Monday, September 30, 2013

வாழை இலை வியாபாரம்

"லஞ்ச்ஷீட் வருகை எங்கள் தொழிலை பாதித்து விட்டது"


வாழை இலை வர்த்தகர் ராஜேந்திரனுடன் ஓர் உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்


கூட்டுக்கறி குழம்பு, ரசம், மோர், கட்டிப்பருப்போடு சுடுசோறு அனல் பறக்க தலைவாழை இலையில் போட்டு பச்சை இலை வாசனையோடு மணக்க மணக்க உண்டு மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நினைத்தாலே அந்த சோற்றின் கமகம மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறதா...?

ஆனால் இன்று வாழை இலை சாப்பாடு கோயில் அன்னதானத்தோடு முடிந்து விடுவதாகவே சொல்லலாம். கல்யாண சாப்பாடு கூட பெரிய மண்டபங்களில் சில்வர் தட்டில் லஞ்ச்ஷீட் போட்டே பரிமாறப்படுகிறது. ஆனால் சில சைவ ஹோட்டல்களில் மட்டும் இன்றும் வாழை இலை சாப்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.

"வாழை இலை சாப்பாட்டு முறை தமிழர்களிடையே குறைந்து வருவதால் இலை வியாபாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது" என்று கூறுகிறார். கொழும்பு சென்றல் ரோட்டில் வசிக்கும் ராஜேந்திரன்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழை இலை வியாபாரம் செய்யும் இவரின் மாமா ரட்ணசிங்கம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் வாழை இலை வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தாராம். அவரின் மறைவின் பின் அந்த வியாபாரம் ராஜேந்திரனின் கைக்கு மாறி இருக்கிறது.

"எங்க மாமா காலத்தில் ஒரு நாளைக்கு பதினைந்தாயிரத்திற்கும் அதிகமாக இலைகள் விற்பனையாகின. இன்று இரண்டாயிரத்தில் வந்து நிற்கிறது. அவிசாவளை, ஹங்வெல்ல பகுதிகளிலிருந்து வாழை இலைகளை கொண்டு வந்து தருகிறார்கள். அவர்களிடம் மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். வாழை இலைகளை நான் 3.50க்கு கடைக்கு  போடுகிறேன். தலை வாழை இலை குறைந்த அளவில் மட்டுமே விற்பனை ஆகும். ஆலய பூசைகளுக்கு ஸ்பெஷலாக யாராவது ஓடர் எடுத்தால் தலைவாழை இலை கொடுப்பேன். ஒரு இலை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை ஆகும். லஞ்ச்சீட்  வருகைக்குப் பிறகு வாழை இலை வியாபாரம மிகவும் மந்த கதியிலேயே பயணிக்கிறது என்று கூறுகிறார் ராஜேந்திரன்.

திருவிழா காலங்களில் நல்ல வியாபாரம் பார்க்கலாம். அதோடு ஆலயத்தில் கல்யாண சாப்பாடு போட்டாலும் வாழை இலை வியாபாரம் படு ஜோராக நடக்குமாம். கொழும்பில் என்னைப் போலவே இன்னும் இருவர் இந்த வியாபரத்தில் நீண்டகாலமாகவே உள்ளார்கள்.

லஞ்ச்சீட் பாவிப்பது வேலைக்கு சுலபம் என்கிறார்களே?

"வேலை சுலபம் என்பது உண்மைதான். ஆனாலும் லஞ்ச்ஷீட் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவாதே! இயற்கையான வாழை இலை சீக்கிரமே மக்கிப்போகும். ஆனால் லஞ்ச்ஷீட் அப்படி அல்ல..." என்று சொல்லும் ராஜேந்திரன் வீட்டில் பழுத்து, கிழிந்து காய்ந்துப் போன இலைகள் கட்டு கட்டாகக் கிடக்கின்றன. இவற்றை ஒன்றும் செய்ய முடியாது. இனி இவை குப்பைத் தொட்டிக்குத்தான் என்று அலுத்துக்கொள்ளுகிறார், பழுதான இலைகள் நஷ்டக்கணக்கில்தான் வரும் என்றாலும் இவர் இலை வர்த்தகத்தை கைவிடுவதாக இல்லை.

"இந்த வர்த்தகத்தில் வாழை இலை சேகரிப்பவருக்கு பிரச்சினை கிடையாது. அவர் இலைக்கட்டுக்களைக் கொண்டு வந்ததும் காசை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். கொழும்பில் அவற்றை விற்பனை செய்யும் நாங்கள் தான் நஷ்டத்தைத் தாங்கவேண்டும்" என்று வியாபார நெழிவு சுழிவுகளைச் சொல்லும் இவர், மழை காலங்களில் வாழை இலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்.

மழை நாட்களில் வாழை இலையின் விலையை அதிகரிப்பீர்களா?

"நாங்கள் ஒரு நாள் வியாபாரம் செய்பவர்கள் அல்ல. தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக செய்பவர்கள். ஒரு நாள் இலை தட்டுபாட்டிற்காக அப்படி அதிகரித்து விட்டால் அடுத்தநாள் எப்படி வியாபாரம் செய்வது?" என்ற ராஜேந்திரன் பதிலில் உழைப்பின் நேர்மை பளிச்சிட்டது.

No comments:

Post a Comment