Thursday, February 13, 2014

கொழும்பின் சைவ உணவக வரலாறு – 2

"அந்தக் காலத்தில் ஒருநாள் உணவு தேவை சதங்களில் முடிந்துவிடும்"


கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்

 மணி  ஸ்ரீகாந்தன்

"சைவ உணவகங்களில் மலிவு விலையில் உணவும், மரியாதையும் கிடைப்பதால்தான் சிங்களவர்கள் விருப்பத்துடன் இங்கே உணவருந்த வருகிறார்கள். சைவக் கடைகளுக்குச் சாப்பிடப் போனால் சாம்பாரும், ரசமும் விரும்பியபடி சாப்பிடலாம். அங்கே அளவுச் சாப்பாடு கிடையாது என்பது அவர்களின் நம்பிக்கை, அதுதான் உண்மையும் கூட. நாங்கள் சாப்பிட வருபவர்களுக்கு சாம்பார் வாளியை அப்படியே வைத்து விடுவோம், இஷ்டம் போல ஊற்றி சாப்பிடுவார்கள். குறிப்பாக சைவ உணவகங்களில் இந்தப் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இருந்து வருகிறது" என்கிறார் கோல்டன் கபே ராமன்.

அந்தக் காலத்தில் கொழும்பில் இந்தியர்கள்தான் அதிகமாக வசித்தனர். அதனால் ரவுடித்தனமும் அவர்களிடம்தான் இருந்தது. குறிப்பாக மலபாரிலிருந்து வந்தவர்கள் கொழும்பு துறைமுகத்தில் மூட்டை சுமந்தவர்கள். அவர்கள்தான் ரொம்ப மோசம். அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் நாங்கள் இரவு எட்டு மணிக்கெல்லாம் கடையை மூடி விடுவோம். ஆனால் 53ம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மீதிருந்த பயமும் போய்விட்டது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு போய்விட்டார்கள் என்று தமது அந்தக் கால அனுபங்களில் மூழ்கிப்போனார் ராமன்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எங்கே தங்கினார்கள். வீட்டு வாடகை எவ்வளவு என்பது போன்ற எமது சந்தேகங்களை ராமனிடம் கிளறினோம்.

"அப்போது கொழும்பில் நிறைய வீடுகள் சும்மாதான் கிடந்தன. நான் வேலைப்பார்த்த லச்சுமி விலாஸ் ஹோட்டலுக்குச்
 சொந்தமாக மூன்று வீடுகள் இருந்தன. அந்த வீடுகளில் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வந்திருந்த புடவை வியாபாரி, ஐஸ்கிறீம் வியாபாரி, மூட்டை தூக்குபவர்கள், வாழை இலை வெட்டுபவர்கள் என்று சுமார் நூற்றி ஐம்பது பேர் தங்கி இருந்தார்கள். அவர்களோடுதான் நானும் தங்கியிருந்தேன். எங்களுக்கு வீடு இலவசமாக வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றுவேளை சாப்பாட்டையும் அவர்களின் கடையில்தான் சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு. அதன்படியே நாங்களும் மூன்றுவேளை சாப்பாட்டையும் அந்தக் ஹோட்டலிலேயே சாப்பிட்டு ரொம்பவும் ஜொலியாகக் காலத்தைக் கடத்தினோம்" என்று சொல்லி புன்னகைக்கும் ராமனிடம் அப்போது ஹோட்டல் வேலை ரொம்ப ஈஸியாக இருந்ததா? என்று கேட்டோம்.

"ஜொலியாக இருந்தோம் என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேங்க அப்போது ஹோட்டல் வேலை ரொம்பவும் கஷ்டம். இப்போ மாதிரி இயந்திரங்கள் கிடையாது. அதனால் மாவு ஆட்டுவது, உரலில் இடிப்பது, அம்மியில் அரைப்பது என்று எல்லாமே கையாலதான. ரொம்ப கஷ்டமுங்க. நான் அந்த வேலை எல்லாம் செய்து ரொம்பக் கஷ்டப்பட்டு முன்னேறியவன். ஆனால் என் பிள்ளைகள் அந்தக் கஷ்டங்களை அனுபவிக்கவில்லை. அது எனக்கு ரொம்பவும் ஆறுதலா இருக்கு" என்று கூறியவரிடம், அந்தக்காலத்து முதலாளிகள் தொழிலாளிகளை அடித்து உதைப்பார்களாமே? என்று நாம் கேள்விப்பட்ட விடயத்தை வினவினோம்.

