Thursday, February 13, 2014

வீதியோர எல்லைச் சாமிகள்.-02

இகழ்ந்தவரை மண்டியிடச்  செய்த  மதுரைவீரன்


மணி  ஸ்ரீகாந்தன்


காவல் தெய்வங்கள் குறித்த கூத்துப் பாடல்களும் காவல் தெய்வ பூஜையின் போது பாடப்படுவது வழமை.

"வெள்ளைக் குதிரையில் அய்யனாரே 
வேகமாய் வந்தருளும் அய்யனாரே 
கோட்டைக் கருப்பசாமி நீங்க 
குடியிருந்து காக்க வேணும் 
மந்தையில மாரியாயி மலை மேல 
மாயவரே மழையை எறக்கிவிடு 
மானுடங்க மனங்குளிர 
மழைக்கு வரங்கேட்டு 
நாங்க மருகுகிறோம் சாமி 
எலந்தை முள்ளால கோட்டைக்காரி 
எங்களை ஏறிட்டுப் பாரம்மா சக்கதேவி 
காட்டைக் காத்தது காளியாத்தா 
கம்மாய்க் கரையை காத்தது அய்யனாரு....."

காவல் தெய்வங்களை இறைஞ்சுவதாக இத்தகைய பாடல்கள் நடை பயிலும் காவல் தெய்வங்களின் பூஜைகளின் போது பறை இசையோடு கேட்பதற்கு மிக இனிமையான சந்தங்களோடு இப்பாடல்கள் உங்கள் தலையை அசைக்கும். தாளம் போடச் செய்யும். இந்தப் பாடல்களை கேட்கும் சிலர் சாமி அருள் வந்து ஆடுவதையும் அங்கே காணலாம்.
அடுத்ததாக எமது தேடலில் சிக்கியவர்தான் காகாலை மதுரைவீரன். குதிரை மீது ஆரோகணித்திருப்பார். புளத்சிங்கள பிரதேசத்தில் அமைந்துள்ள ஹல்வத்துறை பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காவல் தெய்வமாக இந்த மதுரைவீரன் வெள்ளைக் குதிரையில் வீற்றிருக்கிறார். மதுரைவீரன் தொடர்பில் பல்வேறு கதைகளும், வர்ணணைகளும் இருப்பினும் இது ஒரு காவல் தெய்வம். துஷ்டத்தனங்களில் இருந்து மக்களை காப்பவர் என மக்கள் நம்பி வழிபடுகின்றனர்.

"எங்களுக்கு நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் அதை எங்க குலசாமி வீரன் கிட்டத்தான் சொல்லி வைப்போம். எங்களுக்கு எல்லாமே அவருதான். அவரோடு பாதுகாப்பிலதான் நாங்க இன்னிக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாம இந்த பகுதியில வாழ்றோம்" என்று மதுரைவீரனை மெய்சிலிர்த்து புகழ்கிறார் சொக்கலிங்கம்.

சொக்கலிங்கத்தின் அப்பா பெயர் கட்டியப்பன். அவர் திருச்சி குப்பம்பட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கைக்கு வெள்ளைக்காரர்களினால் அழைத்து வரப்பட்டபோது அக்கிராமத்து குலசாமி கோயிலில் இருந்து பிடி மண்ணை தன்னோடு எடுத்து வந்தாராம். ஹல்வத்துறை வந்ததும் மதுரை வீரனை நினைத்து ஓரிடத்தில் அம்மண்ணை வைத்து வழிபட்டாராம். இங்கே மதுரை வீரன் காவல் தெய்வமாக வந்தமர்ந்த கதை இது. அந்த இடத்தில் தான் இன்று மதுரை வீரன் சிலை கத்தியோடு நிற்கிறது.

"இந்த சாமி ரொம்பவும் சக்தி வாய்ந்தது. ஒரு தடவை ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக சில்வாதுரை ஜீப்பில் வந்தபோது மதுரை வீரன் சிலையைப் பார்த்திருக்கிறார். என்ன தோன்றியதோ, தெரியவில்லை, ஏளன வார்த்தைகளால் திட்டி பரிகாசம் பண்ணிச் சென்றாராம். பின்னர் போன காரியத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் நடுச்சாமமாகி விட்டது.
அவர் ஜீப்பை செலுத்தியபடி மதுரை வீரன் சிலை அமைந்திருந்த பகுதிக்கு வந்தபோது பாதையை மறித்துக் கொண்டு மதுரைவீரன் நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். கால்கள் இரண்டும் பாதையின் இரு கரைகளிலும் பதித்து கைகளை அகல விரித்தபடி நிற்பதைப் பார்த்து வெலவெலத்துப் போனார் சில்வாதுரை. உலுக்கி எடுக்கும் அச்சத்துடன் ஜீப்பை அப்படியே போட்டுவிட்டு பாதைக்குக் கீழே அமைந்திருந்த லயத்தை நோக்கி அரக்கப் பரக்க ஓடியிருக்கிறார். தான் கண்ட காட்சியை கட்டியப்பனிடம் அவர் ஒருவாறு கூறியிருக்கிறார்.
ராமசாமி பூசாரியும் பந்தத்தை பிடித்தபடி கோயில் பக்கமாக ஏறிச் சென்றார்களாம். நடந்தது என்ன என்பதைப் பார்ப்பதற்காக சிறு பையனாக இருந்த சொக்கலிங்கமும் அவர்களுடன் சென்றிருக்கிறார்.

அங்கே போய்ப் பார்த்தால் துரை சொன்ன இடத்தில் எந்த உருவமும் காணப்படவில்லை. பிறகு பூசாரி வீரனுக்கு ஒரு சூடத்தை கொளுத்திவிட்டு துரையை போகும்படி சொல்லியிருக்கிறார். ஆனால் மருண்டு போயிருந்த சில்வாதுரை, தன் கண்களுக்கு வழிமறித்து நிற்கும் மதுரைவீரன் தென்படுவதாகச் சொல்லி நகர மறுத்திருக்கிறார்.

மதுரை வீரன் அடம்பிடித்து நிற்பதை புரிந்து கொண்ட பூசாரி மறுபடியும் வீரன் முன்னாடி மண்டியிட்டு இறைந்து மன்றாடினாராம். இதன் பிறகு வீரன் பாதையை விட்டு விலகவும் துரை ஜீப்பை ஸ்டார்ட் செய்து பங்களாவுக்கு சென்றாராம்.

அடுத்த நாள் இந்த இடத்திற்கு வந்த துரை வீரனிடம் மன்னிப்பு கேட்டதோடு பெரிய பூஜையையும் செய்தாராம்.

தான் பார்த்து கேட்ட இச்சம்பவத்தை முக பாவங்களுடன் விளக்கமாக நாடகம் போல நடித்துக் காண்பித்தார் சொக்கலிங்கம்.

(தொடரும்)

No comments:

Post a Comment