Tuesday, November 19, 2013

மெகா சலவைத் தோட்டம்

பெரடைஸ் பிளேஸ் சலவைத் தோட்டம்


மணி  ஸ்ரீகாந்தன்

உலக அதிசயங்களில் ஒன்றான பாலிலோனின் தொங்கும் தோட்டம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் வண்ண வண்ண துணிகள் வரிசையாய் அணிவகுத்து கொடியில் தொங்கும் சலவைத் தோட்டம் பார்த்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு மெகா சலவைத் தோட்டம் அமைந்திருக்கிறது கொழும்பு ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸில்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இச்சலவைத் தோட்டம் நூறு ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகத்தான் இருக்கிறது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இத் தோட்டத்தில் சுமார் 125 குடும்பங்கள் வசிக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் துணிகள் கொடியில் தொங்கி கொண்டிருக்க... வரிசையில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் இறங்கி ஆண்கள் துணிகளை துவைத்து புழிந்து கொண்டிருக்க, பிழியப்பட்ட துணிகளை கொடியில் காயப் போடுவது, காய்ந்த துணிகளை எடுத்து அயன் பண்ணி அடுக்குவதுமாக எப்போதும் பரபரப்பாக இருக்கிறது சலவைத் தோட்டம். இந்த பெரடைஸ் பிளேஸிற்கு காளியும் முனியப்பரும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
 "முனியப்பர்தான் எங்களுக்கு வெள்ளாவிசாமி. அந்தக் காலத்துல வெள்ளாவி வச்சு துணிகளை வெளுக்கும் போது வருடந்தோறும் முனிக்கு ஒரு பலி கொடுக்கனும். ஆனா இப்போ வெள்ளாவி இல்லை... ஆனால் முனியப்பருக்கு கொடுக்கும் பலியும் பூஜையும் மட்டும் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார் நாம் சந்தித்த ஒரு சலவைக்காரர்.

சரி, டோபி மார்க் என்று சொல்வார்களே, ஞாபகம் இருக்கிறதா? செங்கொட்டை என்ற வித்தில் உள்ள பாலை ஊசியால் குத்தி எடுத்து துணியில் அடையாளம் போடுவார்கள். இந்த செங்கொட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி வந்தன. இன்று செங்கொட்டையை இவர்கள் உபயோகிப்பது இல்லை. மார்க்கர் பேனாவில்தான் மார்க் பண்ணுகிறார்கள்.

"என் தாத்தா பாட்டன் காலத்தில் கை ரிக்ஷாவில துணி மூட்டைகளை அடுக்கி இழுத்துச் சென்றார்கள். ஆனா இப்போது ரிக்ஷா போய் ஆட்டோ வந்து விட்டது. துணி மூட்டைகளை சுமந்து செல்லும் கழுதை வளர்க்கும் வண்ணான் முறை இலங்கையில் இருந்ததில்லை. அது இந்தியாவில் தான் இருந்ததாம் என்று எமக்கு விளக்கம் தந்தார் பெரடைஸ் பிளேசின் சலவை தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துசாமி.

"இன்னும் பதினைந்து, இருபது வருடங்களில் இப்படி ஒரு தோட்டத்தை நீங்கள் பார்க்க முடியாது. எமது இளைய தலைமுறை இந்தத் தொழிலை விரும்பவில்லை. சலவை தோட்டத்தின் கடைசி தொழிலாளர்கள் நாங்கள் மட்டும்தான்" என்று அடித்து சொல்கிறார் முத்துசாமி.
இதே போன்ற ஒரு சலவைத் தோட்டம் அலரி மாளிகைக்குப் பின்னால் முன்னர் அமைந்திருந்தது. அது இப்போது அங்கில்லை. இங்கும் ஒரு குடியிருப்புத் திட்டத்தை கொழும்பு மாநகரசபை கொண்டு வந்திருக்கிறது. இக்குடியிருப்புத் திட்டம் இந்த சலவைத் தோட்டத்தை விழுங்கி விடும் என்ற அச்சம் இங்குள்ளவர்கள் மத்தியில் உள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இருந்து இங்கே ஆயிரக்கணக்கான துணிகள் சலவைக்கு வருகின்றன. ஆனால் ஆஸ்பத்திரி துணிகள் வருவதில்லையாம். கப்பல் துணி மணிகள், தொகையாக இறக்குமதியாகும் பயன்படுத்திய ஆடைகள், லொன்ட்ரிகளில் இருந்து வரும் ஓடர்கள் என்பன இவர்களின் பிரதான வருமான வழிகள். ஒருவர் மாதம் 35 ஆயிரம் ரூபா வரை சம்பாதிக்க முடியும். சிலர் ஆள் நியமித்து வேலை செய்கிறார்கள். பலர் பழகி விட்டோம். அதனால் இதையே தொழிலாக செய்கிறோம் என்கிறார்கள்.

