ஆட்டுவோம். ரொம்ப கஷ்டமான காரியம்.

ஆட்டுக்கல், அம்மி, மத்து ஆகியவை இன்று பாவனையில் இல்லை. அவற்றை நம்மவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். நம் வருங்கால சந்ததிகள் அவைகளை அருங்காட்சியகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று ராமன் பெருமூச்சு விடுகிறார்.
 

மேலும் வாசிக்க…

சைவ உணவக வரலாறு -4

No comments:

Post a Comment