Tuesday, February 11, 2014

வேடந்தாங்களில் அதிரும் பறை 01

சாதி வேற்றுமைகளை எதிர்த்து முழங்குகிறது மணிமாறனின் பறை முழக்கம்


மணி  ஸ்ரீகாந்தன்

'நிலவை பறையாக்கு - வீரண்ணா
சூரியனில் சூடேற்று - வீரண்ணா
மனுவின் முதுகெழும்பில் - வீரண்ணா
சிண்டு குச்சி அடிகுச்சி செய் - வீரண்ணா
அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்தி - வீரண்ணா
அடிச்சி நொறுக்கு சாதியத்தை - வீரண்ணா
பெரியாரை முன்னிருத்தி - வீரண்ணா
பெயர்த்தெடு மதவாதத்தை - வீரண்ணா
விழுகிற அடிதனிலே - வீரண்ணா
வீழட்டும் சாதி மதம்.
சஞ் சஞ் சஞ்
சஞ் சனக்கு - வீரண்ணா
சமத்துவத்த முழங்கு - வீரக்கா............' 

என்ற பாடல் பறை இசையோடு வேடந்தாங்கலில் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரத்திலிருந்து 48 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால் வேடந்தாங்கல் வரும். தமிழகத்தின் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் இங்கே அமைந்திருப்பதால் வேடந்தாங்கலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த வேடந்தாங்கலில் தான் பறையொலியால் சாதிகளை விரட்டி அடிக்க மிகப்பெரிய பயிற்சி வேள்வி ஒன்றை தமிழகத்து பறை இசைக்கலைஞர் மணிமாறன் நடாத்திக் கொண்டிருந்தார்.

பறவைகளின் கீச்சிடும் இனிமையான ஓசைகளை வேடந்தாங்கலில் கேட்டுக்கொண்டே நடந்தால் மணிமாறனின் பறையொலி செவி வழியே உள்நுழைத்து நம்மை ஆடச் செய்யும் விந்தையைக் காணலாம்.

அன்று காலை எமது வானவில் சிறப்பு சந்திப்புக்காக காஞ்சிபுரம் வேடந்தாங்கலில் நடைபெறும் பறை இசைப் பயிற்சிப் பட்டறைக்குள் நுழைந்தோம். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களுமாக கலந்து பறை இசையை ஆர்வத்தோடு இசைத்துக் கொண்டிருந்தார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் சில பறைகள் காய்ந்து முறுக்கேறிக் கொண்டிருந்தன.

"நான் ஆறாவது பெயிலுங்க. எங்க அப்பாவுக்கு கலைகள் பற்றி எதுவும் தெரியாது. ஆனா எங்க தாத்தா ஒரு தெருக்கூத்துக் கலைஞர். அவரு பெயர் சுப்ரமணியம். ஆனா பறை இசையை நான் அவரிடம் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு கலை சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம் என்றால் அது சாவு வீடுகள் தான். நானும் என் நண்பர்களும் சாவு வீடுகளில் விடிய விடிய கானா பாடல்களைப்பாடி பிணத்துக்கு முன்பாக டோலக் வாசிப்போம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் கானா கச்சேரி விடியற் காலையில்தான் முடிவடையும். கச்சேரி முடிந்த உடன் எங்களுக்கு பணம் தர மாட்டார்கள். அதனால் பிணத்துக்கு முன்பாக அமர்ந்து பணம் வரும் வரை காத்திருப்போம். அப்போது அடுத்த ஷிப்டுக்காக பறை இசைக்கலைஞர்கள் பறைகளோடு வருவார்கள். அவர்களும் எனக்கு நண்பர்கள்தான். "இன்னும் காசு தரல மச்சான் லேட் ஆகும் போல" என்று நான் சொல்ல பறை ஆட்டம் தொடங்கும். நானும் நேரத்தைப் போக்க அந்தப் பறையை வாங்கி ரெண்டு தட்டு தட்டுவேன். இப்படித்தான் பறை மீது எனக்கு ஒரு காதல் பிறந்தது.
உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு பிணம்தான் வாத்தியாரு!" என்று தம்மைப் பற்றி ஒரு அறிமுகம் செய்தார் மணிமாறன். இப்படி ஒரு அறிமுகம் செய்துகொள்ள இந்த மனிதருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் என மனதுக்குள் நான் வியந்தபோதே, என் சிந்தனையில் மணிமாறன் விஸ்வரூபமெடுத்து நின்றார். நம்நாட்டில் இப்படி எவருக்காவது சிந்திக்கத்தான் தோன்றுமா?

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட மணிமாறனின் மனைவியின் பெயர் மகிழினி. இவர் ஒரு நாடறிந்த பாடகி. கும்கியில் 'சொய் சொய்' பாடலைப் பாடியவர் என்றால் வாசகர்களுக்கு இது கூடுதல் தகவலாக அமையும்.

"மகிழினியை மணம் முடித்த பிறகு என் வாழ்விடம் இந்த வேடந்தாங்கலாக மாறிப்போச்சுங்க!" என்கிறார் மணிமாறன். அப்போ நீங்களும் வேடந்தாங்கலுக்கு வந்த பறவை மாதிரிதானா....? என்றதும் மணிமாறன் சிரிக்கிறார்.
சிவகங்கையில் அழகர்சாமி வாத்தியாரிடம் பறை நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தாராம் மணிமாறன். இவரை பறை அடித்து காட்டும்படி அழகர்சாமி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இவர் சிம்பு குச்சியை எடுத்து இரண்டு தட்டு தட்ட அதைக் கேட்டு உற்சாகமான வாத்தியார்,

"உனக்கு பறை இசையில் சொல்லிக் கொடுக்க எதுவும் இல்லை நீ தவில் கற்கப்போ"  என்று கூறினாராம்.

"பிறகு அவரிடம் பறை நுணுக்கங்களை கற்று இன்று அந்த கலை அழிந்து விடாமல் காக்கவும் சாதி வேற்றுமையை துரத்தவும் இன்று நான் பறையை தோளில் சுமக்கிறேன்" என்று சொல்லும் மணிமாறனின் பறை முழக்கம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பெயர் சொல்லக்கூடிய பறை இசைக் குழுக்களில் மணிமாறனின் புத்தர் கலைக்குழு முதன்மை வகிக்கிறது.

தமிழகத்தின் பல இடங்களில் பறை இசைப் பயிற்சி பட்டறைகளை நடாத்தி வரும் மணிமாறனின் பயிற்சி வகுப்புக்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பறையின் நுட்பங்களை முறையாக பயின்று வெளியேறி இருக்கிறார்களாம். மணிமாறனின் பயிற்சி வகுப்புகளில் கற்கும் மாணவர்களின் பெரும்பாலானோர் நல்ல கல்வித் தகமையை கொண்டவர்களாகவும் அலுவலகங்களில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பதை நாம் நேரில் கண்டு கேட்டறிந்தோம்.
'எமது பறையொலி சாவுக்கானது அல்ல வாழ்வுக்கானது!

எமது பறை முழக்கம்
சாமியாடுவதற்கல்ல சாதிகள் ஆட்டம் காண்பதற்கு!

ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்
பறைகளல்ல இந்திய சாதிகள்!' என்ற செய்தியையே மணிமாறனின் புத்தர் கலைக்குழு உரத்துச் சொல்லி வருகிறது....மேலும் வாசிக்க…

வேடந்தாங்களில் அதிரும் பறை 02
No comments:

Post a Comment