பெரடைஸ் சலவைத் தோட்டத்துக்குள் சென்றால், அது ஒரு தனி உலகம்!

சேங்கொட்டை மரம்

செங்கொட்டை, சேங்கொட்டை, சேராங்கொட்டை என இம் மரத்தை அழைக்கிறார்கள். கஜூ பழத்தைப் போலவே இதன் கொட்டையும் வெளிப்புறமாகவே அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் : Marking nut
தாவரவியல் பெயர் : Semecarpns Cinacardumlin
இந்தியா, மலேசியா நாடுகளில் செழித்து வளரும் மரம்Sunday, November 17, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -3

உணவு தேவைக்கு கேரளா தமிழகத்தை நம்பியிருப்பது ஏன்?


மணி  ஸ்ரீகாந்தன்

ஏறக்குறைய இலங்கையை ஒத்த இயற்கைச் சூழலைக் கொண்ட ஒரு மாநிலமே கேளரா. படித்தவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலம். ஆனால் அரிசி, காய்கறிகளுக்கு இது தமிழகத்தையே நம்பியே உள்ளது. இது கொஞ்சம் விசித்திரமானதுதான். இதுபற்றி கேட்டபோது பாபு சொல்லத் தொடங்கினார்.
தோட்ட மாரியம்மன் கோவில்
"அதனாலேயே இன்னமும் கேரள அரசு உணவுத் தேவைகளுக்கு தமிழகத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு காய்கறிகளின் விலை ரொம்பவும் அதிகம். அதனால் நான் தமிழ் நாட்டிற்கு போய்த்தான் காய்கறிகளை வாங்கி வருகிறேன். புனலூருக்கு பக்கத்தில்தான் தமிழ்நாட்டின் தென்காசி எல்லை இருக்கிறது. அதனால் பஸ்சில் நாற்பது ரூபா டிக்கட் எடுத்து தென்காசிக்கு சென்று மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி வருகிறோம். ஆனால் அரிசி மட்டும் கொண்டு வர முடியாது. அரிசி கொண்டு வந்தால் கேரளா எல்லை காவல் படை கைது செய்யும். ஆனாலும் நம் ஆளுங்க கில்லாடிகள் ஆச்சே! அவங்க கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அரிசியைக் கொண்டு வாராங்க.

தன் இல்லத்தின் முன்பாக பாபு
 குறிப்பாக பெண்கள் அரிசியை மடியில் கட்டி முந்தானையில் மறைத்துக் கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டுவந்தால் பொலிஸ்காரர்களுக்கு தெரியாது... நம்ம ஊரில் எப்பவும் தாய்குலத்துக்கு ஒரு மரியாதை இருப்பதால் அவங்களை கண்டுக்க மாட்டாங்க. எங்களைத் துருவித் துருவி பார்த்துத்தான் விடறாங்க... அப்படியும் பெண்களால் இரண்டு கிலோவுக்கு மேல் அரிசி கொண்டு வர முடியாது. மடியில் கட்டி அரிசிப் பொட்டலம் பெரிதாக தெரிந்தால் அது பொலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். அரிசியை கேரளா அரசு இறக்குமதி செய்வதால்தான் நாங்கள் அரிசி கொண்டு போவதை அந்த அரசு தடை செய்கிறது. இது தவிர தமிழகத்தைப் போல் இங்கே இலவச ரி.வி., மின்விசிறி, கேஸ், மூன்று ரூபா, ஐந்து ரூபாயில் பகல் உணவு மலிவு விலை உணவகங்கள் என்று எதுவும் இல்லை. இங்கே உழைத்தால்தான் சாப்பாடு. சும்மா இருந்தா பட்டினிதான்" என்று கேரளா பெருமைகளை விபரிக்கும் பாபு, இன்னொரு உண்மையை சொன்னார்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கேரள கல்வித்தரத்தில் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்கே இருக்கும் பெரும்பாலானோர் கோட் சூட் போட்டு வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். பாத்தி வெட்டி தண்ணீர் கட்டி விவசாயம் பார்க்க விரும்புவதில்லை. அதிலும் முக்கியமாக இவர்களின் உழைப்பு முழுவதும் வெளிநாடுகளுக்கே பயன்படுகிறது. இங்கே மலையாளிகளில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில்தான் வசிக்கிறார். அதை இவர்கள் கௌரவமாகவே கருதுகிறார்கள்.
கேரள தோட்ட வைத்தியசாலை
ஆனால் தமிழகத்தில் அப்படி அல்ல... வெங்காயத்தை கடித்துக் கேப்பை (குரக்கன்) கஞ்சியை குடித்து விட்டு வயலில் இறங்கி விவசாயம் பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் அங்கே உணவு தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் மக்களுக்கு இலவசங்களும் அதிமாகவே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் இலவசங்களை பெற்றுக்கொள்வதற்காக இங்கு கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இடம் வாங்கி அங்கே ஒரு வீட்டையும் கட்டி அதில் தமது வாரிசுகளை குடியமர்த்தி விடுகிறார்கள். ஆனால் நமக்கு அந்த வசதி இல்லீங்க... நம்ம வாழ்க்கை இந்த ஆயிரம் நல்லூரிலதான்" என்று சொல்லும் பாபுவிடம் முல்லை பெரியாறு பிரச்சினையில் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்று கேட்டோம்.

