Thursday, October 31, 2013

கற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்

மணி  ஸ்ரீகாந்தன்

கல்கண்டு பெயரை உச்சரிக்கும் போதே நாவில் நீர் சுரக்கிறதா...? இனிப்பு வகைகளில் ஜாங்கிரி, லட்டு, பூந்தி, பால்கோவா, குலாப்ஜாம் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு மார்க்கட்டில் பெரியமவுசும், அதை வீட்டுக்கு வாங்கிக் செல்வதில் நமக்கு ஒரு பவுசும் இருந்தாலும், அவை இனிப்புப் பலகார வகைகளில் ஒன்றாகவே சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் 'கல்கண்டு' அப்படி அல்ல அதற்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது.
ஏனெனில் அது வெறும் இனிப்புப் பண்டம் மட்டுமல்ல. நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய பண்டம் அது. வீட்டு விஷேசமா, பூஜையா... கல்கண்டு இல்லாத ஒரு தாம்பூலத் தட்டை நம்மால் பார்க்க முடியாது. அந்தளவிற்கு நமக்கும் கல்கண்டுக்கும் ஒரு நீண்ட கால பிரிக்க முடியாத உறவு இருக்கிறது.
"தமிழர் கலாசாரத்துக்குரிய சுபகாரியங்களின் அடையாளம் கல்கண்டுதான். நல்ல செய்தி சொல்வதற்கு முன் முதலில் கல்கண்டைதான வாயில் போடுவார்கள்" என்று கல்கண்டின் பெருமைகளை அடுக்குகிறார் ராஜமணி. இவர் கொழும்பு கொள்ளுபிட்டி முகாந்திரம் ஒழுங்கையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக கல்கண்டு வியாபாரம் செய்து வருபவர்.

"என் அப்பா ராஜமணி நாடார் நாற்பதுகளில் திருநெல்வேலியிலிருந்து பிழைப்புக்காக கொழும்பு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் புடவை வியாபாரம் செய்திருக்கிறார். புடவை பொட்டணியை தலையில் சுமந்து வீடு வீடாக சென்று விற்பனை செய்து கொண்டிருந்த போதுதான். இரண்டாம் உலகப் போர் தொடங்கி இருக்கிறது. இலங்கையை ஜப்பான் இராணுவம் தாக்கப் போவதாக பேச்சு கிளம்பி மக்கள் பயந்து கிடந்த வேளையில் ஜப்பானிய விமானங்கள் கொழும்பு, கொக்கல் மற்றும் திருகோணமலையில் குண்டு வீசிக் சென்றன. சரிதான், கொழும்பு யுத்த பூமியாக மாறப்போவதாக நம்பிய மக்கள் போட்டது போட்டபடி கிடக்க, கொழும்பை விட்டு வேகமாக வெளியேற ஆரம்பித்தார்கள்.
கொழும்பையும் அதன் சுற்று வட்டாரத்திலும் வசித்த மக்கள் மூட்டை முடிச்சுகளோடு வீடுகளையும், வியாபார நிலையங்களையும் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கலாம். புடவையை தூக்கி கொண்டு முகாந்திரம் லேனுக்கு போன அப்பாவுக்கு அதிர்ச்சி! வீடுகள் திறந்தபடி கிடக்க ஆள் அரவமின்றி கிடக்கிறது. முகாந்திரம் லேன். அப்பாவுக்கு தங்குவதற்கு இடமில்லாததால் அங்கே திறந்து கிடந்த ஒரு வீட்டில் குடியேறியிருக்கிறார். அதன் பின்னர் கல்கண்டு வியாபாரத்தை எப்படி எப்போதும் தொடங்கினார் என்பதை ராஜமணியிடம் கேட்டோம்.
"திருநெல்வேலி என்றால் அங்கே பனை மரம்தான் ஸ்பெஷல். அதனால் அங்குள்ள வீடுகளில் பனங் கல்கண்டு செய்வது சாதாரண விசயம். அப்பாவுக்கும் அந்த வித்தை தெரிந்திருக்கிறது.
அப்போது இலங்கைக்கு பெல்ஜியத்திலிருந்து கல்கண்டு இறக்குமதி செய்து வந்தார்கள். எனவே சொந்தமாகவே கல்கண்டை  தயார் செய்து விற்பனை செய்யும் ஐடியா அப்பாவுக்கு வந்திருக்கிறது.
முதல் தடவையாக ஒரு கிலோ சீனியை வாங்கி காய்ச்சி கல்கண்டு செய்து அவருக்குத் தெரிந்த கடைகளுக்கு கொடுத்திருக்கிறார். கல்கண்டை பார்த்த அப்பாவின் நாடார் நண்பர்கள் கல்கண்டு நன்றாக இருக்கிறது. நிறைய செய் என்று சொல்லி 50 இறாத்தல் சீனியை கொடுத்திருக்கிறார்கள். அப்படி தொடங்கியதுதான் அவரின் வியாபாரம். சில நாட்களின் பின் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர வீட்டை விட்டுப் போனவர்கள்  திரும்பி வந்திருக்கிறார்கள். அப்பாவை பார்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பாவை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டதால் அவருக்கு அதே வீட்டில் இடமும் கொடுத்திருக்கிறார்கள். அப்பாவுக்கு அந்த வீட்டில் இருந்த ஜெயசீலியையும் பிடித்திருக்கிறது. பிறகு பெரிய போராட்டத்திற்கு மத்தியில் அப்பா ஜெயசீலியை கரம்பிடித்து, முகாந்திரம் லேனில் ஒரு வீட்டையும் சொந்தமாக வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில்தான் அவருக்கு பிறகு நான் இந்த தொழில் செய்து வருகிறேன்"

என்று சொல்லும் ராஜமணிக்கு தற்போது 53 வயதாகிறது. அவரின் மகளும், மகனும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். கல்கண்டு வியாபாரத்தை இவருக்குப் பிறகு தொடர அவர்கள் தயாராக இல்லை. எனவே தன்னோடு தன் அப்பா கட்டி வளர்த்த கல்கண்டு வர்த்தகம் முடிவுக்கு வந்து விடுமே என்ற கவலை ராஜமணியிடம் இருக்கிறது.

இந்த கடுகதி வேகத்தில் பறக்கும் "ஐடி, ஐடெக் காலத்தில் இந்த சீனியை காய்ச்சி எட்டு நாள் காய வைத்து பிறகு அந்த சீனிப் பானங்களை எடுத்து உடைந்து பைக்கட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய யாரும் தயாராக இல்லை. ஆரம்பத்தில் ஐந்து கிலோ பெட்டிகள் ஒன்பதாயிரம் வரை விற்பனையாகியது. ஆனால் இன்று ஆயிரம் பெட்டிகள் கூட விற்பனையாவதில்லை.

செய்த வியாபாரத்தை கை விட முடியாது என்பதற்காக விடாப்பிடியாக செய்து வருகிறேன். இன்றைக்கு நான் கொழும்பில் வசதியாக வாழ்வதற்கு இந்தக் கல்கண்டு வியாபாரம் தான் காரணம். அதை மறக்க முடியுமா?... என்று சொல்லும் ராஜமணியிடம் கல்கண்டின் முக்கிய பயன்பாடுதான் என்ன? என்று வினவினோம்.

"சீனியை ஒரு துளிப் போட்டு காய்ச்சினால் அது நுரைந்து பெருகிப் பெருகி கல்கண்டு அதிகரித்துக் கொண்டே போகும். இனிமையான ஒரு பொருள் பெருகிப் பெருகி வருகிறது என்பது ஒரு நல்ல சகுனமாகவும் விருத்தியைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே அது மாதிரிதான்... அதனால்தான் கல்கண்டை சுப காரியங்களில் ஒரு பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். குழந்தை பிறந்தால் கல்கண்டு கொடுப்பார்கள். திருமணத்தில் வாசலிலேயே கல்கண்டு வைத்திருப்பார்கள். கல்கண்டு பிரசாதம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வரவேற்பு வைபவங்களில் கல்கண்டு இடம்பெறுகிறது. சர்க்கரை சோறுக்கு மாற்றாக கற்கண்டு சாதம் தயாரிக்கும் வழக்கமும் உண்டு. மேலும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஜெம் கல்கண்டு (வைர வடிவில்) இறக்குமதி செய்யப்பட்டாலும். நம்மிடம் மட்டுமே இயற்கையாக விளைந்த கல்கண்டுகள் கிடைக்கிறது. இதை வாயில் போட்டால் உடனே கரைந்து விடாது நீண்ட நேரம் இனிப்பு நாவில் கலந்திருக்கும் என்கிறார்.

