Friday, January 24, 2014

சினிமானந்தா பதில்கள் -09

திரிஷா வீட்டு நாய் குட்டி போட்டு இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகிறதே? உண்மையா?

எஸ். அருண்
தெஹியோவிட்ட

என்ன சொன்னீங்க அருண், 'நாய்' ன்னு சொன்னீங்களா? திரிஷாவுக்கு கேட்டா அவ்வளவுதான் உங்களையும் என்னையும் கடிச்சிக் குதறிடுவாங்க. அவங்களையெல்லாம் நாய்ன்னு சொல்லக்கூடாது. அவங்க செல்லம். செல்லக்குட்டிங்க. அதிர்ஷ்டக் குட்டிங்க. இல்லன்னா திரிஷாவோட படுக்கையில படுத்து (அய்யய்யோ தப்பா நினைக்காதீங்க) பால் குடிக்க முடியுமான்னு சொல்ல வந்தேன்.

ஏற்கனவே திரிஷா வீட்டுல ஒரு நாய்ப் பண்ணையே இருக்குதாம்.


சிம்புவும், நயனும் மீண்டும் ஜோடி சேருகிறார்களாமே. அப்போ பழைய காதல் பத்திக்குமா?

சிம்பு ரசிகன் குணா
கொழும்பு

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? பத்திக்கிறது மட்டுமில்ல கொழுந்துவிட்டும் எரியும். அப்போ ஹன்சிகா, ஆண்டிரியா மற்றும் அது இதுகள் கதி என்னாவது?

சேர்த்து வைச்சத காப்பாத்திக்கங்க நயன்


தமிழகத்தின் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என்று கூறுகிறார்களே? உண்மையா?

கே. வேதிகா
சுன்னாகம்


அதுதான் ஊருக்குத் தெரிந்த ரகசியமாச்சே. சிவாக்கி அடுத்து நயன், அமலா, ஸ்ருதி ஆகியோருடன் ஜோடி சேரப் போகிறார்.

சிவாக்கி தென்னகத்து ஷாரூக்கான் என்று சத்தியராஜே சொல்லிட்டாரே பிறகென்ன?

‘TOP STAR SIVAKI’
வண்ண வானவில் தரும் பட்டம் இது


நமீதா ஏன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்? காலம் முழுவதும் எங்கள் கனவுக் கன்னியாகவே இருப்பாரா?

எம். எஸ். எம். ஷாபீர்
பாலமுனை


அவரா கல்யாணம் வேண்டாம் என்கிறார்? அவர் தயார். ஆனால் அவரைக் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டுள்ள கோடிக்கணக்கானோர் தங்களில் ஒருவரை ஏகமனதாக மாப்பிள்ளை என தெரிவு செய்து முன்னிறுத்த வேண்டுமே! அவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு குடுமிச் சண்டை அல்லவா போடுகிறார்கள்!

பிப்பிப்பீ... டும்....டும்... அடுத்த வருடம் கேட்கும்


இன்றைய இளம் ஹீரோக்களில் பெண்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் என்று யாரை சொல்கிறீர்கள்?

ஆர். கிருஷ்ணவேணி
கண்டிநிச்சயமாக சூர்யாதான். இளைஞிகள் மனதை எப்படி எப்படி எல்லாம் கொள்ளையடித்திருக்கிறார் என்பதை 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' புட்டுக் காட்டிவிட்டதே!

நிஜத்தில் - சூர்யா
திரையில் - சூர்யா, விஜய்


ரஜனி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்களாமே. அவருக்கு எதற்கு இந்த 'கோச்சடையான்' அவதாரம்?

ஆர். ரூபி. தெமட்டகொடை


வாரிசு இல்லாவிட்டால் வயதானாலும் மன்னர் ஆட்சிக் கட்டிலில் இருந்துதானே ஆக வேண்டும்.

வாரிசு சண்டை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அந்த நாற்காலி கிடைக்காது.

போட்டியாளர்கள் இன்னும் பெஞ்சில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, January 8, 2014

இருள் ஒளி பரப்பும் வெளிச்சங்கள்!

பந்தங்களினால் பெயரைக் கெடுத்துக்கொள்ளும்   அரசியல்வாதிகள்


ஆனாரூனா

மக்களுக்கு பல நன்மைகளைச் செய்பவர்களாக அரசியல்வாதிகள் விளங்கினாலும், அதே மக்களிடம் அதிக திட்டுகளை வாங்கிக் கட்டிக் கொள்பவர்களாகவும் இதே அரசியல்வாதிகளே இருக்கிறார்கள்.