"மலையாளியும், நாங்களும் தாய் பிள்ளைகளாகப் பழகுகிறோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. ஒற்றுமையா இருக்கலாம். இனவாதம் இங்கே கிடையாது. யாரோ ஒரு சிலர்தான் சில இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்றாங்க. எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாதுங்க" என்று கூறி முடித்தார் பாபு. இலங்கை தோட்டத் தொழிலார்களை விட தாம் வசதியாக வளமாகவளமாக இருப்பதாக சொன்னதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே!                            
                                                 (முற்றும்)

ஆயிரம் நல்லூர் எஸ்டேட் கேரளா


ஒருநாள் சம்பளம்                                           - 275 (இந்திய நாணயம்)
வருடத்திற்கு அரசு விடுமுறை                - 14
மருத்துவ விடுமுறை                                    - 30
வருடாந்த ஹொலிடே விடுமுறை       - 15

மருத்துசெலவு, வைத்திய காப்புறுதி    - 2 லட்சம் (இந்திய ரூபாய்கள்)
தீபாவளி முன்பணம்                                      - 14 ஆயிரம் (இ.ரூ)
போனஸ்                                                               - 18 ஆயிரம் (இ.ரூ)
வருடத்திற்கு                                                      - இரண்டு சோடி செருப்பு
ஒருவருக்கு - ஒரு குடை, ஆணாக இருந்தால் சேர்ட், கால்சட்டை காக்கி டிரஸ் இரண்டு சோடி, பெண்ணாக இருந்தால் ப்ளுகலர் சேலை, இரவிக்கை இரண்டு சோடி.


இலங்கை தோட்டங்களில் சம்பளம், சலுகைகள்


ஒரு நாள் சம்பளம் -
வருகை 19 நாட்களாக இருந்தால்                          - ரூ. 450
19 நாட்களுக்கு மேல்வரவு                                         - ரூ. 615
வருடத்திற்கு
போனஸ்                                                                              - 6000
போனஸ்                                                                              - 750
தீபாவளி                                                                               - 4500
முற்பணம் -
சவப்பெட்டிக்கு                                                                 - ரூ.1000

பாபர், டோபி - பெரும்பாலாள தோட்டங்களில்
சுத்திகரிப்பாளர் - இல்லை
தேயிலை - இலவசம் (அரைகிலோ)
பாக்கட்
வருடத்திற்கு - இரண்டு கிலோ
சுண்ணாம்பு பக்கெட்

face பக்கம்


Saturday, November 16, 2013

சினிமானந்தா பதில்கள்-07

'ராஜா ராணி' டைரக்டர் அட்லி பார்வைக்கு கடற்கரையில் கடலை விக்கிற பையன் மாதிரி இருக்காரே? அவரை நம்பி தயாரிப்பாளர் எப்படி இவ்வளவு பெரிய படத்தைக் கொடுத்தார்? என்று என் நண்பி கேட்கிறார்


