Tuesday, November 19, 2013

மெகா சலவைத் தோட்டம்

பெரடைஸ் பிளேஸ் சலவைத் தோட்டம்


மணி  ஸ்ரீகாந்தன்

உலக அதிசயங்களில் ஒன்றான பாலிலோனின் தொங்கும் தோட்டம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் வண்ண வண்ண துணிகள் வரிசையாய் அணிவகுத்து கொடியில் தொங்கும் சலவைத் தோட்டம் பார்த்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு மெகா சலவைத் தோட்டம் அமைந்திருக்கிறது கொழும்பு ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸில்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இச்சலவைத் தோட்டம் நூறு ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகத்தான் இருக்கிறது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இத் தோட்டத்தில் சுமார் 125 குடும்பங்கள் வசிக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் துணிகள் கொடியில் தொங்கி கொண்டிருக்க... வரிசையில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் இறங்கி ஆண்கள் துணிகளை துவைத்து புழிந்து கொண்டிருக்க, பிழியப்பட்ட துணிகளை கொடியில் காயப் போடுவது, காய்ந்த துணிகளை எடுத்து அயன் பண்ணி அடுக்குவதுமாக எப்போதும் பரபரப்பாக இருக்கிறது சலவைத் தோட்டம். இந்த பெரடைஸ் பிளேஸிற்கு காளியும் முனியப்பரும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
 "முனியப்பர்தான் எங்களுக்கு வெள்ளாவிசாமி. அந்தக் காலத்துல வெள்ளாவி வச்சு துணிகளை வெளுக்கும் போது வருடந்தோறும் முனிக்கு ஒரு பலி கொடுக்கனும். ஆனா இப்போ வெள்ளாவி இல்லை... ஆனால் முனியப்பருக்கு கொடுக்கும் பலியும் பூஜையும் மட்டும் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார் நாம் சந்தித்த ஒரு சலவைக்காரர்.

சரி, டோபி மார்க் என்று சொல்வார்களே, ஞாபகம் இருக்கிறதா? செங்கொட்டை என்ற வித்தில் உள்ள பாலை ஊசியால் குத்தி எடுத்து துணியில் அடையாளம் போடுவார்கள். இந்த செங்கொட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி வந்தன. இன்று செங்கொட்டையை இவர்கள் உபயோகிப்பது இல்லை. மார்க்கர் பேனாவில்தான் மார்க் பண்ணுகிறார்கள்.

"என் தாத்தா பாட்டன் காலத்தில் கை ரிக்ஷாவில துணி மூட்டைகளை அடுக்கி இழுத்துச் சென்றார்கள். ஆனா இப்போது ரிக்ஷா போய் ஆட்டோ வந்து விட்டது. துணி மூட்டைகளை சுமந்து செல்லும் கழுதை வளர்க்கும் வண்ணான் முறை இலங்கையில் இருந்ததில்லை. அது இந்தியாவில் தான் இருந்ததாம் என்று எமக்கு விளக்கம் தந்தார் பெரடைஸ் பிளேசின் சலவை தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துசாமி.

"இன்னும் பதினைந்து, இருபது வருடங்களில் இப்படி ஒரு தோட்டத்தை நீங்கள் பார்க்க முடியாது. எமது இளைய தலைமுறை இந்தத் தொழிலை விரும்பவில்லை. சலவை தோட்டத்தின் கடைசி தொழிலாளர்கள் நாங்கள் மட்டும்தான்" என்று அடித்து சொல்கிறார் முத்துசாமி.
இதே போன்ற ஒரு சலவைத் தோட்டம் அலரி மாளிகைக்குப் பின்னால் முன்னர் அமைந்திருந்தது. அது இப்போது அங்கில்லை. இங்கும் ஒரு குடியிருப்புத் திட்டத்தை கொழும்பு மாநகரசபை கொண்டு வந்திருக்கிறது. இக்குடியிருப்புத் திட்டம் இந்த சலவைத் தோட்டத்தை விழுங்கி விடும் என்ற அச்சம் இங்குள்ளவர்கள் மத்தியில் உள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இருந்து இங்கே ஆயிரக்கணக்கான துணிகள் சலவைக்கு வருகின்றன. ஆனால் ஆஸ்பத்திரி துணிகள் வருவதில்லையாம். கப்பல் துணி மணிகள், தொகையாக இறக்குமதியாகும் பயன்படுத்திய ஆடைகள், லொன்ட்ரிகளில் இருந்து வரும் ஓடர்கள் என்பன இவர்களின் பிரதான வருமான வழிகள். ஒருவர் மாதம் 35 ஆயிரம் ரூபா வரை சம்பாதிக்க முடியும். சிலர் ஆள் நியமித்து வேலை செய்கிறார்கள். பலர் பழகி விட்டோம். அதனால் இதையே தொழிலாக செய்கிறோம் என்கிறார்கள்.

பெரடைஸ் சலவைத் தோட்டத்துக்குள் சென்றால், அது ஒரு தனி உலகம்!

சேங்கொட்டை மரம்

செங்கொட்டை, சேங்கொட்டை, சேராங்கொட்டை என இம் மரத்தை அழைக்கிறார்கள். கஜூ பழத்தைப் போலவே இதன் கொட்டையும் வெளிப்புறமாகவே அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் : Marking nut
தாவரவியல் பெயர் : Semecarpns Cinacardumlin
இந்தியா, மலேசியா நாடுகளில் செழித்து வளரும் மரம்No comments:

Post a Comment