ஏன் அரசியல்வாதிகள் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள் என்றால், அவற்றில் சில நியாயமான காரணங்களாகவும் இருக்கலாம். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களிடம் வந்து கூழைக் கும்பிடு போடுகிறவர்கள் வெற்றி பெற்றதும் அல்லது பதவி கிடைத்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். தேர்தல் சமயத்தில் பெயர் சொல்லி அழைத்தவர், வெற்றி பெற்றதும் அவர்களைக் கண்டும் காணாத மாதிரி போய்விடுவார். ஒரு காரியம் ஆக வேண்டும் என்று உள்...ர் அரசியல்வாதியை அணுகினால், தன்னை எதிர்த்து நின்றவரின் பெயரைக் குறிப்பிட்டு, "நீயெல்லாம் அவனுக்கு வேலை செஞ்சவன் தானே, வேலை ஆகணும் என்றால் மட்டும் நானா? நீ அவனிடமே போய் காரியத்தை செய்து கொள்!" என்று அலட்சியமாகக் கூறி விட்டு விரட்டி விடுவதும் உண்டு.

இனி வாக்காளர்கள் என்ன சொல்வார்கள்?

"அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கிடந்த இவனை நம்பி நாம் ஓட்டுப் போட்டோம் பாரு.... நம் புத்தியை செருப்பால அடிக்கணும்... வரட்டும் அடுத்த தேர்தல்... அப்போ இவன கவனிச்சுக்கலாம்" என்று கறுவிக் கொண்டிருப்பார்கள்.

ஜனநாயகத் தேர்தலில் இவை எல்லாம் சகஜம்.

அரசியல்வாதிகள் செய்யும் தவறு என்னவென்றால், பட்டம், பதவி, இருக்கை எல்லாம் வந்து சேர்ந்ததுமே அவர்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்தப்பட்டு விடுவதற்கு அவர்கள், அவர்களை அறியாமலேயே அனுமதித்து விடுவதுதான்.

உண்மையில் இந்த ஒளி வட்டத்தை ஏற்படுத்துவது அந்த அரசியல்வாதி அல்ல. சுற்றி இருப்பவர்கள்தான். வழமை போலவே தன் இயல்பான குணங்களுடன் கூடிய ஒரு அரசியல் பிரமுகரை புலியாகவும், நரியாகவும் அரக்கனாகவும் ஏதோ ஒரு விசித்திர மனிதன் போலவும் சித்தரித்து அவரை மனுஷன் அண்டாத ஒன்றைப் போல சோடித்து விடுவதும் அவரைச் சுற்றி துதித்து நிற்கும் இந்த ஆட்கள் தான்.

முன்னர் சௌமிய மூர்த்தி தொண்டமானைச் சுற்றி இந்த 'ஒளி விளக்கு'கள் நின்று கொண்டிருந்தன. அவர், இவர்களின் இந்த அழிச்சாட்டியங்களை எல்லாம் எப்படித்தான் பொறுத்துக் கொண்டாரோ!

ஒருமுறை சௌமியமூர்த்தி தொண்டமான் சில தமிழ்ப் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார். அன்றைக்கு அமைச்சில் ஏதோ ஒரு விழா நடைபெற்றது. அது முடிய தன் அறைக்கு அழைத்தார். சென்றிருந்தோம். பேச்சு சுவராசியமாகச் சென்றது. அப்போது அவரது பிரத்தியேக செயலாளராக இருந்தவர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு. நேரம் கடந்து செல்வதை தன் மணிக்கூட்டை சுட்டிக் காட்டுவதன் மூலம் அமைச்சருக்கு உணர்த்த முயன்றும் அமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை. அமைச்சர் ஈடுபாட்டுடன் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் என்ன செய்தார் தெரியுமா?

பத்திரிகையாளர் ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையை பரபரவென வெளியே இழுத்து எழும்பச் சொன்னார். மற்றொரு இருக்கையையும் அப்படியே இழுத்து எழும்பச் செய்தார். ஆனாலும் அமைச்சர் தொண்டமான் அசரவில்லை. தொடர்ந்தும் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டேயிருந்தார். நாங்கள் நின்று கொண்டே அவர் பேசுவதைக் கேட்டு குறித்துக் கொண்டோம். அது முடிந்து லிப்டில் ஏறப்போன சமயம் கூட, ஐலண்ட் பேப்பர்காரருடன் ஒரு சந்திப்பு இருக்க வேண்டுமே என்று கேட்டுக் கொண்டே லிப்டினுள் சென்றது எங்களுக்குக் கேட்டது. இது அவர் மறைவதற்கு சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். 'பந்தங்களையும் மீறி ஊடகவியலாளர்களுடன் அப்படி ஒரு பிணைப்பு அவருக்கு இருந்தது.

