Wednesday, October 9, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -1

மணி  ஸ்ரீகாந்தன்

கருப்பையா பாபு கஹவத்த பொறனுவ தோட்டத்தில் வசித்தவர். எண்பதுகளில் தமிழகம் திரும்பியவர். கேரள தோட்டமொன்றில் வேலை செய்து வருபவர். இப்போது கேரள குடிமகனாக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் அவர் கேரள தோட்டத்து வாழ்க்கையைப் பற்றி இங்கே பேசுகிறார். இந்தியத் தோட்டங்களின் நிலை மோசம் என்பது நமது பொதுவான அபிப்பிராயம். ஆனால் அவர் சொல்லும் கதை வேறு மாதிரி இருக்கிறது.


பஞ்சம் பிழைக்க பலநூறு கிலோ மீட்டர்கள் கடந்து தென்னிந்தியாவிலிருந்து
கண்டி
சீமைக்கு வந்த மலைநாட்டு தமிழர்களின் கண்ணீர் கதை அனைவரும் அறிந்த வரலாறு.  இன்றும் மலையக மக்களில் பெரும்பாலானோர் தோட்ட வாழ்க்கையிலேயே அமிழ்ந்து போயிருப்பதையும் தம் இந்திய உறவுகளின் தொடர்பில்லாமல் வாழ்ந்து வருவதையும் காண்கிறோம்.
மலையகத்தின் மூதாதையர் பொன்தேடி இலங்கைக்கு வந்தது போலவே, அவர்கள் இங்குள்ள நிலைமைகளைக் கண்டு வருந்தி இனிமேல் நமக்கு இலங்கையில் பொழுது விடியாது எனத் தீர்மானிக்கவும் செய்தனர்.
இதற்கு வழி வகுத்தது  ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீரும் கம்பலையுமாக 'பொன்' தேடி மீண்டும் தென்னிந்தியாவுக்கு ரயிலேறினர். இது இன்னொரு சோக வரலாறு.

கோட்டை புகையிரத நிலையத்தில் ஒப்பாரி வைத்து அழுது 'ஒப்பாரிக் கோச்சியில்' பயணித்த நம் உறவுகளின் கதையை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.


கருப்பையா பாபு
அந்தக் காலத்தில் அதாவது அறுபது மற்றும் எழுபதுகளில் பிள்ளைக்குட்டிகளோடு தமிழகத்துக்கு பயணமானால் அவங்க கதை அத்தோடு முடிந்த மாதிரித்தான். கடல் தாண்டி போய்விட்டால் திரும்ப அவர்களை சந்திக்கவே வாய்ப்பில்லை என்று முடிவு செய்து விடுவார்கள் உறவினர்கள். அப்போது மலையக மக்கள் நாடற்றவர்களாக இருந்ததால் பாஸ்போர்ட் கிடையாது. தொலைபேசி வசதி பெரும்பாலும் இல்லை. எழுத்தறிவும் குறைவு. தமிழகம் சென்றவர்கள் எப்போதாவது ஒரு ஏயர் மெயில் வாங்கி கடிதம் எழுதினால்தான் உண்டு. இந்தியாவில் இருந்து ஒரு கடிதம் வந்துவிட்டால் அந்தத் தோட்டமே கொண்டாட்டமாகிவிடும்! இலங்கையோடு ஒப்பிடும்போது தமிழகம் அப்போது பின்தங்கித்தான் இருந்தது. இருந்தாலும் இங்கிருப்போருக்கு மீசையில் மண் ஒட்டுவதேயில்லை.

ஆனால் இப்போது நிலைமைகள் முற்றாக மாறி விட்டது. யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்கு செல்லலாம், அங்கிருப்போர் இங்கே வரலாம். கைபேசியில் இந்திய உறவுகளோடு தொடர்புகொள்ளலாம். அன்றைக்கு அப்படி ஒரு காலம் இருந்ததா என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது.

