Tuesday, December 31, 2013

கொழும்பின் சைவ உணவக வரலாறு -1

"கொம்பனி வீதி லட்சுமி விலாசில் பத்து ரூபா சம்பளத்தில் மேசை துடைத்தேன்"


கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்
-மணி ஸ்ரீகாந்தன்

அன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி. கொழும்பு பேங்சால் வீதியில் அமைந்திருக்கும் 'கோல்டன் கபே' உணவகத்தில் சூடா ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று உள்ளே நுழைந்தோம்.வெள்ளை வேட்டி, சட்டை. நெற்றியில் சின்ன விபூதி பட்டை. அண்ணார்ந்து பார்க்க வைக்கும் உயரத்துடன் ஆவி பறக்கும் சாம்பார் வாளியுடன் வந்த ஒருவர் உணவுத் தட்டுக்கு முக மலர்ச்சியோடு சாம்பாரை லாவகமாக பரிமாறினார். அதோடு, உணவு பண்டங்களை எடுத்து அனாசயமாக கண் இமைக்கும் நேரத்திற்குள் பொட்டலமாக கட்டிக்கொடுக்கவும் செய்தார். யார் அந்த ஹோட்டல் சர்வர் என்று கேட்கிறீர்களா?....
 அவர் பெயர் ராமன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சர்வராக பணியாற்றிவர்தான். பழசை மறக்கக்கூடாது என்பதற்காக இன்றும் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் இழுத்தப்போட்டு செய்து கொண்டிருக்கும் கோல்டன் கபே உணவகத்தின் உரிமையாளர்தான் இவர். கொழும்பு சைவ உணவக வட்டாரத்தில் பெரிய புள்ளி. பம்பலப்பிட்டி சரஸ்வதி உணவகத்தின் உரிமையாளரும் இவரே. சுமார் அறுபது வருட அனுபவஸ்தர். மூத்த சைவ உணவக உரிமையாளர்களில் ஒருவர். இத்தனை பெருமைகள் நிறைந்த இவர்தான் எளிமையுடன் எல்லா வேலைகளையும் தலையில் போட்டுக்கொண்டு செய்கிறார். பணம் மட்டும் முக்கியமல்ல, வருபவர்களுக்கு திருப்தியான உணவும் வழங்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்.

"இங்கே வருபவர்களுக்கு முதலில் நல்ல மரியாதையும் நாவுக்கு ருசியான உணவும் வழங்கப்படுகிறது. பணம் அதற்குப் பிறகுதான். எனது வெற்றிக்கு காரணம் பணிவும், பண்பும்தான்" என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார் ராமன்.

திருநெல்வேலி மூலைக்காரைப்பட்டியில் சங்கர நாராயண ரெட்டியார் - ஆளம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர். இவருக்கு மூன்று தங்கைகள். அப்பா சமையல்காரராக கொழும்பில் தொழில் பார்த்திருக்கிறார்.

மிகவும் வறுமையான குடும்பத்தில் அவர் பிறந்ததினால் நாலாவதோடு அவரின் பள்ளிப் படிப்பு முடிந்து விட வறுமையைப் போக்க மாட்டு சாணத்தை அள்ளி வந்து 'வரட்டி' தட்டி சுவரில் அடித்து காய வைத்து விற்பதுதான் ராமன் செய்த முதல் தொழிலாக இருந்திருக்கிறது. அப்பா மாதிரி தானும் கொழும்புக்குப் போய் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் 48 ஆம் ஆண்டு கொழும்புக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்.
மகன் மணிகண்டனுடன்
"கட்டின துணியோடு வந்தார்கள் என்று சொல்வார்களே, அது மாதிரித்தான் நானும் ஒரு துண்டு வேட்டியும் முண்டா பெனியனுமாக என் உறவினர் ஒருவருடன் வந்தேன். கொழும்புக்கு வந்து அப்பாவைப் பார்த்தேன். தான் வேலைபார்த்த கொம்பனிவீதி, 'லட்சுமி விலாஸ்' ஹோட்டலில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார் அப்பா. ஹோட்டலில் மேசை துடைக்கும் வேலை. லட்சுமி விலாஸ் ஹோட்டல் கொம்பனித்தெரு ஜாவா லேனில் இலக்கம் 23இல் இயங்கி வந்தது. அந்த ஹோட்டலில் மேசை துடைப்பது, பாத்திரம் கழுவுவது, சர்வர் வேலை என்று அனைத்து வேலைகளையும் செய்தேன். மாதம் எனக்கு பத்து ரூபா சம்பளம் தந்தார்கள். போதுமான சம்பளம் அந்த நேரத்தில். சில காலத்தின் பின் அப்பா திருநெல்வேலிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார். நான் இங்கேயே ஹோட்டல் சிப்பந்தியாக வேலை பார்த்து வந்தேன். பின்னர் ஹோட்டல் காசாளராகவும் பதவி உயர்வு கிடைத்தது.

