Tuesday, September 17, 2013

“அரவாணிகளை கேலி செய்பவர்களை கண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்”

அரவாணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் மல்லிகா


மணி  ஸ்ரீகாந்தன்

தீண்ட தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தலித்துக்களை அரவணைத்து அவர்களின் உரிமைகளுக்காக போராடிய மகாகவி பாரதி,அயோத்திதாசன்,தந்தை பெரியார்,டாக்கடர் அம்பேத்கார்,என்று காலத்துக்கு காலம் சிங்கங்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் இருக்கும் நிலையில் இருந்து கொஞ்சம் இறங்கி விட்டாலே நம்மை பந்தாட துடிக்கும் சமூகம்.அதிலிருந்து தப்பி பிழைத்து வாழ நாம் எடுக்கும் பிரயத்தனங்கள் சொல்லில் அடங்காது.நமக்கே இந்த நிலை என்றால் நாம் சொல்லப் போகும் அரவாணிகளின் நிலை எப்படியானது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.அவர்கள் பிறக்கும் போதே முழுமையான பெண் உணர்வுகளைக் கொண்ட ஆண்களாக பிறக்கிறார்கள்.எவரும் வலிந்து அரவாணிகளாவதில்லை.அவர்கள் பெண்களாக வாழ விரும்பினால் அப்படியே விட்டு விடுவதே மனிதநேயம் மனித உரிமை.இதற்கு தடையாக எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான்.இந்த வகையில் தமிழக அரசை பாராட்ட வேண்டும்.

தமிழக அரவாணிகளுக்கு ஏனையோரைப் போல வாழ்வதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரங்களை அது படிப்படியாக வழங்கி வருகிறது.எனினும் எயிட்ஸ் நோயாளிகள் பற்றி நாம் எவ்வளவு தப்பபிராயங்களை கொண்டிருக்கிறோமோ அதே அளவிற்கு அரவாணிகள் பற்றியும் நாம் நிறையவே தப்பான அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம்.எயிட்ஸ் நோயாளர்களை புரிந்துக் கொள்ள முயல்வதைப் போலவே நம்முடன் பிறப்பின் குற்றம் காரணமாக சரிசமமாக வாழ முடியாத நிலையில் பரிதவிக்கும். அரவாண்களையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.எமது அபிப்பிராயங்கள் மாற்றம் காண வேண்டும்.இவ்வாறு அரவாணிகளைப் புரிந்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பாடுபடும் நவீன பெரியார்கள் இன்று தமிழகத்தில் இருக்கவே செய்கிறார்கள்.அவ்வாரான ஒருவரைத்தான் இனறு நாம் சந்திக்கப் போகிறோம்.

வேலூர் காட்பாடியில் அரவாணிகளின் பொறுப்பாளராக இருப்பவர் பெயர் ‘வீல்’ மல்லிகா. ‘வீல்’ என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.அரவாணிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார் மல்லிகா.அந்த சமூக சேவகியை அவரின் தொண்டு நிறுவனத்தில் வைத்து சந்தித்தோம்.
அறுபது குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

“இந்தக் குழந்தைகளோட பெற்றோர்கள் எல்லோரும் எயிட்ஸ் நோயாளர்கள்.அதனால் தான் அவர்களின் குழந்தைகளை எடுத்து என் பாதுகாப்பில் வளர்த்து வருகிறேன்.இவர்களோடு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.வாழ்க்கையில் ஏதோ பெரிசா சாதிச்சிட்ட மாதிரி தோன்றுகிறது.”என்றார் மல்லிகா. எயிட்ஸ் நோயாளர் ஒரு வீட்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தால் அந்த வீட்டையே கொழுத்தும் இந்த உலகத்தில் மல்லிகாவை பார்க்க தெய்வமாக தெரியவில்லை? பி.கொம் பட்டதரியான மல்லிகா,ஆறு ஆண்டுகளாக சென்னை அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றி இருக்கிறாராம். சமூக சேவை செய்யும் நோக்கம் எப்படி வந்தது? என்று அவரிடம் கேட்டால்

“பாதையில் போகும் அரவாணிகளை சிலர் கல்லால் அடிப்பதும்,தகாத வார்த்தைகளில் திட்டுவதையும் நான் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.இவர்களுக்கு உதவ வேண்டும் என்று மேலிட்ட எண்ணம்தான் என்னை சமூக சேவகியாக்கியது என்றார் மல்லிகா.  “அப்போதெல்லாம் எனக்குள் ஒரு எண்ணம் மேலிடும்;.இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோண்றும்.இதையடுத்து இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன்.

