Wednesday, January 8, 2014

இருள் ஒளி பரப்பும் வெளிச்சங்கள்!

பந்தங்களினால் பெயரைக் கெடுத்துக்கொள்ளும்   அரசியல்வாதிகள்


ஆனாரூனா

மக்களுக்கு பல நன்மைகளைச் செய்பவர்களாக அரசியல்வாதிகள் விளங்கினாலும், அதே மக்களிடம் அதிக திட்டுகளை வாங்கிக் கட்டிக் கொள்பவர்களாகவும் இதே அரசியல்வாதிகளே இருக்கிறார்கள்.

ஏன் அரசியல்வாதிகள் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள் என்றால், அவற்றில் சில நியாயமான காரணங்களாகவும் இருக்கலாம். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களிடம் வந்து கூழைக் கும்பிடு போடுகிறவர்கள் வெற்றி பெற்றதும் அல்லது பதவி கிடைத்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். தேர்தல் சமயத்தில் பெயர் சொல்லி அழைத்தவர், வெற்றி பெற்றதும் அவர்களைக் கண்டும் காணாத மாதிரி போய்விடுவார். ஒரு காரியம் ஆக வேண்டும் என்று உள்...ர் அரசியல்வாதியை அணுகினால், தன்னை எதிர்த்து நின்றவரின் பெயரைக் குறிப்பிட்டு, "நீயெல்லாம் அவனுக்கு வேலை செஞ்சவன் தானே, வேலை ஆகணும் என்றால் மட்டும் நானா? நீ அவனிடமே போய் காரியத்தை செய்து கொள்!" என்று அலட்சியமாகக் கூறி விட்டு விரட்டி விடுவதும் உண்டு.

இனி வாக்காளர்கள் என்ன சொல்வார்கள்?

"அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கிடந்த இவனை நம்பி நாம் ஓட்டுப் போட்டோம் பாரு.... நம் புத்தியை செருப்பால அடிக்கணும்... வரட்டும் அடுத்த தேர்தல்... அப்போ இவன கவனிச்சுக்கலாம்" என்று கறுவிக் கொண்டிருப்பார்கள்.

ஜனநாயகத் தேர்தலில் இவை எல்லாம் சகஜம்.

அரசியல்வாதிகள் செய்யும் தவறு என்னவென்றால், பட்டம், பதவி, இருக்கை எல்லாம் வந்து சேர்ந்ததுமே அவர்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்தப்பட்டு விடுவதற்கு அவர்கள், அவர்களை அறியாமலேயே அனுமதித்து விடுவதுதான்.

உண்மையில் இந்த ஒளி வட்டத்தை ஏற்படுத்துவது அந்த அரசியல்வாதி அல்ல. சுற்றி இருப்பவர்கள்தான். வழமை போலவே தன் இயல்பான குணங்களுடன் கூடிய ஒரு அரசியல் பிரமுகரை புலியாகவும், நரியாகவும் அரக்கனாகவும் ஏதோ ஒரு விசித்திர மனிதன் போலவும் சித்தரித்து அவரை மனுஷன் அண்டாத ஒன்றைப் போல சோடித்து விடுவதும் அவரைச் சுற்றி துதித்து நிற்கும் இந்த ஆட்கள் தான்.

முன்னர் சௌமிய மூர்த்தி தொண்டமானைச் சுற்றி இந்த 'ஒளி விளக்கு'கள் நின்று கொண்டிருந்தன. அவர், இவர்களின் இந்த அழிச்சாட்டியங்களை எல்லாம் எப்படித்தான் பொறுத்துக் கொண்டாரோ!

