Tuesday, November 5, 2013

23 வருடங்களின் பின்னர் பிரிந்தவர் கூடிய அற்புத கதை இது!

"என் குடும்பத்தை யுத்தம் முடித்திருக்கும் என்றே நினைத்திருந்தேன்..."

யுத்தத்தால் பிரிந்த குடும்பம்  வானவில்லால்  இணைந்தது


மணி  ஸ்ரீகாந்தன்

ஆடிக்கலவரம் தொடங்கி இலங்கையின் யுத்த காண்டம் முடிவடையும் வரை புலம்பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த நம் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் இன்னும் தமிழக முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்களின் எதிர்காலம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஏறக்குறைய இந்தியப் பிரஜைகள் போலவே ஆகிவிட்ட அவர்களைத் திருப்பி அனுப்புவதா, இந்தியக் குடியுரிமை வழங்குவதா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.
நந்தகுமாரியின் குடும்பம் - (வேலூர் முகாம்)
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வேலூர் அகதி முகாமுக்கு விசிட் செய்த நாம் அங்கே பார்த்த மற்றும் கேட்டவற்றை கடந்த வருடம் ஜனவரியில் வெளியான வண்ண வானவில் இதழின் 25 ஆம் பக்கத்தில் 'தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள்' என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தோம்.

அதில் நம் மனதை உருக்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தோம். எட்டு வயதில் வவுனியாவிலிருந்து தனது பெரியம்மாவுடன் படகேறி தமிழகத்தில் அகதியாக வந்திறங்கிய நந்தகுமாரியின் கதையை எழுதியிருந்தோம்.

வண்ண வானவில் (ஜனவரி 2012)
கடந்த ஆண்டு வெளியான செய்தி.
சில மாதங்களின் பின் பெரியம்மா இறந்து விட தமிழகத்தில் தனிமரமானார் நந்தகுமாரி. தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். அவருடன் உரையாடிய போது, தனது உடன் பிறப்புகள் வவுனியா சாந்தசோலையில் வசிப்பதாகவும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறிய அவர், உறவினர்களை குறிப்பாகத் தன் சகோதரியைத் தேடித் தரும்படி கண்ணீர் மல்க கேட்டிருந்தார். இந்தத் தகவலை கட்டுரை வடிவில் வானவில்லில் வெளியிட்டோம். அத்தோடு எமது
'ஃபேஸ் புக்' தளத்திலும் வெளியிடப்பட்டு அதிகளவில் 'ஷெயார்' செய்யப்பட்ட செய்தியாகவும் அது முதலிடத்தைப் பிடித்தது. குமாரியை அவரின் குடும்பத்தோடு சேர்த்து வைக்கும்படி உலகத் தமிழர்களின் பிரார்த்தனை கடிதங்கள், வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஓராண்டு தேடுதலின் பயனாக அவரின் குடும்பத்தினர் வசிக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். வவுனியாவைச் சேர்ந்த சில நலன்விரும்பிகள் எமது வேண்டுகோளை ஏற்று வலைவீசித் தேடியதில் நந்தகுமாரியின் சகோதரி குடும்பம் கண்டு பிடிக்கப்பட்டது.
பரமேஸ்வரி தன் கணவர்,
குழந்தையுடன்- (வவுனியா)
அக்கா பரமேஸ்வரியிடம் வேலூரில் வசிக்கும் நந்தகுமாரி பற்றிச் சொன்னதும் அவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். நந்தகுமாரியின் தொடர்பு எண் கொடுக்கப்பட்டதும் அவர்கள் அப்போதே நந்தகுமாரியுடன் பேசி இருக்கிறார்கள். 23 வருடங்களாக எந்தத் தொடர்பும் இல்லாதிருந்த சகோதரிகள் அக்கா! என்றும் தங்கச்சி! என்றும் பாசம் பொங்கி வழிய வார்த்தைகள் பாதி, அழுகை பாதி சிரிப்பு மீதி என பேசி முடித்தனர். இதை நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கண் கலங்கிப் போயினராம். குடும்பப் பாசம் என்றால் அது இது தான் என்றார் நேரில் பார்த்து கண்கலங்கிய ஒருவர். இருவருக்கும் இடையே 23 ஆண்டுகளாக தொடர்பே அற்றுப் போயிருந்ததாலும் நந்தகுமாரி பிரிந்தபோது அவருக்கு எட்டு வயது என்பதாலும் இரு தரப்பினருமே காணாமல் போய் விட்டது போலவே கருதி ஏறக்குறைய மறந்து விட்டிருந்த நிலையில், இருவருமே குடும்பமும் குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியான ஆனந்த அதிர்ச்சியாக அது இருந்திருக்கும்!

பின்னர் நாம் முகாமில் உள்ள நந்தகுமாரியுடன் தொடர் கொண்டு பேசினோம். தன் மகிழ்ச்சினை எம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

"நான் என் உறவுகள் அனைவரும் 90 ஆம் ஆண்டு சண்டையில் இறந்து போயிருப்பார்கள் என்றுதான் இதுவரை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கர்த்தர் எங்களை கைவிடவில்லை.

அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள். என் அம்மா இறந்து விட்டதாக அக்கா பரமேஸ்வரி சொன்னார். அதுதான் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா என்னைப் பார்க்காமலேயே போய்விட்டார். அக்கா நந்தினி கண்டியில் திருமணம் முடித்து வசிக்கிறாராம். தம்பி ஆனந்தராஜூம் வவுனியாவில் இருக்கிறாராம். இன்னும் ஓரிரு நாளில் அவர்களோடும் பேசிவிடுவேன்" என்று மகிழ்ச்சியோடு பேசும் நந்தகுமாரியிடம் நீங்கள் இப்போது இலங்கை வரலாமே என்று கேட்டோம்.

