Monday, September 30, 2013

ஜல், ஜல் வண்டி

மாட்டு வண்டி மண்ணெண்ணை


மணி  ஸ்ரீகாந்தன்

ஜல்... ஜல்... மணியோசையுடன் ஊரைச்சுற்றி வந்த மாட்டு வண்டில் சவாரிகளை இன்று பார்க்க முடிவதில்லை. அப்படியே எங்காவது ஒரு மாட்டு வண்டிலை பார்த்துவிட்டால் ஹய்... ஹய். மாட்டு வண்டி! என்று சிறிசுகள் ஏதோ உலக அதிசயத்தை கண்டதுப்போல ஆச்சர்யத்தோடு பார்ப்பதை நாம் காண்கிறோம். அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் மாட்டு வண்டி இருப்பது என்பது இப்போ பி.எம்.டபிள்யூ கார் வைத்திருப்பது போன்று சமூகத்தில் ஒரு மரியாதையை கொடுக்குமாம்...

அப்படி சிறப்பு பெற்ற மாட்டு வண்டிகளை இன்று பார்க்க முடியவில்லை... ஆனால் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையில் மட்டும் இன்றும் இருபது மாட்டு வண்டிகளில் மண்ணெண்ணை வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.

கொழும்பின் மூலை முடுக்குகளை சுற்றிவரும் இந்த ஜல், ஜல் மண்ணெண்னை மாட்டு வண்டிகளில் சொந்தக்காரார் பெயர் சிந்தக கருணாரத்ன.

"நாங்க இப்போது ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தில் மண்ணெண்னை வியாபாரம் செய்து வருகிறோம். காலையில் ஆறு மணிக்கு திறக்கப்படும் இந்த மண்ணெண்னை நிலையத்தை பகல் பன்னிரெண்டு மணியுடன் மூடி விடுகிறோம்.


இங்கே மொத்த விற்பனைக்குதான் முதலிடம் கொடுக்கிறோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு மணித்தியாலங்களுக்குள் ஒரு பவுசர் எண்ணெய் காலியாகிவிடும். இன்று அதில் அரைவாசிக்கூட விற்பனையாவதில்லை. மண்ணெண்னை வியாபாரம் மந்தகதியில்தான் நடக்கிறது. மண்ணெண்னை அடுப்புகள் எரிவாயுக்கு மாறியதுதான் இந்த நிலைமைக்கு காரணம். ஒரு பவுசரில் 6600 லீட்டர் மண்ணெண்னை இருக்கும். அதன் விலை பதினைந்து வருடங்களுக்கு முன் 48 ஆயிரம்... இன்று அதே பவுசர் 6 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்" என்று சொல்லி வாய்பிளக்க வைக்கிறார் கருணாரத்ன. மண்ணெண்னை ஷெட்டுக்கு முன்னால் மாட்டு வண்டியோடு மண்ணென்னை வாங்க வந்திருந்த நபரை அனுகி விசாரித்தோம். அவர் பெயர் கண்ணா. கண்ணாரத்தெருவைத் சேர்ந்தவர்.

"நானும் ரொம்ப காலமாக இந்த மண்ணெண்னை வியாபாரம்தான் செய்கிறேன். காலையில வண்டியோட வந்து 180 லீட்டர் மண்ணெண்னை ஏற்றிக்கொண்டு கிளம்புவேன். ஒரு மணிக்கெல்லாம் வியாபாரம் முடிந்துவிடும். ஜிந்துப்பிட்டி, கண்ணாரத்தெரு, ஆட்டுப்பட்டுத்தெரு, கொச்சிக்கடை, சென்றல்ரோட் உள்ளிட்ட நமக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் மட்டுமே நம்ம வியாபாரம். ஏறியாவை நாங்களே காலகாலமாக பிரிச்சு வச்சிருக்கோம். அதுல வேற யாரும் வர அனுமதிக்கமாட்டோம். இன்னைக்கு ஷெட்டில் வாங்கிட்டுப் போற மண்ணெண்னைக்கான பணத்தை மறுநாள்தான் வந்துகொடுப்போம். மாடும் வண்டியும் ஷெட்டுக்கு சொந்தமானதுதான்.