ஒருமுறை சௌமியமூர்த்தி தொண்டமான் சில தமிழ்ப் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார். அன்றைக்கு அமைச்சில் ஏதோ ஒரு விழா நடைபெற்றது. அது முடிய தன் அறைக்கு அழைத்தார். சென்றிருந்தோம். பேச்சு சுவராசியமாகச் சென்றது. அப்போது அவரது பிரத்தியேக செயலாளராக இருந்தவர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு. நேரம் கடந்து செல்வதை தன் மணிக்கூட்டை சுட்டிக் காட்டுவதன் மூலம் அமைச்சருக்கு உணர்த்த முயன்றும் அமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை. அமைச்சர் ஈடுபாட்டுடன் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் என்ன செய்தார் தெரியுமா?

பத்திரிகையாளர் ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையை பரபரவென வெளியே இழுத்து எழும்பச் சொன்னார். மற்றொரு இருக்கையையும் அப்படியே இழுத்து எழும்பச் செய்தார். ஆனாலும் அமைச்சர் தொண்டமான் அசரவில்லை. தொடர்ந்தும் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டேயிருந்தார். நாங்கள் நின்று கொண்டே அவர் பேசுவதைக் கேட்டு குறித்துக் கொண்டோம். அது முடிந்து லிப்டில் ஏறப்போன சமயம் கூட, ஐலண்ட் பேப்பர்காரருடன் ஒரு சந்திப்பு இருக்க வேண்டுமே என்று கேட்டுக் கொண்டே லிப்டினுள் சென்றது எங்களுக்குக் கேட்டது. இது அவர் மறைவதற்கு சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். 'பந்தங்களையும் மீறி ஊடகவியலாளர்களுடன் அப்படி ஒரு பிணைப்பு அவருக்கு இருந்தது.

அமைச்சர் தொண்டமானை பத்திரிகையாளர்கள் அணுகுவதற்கு திருநாவுக்கரசர் விடுவதில்லை. முடிந்தவரை மறிப்பார். இதனால் பத்திரிகையாளர்களுக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. அவர் மறைந்த செய்தியைக்கூட தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு கலம் செய்தியாக வெளியிட்டு மறந்து விட்டதையும் இங்கே, வெறுப்புக்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம்.

இப்படி ஒரு 'வெளிச்சம்' தொண்டமானைச் சுற்றிக் கொண்டிருந்த போதும் அமைச்சர் இதையும் மீறி ஊடகவியலாளர்களுடன் நல்ல நெருக்கத்தைப் பேணியே வந்தார். காலை எட்டு மணியளவில் அவர் வீட்டுக்கு அழைப்பு எடுத்தால் அவரே லைனில் வந்து பேசுவார். காக்கைக் கூட்டம் தவிர்க்க முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டு, அதையும் மீறி தன்னை மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் காம்பீரியம் அவரிடம் இருந்தது.

அவரைச் சுற்றி எப்போதும் பந்தங்கள் சுழன்று வந்தன. அவர் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தால் பந்தங்களும் பக்கத்திலேயே ஒரு துரும்பும் அவர் மேல் படாதிருக்குமாறு பாதுகாத்துக் கொண்டிருக்கும். நெரிசலில் ஒருவருடைய சட்டையோ சால்வையோ அவர் தோளில் அல்லது முகத்தில் உரசி விட்டால் கூட, பந்தங்களுக்குப் பொறுக்காது. சட்டென தன் கைக்குட்டையை எடுத்து (அது என்ன அசிங்கமோ) துண்டு பட்ட இடத்தை மெதுவாகத் துடைத்துவிடும்! இதைப் பக்குவமாக செய்வதிலும் அமைச்சரை 'பூப்போல' பாதுகாப்பதிலும் வல்லுநராகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் அந்தோனி முத்து! இது பற்றி இப்போது அவர் என்ன நினைக்கிறாரோ!

இரத்தினபுரி வேவல் வத்தையில் வீடுகள் திறப்பு வைபவம் ஒரு உஷ்ணமாக சூழலில் நடைபெற்றது. ஆறுமுகன் தொண்டமான் திறந்து வைப்பதற்கு முன்னரே, காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றிருந்த ஏ. எம். டீ ராஜன் சில வீடுகளைத் திறந்து வைத்ததோடு அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ்காரர்களை தாக்க முனைந்த சம்பவங்களும் அன்று நடந்தேறியது.