நம்ம படிப்பு நாலாவது மட்டும் தான் என்பதால் கொம்பனி வீதி கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்து வந்த இரவு நேர ஆங்கில வகுப்பில் சேர்ந்தேன். என் இந்திய நண்பர்களுடன் வகுப்புக்குச் சென்று வந்தேன். மாலை 6 மணிக்கு தொடங்கும் வகுப்புகள் ஒன்பது மணி வரை நடைபெறும். அங்கேதான் கொஞ்சம் ஆங்கிலம் கற்றேன். மத்ததெல்லாம் பகுத்தறிவுதான்" என்று சொல்லும் ராமனிடம் அந்தக் கால சைவ ஹோட்டல் பற்றிக் கேட்டோம்.

"அப்போது கொழும்பில் இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அதனால் சைவ உணவகங்களும் அதிகமாக இருந்தன. கொம்பனிவீதியில் மட்டும் ஐந்து சைவக் கடைகள் இருந்தன. அசைவ ஹோட்டல்கள் மிகவும் குறைவு.

ஆனால் இப்போது போல பெரிய கூட்டம் சாப்பிட வராது. அந்தக்காலத்தில் வெளியிலிருந்து பெரிய அளவில் மக்கள் கொழும்புக்கு வருவதில்லை. போக்குவரத்து பிரச்சினை இருந்தது. கொழும்பில் உள்ளவர்கள் மட்டுமே இங்கே சாப்பிட வருவார்கள். அப்போது சாப்பாடு பார்சல் ஒன்று 45 பைசா, இடியப்பம் 2 சதம், டீ 3 பைசா, ஆட்டுக்கல் அம்மி உரல் என்று எல்லாமே மனித உழைப்புத்தான். இயந்திரங்கள் எதுவுமே கிடையாது. சமைப்பது புகை மண்டும் விறகு அடுப்பில்தான். அதனால் உணவு வகைகளின் சுவையும் ரொம்ப அதிகமாக இருந்தது.

அந்தக் காலத்தில் காய்கறி உற்பத்தி இங்கே பெரிய அளவில் இருந்த மாதிரி தெரியவில்லை. காய்கறிகள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வருவார்கள். தினமும் படகில் புதிதாக காய்கறிகள் வந்து இறங்கும். அந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து வரும் உளுந்தும் ரொம்ப பெரிதாக இருக்கும். அதை அரைத்து செய்யும் இட்லியும் ரொம்ப மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். ஆனால் இப்போ உளுந்தின் பருமனும் குறைந்து அந்தக்கால சுவையையும் போய் விட்டது.

அந்தக் காலத்தில் உணவுகள் மிகவும் சுவையாக இருந்தாலும் சைவ உணவகங்கள் இப்போது மாதிரி பளிச்செனவும் ஒரு ஒழுங்கமைப்பிலும் இருக்கவில்லை. தண்ணீர் பட்டு அழுக்குப் படிந்து கருப்பாகி போன மரப்பலகையில் செய்யப்பட்ட மேசைகள், அமர்வதற்கு நீண்ட வாங்குகள், தண்ணீர் குடிக்க பித்தளைக் குவளைகள் என்பதாகவே அந்தக்கால சைவக்கடைகள் காட்சியளித்தன. சிப்பந்திகளுக்கு சீருடைகள் கிடையாது. வேட்டி சட்டைதான். சிலர் பனியன் போட்டுக்கொண்டும் சப்ளை செய்வார்கள். ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் கூட சாரம், வேட்டி சட்டை, பனியன்தான். சிலர் மேல் சட்டை அணியாமல் வெற்றுடம்புடன் வேட்டி மட்டும் அணிந்து வருவார்கள். பெரும்பான்மை இனத்தவர்களில் பெரும்பாலான ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்தான் சாப்பிட வருவார்கள்" என்று பழையதை ஞாபகப்படுத்தி பேசினார் பெரியவர் ராமன்.

நன்றி- வண்ண வானவில் 01-01-2014
அவரிடம், அன்றைய பகல் 'மெனு' வை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.

"அப்போது இரண்டு குழம்பு ரசம், கீரை, சம்பல் என்று ஐந்து அயிட்டங்களோடு பகல் உணவு முடிந்து விடும். பாயாசம் எல்லாம் கிடையாது. இப்போதான் பாயாசம் சுவீட் எல்லாம். அப்போது பொம்பே ஸ்வீட் என்றால் என்னவென்றே தெரியாது. பூரி, சப்பாத்தி, பரோட்டா என்பன அப்போது கேள்விப்படாத சங்கதிகள். அவை எல்லாம் பிற்காலத்தில் வந்தவை.

உணவு சமைக்கும் அண்டா மற்றும் சமையல் பாத்திரங்கள் அனைத்துமே பித்தளையால் ஆனவை. பித்தளை பாத்திரத்தில் உணவு சமைத்தால் சாப்பிட முடியாது. அதனால் சமையல் பாத்திரங்களின் உள்ளே அலுமினியத்தைப் பூசுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பாத்திரங்களின் உள்ளே அலுமியத்தைப் பூசுவார்கள். அதைப் பூசுபவனுக்கு இரண்டு ரூபா கூலியாகக் கொடுப்போம்" என்று கூறி முடித்தார் ராமன்.


மேலும் வாசிக்க…

கொழும்பின் சைவ உணவக வரலாறு – 2

No comments:

Post a Comment