ஆனாலும் அதை நாங்களே பராமரித்துக்கொள்வோம். மாட்டுக்கு ஒரு நாளைக்கு புல்லு, புண்ணாக்குக்கு மட்டுமே முந்நூறு ரூபா செலவாகிறது. மாட்டுக்கு ஒழுங்கா சாப்பாடு போட்டு வளர்த்தா தானே நம்ம குடும்பமும் நல்லா நாலு வேளையும் சாப்பிடும்" என்று சொல்லும் கண்ணா இன்னும் திருமணம் முடிக்கவில்லை. அம்மா அக்காவோடுதான் இருக்கிறாராம். மாட்டு வண்டி பவுசரில் மண்ணெண்னை ஃபுல்லா ஏற்றிக்கொண்ட கண்ணா மாட்டை தட்டிவிட மாட்டு வண்டி ஜல் ஜல் என்ற ஓசையோடு பயணத்தை ஆரம்பித்தது...

சன்கிளாஸ் அணிவதற்கு மக்கள் தயங்குவது ஏன்?

'சன்கிளாஸ் அணிந்த ஒரு பெண் தெருவில் சென்றால் ஆண் அவளைப் பார்ப்பதே ஒரு மாதிரிதான்.'விற்பனையாளர்  அமீனுடன் ஒரு கூலான உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய பழமொழி. முகத்தின் அழகு மூக்கு கண்ணாடியில் தெரியும் என்பது புதுமொழி. வண்ண வண்ண கலர்ஃபுல் வெயில் கண்ணாடிகள் சந்தைக்கு வந்து பல காலங்கள் கடந்து விட்டன.... ஆரம்பகாலத்தில் ஒப்டிக்கல் சென்டரிலும் பெரிய ஷோ ரூம்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கூலிங் கிளாஸ் அல்லது சன் கிளாஸ் என அழைக்கப்படும் இந்த வெயில் கண்ணாடி இன்று வீதியோர மினிக்கடைகளில் பளபளக்கிறது. நூறு ரூபாயில் தொடங்கி ஐநூறு ரூபா வரையிலும் வீதியோரக் கடைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களில் குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அப்படியே சிலர் கண்ணாடிகளை வாங்கினாலும் அணிவது குறைவாக இருக்கிறது. வாங்கும் கண்ணாடிகளை வீட்டு அலுமாரிகளில் பத்திரப்படுத்தி வைக்கும் குடும்ப பெண்கள், குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் சமயத்தில் மட்டுமே அணிகிறார்கள். அந்த சுற்றுலாவோடு கண்ணாடியின் ஆயுளும் முடிந்து விடுகிறது.

ஏன் இந்த வெயில் கண்ணாடிகளுக்கு நம் நாட்டில் இந்த கதி? மேலை நாடுகளில் போல நாம் ஏன் கண்ணாடி அணியக்கூடாது? மேலும் இது வெயில் ஊர். சூரிய ஒளிக்கதிர்களின் தாக்குதல்களில் இருந்து கண்களை ஏன் நாம் பாதுகாக்கக் கூடாது?

எமது இத்தகைய கேள்விகளுக்கு சன்கிளாஸ் விற்பனை தொடர்பில் அறிவும் அனுபவமும் உள்ள விற்பனையாளர் மொஹம்மட் அமீனிடம் கேட்டோம். இவர் கிரேண்ட்பாஸ் ஸ்டேஸ் வீதியில் 'ஒப்டிவிஷன் ஒப்டோ கண் கிளினிக்' நடத்திவருகிறார்.
Optometrist என்பது கண்ணாடிகள் தொடர்பான துறையில் படித்து பயிற்சி பெற்றவர் என்று பொருள்.

