Monday, September 30, 2013

சன்கிளாஸ் அணிவதற்கு மக்கள் தயங்குவது ஏன்?

'சன்கிளாஸ் அணிந்த ஒரு பெண் தெருவில் சென்றால் ஆண் அவளைப் பார்ப்பதே ஒரு மாதிரிதான்.'விற்பனையாளர்  அமீனுடன் ஒரு கூலான உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய பழமொழி. முகத்தின் அழகு மூக்கு கண்ணாடியில் தெரியும் என்பது புதுமொழி. வண்ண வண்ண கலர்ஃபுல் வெயில் கண்ணாடிகள் சந்தைக்கு வந்து பல காலங்கள் கடந்து விட்டன.... ஆரம்பகாலத்தில் ஒப்டிக்கல் சென்டரிலும் பெரிய ஷோ ரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கூலிங் கிளாஸ் அல்லது சன் கிளாஸ் என அழைக்கப்படும் இந்த வெயில் கண்ணாடி இன்று வீதியோர மினிக்கடைகளில் பளபளக்கிறது. நூறு ரூபாயில் தொடங்கி ஐநூறு ரூபா வரையிலும் வீதியோரக் கடைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களில் குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அப்படியே சிலர் கண்ணாடிகளை வாங்கினாலும் அணிவது குறைவாக இருக்கிறது. வாங்கும் கண்ணாடிகளை வீட்டு அலுமாரிகளில் பத்திரப்படுத்தி வைக்கும் குடும்ப பெண்கள், குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் சமயத்தில் மட்டுமே அணிகிறார்கள். அந்த சுற்றுலாவோடு கண்ணாடியின் ஆயுளும் முடிந்து விடுகிறது.

ஏன் இந்த வெயில் கண்ணாடிகளுக்கு நம் நாட்டில் இந்த கதி? மேலை நாடுகளில் போல நாம் ஏன் கண்ணாடி அணியக்கூடாது? மேலும் இது வெயில் ஊர். சூரிய ஒளிக்கதிர்களின் தாக்குதல்களில் இருந்து கண்களை ஏன் நாம் பாதுகாக்கக் கூடாது?

எமது இத்தகைய கேள்விகளுக்கு சன்கிளாஸ் விற்பனை தொடர்பில் அறிவும் அனுபவமும் உள்ள விற்பனையாளர் மொஹம்மட் அமீனிடம் கேட்டோம். இவர் கிரேண்ட்பாஸ் ஸ்டேஸ் வீதியில் 'ஒப்டிவிஷன் ஒப்டோ கண் கிளினிக்' நடத்திவருகிறார்.
Optometrist என்பது கண்ணாடிகள் தொடர்பான துறையில் படித்து பயிற்சி பெற்றவர் என்று பொருள்.

"கூலிங்கிளாஸ் நம் நாட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் அணிய வேண்டிய ஒன்று. உடல் உறுப்புகளில் கண் மிக முக்கியமானது. அதிகபடியான சூரியக்கதிர்களில் இருந்து நம் கண்களைப் பாதுகாப்பது நமது கடமை.
பகல் பொழுதில் நாம் வெளியில் போகும் போது சன்கிளாஸ் அணிவது மூலம் அல்ட்ரா வயலட் எனப்படும் புற ஊதாக்கதிர்கள் மற்றும்  தூசுகளும் நம் கண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க முடிகிறது. அதனால் சன் கிளாஸ் என்பது  ஃபேஷனுக்காக அணிவது என்பதை விட கண்களின் பாதுகாப்புக்காக அணிவது என்பதே சரியானது. அணியவும் வேண்டும் என்கிறார் அமீன்.

ஆரம்பத்தில் நாகரிகப் பொருளாகவும் மைனர் 'லுக்';குக்காகவும் ஆண்கள் அணிந்திருக்கலாம். இன்று ஓஸோன் படல ஓட்டை காரணமாக உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வையடுத்து மக்கள் கண் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று பலருக்கும் கண்களில் பிரச்சினை உள்ளது. புறஊதாக்கதிரின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கண்மருத்துவர்களே சன்கிளாஸ் அணிவதன் அவசியம் பற்றிப் பேசுகிறார்கள். லென்ஸ் போட்டுக் கொண்டவர்களும் வெயில் கண்ணாடி அணிகிறார்கள். இதை அணிவதன் மூலம் எடுப்பான தோற்றமும் பாதுகாப்பும் கிடைக்கிறது.

புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால் மேலும் கண்புரை, கண்ணில் தசை வளர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட முடியும்.

"கண்ணின் பார்வைத் திறனை கண்டறிந்து பார்வைக் குறைபாடுகளை களைவதற்காக தேர்வு செய்து மூக்குக் கண்ணாடி அணிவதைப் போல வெயில் கண்ணாடி அணிய நாம் கண் மருத்துவரை நாடவேண்டியதில்லை. மூக்குக் கண்ணாடி விற்கும் கடைக்குச் சென்று விற்பனையாளரிடம் விவரம் சொல்லி அவரது ஆலோசனைக்கு அமைய சன் கிளாசை தெரிவு செய்வது நல்லது. உதாரணத்திற்கு இரவில் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற கண்ணாடியை அணிவது சிறந்தது. அதேபோல் பகலில் கிரே, பிரவுன் அணிவது கண்களுக்கு நல்ல குளிச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்" என்கிறார் அமீன்.

வீதியோரத்தில் கண்ணாடி வாங்குவது சிறந்தா? என்று; கேட்டோம்.