எஸ். சுகந்தினி,  வவுனியா

ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். டைரக்டர்கள் சினிமா கதாநாயகர்கள் மாதிரி இருக்கமாட்டார்கள், சுந்தர் சி, சேரன் மாதிரி ஒரு சிலரைத் தவிர. கடலை விக்கிற பையன் செட்டில சுறுசுறுப்பாக செஞ்சிருப்பான் உதவி
டைரக்ஷன் வேலையை. அதனால் கிடைச்சிருக்கும் பதவி டைரக்ஷன் பதவி. பாரதிராஜா 16 வயதினிலே எடுக்கும் போது சைக்கிள் கடையில் வேலை செய்யும் பையன் மாதிரித்தான் இருந்தார்.

கடலை விக்கிற பையனுக்குத்தான் கடற்கரைக்கு வரும் காதலர்கள் பற்றித் தெரியும். அந்த அனுபவந்தான் 'ராஜா ராணி' யை தந்திருக்கும்.

பாவனாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களாமே?

 

எஸ். அச்சுதன்,  மட்டக்களப்பு

இணையத்தில் கசிந்த கதை இது. இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்று பாவனா மறுப்பு அறிக்கை விட்டிருக்கிறாரே?

பாவனாவை விட மோசமானதுகள் எல்லாம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் காலம் இது. ஒரு வாய்ப்பு கிடைத்தால் பாவனா இன்னொரு ரவுண்டு வரலாம்.

பாவனாவுக்கு பிடிச்சாத்தானே கல்யாணம்!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் படங்கள் தோல்வியடைய ஆரம்பித்து விட்டனவே!


எம். எஸ். எம். யாசீர், பாலமுனை

சரியாகக் கணித்து விட்டீர்கள்!

விஜய்யின் தலைவா தமிழகத்தில் 5 தியேட்டர்களில் மட்டும் 50 ஆவது நாளாக ஓட்டப்படுகிறது. சூர்யாவின் அடுத்த படம் சிங்கம் 2 மாதிரி வராது. அதனால் சூர்யா ஒரே யோசனையில். கார்த்தி இரண்டு தோல்வி (சகுனி, அலெக்ஸ் பாண்டியன்) யின் பின் அழகு ராஜாவை பெருசா எதிர்பார்க்கிறார். அழகு அசிங்கமானா கார்த்தி அவுட். விக்ரம் திரைக்கு வர 7, 8 மாசம் எடுக்கும். அஜித் ஆரம்பிப்பாரா முடிப்பாரா என்ற நிலை. 'கோச்' மற்றும் விஸ்வரூபம் 2 இரண்டும் ரஜினி கமலுக்கு சோதனைக்களம். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் வெற்றிக் குதிரைகள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இப்படியே போனா....

சிவா, சேது மேலே (உயர்மட்டம்)
சூர்யா, விஜய் கீழே (அடித்தட்டு)


சிம்பு - ஹன்சிகாவின் அந்தமாதிரி வீடியோ, யுடியூப்பில் வெளிவந்து இருக்குதாமே? யுடியூப் அட்ரஸ் தாறீங்களா? ப்ளீஸ்


எம். குமார், மஸ்கெலியா

சிம்பு - நயன் படத்தையே இன்னும் பார்த்து முடிக்கல. அதுக்குள்ள
இன்னொன்னா? இணைய வசதி இருந்தா யுடியூப் சும்மாவே வருமே. முதல்ல சிம்பு - நயன் படத்தை பாருங்க

யுடியூப்ல நல்லதையும் பார்க்கலாம்.

எனக்கு மிர்ச்சி சிவாவை ரொம்ப பிடிக்கும். சென்னைக்கு போனால் அவரைச் சந்திக்கலாமா?


கே. கீதாஞ்சலி, இரத்தினபுரி

மிர்ச்சி சிவாவை பார்க்க சென்னைக்கு போகிறீர்களா? உங்கள் சிவாவுக்கு இப்போது ஒரு கவலை. 'யாயா', 'சொன்னா புரியாது' இரண்டும் சரியாக
போகாததால் சென்னை 28 இரண்டாம் பாகத்தை எடுத்து அவரே இயக்கவும் போகிறாராம். போய்ப்பாருங்கள். உங்களுக்கு சின்ன வேடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

பேசாமல் இங்கே ஒரு சிவாவை தேடுங்கள்.


விஜய்க்கு ஜில்லா கை கொடுக்குமா?

விஜய் பிரியன் எஸ். முகுந்தன், மன்னார்

சந்தேகம்தான், ஏற்கனவே 'தலைவா' திரையிடுவதிலேயே சிக்கல். அத்துடன் கேரளா சென்று தேவைப்பட்டவர்களை சந்தித்து கட்சி அமைப்பது பற்றி
ரகசியமாக பேச்சு நடத்தியதாக இணையத்தில் கசிந்துள்ளது. இனியென்ன ஜில்லாவை சுற்றி வேலியடிக்கப் போகிறார்கள்.

ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பப்படி செய்தால்தான் விஜய் தலை தப்பும்


நஸ்ரியா - தொப்புள் விவகாரம் பற்றி...


கே. ராணி,  பதுளை

தொப்புளில் பம்பரம் விட்டு ஆம்லெட் போட்டது அந்தக்காலம். தொப்புளை காட்டாமலே பொலிஸ் வரை புகார் செய்வது இந்தக்காலம். அப்போதைய
நடிகைகள் ஏன் புகார் செய்யவில்லை? அவர்களை யாரும் தூண்டவில்லை. இப்போதைய நடிகைகள் மற்றவர் பேச்சை கேட்டு ஆடுகிறார்கள். ஏற்கனவே ஜீவா தனது படத்தில் இருந்து நஸ்ரியாவை ஒதுக்கிவிட்டார். இது தொடர்ந்தால்....

தமிழ் சினிமா நஸ்ரியாவுக்கு டாட்டா காட்டுகிறது.

Tuesday, November 5, 2013

23 வருடங்களின் பின்னர் பிரிந்தவர் கூடிய அற்புத கதை இது!

"என் குடும்பத்தை யுத்தம் முடித்திருக்கும் என்றே நினைத்திருந்தேன்..."

யுத்தத்தால் பிரிந்த குடும்பம்  வானவில்லால்  இணைந்தது


மணி  ஸ்ரீகாந்தன்

ஆடிக்கலவரம் தொடங்கி இலங்கையின் யுத்த காண்டம் முடிவடையும் வரை புலம்பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த நம் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் இன்னும் தமிழக முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்களின் எதிர்காலம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஏறக்குறைய இந்தியப் பிரஜைகள் போலவே ஆகிவிட்ட அவர்களைத் திருப்பி அனுப்புவதா, இந்தியக் குடியுரிமை வழங்குவதா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.
நந்தகுமாரியின் குடும்பம் - (வேலூர் முகாம்)
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வேலூர் அகதி முகாமுக்கு விசிட் செய்த நாம் அங்கே பார்த்த மற்றும் கேட்டவற்றை கடந்த வருடம் ஜனவரியில் வெளியான வண்ண வானவில் இதழின் 25 ஆம் பக்கத்தில் 'தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள்' என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தோம்.

அதில் நம் மனதை உருக்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தோம். எட்டு வயதில் வவுனியாவிலிருந்து தனது பெரியம்மாவுடன் படகேறி தமிழகத்தில் அகதியாக வந்திறங்கிய நந்தகுமாரியின் கதையை எழுதியிருந்தோம்.

