Sunday, September 1, 2013

தீயில் நடக்கலாமா..

தீ மிதித்தலில் இயற்கையைக் கடந்த தெய்வீக சக்தி ஏதாவது உண்டா?


தமிழ்நாட்டில் மாரியம்மன்,காளியம்மன்,திரௌபதை அம்மன் போன்ற பல கோவில்களின் திருவிழாக்களில் தீ மிதித்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறோம்.தீ மிதித்ததல் என்பது தமிழ் நாட்டில் மட்டும் நடக்கவில்லை.வட இந்தியாவிலும் நடத்தப்படுகிறது.உலகில் சீனா,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து,பிஜி தீவுகள்,நியுசிலாந்து,ஸ்பெயின்,பல்கேரியா,தாஹிட்டி போன்ற நாடுகளிலும் இது நடத்தப்படுகிறது.

இந்து மட்டும் தான் தீ மிதித்தலில் ஈடுப்படுகிறார்கள் என்பது அல்ல.முஸ்லிம்கள் வட இந்தியாவில் பக்ரித் பண்டிகையின் போது தீ மிதிக்கிறார்கள்.ஜப்பானில் புத்த மதத்தினரும் ஸ்பெயினில் கிறிஸ்தவர்களும் தீ மிதித்தலில் ஈடுபடுகிறார்கள்.மேலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் உலகின் பலப் பகுதிகளில் தீ மிதிக்கிறார்கள்.அமெரிக்காவில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 4ம் திகதி தீ மிதித்தலை ஒரு அமைப்பு நடத்துகிறது.இதற்காக 2000 ரூபா பயிற்சி கட்டணமாக பெற்றுக் கொள்கிறது.அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்து பலரை தீ மிதித்தலில் ஈடுபடச் செய்கிறது.தைரியத்தை ஏற்படுத்தவே இச்செயல்களை இந்த அமைப்பு செய்கிறது. இதற்கான அடுத்த தீ மிதித்தல் எப்போது என்பதை இணையத்தில் வெளியிட்டு பங்கு கொள்பவர்களை அழைக்கிறது.
தீ மிதித்தல் என்பது அண்மையில் தோன்றியது அல்ல,சுமார் 3200 (1200BC)ஆண்டுகளுக்கு முன்பே இது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.கிரீஸ்நாட்டிலும் தீ மிதித்தல் நடத்தப்பட்டு உள்ளது. பழங்காலத்தில் செந்தணல் மற்றும் சூடான கல்லில் நடத்தப்பட்டு உள்ளது. இது ஒரு நெருப்பு கண்காட்சியாக இருந்தது.தீப்பெட்டி கண்டுபிடிக்காத காலத்தில் நெருப்பை கடவுளாக வழிப்பட்டனர்.அதைப் பயன் படுத்தி பாதுகாத்து வந்தனர்.நெருப்பிற்காக சண்டை கூட நடந்துள்ளது.
நெருப்பை குவியலாக பாதுகாத்து வந்ததை பார்க்க மக்கள் கூடினர். அது நெருப்பு காட்சியாக இருந்தது.இந்த நெருப்பில் முதன் முதலில் இளைஞர்கள் சில சாகசம் செய்தனர்.இதைத் தொடர்ந்து தீ மிதித்தல் ஏற்பட்டது.
 தீ மிதித்தல் என்பது தீப்படுக்கையில் வெறுங்காலில் நடந்தே செல்வது ஆகும்.தீக்குழி ஒரு நெருப்பு மெத்தையாகும்.இதில் நடப்பவர்களுக்கு நெருப்பு சுடுவதில்லை கால்கள் வெந்துவிடுவதில்லை.தீப்புண் ஏற்படுவதில்லை.
தீயில் நடந்தால் கால்கள் சுடுவதில்லை என்றால் ஆச்சரியம் இல்லையா? இதில் இயற்கையைக் கடந்த தெயவீக சக்தி ஏதாவது உண்டா? அல்லது யுக்தி (Trick)ஏதாவது உண்டா?ஆம் இது யுக்தி தான்.இதன் பின்னால் அறிவியல் உள்ளது.

தீக்குளி

தீக்குளியானது 10அடி முதல் 12நீளம் இருக்கும்.ஆனால் 20அடிக்கு மேல் இருக்காது.கட்டைகளைப் போட்டு எரியவிட்டு அது எரிந்தவுடன் எரியாத தணலால் ஆன கரியாக இக்குழி உள்ளது.இதைப் பகலில் பார்த்தால் கரியின் மீது சாம்பல் படிந்திருப்பது நன்கு தெரியும்.பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படுகிறது.இரவில் இது ஒளிரும் சிகப்பு விளக்காக தெரியும்.