Tuesday, October 22, 2013

அடேங்கப்பா..! -02

அன்றும் இன்றும் -  மணி ஸ்ரீகாந்தன்யாழ் குடாநாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 1899ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படத்தின் ஆரம்பகாலத் தோற்றத்தை முதலாவது படத்திலும், தற்போதைய தோற்றத்தை இரண்டாவது படத்திலும் காணலாம்.

அடேங்கப்பா..! -01

அன்றும்  இன்றும்  -  மணி  ஸ்ரீகாந்தன்சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் கோட்டை கார்கில்ஸ் கட்டடம் இருந்தது என்பதை முதல் படத்திலும் அதன் இன்றைய கம்பீரத்தை நான் தற்போது எடுத்த இரண்டாவது படத்திலும் காணலாம். சூழல் மாறினாலும் அதன் கம்பீரம் மட்டும் மாறவில்லை.

Monday, October 21, 2013

சினிமானந்தா பதில்கள்-06

இளையதளபதியின் 'தலைவா' வெற்றிப் படமா? வசூல் எப்படி?

நந்திதா, சாவகச்சேரி

'தலைவா' என்று தலைப்பு போட்டது மட்டுமன்றி 'time to lead' (தலைமை தாங்க சரியான நேரம்) என்று அடைமொழியும் சேர்த்தால் யாருக்குத்தான் வராது?

நான் அண்ணா, என் மகன் எம்.ஜி.ஆர். என்று scs சொன்னால் யாருக்குத்தான் வராது?
ஆளும் தரப்புக்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

அதுதான் தமிழ்நாட்டில் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சர்ச்சைகளுக்கு இடையில் வந்ததால் 'தலைவா' சரியாக போகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு பெருத்த நஷ்டம்.

படத்தின் இயக்குநர் விஜய்க்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதிதான் முதலில் தரப்பட்டது. மீதியை கேட்டு நெருக்கினாராம். 'படம் சரியா போகலையே. பிறகு தருகிறேன்' என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். ஆனால் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டி மீதியை கறந்துவிட்டாராம் இயக்குநர்.

நடிகர் விஜய்க்கு தரவேண்டிய சம்பளம் இன்னும் பாக்கியாக உள்ளது. பெருந்தன்மையுடன் விஜய் அதைக் கேட்காமலே விட்டுவிட்டார். கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையில் தயாரிப்பாளர் இல்லை.

மோசமாக பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னையை விட்டு சொந்த மாநிலமான குஜராத்துக்கு போவதா இல்லையா என்று குழப்பத்தில் இருக்கிறார்.

தலைவா அடங்கிவிட்டான் - மற்றவர்களுக்கும் பாடமாக

நமீதாவுக்கு உடை தெரிவு செய்வது யார்?

எஸ். ராஜேஸ், கண்டி.

சினிமாவாக இருந்தால் ஆடை வடிவமைப்பாளர்
(costume designer)  இயக்குனருடன் கலந்து பேசி தைப்பார். பட்ஜட் படம் (குறைந்த செலவில் எடுக்கும் படம்) என்றால் இயக்குனரே ஏற்பாடு செய்வார். அல்லது நமீதாவின் சொந்த உடைகளையே அணிந்து வரச் சொல்வார்கள். ஆனால் continuity  (காட்சிகளுக்கிடையிலான தொடர்பு) காரணமாக அதை கவனமாக வைத்துக்கொள்ளச் சொல்வார்கள்.

ஆனால் வீட்டிலும் வெளியிலும் நமீதா நினைத்தபடி. அதனால்தான் சின்னப் புள்ள மாதிரி.....

எப்படியும் ஒரு நாள் கூறையில் வந்துதானே ஆகனும்.

வடிவேலு எப்படி இருக்கார்...?

எம். எஸ். ரிஸ்வான், வரக்காப்பொல

சந்தோஷமா இருக்காரு. மதுரைக்காரரு பெரிய திரையில
இல்லன்னாலும் ஆதித்யா, சிரிப்பொலி சனல்களில் அவருக்கு டிமாண்ட் இருக்கு. இல்லாதபோதுதான் அவரோட அருமை தெரியுது. இப்போது toilet ஜோக் காலம் வடிவு வந்தாதான் நினைச்சுச் சிரிக்கலாம்.

ரீ என்டரி shortly

'தலைவா' வில் விஜய்யின் ஜோடி அமலாபால். அடுத்து அவரது ஜோடி யார்?

எம். எஸ். ராஸஹான் பேருவளை.

ஜில்லாவில் காஜல் அகர்வால், அதற்கு அடுத்தது முருகதாஸின் படம். இதில் விஜயுடன் ஜோடி சேர காஜல், நஷ்ரியா, சமந்தா.

குடுமிச்சண்டை  நடக்கிறது

நயன்தாரா முன்னைப்போல அழகா இல்லையே?

நஷீரா பானு, மாவத்தகம

நீங்க சொல்லுறது பாதி சரி, ஆதவன்ல நயன் காஞ்ச இடியப்பம். ஆனா அண்மைக்கால கேரள சிகிச்சைக்குப் பிறகு நயன் சுடச்சுட பொரிச்ச பூரி. அவரோட நடிக்க A முதல் V நடிகர்கள் வரை கொக்காக தவம் செய்கின்றனர்.

பட்டம் நடிகையின் பரபரப்பு தொடர் இப்போது இணையத்தில் வருகிறது. அனைத்து விடயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். இரண்டு தடவை பாடம் படித்துவிட்டார். அதை மறக்கமாட்டார்.

நயன் இன்னொரு சிலுக்கு இருப்பதை கவருராங்க, உள்ளத கறக்கிறாங்க

கோச்சடையான் எப்போது திரைக்கு வரும்?

எஸ். ஜொன்சன் கொழும்பு

OCTOBER என்கிறது TEASER   DEC. 12 (ரஜினி பிறந்தநாள்) என்கிறது MEDIA. 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் TEASER ஐ பார்த்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். இணையத்தில் பார்த்திருக்கலாம். ஆனால் திரையில் பார்ப்பார்களா?

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் மட்டுமன்றி பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை 'டப்' செய்து வெளியிடப் போகிறார்களாம். ஆனால் TEASER ஐ பார்த்த நிறையப்பேருக்கு பிடிக்கவில்லையாம். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது என்று தீவிர ரஜினி ரசிகர்களே கூறி வருகிறார்கள். 125 கோடி ரூபா படம் போல் இல்லை என்பது நிறையப்பேரின் கருத்து.

எப்படியும் ஓடவைத்து விடுவார்கள்!

Saturday, October 12, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -2

"கேரள  தோட்டத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக  வாழ்கிறோம்"


மணி  ஸ்ரீகாந்தன்

"எங்க சொந்த ஊரு புதுக்கோட்டை அறந்தாங்கி. ஆனால் நாங்க அங்க போகலை. அரசாங்கம் அரசாங்க வேலை தருவதா சொன்னதால் நாங்க கேளராவுக்கு போக சம்மதித்தோம். மண்டபத்தில் தங்கிய அந்த பதினைந்து நாட்களும் எனக்கு புது அனுபவமாகத்தான் இருந்தது. சிலோனில் உள்ள லயத்தை ஒத்தமாதிரி வீடுகள். திரும்பிய பக்கமெல்லாம் நம்ம சிலோன்காரங்க... அனைவர் முகத்திலும் இனி எப்படி வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என்ற ஏக்கம் அப்பிக் கிடந்தது.
சிலர் மண்டப சுவர்களில் 'இது தாய் நாடு அல்ல நாய் நாடு' என்று எழுதி இருந்ததையும் கவனித்தேன். அவர்கள் அப்படி சுவர்களில் எழுதியதற்கும் ஒரு காரணம் இருந்தது. சிலோனில் இருந்து கொண்டு வந்த பொருட்களை மண்டபத்தில் ஏமாற்று பேர்வழிகளிடம் சிலர் பறிக் கொடுத்து இருந்தார்கள். கொண்டு வந்த பல பொருட்களை இறக்கிப் பார்த்த போது அவை உடைந்தும் நொருங்கியும் கிடந்தன.
 அந்தக் கோபம் தான் தாயகத்தை கெட்ட வார்த்தையால் திட்டத் தூண்டியிருக்க வேண்டும். சிலர் அம்மி, உரல், உலக்கை, திருகைக்கல், ஆட்டுக்கல் என்று கனமான பொருட்களையும் மரப்பெட்டிகளில் அடைந்து கொண்டு வந்திருந்தார்கள்.