இப்படி தமிழகம் சென்றவர்தான் கருப்பையா பாபு. இன்று கேரளாவில் ஒரு இறப்பர் தோட்டத்தில் வேலை செய்கிறார். இனி அவருடன் பேசுங்கள்.
இவர் எண்பதுகளில் தாயகம் திரும்பி கேரளா ஆயிரம் நல்லூர் எஸ்டேட்டில் குடியேறி இருக்கிறார். தமது உறவினர்களை சந்திக்க கஹவத்தை பொறனுவ எஸ்டேட்டுக்கு வந்த  அவரை சந்தித்து தாயகம் திரும்பிய கதையைக் கேட்டோம். பாபுவின் பேச்சில் மலையாள வாடை வீசுகிறது.  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தமிழ்.
"மலையாளம் கொரச்சி கொரச்சி அறியுமோ " என்று நமக்கு தெரிந்த மலையாளத்தில் கேட்டு மலையாளம் கொஞ்சம் வரும் என்று பீற்றிக்கொண்டோம்.
"எனெக்கி மலையாளம் அறியாம். யான் கேரளத்திலுள்ள ஒரு மலையாள பெண்ணியான விவாகம் செய்து கொண்டது. மலையாளத்தில் நான் திருமணம் முடித்தது" என்றார் கருப்பையா பாபு, பின்னர் சுத்தத் தமிழில் எங்களுடன் உரையாடினார்.

"நம் தாய் மொழிய மறக்க முடியுங்களா? எங்க தாத்தா பெத்தையா அந்த காலத்துல தமிழ்நாட்டில் இருந்து வேலையாட்கள இலங்கைக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிறாரு. தோட்டத்தில் பெரிய கங்காணி அவருதான். பதுளை கும்பாவள தோட்டத்தில் வேலை பார்த்தவர். அதுக்குப் பிறகு எங்க குடும்பம் பொறனுவ எஸ்டேட்டுக்கு குடிவந்துடாங்க. இங்கே வந்த எங்கப்பா நிறைய பேரை அழைச்சிட்டு வந்து தோட்டத்தில வேலை வாங்கி கொடுத்திருக்காரு. அதனால் எங்க குடும்பத்தின் மீது இந்த தோட்டத்து ஆளுங்க ரொம்பவும் மரியாதை வச்சிருக்காங்க. எழுபத்தேழாம் ஆண்டு கலவரம்தான் எங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. புள்ளக்குட்டிகள தூக்கிட்டு தேயிலை செடிகளுக்குள் இரண்டு நாளா ஒளிந்திருந்ததை மறக்க முடியுங்களா...?" என்று பெருமூச்சோடு  கதையை நிறுத்தியவரிடம்... அப்புறம் எப்படி கேரளாவிற்கு சென்றீர்கள்...? என்றோம்.
எழுபத்தேழு கலவர நினைவுகளை களைத்துவிட்டு "எங்கப்பா கருப்பையா நம்ம ஊருக்கு போயிடலாம்னு முடிவு எடுத்தார். அவரு முடிவு எடுத்தா யாரும் தட்டிப்பேச மாட்டாங்க அதனால எண்பதுகளில் தாயகம் நோக்கி புறப்பட தயாரானோம். அந்தக்காலத்துல ஊரைவிட்டு போறதுன்னா வீடு வீடாக சென்று எல்லோரையும் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். அப்படித்தான் நாங்களும் வீடு வீடாகச் சென்று கும்பிட்டு வந்தோம். அப்போ மேற்கணக்கில் கந்தையாவையும் சந்தித்து கும்பிட்டேன்.
"உனக்கு கொடுப்பினை இருக்கு பாபு... தாயகத்துக்கு போற... நமக்கு இதுதான் கதி" என்று விரக்தியோடு பேசினார். அன்று மாலை ஊர் சனமே மாரியம்மா கோவிலில் கூடி சாமிக்கு படையல் போட்டு பூசை வச்சி கண்ணீரும் கம்பலையுமா எங்களை வழி அனுப்பி வச்சாங்க. சில நண்பர்கள் கொழும்பு புகையிரத நிலையம் வரை வந்து வழி அனுப்பினார்கள்.

