Sunday, November 17, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -3

உணவு தேவைக்கு கேரளா தமிழகத்தை நம்பியிருப்பது ஏன்?


மணி  ஸ்ரீகாந்தன்

ஏறக்குறைய இலங்கையை ஒத்த இயற்கைச் சூழலைக் கொண்ட ஒரு மாநிலமே கேளரா. படித்தவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலம். ஆனால் அரிசி, காய்கறிகளுக்கு இது தமிழகத்தையே நம்பியே உள்ளது. இது கொஞ்சம் விசித்திரமானதுதான். இதுபற்றி கேட்டபோது பாபு சொல்லத் தொடங்கினார்.
தோட்ட மாரியம்மன் கோவில்
"அதனாலேயே இன்னமும் கேரள அரசு உணவுத் தேவைகளுக்கு தமிழகத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு காய்கறிகளின் விலை ரொம்பவும் அதிகம். அதனால் நான் தமிழ் நாட்டிற்கு போய்த்தான் காய்கறிகளை வாங்கி வருகிறேன். புனலூருக்கு பக்கத்தில்தான் தமிழ்நாட்டின் தென்காசி எல்லை இருக்கிறது. அதனால் பஸ்சில் நாற்பது ரூபா டிக்கட் எடுத்து தென்காசிக்கு சென்று மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி வருகிறோம். ஆனால் அரிசி மட்டும் கொண்டு வர முடியாது. அரிசி கொண்டு வந்தால் கேரளா எல்லை காவல் படை கைது செய்யும். ஆனாலும் நம் ஆளுங்க கில்லாடிகள் ஆச்சே! அவங்க கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அரிசியைக் கொண்டு வாராங்க.

தன் இல்லத்தின் முன்பாக பாபு
 குறிப்பாக பெண்கள் அரிசியை மடியில் கட்டி முந்தானையில் மறைத்துக் கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டுவந்தால் பொலிஸ்காரர்களுக்கு தெரியாது... நம்ம ஊரில் எப்பவும் தாய்குலத்துக்கு ஒரு மரியாதை இருப்பதால் அவங்களை கண்டுக்க மாட்டாங்க. எங்களைத் துருவித் துருவி பார்த்துத்தான் விடறாங்க... அப்படியும் பெண்களால் இரண்டு கிலோவுக்கு மேல் அரிசி கொண்டு வர முடியாது. மடியில் கட்டி அரிசிப் பொட்டலம் பெரிதாக தெரிந்தால் அது பொலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். அரிசியை கேரளா அரசு இறக்குமதி செய்வதால்தான் நாங்கள் அரிசி கொண்டு போவதை அந்த அரசு தடை செய்கிறது. இது தவிர தமிழகத்தைப் போல் இங்கே இலவச ரி.வி., மின்விசிறி, கேஸ், மூன்று ரூபா, ஐந்து ரூபாயில் பகல் உணவு மலிவு விலை உணவகங்கள் என்று எதுவும் இல்லை. இங்கே உழைத்தால்தான் சாப்பாடு. சும்மா இருந்தா பட்டினிதான்" என்று கேரளா பெருமைகளை விபரிக்கும் பாபு, இன்னொரு உண்மையை சொன்னார்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கேரள கல்வித்தரத்தில் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்கே இருக்கும் பெரும்பாலானோர் கோட் சூட் போட்டு வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். பாத்தி வெட்டி தண்ணீர் கட்டி விவசாயம் பார்க்க விரும்புவதில்லை. அதிலும் முக்கியமாக இவர்களின் உழைப்பு முழுவதும் வெளிநாடுகளுக்கே பயன்படுகிறது. இங்கே மலையாளிகளில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில்தான் வசிக்கிறார். அதை இவர்கள் கௌரவமாகவே கருதுகிறார்கள்.
கேரள தோட்ட வைத்தியசாலை
ஆனால் தமிழகத்தில் அப்படி அல்ல... வெங்காயத்தை கடித்துக் கேப்பை (குரக்கன்) கஞ்சியை குடித்து விட்டு வயலில் இறங்கி விவசாயம் பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் அங்கே உணவு தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் மக்களுக்கு இலவசங்களும் அதிமாகவே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் இலவசங்களை பெற்றுக்கொள்வதற்காக இங்கு கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இடம் வாங்கி அங்கே ஒரு வீட்டையும் கட்டி அதில் தமது வாரிசுகளை குடியமர்த்தி விடுகிறார்கள். ஆனால் நமக்கு அந்த வசதி இல்லீங்க... நம்ம வாழ்க்கை இந்த ஆயிரம் நல்லூரிலதான்" என்று சொல்லும் பாபுவிடம் முல்லை பெரியாறு பிரச்சினையில் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்று கேட்டோம்.

"மலையாளியும், நாங்களும் தாய் பிள்ளைகளாகப் பழகுகிறோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. ஒற்றுமையா இருக்கலாம். இனவாதம் இங்கே கிடையாது. யாரோ ஒரு சிலர்தான் சில இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்றாங்க. எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாதுங்க" என்று கூறி முடித்தார் பாபு. இலங்கை தோட்டத் தொழிலார்களை விட தாம் வசதியாக வளமாகவளமாக இருப்பதாக சொன்னதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே!                            
                                                 (முற்றும்)

ஆயிரம் நல்லூர் எஸ்டேட் கேரளா


ஒருநாள் சம்பளம்                                           - 275 (இந்திய நாணயம்)
வருடத்திற்கு அரசு விடுமுறை                - 14
மருத்துவ விடுமுறை                                    - 30
வருடாந்த ஹொலிடே விடுமுறை       - 15

மருத்துசெலவு, வைத்திய காப்புறுதி    - 2 லட்சம் (இந்திய ரூபாய்கள்)
தீபாவளி முன்பணம்                                      - 14 ஆயிரம் (இ.ரூ)
போனஸ்                                                               - 18 ஆயிரம் (இ.ரூ)
வருடத்திற்கு                                                      - இரண்டு சோடி செருப்பு
ஒருவருக்கு - ஒரு குடை, ஆணாக இருந்தால் சேர்ட், கால்சட்டை காக்கி டிரஸ் இரண்டு சோடி, பெண்ணாக இருந்தால் ப்ளுகலர் சேலை, இரவிக்கை இரண்டு சோடி.


இலங்கை தோட்டங்களில் சம்பளம், சலுகைகள்


ஒரு நாள் சம்பளம் -
வருகை 19 நாட்களாக இருந்தால்                          - ரூ. 450
19 நாட்களுக்கு மேல்வரவு                                         - ரூ. 615
வருடத்திற்கு
போனஸ்                                                                              - 6000
போனஸ்                                                                              - 750
தீபாவளி                                                                               - 4500
முற்பணம் -
சவப்பெட்டிக்கு                                                                 - ரூ.1000

பாபர், டோபி - பெரும்பாலாள தோட்டங்களில்
சுத்திகரிப்பாளர் - இல்லை
தேயிலை - இலவசம் (அரைகிலோ)
பாக்கட்
வருடத்திற்கு - இரண்டு கிலோ
சுண்ணாம்பு பக்கெட்

No comments:

Post a Comment