Tuesday, December 31, 2013

கொழும்பின் சைவ உணவக வரலாறு -1

"கொம்பனி வீதி லட்சுமி விலாசில் பத்து ரூபா சம்பளத்தில் மேசை துடைத்தேன்"


கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்
-மணி ஸ்ரீகாந்தன்

அன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி. கொழும்பு பேங்சால் வீதியில் அமைந்திருக்கும் 'கோல்டன் கபே' உணவகத்தில் சூடா ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று உள்ளே நுழைந்தோம்.வெள்ளை வேட்டி, சட்டை. நெற்றியில் சின்ன விபூதி பட்டை. அண்ணார்ந்து பார்க்க வைக்கும் உயரத்துடன் ஆவி பறக்கும் சாம்பார் வாளியுடன் வந்த ஒருவர் உணவுத் தட்டுக்கு முக மலர்ச்சியோடு சாம்பாரை லாவகமாக பரிமாறினார். அதோடு, உணவு பண்டங்களை எடுத்து அனாசயமாக கண் இமைக்கும் நேரத்திற்குள் பொட்டலமாக கட்டிக்கொடுக்கவும் செய்தார். யார் அந்த ஹோட்டல் சர்வர் என்று கேட்கிறீர்களா?....
 அவர் பெயர் ராமன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சர்வராக பணியாற்றிவர்தான். பழசை மறக்கக்கூடாது என்பதற்காக இன்றும் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் இழுத்தப்போட்டு செய்து கொண்டிருக்கும் கோல்டன் கபே உணவகத்தின் உரிமையாளர்தான் இவர். கொழும்பு சைவ உணவக வட்டாரத்தில் பெரிய புள்ளி. பம்பலப்பிட்டி சரஸ்வதி உணவகத்தின் உரிமையாளரும் இவரே. சுமார் அறுபது வருட அனுபவஸ்தர். மூத்த சைவ உணவக உரிமையாளர்களில் ஒருவர். இத்தனை பெருமைகள் நிறைந்த இவர்தான் எளிமையுடன் எல்லா வேலைகளையும் தலையில் போட்டுக்கொண்டு செய்கிறார். பணம் மட்டும் முக்கியமல்ல, வருபவர்களுக்கு திருப்தியான உணவும் வழங்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்.

"இங்கே வருபவர்களுக்கு முதலில் நல்ல மரியாதையும் நாவுக்கு ருசியான உணவும் வழங்கப்படுகிறது. பணம் அதற்குப் பிறகுதான். எனது வெற்றிக்கு காரணம் பணிவும், பண்பும்தான்" என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார் ராமன்.

திருநெல்வேலி மூலைக்காரைப்பட்டியில் சங்கர நாராயண ரெட்டியார் - ஆளம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர். இவருக்கு மூன்று தங்கைகள். அப்பா சமையல்காரராக கொழும்பில் தொழில் பார்த்திருக்கிறார்.

மிகவும் வறுமையான குடும்பத்தில் அவர் பிறந்ததினால் நாலாவதோடு அவரின் பள்ளிப் படிப்பு முடிந்து விட வறுமையைப் போக்க மாட்டு சாணத்தை அள்ளி வந்து 'வரட்டி' தட்டி சுவரில் அடித்து காய வைத்து விற்பதுதான் ராமன் செய்த முதல் தொழிலாக இருந்திருக்கிறது. அப்பா மாதிரி தானும் கொழும்புக்குப் போய் உழைக்க வேண்டும் என்ற ஆசையில் 48 ஆம் ஆண்டு கொழும்புக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்.
மகன் மணிகண்டனுடன்
"கட்டின துணியோடு வந்தார்கள் என்று சொல்வார்களே, அது மாதிரித்தான் நானும் ஒரு துண்டு வேட்டியும் முண்டா பெனியனுமாக என் உறவினர் ஒருவருடன் வந்தேன். கொழும்புக்கு வந்து அப்பாவைப் பார்த்தேன். தான் வேலைபார்த்த கொம்பனிவீதி, 'லட்சுமி விலாஸ்' ஹோட்டலில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார் அப்பா. ஹோட்டலில் மேசை துடைக்கும் வேலை. லட்சுமி விலாஸ் ஹோட்டல் கொம்பனித்தெரு ஜாவா லேனில் இலக்கம் 23இல் இயங்கி வந்தது. அந்த ஹோட்டலில் மேசை துடைப்பது, பாத்திரம் கழுவுவது, சர்வர் வேலை என்று அனைத்து வேலைகளையும் செய்தேன். மாதம் எனக்கு பத்து ரூபா சம்பளம் தந்தார்கள். போதுமான சம்பளம் அந்த நேரத்தில். சில காலத்தின் பின் அப்பா திருநெல்வேலிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார். நான் இங்கேயே ஹோட்டல் சிப்பந்தியாக வேலை பார்த்து வந்தேன். பின்னர் ஹோட்டல் காசாளராகவும் பதவி உயர்வு கிடைத்தது.

நம்ம படிப்பு நாலாவது மட்டும் தான் என்பதால் கொம்பனி வீதி கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்து வந்த இரவு நேர ஆங்கில வகுப்பில் சேர்ந்தேன். என் இந்திய நண்பர்களுடன் வகுப்புக்குச் சென்று வந்தேன். மாலை 6 மணிக்கு தொடங்கும் வகுப்புகள் ஒன்பது மணி வரை நடைபெறும். அங்கேதான் கொஞ்சம் ஆங்கிலம் கற்றேன். மத்ததெல்லாம் பகுத்தறிவுதான்" என்று சொல்லும் ராமனிடம் அந்தக் கால சைவ ஹோட்டல் பற்றிக் கேட்டோம்.

"அப்போது கொழும்பில் இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அதனால் சைவ உணவகங்களும் அதிகமாக இருந்தன. கொம்பனிவீதியில் மட்டும் ஐந்து சைவக் கடைகள் இருந்தன. அசைவ ஹோட்டல்கள் மிகவும் குறைவு.

ஆனால் இப்போது போல பெரிய கூட்டம் சாப்பிட வராது. அந்தக்காலத்தில் வெளியிலிருந்து பெரிய அளவில் மக்கள் கொழும்புக்கு வருவதில்லை. போக்குவரத்து பிரச்சினை இருந்தது. கொழும்பில் உள்ளவர்கள் மட்டுமே இங்கே சாப்பிட வருவார்கள். அப்போது சாப்பாடு பார்சல் ஒன்று 45 பைசா, இடியப்பம் 2 சதம், டீ 3 பைசா, ஆட்டுக்கல் அம்மி உரல் என்று எல்லாமே மனித உழைப்புத்தான். இயந்திரங்கள் எதுவுமே கிடையாது. சமைப்பது புகை மண்டும் விறகு அடுப்பில்தான். அதனால் உணவு வகைகளின் சுவையும் ரொம்ப அதிகமாக இருந்தது.

அந்தக் காலத்தில் காய்கறி உற்பத்தி இங்கே பெரிய அளவில் இருந்த மாதிரி தெரியவில்லை. காய்கறிகள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வருவார்கள். தினமும் படகில் புதிதாக காய்கறிகள் வந்து இறங்கும். அந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து வரும் உளுந்தும் ரொம்ப பெரிதாக இருக்கும். அதை அரைத்து செய்யும் இட்லியும் ரொம்ப மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். ஆனால் இப்போ உளுந்தின் பருமனும் குறைந்து அந்தக்கால சுவையையும் போய் விட்டது.