அமைச்சர் தொண்டமானை பத்திரிகையாளர்கள் அணுகுவதற்கு திருநாவுக்கரசர் விடுவதில்லை. முடிந்தவரை மறிப்பார். இதனால் பத்திரிகையாளர்களுக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. அவர் மறைந்த செய்தியைக்கூட தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு கலம் செய்தியாக வெளியிட்டு மறந்து விட்டதையும் இங்கே, வெறுப்புக்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம்.

இப்படி ஒரு 'வெளிச்சம்' தொண்டமானைச் சுற்றிக் கொண்டிருந்த போதும் அமைச்சர் இதையும் மீறி ஊடகவியலாளர்களுடன் நல்ல நெருக்கத்தைப் பேணியே வந்தார். காலை எட்டு மணியளவில் அவர் வீட்டுக்கு அழைப்பு எடுத்தால் அவரே லைனில் வந்து பேசுவார். காக்கைக் கூட்டம் தவிர்க்க முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டு, அதையும் மீறி தன்னை மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் காம்பீரியம் அவரிடம் இருந்தது.

அவரைச் சுற்றி எப்போதும் பந்தங்கள் சுழன்று வந்தன. அவர் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தால் பந்தங்களும் பக்கத்திலேயே ஒரு துரும்பும் அவர் மேல் படாதிருக்குமாறு பாதுகாத்துக் கொண்டிருக்கும். நெரிசலில் ஒருவருடைய சட்டையோ சால்வையோ அவர் தோளில் அல்லது முகத்தில் உரசி விட்டால் கூட, பந்தங்களுக்குப் பொறுக்காது. சட்டென தன் கைக்குட்டையை எடுத்து (அது என்ன அசிங்கமோ) துண்டு பட்ட இடத்தை மெதுவாகத் துடைத்துவிடும்! இதைப் பக்குவமாக செய்வதிலும் அமைச்சரை 'பூப்போல' பாதுகாப்பதிலும் வல்லுநராகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் அந்தோனி முத்து! இது பற்றி இப்போது அவர் என்ன நினைக்கிறாரோ!

இரத்தினபுரி வேவல் வத்தையில் வீடுகள் திறப்பு வைபவம் ஒரு உஷ்ணமாக சூழலில் நடைபெற்றது. ஆறுமுகன் தொண்டமான் திறந்து வைப்பதற்கு முன்னரே, காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றிருந்த ஏ. எம். டீ ராஜன் சில வீடுகளைத் திறந்து வைத்ததோடு அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ்காரர்களை தாக்க முனைந்த சம்பவங்களும் அன்று நடந்தேறியது.

அன்று செய்தி சேகரிக்க நான் சென்றிருந்தேன். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பரிவாரங்களுடன் எதிரே வருவதைக் கவனிக்காமல் நான் குறுக்கே கடக்கப்போன சமயத்தில் ஒரு 'வெளிச்சம்' எந்த எச்சரிக்கையும் தராமல் என்னைப் பிடித்து ஓரமாகத் தள்ளி விட்டது. நல்ல வேளையாக கால்களில் பலம் இருந்ததால் தடுமாறி நின்றுவிட்டேன். இல்லையேல் குட்டிக் கரணம் போட்டு விழுந்திருப்பேன்!

சில வருடங்களுக்கு முன் கொட்டக்கலையில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு. ஆங்கிலப் பத்திரிகை தமிழ் ஊடகவியலாளர் ஒருவரும் அதில் கலந்து கொண்டிருந்தார். கூட்டம் முடிந்து உணவு நேரம். அதற்கு முன் போத்தல்கள் வைத்தார்கள். அப்போது ஒரு சிங்கள இளைஞனே மீடியாவுக்கு பொறுப்பு. நமது ஊடகவியலாளரும் கிளாசில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு 'பைட்'சுக்காக காத்திருக்கிறார். திடீரென அங்கு வந்த அந்த இளைஞர், "யாரும் அருந்த வேண்டாம், இங்கே வேண்டாம், வேறு இடம் போவோம்" என்று சொல்லியபடியே போத்தல்களை கையில் எடுத்திருக்கிறார்.

