Saturday, March 1, 2014

வீதியோர எல்லைச் சாமிகள்.-03

"பேய்களை பிடித்து ஆற்றில் கரைப்பதுதான் புதிய டெக்னிக்!"


மணி  ஸ்ரீகாந்தன்

காவல் தெய்வங்கள் என்பது ஊருக்கு வடக்கே ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளித்தான் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்தக் காவல் தெய்வங்களில் சில பெண் தெய்வங்களும் அடங்கும். குறிப்பாக ஊர் காக்கும் காளியையும் குறிப்பிடலாம். இந்த தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தே உள்ளதாம். இதற்கெல்லாம் காரணம் நாம் முன்னெடுக்கும் காரியத்தில் வழித்துணையாக காவல் தெய்வங்கள் இருக்கும் என்ற நம்பிக்கைத்தான். பலியிடுதல் என்பது உலகெங்கும் காணப்பட்ட, காணப்படுகின்ற ஒரு தொன்மையான வழக்கம்.
ஒருவகையில் இது கையூட்டுத்தான். பலியாக இரத்தத்தை சிந்துதல் என்பது மிக உயர்ந்த வெகுமதியாகக் கருதப்பட்டது. இஸ்லாத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் பலியிடுதல் உள்ளது. கிறிஸ்துவின் பின் அது அப்பமானது. புத்தரின் பின் அது மலர்களானது.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று கூறுவார்கள் அல்லவா? அந்தத் தெய்வத்தை காவல் தெய்வமாகத் தமிழர் கொண்டனர். போர், அச்சம், குழுக்கள் இடையிலான மோதல் அச்சம், பேய், பிசாசு, ஏவல் பேரிலான அச்சம் என்பன இந்து சமூகத்தில் காவல் தெய்வங்களை உருவாக்கின.

மேலும் அந்தக் காலத்தில் இப்போது போன்று சாலை, வாகன வசதி கிடையாது. தனியாக காட்டு வழியாகத்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செல்லும் போது மனதில் உருவாகக் கூடிய அச்சங்களும் வடிகால் தேடு முகமாக இப்படி ஆங்காங்கே உள்ள காவல் தெய்வங்களை உருவாக்கி வைத்தார்கள். அவற்றை வணங்கியபடியே பயணிகள் பயணங்களைத் தொடர்ந்தார்கள்.

அந்த அளவுக்கு காவல் தெய்வங்கள் மீது அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. அப்படி இருப்பதற்கு வலுவான காரணங்களும் இருந்தன. நம் நாட்டில் மாரியம்மனுக்கு அடுத்த நிலையில் காளியம்மன் வழிபாடும் பரவலாக காணப்படுகிறது. இரண்டு தெய்வங்களும் வீரத்துக்கும் (காவல்) நோய் எதிர்ப்புக்கும் பெயர் பெற்றவை. சக்தியின் வடிவமே காளி. இயற்கையை கவிஞர்கள் அழகின் வடிவமாகப் பார்த்தாலும் இயற்கை கொடுமையானது ,ஈவு இரக்கமற்றது. எவராலும் தடுக்க முடியாத சக்தி படைத்தது. அதனால்தான் காளி, ஆவேசம் கொண்ட மூர்க்கக் கடவுளாக சித்தரிக்கப்படுகிறாள். எனவே அம்மகா சக்தியை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்ள முனைதல் மனிதனின் இயல்பு.

சங்க இலக்கியத்தில் பாலை நிலத்திற்குரிய தெய்வமாக காளியைக் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்திலும் நமது தோட்டப்பகுதிகளிலும் காளி கோயில்களில் தவறாது இடம்பெற்றிருக்கும். பலியிடலும் மற்றும் உடல் உறுப்புகளின் மாதிரிகளை பித்தளை, தங்கத் தகடுகளில் செய்து காணிக்கையாக உண்டியலில் போடும் பழக்கமும் காளிகோயில்களில் இடம்பெறுகின்ற சிறப்பு அம்சங்கள்.

சரி எமது எல்லைத் தெய்வ தேடலில் அடுத்ததாக நாம் பயணம் செய்த இடம் இங்கிரிய. அங்கே கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக வீற்றிருந்து ஊர் காக்கும் வீரமாகாளி பற்றி அதன் பூசகர் திலக்கராஜா போஸா சாமியிடம் கேட்டோம்.