அந்தக் காலத்தில் உணவுகள் மிகவும் சுவையாக இருந்தாலும் சைவ உணவகங்கள் இப்போது மாதிரி பளிச்செனவும் ஒரு ஒழுங்கமைப்பிலும் இருக்கவில்லை. தண்ணீர் பட்டு அழுக்குப் படிந்து கருப்பாகி போன மரப்பலகையில் செய்யப்பட்ட மேசைகள், அமர்வதற்கு நீண்ட வாங்குகள், தண்ணீர் குடிக்க பித்தளைக் குவளைகள் என்பதாகவே அந்தக்கால சைவக்கடைகள் காட்சியளித்தன. சிப்பந்திகளுக்கு சீருடைகள் கிடையாது. வேட்டி சட்டைதான். சிலர் பனியன் போட்டுக்கொண்டும் சப்ளை செய்வார்கள். ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் கூட சாரம், வேட்டி சட்டை, பனியன்தான். சிலர் மேல் சட்டை அணியாமல் வெற்றுடம்புடன் வேட்டி மட்டும் அணிந்து வருவார்கள். பெரும்பான்மை இனத்தவர்களில் பெரும்பாலான ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்தான் சாப்பிட வருவார்கள்" என்று பழையதை ஞாபகப்படுத்தி பேசினார் பெரியவர் ராமன்.

நன்றி- வண்ண வானவில் 01-01-2014
அவரிடம், அன்றைய பகல் 'மெனு' வை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.

"அப்போது இரண்டு குழம்பு ரசம், கீரை, சம்பல் என்று ஐந்து அயிட்டங்களோடு பகல் உணவு முடிந்து விடும். பாயாசம் எல்லாம் கிடையாது. இப்போதான் பாயாசம் சுவீட் எல்லாம். அப்போது பொம்பே ஸ்வீட் என்றால் என்னவென்றே தெரியாது. பூரி, சப்பாத்தி, பரோட்டா என்பன அப்போது கேள்விப்படாத சங்கதிகள். அவை எல்லாம் பிற்காலத்தில் வந்தவை.

உணவு சமைக்கும் அண்டா மற்றும் சமையல் பாத்திரங்கள் அனைத்துமே பித்தளையால் ஆனவை. பித்தளை பாத்திரத்தில் உணவு சமைத்தால் சாப்பிட முடியாது. அதனால் சமையல் பாத்திரங்களின் உள்ளே அலுமினியத்தைப் பூசுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பாத்திரங்களின் உள்ளே அலுமியத்தைப் பூசுவார்கள். அதைப் பூசுபவனுக்கு இரண்டு ரூபா கூலியாகக் கொடுப்போம்" என்று கூறி முடித்தார் ராமன்.


மேலும் வாசிக்க…

கொழும்பின் சைவ உணவக வரலாறு – 2

Tuesday, December 17, 2013

தமிழகத்தில் ‘விஷ்ணுபுரம்’ விருது பெறும் தெளிவத்தையுடன் சில நிமிடங்கள்…..

'பாபர் லயம், அப்பா அங்கே போன பின்னர் வாத்தியார் லயமானது'


மணி  ஸ்ரீகாந்தன்

கலாபூசணம் தெளிவத்தை ஜோசப்
மந்த நிலையில் தவழ்ந்து கொண்டிருந்த மலையக சிருஷ்டி உலகில் ஒரு சுழல் காற்றாகப் பிரவேசித்து பிரளயத்தை உருவாக்கியவர்.79 வயதிலும் சுறுசுறுப்பாக சொந்த வாழ்க்கையிலும் சரி, சிருஷ்டி உலகிலும் சரி இயங்கிக் கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப் அறுபதுகளில் அகஸ்தியர், எஸ்.பொ,இளங்கீரன் சுபைர் ஆகியோர் புத்தெழுச்சியை ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திக் கொண்டிருந்த போது மலையகத்தில் அவ்வெழுச்சியைத் தன் சிறுகதைகள்,நாவல்கள் மூலம் ஏற்படுத்திய தெளிவத்தையார் இன்று ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் வாழ்நாள் சாதனையாளராகவும் மூத்த முதன்மைப் படைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஓடுகிற பஸ்சில இருந்து குதித்து இறங்காதீங்க! என்றுதான் எல்லோரும் எனக்கு அட்வைஸ் செய்றாங்க. எனக்கு எழுபத்தொண்பது வயது என்று சொன்னாலும் யாரும் நம்புறாங்க இல்லை...’ என்று இளமை ததும்ப பேசுகிறார் தெளிவத்தை ஜோசப். தமது அந்தக் கால நாட்களை அசைபோடுவதில் அதிக விருப்பம் காட்டியவர் இவர். தமது அனுபவங்களை அப்பாவின் காலத்திலிருந்து தொடங்குகிறார் தெளிவத்தை. 'எனது அப்பா பெயர் சந்தன சாமிப்பிள்ளை. திருச்சி சென்ஜோசப் கல்லூரியில் படித்து ஆசிரியராக இருந்திருக்கிறார். நூறு வருடங்களுக்கு முன்னாள் திருச்சி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் வெள்ளைக்காரர்கள் ஒரு போர்ட் வைத்திருந்தார்களாம். அதில் பதுளை ஊவா கட்டவளை தோட்டத்து பாடசாலைக்கு வாத்தியார் தேவை என்றும், மாதச் சம்பளம் 55 ரூபா என்றும் குறிப்பிட்டு தொடர்பு முகவரியும் எழுதப்பட்டிருந்ததாம். அதைப் பார்த்த எனது தந்தை, அந்த முகவரியை தேடிப்போய் விபரங்களை பெற்று இலங்கை வந்திருக்கிறார். அவரை அழைத்துச் சென்ற வெள்ளைக்கார துரை, ஒரு சிறிய பாடசாலையைக் காட்டி ‘இதுதான் நீ படித்துக்கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடம்’ என்று கூறியிருக்கிறார்.
 அப்பா தங்குவதற்கு இடம் கேட்க அந்த பாடசாலைக்கு கீழே உள்ள லயத்தைக் காட்டி, இப்போ இந்த லயத்தில் உள்ள கடைசி வீட்டில நீ தங்கிக்கொள்ளலாம் என்றும் கூடிய சீக்கிரமே உனக்கு தனியாக ஒரு வீடு கட்டி தருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு சம்மதித்த அப்பா, அந்த லயத்தில் தங்கியிருக்கிறார். பிறகு அப்பாவுக்குக் கல்யாணம் நடந்திருக்கிறது. நானும் அண்ணனும் பிறந்து இருவரும் திருமணம் முடித்து குழந்தை குட்டிகள் என்று ஆகிவிட்டது. ஆனாலும் வெள்ளைக்காரன் அப்பாவுக்கு தனியாக வீடு கட்டித் தரவேயில்லை. அப்பா அதே லயத்து வீட்டிலேயே இறந்தும் போனார்.

வெள்ளைக்காரன் வாக்கு தவற மாட்டான் என்று சொல்வார்கள். ஆனால் எனது அப்பாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விட்டான்’ என்று பெருமூச்சுவிடும் தெளிவத்தை, இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறார். அந்த லயத்தில் வசித்த பிச்சைமுத்து பாபர் ரொம்பவும் பெயர் போன மனுஷனாம். ‘எங்க லயத்தோட கடைசி காம்பராவில்தான் முடிவெட்டுவாரு.

இள வயதில்..
அவர் கிட்டதான் நானும் முடிவெட்டிக்குவேன். ஒருநாள் அவர் எனக்கு முடிவெட்டும் போது ஒரு விசயத்தைச் சொன்னார். ‘தம்பீ, உங்கப்பா இந்த லயத்திற்கு வருவதற்கு முன்பு இந்த லயத்தை பாபர் லயம்னுதான் சொல்லுவாங்க. உங்கப்பா எப்போது இங்கே வந்து குடியேறினாரோ அன்றிலிருந்து இந்த லயம் வாத்தியார் லயம்னு பெயர் மாற்றம் அடைந்தது என்றார் அவர். பாவம் பிச்சைமுத்து.