அப்போது நண்பர் கிளாசும் மதுவுமாக நிற்பதைக் கண்டு பதறிப் போனவர், "ஐயய்யோ இங்கே அருந்தக் கூடாது. அதை அந்த வோஷ் பேசினில் கொட்டுங்கள்" என சத்தம் போட்டிருக்கிறார். நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை| "நீர்தானே அருந்தச் சொன்னீர், இப்போது வேண்டாம் என்கிறீரே என்ன விஷயம்?" எனக் கேட்டிருக்கிறார். அந்த இளைஞரோ பதற்றம் தணியாமல் 'அதை வோஷ் பேசினில் கொட்டிவிடு' என சத்தம் போட அவரும் கிளாசை பேசினில் கவிழ்த்திருக்கிறார்.

விபரம் பின்னரே தெரிய வந்திருக்கிறது.

அந்த இடத்தில் சில மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அறைக்குள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இருந்திருக்கிறார். எதேச்கையாக அவர் வெளியே வந்தால், ஊடகவியலாளர்கள் என்ஜோய் பண்ணுவதைப் பார்த்து ஆத்திரம் அடைந்து தன்னைக் காய்ச்சி எடுத்து விடுவார் என அந்த 'பந்தம்' கணக்கு போட்டதன் விளைவாகவே, ஊடகவியலாளர்களுக்கு அந்த அவமானம் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் உண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அத்தகையவர் அல்ல. கறாரானவர் என்பது வேறு விஷயம். ஆத்திரப்படுவார் என்பதும் தெரிந்த சங்கதிதான். ஆனால் உபசரிப்பு என்று வந்துவிட்டால் தாராளமாக நடந்து கொள்வார். இந்த விஷயத்தில் அவரில் எவருமே குறை காண முடியாது. அன்றைக்கு அவர் வெளியே வந்து ஊடகவியலாளர்களை கிளாசும் கையுமாகப் பார்த்திருந்தாலும் புன்னகையோடு நாலு வார்த்தை விசாரித்து 'Enjoy flok' என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். அந்த இளைஞனை அழைத்து, இவர்களை கவனித்து அனுப்பு என்றும் சொல்லியும் இருப்பார். அமைச்சர் பற்றி நாங்கள் அறிவோம்.

அந்த இளைஞரின் பதற்றம் இறுதியில் என்ன கருத்தை குறிப்பாக சிங்கள ஊடகவியலாளர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தெரியுமா?

'ஒரு டிரிங் எடுப்பதை கூட விரும்பாத மனுஷனண்டாத மனிதர் இவர். இந்தத் தமிழ் அரசியல்வாதிகளே...!' என்பதைப் போன்ற கருத்தை தானே உருவாக்கி இருக்கும்!

இந்த ஞான சூனியங்கள் இப்படித்தான் அவலை நினைத்து உரலை இடித்து அரசியல்வாதிகளின் பெயரைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இது சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம்.

ஒரு தமிழ் அமைச்சரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் நல்ல மூடில் இருந்தார். கதைத்துக் கொண்டிருந்தவர் தன் உதவியாளரை அழைத்து 'ரெண்டு டீ கொண்டுவாப்பா' என்று சொன்னார். என்னுடைய சந்திப்பைத் தொடர்ந்து அவர் வெளியே செல்ல வேண்டும். அதற்கு முன் ஒரு டீ குடிக்க வேண்டும்.

கதை தொடர்ந்தது. டீயைக் காணோம். மீண்டும் டீயை நினைவுபடுத்தினார். பேச்சுத் தொடர்ந்தது. டீயைக் காணோம். எரிச்சல் அடைந்தவராக, "நான் மினிஸ்ட்ரிக்குப் போகணும், டீக்கு சொன்னேனே இன்னும் ஏன் வரலை?" என்றார்.

உதவியாளர் எனக்குப் பின்னால் நின்று கொண்டு, இங்கே இருக்குது சேர்" என்று குரல் கொடுத்தார்.

"அங்கேயா இங்கே கொண்டா" என்றதும் ஒரு டீ அமைச்சர் முன்பாக வைக்கப்பட்டது. மேசைக்கு ஒரு டீ மட்டும் வந்ததைப் பார்த்த அமைச்சர்,

"உன்னிடத்தில் நான் என்ன சொன்னேன்? ரெண்டு டீ கொண்டு வரச் சொன்னேன். எங்கே மற்ற டீ?"  என்று உதவியாளரிடம் எரிச்சலைக் காட்ட, அவர் உடனே, "மற்ற டீ இங்கே இருக்கிறது" என்று எனக்குப் பின்னால் இருந்த டீ போவைக் காட்டினார்.