"நான் எழுபதாம் ஆண்டுவரை ஹோட்டலில் எல்லாவிதமான தொழிலையும் செய்திருக்கிறேன். ஆனால் நான் அடிவாங்கியதில்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் நான் வேலைப்பார்த்த இடத்தில் முதலாளிகள் எல்லோரும் எங்க ஊர்க்காரர்கள். அதாவது ராமநாதபுரம், திருநெல்வேலியை சேர்ந்தவர்கள்" என்று சொல்லும் ராமன் இன்னொரு விடயத்தையும் சொன்னார்.

"அந்தக்காலத்தில் படிப்பறிவு ரொம்பவும் குறைவு. நூற்றுக்கு ஐந்து பேர்தான் படித்தவர்கள். கடை முதலாளிகளும் படித்தவர்கள் அல்ல. எல்லாம் கேள்வி ஞானம்தான். படிக்காத காரணத்தால் நல்ல பண்பும் பழக்கவழக்கமும் அந்தக்காலத்தில் இல்லைத்தான். அப்போது பத்திரிகை படிக்கும் பழக்கம் கூடக் கிடையாது. எனக்கே 65க்குப் பிறகுதான் கொஞ்சம் பொது அறிவு வந்து பேப்பர் படிக்கும் பழக்கம் வந்தது" என்று சொல்லும் ராமன், தாம் பத்திரிகைகளில் படித்த பொன்மொழிகள், தத்துவங்களைத் தொகுத்து சிதறிய முத்துக்கள் என்ற ஒரு நூலையும் வெளியிட்டு தமது உணவகத்தில் வைத்திருக்கிறார். நாவுக்கு சுவையையும், அறிவுக்கு தீனியையும் போடுவதை கோல்டன் கபே ராமன் வழமையாகக் கொண்டிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்து வர்த்தக துறையில் வளர்ந்தவர்களில் டேவிட் கிராம், வாணிவிலாஸ், அம்பாள் கபே உள்ளிட்ட சில நிறுவன உரிமையாளர்களைக் குறிப்பிடுகிறார் ராமன்.

அந்தக் காலத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாரம் நடக்கும் என்று கேட்டோம். அதற்கு ராமன், "ஒரு நாளைக்கு ஏழு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக பதினைந்து ரூபாய் வரை வியாபாரம் நடைபெரும். சைவ உணவகப் பண்டங்களின் விலைகள் சதங்களில் தொடங்குவதால் கல்லாப் பெட்டி நிறைய சில்லறை காசுகள்தான் நிறைந்து காணப்படும். ரூபாய் நோட்டுகளைக் காண்பது அரிது. ஒரு மனிதனின் சராசரி தேவை சதங்களில் முடிந்து விடுவதால். அந்தக்காலத்தில் சதங்கள் ரொம்பவும் பெறுமதியானவை.

ஒரு சதத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அப்போது டிப்ஸ் கொடுக்கும் பழக்கமும் இல்லை. சதம் பெறுமதி என்பதால் எப்படி டிப்ஸ் கொடுப்பது? எனக்கு தெரிய 60பதுக்கு பிறகுதான் டிப்ஸ் கலாச்சாரம் கொழும்பில் பரவியது. ஐந்து, பத்து சதத்தில் தொடங்கிய டிப்ஸ் பழக்கம் இப்போ குறைந்த பட்சம் சர்வருக்கு பத்து ரூபா கொடுத்தால்தான் தமக்கு மதிப்பு என்று வாடிக்கையாளர்கள் நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. பெரும்பாலான ஹோட்டல்களில் டிப்ஸ் கொடுத்தால்தான் நன்றாக கவனிக்கிறார்களாம். இல்லை என்றால் தங்களை கவனிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

ஆனால் நான் அந்த விடயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்கிறேன். அப்படி எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக நானே சில சமயங்களில் உணவுகளைப் பரிமாறுவதுண்டு. வரும் வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் கொடுக்க வேண்டாம் என்று எம்மால் சொல்ல முடியாது அப்படி கொடுப்பது ஒரு கௌரவமான விடயமாக அவர்கள் நினைக்கிறார்கள். சாப்பிட்டு விட்டு சர்வருக்கு ஒரு பத்து ரூபா கொடுத்தால் அடுத்த முறை மீண்டும் சாப்பிட வரும்போது அவர்களுக்கு கவனிப்பு பலமாக இருக்குமாம். ஆனால் நான் சர்வராக வேலை பார்த்த அந்தக் காலத்தில் எங்களிடம் ஒரு நோட் புக்கும், பேனாவும் வழங்கப்படும். அதில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கான கணக்கை எழுதி கல்லாவில் அமர்திருக்கும் முதலாலியிடம் கொடுப்போம். அவர்கள் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொள்வார்கள்" என்று அந்தக்கால சதங்களைப் பற்றி ஒரு நீண்ட விளக்கம் அளித்தார் ராமன்.