அவர் பெயர் பறிபோனதில் அவருக்கு கவலை இல்லாமல் இருக்குமா! இன்றைக்கும் அந்த லயம் வாத்தியார் லயம்னுதான் அழைக்கப்படுகிறது.

அந்த தோட்டத்திலேயே படித்தவர் அப்பாதான். அதனால் அவருக்கு கிடைக்கின்ற மரியாதையில் பாதி எங்களுக்கும் கிடைத்தது. அண்ணனையும் என்னையும் வாத்தியார் தம்பினுதான் கூப்பிடுவாங்க! அப்பாவை நான் ஆஞ்ஞா’ என்று தான் அழைப்பேன். தமிழ்நாட்டில் திருச்சிதான் அப்பாவின் ஊர். அங்கே அப்பாவின் சமூகத்தவர்கள் அப்பாவை ‘ஆஞ்ஞா’ என்றுதான் அழைப்பார்களாம். அதன்படியே நானும் அழைத்தேன். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் என்னை ‘ஆனா’ என்று கிண்டல் செய்வார்கள் அவர்களுக்கு ‘ஆஞ்ஞா’ என்று சொல்ல வராது. ஊவா கட்டவளை கலவன் பாடசாலையில் ஐந்தாவது வரை நான் படித்தேன்.

அந்தப் பாடசாலையில் பொன்னம்பலம், முருகேசு, சின்னையா ஆகியோர் ஆசிரியர்களாக படிப்பித்தார்கள். அவர்களுக்கு நானும் எனது நண்பர்கள் சிலருமாக பட்டப் பெயர்களை சொல்லி எங்களுக்குள் அழைப்போம். பொன்னம்பலம் மாஸ்டர் நல்லவடிவான ஆளு. அதனால் அவரை ஜெமினிகணேசன் என்று அழைப்போம். சின்னையா மாஸ்டருக்கு பெயர் ஏதும் வைக்கவில்லை. ஆனால் அவரை இவருக்கு ஜெமினின்னு நெனப்பு என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம். எனது அப்பா கருப்பு கோட்டும். வெள்ளை வேட்டியும் தான் அணிவார். ஓய்வு நேரங்களில் தோட்ட வேலை செய்வார். எங்கள் காய்கறி தோட்டத்தில் நானும் அண்ணனும் அவருக்கு ஒத்தாசையாக வேலை செய்வோம்.
திருமணமான புதிதில்..
அப்பா அன்பானவர் என்றாலும் ரொம்பவும் கண்டிப்பானவர். நானும் அண்ணனும் ஏதாவது குறும்பு செய்துவிட்டால் எங்கள் இருவரையும் வீட்டிற்கு வெளியே முழங்காலில் அமர வைத்து இருவர் கைகளிலும் இரண்டு குழவிக் கல்லை தூக்கி தந்துவிடுவார். அவர் பாடசாலை சென்று வரும் வரைக்கும் நாங்கள் முழங்கலில் அமர்ந்து குழவிக் கல்லை கையால் தூக்கி பிடித்த படியே அமர்ந்திருக்க வேண்டும்.

அந்த லயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் நாங்கள் அப்படி இருப்பதை வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் எம் மீது பரிதாபப்பட்டு குழவிக் கல்லை வாங்கி வைத்து விடுவார்கள். அப்பா வரும் போது கல்லை தூக்கித் தருவார்கள். அந்தக்காட்சி நேற்று நடந்த மாதிரியே இருக்கு’ என்று பழையதை நினைத்து உள்ளம் பூரிக்கிறார்.

அவரிடம் சின்ன வயதில் நீங்கள் விளையாட்டில் எப்படி? என்று கேட்டதும்.

தெளிவத்தையாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். எனது அம்மாவின் ஊரான கும்பகோணம் வடகரையில் நான் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் வீட்டுக்கு முன்னால் பெரிய குளம். அதில் எருமைகளை குளிப்பாட்டுவார்கள்

நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குதான் குளிக்கப் போவேன். அந்த குளத்தின் மேட்டுப் பகுதியில் இருந்து கரணம் போட்டு குதிப்பேன். அப்புறம் எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் எருமை மாட்டின் மீதேறி சவாரி போவது. அது ரொம்பவும் ஜாலியா இருக்கும்.

கும்பகோணம் வடகரை பற்றி சொல்லும் போது இன்னொரு விசயமும் ஞாபகத்திற்கு வருகிறது. எனது வீட்டுக்கு முன்னால் உள்ள குளத்தின் மறுபக்கத்தில் பிராமணர்கள் வசிக்கும் அக்ரஹாரம் இருந்தது. அந்தப் பகுதிக்கு குறிப்பாக தலித்துகள் போகக் கூடாதாம்.

இந்த விடயம் தெரியாத நானும் எனது நண்பனும் அக்ரஹாரத்துக்குள் நுழைந்துவிட்டோம். எங்களுக்கு எதிரில் வந்த ஒரு பிராமணர் எங்களைப் பார்த்ததும் அவருக்கு அசூசையாகிவிட்டது. ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

‘ஒத்துடா, ஒத்துடா’ என்று கத்தினார். நாங்கள் அசையவில்லை. ‘ஒத்தேன்டா மூதேவி’ என்றவர் ஏதோ பேய்பிசாசைக் கண்ட மாதிரி பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை சாத்திக்கொண்டார். என்ன ஏது என்று விளங்காமல் நாங்களும் திரும்பிவிட்டோம்.

வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னதும் வீட்டில் அங்கெல்லாம் போகக்கூடாது என்று சொன்னார்கள். சூத்திரர்களைப் பார்த்தால் தீட்டு என்றும் பரிகாரம் செய்து குளிக்க வேண்டியிருக்கும் என்றும் என்னிடம் சொன்னார்கள். இந்தச் சமூகக் கொடுமையை பின்னாளில்தான் நான் புரிந்துகொண்டேன்.

மகளின் பிறந்த தின விழாவில்..
ஊவா கட்ட வலையில் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு விபரீத விளையாட்டு விளையாடுவோம். பஸ் டயரின் வட்டமான வளைவின் உள்ளே ஒருவனை அமர வைத்து மேட்டு பகுதியிலிருந்து பள்ளத்திற்கு உருட்டி விடுவதுதான் அந்த விளையாட்டு. இப்படி ஆள் மாற்றி ஆள் டயருக்குள் அமர்ந்து உருண்டு செல்வோம்.

டயர் பயங்கரமான வேகத்தில் பாறை, மரங்களில் முட்டுபட்டு ஓடி ஓரிடத்தில் விழும் அப்படி விழும்போது நாமும் விழவேண்டும். அப்படி விழுந்தால் தலை சுற்று வந்து விடும். சிறிது நேரத்திற்கு எழும்பவே முடியாது. இந்த விளையாட்டில் சில சமயங்களில் காயம் ஏற்படுவதும் உண்டு. சொல்லுங்கள் இப்படியான வீர விளையாட்டை நீங்கள் விளையாடி இருக்கியர்களா?’ என்று எம்மை பார்த்து கேட்கிறார் ஜோசப்.   இல்லையே!