முகாமில் ஒரு வாரத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 110 ரூபா அட்வான்சாக கொடுத்தார்கள். அங்கே இருபத்தைந்து ரூபாய்க்கு ஐம்பது கிலோ அரிசி தந்தார்கள். காளிதாஸ் என்பவரே எங்களை கேளராவிற்கு அழைத்துச் சென்றார். முகாமில் எங்களை கேரளா ரீகா பிளான்டேஷனுக்கு போகச் சொல்லி எங்களுக்கு எழுதிக் கொடுத்திட்டாங்க. அந்த பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு ரயில் பயணத்தைத் தொடங்கினோம். நீண்ட தூர பயணம் அது. தென்காசி, செங்கோட்டை ஆகிய ஊர்கள் அடங்கிய தமிழக எல்லையை கடந்த உடன் கேரளா எல்லையில் ரயில் பயணிக்க தொடங்கியது.
அது ஒரு பெரியகாட்டுப் பிரதேசம். ஒரே இருட்டாக இருந்தது. குளிர்வேறு உடலை நடுங்க வைக்க நான் வெலவெலுத்துப் போனேன்... அப்போது என் மனக் கண்ணில் கஹவத்தை, பொறனுவ தோட்டம்தான் ஞாபகத்தில் வந்தது. ஏன்டா அந்த ஊர விட்டு வந்தோம் என்று என் மனசாட்சி என்னை கேள்வி கேட்பது போலிருந்தது.

செங்கோட்டைக்கும் புனலூருக்கும் இடையில் மூன்று பெரிய சுரங்கங்கள் இருந்தன. அதற்குள் ரயில் புகுந்து புறப்பட்டபோது எனக்குள் அது இன்னும் பயத்தை அதிகரித்தது. பிறகு புனலூரில் இறங்கி அங்கே நின்றிருந்த ஒரு லொரியில் சுமார் பத்து குடும்பங்களோடு நாங்களும் ஏறினோம். அந்த லொறி ஆயிரம் நல்லூர் நோக்கிப் பயணித்தது.
புனலூர்த்தான் எங்களுக்கு நகரம். அதில் உள்ள ஒரு எஸ்டேட்தான் ஆயிரம் நல்லூர். குலத்துப்புழாவும் பெரிய எஸ்டேட்தான். இரண்டு எஸ்டேட்டையும் ரீகா ப்ளான்டேஷன் கம்பனிதான் நிர்வகித்தது. சில மணி நேரங்களில் அந்த ஆயிரம் நல்லூர் எஸ்டேட்டில் இறங்கினோம். அது ஒரு இறப்பர் தோட்டம். அடுத்த நாளே என்னையும், எங்கப்பாவையும் பேரு பதிஞ்சு வேலை கொடுத்திட்டாங்க.

அங்க குடும்பத்திற்கு இரண்டு பேருக்குதான் வேலை கொடுப்பாங்க. அதுதான் அங்க சட்டம். அதனால் எங்களுக்கு ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டமாக போயிருச்சு. தோட்டத்தில் நானும் அப்பாவும் இறப்பர் பால் வெட்டினோம். தோட்டத்திலேயே எங்களுக்கு வீடும் தந்திருந்தாங்க. அது டபுள் கோட்டேஜ் வீடு, அப்போ மின்சார வசதி கிடையாது. குப்பி விளக்குதான். நாள் ஒன்றுக்கு பதினோரு ரூபா சம்பளம். இன்றுவரை அதே வீட்டில்தான் நம்ப வாழ்க்கை ஓடுது, என்ற தமது தாயகம் திரும்பிய கதையை பாபு விளக்கமாகச் சொன்னார்.
கருப்பையா பாபு தனது மனைவி,மகன்,மகள்,பேரக்குழந்தையுடன்…
பாபு மலையாள பெண்னையே திருமணம் முடித்து இருக்கிறார். அவர் பெயர் சந்திரமணி. ஒரு ஆணும், பெண்ணுமாக இரு பிள்ளைகள், மகள் திருமணம் முடித்து குடும்பமாகி விட்டாராம். பிள்ளைகள் மலையாளத்திலேயே கல்வி கற்றுள்ளார்கள்.

"ஆயிரம் நல்லூர் தோட்டத்தில் வேலை செய்யும் எங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்குது. ஏனென்றால் இங்கு தோட்ட வேலை என்பது அரசாங்க வேலை. நான் தோட்டத்தில் வேலை செய்ததால்தான் எனக்கு மலையாள பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். இங்கு இந்த வேலை கிடைப்பதே பெரிய கஷ்டம்" என்கிறார் பாபு.

நம் நாட்டில் தோட்டங்களில் ஒரு வீட்டில் பத்து பேர் இருந்தால் அவர்களில் விரும்பியவர்கள் எல்லோரும் தோட்டத்தில் வேலை செய்யலாம். ஆனால் கேரளா தோட்டங்களில் அப்படி அல்ல. ஒரு குடும்பத்திற்கு இவருக்கு மட்டுமே வேலை வழங்கப்படும். இன்றுவரை இந்த சட்டமே அமுலில் உள்ளது. அங்குள்ள தோட்டங்களில் ஒரு நாளைக்கு 275 ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. அதுதான் எங்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படைச் சம்பளம். ஒரு நாள் வேலை செய்தாலும் அதுதான் எங்களுக்கு சம்பளம். இதுதவிர வைத்திய சாலை வசதியும் உண்டு. ஒரு டாக்டரும் நான்கு நர்சுகளும் சேவையாற்றி வருகிறார்கள். ஆயிரம் விளக்கு எஸ்டேட்டில் மொத்தம் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தோட்டத்தில் எங்களுக்கு நிறைய சலுகைகள் செய்றாங்க... சிலோனைவிட இங்கு சலுகைகள் அதிகம் என்றுதான் தோன்றுகிறது. அரசாங்க தோட்டத்தில் வேலை செய்யும் நாங்கள்  மேலதிக ஊதியத்திற்காக தனியார் கிராம தோட்டங்களிலும் வேலை பார்க்கிறோம். என்று சொல்லும் இவர் விடியற்காலையில் இரண்டு மணிக்கு தானும், தன் மனைவியும் தலைக்கு மாட்டும் ஹெட் லைட்டை பொருத்திக் கொண்டு இறப்பர் பால் வெட்ட தனியார் கிராம தோட்டங்களுக்கு சென்றால் விடியற்காலை ஆறுமணிக்கெல்லாம் முடித்து விட்டு வந்து, ஏழு மணிக்கு ஆயிரம் நல்லூர் தோட்டத்திற்கு வேலைக்கும் கிளம்பி விடுவோம் என்கிறார். இவருக்கு தனியார் கிராம இறப்பர் தோட்டத்தில் இருந்து மட்டும் மாதம் இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் வரை சம்பளம் கிடைக்கிறதாம்.

எங்களுக்கு கேரளாவில் பணத்தேவை அதிகமாக இருப்பதால் இப்படி அதிகாலையிலும் வேலைக்கு செல்கிறோம் என்று கூறுகிறார் பாபு.
ஆயிரம் நல்லூர் தோட்டத்தில் நல்ல வசதிகளுடனான தோட்ட வைத்தியசாலையும் இயங்குகிறதாம். அங்கு ஒரு டொக்டரும், நான்கு நர்சுகளும் பணியில் இருக்கிறார்களாம். 24 மணி நேரமும் நோயாளர்களுக்கு அனுமதி இருக்கிறதாம். இது தவிர தோட்டங்களில் சுகாதாரமும் நல்ல முறையில் போணப்படுகிறதாம்.

"ரீகா பிளான்டேஷன் அதிகாரிகள் அடிக்கடி தோட்ட வீடுகளுக்கு வந்து கவனிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை வீடுகளுக்கு வெள்ளை அடித்து கொடுப்பதோடு. வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பழுதுகளையும் சீர் செய்கிறார்கள்" என்று இவர் கேரள தோட்ட நிலைமைகளைப் பற்றிச் சொல்லும் போது இலங்கை மலையகத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களில் நிலை பற்றியும் அவர்களைப் பாதுகாத்து கரையேற்றுவதற்காக  'போராட' வரும் சங்கங்கள் பற்றியும் எம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ரீகா ப்ளான்டேஷனை புகழ்ந்து பேசும் பாபு மற்றொரு உண்மையையும் சொன்னார்.

கேரளாவில் ஒரு அரை ஏக்கர் காணி இருந்தால் அதில் இறப்பர் மரங்களை வளர்த்து விடுவார்களாம். அதனால் தான் அங்கு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு விவசாய உற்பத்திகள் போதுமானதாக இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

 தொடரும்...

Wednesday, October 9, 2013

தாயகம் திரும்பிய ஒருவரின் கதை -1

மணி  ஸ்ரீகாந்தன்

கருப்பையா பாபு கஹவத்த பொறனுவ தோட்டத்தில் வசித்தவர். எண்பதுகளில் தமிழகம் திரும்பியவர். கேரள தோட்டமொன்றில் வேலை செய்து வருபவர். இப்போது கேரள குடிமகனாக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் அவர் கேரள தோட்டத்து வாழ்க்கையைப் பற்றி இங்கே பேசுகிறார். இந்தியத் தோட்டங்களின் நிலை மோசம் என்பது நமது பொதுவான அபிப்பிராயம். ஆனால் அவர் சொல்லும் கதை வேறு மாதிரி இருக்கிறது.