காப்பகத்தில் குழந்தைகள்
இதன் ஊடாக அரவாணிகள் எதிர்நோக்கிய நிறைய பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்திருக்கிறேன்.ஒரு குடும்பத்தில் அரவாணி என்று ஒருவன் அடையாளம் காணப்பட்டால்.அவனை அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள்.அப்படித் தெருவுக்கு வருபவர்கள் வாழ வழியுமில்லாமல் தங்க இடமும் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.அப்படித் தவிப்பவர்களில் சிலர் தாமாகவே அரவாணிகள் சங்கத்தில் இணைந்து விடுவார்கள்.”

வேலூர் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவியாக கங்கா இருக்கிறார்.இரண்டாயிரம் அரவாணிகளுக்கு தலைவியாக இருக்கிறார்.அப்படி இருக்கும் அரவாணிகளுக்கு தங்க இடமில்லாமல் கஷ்டப்படுவதை தெரிந்துக் கொண்டு வேலூர் மாவட்ட கலக்டரிடம் முறையிட்டு அரவாணிகளுக்கு தனியாக ஓரிடத்தில் இருபது வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.முக்கிமாக ஆண்களாக இருந்து பெண்களாக மாறும் இவர்கள் தாமாகவே தமது ஆண் உறுப்பை வெட்டி எறிந்தார்கள்.அப்படி வெட்டும் போது புண் ஏற்பட்டு ஏற்புவலி உண்டாகி சிலர் இறந்து போனார்கள்.

எனவே இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதற்காக அரசே இலவசமாக ஆண் உறுப்பை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.முதலில் எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.பிறகு வேலூரில் அரவாணிகளை எல்லாம் ஒன்று திரட்டி பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினேன்.அதன் பயனாலேயே முதற்கட்டமாக ஐந்து அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அது முழு அளவில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கு தொன்னூறூ சதவீதமான அரவாணிகள் இன்று அறுவை சிகிச்சையின் மூலமாக ஆணுறுப்பை அகற்றிக் கொள்கிறார்கள்.

மேலும் அரவாணிகளுக்கு ஆயுள் காப்புறுதி செய்ய முடியாது.என்ற ஒரு நிலை இருந்தது.ஆடு,மாடுகளுக்கெல்லாம்.கூட காப்புறுதி செய்யும் போது அரவாணிகளுக்கு ஏன் காப்புறுதி வசதி கிடையாது என்று கேட்டு போராட்டம் நடத்தி அதிலும் வெற்றிப் பெற்றோம்.இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம்தான்.ஆனால் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.வேலூரில் அரவாணிகள் நூற்றி ஐம்பது பேருக்கு குடும்ப பங்கீட்டு அட்டை வாங்கி கொடுத்திருக்கிறோம்.அடுத்து வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கவும் அவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

தற்போது தமிழக அரசு அரவாணிகளுக்கென்று தனியாக ஒரு நலவாரியம் அமைத்திருப்பதால் அவர்களின் கல்வி,திறமைக்கேற்ப தொழில் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. இனி அரவாணிகள் பிச்சை எடுக்கும் நிலை நீடிக்காது.பொது மேடை,தொலைக்காட்சி என்று அரவாணிகள் எல்லா இடங்களிலும் கௌரவம் பெறுவதால் அரவாணிகள் மீதான நம் சமூகத்தின் வெறுப்பு விலகிப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.”