‘அந்தக் காலத்தில் சினிமா பார்க்கப் போவதென்பது ரொம்பவும் பெரிய விசயம். அதுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி காலையிலேயே குளித்து புதிய ஆடை உடுத்தி தியேட்டருக்கு போக தயாராகி விடுவோம். அப்பா வாடகை கார் மூலமாக தான் எங்களை அழைத்து செல்வார். அது ஒரு இனிமையான அனுபவம். சில நாட்களில் கார்க்காரன் வருவதாக சொல்லிவிட்டு கார் பழுதாகிவிட்டதாக சொல்லி வராமல் விட்டுவிடுவான். அப்படியான சந்தர்ப்பங்களில் அழுகை அழுகையாக வரும். எதையோ இழந்துவிட்ட மாதிரி தோன்றும்.

பதுளை கிங்ஸ் தியேட்டர், அப்புறம் அனோஜா டோக்கீஸ் போன்ற தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன். பிச்சைக்காரி, சிங்காரி உள்ளிட்ட படங்கள் பார்த்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது. எனக்கு பிடித்த நடிகர் டி. ஆர். மகாலிங்கம், நடிகை ஈ. வி. சரோஜா’ என்று தமது இனிமையான அந்தநாள் ஞாபகங்களில் பயணம் செய்துகொண்டிருந்த ஜோசப்பிடம், காதல் அனுபவம் எப்படி என்றோம்.

‘ஐயய்யோ! நம்மகிட்டே அதையெல்லாம் கிடையாதுங்க... என்று ஆரம்பிக்கவே எல்லோரும் சொல்லுற பதில் தான் சொல்லுங்கள் என்றோம்.

எனது அண்ணனுக்கு கொழும்பிலதான் பொண்ணு பார்த்தாங்க. அப்போதுதான் முதல் முதலாக தோட்டத்திலிருந்து நான் கொழும்பிற்கு வந்தேன். வத்தளையில் தான் பெண் வீடு. அப்போது எனக்கு ஒரு இருபது வயதிருக்கும். அந்த வீட்டில் இருந்தவர் தான் மணப்பெண்ணின் தங்கை பிலோமினா. அவளுக்கு ஒரு பத்து வயதிருக்கும். துருதுருவென்றிருப்பாள். நான் அவளுடன் தான் விளையாடுவேன். அதன் பிறகு அடிக்கடி கொழும்புக்கு வருவது பிலோமினாவுடன் விளையாடுவது என்று காலம் நகர்ந்தது. அது ஒரு வகையான காதல் என்று எனக்கு பிறகுதான் தெரிந்தது. எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் காதலுக்கு தெரியாதே! சுமார் பதினைந்து வருடங்கள் தொடர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்தது.

1968ல் கிராண்ட்பாஸ் சென்ஜோசப் தேவாலயத்தில் பாதர் பின்டோவிண் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு டொக்டர் பெர்னாண்டோ, தெளிவத்தை அலுவலகத்தில் வேலைபார்த்த கிளார்க் குரே, டெய்லிமிரர் கிருஸ்ணசாமி, பத்திரிகையாளர் கார்மேகம் ஆகியோர் வந்து வாழ்த்தினார்கள். மருதானை டொனால்ட் ஸ்டூடியோவில் தான் கல்யாணப் படம் பிடித்தோம்.

தெளிவத்தை அண்ணன் வீட்டில்தான் முதல் குடித்தனம். ஹனிமூன் என்று எங்கு வெளியே சென்றதாக ஞாபகம் இல்லை.

திருமணமான புதிதில நுகேகொடையில் உள்ள என் மைத்துனர் வீட்டில் தங்கினோம். அதுவும் ஹனிமூன் மாதிரிதான். பிறகு சிறிது காலத்திற்கு பிறகு வத்தளையில் வீடு எடுத்து இங்கேயே தங்கிவிட்டேன்’ என்ற ஜோசப்பிடம் ‘நீங்கள் பிறந்ததும் வளர்ந்ததும் ஊவா கட்டவளை என்றால் எப்படி தெளிவத்தை உங்கள் பெயருக்கு முன்னால் வந்தது?’ என்ற எங்கள் சந்தேகத்தைக் கேட்டோம்.

‘எனது அண்ணன் ஞானபிரகாசத்திற்கு தெளிவத்தையில் உள்ள தோட்ட அலுவலகத்தில் வேலை கிடைத்ததும். அவருக்கு சாப்பாடு சமைத்துக் கொடுப்பதற்காகத்தான் நான் தெளிவத்தைக்குச் சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் எனது படைப்புகளை பத்திரிகைக்கு அனுப்பினேன்.

நான் கதை சொல்லியாக மாறுவதற்கு பிரதான காரணமாக தெளிவத்தையே இருந்திருக்கிறது. நான் சினிமா படம் பார்த்து வந்த பிறகு என்னிடம் கதை கேட்க  தோட்டத்து சனங்கள் கூடிவிடுவார்கள். குறிப்பாக எனது நண்பர்கள் அவர்களுக்கு நான் வீட்டிலிருந்து வாடகை கார் பிடித்து பதுளை போய் இறங்கி ‘அனோஜா டோக்கீஸ்சில்’ டிக்கட் எடுத்து படம் பார்க்க தொடங்கியதிலிருந்து இடையில் கரண்ட் கட் ஆகியது வரையும் ஒன்றுவிடாமல் சொல்வேன். அந்த நேரத்தில் நான் சொல்லும் சினிமா கதை இப்போ உள்ள மெகாசீரியல் மாதிரி இருக்கும். ஒரு படக் கதையை முதல்நாள் இடைவேளைவரை சொல்லிவிட்டு மறுநாள் மிகுதியை சொல்லி முடிப்பேன்.

எங்க தோட்டத்தில அப்போது ஒவ்வொரு விசயத்தையும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பாங்க. பேசுவாங்க. நாங்க கார் பிடித்து படம் பார்க்கப் போன கதையை அந்த ஊரே புதுமையா பேசும்... எங்க தோட்டத்தில முதல் முறையாக ‘சிமிழ் விளக்கை எங்கப்பா வீட்டிற்கு கொண்டு வந்ததும் அந்த லயத்து ஆட்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்புறம் எங்க வீட்டிற்கு கிராமபோன் பெட்டி, ரேடியோ போன்றவை வந்தபோதும் இதே மாதிரித்தான் ஆச்சரியப்பட்டாங்க. அது ஒரு காலம்.

இப்போ மலையகம் ரொம்பவே மாறிபோச்சு. செட்டலைட், செல்போன், கம்யூட்டர் என்று வந்துவிட்டது.

ஊவா கட்டவளையில் அப்போது வி. ஐ. பி ன்னா தபால்பொடியன், ஆர்மோனியம் வாசிக்கும் கேசவன், ஊர் சந்தியில் உள்ள ஒத்தக்கடைக்காரர் ஆகியோர் தான் இந்த ஒத்தக்கடைக்கு இன்னொரு சிறப்புப் பெயர் உள்ளது. அள்ளிப்போட்டான் கடை என்போம். அதன் முதலாளி ராவுத்தர் சாமான் நிறுத்துதரும் போது கொஞ்சம் எஸ்ட்ரா வா அள்ளிப் போட்டு தருவாராம். இப்போ அந்த கடையை காணோம்’ என்று பழையதை நினைத்து உருகும் எழுத்தாளரிடம் வாழ்க்கையில் மறக்க முடியாத நபராக யாரைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டோம்.