"தாய் நாட்டிற்கு வர யாருக்குத்தான் ஆசை இருக்காது! ஆனாலும் இங்கே முகாமில் எமக்கு எல்லா வசதிகளும் செய்து தந்திருக்கிறார்கள். முக்கியமாக எமது பிள்ளைகளின் கல்விக்காக இங்கேயே இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எங்களின் கடைசி காலத்தை எமது சொந்த மண்ணில் கழிக்கவே விரும்புகிறேன்" என்ற நந்தகுமாரி வானவில்லுக்கு தொடர்ந்து நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். வவுனியா சென்று தேடிக் கண்டு பிடித்தவர்களுக்கும் 'அல்லேலுயா விலேஜ் சர்ச்' ரவிச்சந்திரன் அவரது துணைவியார் விஜயகுமாரிக்கும் தமது நன்றிகளை தெரிவித்தார்.

பாஸ்டர் ரவிச்சந்திரன்,விஜயகுமாரி
பாஸ்டர் ரவிச்சந்திரன் வேலூர் மேல்மொனவூர் ஆலயத்தில் பாஸ்டராக இருக்கிறார். வேலூர் முகாம் தமிழர்களின் அபயக்கரமாக இருப்பவர் பாஸ்டர் ரவிச்சந்திரன். அடிக்கடி முகாமுக்குச் சென்று குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக விளங்குகிறார் ரவிச்சந்திரன்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் மனைவி இரத்தினபுரி கஹவத்தை வட்டாபத்தையை பிறப்பிடமாகக் கொண்டவர். அதனால் இந்த மேல்மொனவூர் ஆலயத்துக்கும் முகாமுக்கும் இடையேயான உறவு ரொம்பவும் வலுவாகத்தான் இருக்கிறது.

"நான் முகாம் தமிழர்களை என் உறவினர்களாகத்தான் பார்க்கிறேன். அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமைய நாங்கள் தொடர்ந்தும் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். வானவில் பத்திரிகையாளரோடு ஓராண்டுக்கு முன் முகாமுக்கு சென்றபோது குமாரியின் உறவுகளை கண்டுபிடித்து தருவதாக நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நான் நம்பிக்கை இழந்திருந்தேன். அதன் பிறகு நான் முகாமிற்கு போகும் போதெல்லாம். குமாரி என்னை ஏக்கத்தோடு பார்ப்பார். அவரின் பார்வையில் என் உறவுகள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கி இருக்கும். அது எனக்கும் தர்ம சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் திடீரென்று குமாரியின் உறவுகளை கண்டுபிடித்து விட்டோம் என்று கொழும்பில் இருந்து வந்த செய்தியால் குமாரியை விட நான்தான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன். அப்பாடா இப்போதுதான் என் மனதிற்கு ரொம்பவும் நிம்மதியாக இருக்கிறது!" என்று பெருமூச்சு விடுகிறார் சகோதரி விஜயகுமாரி.

"நமக்கும் சிலோனுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதாக சும்மா காலம் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். என்ன செய்திருக்கிறோம்? முகாம்களில் எவ்வளவோ தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் படித்த திறமையான இளைஞர் யுவதிகள் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசும், இலங்கை அரசும் இணைந்து நல்ல திட்டங்களை வகுக்கலாம். ஏனெனில் இன்றைக்கும் இவர்கள் இலங்கைப் பிரஜைகள்தான். அதோடு இலங்கைக்கு செல்ல விரும்பும் குடும்பங்களுக்கு எப்படிச் செல்வது என்ற வழி முறைகள் தெரியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கைக்கு பயணிப்பது எப்படி என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஆலோசனைகளை தமிழக அரசோ அல்லது இலங்கை அரசோ வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்" என்று தமது கருத்தை முன்வைத்தார் பாஸ்டர் ரவிச்சந்திரன்.

இதனையடுத்து வவுனியா சாந்தசோலையில் வசிக்கும் சாந்தகுமாரியின் அக்காள் பரமேஸ்வரியோடு தொடர்பு கொண்டு பேசினோம்.

"தங்கச்சி உயிரோடு இந்தியாவில் இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்த போது அதை என்னால் நம்ப முடியவில்லை. அதிசயம் ஒன்று பூமியில் இறங்கிய மாதிரி, ஒரு ஷொக் மாதிரி இருந்தது.

என் தங்கச்சிக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே கடந்த 23 வருடங்களை கழித்திருந்தேன். அவ உயிரோடு இருப்பா என்று நாங்கள் கனவில கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவளோடு தொலைபேசியில் பேசியபோது எனக்கு அது கனவு மாதிரி இருந்தது. அந்த உணர்வுகளை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விரைவில் அவளை நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன" என்று கூறி தமது மகிழ்ச்சியை வண்ண வானவில்லுடன் பகிர்ந்து  கொண்டார் பரமேஸ்வரி.

நந்தகுமாரியின் உறவுகளைத்தேட வண்ண வானவில்லோடு கரம் சேர்த்தவர்களில் வவுனியா மாரம்பைகுளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ராமச்சந்திரன், கருப்பனிச்சான்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ரஞ்சன், மாரம்பைகுளத்தை சேர்ந்தவரும், நொச்சிக்குளம், கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் க. ஜெயக்குமார் ஆகியோருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நந்தகுமாரிக்கு அகதி என்ற அந்தஸ்துடன் விசா பெற்று இலங்கைக்கு வந்து திரும்பவும் தமிழகம் செல்ல முடியாது என்பதால் பரமேஸ்வரி குடும்பத்தினர் விரைவிலேயே தமிழகம் சென்று தங்கையை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. அந்த சந்திப்பையும் அவர்கள் விரும்பினால் வானவில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

No comments:

Post a Comment