"அங்க ஏன் வைச்சிருக்க... அத இங்க கொண்டுவா... அந்த டீயைக் குடிக்க இவர் எழுந்து அங்கே போகணுமா?" என்று அமைச்சர் சொன்னதும் தான் டீ என்முன் வந்தது. ஒரு பிரமுகர், அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, தன்னைப் பார்க்க வந்தவருக்கு பரிமாறப்பட்ட பின்னரேயே 'சாப்பிடுங்க' என்று சொல்லி உண்ண ஆரம்பிப்பது, உணவு மேசைப் பண்பு, எனக்கு டீ வந்ததும் தான் 'டீ குடிங்க' என்று சொல்லியபடியே அமைச்சர் டீயை அருந்தத் தொடங்கினார்.

அந்த நபர் டீயை என்னிடம் ஏன் தரவில்லை? இவனெல்லாம் அமைச்சர் முன்னிலையில் டீ குடிப்பதா என்று நினைத்தாரா? அமைச்சர் எழுந்து போனபின் டீயைத் தரலாம் என யோசித்தாரா? பத்திரிகைக்காரனுக்கு டீ தந்தால் என் கௌரவம் என்னாவது என்று கருதினாரா? இப்படிச் செய்வதன்மூலம் அமைச்சரிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்தாரா?

தெரியவில்லை. அரசியல் பிரமுகர்கள் தன்னைச் சுற்றிச் சுழலும் இந்தப் பந்த வெளிச்சங்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் இருண்ட வெளிச்சத்தையே இவர்கள் ஒளிரச் செய்கிறார்கள்!

நன்றி- வண்ண வானவில் (01-01-2013)

Saturday, January 4, 2014

வீதியோர எல்லைச் சாமிகள்.-01

இலங்கையில் காணப்படும் காவல் தெய்வ வழிபாடு


மணி  ஸ்ரீகாந்தன்

காவல் தெய்வ வழிபாடுகள் தமிழர்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வகை வழிபாட்டு முறை. வீரர்கள் இறந்த பிறகும் அவர்களை வாழ்த்தி, வணங்குவதற்காக அந்த சின்னங்களையும் வீரர்களின் உருவங்களையும் கல்லில் செதுக்கி வழிபடும் பழக்கம் பண்டைய தமிழர் மத்தியில் நிலவி வந்திருக்கிறது. தொல்காப்பியம், புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களிலும் பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள், வெண்பாமாலை உள்ளிட்ட நூல்களிலும் இந்த வீர வழிபாடு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வீரன் களத்தில் எதிரிகளோடு சண்டையிட்டு உயிர் நீத்த இடத்தில் ஒரு கல்லை நட்டு அவன் நினைவாக வழிபாடு செய்வது அன்றைய வழக்கம். அந்தக் கல்லை வீரக்கல் என்று அழைக்கப்பட்டது. இந்த வீரன் தமது ஊரையும், தமது குலத்தையும் காப்பான் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் அந்த வீரர்களை தெய்வங்களாக போற்றினார்கள். இப்படி வழிபாடு செய்யப்பட்ட பல இடங்களே பிற்காலத்தில் வீரன் முதலிய கிராம தெய்வங்களின் கோயில்களாக மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
வீரனை வழிபடுவதற்காக அவனுடைய உருவம் முதலியவற்றைப் பொறிப்பதற்கு ஏற்ற கல்லை பொருத்தமான இடத்திலிருந்தே தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அந்தக் கல்லை தூய்மை செய்வதற்காக புனிதமான நீர் நிலையில் அமிழ்த்தி வைப்பார்கள். பிறகு உரிய இடத்தில் நாட்டி பெயர் முதலியவற்றை பொறிப்பார்கள்.

இதே காவல் தெய்வ பட்டியலில் பத்தினி தெய்வ வழிபாடும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்தினிக்கு ஒரு நல்ல இடத்திலிருந்து கல்லெடுத்து வந்து சிலை வைக்க முடிவு செய்த சேரன் செங்குட்டுவன், இமயத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து அதை கனக விஜயனின் தலையில் வைத்து தமிழகத்திற்கு கொண்டு வந்து வஞ்சிமா நகரில் கண்ணகிக்கு சிலை வைத்தான் என்பதை சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சிக்காண்டம் சொல்கிறது. தமிழர்களின் குல தெய்வமாக இந்த காவல் தெய்வங்களே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகின்றன.