"கூலிங்கிளாஸ் நம் நாட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் அணிய வேண்டிய ஒன்று. உடல் உறுப்புகளில் கண் மிக முக்கியமானது. அதிகபடியான சூரியக்கதிர்களில் இருந்து நம் கண்களைப் பாதுகாப்பது நமது கடமை.
பகல் பொழுதில் நாம் வெளியில் போகும் போது சன்கிளாஸ் அணிவது மூலம் அல்ட்ரா வயலட் எனப்படும் புற ஊதாக்கதிர்கள் மற்றும்  தூசுகளும் நம் கண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க முடிகிறது. அதனால் சன் கிளாஸ் என்பது  ஃபேஷனுக்காக அணிவது என்பதை விட கண்களின் பாதுகாப்புக்காக அணிவது என்பதே சரியானது. அணியவும் வேண்டும் என்கிறார் அமீன்.

ஆரம்பத்தில் நாகரிகப் பொருளாகவும் மைனர் 'லுக்';குக்காகவும் ஆண்கள் அணிந்திருக்கலாம். இன்று ஓஸோன் படல ஓட்டை காரணமாக உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வையடுத்து மக்கள் கண் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று பலருக்கும் கண்களில் பிரச்சினை உள்ளது. புறஊதாக்கதிரின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. கண்மருத்துவர்களே சன்கிளாஸ் அணிவதன் அவசியம் பற்றிப் பேசுகிறார்கள். லென்ஸ் போட்டுக் கொண்டவர்களும் வெயில் கண்ணாடி அணிகிறார்கள். இதை அணிவதன் மூலம் எடுப்பான தோற்றமும் பாதுகாப்பும் கிடைக்கிறது.

புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால் மேலும் கண்புரை, கண்ணில் தசை வளர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட முடியும்.

"கண்ணின் பார்வைத் திறனை கண்டறிந்து பார்வைக் குறைபாடுகளை களைவதற்காக தேர்வு செய்து மூக்குக் கண்ணாடி அணிவதைப் போல வெயில் கண்ணாடி அணிய நாம் கண் மருத்துவரை நாடவேண்டியதில்லை. மூக்குக் கண்ணாடி விற்கும் கடைக்குச் சென்று விற்பனையாளரிடம் விவரம் சொல்லி அவரது ஆலோசனைக்கு அமைய சன் கிளாசை தெரிவு செய்வது நல்லது. உதாரணத்திற்கு இரவில் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற கண்ணாடியை அணிவது சிறந்தது. அதேபோல் பகலில் கிரே, பிரவுன் அணிவது கண்களுக்கு நல்ல குளிச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்" என்கிறார் அமீன்.

வீதியோரத்தில் கண்ணாடி வாங்குவது சிறந்தா? என்று; கேட்டோம்.

தகுதி பெற்ற கண்ணாடி விற்பனையாளர் ஒருவரின் ஆலோசனை பெற்று அவர் கூறிய தரத்தில் அந்த மொடலில் கிடைப்பதாக இருந்தால் வாங்கலாம். அதற்காக குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று கண்ணில் பட்ட கண்ணாடிகளை எல்லாம் வாங்கி மாட்டிக்கொள்வதால் கண்ணுக்குத்தான் பிரச்சினை. அதனால் வீதியோரத்தில் சன்கிளாஸ் வாங்குவதில் கொஞ்சம் கவனம் தேவை. தற்போது கிடைக்கும் கண்ணாடி மொடல்களில் போலோ  மிகவும் சிறப்பானது. 3000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. விலை உயர்வாக இருந்தால் அதன் தரமும் உயர்வாகத்தான் இருக்கும் என்று வீதியோர விற்பனையாளரிடம் மூவாயிரத்துக்கு சன்கிளாஸ் வாங்கி விடக்கூடாது. அனுமதி பெற்ற ஒப்டிஷியன்களிடம் வாங்கினால் கண்ணாடியில் ஏதாவது பிரச்சினை என்றால் கூட நீங்கள் அதை திருப்பி கொடுக்கலாம். உத்தரவாதமும் உண்டு. ஆனால் வீதியோர கண்ணாடிக்காரனை எங்கே தேடுவீர்கள்....?" என்றார் இவர்.