‘கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக என்னுடனேயே பயணம் செய்யும் என் மனைவி தான்’ என்று மனைவிக்கே முதலிடம் தந்தார்.
எங்கள் அலுவலகத்தில் தெளிவத்தையுடன்….
வாழ்க்கையில் பெறுமதியான விடயமாக எதைக் கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு எழுத்தாளராக இருப்பதைத் தான் என்று பதில் சொன்னார். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி என்று கேட்டபோது,

‘நாம் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை சின்னதாக இருந்தாலும் அந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட மேடு பள்ளங்களையும் கடந்து அதில் வரும் ஆனந்தம், துயரம் போன்றவற்றில் பங்கெடுத்து வாழ்வை புரிந்துகொண்டு வாழ்ந்து காட்டுவதுதான் மிகவும் இனிமையானது அர்த்தம் உள்ளது என்று கருதுகிறேன். வாழ்க்கை ஒரு முறை தான் வரும். அதை நாம் இழந்துவிடக் கூடாது. அதை நான் சரியாகவே பயன்படுத்தி திருப்தி அடைந்துள்ளேன்...’ என்றார் நிறைந்த மனதுடன்.
வாழ்க்கையில் தான் சந்தித்த அதிர்ச்சியான சம்பவம் பற்றி தெளிவத்தை இப்படிக் கூறுகிறார் :-

‘அந்த அதிர்ச்சியான சம்பவம் ஜுலை கலவரம் தான். அப்போது நான் கிராண்ட்பாஸ் ஸ்டார் பிராண்ட் டொபி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அன்றுகாலை பத்து மணியிருக்கும்.... தமிழர்களின் உயிர் உடைமைகள் சூறையாடப்படுவதாக செய்திகள் பரவின. நானும் மனேஜர் சிவராஜாவையும் தவிர வேறு யாரும் ஃபெக்டரியில் இல்லை.

மற்ற வேலையாட்கள் அனைவரும் வெளியே போய்விட்டார்கள். நாங்கள் மாத்திரம் அலுவலகத்தினுள் இருந்தோம். கொஞ்ச நேர த்தில் காடையர் கும்பல் எமது கம்பனியின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். அகப்பட்டால் அடித்தே கொன்றுவிடுவார்கள். நானும் மனேஜரும் ஒரு மூலையில் பதுங்கினோம். பிறகு காடையர்கள் கம்பனியின் உள்ளே சென்று பொருட்களை திருடும் வேலையில் ஈடுபட்டபோது அங்கிருந்து மெல்ல வெளியேறினோம். அப்போது ஒரு இரும்புக் கரம் என் தோளை அழுத்திப் பிடித்தது.

நான் அப்படியே வெலவெலத்துப் போனேன். ‘தமுசே ஜோசப் நேத’ என்று அந்த நபர் என்னை பார்த்து கேட்டதும் எனது ரத்தம் அப்படியே உறைந்துபோனது. பிறகுதான் அவர் கிராண்ட்பாஸ் செயின்ஸ்தான் தியேட்டரில் காவலாளியாக இருக்கிறார் என்பதும் அந்த தியேட்டரில் மனேஜராக இருந்த எழுத்தாளர் அஸ்வத்கானின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் எங்களை அந்த தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார் என்பதும் தெரியவந்தது. அவர் எங்களை தியேட்டருக்குள் வைத்துப் பூட்டி வைத்தார்.

இரண்டு இரவுகள் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அந்த தியேட்டருக்குள்ளேயே இருந்தோம். இந்த சம்பவத்தை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது’ என்று தான் உயிர் மீண்ட கதையை சொல்லி முடித்தார் ஜோசப்.

Saturday, December 14, 2013

face பக்கம்


சினிமானந்தா பதில்கள் -08

நமீ எப்போ தனிக்கட்சி தொடங்குறாங்க? அந்த கட்சியின் சின்னம் என்ன? 

எஸ். ஜீவன்
மட்டக்களப்பு

ஏற்கனவே தனிக்கட்சி தொடங்கியாச்சே. படம் இல்லாததால துணிக்கடை திறக்கும் கட்சி. காதல் சந்தியா, ரிச்சா கங்கோபாத்யா... அப்படி இப்படின்னு 20, 30 பேர் கட்சியில இருக்காங்க.
என்ன விஷேசம்னா சிம்ரன், தேவயானி மாதிரி நல்லா நடிக்கிறவங்களும் இந்த கட்சியில இருக்கிறதுதான். கட்சியின் சின்னம் கத்தரிக்கோலும் ரிப்பனும்.

ப. கி. து. தி. கட்சியில் நடிகைகளுக்கு மட்டுமே இடம்


இன்றைய நகைச்சுவை நடிகர்களில் பரோட்டா சூரி எப்படி? ஜெயிப்பாரா?

எஸ். துளவி  மஸ்கெலியா

ஹீரோவோட ஒட்டிக்கிட்டு (நண்பரா) நடிக்கிறாரு. அப்புறம் எங்க பேர்
வாங்குறது. தனி டிராக்ல நடிச்சு ஜெயிச்சார்னாதான் நகைச்சுவை நடிகர்.

பரோட்டா இன்னும் பக்கப்புள்ள  (பக்கவாத்தியம்)

சிம்புவின் ஆட்டம் முடிந்து விட்டதா? ஒரு செய்தியையும் காணோமே....

எஸ். நளாயினி
பதுளை

எந்த ஆட்டத்தை சொல்கிறீர்கள்? திரையிலா, வெளியிலா?
திரையில் வேலு, வேட்டை மன்னன் இரண்டிலும் வேட்டை அவுட்
வெளியில் ஹன்சிகாவுக்கு பூட்டு, புது catch அன்ட்ரியா

எப்போதுமே மாறாதவன் சூப்பர் ஸ்டார் ரஜனி.
அடிக்கடி மாறுபவன் BRIGHT STAR SIMBU

தீபாவளி ரேஸில் ஆரம்பம், பாண்டிய நாடு
அழகுராஜா நிலவரம் எப்படி? வரிசைப்படுத்தவும்

எஸ் சுகுனா, காத்தான்குடி

இம்முறை தீபாவளிக்கு மூன்றே மூன்று 7,8 வந்த காலம் போயே போச்சு,
மூன்றில் அழகு இடையிலேயே நின்று விட்டார். அடுத்த இரண்டையும் வரிசைப்படுத்தினால்

வசூலில் ஆரம்பம், பாண்டியநாடு
தரத்தில் பாண்டியநாடு, ஆரம்பம்

ஜில்லா விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா?

கே. சுபாஜினி, தெஹிவளை

சந்தேகம்தான். கழுத்தில் ரோஜா மாலை, நோட்டு மாலை என்று படத்துக்கு போஸ் கொடுத்தால் தலைமைக்கு பிடிக்காது என்று
இன்னுமா தெரியவில்லை! ஏற்கனவே 'தலைவா' பட்ட பாடு போதாதா? இம்முறை ஜில்லாவை சுற்றி வேலி கட்டப் போகிறார்கள். படத்தை பெரிய விலைக்கு விற்று விட்டதாக கேள்வி. ஆனால் வாங்கியவர்கள் கதி...!

ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்


ஹன்சிகா ஒரு குட்டியானை மாதிரி இருக்கிறாரே அவருக்கு புள்ளி மானாக முடியாதா?

எம். கிருபா. வாழைச்சேனை

உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும். சிவகார்த்திகேயனுடன்
மான் வேட்டையில் இறங்கியிருக்கிறார்.

ஒரு படத்தில் யானை அடுத்த படத்தில் புள்ளிமான். அதுதான் சினிமா


திரிசாவுக்கு திருமணமா? அவங்களுக்கு அப்படி என்ன அவசரம்?

திரிஷா ரசிகர். திருமுருகன் சுன்னாகம்

எப்போதாவது செய்து கொள்ளத்தானே வேண்டும். இப்போ அல்லது எப்போ என்று பாடியவர்தானே. இப்போது இப்போ என்கிறார்.
boy friend ராணா அவசரப்படுத்துகிறார்

ராணா NO என்றால் இதுவும் நடக்காதே!