பஞ்சம் பிழைக்க பலநூறு கிலோ மீட்டர்கள் கடந்து தென்னிந்தியாவிலிருந்து
கண்டி
சீமைக்கு வந்த மலைநாட்டு தமிழர்களின் கண்ணீர் கதை அனைவரும் அறிந்த வரலாறு.  இன்றும் மலையக மக்களில் பெரும்பாலானோர் தோட்ட வாழ்க்கையிலேயே அமிழ்ந்து போயிருப்பதையும் தம் இந்திய உறவுகளின் தொடர்பில்லாமல் வாழ்ந்து வருவதையும் காண்கிறோம்.
மலையகத்தின் மூதாதையர் பொன்தேடி இலங்கைக்கு வந்தது போலவே, அவர்கள் இங்குள்ள நிலைமைகளைக் கண்டு வருந்தி இனிமேல் நமக்கு இலங்கையில் பொழுது விடியாது எனத் தீர்மானிக்கவும் செய்தனர்.
இதற்கு வழி வகுத்தது  ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீரும் கம்பலையுமாக 'பொன்' தேடி மீண்டும் தென்னிந்தியாவுக்கு ரயிலேறினர். இது இன்னொரு சோக வரலாறு.

கோட்டை புகையிரத நிலையத்தில் ஒப்பாரி வைத்து அழுது 'ஒப்பாரிக் கோச்சியில்' பயணித்த நம் உறவுகளின் கதையை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.


கருப்பையா பாபு
அந்தக் காலத்தில் அதாவது அறுபது மற்றும் எழுபதுகளில் பிள்ளைக்குட்டிகளோடு தமிழகத்துக்கு பயணமானால் அவங்க கதை அத்தோடு முடிந்த மாதிரித்தான். கடல் தாண்டி போய்விட்டால் திரும்ப அவர்களை சந்திக்கவே வாய்ப்பில்லை என்று முடிவு செய்து விடுவார்கள் உறவினர்கள். அப்போது மலையக மக்கள் நாடற்றவர்களாக இருந்ததால் பாஸ்போர்ட் கிடையாது. தொலைபேசி வசதி பெரும்பாலும் இல்லை. எழுத்தறிவும் குறைவு. தமிழகம் சென்றவர்கள் எப்போதாவது ஒரு ஏயர் மெயில் வாங்கி கடிதம் எழுதினால்தான் உண்டு. இந்தியாவில் இருந்து ஒரு கடிதம் வந்துவிட்டால் அந்தத் தோட்டமே கொண்டாட்டமாகிவிடும்! இலங்கையோடு ஒப்பிடும்போது தமிழகம் அப்போது பின்தங்கித்தான் இருந்தது. இருந்தாலும் இங்கிருப்போருக்கு மீசையில் மண் ஒட்டுவதேயில்லை.

ஆனால் இப்போது நிலைமைகள் முற்றாக மாறி விட்டது. யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்கு செல்லலாம், அங்கிருப்போர் இங்கே வரலாம். கைபேசியில் இந்திய உறவுகளோடு தொடர்புகொள்ளலாம். அன்றைக்கு அப்படி ஒரு காலம் இருந்ததா என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது.

இப்படி தமிழகம் சென்றவர்தான் கருப்பையா பாபு. இன்று கேரளாவில் ஒரு இறப்பர் தோட்டத்தில் வேலை செய்கிறார். இனி அவருடன் பேசுங்கள்.
இவர் எண்பதுகளில் தாயகம் திரும்பி கேரளா ஆயிரம் நல்லூர் எஸ்டேட்டில் குடியேறி இருக்கிறார். தமது உறவினர்களை சந்திக்க கஹவத்தை பொறனுவ எஸ்டேட்டுக்கு வந்த  அவரை சந்தித்து தாயகம் திரும்பிய கதையைக் கேட்டோம். பாபுவின் பேச்சில் மலையாள வாடை வீசுகிறது.  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தமிழ்.
"மலையாளம் கொரச்சி கொரச்சி அறியுமோ " என்று நமக்கு தெரிந்த மலையாளத்தில் கேட்டு மலையாளம் கொஞ்சம் வரும் என்று பீற்றிக்கொண்டோம்.
"எனெக்கி மலையாளம் அறியாம். யான் கேரளத்திலுள்ள ஒரு மலையாள பெண்ணியான விவாகம் செய்து கொண்டது. மலையாளத்தில் நான் திருமணம் முடித்தது" என்றார் கருப்பையா பாபு, பின்னர் சுத்தத் தமிழில் எங்களுடன் உரையாடினார்.

"நம் தாய் மொழிய மறக்க முடியுங்களா? எங்க தாத்தா பெத்தையா அந்த காலத்துல தமிழ்நாட்டில் இருந்து வேலையாட்கள இலங்கைக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிறாரு. தோட்டத்தில் பெரிய கங்காணி அவருதான். பதுளை கும்பாவள தோட்டத்தில் வேலை பார்த்தவர். அதுக்குப் பிறகு எங்க குடும்பம் பொறனுவ எஸ்டேட்டுக்கு குடிவந்துடாங்க. இங்கே வந்த எங்கப்பா நிறைய பேரை அழைச்சிட்டு வந்து தோட்டத்தில வேலை வாங்கி கொடுத்திருக்காரு. அதனால் எங்க குடும்பத்தின் மீது இந்த தோட்டத்து ஆளுங்க ரொம்பவும் மரியாதை வச்சிருக்காங்க. எழுபத்தேழாம் ஆண்டு கலவரம்தான் எங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. புள்ளக்குட்டிகள தூக்கிட்டு தேயிலை செடிகளுக்குள் இரண்டு நாளா ஒளிந்திருந்ததை மறக்க முடியுங்களா...?" என்று பெருமூச்சோடு  கதையை நிறுத்தியவரிடம்... அப்புறம் எப்படி கேரளாவிற்கு சென்றீர்கள்...? என்றோம்.
எழுபத்தேழு கலவர நினைவுகளை களைத்துவிட்டு "எங்கப்பா கருப்பையா நம்ம ஊருக்கு போயிடலாம்னு முடிவு எடுத்தார். அவரு முடிவு எடுத்தா யாரும் தட்டிப்பேச மாட்டாங்க அதனால எண்பதுகளில் தாயகம் நோக்கி புறப்பட தயாரானோம். அந்தக்காலத்துல ஊரைவிட்டு போறதுன்னா வீடு வீடாக சென்று எல்லோரையும் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். அப்படித்தான் நாங்களும் வீடு வீடாகச் சென்று கும்பிட்டு வந்தோம். அப்போ மேற்கணக்கில் கந்தையாவையும் சந்தித்து கும்பிட்டேன்.
"உனக்கு கொடுப்பினை இருக்கு பாபு... தாயகத்துக்கு போற... நமக்கு இதுதான் கதி" என்று விரக்தியோடு பேசினார். அன்று மாலை ஊர் சனமே மாரியம்மா கோவிலில் கூடி சாமிக்கு படையல் போட்டு பூசை வச்சி கண்ணீரும் கம்பலையுமா எங்களை வழி அனுப்பி வச்சாங்க. சில நண்பர்கள் கொழும்பு புகையிரத நிலையம் வரை வந்து வழி அனுப்பினார்கள்.