நம் நாட்டில் சன் கிளாஸ் அணியும் பழக்கம் மிகவும் குறைவு. நாம் சன்கிளாஸ் அணிவதை, பெண்களைக் கவரவும் 'கலர்ஸ்' காட்டவுமே ஆண்களால் அணியப்படுவதாகக் நாம் அர்த்தப்படுத்துகிறோம். கண் பாதுகாப்புக்காகத்தான் அணிகிறார்கள் என்பதை இந்த சமூகம் குறிப்பாக நகரங்களுக்கு வெளியே வசிக்கும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. சன்கிளாஸ் அணிபவன் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்க முடியாது என்ற எண்ணமும் குறிப்பாக, பெண்களிடம் இருக்கிறது. இதனால் ஆண்கள் வெயில் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கவே முயல்கிறார்கள். பணக்காரர்கள், வாகனங்களில் பயணிக்கிறவர்கள், எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் சன்கிளாஸ் அணிகிறார்கள். சாதாரண தரத்தினருக்கு இதில் சமூகக் கூச்சம் உள்ளது. சாதாரண தர பெண்கள் வெயில் கண்ணாடி அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆண்கள் ஒரு மாதிரி பார்ப்பார்களே என்ற பயம் இப்பெண்களுக்கு. உண்மையிலும் ஆணின் மனப்பாண்மை அப்படித்தான் இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ஒரு ஆண் சன்கிளாஸ் அணிந்து சென்றால் ஏதோ வேற்றுக்கிரத்தில் இருந்து வந்த ஜீவன் போல ஏனையோர் அவனைப் பார்ப்பதை அவதானிக்கலாம்.

"இப்படியான ஒரு தப்பான பார்வை சன் கிளாஸ் மீது இருப்பது உண்மை. இதைக் களைவது கஷ்டம். சன் கிளாஸ் பற்றிய அறிவை நம் சமூகத்திற்கு எடுத்து சொல்வது உங்களைப் போன்ற மீடியாக்களின் வேலை" என்கிறார் அமீன்.

வெண்ணிற வெயில் கண்ணாடி இருக்கிறதா, நடைபாதையில் விற்கிறார்களே? என்று அமீனிடம் கேட்டோம். நிறமற்ற வெயில் கண்ணாடி என்று ஒன்று கிடையாது என்ற அவர் நம் நாட்டில் நூற்றுக்கு 80 சதவீதமானோருக்கு அல்ட்ரா வயலட் பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறார்.

கண்கள் நம்முடையது. பார்வையில் கோளாறு ஏற்பட்டால் ஒப்பேற்றத்தான் முடியுமே தவிர முற்றிலுமாக சரி செய்வது கஷ்டம். உடலின் எல்லா பாகங்களையும் பாதுகாக்க முயலும் நாம்,  வெப்பம் மிகுந்த சூரியக் கதிர்களில் இருந்தும் புறஊதா கதிர்களிடமிருந்தும் கண்களைப் பாதுகாப்பதில் ஏனோ அசமந்தப் போக்கைக்  கடைபிடிக்கிறோம். எனவே வெளியே போய்வரும் ஆண் பெண் அனைவரும் தமது முகத்துக்கு ஏற்ற வெயில் கண்ணாடி ஒன்றை வைத்திருக்க வேண்டும். வெயிலில் அதை அணிவது கண்களுக்கு பாதுகாப்பானது. அல்ட்ரா வயலட் கதிர்களை தடுக்கும்
UVcut எனப்படும் கண்ணாடிகளை, கொஞ்சம் விலை அதிகமானாலும், வாங்குவது நல்லது.

விலை குறைவு என்பதற்காக கண்ணாடிகளை வாங்க வேண்டாம். ஏனெனில் கண்கள் உங்களுடையவை. நம்பிக்கைக்குரிய ஒப்டீஷியன்களிடம் சென்று விஷயத்தை விளக்கி வாங்குங்கள். கண்ணாடி வாங்கும்போது நண்பர் ஒருவரையும் அழைத்துச் செல்லுங்கள். எது பொருத்தமானது என்பதை அவர் சொல்வார். தேவைப்படும் சமயத்தில் மாத்திரம் வெயில் கண்ணாடிகளை அணிந்தால், வெட்டி விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.