அன்று செய்தி சேகரிக்க நான் சென்றிருந்தேன். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பரிவாரங்களுடன் எதிரே வருவதைக் கவனிக்காமல் நான் குறுக்கே கடக்கப்போன சமயத்தில் ஒரு 'வெளிச்சம்' எந்த எச்சரிக்கையும் தராமல் என்னைப் பிடித்து ஓரமாகத் தள்ளி விட்டது. நல்ல வேளையாக கால்களில் பலம் இருந்ததால் தடுமாறி நின்றுவிட்டேன். இல்லையேல் குட்டிக் கரணம் போட்டு விழுந்திருப்பேன்!

சில வருடங்களுக்கு முன் கொட்டக்கலையில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு. ஆங்கிலப் பத்திரிகை தமிழ் ஊடகவியலாளர் ஒருவரும் அதில் கலந்து கொண்டிருந்தார். கூட்டம் முடிந்து உணவு நேரம். அதற்கு முன் போத்தல்கள் வைத்தார்கள். அப்போது ஒரு சிங்கள இளைஞனே மீடியாவுக்கு பொறுப்பு. நமது ஊடகவியலாளரும் கிளாசில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு 'பைட்'சுக்காக காத்திருக்கிறார். திடீரென அங்கு வந்த அந்த இளைஞர், "யாரும் அருந்த வேண்டாம், இங்கே வேண்டாம், வேறு இடம் போவோம்" என்று சொல்லியபடியே போத்தல்களை கையில் எடுத்திருக்கிறார்.

அப்போது நண்பர் கிளாசும் மதுவுமாக நிற்பதைக் கண்டு பதறிப் போனவர், "ஐயய்யோ இங்கே அருந்தக் கூடாது. அதை அந்த வோஷ் பேசினில் கொட்டுங்கள்" என சத்தம் போட்டிருக்கிறார். நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை| "நீர்தானே அருந்தச் சொன்னீர், இப்போது வேண்டாம் என்கிறீரே என்ன விஷயம்?" எனக் கேட்டிருக்கிறார். அந்த இளைஞரோ பதற்றம் தணியாமல் 'அதை வோஷ் பேசினில் கொட்டிவிடு' என சத்தம் போட அவரும் கிளாசை பேசினில் கவிழ்த்திருக்கிறார்.

விபரம் பின்னரே தெரிய வந்திருக்கிறது.

அந்த இடத்தில் சில மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அறைக்குள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இருந்திருக்கிறார். எதேச்கையாக அவர் வெளியே வந்தால், ஊடகவியலாளர்கள் என்ஜோய் பண்ணுவதைப் பார்த்து ஆத்திரம் அடைந்து தன்னைக் காய்ச்சி எடுத்து விடுவார் என அந்த 'பந்தம்' கணக்கு போட்டதன் விளைவாகவே, ஊடகவியலாளர்களுக்கு அந்த அவமானம் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் உண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அத்தகையவர் அல்ல. கறாரானவர் என்பது வேறு விஷயம். ஆத்திரப்படுவார் என்பதும் தெரிந்த சங்கதிதான். ஆனால் உபசரிப்பு என்று வந்துவிட்டால் தாராளமாக நடந்து கொள்வார். இந்த விஷயத்தில் அவரில் எவருமே குறை காண முடியாது. அன்றைக்கு அவர் வெளியே வந்து ஊடகவியலாளர்களை கிளாசும் கையுமாகப் பார்த்திருந்தாலும் புன்னகையோடு நாலு வார்த்தை விசாரித்து 'Enjoy flok' என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். அந்த இளைஞனை அழைத்து, இவர்களை கவனித்து அனுப்பு என்றும் சொல்லியும் இருப்பார். அமைச்சர் பற்றி நாங்கள் அறிவோம்.

அந்த இளைஞரின் பதற்றம் இறுதியில் என்ன கருத்தை குறிப்பாக சிங்கள ஊடகவியலாளர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தெரியுமா?