இவ்வாறு சொல்லும் மல்லிகாவிடம் அரவாணிகளோடு சகஜமாக பழகுவதற்கு கூச்சமாக இல்லையா என்றோம்.  “அப்படி ஒன்றுமில்லை.பொதுவாக பெண்கள் அரவாணிகளை கண்டு பயப்படவோ வெட்கப் படவோ தேவையில்லை.ஏனென்றால் அரவாணிகளின் உணர்வுகள் செயல்பாடுகள் எல்லாமே பெண்கள் மாதிரியே தான் இருக்கும்.அரவாணிகள் பெண்களை தங்களைப் போலவே நினைத்துக் கொள்வார்கள்.ஆனால் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” என்று சிரிக்கும் மல்லிகாவிடம் அரவாணிகள் எப்படி உருவாகிறார்கள்?என்று அடுத்த வினாவை முன்வைத்தோம்.


"இதில் பெரும்பாலானவர்களுக்கு பிறப்பிலேயே இந்தக் குறைப்பாடு வந்து விடுகிறது. குறிப்பாக ஒரு அரவாணியை ஐந்து,ஆறு வயதிலேயே அடையாளம் கண்டு விடலாம்.இதற்கு மருந்து சிகிச்சை என்று எதுவுமே கிடையாது.ஆனால் சில அரவாணிகளை காலம் உருவாக்குவதாக சொல்கிறார்கள்.அதாவது.சில பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு  ஜடை பின்னி விட்டு பொட்டுவைத்து பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். இந்த செயற்பாடு அந்த ஆண் குழந்தையை பெண்கள் மீதான பிரியத்தை அதிகப்படுத்தி தங்களைப் பெண்ணாக நினைத்துக் கொள்ள தூண்டுகிறது.அதுவே நாளடைவில் அவர்கள் அரவாணிகளாக உருவாக வழிவகுத்து விடுகிறது.”

அரவாணிளை கேலிப் பொருளாக பார்க்கும் பழக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறதா? “ஆமாம் வட இந்தியாவில் அரவாணிகளை தெய்வமாக மதிக்க,இங்கே நம் ஊரிலோ, அவர்களை கிண்டல் செய்கிறோம்.இப்படியானவர்களை நாம் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் வருடம்தோறும் நடக்கும் ‘கூவாகம்’திருவிழாவில் கலந்து கொள்ள வரும் ஆயிரக்கணக்கான அரவாணிகள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு சந்தோசமாக இருக்கவே வருகிறார்கள்.ஆனால் அங்கேயும் கூடி விடும் இளைஞர்கள் அரவாணிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.நானே அதை நேரில் பார்த்திருக்கிறேன்.அரவாணிகள் குளிப்பதையும்,உடை மாற்றுவதையும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலம்.அவர்களும் மனிதர்கள்தான் என்பதை ஏன் உணர்வதில்லை” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் மல்லிகா.

ஆடை மாற்றும் அரவாணிகளை
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்
சமூக சேவையில் வேறு ஏதாவது செய்திருக்கிறீர்களா?என்றும் மும்பை சிவப்பு விளக்கு ஏரியாவுக்கு கடத்தப்பட்டிருந்த தமிழ் நாட்டு பெண்கள் பத்துப் பேரை தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சென்று மீட்டு வந்தோம்.இப்போது அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டு புது மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.என்று கூறியவரிடம் இப்படி ஆபத்தான காரியங்களில் எல்லாம் இறங்குகிறீர்களே இதற்கு உங்கள் கணவர் எப்படி சம்மதிக்கிறார்?என்று ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டோம்.ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பினனாலும் ஒரு ஆண் இருப்பார்.அது எனக்கு தான் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன்.எனது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எனது கணவர் சந்திரன் உதவியாகத்தான் இருக்கிறார்.எனது வெற்றிகளுக்கு காரணம் எனது முயற்சியும் எனது கணவரின் ஒத்துழைப்பும் தான் என்று பெருமதம் கொள்கிறார் மல்லிகா. வாழ்க!

அரவாணி  'ரோஸ்' நேர்காணலை படிக்க…

ரோஸ்சுடன் சில நிமிடங்கள்....

No comments:

Post a Comment