Friday, December 6, 2013

அம்பாள் கபே நாராயணசாமி

"என் படத்தில் நடிக்க எம். ஜி. ஆர். சம்மதித்தார்"


மணி  ஸ்ரீகாந்தன்

இலங்கையில் சைவ உணவகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பொருளை எடுத்துக் கொண்டால் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்நாட்டில் தினசரி இலட்சக்கணக்கான மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான உணவுகளை வழங்கும் சேவையை 'சைவக்கடைகள்' ஆற்றி வருகின்றன.
தமிழ் மக்களுடனும் தமிழ் உணவு கலாசாரத்துடனும் தவிர்க்க முடியாத ஒரு பிணைப்பை சிங்கள மக்கள் மத்தியில் சைவ உணவகங்கள் ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல. தோசையும் வடையும் இன்று சிங்களவர்களின் உணவாகவும் மாறிப்போனதற்கு சைவ உணவகங்கள் காரணமாக இருந்துள்ளன. கறிகளுக்கு, சைட்டிஷ்களுக்கு சைவ உணவகங்கள் கட்டணம் அறவிடுவதில்லை என்பதாலும், ஏனைய உணவகங்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவகங்களில் விலை மலிவு என்பதாலும் அவற்றுக்கான மவுசு குறையவே இல்லை. நிர்வாகம் சரியாக செய்தால் சைவ உணவகம் நடத்தி யாரும் நஷ்டப்படுவதில்லை.

சைவ உணவகங்கள் பற்றி ஆய்வு செய்தால், நூல் எழுதினால் நாராயணசாமியைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்ய முடியாது. அதன் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருப்பவர். அவரை பகிரங்க உலகுக்கு அறிமுகம் செய்யும் வகையிலேயே இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

கொழும்பு ஆமர் வீதி சந்தியில் அமைந்திருக்கும் அம்பாள் கபே உணவகத்தை பார்த்திருப்பீர்கள். அந்தக்கடையில் நடுநாயகமாக நெற்றியில் திருநீற்றுப் பட்டையோடு ஐயங்கார் பாணியில் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பார். அவரை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?....

அவர் பெயர் நாராயணசாமி.

சினிமா, வர்த்தகம் என பல்துறை வித்தகராக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு பெரிய மனிதர். நம் நாட்டில் ஒரு காலத்தில் வைரசாக பரவி இருந்த ஜெக்பொட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக விளங்கியவர் இவர்தான். கொழும்பில் மட்டும் தனக்கு 300 ஜெக்பொட் சென்டர்கள் இருந்ததாக ஒத்துக்கொள்ளும் இவர், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸதான் ஜெக்பொட் சென்டர்களுக்கு சாவு மணி அடித்தவர் என்கிறார்.

மணவை தம்பி, நாராயணசாமி, மற்றும் கிங்ஸ்லி செல்லையா.
கிரிலப்பனையில் இருந்து பின்னர் 83 கலவரத்தில் எரியூட்டப்பட்ட கல்பனா தியேட்டர் உட்பட 27 அம்பாள் சைவ ஹோட்டல்களுக்கு சொந்தக்காரராக விளங்கிய அவரை ஒரு காலை வேளையில் ஆமர் வீதி அம்பாள் உணவகத்தில் சந்தித்துப் பேசினோம்.

இப்போது 83 வயதில் உடல் தளர்ந்து நடை தளர்ந்து காணப்பட்டாலும் தினமும் காலையில் எழுந்து எட்டரை மணிக்கெல்லாம் ஆமர்வீதி அம்பாள் உணவகத்துக்கு வந்து விடுகிறார்.

தான் ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் ஹோட்டல் வேலை சூடு பிடிக்கிறது என்பது அவரின் நம்பிக்கை.

"இந்த வயதான காலத்தில் நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாமே! ஏன் இப்படி வந்து கஷ்டப்படுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

"என் உடம்பு மட்டும்தான் பலவீனம் அடைந்திருக்கிறது. மனதளவில் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்" என்று கம்பீரமாக பதில் சொல்கிறார் நாராயணசாமி.
இ-வ: எம்.பீ.பாலன்,நாராயணசாமி,ஸ்ரீசங்கர்,(கண்ணாடி),முன்னால் அமைச்சர் திருச்செல்வம்,ஹெலன் குமாரி,உதயகுமார்.
"இப்போ நீங்கள் பார்க்கிற நாராயணசாமிக்கும் அப்போ இருந்த நாராயணசாமிக்கும் ரொம்ப வித்தியாசம். அந்தக்காலத்தில் காலையில் எழுந்த உடன் ஒரு முக்கால் போத்தல் அடித்துவிட்டுத்தான் பல் விளக்குவேன். உடல் பயிற்சி செய்வேன். என்னைப்போல ஆட்டுரலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் மாவாட்ட யாருக்கும் வராது" என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார் நாராயணசாமி.

தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சி கயத்தாறு பக்கத்தில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதில் தொழிலாளியாக கொழும்புக்கு வந்தவர் தனது 14வது வயதில் கொழும்பு செட்டியார் தெருவில் இருந்த கிருஷ்ண கபே ஹோட்டலில் பரிமாறுபவராக பணியாற்றி இருக்கிறாராம்.
றைகம் கீழ் பிரிவு ஆலய நிர்மாண பணிகளின் போது
நாராயணசாமி மற்றும் கடைசியாக உடன் வருபவர்
கந்தையா மாஸ்டர்
"மாவாட்டுவது, பத்திரம் கழுவுவது, மேசையை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் நான் செய்திருக்கிறேன். சைவ உணவகம் ஒன்றில் எனக்குத் தெரியாத வேலையே கிடையாது. அப்போது எனக்கு அந்த ஹோட்டலில் மாதச் சம்பளம் 30 ரூபா தந்தாங்க. ஐந்து வருஷம் தொடர்ச்சியாக அங்கே வேலை செய்திருக்கிறேன். சம்பள உயர்வு எல்லாம் எனக்குக் கிடையாது. அப்போது விலைவாசி ரொம்பவும் குறைவு.

இப்போ மின்சாரத்தில் ஓடும் ஆட்டுக்கல் 18 ஆயிரம். ஆனா அப்போது பெரிய ஆட்டுக்கல் 13 ரூபாவுக்கு விற்கப்பட்டது. அதில ஐந்து கிலோ உளுந்து போட்டு ஆட்டலாம். தோசை ஒன்று 5 சதத்திற்கும், மசால் தோசை 10 சதத்திற்கும் விற்கப்பட்டது. இப்போ மசால் தோசையின் விலை 130 ரூபா. அந்தக்காலத்தில் எனது ஹோட்டல்களில் பசும்பாலில்தான் டீ போடுவார்கள். அதற்காகவே பேலியாகொடை, கிரிபத்கொடை, மாவலை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பால் பண்ணைகளை அமைத்திருந்தேன். சுமார் 1200 பசுமாடுகள் இருந்தன. மாடுகளின் உணவுக்காக ஒரு பசும்புல் தோட்டமும் எனக்கு இருந்தது. அதோடு குருநாகலில் 118 ஏக்கரில் ஒரு தென்னந் தோட்டமும் இருந்தது"  என்று தன் வர்த்தக எல்லைகளை விபரித்துச் சென்றபோது, இவர் சாமானியர் அல்ல, அக்காலத்தில் ஒரு பெரும் தொழிலதிபராக இருந்தவர் என்பது புரிந்தது. அப்போ நீங்க ஒரு பெரிய முதலாளிதான் என்று அவரிடம் கூறியபோது, சாடை காட்டி இல்லை என்றார்.