இந்த கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த ஒரு விசயத்தை உங்ககிட்டே சொல்லணும்... தலைமன்னார் கோச்சிக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்களைப் போல் நூற்றுக்கணக்கான தமிழ்  குடும்பங்களும் அங்கே அமர்ந்து இருந்தார்கள்... ரயில் வரப்போவதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கியில் வந்த அடுத்த நிமிஷமே "அய்யோ... போறியா சாமீ..." என்ற ஒப்பாரி சத்தம் ரயில்வே ஸ்டேஷனை கலங்கடிக்க ஆரம்பித்தது. அந்த கால சினிமாவில் வந்த அறிமுகப் பாடல் போல அந்த ஒப்பாரி சத்தத்தோடு தலைமன்னார் ரயில் கோட்டைக்குள் புகுந்தது... நானும் நண்பர்களை விட்டு பிரிந்து போவதை நினைத்து அழுதுகொண்டே ரயிலில் ஏறி அமர்ந்தேன். பிறகு சில நிமிடங்களில் ரயில் புறப்பட மீண்டும் ஒப்பாரி சத்தம்! ஊரையும், உறவையும் விட்டு பிரிவது என்பது சும்மாவா? அந்த ஒப்பாரி சத்தம் ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகும்  என் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.
பிறகு தலைமன்னாரில் இருந்து ராமானுஜம் கப்பல் மூலமாக கடலைக் கடந்தோம்... நீண்ட நேர பயணத்திற்கு பிறகு கடலின் நடுப்பகுதியை கப்பல் தொட்டப்போது அரோகரா... என்று பயணிகள் சத்தம் போட்டார்கள். என்னடா இது கப்பலில் சாமி கும்பிட- ஆரம்பிச்சு விட்டார்களோ? என்று சத்தம் வந்தப் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

கடலை நோக்கியவாறே நம்ப ஆளுங்க தலை மேல் கையைத் தூக்கி வச்சி கும்பிட்டவாரே கோசம் போட்டாங்க. நானும் போய் எட்டிப்பார்த்தேன். ராமேஸ்வரம் கோபுரம் தூரத்தில் மங்களாக தெரிந்தது... எனக்கு அப்போது கண் கலங்கி விட்டது. ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர். மறுபக்கம் சிலோனை விட்டு வந்துட்டோமே என்ற வருத்தம்தான்... கப்பலில் இருந்து இறங்கினோம். கீழே ஒரு சிறிய படகு தண்ணீரில் ஆடிக்கொண்டிருந்தது. ரொம்பவும் கவனமாக காலெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால் கப்பலுக்கும் படகுக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்துவிடுவோம். வயதானவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். சிறிது தூர படகு பயணத்தை முடித்து தாயக மண்ணில் கால் பதிக்க இறங்கினேன். "பார்த்து இறங்குங்க... பைய குடுப்பா" என்று ஒரு பரீட்சயமான குரல் கேட்க திடுக்கிட்டுப் பார்த்தேன். அங்கே பொறனுவ மேக்கணக்கு கந்தையா முகமெல்லாம் பல்லாய் சிரிக்க கீழே நின்றுகொண்டு எங்களை வரவேற்றார்.

"என்ன கந்தையா நீ எப்படி இங்கே?" என்று நான் ஆச்சர்யமாக கேட்க,  "அட நீ பயணம் சொல்லி போனபிறகு நமக்கு அங்க இருக்கவே புடிக்கலப்பா... அதுதான் அப்பவே இரத்தினபுரிக்கு போயி பாஸ்போர்ட் வாங்கி இரவோட இரவா புள்ளக்குட்டிகளை கூட்டிட்டு ஓடிவந்துட்டேன்" என்றார் கந்தையா.
"கந்தையாவுக்கு அங்கே ஏகப்பட்ட கடன். அதுதான் இப்படி திடீர்னு யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கான்" என்று என் அப்பா என் காதில் குசுகுசுத்தார்.
மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு மண்டபம் நோக்கி நான் அம்மா. அப்பா, சகோதரர்கள் என எட்டுப்பேர் கொண்ட எங்கள் குடும்பத்தினர் அந்த சுடுமணலில் நடந்தோம். 'இந்தியாவில ஆசைக்கு பாக்கு உடைக்க ஒரு கல்லு கிடைக்காதுங்க' என்று நம்ப பெருசுங்க சொன்னது உண்மைதான். அங்கே நான் ஆசைக்கு ஒரு கல்லைக்கூட பார்க்கலை...' என்று சொல்லும் பாபுவிற்கு இப்போ 53 வயதாகிறது. தமது இருபதாவது வயதில் இந்தியா சென்றிருக்கிறார். மண்டபத்தில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர்         வெவ்வேறு இடங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
"மண்டபத்தில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு போகும் வரைதான் கந்தையா எங்களுடன் இருந்தார். அதன் பின் அவர் எங்கே போனாரோ தெரியவில்லை" என்றார் பாபு.

தொடரும்…


Saturday, October 5, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க….05

பிராமணர்  கிணற்றில் நீர் அள்ளப் போய்….


மணி  ஸ்ரீகாந்தன்

இராமானுஜம் பயணிகள் கப்பல் சேவையில் ஈடுப்பட்டிருந்த காலப் பகுதியில் மலைநாட்டு தமிழர்களிடையே பேசப்பட்டு வந்த இடம் மண்டபம்.இலங்கையிலிருந்து செல்வோரும் தாயகத்திலிருந்து இலங்கை வருவோரும் மண்டபத்தில் தங்கி அங்கு வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பெரிய வெள்ளாவி கொப்பறைகளில் தங்களது ஆடைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர்.அதன் பின்னரே அவற்றை அணிந்து வெளியேறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கான முக்கிய காரணம் அக் காலத்தில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட வயிற்றோட்டம்,வாந்திபேதி , அம்மை போன்ற தொற்று நோய்கள் இலங்கைக்கோ அல்லது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கோ பரவிவிடக் கூடாது என்ற முன்னேற்பாட்டு நடவடிக்கையே!

அந்தக் காலப் பகுதியில் கப்பலில் பயணம் மேற்கொண்டவர்தான்  வேலாயுதம் இவர் களுத்துறை மாவட்ட தோட்ட பகுதியில் வசித்து வருகிறார்.தனது எழுபதாவது வயதில் போத்தல் வியாபாரம் செய்து வருகிறார்.அவர் தனது பதினோராவது வயதில் தனது தந்தையுடன் இந்தியாவிற்கு போனாராம்.

“கப்பல் பயணம் ரொம்ப சந்தோசமாக இருந்தது.இப்போதெல்லாம் இந்தியாவுக்கு போறது ரொம்பவும் ஈஸியான விசயமா இருக்கு.சும்மா ஏதோ மேட்டுலயத்து  பெட்டிக் கடைக்கு போய் வார மாதிரி இந்தியாவுக்கு போய் வர்ராங்க.ஆனா அப்போவெல்லாம் அது ரொம்ப பெரிய விசயம்.இந்தியாவிற்கு போறவங்க ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ரெடியாகிடுவாங்க.பயணத்திற்கு முதல் நாள் ஊர் கோவிலில் கப்பல் பயணம் சிறப்பா அமைய சாமிக்கு பூசை கொடுத்து தோட்டத்தில் உள்ள எல்லாத்துக்கிட்டேயும் பயணம் சொல்லிதான் புறப்படுவாங்க.அப்படித்தான் நானும் என் அப்பாவோடு புறப்பட்டேன்.

எங்கள் ஊர் தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் உள்ள ஒரு கிராமம்.அங்கு என் மாதிரி உள்ள சிறுவர்கள் எல்லோரும் கோவணம் தான் கட்டியிருந்தார்கள்.நான் அணிந்து சென்ற சர்ட்டும், அரைக்கால் சட்டையையும் தவிர எனக்கு மாற்று துணியில்லை.எனவே நானும் அங்கு சென்று கோவணம்தான் கட்டியிருந்தேன்.டவுனுக்கு சென்றால் ரிக்ஷா வண்டியில்தான் பயணம்.இங்கே மாதிரி மோட்டார் வாகனங்களை நான் பார்க்கவில்லை.அது ஒரு புது உலகம் ரொம்மபவும் அமைதியா இருந்தது. ஒரு நாள் பக்கத்து வீட்டு தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து குளிக்கலாம்னு போனேன். அங்கே போய் கிணற்றில் வாளியை போட்டதுதான் தெரியும்….அந்த வீட்டுல உள்ள ஆம்பளையும்,பொம்பளையும் அலறி அடிச்சிட்டு ஓடி வந்தாங்க.  ‘அச்சச்சோ பெருமாளே தீட்டு பட்டிருச்சே! யார்ரா அந்த சண்டாலப் பயல்’ன்னு கத்திக்கிட்டு ஓடி வந்தாங்க. அவங்களை கண்ட நானும் தலைதெறிக்க ஓடியாந்திட்டேன்.

அவங்களும் என்னை துரத்திட்டு வந்தாங்க.பிறகு என் வீட்டுக்கு வந்ததும் தான் என் அப்பா விஷயத்தை சொன்னாரு. ‘அடேய் பெரிய தப்பு செய்திட்டயே! பிராமண ஆளுங்க வீட்டு கிணற்றில தண்ணீர் எடுத்திட்டயே!’அது தெய்வ குத்தம்டா என்று கத்தினார். பிறகு அந்த பிராமண ஆட்களிடம் நான் ஊருக்கு புதுசு என்ற விடயத்தை சொல்லி ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்.ஆனாலும் அந்த பிராமணர்கள் அவர்களின் கிணற்றில் என் கை பட்டதால் அந்த கிணற்றுத் தண்ணீரை முழுவதும் இறைத்து விட்டு அந்த தண்ணீருக்கு ஒரு பரிகாரம் செய்த பிறகே அதை எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு போனார்கள். என்று தனது தமிழக அனுபவத்தை விளக்கினார்.