பத்து ரூபா சம்பளத்தில் பற்றுப்பாத்திரம் தேய்த்து, மேசை துடைத்தவர் எப்படி கல்லாவில் உட்கார்ந்து காசு எண்ணினார் என்பதும் ஒரு சுவாரஸ்யமான கதை. கொம்பனி வீதி ஜாவா லேனில் அமைந்திருந்த லட்சுமி விலாஸ் ஹோட்டலுக்கு அருகில் ஒரு பெரிய வீடு இருந்ததாம். அந்த வீட்டுக்கு தினசரி காலை உணவை ராமன்தான் எடுத்துச் செல்வாராம். அந்த வீட்டில் இருந்த துரைக்கு குழந்தைகள் இல்லாததால் ராமன் மீது அவர்களுக்கு மிகுந்த அன்பு. ராமனுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையிலான நட்பு நீண்டக்காலமாக தொடர்ந்திருக்கிறது.

பின்னர் ஒரு சமயத்தில் லட்சுமி விலாசின் நிர்வாகத்தை அந்த பெரிய வீட்டுத் துரை எடுத்து நடத்தியிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தமக்கு விசுவாசமான ராமனை கல்லாவில் அமர்த்தியிருக்கிறார். அதன் பிறகு நீண்டகாலமாகக் கடையின் காசாளராக நேர்மை தவறாது  பணியாற்றி வந்தார் ராமன்.

1953ம் ஆண்டு பேங்சால் வீதியில் கோல்டன் கபே கடையை ராமனின் உறவினர் ஒருவர் பொறுப்பேற்றார் ராமன் கோல்டன் கபேயின் காசாளரானார். அதன் பிறகு அந்தக் கடையின் நிர்வாகத்தை ஆர். கிருஸ்ணமூர்த்தியால் நடத்த முடியாமல் போக, தமக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருந்த ராமனிடம் ஹோட்டலைக் கையளித்து விட்டுச் சென்று விட்டாராம்" ஆர். கிருஸ்ணமூர்த்தியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. என்னிடம் ஒரு சதமும் எதிர்பார்க்காமல் இவ்வளவு பெரிய ஹோட்டலை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்ற கிருஸ்ணமூர்த்திக்கு ரொம்பவும் தாராள மனசுங்க" என்று தமக்கு வாழ்க்கை கொடுத்தவரை ராமன் நெஞ்சார வாழ்த்துகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பில் சைவ உணவை உண்பவர்களின் தொகைதான் அதிகமாக இருந்தது. அசைவம் ரொம்பவும் குறைவு. அதனால் சைவ உணவகங்களின் தேவையும் அதிகமாக இருந்தது. அப்போது அரிசி மா பாவனையில் இல்லை, கோதுமை மா மட்டும்தான். அந்த நாட்களில் எல்லா ஹோட்டல் உரிமையாளர்களும் கட்டாயம் மாடு வளர்ப்பார்கள். லட்சுமி விலாசுக்கு சொந்தமாக இருபத்தைந்து மாடுகள் ஜாவா லேனில்; இருந்தன. கோல்டன் கபேக்கு சொந்தமான மாடுகள் வத்தளையில் வளர்க்கப்பட்டன. பவுடர் பால் புழக்கத்தில் இருந்தாலும் பசும் பால் அருந்துபவர்களின் தொகை அதிகமாக இருந்தது. அப்போது கொழும்பில் பெரும்பாலான இடங்கள் காடுகளாகவும் புல் மண்டிய புதர்களாகவும் இருந்ததால் மாடு வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் கொழும்பில் காணப்பட்டது. இப்போதோ கொழும்பில் மாடு வளர்ப்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

கொழும்பில் அப்போது ரொம்பப் பிரபலமான இடமாக 'எலிப்பன்ட் ஹவுஸ்" இருந்தது. அங்கேயும் சில சமயங்களில் சைவ உணவகம் பால் கொள்வனவு செய்யுமாம். ராமன் தன்னுடன் நைட் ஸ்கூலில் படித்த நண்பர்கள் பிரான்சிஸ், அப்புறம் நண்பர்; அலி ஆகியோரை தன்னால் மறக்க முடியாது என்கிறார். "பிரான்சிஸ் இந்தியாவுக்கு போயிட்டாரு அலி கொழும்பில ரொம்ப வசதியான ஆளா இருக்கிறாரு.." என்கிறார் ராமன்.
 

மேலும் வாசிக்க…

கொழும்பின் சைவ உணவக வரலாறு -3

No comments:

Post a Comment