"தொழிலாளி இல்லை, உழைப்பாளி என்பதே சரியான அடையாளம்" என்ற போது உழைப்பால் உயர்ந்தவராக எம்முன் விஸ்வரூபம் எடுத்தார் நாராயணசாமி. இப்போது சைவ உணவகங்களில் பல இயந்திரங்கள் வந்து விட்டன. புதிய சமையல் நுணுக்கங்கள், சமையல் தொழில்நுட்பங்கள் வழக்கத்துக்கு வந்து விட்டன. எனவே அன்றைய தோசை, இட்லி, சாம்பாரின் சுவையை விட இன்றைய தோசை, இட்லியின் சுவை, செய் நேர்த்தி அதிகம்தானே? என்று கேட்டோம்.

"இல்லை.. அன்றைய சுவை இப்போது இல்லை. ஏனென்றால், அன்றைக்கு நாங்கள் வாங்கிய உளுந்து, அரிசி, வெங்காயம், பருப்பு போன்ற மூலப் பொருட்கள் இரசாயனங்கள் கலக்காதவை, இல்லையா? இன்றைக்கு எல்லாம் இரசாயனம் கலந்தவையாகி விட்டன. மெஷின் பட்டு மாதிரி மாவாட்டினாலும் அன்றைக்கும் விழுது மாதிரி வரும்வரை நாங்களும் மாவாட்டிய பின்னர்தான் வடை, தோசை சுடுவோம். ஆகவே, அன்றைக்கு பண்டங்கள் சுவையாகவும் தரமாகவும் இருந்தன" என்கிறார் நாராயணசாமி.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மஞ்சள் குங்குமம்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான இவர் அந்தப் படத்திற்கு 4 இலட்சம் ரூபா முதலீடு போட்டிருக்கிறார். அன்றைய திகதியில், 70 களின் ஆரம்பப் பருவத்தில், இது ஒரு பெரிய தொகை. ஆனால் போட்ட பணம் திரும்பக் கிடைக்கவில்லை.

"மஞ்சள் குங்குமத்தை ஆரம்பத்தில் கிங்ஸ்லி செல்லையாதான் தயாரித்தார். பிறகு அவர் கை விட்டுவிட நான் தொடர்ந்தேன். படத்தில் இலாபம் பார்க்கும் நோக்கில் நான் அதை செய்யவில்லை. எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அதற்காக செய்தேன். பருத்தித்துறை கடற்கரையில் நான் பேசுவது மாதிரி ஒரு சீன் எடுத்தோம். படத்திற்கு போட்ட முதலீட்டில் பாதிதான் வந்தது. அதன் பிறகு சினிமா படம் எடுப்பதை பெரிய அளவில் செய்யலாம் என்று தீர்மானித்தேன்.
எம். ஜி. ஆரை கதாநாயகனாக போட்டுப் படம் எடுத்தால் நிறைய காசு பார்க்கலாம் என்று நினைத்து அவரோடு பேசினேன். அதற்கு எம். ஜி. ஆரும் சம்மதித்தார். ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போட்டார். இந்திய படத்திற்கான இந்திய உரிமையை தான் எடுத்துக்கொள்வதாகவும் மற்ற நாடுகளுக்கான உரிமையை என்னை எடுத்துக்கொள்ளும்படியும் சொன்னார். நானும் சம்மதித்தேன். ஆனால் அப்போதிருந்த இலங்கை அரசு அதற்கு அனுமதி தரவில்லை. அதனால் திட்டத்தைக் கைவிட வேண்டியதாயிற்று" என்று தன் சினிமா அனுபவம் பற்றிப் பேசினார் நாராயணசாமி.

நாராயணசாமியின் வர்த்தக எல்லை கொழும்பையும் தாண்டி, சிலாபம், நீர்கொழும்பு, இரத்தினபுரி, இங்கிரிய ஆகிய பகுதிகளிலும் விஸ்தரித்துக் கிடந்தது. இங்கெல்லாம் அவரது சைவ உணவகங்கள் இயங்கின.

"இங்கிரிய நகரில் அப்போ சுமார் 40 தமிழ் கடைகள் இருந்தன. அந்தக்காலத்தில் நாகமணி அண்ணாச்சி, வீரப்பெருமாள் உள்ளிட்டோர் பெரிய வர்த்தகர்களாக விளங்கினார்கள். 83 க்குப் பிறகு அவை இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாயின. அந்தப் பகுதியில் இருந்த கந்தையா மாஸ்டர் எனக்கு ரொம்பவும் நெருங்கிய நண்பர்... எங்கள் இருவருக்குமான நட்பு நீண்டகாலமாக இருந்து வந்தது" என்று தமது பழைய ஞாபகங்களை அசை போடும் நாராயணசாமிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அதில் ஒரு மனைவி இறந்து விட்டாராம். ஒருவர் கொழும்பில், மற்றவர் தமிழகத்தில். அந்தக்காலத்தில் ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது கௌரவத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். அதைக் குறிப்பிட்டு கேட்டோம்.

"இல்லை... அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒருவனுக்கு மூன்று மனைவிகள் அமைவது அந்த ஆணின் உடல்வாகு, மனவலிமை மற்றது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளவுதான்" என்றார் பட்டென.

தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று நாராயணசாமியிடம் கேட்டோம்.

முயற்சி, நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, திட்டமிடல், சிக்கனம் என்று நச்சென்று பதில் சொன்னார்.

பெரு வாழ்வு வாழ்ந்து முடித்துவிட்ட நாராயணசாமிக்கு ஒரே ஒரு மனக்குறை. உடல் தளர்ந்து விட்டதே, நடக்க சிரமப்பட வேண்டியிருக்கிறதே என்பதுதான் அது. 83 வயதுவரை வாழ்பவர்கள் இன்று எத்தனைபேர்? எம்மைப் பொருத்தவரை அவர், வயதுக்கான தளர்ச்சியைத் தவிர, நன்றாகத்தான் இருக்கிறார். உயரங்களைத் தொட்ட, எல்லைகளை விஸ்தரித்துக் கொண்ட, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய நிறைவான வாழ்க்கை.

ஆனால் இதை அவர் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எம்முடன் பேசிக் கொண்டிருந்த நாராயணசாமி, அம்பாள் கபேயை நோட்டம் விடுகிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அங்கும் இங்குமாக பார்க்கவே, ஒரு பணியாளரை பார்வையால் நிறுத்தி,

"அவருக்கு என்ன வேணும்னு கேளு" என்கிறார்.

இந்த வயதிலும் அவர் இரத்தத்தில் ஊறிப்போன வயிறாற உணவிடும்  குணம் உயிரோட்டத்துடன் அவருள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Monday, December 2, 2013

ஆட்டோகிராஃப் நினைவுகளில் ஆடுகளம் ஜெயபாலன்

எட்னா, சுமனாவதி நினைவுகளில் கிறங்கிப்போன ஜெயபாலன்


மணி  ஸ்ரீகாந்தன்

அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர்.
 சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக
'ஹே... இவரு ஆடுகளம் படத்துல வர்ற பேட்டைக்காரன் டோய்!' என்று அவர்கள் கூச்சல் போட பேட்டைக்காரன் வந்திருக்கும் செய்தி பள்ளி வளாகத்தில் தீயாக பற்றிக் கொண்டது!