அன்று மட்டுமல்ல,இந்த சாதி வெறி இப்போதும்  தமிழகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அச்சமயத்தில் கடுமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வேலாயுதத்தின் தோலை உரிக்காமல் விட்டதே அதிசயம்தான்.! பிராமணர்கள் புனிதமான உயர் சாதியினர் அவர்கள் அருந்தும் தண்ணீரை கீழ்சாதிக்காரன் தொட்டால் அது தீட்டாகிவிடும். என்ற முரட்டு சாதி வெறியை ஈ.வேரா பெரியாரின் தீவிர சுயமரியாதை பிரச்சாரமே ஓரளவுக்குக் குறைத்து புதிய சிந்தனையை தமிழ் சமுதாயத்தில் தோற்றுவித்தது.

சிவாஜி, எம்.ஜி.ஆர். உறவு

அப்பமும் கருவாட்டுக்கறியும் சிவாஜிக்குக் கொடுக்காதே! என்றார் எம். ஜி. ஆர்.


சிவாஜி  நினைவுகளில் மூழ்கும்  சிவாஜி  மௌலானாவுடன் சில நிமிடங்கள்....


-மணி  ஸ்ரீகாந்தன்

"சிவாஜி பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...."
இது சினிமாவில் ரஜினி பேசிய வசனம். உண்மையில் அந்தப் பெயருக்கு அப்படி ஒரு மகத்தான சக்தி இருக்கத்தான் செய்கிறது.
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டிய பெயர். தமிழ் சினிமாவின் வரலாற்றை சி. மு., சி. பி. (சிவாஜிக்கு முன், பின்) என்றுதான் வகைப்படுத்த முடியும். அந்தளவுக்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் அவர். சாதாரணமாக அவரை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது. சிவாஜியின் கடைக்கண் பார்வை தம்மீது படாதா என்று லட்சக்கணக்கானோர் காத்திருந்த போது அவரின் அருகில் அவருக்கு சமமாக கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கையில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து வானத்தை நோக்கி வட்ட வட்டமாக புகை விட்டவர்தான் நம் சிவாஜி மௌலானா. அப்படி புகை விடும்போது,

"ஏண்டா படுவா.... என்ன கிண்டலா?" என்று சிவாஜியின் செல்லக் கோபத்திற்கு ஆளானவர் நமது சிவாஜி மௌலானா. இருவருக்கும் இடையே அப்படி ஒரு இறுக்கம், நெருக்கம்.
மௌலானாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு
  அலுவல் பார்ப்பது சிவாஜியின் வழக்கம்
கொழும்பில் இருக்கும் பெரிய வர்த்தகர்களில் சிவாஜி மௌலானாவும் ஒருவர். நடிகர் திலகத்தின் இனிய இணைப்பிரியா நண்பர்களில் இவர் முக்கியமானவர். இன்றைக்கும் மௌலானா குடும்பத்துக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் இடையே அதே பிணைப்பு தொடரத்தான் செய்கிறது.

"ஒரு நாளைக்கு சிவாஜி சுமார் 40 சிகரெட்டுகள் பிடிப்பார். ஆனால் நான் முப்பதைத் தாண்ட மாட்டேன். அன்னை இல்லத்தில் அவரோடு சேர்ந்து சிகரெட்டை பிடிக்கும் போது... அவரை என்னால் வெல்ல முடியவில்லை" என்று சொல்லும் மௌலானாவின் பேச்சில், உடல் அசைவில், உருவத்தில் சிவாஜி தெரிகிறார். "நான் ஒரு தடவை ராம்குமாரிடம் எனக்கு சிவாஜி வசந்தமாளிகை படத்தில் பயன்படுத்திய 'விக்' வேண்டும் என்று கேட்டபோது,

"நீங்கள் எப்போதும் சிவாஜியைப் போல தானே காட்சியளிக்கிறீர்கள்? 'விக்' வைத்துதான் சிவாஜியாக நீங்கள் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே" என்று ராம்குமார் சொன்னாராம். இந்த மௌலானாவை நீங்கள் நேரில் பார்த்தீர்களானால் சிவாஜியைப் பார்த்தமாதிரியே இருக்கும்.
.சிவாஜி வீட்டு விருந்தில் எம்.ஜி.ஆர்
தமிழ் சினிமாவில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இரு துருவங்களாக தெரிந்த போதும் அவர்களிடையேயான நட்பு மிகவும் பலமாகவே இருந்தது என்கிறார் மௌலானா. ஏனெனில் எம். ஜி. ஆரின் அன்னை கையால் சிவாஜியும் சிவாஜியின் அம்மா கையால் எம். ஜி. ஆரும் வாங்கிச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். ஒருநாள் அன்னை இல்லத்தில் சிவாஜியுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது.... சிவாஜி தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை இப்படி விபரிக்கிறார் சிவாஜி மௌலானா.

"அது எம். ஜி. ஆர் புகழை தொட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி. 1943 கள் என்று தான் சிவாஜி சொன்னார். சென்னை சென்றல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒற்றைவாடை தியேட்டருக்கு பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் குடியிருந்தார். அந்த வீட்டிற்கு சிவாஜியும் காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி போய் வருவார்களாம். அந்த வீட்டில்தான் தினமும் சிவாஜிக்கு சாப்பாடு. அதில் ஒரு விஷேசம் என்னவென்றால், எம். ஜி. ஆர் தன் தாயிடம் 'பசிக்குதும்மா... சாப்பாடு போடுங்கம்மா...' என்று கேட்டால் அகப்பையை கையில் பிடித்தபடி, "சித்த இருடா.... கணேசன் வந்திடட்டும்" என்று சொல்வாராம் தாயார் சத்யா. எம். ஜி. ஆரும் தானும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்திய அந்தக் காலத்தை நினைத்து பெருமூச்சுவிடும் நடிகர் திலகம் மற்றொரு முக்கிய சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டாராம்.

தாதா பார்கே விருது பெற்ற சிவாஜியை
  வாழ்த்தச் சென்றிருந்த மௌலானா
எம். ஜி. ஆர். அமெரிக்கா பால்டிமோர் மருத்துவமனைக்கு வைத்திய பரிசோதனைக்காக சென்றபோது தன்னை வந்து பார்க்கும்படி சிவாஜிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை ஏற்று சிவாஜி தமது மனைவியுடன் அடுத்த வாரமே அமெரிக்காவிற்கு புறப்பட்டாராம். விமானத்தில் ஏறியதும் சிவாஜி தமது மனைவியிடன் நான்தான் சிவாஜி என்பது இங்குள்ளவங்களுக்குத்தான் தெரியும். அமெரிக்காக்காரனுக்கு தெரியாது. அங்கு போய் யாரைப் பார்த்து எப்படி பால்டிமோருக்கு போவதோ தெரியலையே என்று புலம்பியவாறு பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கியதும் சிவாஜிக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஏனென்றால் விமான நிலையத்தில் அவரை வரவேற்க பதினைந்துபேர் காத்திருந்தார்கள். எம். ஜி. ஆரின் ஏற்பாடுதானாம் இது. மருத்துவமனைக்கு சென்ற சிவாஜி, எம். ஜி. ஆரைக் கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டாராம். அந்த சந்திப்பு ராமனும், பரதனும் கட்டிப் பிடித்து அக மகிழ்ந்த மாதிரி இருந்ததாம்.

"அண்ணே உங்க உடம்புக்கு என்ன ஆச்சு சொல்லுங்கண்ணே... டாக்டர் என்ன சொன்னார்?" என்று சிவாஜி தழுதழுத்த குரலில் கேட்டபோது எம். ஜி. ஆரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, சிவாஜியும், எம். ஜி. ஆரும் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டார்களாம். அங்கே எம். ஜி. ஆருக்கு உதவியாக இருந்த டொக்டர் ராமமூர்த்தியும், பழனிசாமியும் இருவரையும் பிரித்தெடுத்து ஆறுதல் சொன்னார்களாம். அதே மருத்துவமனையில் பக்கத்துக் கட்டிலில் எம். ஜி. ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவரோடு சிவாஜியின் துணைவியார் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கமலாவை அழைத்த எம். ஜி. ஆர்,

"அவன் ரொம்பவும் முன் கோபக்காரன். ஆப்பமும், கருவாட்டுக்குழம்பும்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா இனி அவனுக்கு அதைக் கொடுக்காதே. அதை சாப்பிட்டுத்தான் என் உடம்பு கெட்டுப்போச்சு!" என்று அறிவுரை சொன்னாராம் கமலா அம்மாளுக்கு.

