Saturday, March 1, 2014

வேடந்தாங்களில் அதிரும் பறை 02

"பறை இசை என்பது தமிழன் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று"


மணி  ஸ்ரீகாந்தன்

(கடந்த இதழ் தொடர்ச்சி)

மணிமாறனின் புத்தர் கலைகுழு, 'சாகும் வரை பறை இசைப்போம். ஆனால் சாவுக்கு பறை இசைக்க மாட்டோம்! சாதியை சாகடிக்காமல் விடமாட்டோம்' என்பதை தமது குழுவின் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. ஆதியில் பறை சாவுக்கு முழங்கியதால்தான் அது கௌரவம் இழந்தது என்பதும் ஆதிக் கருவி சாதிக் கருவியாக மாறிவிட்டது என்பதும் மணிமாறனின் வேதனை.
ஆனால் ஏன் ஆதித் தமிழன் பறையை சாவுக்கு இசைத்தான் என்பதைப் பற்றி நாம் தேடிப் பார்க்க வேண்டாமா? ஒரு இறந்த பிணத்தின் முன் மென்மையான வீணையையோ, வயலினையோ வாசிப்பது, அச்சூழலுக்கு பொருத்தமாக இருக்காது என்பதோடு பிரிவின் சோகம் மேலும் வெளிப்பட்டு நிற்கும். இதற்கு அப்பால் ஏன் பறையை அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சமூக ஆர்வளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள்.

பறையின் ஒலியைக் கேட்டும் ஒரு மனிதன் இயங்கவில்லை அல்லது அசையவில்லை என்றால் அந்த மனிதனின் இறப்பு உறுதி செய்யப்படுகிறது. அதனால் இதை ஆதி மனிதன் கண்டுபிடித்த 'ஸ்டெத்தஸ் கோப்' கருவி என்றும் ஆய்வாளர்கள் பறை ஏன் மரணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதற்கான காரணத்தைச் சொல்கிறார்கள். இதில் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தாலும் இன்றைய வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது அந்தக் காரணம் உண்மை என்று கொள்ளலாம்.
மருத்துவ தொழில்நுட்பங்கள் வளராத அந்தக் காலத்தில், பூலோகம், கீழோகம் என்று கதை விட்டுக் கொண்டிருந்த பெரிசுகள் தமக்கு முடியாத காலத்தில் தாம் இறந்து விடுவோம் என்ற சிந்தனையிலேயே மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த சமயத்தில் பறையை அடித்தால் அவர்கள் மயக்கம் கலைந்து எழும்பி விடுவார்களாம். இன்றும்கூட பத்திரிகை செய்திகளில் இறந்தவர் உயிர்த்தெழுந்தார் என்றும் பாடையில் வைக்கப்பட்டவர் எழும்பி தண்ணீர் கேட்டார் என்றும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கால தேவன் தன்மை தவறுதலாக அழைத்தான் என்றும் பிறகு பச்சை உருண்டை சோறு கொடுத்து வானத்திலிருந்து உருட்டி விட்டான் என்றும் அப்படி 'உயிர்த்து' வந்தவர் கரடி விடும் கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.

பாம்பு தீண்டிவர்களில் அனேகமானவர் இப்படி மயக்க நிலையில் இருந்து மீண்டு வருவது சாதாரணம். ஆனால் இந்த உயிர்த்தெழுதல் கதைகள் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் இலங்கையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த உடம்பை 'எம்பாம்' செய்து விடுகிறார்கள். மூன்று நான்கு நாட்கள் வைத்திருந்த பின்னரே அடக்கம் அல்லது எரியூட்டல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் (எம்பாம்) முறை இன்னும் நடைமுறையில் இல்லை. அதனால் மரித்தவர் எழலாம் என்ற நம்பிக்கையில் இன்றும் சவ ஊர்வலங்களில் பறை இசைத்து வருகிறார்கள். பறை வெறுமனே இசைக்கருவியாய் நின்று விடாமல், உளவியல் ரீதியானது. மருத்துவ தொடர்புடையது என்பதை வரலாற்றிலிருந்தும் நடைமுறை வாழ்வியலில் இருந்தும் நாம் புரிந்து கொள்கிறோம்.

சவ ஊர்வலங்களில் வேடந்தாங்கல் புத்தர் கலைக்குழு பறை இசைப்பதில்லையே ஏன் எப்படி? என்ற கேள்வியை மணிமாறனிடம் வினவினோம்.