பாடசாலை அதிபர் எம். இஸட். எம். வசீர், சக ஆசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் ஆடுகளம் ஜெயபாலனுக்கு வணக்கம் செலுத்தி பள்ளிக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவில் தேசிய விருது பெற்ற ஜெயபாலன், மத்துகமை சென் மேரிஸ் பாடசாலையில் பழைய மாணவர். அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் திடீர் விசிட். அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஜெயபாலனின் வருகையை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை கௌரவிக்க உயர் வகுப்பு மாணவர்களை அழைத்து கலந்துரையாடலை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் பள்ளி மாணவர்களோடு பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வை ஆசிரியர் எஸ். கமல் தொகுத்து வழங்கினார் பள்ளி மாணவன் எஸ். டிலான் ஜெயபாலன் பற்றி எழுதிய கவிதையை வாசித்தார்.

நிகழ்வில் ஜெயபாலன் பேசும் போது தாம் படித்த நாட்களில் தன்னோடு படித்தவர்களில் சிலரை ஞாபகப்படுத்தினார். அவர்களில் பலர் இறந்து விட்டதாக பள்ளி மாணவர்கள் கூறினார்கள். குறிப்பாக கலேவத்தை எஸ்டேட்டில் இருந்து வந்த ஜெயமங்களம் இறந்து விட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் வவுனியாவுக்கு சென்று விட்டதாகவும் சொன்ன போது ஜெயபாலனின் முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது. 'அப்போது மத்துகமையில் கடை வைத்திருந்த கிருபாகரன்...' என்றதும் அவரும் உயிரோடு இல்லை என்ற பதில் வந்தது.
காலம் ஒரு பரம்பரையை திண்று வருகிறது என்பதை நினைத்து பாலன் பெருமூச்சு விட்டார். என்னோடு படித்தவர்களை பார்க்க வந்தேன். அவர்களை காண முடியவில்லை, ஆனால் நான் தேடி வந்தவர்களின் உருவங்கள் இந்த பிள்ளைகளின் முகங்களில் தெரிகிறது. அவர்களின் சந்ததிகள் தானே இவர்கள் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்ட அவர் பாடசாலை பிள்ளைகள் சிலரோடு பள்ளி மைதானம் நோக்கி நடந்தார்;  "அதோ தெரிகிறதே அந்த காட்டுப் பகுதியில்தான் நான் என் நண்பர்களோடு சென்று திருட்டுத்தனமாக மங்கூஸ் பறித்து வருவேன்" என்று ஜெயபாலன் சுட்டிக்காட்டிய இடத்தை பட்டமுள்ள கந்த என்று இப்போது அழைக்கிறார்கள். அங்கே மங்கூஸ் மரங்கள் இப்போதும் இருப்பதாக மாணவர்கள் உறுதிப்படுத்தினார்கள். 
"அப்போது இந்த ஸ்கூல் வளாகத்திற்குள் சாரைப் பாம்புகள் வரும். அதன் வாலை சிங்கள மாணவர்கள் பிடித்து சுழற்றி வீசி எறிவார்கள். எனக்கு அது ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது" என்று ஜெயபாலன் சொல்வதை இடைமறித்த ஒரு மாணவி, "நீங்கள் பாம்புக்கு பயமா சார்?" என்றாள்.

"நான் பயமில்ல... ஆனா பாம்மை கண்டால் ஓடிடுவேன்" என்றார். இவரு அட்டைக்கத்தி ஹீரோடா என்று ஒரு மாணவன் சொல்ல.. மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.
"சார் இப்படி கம்பீரமா மீசை வச்சிருக்கீங்களே எப்படி?" என்று ஒரு மாணவி கேட்க,

"அதுவா நான் இவங்கள மாதிரி சின்னப் பையன் கிடையாது.. நான் ஆண்புள்ள சிங்கம்" என்றபடி மீசையை முறுக்கியவரிடம், "அப்போ உங்களுக்கு என்ன வயசு?" என்று அவரை நோக்கி இன்னொரு கேள்வி பறந்தது.

"சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.." என்று தமது கவிதை பாணியில் பதிலளித்து சமாளித்தார் ஜெயபாலன்.

"உங்க முகத்தில் ஏதோ கருப்பா மச்சம் மாதிரி..." என்று ஒரு மாணவி ஆள் காட்டி விரலை நீட்டினாள்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களோடு ஜெயபாலன்
"அதுவா.. ஒரு ஆபிரிக்க கேர்ள் செல்லமா கிள்ளிட்டு போயிட்டா... அந்த தழும்புதான் என்று நகைச்சுவையாக பதிலளித்த ஜெயபாலன் தம்மை கலாய்த்த சியாலினி, சுகன்யா, அருள் மாதவி, ஸ்ரீஸ்கந்தராஜா, அஜித், சுரேஸ், சுபாஸ் ஆகியோருடன் விடைபெற்று நகர்ந்தார். காரில் அமர்ந்த ஜெயபாலனின் மனசு முழுவதும் மரியாள் கல்லூரியை சுற்றி வந்தது.

"என் பள்ளியில் கால் வைத்து மாணவ மாணவிகளோடு சிரித்து பேசிய அந்த நிமிடங்களில் என் வயசு குறைந்து பள்ளி மாணவனாகவே மாறிப்போனேன்... எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத ஒரு சுகமான அனுபவம் அது... அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் உலாவந்த பெரிய வகுப்பு மாணவி பெயர் எட்னா அவள் பந்து விளையாட மைதானத்திற்குள் வரும் வரை நான் என் வயது மாணவர்களோடுதான் விளையாடிக்கொண்டிருப்பேன்.
அவள் வந்ததும் நான் பெரிய வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து விளையாட முயற்சி செய்வேன். எட்னா என்னைக் கவனிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அப்படி ஒரு நாள் அவள் டீமோடு சேர்ந்து நான் விளையாட முனைந்த போது அவர்கள் அடித்த பந்து என் தலையில் பட்டு கீழே விழுந்தேன். ஆனால் எட்னா இப்போ எங்கே என்றே தெரியவில்லை என்று பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார் பாலன்.

தான் வசித்த கல்வெல வெளிகொடல என்ற இடத்தில் இருந்த சுமனாவதியையும் ஞாபகப்படுத்திக் கொண்டார்.

"சித்திரை வந்து விட்டால் சுமனாவதி வீட்டில் ஊஞ்சல் கட்டி மேளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். நானும் அவளோடு சேர்ந்து மேளம் வாசித்திருக்கிறேன் ஒரு நாள் ஊஞ்சல் ஆடிய சுமனா உனக்கு ஊஞ்சல் ஆடத் தெரியுமா? என்று கேட்டாள். அவள் கேட்டு விட்டாலே என்று நானும் ஊஞ்சலில் ஏறி நின்று ஆடி எனக்கும் முடியும் என்று சுமனாவதிக்கு நான் ஜாடை காட்டினேன்.

அடுத்த நொடி கால் தடுமாறி ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தேன். உடனே சுமனாவதியின் ஆட்கள் என்னை தூக்கி விட்டார்கள்" என்ற ஜெயபாலன் சுமனாவதியைப் பார்க்க வேண்டும் என்றார். உடனே வழி கேட்டு வாகனத்தை சுமனா வாழ்ந்த கிராமத்து பாதையில் விட்டோம். மத்துகமை வாசியான சண்முகராஜா எமக்கு வழிகாட்டினார். ஆனால் கொழும்பிலிருந்து வந்த ஒரு அவசர அழைப்பு பாலனை அழைக்க சுமனாவதியை தேடும் படலத்தை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று. தேடல் தொடரும் என்று வானவில் டீமுக்கு சொல்லி விட்டு கொழும்பை நோக்கி திரும்பினார் ஜெயபாலன்.