வண்ண வானவில் (ஜனவரி 2012)
கடந்த ஆண்டு வெளியான செய்தி.
சில மாதங்களின் பின் பெரியம்மா இறந்து விட தமிழகத்தில் தனிமரமானார் நந்தகுமாரி. தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். அவருடன் உரையாடிய போது, தனது உடன் பிறப்புகள் வவுனியா சாந்தசோலையில் வசிப்பதாகவும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறிய அவர், உறவினர்களை குறிப்பாகத் தன் சகோதரியைத் தேடித் தரும்படி கண்ணீர் மல்க கேட்டிருந்தார். இந்தத் தகவலை கட்டுரை வடிவில் வானவில்லில் வெளியிட்டோம். அத்தோடு எமது
'ஃபேஸ் புக்' தளத்திலும் வெளியிடப்பட்டு அதிகளவில் 'ஷெயார்' செய்யப்பட்ட செய்தியாகவும் அது முதலிடத்தைப் பிடித்தது. குமாரியை அவரின் குடும்பத்தோடு சேர்த்து வைக்கும்படி உலகத் தமிழர்களின் பிரார்த்தனை கடிதங்கள், வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஓராண்டு தேடுதலின் பயனாக அவரின் குடும்பத்தினர் வசிக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். வவுனியாவைச் சேர்ந்த சில நலன்விரும்பிகள் எமது வேண்டுகோளை ஏற்று வலைவீசித் தேடியதில் நந்தகுமாரியின் சகோதரி குடும்பம் கண்டு பிடிக்கப்பட்டது.
பரமேஸ்வரி தன் கணவர்,
குழந்தையுடன்- (வவுனியா)
அக்கா பரமேஸ்வரியிடம் வேலூரில் வசிக்கும் நந்தகுமாரி பற்றிச் சொன்னதும் அவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். நந்தகுமாரியின் தொடர்பு எண் கொடுக்கப்பட்டதும் அவர்கள் அப்போதே நந்தகுமாரியுடன் பேசி இருக்கிறார்கள். 23 வருடங்களாக எந்தத் தொடர்பும் இல்லாதிருந்த சகோதரிகள் அக்கா! என்றும் தங்கச்சி! என்றும் பாசம் பொங்கி வழிய வார்த்தைகள் பாதி, அழுகை பாதி சிரிப்பு மீதி என பேசி முடித்தனர். இதை நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கண் கலங்கிப் போயினராம். குடும்பப் பாசம் என்றால் அது இது தான் என்றார் நேரில் பார்த்து கண்கலங்கிய ஒருவர். இருவருக்கும் இடையே 23 ஆண்டுகளாக தொடர்பே அற்றுப் போயிருந்ததாலும் நந்தகுமாரி பிரிந்தபோது அவருக்கு எட்டு வயது என்பதாலும் இரு தரப்பினருமே காணாமல் போய் விட்டது போலவே கருதி ஏறக்குறைய மறந்து விட்டிருந்த நிலையில், இருவருமே குடும்பமும் குடித்தனமுமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியான ஆனந்த அதிர்ச்சியாக அது இருந்திருக்கும்!

பின்னர் நாம் முகாமில் உள்ள நந்தகுமாரியுடன் தொடர் கொண்டு பேசினோம். தன் மகிழ்ச்சினை எம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

"நான் என் உறவுகள் அனைவரும் 90 ஆம் ஆண்டு சண்டையில் இறந்து போயிருப்பார்கள் என்றுதான் இதுவரை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கர்த்தர் எங்களை கைவிடவில்லை.

அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள். என் அம்மா இறந்து விட்டதாக அக்கா பரமேஸ்வரி சொன்னார். அதுதான் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா என்னைப் பார்க்காமலேயே போய்விட்டார். அக்கா நந்தினி கண்டியில் திருமணம் முடித்து வசிக்கிறாராம். தம்பி ஆனந்தராஜூம் வவுனியாவில் இருக்கிறாராம். இன்னும் ஓரிரு நாளில் அவர்களோடும் பேசிவிடுவேன்" என்று மகிழ்ச்சியோடு பேசும் நந்தகுமாரியிடம் நீங்கள் இப்போது இலங்கை வரலாமே என்று கேட்டோம்.

"தாய் நாட்டிற்கு வர யாருக்குத்தான் ஆசை இருக்காது! ஆனாலும் இங்கே முகாமில் எமக்கு எல்லா வசதிகளும் செய்து தந்திருக்கிறார்கள். முக்கியமாக எமது பிள்ளைகளின் கல்விக்காக இங்கேயே இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எங்களின் கடைசி காலத்தை எமது சொந்த மண்ணில் கழிக்கவே விரும்புகிறேன்" என்ற நந்தகுமாரி வானவில்லுக்கு தொடர்ந்து நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். வவுனியா சென்று தேடிக் கண்டு பிடித்தவர்களுக்கும் 'அல்லேலுயா விலேஜ் சர்ச்' ரவிச்சந்திரன் அவரது துணைவியார் விஜயகுமாரிக்கும் தமது நன்றிகளை தெரிவித்தார்.

பாஸ்டர் ரவிச்சந்திரன்,விஜயகுமாரி
பாஸ்டர் ரவிச்சந்திரன் வேலூர் மேல்மொனவூர் ஆலயத்தில் பாஸ்டராக இருக்கிறார். வேலூர் முகாம் தமிழர்களின் அபயக்கரமாக இருப்பவர் பாஸ்டர் ரவிச்சந்திரன். அடிக்கடி முகாமுக்குச் சென்று குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக விளங்குகிறார் ரவிச்சந்திரன்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் மனைவி இரத்தினபுரி கஹவத்தை வட்டாபத்தையை பிறப்பிடமாகக் கொண்டவர். அதனால் இந்த மேல்மொனவூர் ஆலயத்துக்கும் முகாமுக்கும் இடையேயான உறவு ரொம்பவும் வலுவாகத்தான் இருக்கிறது.