"பிணத்தை சுற்றியுள்ள சுகாதாரமற்ற சூழலையும், சாதியவாதிகளின் வக்கிரத்தையும் பறை இசைக் கலைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதோடு 'சாவுதப்பு' என இக்கலை மலினப்படுத்தப்படுவதற்கு இது காரணமாகி விடுகிறது. இதனால்தான், பறை இசையை அதன் இன்றைய தவறான முகவரியில் இருந்து மீட்டு, புதிய கௌரவமான முகவரியை கொடுப்பதற்காகவே நாம் சாவுக்கு பறை இசைக்க மறுக்கிறோம். அதற்கு மாறாக பறையை ஓர் எழுச்சியின் குறியீடாக, விடுதலையின் அடையாளமாக கையாளுகிறோம். ஆகவேதான் செல்லும் இடமெல்லாம் உரத்து முழங்குகிறோம்! பறை சாற்றுகிறோம்! பறை சாவுக்கானது அல்ல, வாழ்வுக்கானது..."என்று ஆவேசமாக பேசுகிறார் மணிமாறன்.
புத்தர் கலைக்குழுவின் பறை பயிற்சியரங்கில் பங்குபற்றுபவர்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி காணப்பட்டனர். அவர்களின் தோள்களில் ஒரு பறை தொங்கிக் கொண்டிருந்தது. இளவயது பெண்களும், ஆண்களும் காய்ந்த வைகோலை குவித்து தீமூட்டி பறையை காய்ச்சி அதற்கான நாதம் வரும்வரை தட்டி முறுக்கேற்றியதையும் அவதானித்தோம். பறை இசைக்கு மேலும் வலு சேர்க்கும் 'பெருந்தமுரு', 'தூம்பு' போன்ற கருவிகளையும் இளைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள். 'பெருந்தமுரை' தோளில் மாட்டியபடி தாளத்திற்கு ஏற்ப உடம்பையும் அசைத்து ஆடிக் கொண்டிருந்த ஒருவரை சந்தித்துப் பேச்சுக் கொடுக்க அவர் தன் பெயர் எழிலன் என்றார். மக்கள் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுவதாகவும் கூறினார். என்ன மக்கள் டீவியிலயா....? என்றதும், ஏன் தொலைக்காட்சியில் வேலை பார்த்தால் பறை இசைக்கக் கூடாதா? என்று எம்மை எதிர் கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்தார் எழிலன்.

"நான் மூன்று நாள் விடுப்பில் வந்து இந்த பறை இசையை கற்றுக்கொள்கிறேன் நான் தற்போது சென்னையில் வசித்தாலும் என் சொந்த ஊர் திருநெல்வேலி சங்கரன் கோவில், வீரணாபுரம் என்ற கிராமம். எங்கள் கிராமம் தமுரு செட்டு, ஆழியா ஆட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு ரொம்பவும் பெயர் பெற்றது. சின்ன வயசில் இருந்து எனக்கும் அந்த மாதிரியான கலைகளை கற்பதற்கு ரொம்ப ஆசை. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போ கிடைக்கவும் வந்துட்டேன். எனக்கு இந்த பறையின் நுணுக்கங்களை படிக்க மூன்று நாள் பயிற்சி போதாது. என்னோடு படிக்கும் ஒரு குட்டிப் பையன் மணிமாறனின் பயிற்சி பட்டறைக்கு தொடர்ந்து ஆறு வருடங்களாக வர்றானாம். இன்னும் முழுமையாக கற்கவில்லை என்று சொல்லுறான். மேலும் மணிமாறன் என்கிற பெரிய பறை விற்பனரிடம் நாங்களும் பறை படிச்சோம்னு சொல்லுறது நமக்கு பெருமை.." என்று தூய தமிழில் பேசும் எழிலன் ஒரு தமிழ் பற்றாளர்.
"பறை ஒரு தீண்டதகாத கருவி என்ற கருத்து மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் இருந்தது. அது இப்போது இல்லை. நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சென்னையில் அந்நிய கலாசார கலைகள் ஊடுருவினாலும் பறை இசைத்தால் மக்கள் கூடுவதை தவிர்க்க முடியாது. பறை சத்தம் கேட்டால் ஏறெடுத்துப் பார்க்கவே செய்வார்கள். ஏனெனில் அது உயிரில் கலந்த ஒரு இசை. ஜனவரியில் நிகழும் சென்னை சங்கமத்தில் கூடும் மக்கள் கூட்டமே அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எனவே தமிழனின் ரத்தத்தில் அவனுடைய மரபு இசை கலந்திருக்கிறது. அவன் அதை இன்னும் ரசிக்கிறான்" என்ற எழிலனின் கருத்தை கேட்டுக் கொண்டே நடந்தோம்.மேலும் வாசிக்க…

வேடந்தாங்களில் அதிரும் பறை 03

No comments:

Post a Comment