வாழை இலை வியாபாரம்

"லஞ்ச்ஷீட் வருகை எங்கள் தொழிலை பாதித்து விட்டது"


வாழை இலை வர்த்தகர் ராஜேந்திரனுடன் ஓர் உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்


கூட்டுக்கறி குழம்பு, ரசம், மோர், கட்டிப்பருப்போடு சுடுசோறு அனல் பறக்க தலைவாழை இலையில் போட்டு பச்சை இலை வாசனையோடு மணக்க மணக்க உண்டு மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நினைத்தாலே அந்த சோற்றின் கமகம மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறதா...?

ஆனால் இன்று வாழை இலை சாப்பாடு கோயில் அன்னதானத்தோடு முடிந்து விடுவதாகவே சொல்லலாம். கல்யாண சாப்பாடு கூட பெரிய மண்டபங்களில் சில்வர் தட்டில் லஞ்ச்ஷீட் போட்டே பரிமாறப்படுகிறது. ஆனால் சில சைவ ஹோட்டல்களில் மட்டும் இன்றும் வாழை இலை சாப்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.

"வாழை இலை சாப்பாட்டு முறை தமிழர்களிடையே குறைந்து வருவதால் இலை வியாபாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது" என்று கூறுகிறார். கொழும்பு சென்றல் ரோட்டில் வசிக்கும் ராஜேந்திரன்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழை இலை வியாபாரம் செய்யும் இவரின் மாமா ரட்ணசிங்கம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் வாழை இலை வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தாராம். அவரின் மறைவின் பின் அந்த வியாபாரம் ராஜேந்திரனின் கைக்கு மாறி இருக்கிறது.

"எங்க மாமா காலத்தில் ஒரு நாளைக்கு பதினைந்தாயிரத்திற்கும் அதிகமாக இலைகள் விற்பனையாகின. இன்று இரண்டாயிரத்தில் வந்து நிற்கிறது. அவிசாவளை, ஹங்வெல்ல பகுதிகளிலிருந்து வாழை இலைகளை கொண்டு வந்து தருகிறார்கள். அவர்களிடம் மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். வாழை இலைகளை நான் 3.50க்கு கடைக்கு  போடுகிறேன். தலை வாழை இலை குறைந்த அளவில் மட்டுமே விற்பனை ஆகும். ஆலய பூசைகளுக்கு ஸ்பெஷலாக யாராவது ஓடர் எடுத்தால் தலைவாழை இலை கொடுப்பேன். ஒரு இலை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை ஆகும். லஞ்ச்சீட்  வருகைக்குப் பிறகு வாழை இலை வியாபாரம மிகவும் மந்த கதியிலேயே பயணிக்கிறது என்று கூறுகிறார் ராஜேந்திரன்.

திருவிழா காலங்களில் நல்ல வியாபாரம் பார்க்கலாம். அதோடு ஆலயத்தில் கல்யாண சாப்பாடு போட்டாலும் வாழை இலை வியாபாரம் படு ஜோராக நடக்குமாம். கொழும்பில் என்னைப் போலவே இன்னும் இருவர் இந்த வியாபரத்தில் நீண்டகாலமாகவே உள்ளார்கள்.

லஞ்ச்சீட் பாவிப்பது வேலைக்கு சுலபம் என்கிறார்களே?

"வேலை சுலபம் என்பது உண்மைதான். ஆனாலும் லஞ்ச்ஷீட் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவாதே! இயற்கையான வாழை இலை சீக்கிரமே மக்கிப்போகும். ஆனால் லஞ்ச்ஷீட் அப்படி அல்ல..." என்று சொல்லும் ராஜேந்திரன் வீட்டில் பழுத்து, கிழிந்து காய்ந்துப் போன இலைகள் கட்டு கட்டாகக் கிடக்கின்றன. இவற்றை ஒன்றும் செய்ய முடியாது. இனி இவை குப்பைத் தொட்டிக்குத்தான் என்று அலுத்துக்கொள்ளுகிறார், பழுதான இலைகள் நஷ்டக்கணக்கில்தான் வரும் என்றாலும் இவர் இலை வர்த்தகத்தை கைவிடுவதாக இல்லை.