"நான் முகாம் தமிழர்களை என் உறவினர்களாகத்தான் பார்க்கிறேன். அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமைய நாங்கள் தொடர்ந்தும் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். வானவில் பத்திரிகையாளரோடு ஓராண்டுக்கு முன் முகாமுக்கு சென்றபோது குமாரியின் உறவுகளை கண்டுபிடித்து தருவதாக நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நான் நம்பிக்கை இழந்திருந்தேன். அதன் பிறகு நான் முகாமிற்கு போகும் போதெல்லாம். குமாரி என்னை ஏக்கத்தோடு பார்ப்பார். அவரின் பார்வையில் என் உறவுகள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கி இருக்கும். அது எனக்கும் தர்ம சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் திடீரென்று குமாரியின் உறவுகளை கண்டுபிடித்து விட்டோம் என்று கொழும்பில் இருந்து வந்த செய்தியால் குமாரியை விட நான்தான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன். அப்பாடா இப்போதுதான் என் மனதிற்கு ரொம்பவும் நிம்மதியாக இருக்கிறது!" என்று பெருமூச்சு விடுகிறார் சகோதரி விஜயகுமாரி.

"நமக்கும் சிலோனுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதாக சும்மா காலம் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். என்ன செய்திருக்கிறோம்? முகாம்களில் எவ்வளவோ தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் படித்த திறமையான இளைஞர் யுவதிகள் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசும், இலங்கை அரசும் இணைந்து நல்ல திட்டங்களை வகுக்கலாம். ஏனெனில் இன்றைக்கும் இவர்கள் இலங்கைப் பிரஜைகள்தான். அதோடு இலங்கைக்கு செல்ல விரும்பும் குடும்பங்களுக்கு எப்படிச் செல்வது என்ற வழி முறைகள் தெரியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கைக்கு பயணிப்பது எப்படி என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஆலோசனைகளை தமிழக அரசோ அல்லது இலங்கை அரசோ வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்" என்று தமது கருத்தை முன்வைத்தார் பாஸ்டர் ரவிச்சந்திரன்.

இதனையடுத்து வவுனியா சாந்தசோலையில் வசிக்கும் சாந்தகுமாரியின் அக்காள் பரமேஸ்வரியோடு தொடர்பு கொண்டு பேசினோம்.

"தங்கச்சி உயிரோடு இந்தியாவில் இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்த போது அதை என்னால் நம்ப முடியவில்லை. அதிசயம் ஒன்று பூமியில் இறங்கிய மாதிரி, ஒரு ஷொக் மாதிரி இருந்தது.

என் தங்கச்சிக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே கடந்த 23 வருடங்களை கழித்திருந்தேன். அவ உயிரோடு இருப்பா என்று நாங்கள் கனவில கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவளோடு தொலைபேசியில் பேசியபோது எனக்கு அது கனவு மாதிரி இருந்தது. அந்த உணர்வுகளை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விரைவில் அவளை நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன" என்று கூறி தமது மகிழ்ச்சியை வண்ண வானவில்லுடன் பகிர்ந்து  கொண்டார் பரமேஸ்வரி.

நந்தகுமாரியின் உறவுகளைத்தேட வண்ண வானவில்லோடு கரம் சேர்த்தவர்களில் வவுனியா மாரம்பைகுளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ராமச்சந்திரன், கருப்பனிச்சான்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ரஞ்சன், மாரம்பைகுளத்தை சேர்ந்தவரும், நொச்சிக்குளம், கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் க. ஜெயக்குமார் ஆகியோருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நந்தகுமாரிக்கு அகதி என்ற அந்தஸ்துடன் விசா பெற்று இலங்கைக்கு வந்து திரும்பவும் தமிழகம் செல்ல முடியாது என்பதால் பரமேஸ்வரி குடும்பத்தினர் விரைவிலேயே தமிழகம் சென்று தங்கையை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. அந்த சந்திப்பையும் அவர்கள் விரும்பினால் வானவில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.