அதன்பிறகு சில மாதங்களில் சென்னை வந்து சேர்ந்தார் எம். ஜி. ஆர். அதன் பின்னர் எம். ஜி. ஆரை ஒரு பொதுக் கூட்டத்தில் அன்றைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனோடு சிவாஜி பார்த்தாராம். சிவாஜியைக் கண்ட எம். ஜி. ஆர் மேடைக்கு வந்து தம் அருகில் அமரும்படி அழைக்க "வேணாம்ணே நான் பார்வையாளர்கள் பகுதியிலேயே உட்காருகிறேன்" என்று சிவாஜி மறுக்க, எம். ஜி. ஆர் சிவாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து தம் அருகில் அமரவைத்தாராம்.

அந்த இடத்தில் குளிர் ரொம்பவும் அதிகமாக இருந்ததால் ஒரு போலிஸ்காரர் ஒரு போர்வையை எடுத்து வந்து எம். ஜி. ஆருக்கு போர்த்த முற்பட்ட போது எம். ஜி. ஆர் அதைத் தட்டி விட்டிருக்கிறார். சிவாஜி இருக்கும் போது தனக்கு மட்டும் போர்வை எதற்கு என்று நினைத்தாரோ அல்லது அதை ஒரு தொந்தரவாக நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால் சிவாஜி அந்த போலிஸ்காரரை அழைத்து அவர் கையில் இருந்த போர்வையை வாங்கி எனக்கே குளிரா இருக்கும்போது நீங்க எப்படி குளிர்தாங்குவீங்க என்று அன்பாகச் சொல்லியபடியே போர்வையை எம். ஜி. ஆருக்கு போர்த்தி விட்டிருக்கிறார். பாசத்துடன் சிவாஜியின் கரங்களைப் பற்றிய எம். ஜி. ஆர், "மறுபடியும் அடுத்தவாரம் ஜனாதிபதியோட ஒரு விழா இருக்கு... அது முடிஞ்சு ஒரு நாலு நாளில் நீ என் வீட்டுக்கு வா. உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு தரப்போகிறேன்னு" சொல்லியிருக்கிறார் எம். ஜி. ஆர்.

சிவாஜியும் அந்த நாளுக்காக காத்திருந்திருக்கிறார். ஆனால் அவர் சொன்ன அந்த நாள் நெருங்கிய சமயம் எம். ஜி. ஆரின் நேரத்தை இறைவன் முடித்து விட்டானாம். எம். ஜி. ஆர் தனக்கு என்ன தர இருந்தார் என்று அறியாமலேயே சிவாஜி தவித்துக் கொண்டிருந்தாராம். பின்னர் ஜானகியை சந்தித்து சிவாஜி ஆறுதல் சொன்னபோது,

"அண்ணே... ஆப்பமும், கருவாட்டுக்குழம்பும் செய்து வை.. அவன் வருவான். நானும் அவனும் ஒண்ணா சாப்பிடனும்  என்று சொல்லிட்டு இருந்தாரு" என்று சொல்லி ஜானகி கதறி அழுதாராம்!

இவ்வாறு மக்கள் திலகத்திற்கும், நடிகர் திலகத்திற்கும் இடையே இருந்த நட்பின் நெருக்கத்தை உணர்ச்சியுடன் சொல்லி முடித்தார் சிவாஜி மௌலானா.

சிவாஜியை ஒரு தசாவதாணி என்பதற்கும் ஒரு சம்பவத்தை எடுத்துச் சொன்னார் மௌலானா.

"ஒரு நாள் அன்னை இல்லத்தில் நானும் சிவாஜியும் அருகருகே அமர்ந்திருந்தோம். அவரை சந்திக்க சில பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சிவாஜி அவர்கள் பக்கம் முகத்தைத் திருப்பி பேச ஆரம்பித்தவர் தொடர்ச்சியாக அரைமணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டதையும் சிவாஜி என்னை மறந்து விட்டார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே போய் ஒரு 'தம்' அடிக்கலாம் என்று கதிரையில் இருந்து மெல்ல எழும்பத் தயாரானபோது சிவாஜியின் கரங்கள் என் கரத்தைப் பற்றிப் பிடித்தது. என் பக்கம் முகத்தை திருப்பியவர் 'ஏண்டா படவா வெளியே தம் அடிக்கப் போறீயா? நான் உன்ன மறக்கல, இரு' என்றார். நான் ஆடிப்போனேன்.

அப்புறம் ஒரு நாள் சிவாஜி வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கு நான் சென்றிருந்தேன். என்னுடன் அலவி மௌலானாவின் மகன் நஜீப்பும் வந்தார். சிவாஜி வீட்டில் தடல்புடலாக விஷேசம் களைகட்டிக் கொண்டிருந்தது. ஆனால் சிவாஜி அங்கே இல்லை. மாடியில் இருப்பதாக கமலாம்மாள் என்னிடம் சொன்னார். பிறகு என்னிடம் வந்த கமலாம்மாள், "சொந்தக்காரங்கள் எல்லாம் வந்து இருக்காங்க. அவங்கள அழைச்சி சாப்பிட சொல்லணும். அவரை அழைச்சிட்டு வாங்க" என்று கேட்டுக்கொண்டார். நான் மாடிக்குச் சென்றேன். சிவாஜி மது அருந்திக் கொண்டிருந்தார். அவரிடம் விசயத்தைச் சொன்னேன். "ஏன் கமலா கூப்பிட்டா வந்து சப்பிட மாட்டாங்களா....? எல்லாம் சாப்பிடுவாங்க. நீயும் போய் சாப்பிடு" என்று அவர் கட்டளை போட்டார். மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல நானும் நஜீப்பும் சாப்பிட அமர்ந்தோம். சில நிமிடங்களில் சிவாஜி கீழே இறங்கி நாங்கள் இருக்கும் மேசையை நோக்கி வந்தார். வந்தவர் என்னை சுட்டிக் காட்டி "இவரு யாரு தெரியுமா? என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட்" என்று என் தோளில் தட்டி எனக்கு சாப்பாட்டைப் பரிமாறியவர் பிறகு அந்த இடத்தை விட்டும் அகன்றார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த விஷேத்தில் சிவாஜி எனக்கு பெரிய கௌரவத்தைக் கொடுத்து என்னை மகிழ்ச்சிப்படுத்தினார். ஆனால் நான் அவரை ஒரு விடயத்தில் கோபப்படுத்தி விட்டேன் என்ற மௌலானா ஒரு சிகரெட்டை எடுத்து சிவாஜி பாணியில் இரண்டு தம் அடித்து விட்டு பேசத் தொடங்கினார்.

"அப்போ அவருக்கு தாதா சாஹேப் விருது வழங்கப்பட்டிருந்த நேரம். என்னால் அவரைப் பார்க்கப் போக முடியவில்லை. எனவே அவரோடு தொலைபேசியில் பேசி வாழ்த்தலாம் என்று அழைப்பை எடுத்தேன். அன்னை இல்லத்திற்கு அழைப்பு எடுத்தால் அதை கமலாம்மாள்தான் எடுப்பார். ஆனால் அன்று சிவாஜியே அழைப்பை எடுத்தார்.
'ஹலோ! என்றவர். என் குரலை வைத்து நான் யார் என்பதை புரிந்துகொண்டார். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே' என்றேன்.

"ஏன் நீங்க அவ்ளோ பெரிய ஆளாகிவிட்டீங்களா? போனில்தான் வாழ்த்துவீர்களா, நேரில் வரமாட்டீர்களா?" என்றார் கரகரத்த குரலில். நான் பதில் சொல்வதற்கு முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சிவாஜிக்கு என்மீது கோபம் வந்து விட்டது என்பதை நான் உணர்ந்து விட்டேன்.

உடனே சென்னையில் இருந்த இலங்கை நெய்னாருக்கு சொல்லி அவருக்கு ஒரு மலர்க் கிரீடமும் மாலையும் ரெடி பண்ண சொல்லிட்டு அடுத்த நாளே சென்னைக்குப் பறந்தேன். நெய்னாரையும் அழைத்துக்கொண்டு அன்னை இல்லத்தில் நுழைந்தேன். அவர் ஒரு நாட்காலியில் அமர்ந்திருந்தார். அவரை மனமார வாழ்த்திவிட்டு அண்ணை எழும்புங்க என்றேன். என்னத்திற்கு? என்றார்.

"இல்லண்ணே உங்களுக்கு கௌரவம் பண்ணனும்"  என்றேன்.

"எனக்கு கௌரவம் பண்ணப் போறீயா? ஒன்றும் வேணாம்.. நீயே வந்துவிட்டியே அப்புறம் எதற்கு கௌரவம்?" என்று மறுத்தார்.

"அப்போ நான் வாங்கிட்டு வந்த பொன்னாடை கிரீடத்தை வீட்டுக்கு திரும்ப எடுத்திட்டுப் போகச் சொல்றீங்களா?" என்று சொல்லி அவரை எழுப்பி கௌரவம் செய்தேன்" என்று கூறி சிவாஜியுடனான தமது கடந்த கால நினைவுகளில் மௌலானா மூழ்கிப்போனார்.