இந்த கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த ஒரு விசயத்தை உங்ககிட்டே சொல்லணும்... தலைமன்னார் கோச்சிக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களைப் போல் நூற்றுக்கணக்கான தமிழ்  குடும்பங்களும் அங்கே அமர்ந்து இருந்தார்கள்... ரயில் வரப்போவதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கியில் வந்த அடுத்த நிமிஷமே "அய்யோ... போறியா சாமீ..." என்ற ஒப்பாரி சத்தம் ரயில்வே ஸ்டேஷனை கலங்கடிக்க ஆரம்பித்தது. அந்த கால சினிமாவில் வந்த அறிமுகப் பாடல் போல அந்த ஒப்பாரி சத்தத்தோடு தலைமன்னார் ரயில் கோட்டைக்குள் புகுந்தது... நானும் நண்பர்களை விட்டு பிரிந்து போவதை நினைத்து அழுதுகொண்டே ரயிலில் ஏறி அமர்ந்தேன். பிறகு சில நிமிடங்களில் ரயில் புறப்பட மீண்டும் ஒப்பாரி சத்தம்! ஊரையும், உறவையும் விட்டு பிரிவது என்பது சும்மாவா? அந்த ஒப்பாரி சத்தம் ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகும்  என் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
பிறகு தலைமன்னாரில் இருந்து ராமானுஜம் கப்பல் மூலமாக கடலைக் கடந்தோம்... நீண்ட நேர பயணத்திற்கு பிறகு கடலின் நடுப்பகுதியை கப்பல் தொட்டப்போது அரோகரா... என்று பயணிகள் சத்தம் போட்டார்கள். என்னடா இது கப்பலில் சாமி கும்பிட- ஆரம்பிச்சு விட்டார்களோ? என்று சத்தம் வந்தப் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

கடலை நோக்கியவாறே நம்ப ஆளுங்க தலை மேல் கையைத் தூக்கி வச்சி கும்பிட்டவாரே கோசம் போட்டாங்க. நானும் போய் எட்டிப்பார்த்தேன். ராமேஸ்வரம் கோபுரம் தூரத்தில் மங்களாக தெரிந்தது... எனக்கு அப்போது கண் கலங்கி விட்டது. ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர். மறுபக்கம் சிலோனை விட்டு வந்துட்டோமே என்ற வருத்தம்தான்... கப்பலில் இருந்து இறங்கினோம். கீழே ஒரு சிறிய படகு தண்ணீரில் ஆடிக்கொண்டிருந்தது. ரொம்பவும் கவனமாக காலெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால் கப்பலுக்கும் படகுக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்துவிடுவோம். வயதானவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். சிறிது தூர படகு பயணத்தை முடித்து தாயக மண்ணில் கால் பதிக்க இறங்கினேன். "பார்த்து இறங்குங்க... பைய குடுப்பா" என்று ஒரு பரீட்சயமான குரல் கேட்க திடுக்கிட்டுப் பார்த்தேன். அங்கே பொறனுவ மேக்கணக்கு கந்தையா முகமெல்லாம் பல்லாய் சிரிக்க கீழே நின்றுகொண்டு எங்களை வரவேற்றார்.

"என்ன கந்தையா நீ எப்படி இங்கே?" என்று நான் ஆச்சர்யமாக கேட்க,  "அட நீ பயணம் சொல்லி போனபிறகு நமக்கு அங்க இருக்கவே புடிக்கலப்பா... அதுதான் அப்பவே இரத்தினபுரிக்கு போயி பாஸ்போர்ட் வாங்கி இரவோட இரவா புள்ளக்குட்டிகளை கூட்டிட்டு ஓடிவந்துட்டேன்" என்றார் கந்தையா.
"கந்தையாவுக்கு அங்கே ஏகப்பட்ட கடன். அதுதான் இப்படி திடீர்னு யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கான்" என்று என் அப்பா என் காதில் குசுகுசுத்தார்.
மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு மண்டபம் நோக்கி நான் அம்மா. அப்பா, சகோதரர்கள் என எட்டுப்பேர் கொண்ட எங்கள் குடும்பத்தினர் அந்த சுடுமணலில் நடந்தோம். 'இந்தியாவில ஆசைக்கு பாக்கு உடைக்க ஒரு கல்லு கிடைக்காதுங்க' என்று நம்ப பெருசுங்க சொன்னது உண்மைதான். அங்கே நான் ஆசைக்கு ஒரு கல்லைக்கூட பார்க்கலை...' என்று சொல்லும் பாபுவிற்கு இப்போ 53 வயதாகிறது. தமது இருபதாவது வயதில் இந்தியா சென்றிருக்கிறார். மண்டபத்தில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர்         வெவ்வேறு இடங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
"மண்டபத்தில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு போகும் வரைதான் கந்தையா எங்களுடன் இருந்தார். அதன் பின் அவர் எங்கே போனாரோ தெரியவில்லை" என்றார் பாபு.

தொடரும்…


No comments:

Post a Comment