"வீரமாகாளி எங்கள் குல தெய்வம். எங்க தாத்தா பெருமாள் கேரளாவிலிருந்து இங்கே வந்த போது வீரமாகாளியையும் அழைத்து வந்திட்டாராம். அவரும் மலையாள நம்பூதிரி வம்சத்தில் வந்தவர். அவருக்கு பிறகு எங்க மாமா காயம்பு - அப்புறம் ராஜேந்திரன், செல்வகுமார் ஆகியோர் வீரமாகாளிக்கு சேவை செய்திருக்காங்க. எனக்கு காளி அருளைக் கொடுத்தவர் எங்க மாமா செல்வக்குமார்" என்று சொல்லும் திலக்கராஜா, மட்டக்களப்பு, வாழைச்சேனை, குருநாகல், அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பில்லி சூனியங்களை அகற்றி இருக்கிறாராம். நீங்கள் விரட்டும் பேய்களை என்ன செய்வீர்கள், போத்தலில் அடைத்து ஆற்றில் தூக்கி வீசுவீர்களா? என்று நாம் கேட்டதும் அவருக்கு அது சிரிப்பாக போய்விட்டது.

"போத்தலில் அடைத்து வீசுவது பழைய முறை. இப்போது பேயைக் கொன்று ஆற்றில் கரைத்து விடுவோம். நாம் பிடித்த பேயை கொல்வதற்கு ஒரு வேலை செய்வேன். கடுகு ரொம்ப சின்னதாக இருந்தாலும் அதன் பவர் பேயைக் கூட ஆட்டுமுங்க.... அதனால் 108 கடுகை எடுத்து மாவோடு போட்டு பிசைந்து அதில ஒரு மனித உருவம் செய்து குறிப்பிட்ட பேயை அந்த உருவத்திற்குள் இறக்குவேன். பிறகு அதைத் துண்டு துண்டாக வெட்டி, குத்திக் கொன்று கடைசியில் ஆற்றில் கரைத்து விடுவோம். அத்தோடு அந்தப் பேயின் கதை முடிந்து விடும். போத்தலில் அடைப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. நாம் வீசி எறியும் போத்தல் சில சமயம் உடைந்தாலோ, மூடி திறந்தாலோ பேய் மீண்டும் வெளியே வந்துவிடும். அதைப் பிறகு தேடிப் பிடிப்பது ரொம்பவும் சிரமம். ஆனால் தண்ணீரில் கரையும் பேயின் வாழ்க்கை அதற்குப் பிறகு நிலத்துக்குத் திரும்பாது. மீனுக்கு எப்படி பூமியில் வாழ முடியாதோ அது மாதிரித்தான் தண்ணீரிலேயே காலத்தை கழிக்கும் பேய் நிலத்துக்கு திரும்பாது" என்று பேயின் கதையை எப்படி முடிப்பது என்ற வித்தையை சொல்லித்தந்தார் போஸா சாமி!

அட, சக்தி வாய்ந்த பேய்களின் கதையை முடிப்பது வடிவேலு ஜோக் மாதிரி இவ்வளவு சிம்பளா! என்று நாம் வியர்ந்து போனோம்!

அண்மையில் ஹொரணை கோவின்ன தோட்டத்தில் 27 வீடுகளில் அண்டியிருந்த ஒரு சக்திவாய்ந்த பேயை விரட்டியதுதான் தாம் விரட்டிதில் ரொம்பவும் பெரிய பேய் என்கிறார் இவர்.

"அந்த பேயை நினைத்தாலே என் உடம்பு சிலிர்க்கிறது. அந்த பேய் விரட்டு எனக்கு கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஆகிவிட்டது. பேயை விரட்டி விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் நான் வளர்த்து வந்த மூன்று ஆடுகள் பரிதாபமாக செத்துக் கிடந்தன. என்னை ஒன்றும் செய்ய முடியாத அந்தப் பேய், என் ஆடுகளின் கதையை முடித்துவிட்டு போயிருந்தது" என்று சொல்லும் திலக்ராஜாவுக்கு எப்போதும் பாதுகாப்பு உத்ரகாளிதானாம். தனது தாத்தா சொல்லிக் கொடுத்த மற்றும் படித்த மூலிகை மருந்துகளை இவரும் பயின்று அதன்படி மந்திரத்தோடு மருத்துவமும் பார்த்து வருகிறேன் என்றார் இந்தப் பேய் விரட்டும் போஸா சாமி!

முற்றும்

No comments:

Post a Comment