தீ மிதித்தல்

தீ மிதித்தல் என்பது உண்மையில் தீ மிதித்தல் அல்ல.இது கரிமீது நடத்தல் ஆகும்.மக்கள் இந்தச் செந்தணல் மீது நடந்து தான் அந்த பக்கம் செல்கின்றனர்.10அடி நீளம் கொண்ட இரும்பால் ஆன பழுக்க காய்ச்சிய இரும்புத் தகட்டில் நீங்கள் நடக்கிறீர்கள் எனச் சொன்னால் உங்களை பைத்தியம் எனச் சொல்வார்கள்.பழுக்க சிவந்திருக்கும் தகடானது ஒரு மில்லி செகண்டில் 30 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் கொண்டிருக்கும்.இதனால் இதன் மீது காலை வைக்க முடியாது.

நெருப்புப் படுக்கை இந்தளவிற்குச் சூடானது அல்ல.இருப்பினும் மிக சூடாகத்தான் இருக்கும்.அப்படி சூட்டின் மீது நடப்பதற்குப் பினனால் இயற்கையான இயற்பியல் உள்ளது.தீப்படுக்ககையின் மீது நடப்பவர்களை நீங்கள் கவனித்துப் பாருங்கள் நடப்பவர் ஒருபோதும் சோம்பேரித்தனமாக நடப்பதில்லை.வேகமாக ஓடுபவராக,சுறுசுறுப்பாக நடப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.யாராவது ஒருவர் கூட நெருப்பில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடியாது.

எரிந்து முடிந்த மரக்கட்டையானது,தீக்குளியில் உண்மையாக மரக்கரியாக உள்ளது.இது உண்மையில் சுத்தமான கார்பன் ஆகும்.இது மிகவும் எடைக் குறைந்த ஒரு தனிமம் ஆகும்.இந்த குறைந்த எடைக் கொண்ட (கார்பன்)கரியானது குறைந்த வெப்பத்தை மட்டுமே கொடுக்கும்.இது உங்கள் கால்பாதத்தில் சூட்டை ஏற்ற நீண்ட நேரம் தேவை.அதாவது மூன்று நிமிடம் தேவை.இந்தக் கரி மீது உள்ள சாம்பல் ஆனது ஒரு நல்ல வெப்பத்தடை (insulator) ஆகும்.

சாம்பல் வெப்பம் கடத்தாப் பொருளாக நெருப்பை மூடி உள்ளது.வெப்பம் கடத்தாப் பொருளாக சாம்பல் இருந்தாலும் வெப்பம் மெதுவாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கும்.இதன் மீது சிறிது நேரம் நின்றால் காலில் தீக்காயம் ஏற்படும்.வேகமாக நடக்கும் போது உங்கள் காலடி சில கரித்துண்டுகள் மீது மட்டுமே படும்.நீங்கள் மிக விரைவாக தீ படுக்கையை கடந்து சென்று விடுவீர்கள்.இது உங்கள் காலைச் சுடும் அளவிற்கு வெப்பம் இருக்காது.
ஒருவர் கீழே விழுந்தாலோ,பயத்தின் காரணமாக தீ மீது காலைச் சாய்த்தாலோ,குதித்தாலோ,நின்றாலோ காயம் கணடிப்பாக ஏற்படும்.
தீ மிதித்தலின் போது நமது தோல் எரிவதற்கு சில வினாடிகள் தேவைப்படுகிறது.தீ தோலை எரிக்க மூன்று வினாடிகள் ஆகும்.12அடி நீளத்தை கடந்து செல்ல ஒரு வினாடிக்கு குறைவான நேரமே ஆகிறது.மேலும் இதை கடக்க 6முதல் 7காலடிகள் மட்டுமே நெருப்பில் படுகிறது.ஒரு காலுக்கு 3அடிதான் நெருப்பில் படுகிறது.

கோயில்களில் நீங்கள் கவனித்தால் கல் உப்பை நெருப்பு குழியின் மீது கொட்டுவார்கள்.இது காற்றில் உள்ள ஈரத்தை இழுத்துக் கொள்ளும்.மேலும் தீ மிதிப்பதற்கு முன்பு நீரால் கால்களை பலமுறை கழுவி படுக்கையைச் சுற்றி வருவர்.நீரில் கழுவிய கால் மண்ணில் பட்டால் அதில் உள்ள அழுக்கு காலில் ஒரு அடுக்கை உண்டாக்கும்.இந்த அழுக்கு நெருப்பிற்கும்,காலிற்கும் இடையில் இருந்து கால் விரைவில் சூடேருவதைத் தடுக்கிறது.