'ஒரு டிரிங் எடுப்பதை கூட விரும்பாத மனுஷனண்டாத மனிதர் இவர். இந்தத் தமிழ் அரசியல்வாதிகளே...!' என்பதைப் போன்ற கருத்தை தானே உருவாக்கி இருக்கும்!

இந்த ஞான சூனியங்கள் இப்படித்தான் அவலை நினைத்து உரலை இடித்து அரசியல்வாதிகளின் பெயரைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இது சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம்.

ஒரு தமிழ் அமைச்சரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் நல்ல மூடில் இருந்தார். கதைத்துக் கொண்டிருந்தவர் தன் உதவியாளரை அழைத்து 'ரெண்டு டீ கொண்டுவாப்பா' என்று சொன்னார். என்னுடைய சந்திப்பைத் தொடர்ந்து அவர் வெளியே செல்ல வேண்டும். அதற்கு முன் ஒரு டீ குடிக்க வேண்டும்.

கதை தொடர்ந்தது. டீயைக் காணோம். மீண்டும் டீயை நினைவுபடுத்தினார். பேச்சுத் தொடர்ந்தது. டீயைக் காணோம். எரிச்சல் அடைந்தவராக, "நான் மினிஸ்ட்ரிக்குப் போகணும், டீக்கு சொன்னேனே இன்னும் ஏன் வரலை?" என்றார்.

உதவியாளர் எனக்குப் பின்னால் நின்று கொண்டு, இங்கே இருக்குது சேர்" என்று குரல் கொடுத்தார்.

"அங்கேயா இங்கே கொண்டா" என்றதும் ஒரு டீ அமைச்சர் முன்பாக வைக்கப்பட்டது. மேசைக்கு ஒரு டீ மட்டும் வந்ததைப் பார்த்த அமைச்சர்,

"உன்னிடத்தில் நான் என்ன சொன்னேன்? ரெண்டு டீ கொண்டு வரச் சொன்னேன். எங்கே மற்ற டீ?"  என்று உதவியாளரிடம் எரிச்சலைக் காட்ட, அவர் உடனே, "மற்ற டீ இங்கே இருக்கிறது" என்று எனக்குப் பின்னால் இருந்த டீ போவைக் காட்டினார்.

"அங்க ஏன் வைச்சிருக்க... அத இங்க கொண்டுவா... அந்த டீயைக் குடிக்க இவர் எழுந்து அங்கே போகணுமா?" என்று அமைச்சர் சொன்னதும் தான் டீ என்முன் வந்தது. ஒரு பிரமுகர், அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, தன்னைப் பார்க்க வந்தவருக்கு பரிமாறப்பட்ட பின்னரேயே 'சாப்பிடுங்க' என்று சொல்லி உண்ண ஆரம்பிப்பது, உணவு மேசைப் பண்பு, எனக்கு டீ வந்ததும் தான் 'டீ குடிங்க' என்று சொல்லியபடியே அமைச்சர் டீயை அருந்தத் தொடங்கினார்.

அந்த நபர் டீயை என்னிடம் ஏன் தரவில்லை? இவனெல்லாம் அமைச்சர் முன்னிலையில் டீ குடிப்பதா என்று நினைத்தாரா? அமைச்சர் எழுந்து போனபின் டீயைத் தரலாம் என யோசித்தாரா? பத்திரிகைக்காரனுக்கு டீ தந்தால் என் கௌரவம் என்னாவது என்று கருதினாரா? இப்படிச் செய்வதன்மூலம் அமைச்சரிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்தாரா?

தெரியவில்லை. அரசியல் பிரமுகர்கள் தன்னைச் சுற்றிச் சுழலும் இந்தப் பந்த வெளிச்சங்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் இருண்ட வெளிச்சத்தையே இவர்கள் ஒளிரச் செய்கிறார்கள்!

நன்றி- வண்ண வானவில் (01-01-2013)

No comments:

Post a Comment