தகுதி பெற்ற கண்ணாடி விற்பனையாளர் ஒருவரின் ஆலோசனை பெற்று அவர் கூறிய தரத்தில் அந்த மொடலில் கிடைப்பதாக இருந்தால் வாங்கலாம். அதற்காக குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று கண்ணில் பட்ட கண்ணாடிகளை எல்லாம் வாங்கி மாட்டிக்கொள்வதால் கண்ணுக்குத்தான் பிரச்சினை. அதனால் வீதியோரத்தில் சன்கிளாஸ் வாங்குவதில் கொஞ்சம் கவனம் தேவை. தற்போது கிடைக்கும் கண்ணாடி மொடல்களில் போலோ  மிகவும் சிறப்பானது. 3000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. விலை உயர்வாக இருந்தால் அதன் தரமும் உயர்வாகத்தான் இருக்கும் என்று வீதியோர விற்பனையாளரிடம் மூவாயிரத்துக்கு சன்கிளாஸ் வாங்கி விடக்கூடாது. அனுமதி பெற்ற ஒப்டிஷியன்களிடம் வாங்கினால் கண்ணாடியில் ஏதாவது பிரச்சினை என்றால் கூட நீங்கள் அதை திருப்பி கொடுக்கலாம். உத்தரவாதமும் உண்டு. ஆனால் வீதியோர கண்ணாடிக்காரனை எங்கே தேடுவீர்கள்....?" என்றார் இவர்.

நம் நாட்டில் சன் கிளாஸ் அணியும் பழக்கம் மிகவும் குறைவு. நாம் சன்கிளாஸ் அணிவதை, பெண்களைக் கவரவும் 'கலர்ஸ்' காட்டவுமே ஆண்களால் அணியப்படுவதாகக் நாம் அர்த்தப்படுத்துகிறோம். கண் பாதுகாப்புக்காகத்தான் அணிகிறார்கள் என்பதை இந்த சமூகம் குறிப்பாக நகரங்களுக்கு வெளியே வசிக்கும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. சன்கிளாஸ் அணிபவன் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்க முடியாது என்ற எண்ணமும் குறிப்பாக, பெண்களிடம் இருக்கிறது. இதனால் ஆண்கள் வெயில் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கவே முயல்கிறார்கள். பணக்காரர்கள், வாகனங்களில் பயணிக்கிறவர்கள், எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் சன்கிளாஸ் அணிகிறார்கள். சாதாரண தரத்தினருக்கு இதில் சமூகக் கூச்சம் உள்ளது. சாதாரண தர பெண்கள் வெயில் கண்ணாடி அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆண்கள் ஒரு மாதிரி பார்ப்பார்களே என்ற பயம் இப்பெண்களுக்கு. உண்மையிலும் ஆணின் மனப்பாண்மை அப்படித்தான் இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ஒரு ஆண் சன்கிளாஸ் அணிந்து சென்றால் ஏதோ வேற்றுக்கிரத்தில் இருந்து வந்த ஜீவன் போல ஏனையோர் அவனைப் பார்ப்பதை அவதானிக்கலாம்.

"இப்படியான ஒரு தப்பான பார்வை சன் கிளாஸ் மீது இருப்பது உண்மை. இதைக் களைவது கஷ்டம். சன் கிளாஸ் பற்றிய அறிவை நம் சமூகத்திற்கு எடுத்து சொல்வது உங்களைப் போன்ற மீடியாக்களின் வேலை" என்கிறார் அமீன்.

வெண்ணிற வெயில் கண்ணாடி இருக்கிறதா, நடைபாதையில் விற்கிறார்களே? என்று அமீனிடம் கேட்டோம். நிறமற்ற வெயில் கண்ணாடி என்று ஒன்று கிடையாது என்ற அவர் நம் நாட்டில் நூற்றுக்கு 80 சதவீதமானோருக்கு அல்ட்ரா வயலட் பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறார்.

கண்கள் நம்முடையது. பார்வையில் கோளாறு ஏற்பட்டால் ஒப்பேற்றத்தான் முடியுமே தவிர முற்றிலுமாக சரி செய்வது கஷ்டம். உடலின் எல்லா பாகங்களையும் பாதுகாக்க முயலும் நாம்,  வெப்பம் மிகுந்த சூரியக் கதிர்களில் இருந்தும் புறஊதா கதிர்களிடமிருந்தும் கண்களைப் பாதுகாப்பதில் ஏனோ அசமந்தப் போக்கைக்  கடைபிடிக்கிறோம். எனவே வெளியே போய்வரும் ஆண் பெண் அனைவரும் தமது முகத்துக்கு ஏற்ற வெயில் கண்ணாடி ஒன்றை வைத்திருக்க வேண்டும். வெயிலில் அதை அணிவது கண்களுக்கு பாதுகாப்பானது. அல்ட்ரா வயலட் கதிர்களை தடுக்கும்
UVcut எனப்படும் கண்ணாடிகளை, கொஞ்சம் விலை அதிகமானாலும், வாங்குவது நல்லது.

விலை குறைவு என்பதற்காக கண்ணாடிகளை வாங்க வேண்டாம். ஏனெனில் கண்கள் உங்களுடையவை. நம்பிக்கைக்குரிய ஒப்டீஷியன்களிடம் சென்று விஷயத்தை விளக்கி வாங்குங்கள். கண்ணாடி வாங்கும்போது நண்பர் ஒருவரையும் அழைத்துச் செல்லுங்கள். எது பொருத்தமானது என்பதை அவர் சொல்வார். தேவைப்படும் சமயத்தில் மாத்திரம் வெயில் கண்ணாடிகளை அணிந்தால், வெட்டி விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment