Saturday, January 4, 2014

வீதியோர எல்லைச் சாமிகள்.-01

இலங்கையில் காணப்படும் காவல் தெய்வ வழிபாடு


மணி  ஸ்ரீகாந்தன்

காவல் தெய்வ வழிபாடுகள் தமிழர்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வகை வழிபாட்டு முறை. வீரர்கள் இறந்த பிறகும் அவர்களை வாழ்த்தி, வணங்குவதற்காக அந்த சின்னங்களையும் வீரர்களின் உருவங்களையும் கல்லில் செதுக்கி வழிபடும் பழக்கம் பண்டைய தமிழர் மத்தியில் நிலவி வந்திருக்கிறது. தொல்காப்பியம், புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களிலும் பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள், வெண்பாமாலை உள்ளிட்ட நூல்களிலும் இந்த வீர வழிபாடு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வீரன் களத்தில் எதிரிகளோடு சண்டையிட்டு உயிர் நீத்த இடத்தில் ஒரு கல்லை நட்டு அவன் நினைவாக வழிபாடு செய்வது அன்றைய வழக்கம். அந்தக் கல்லை வீரக்கல் என்று அழைக்கப்பட்டது. இந்த வீரன் தமது ஊரையும், தமது குலத்தையும் காப்பான் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் அந்த வீரர்களை தெய்வங்களாக போற்றினார்கள். இப்படி வழிபாடு செய்யப்பட்ட பல இடங்களே பிற்காலத்தில் வீரன் முதலிய கிராம தெய்வங்களின் கோயில்களாக மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
வீரனை வழிபடுவதற்காக அவனுடைய உருவம் முதலியவற்றைப் பொறிப்பதற்கு ஏற்ற கல்லை பொருத்தமான இடத்திலிருந்தே தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அந்தக் கல்லை தூய்மை செய்வதற்காக புனிதமான நீர் நிலையில் அமிழ்த்தி வைப்பார்கள். பிறகு உரிய இடத்தில் நாட்டி பெயர் முதலியவற்றை பொறிப்பார்கள்.

இதே காவல் தெய்வ பட்டியலில் பத்தினி தெய்வ வழிபாடும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்தினிக்கு ஒரு நல்ல இடத்திலிருந்து கல்லெடுத்து வந்து சிலை வைக்க முடிவு செய்த சேரன் செங்குட்டுவன், இமயத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து அதை கனக விஜயனின் தலையில் வைத்து தமிழகத்திற்கு கொண்டு வந்து வஞ்சிமா நகரில் கண்ணகிக்கு சிலை வைத்தான் என்பதை சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சிக்காண்டம் சொல்கிறது. தமிழர்களின் குல தெய்வமாக இந்த காவல் தெய்வங்களே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகின்றன.

சாமிக்கு படையல் போட்டு, ஆடு வெட்டி விழா எடுப்பதை பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழர்கள் வாழும் இடங்களில் இந்த காவல் தெய்வங்கள் கட்டாயம் இருக்கும். எனினும் இன்று தமிழக கிராமங்களிலும் இலங்கை பெருந்தோட்டங்களிலும் இன்றைக்கும் காவல் தெய்வ வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அய்யனார், சுடலைமாடன், அக்னி வீரன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், இருளப்ப சாமி, சடையாண்டி, முனீஸ்வரன், மாடசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல் தெய்வங்கள், கிராம தெய்வங்கள் அல்லது எல்லைச் சாமிகள் இன்றும் வீதியோரங்களில் கத்தியோடு ஆக்கரோசமாக நிற்பதைக் காணலாம். குறிப்பாக இவற்றை தமிழ்நாட்டில் அதிகம் காணலாம். நம் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காவல் தெய்வங்கள் ஊரைக் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஊர் காக்கும் சில தெய்வங்களைத் தேடி புறப்பட்டோம்.

தெபுவன புட்டுப்பாவல எஸ்டேட்டில் காவல் தெய்வமாக விளங்கும் மாடசாமியின் மகிமை பற்றிக் கேட்டோம்.

"இது எங்க குல தெய்வசாமிங்க. எங்க பாட்டி மாசாணம் திருநெல்வேலியிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்தபோது பிடிமண் கொண்டு வந்து இங்கே வைத்தாங்க. அவர்களுக்கு பிறகு எங்க அப்பா பஞ்சநாதன் இந்த மாடசாமிக்கு சேவை செய்தார். அதன் பிறகு நான் பொறுப்பேற்று நடத்தி வர்றேன்" என்று மாடசாமியின் வரலாற்றை சுருக்கமாக சொன்னார் பிரதீப்குமார். புட்டுப்பாவல மாடசாமியின் மகிமை பற்றி சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.
"பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இந்த தோட்டத்தில் வேலை பார்த்த காவலாளி, மாடனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைப் பிடித்து கொன்று தின்றுவிட்டான். அதனால் ஆத்திரம் அடைந்த மாடன் மறுநாள் இரவில் ஒற்றையடிப் பாதையில் காவலாளி வரும்வரை காத்திருந்து அவனை ஓங்கி ஒரு அடி அடித்ததாம்.
அலறிக் கொண்டு கீழே விழுந்தவன் எழும்பிப் பார்த்த போது பாதையின் இரண்டு பக்கமும் இருந்த கல்லில் தனது இரண்டு கால்களையும் பரப்பி வைத்து வானத்துக்கும் பூமிக்குமாக வெள்ளையாய் ஒன்று நின்றதாம்" என்று சிலிர்த்து கொள்கிறார் பிரதீப். தனது பாட்டி மாசாணம் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தையும் இப்படிச் சொல்கிறார்:
"என் பாட்டி மாசாணமும் சில பெண்களும் ஒரு தைப்பொங்கல் நாளில் மாடனுக்கு பொங்கல் வைத்தார்களாம். அப்போது குதிரையில் வந்த ஒரு வெள்ளைக்கார துரை 'கன்ட்றி புரூட்' என்று கூறியவாறே பொங்கல் பானையை எட்டி உதைக்க, அது சிதறிப் போனது. அதைப் பார்த்து பதறிய என் பாட்டி, "மாடா நீ இருந்தா பார்த்துக்க" என்று மாடனுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறாள். வெள்ளைக்காரன் கேலியாக சிரித்து விட்டு குதிரையை தட்டிவிட, குதிரை ஓடத் தொடங்கியதாம். சில நிமிடங்களில் குதிரையின் ஓட்டம் அதிகரித்தது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதாம். துரையால் குதிரையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி கீழே விழுந்திருக்கிறான். பிறகு அவனை பங்களாவில் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். அதன் பிறகு அவன் சித்த பிரமை பிடித்தவன் போல பங்களா வாளகத்தில் படுத்து புரண்டிருக்கிறான். இது மாடனின் வேலைதான் என்று புரிந்துகொண்ட பங்களா அப்பு, துரைக்கு மாடனின் கோபத்தை எடுத்துச் சொல்லி அவனை மாடன் சிலைமுன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப் கேட்க வைத்தாராம்" என்று மாடனின் பெருமைகளை சொல்லி வியந்தார் பிரதீப்குமார்.

தொடரும்...

No comments:

Post a Comment