சாமிக்கு படையல் போட்டு, ஆடு வெட்டி விழா எடுப்பதை பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழர்கள் வாழும் இடங்களில் இந்த காவல் தெய்வங்கள் கட்டாயம் இருக்கும். எனினும் இன்று தமிழக கிராமங்களிலும் இலங்கை பெருந்தோட்டங்களிலும் இன்றைக்கும் காவல் தெய்வ வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அய்யனார், சுடலைமாடன், அக்னி வீரன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், இருளப்ப சாமி, சடையாண்டி, முனீஸ்வரன், மாடசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல் தெய்வங்கள், கிராம தெய்வங்கள் அல்லது எல்லைச் சாமிகள் இன்றும் வீதியோரங்களில் கத்தியோடு ஆக்கரோசமாக நிற்பதைக் காணலாம். குறிப்பாக இவற்றை தமிழ்நாட்டில் அதிகம் காணலாம். நம் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காவல் தெய்வங்கள் ஊரைக் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஊர் காக்கும் சில தெய்வங்களைத் தேடி புறப்பட்டோம்.

தெபுவன புட்டுப்பாவல எஸ்டேட்டில் காவல் தெய்வமாக விளங்கும் மாடசாமியின் மகிமை பற்றிக் கேட்டோம்.

"இது எங்க குல தெய்வசாமிங்க. எங்க பாட்டி மாசாணம் திருநெல்வேலியிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்தபோது பிடிமண் கொண்டு வந்து இங்கே வைத்தாங்க. அவர்களுக்கு பிறகு எங்க அப்பா பஞ்சநாதன் இந்த மாடசாமிக்கு சேவை செய்தார். அதன் பிறகு நான் பொறுப்பேற்று நடத்தி வர்றேன்" என்று மாடசாமியின் வரலாற்றை சுருக்கமாக சொன்னார் பிரதீப்குமார். புட்டுப்பாவல மாடசாமியின் மகிமை பற்றி சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.
"பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இந்த தோட்டத்தில் வேலை பார்த்த காவலாளி, மாடனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைப் பிடித்து கொன்று தின்றுவிட்டான். அதனால் ஆத்திரம் அடைந்த மாடன் மறுநாள் இரவில் ஒற்றையடிப் பாதையில் காவலாளி வரும்வரை காத்திருந்து அவனை ஓங்கி ஒரு அடி அடித்ததாம்.
அலறிக் கொண்டு கீழே விழுந்தவன் எழும்பிப் பார்த்த போது பாதையின் இரண்டு பக்கமும் இருந்த கல்லில் தனது இரண்டு கால்களையும் பரப்பி வைத்து வானத்துக்கும் பூமிக்குமாக வெள்ளையாய் ஒன்று நின்றதாம்" என்று சிலிர்த்து கொள்கிறார் பிரதீப். தனது பாட்டி மாசாணம் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தையும் இப்படிச் சொல்கிறார்:
"என் பாட்டி மாசாணமும் சில பெண்களும் ஒரு தைப்பொங்கல் நாளில் மாடனுக்கு பொங்கல் வைத்தார்களாம். அப்போது குதிரையில் வந்த ஒரு வெள்ளைக்கார துரை 'கன்ட்றி புரூட்' என்று கூறியவாறே பொங்கல் பானையை எட்டி உதைக்க, அது சிதறிப் போனது. அதைப் பார்த்து பதறிய என் பாட்டி, "மாடா நீ இருந்தா பார்த்துக்க" என்று மாடனுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறாள். வெள்ளைக்காரன் கேலியாக சிரித்து விட்டு குதிரையை தட்டிவிட, குதிரை ஓடத் தொடங்கியதாம். சில நிமிடங்களில் குதிரையின் ஓட்டம் அதிகரித்தது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதாம். துரையால் குதிரையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி கீழே விழுந்திருக்கிறான். பிறகு அவனை பங்களாவில் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். அதன் பிறகு அவன் சித்த பிரமை பிடித்தவன் போல பங்களா வாளகத்தில் படுத்து புரண்டிருக்கிறான். இது மாடனின் வேலைதான் என்று புரிந்துகொண்ட பங்களா அப்பு, துரைக்கு மாடனின் கோபத்தை எடுத்துச் சொல்லி அவனை மாடன் சிலைமுன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப் கேட்க வைத்தாராம்" என்று மாடனின் பெருமைகளை சொல்லி வியந்தார் பிரதீப்குமார்.

தொடரும்...