Wednesday, October 2, 2013

ரேடியோ வீட்டுக்கு வந்த கதை

தேர்தல் கேட்டதில் உருகிப் போனது ரேடியோ


மணி  ஸ்ரீகாந்தன்

அவிசாவளை பென்றித் தோட்டத்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்த பேச்சுமுத்துவிற்கு தற்போது 77 வயதாகிறது. அந்த காலத்தில் ரேடியோவை வாங்கி அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் இவர். ஏனெனில் வீட்டில் வானொலிபெட்டி வைத்திருப்பது கௌரவத்தின் சின்னம்.
கஹவத்தை பொறனுவ தோட்டத்தில் தற்போது வசித்துவரும் அவரை சந்தித்து ரேடியோ பெட்டி வாங்கிய 'அதிசய' அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம்.

"அந்தக் காலத்தில் ரேடியோ என்பது ரொம்பவும் பெரிய விசயம். ரேடியோ வீட்டில் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஊரில் ராஜமரியாதை கிடைக்கும். பென்றித் தோட்டத்தின் அட்டாளை டிவிஷனில் சோலை பண்டிதர் என்ற ஒருவர் இருந்தார். அவரிடம் கிராமபோன் பெட்டி இருந்தது. பெட்டிக்கு வைன் கொடுத்து அதில் ரெக்கோர்ட்டைப் போட்டு இயக்கினால் அது சத்தம் போட்டு பாடும். ஊருக்கு வரும். ரயிலை  பார்ப்பதுபோல இதை ஒரு கூட்டமே பண்டிதர் வீட்டு முன்பாகக் கூடி வேடிக்கை பார்க்கும். இதுக்கு பின்னரே ரேடியோ வந்தது. ஊசியும் ரெக்கோர்டும் போடாமலேயே பாடுகிற பெட்டியாக வானொலி இருந்ததால சனங்களுக்கு இது பெரிய பிரமிப்பா இருந்தது.

எங்க தோட்டத்தில் எட்டு லயம். அதில் ரெண்டு ரேடியோதான் இருந்தது. அதில் ஒன்றை வைத்திருந்தது நான்.

அப்போது தோட்டத்தில் ஒருநாள் சம்பளம் 2.52 சதம். அது மின்சாரம் இல்லாத தேத்தண்ணிய கருப்பட்டியோட சுவைத்து குடித்த அந்தக்காலம். அவிசாவளை அப்போ ரொம்ப சிறிய நகரம் ஓலையால் வேயப்பட்ட குடிசை கடைகள் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. அப்போது டவுனில் தமிழர்கள் தான் செல்வாக்கு செலுத்தினார்கள். பெரும்பாலும் எல்லாமே தமிழ்க் கடைகள்தான். வங்கி என்று எதுவும் கிடையாது. ரெங்க சாமின்னு ஒருத்தர் இருந்தார். இப்போது சுதந்திர வர்த்தக வலயம் இருக்கிறதே அங்கேதான் அவர் வீடு இருந்ததா ஞாபகம். அவர் வட்டிக்கடை நடத்தினார். வட்டிக்கு பணம் வாங்க, ஈடுவைக்க அவரிடம்தான் போகணும். ஒரு வங்கி மாதிரி அவர் இயங்கி வந்தார்.

வஜ்யா ஸ்டோர்ஸ் என்ற ஒரு முஸ்லிம் கடையில்தான் மின்சார சாதனங்கள் விற்பனைக்காக இருந்தன. அங்கேதான் ரேடியோவும் விற்பனைக்காக இருந்தது. ரேடியோவின் விலை 270 ருபா. ரொம்பவும் பெரிய தொகை. ஆனாலும் எப்படியாவது ரேடியோ வாங்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். நான் மாதா மாதம் 5 ரூபா கட்டுவதாக கடைக்காரருடன் ஒப்பந்தம் போட்டு அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். நான் வாங்கிய ரேடியோ ஒரு பைசெட் ரேடியோ. அதோடு 14 ரூபாய்க்கு பெட்றியும் வாங்கினேன். அந்த பெட்றியை மூன்று மாதத்திற்கு பாவிக்கலாம். எவரெடி, பெரட் என்று இரண்டு சீமெந்து கல் அளவுக்கு பெரிதாக உள்ள பெட்டறிகளைத்தான் பாவிக்க வேண்டும். மின்சார ரேடியோ எழுபதுகளில் தான் வந்தது. அதில் பெரட்தான் ஒரிஜினல்.

நான் வாங்கிய ரேடியோவை 14 இன்ச் டீவி அளவில் பெரிதாக இருந்தது. மீடியம் சிற்றலை என்று இரண்டு அலை வரிசைகள் இருந்தன. மீடியம் வைத்தால் அதிக பெட்றி செலவாகும்னு அப்போது பேசிக்கொள்வாங்க. சிற்றலையில் அதிகாலை 4.30க்கு பாடல்கள் ஒலிபரப்பாகும். அந்தப் பாடல்களை கேட்டு முடிக்கும்போது விடிந்துவிடும். பிறகு ரேடியோவை நிறுத்திவிட்டு- வேலைக்கு போயிருவேன். எங்க வீட்டில் என்னைத் தவிர வேற யாரும் ரேடியோவை போட மாட்டாங்க. ரேடியோ கொண்டு வந்த புதிதில் எங்க அம்மா அப்பா கேட்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல. 'பாட்டு படிக்கிறவங்க ரொம்பவும் குள்ளமா இருபாங்களா... அவங்க எப்போ சாப்பிட போவாங்க?' என்றெல்லாம் கேள்வி கேட்டு என்னை துளைத்து எடுத்துட்டாங்க.

நான் எங்க ஊரு தோட்டப் பாடசாலையில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார்களிடம் படித்ததால் எனக்கு கொஞ்சம் விசயம் தெரிந்திருந்தது.

அந்த ரேடியோவிற்குள் முக்கியமா பல்பு மாதிரி மூன்று வேல்வ் இருக்கும். அது எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்.... அதில் யு.டீ.ஊ என்று ஒவ்வொன்றுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். அது இடி மின்னல் சமயத்தில் ரேடியோ போட்டிருந்தா  அடிச்சு போகும். அப்படி  அது பழுதாகிவிட்டால் புதுசா வாங்கிப் போடனும். ஒரு வேல்வ் 3.50 சதம். அதுக்கு தோட்டத்தில் இரண்டுநாள் வேலை செய்யணும். அப்படியே ஒரு மூன்று வருசம் வேலை செய்த ரேடியோவிற்கு ஒரு நாள் ஆபத்தும் வந்தது.

அது தேர்தல் நேரம். நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகளை ரேடியோவில் அறிவிப்பதால் நண்பர் சுப்பையாவும் நானும் விடிய விடிய ரேடியோவில் தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்தோம். விடியலில் ரேடியோவிற்கு மூச்சு நின்றுவிட்டது. உடனே ரேடியோவின் பின் கதவை திறந்து பார்த்தால் உள்ளே இருக்கும் மின் கருவிகள் அனைத்தும் உருகி வழிந்து கொண்டிருந்தது. ரேடியோ ரொம்ப நேரம் வேலை செய்ததால் சூடாகி  உருகிவிட்டது.

பிறகு என்ன செய்ய... அடுத்த நாளே ரேடியோவை சரி செய்ய மெக்கானிக்கிடம் கொண்டு சென்றேன். அப்போ அந்த பகுதிக்கே தெய்யோவிட்டயில்தான் ரேடியோ திறுத்தும் ஒரு பையன் இருந்தான். அவனிடம் கொண்டு  சென்று கொடுத்தேன். கழற்றிப் பார்த்துவிட்டு இது இனி வேலைக்கு ஆகாது. இது திறுத்துவதற்கு ஆகும் செலவில் புது ரேடியோ வாங்கலாம் என்றார். பிறகு அவரே அதை திறுத்தி யாருக்காவது விற்பதாக கூற அவர் கூறிய பாதி விலைக்கு நானும் சம்மதித்து அந்த ரேடியோவை கொடுத்து விட்டேன். அதற்கு பிறகு எழுபதுகளில் டிரான்சிஸ்டர் என்கிற சிறிய ரேடியோ வந்ததும் அதை வாங்கிக் கொண்டேன். அப்போது ரேடியோ வைச்சிருந்தால் கௌரவம். இன்றைக்கு கார் வைத்திருந்தாலும் அந்த கௌரவம் கிடையாது இன்றைக்கு எதை வேண்டுமானாலும் வாங்கலாம் பாருங்க...

கூறி முடித்தார் பேச்சுமுத்து