Tuesday, March 4, 2014

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 01

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு


அருள்

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய எட்டாவது மாநாடு கும்பகோணத்தில் நடைபெறப் போவதாகவும் அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கிலங்கை படைப்பாளர் முத்துமீரான் என்னிடம் சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில்
கும்பகோணம், இந்து கோவில்களுக்கும் சிற்பிகளுக்கும், ஆலயம் தொடர்பான பொருட்கள், சேவைகளுக்கும் பிராமணர்களுக்கும் பெயர் பெற்ற இடம் என்று தான் நான் அறிவேன். கும்பகோணம் என்றதும் தமிழக முதல்வரின் மகாமகக் குளியல்தான் ஞாபகத்துக்கு வரும். இவ்வாறான ஒரு மனப் பின்னணியில் இஸ்லாமியருக்கு என்ன வேலை? என்ற கேள்வி எழுந்தது நியாயமானதுதான்!
 எங்களை அழைத்துச் செல்ல திருச்சி விமான நிலையம் வந்த நண்பரிடம் விசாரித்தபோது, கும்பகோணம் இந்து மயமானதுதான் என்பதை ஒப்புக் கொண்டதோடு, சுமார் இருபது சதவீதமானோர் முஸ்லிம்கள் என்றார். இவர்களில் செல்வமும் செல்வாக்கும் கொண்ட முஸ்லிம் வர்த்தக சமூகம், 'கிஸ்வா' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கும்பகோணம் இஸ்லாமிய சோஷியல் வெல்பெயார் அஸோசியேஷன் என்ற சமூக அமைப்பை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும், கல்வி சார்ந்த சமூக மேம்பாட்டு திட்டங்களை வகுத்து நிறைவேற்றிவரும் இந்த அமைப்பே, கவிக்கோ அப்துல் ரகுமானை தலைவராகக் கொண்டு செயற்பட்டுவரும் இஸ்லாமிய இலக்கிய கழகத்துடன் இணைந்து இம்மாநாட்டை கும்பகோணத்தில் நடத்தியது.

கவிக்கோ முன்னிலையில் 
முத்துமீரானுக்கு கௌரவம்

 பெப்ரவரி மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் கும்பகோணம் அசூர் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் ஹாஜி, இ. எஸ். எம். பக்கீர் முஹம்மது வளாக டி. எஸ். மஹாலில் இம்மாநாடு நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகம் அழைத்திருந்த இந்திய நாட்டவரும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து அழைக்கப்பட்டவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கும்பகோணம் ஒரு பெரு நகரம் அல்ல. அதை மாநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது கும்பகோண மக்களின் கோரிக்கை. விரைவிலேயே அது நிறைவேறும் என்று எம்மிடம் சொல்லப்பட்டது.

இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆரம்பத்தில் இதை மாநில மாநாடாகத்தான் நடத்த எண்ணியிருந்தது. ஆனால் இலக்கிய கழக நிர்வாகிகளுக்கும் கிஸ்வா நிர்வாகிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாறல்கள் காரணமாகவும் கிஸ்வாவின் உறுதியான வேண்டுகோளுக்கு இணங்கவும் இம்மாநாட்டை அகில உலக மாநாடாக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது என்று கிஸ்வா நிர்வாகிகள் எம்மிடம் கூறினார்கள்.
மருத்துவர் தாஸிம் அஹமட் 
கௌரவிக்கப்படுகிறார்.
இதனால்தான் பேராதனை மெய்யியல் உளவியல் துறைத் தலைவர் கலாநிதி எம். எஸ் எம். அனஸ் மாத்திரமே இங்கே ஆய்வு அரங்கில் உரையாற்றியதோடு ஆய்வரங்கு தொகுப்பு நிகழ்ச்சியிலும் பங்குபற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிஞர்களும், ஏனைய முஸ்லிம் இலக்கியவாதிகளும் இங்கே ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியாமற் போனதற்காக காரணமாகவும் இக்கடைசி நேர தீர்மானமாகவே இருக்க வேண்டும்.

ஏனெனில் கடந்த வருடம் மலேசியாவிலும், காயல் பட்டிணத்திலும் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் கும்பகோண மாநாட்டு ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. அரசியல் நுழையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அழைக்கப்பட்டிருந்தவர்கள் நன்றாக கவனிக்கப்பட்டனர். அந்த நான்கு நாட்களும் மறக்க முடியாத நாட்கள்தான்!

இலங்கையில் இருந்து குறைவான எண்ணிக்கையில் கும்பகோண மாநாட்டுக்கு பேராளர்கள் சென்றிருந்தாலும் அனைவரும் நன்கு உபசரிக்கப்பட்டதோடு, அவர்களில் சிலருக்கு கௌரவமும் செய்யப்பட்டது.

நமது மணிப்புலவர் மருதூர் மஜீத்தின் இது ஒரு தங்க நூல் என்ற புத்தகம் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. வாழ்நாள் இலக்கியப் பணிக்கான விருது, பத்தாயிரம் ரூபாவுடன் இவருக்கு வழங்கப்பட்டது. பொன்னாடை கௌரவம் அளிக்கப்பட்டது. கவியரங்கில் மணிப்புலவர் வாழ்த்துக்கவிதை வாசித்தார்.
மணிப்புலவருக்கு  கௌரவம்
கிழக்கிலங்கை எழுத்தாளரும் தனித்துவமான மண்வாசனை படைப்பாளரும் சட்டத்தரணியுமான கவிஞர் முத்துமீரான், நாட்டாரியல் தொடர்பான ஒரு ஆய்வரங்குக்கு தலைமை தாங்கினார். அவருக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் வாழ்நாள் சாதனையாளர் விருது, முஸ்லிம் நாட்டார் இலக்கியப் பணிக்காக வழங்கப்பட்டது. இவர் எழுதிய 'கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும்' மற்றும் 'என்னடா குலம் கோத்திரம்' ஆகிய இரு நூல்களும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. ஆய்வரங்கில் இவர் ஆற்றிய உரை பலரையும் கவர்ந்தது.

இம்மாநாட்டுக்கான இலங்கை இணைப்பாளராகக் கடமையாற்றிய மருத்துவர் தாசிம் அஹமட் இரண்டாம் நாள் அமர்வில் ஆய்வுக் கோவையை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். இலக்கியம் மற்றும் சமூகப் பணிக்காக இவருக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த இஸ்லாமிய பாடகருக்கான விருதை கலைக்கமல் பெற்றுக்கொண்டார். இலக்கியம் மற்றும் சமூகப் பணிக்காக எஸ். எச். எம். ஜெமீலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். அவர் இங்கு ஆற்றிய உரை பலரையும் கவர்ந்தது.

கலாநிதி எம். எஸ். எம். அனஸ் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையும் ஆய்வரங்கு தொகுப்பு நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய தலைமையுரையும் சிறப்பாகவும் வித்தியாசப்பட்டு நிற்பதாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வாசிக்க…

கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 02

No comments:

Post a Comment