உலகச் சாதனை

தீ மிதித்தல் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்கள் 1930 ஆண்டு முதலே கொடுக்கப் பட்டு வருகிறது.1930ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மனோதத்துவ ஆராச்சி பலகலைக்கழகம் இரண்டு தீ மிதி நிகழ்ச்சியை நடத்தி இதில் உள்ள அறிவியல் அற்புதங்களை வெளிப்படுத்தியது.1935ஆம் ஆண்டு குடா பக்ஸ் (kuda bux) என்கிற இந்தியரும் இரண்டு ஆங்கில விஞ்ஞானிகளும் சேர்ந்து 12அடி தீ படுக்கையில் நடந்து காட்டினர்.இதில் செந்தூர மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன.இதன் வெப்ப நிலை 800டிகிரி  ஃபார்ன்ஹிட் ஆகும்.1937ஆம் ஆண்டு அகமத் உசைன் மற்றும் ரஜ்ஜினல் அட்ஹாக் ஆகிய இருவரும் தீ மிதித்தனர்.இவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.தீ மிதித்தலுக்கும் கடவுள் பக்திக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபித்தனர்.

அமெரிக்காவில் ரெட்மண்ட் வில்லே என்கிற இங்கிலாந்து இயற்பியல் பேராசிரியர் 1997ஆம் ஆண்டு மிக அதிகமாக கொண்ட நெருப்பு படுக்கையில் நடந்து உலக சாதனை படைத்தார்.1602 டிகிரி முதல் 1813 டிகிரி ஃபாரன்ஹிட் வெப்பம் கொண்டதாக அது இருந்தது.இதற்கு முந்தைய உலக சாதனை 1575 டிகிரி பாரன்ஹிட் 1987ம் ஆண்டு நடந்தது ஆகும்.

1987ஆம் ஆண்டு 120 அடி தூர தீப்படுக்கையை நடந்ததுதான் உலக சாதனையாக இருந்தது.ரெட்மண்ட் வில்லே 1938ஆம் ஆண்டில் 165 அடி தூர தீப்படுக்கையை கடந்து உலக சாதனைப் படைத்தார்.வெப்பத்தை அளக்க அகச் சிவப்பு கதிர் மற்றும் பைரோ மீட்டர் பயன்படுத்தப்பட்டது. ரெட்மண்ட் வில்லேவிற்கு ஒரு சிறு தீக்காயம் கூட ஏற்பட வில்லை.தீ மிதித்தலில் உள்ள அறிவியல் தத்துவத்தை விளக்கினார்.ரெட்மண்ட் வில்லேவிற்கு எந்த மத நம்பிக்கையோ,கடவுள் நம்பிக்கையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்த ஒருவர் நெருப்பின் மீது நீண்ட தூரம் நடக்கலாம். நெருப்பு மிக வெப்பமாக இருந்தாலும் காலில் உள்ள நீர் நெருப்பிற்கும்,காலிற்கும் இடையே ஒரு நீராவிப் போர்வையை ஏற்படுத்துகிறது.இதனால் சுடுவதற்கு அதிக நேரம் ஆகிறது.இந்த முறையில்தான் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆனாலும் சில ஆலயங்களில் அம்மனுக்காக தீமிதிக்கிறோம்,அம்மன் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையோடு பச்சை குழந்தையை தூக்கிக் கொண்டு தீயில் இறங்குகிறார்கள்.இது மிகவும் ஆபத்தான விடயம். கரணம் தப்பினால் மரணம்.எனவே சாமி மீதுள்ள பக்தியில் குழந்தையை தீயிற்கு பலியாக்கி விடாதீர்கள்.

அடுத்த முறை தீ மிதித்தலை நீங்கள் பார்த்தால்.இதில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

நன்றி: அறிவியலும் அற்புதமும்

2 comments:

  1. ஒரு அறிவியல் உண்மையை சொல்லியிருக்கின்றிர்கள் ஐயா.... நன்றி ஆனால் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும்.இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உண்டாகும். எனவேதான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. இதுவே தீ மிதித்தலுக்குப் பின் உள்ள அறிவியல் உண்மை.

    ReplyDelete