"இந்த வர்த்தகத்தில் வாழை இலை சேகரிப்பவருக்கு பிரச்சினை கிடையாது. அவர் இலைக்கட்டுக்களைக் கொண்டு வந்ததும் காசை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். கொழும்பில் அவற்றை விற்பனை செய்யும் நாங்கள் தான் நஷ்டத்தைத் தாங்கவேண்டும்" என்று வியாபார நெழிவு சுழிவுகளைச் சொல்லும் இவர், மழை காலங்களில் வாழை இலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்.

மழை நாட்களில் வாழை இலையின் விலையை அதிகரிப்பீர்களா?

"நாங்கள் ஒரு நாள் வியாபாரம் செய்பவர்கள் அல்ல. தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக செய்பவர்கள். ஒரு நாள் இலை தட்டுபாட்டிற்காக அப்படி அதிகரித்து விட்டால் அடுத்தநாள் எப்படி வியாபாரம் செய்வது?" என்ற ராஜேந்திரன் பதிலில் உழைப்பின் நேர்மை பளிச்சிட்டது.

Tuesday, September 17, 2013

“அரவாணிகளை கேலி செய்பவர்களை கண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்”

அரவாணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் மல்லிகா


மணி  ஸ்ரீகாந்தன்

தீண்ட தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தலித்துக்களை அரவணைத்து அவர்களின் உரிமைகளுக்காக போராடிய மகாகவி பாரதி,அயோத்திதாசன்,தந்தை பெரியார்,டாக்கடர் அம்பேத்கார்,என்று காலத்துக்கு காலம் சிங்கங்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் இருக்கும் நிலையில் இருந்து கொஞ்சம் இறங்கி விட்டாலே நம்மை பந்தாட துடிக்கும் சமூகம்.அதிலிருந்து தப்பி பிழைத்து வாழ நாம் எடுக்கும் பிரயத்தனங்கள் சொல்லில் அடங்காது.நமக்கே இந்த நிலை என்றால் நாம் சொல்லப் போகும் அரவாணிகளின் நிலை எப்படியானது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.அவர்கள் பிறக்கும் போதே முழுமையான பெண் உணர்வுகளைக் கொண்ட ஆண்களாக பிறக்கிறார்கள்.எவரும் வலிந்து அரவாணிகளாவதில்லை.அவர்கள் பெண்களாக வாழ விரும்பினால் அப்படியே விட்டு விடுவதே மனிதநேயம் மனித உரிமை.இதற்கு தடையாக எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான்.இந்த வகையில் தமிழக அரசை பாராட்ட வேண்டும்.

தமிழக அரவாணிகளுக்கு ஏனையோரைப் போல வாழ்வதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரங்களை அது படிப்படியாக வழங்கி வருகிறது.எனினும் எயிட்ஸ் நோயாளிகள் பற்றி நாம் எவ்வளவு தப்பபிராயங்களை கொண்டிருக்கிறோமோ அதே அளவிற்கு அரவாணிகள் பற்றியும் நாம் நிறையவே தப்பான அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம்.எயிட்ஸ் நோயாளர்களை புரிந்துக் கொள்ள முயல்வதைப் போலவே நம்முடன் பிறப்பின் குற்றம் காரணமாக சரிசமமாக வாழ முடியாத நிலையில் பரிதவிக்கும். அரவாண்களையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.எமது அபிப்பிராயங்கள் மாற்றம் காண வேண்டும்.இவ்வாறு அரவாணிகளைப் புரிந்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பாடுபடும் நவீன பெரியார்கள் இன்று தமிழகத்தில் இருக்கவே செய்கிறார்கள்.அவ்வாரான ஒருவரைத்தான் இனறு நாம் சந்திக்கப் போகிறோம்.

வேலூர் காட்பாடியில் அரவாணிகளின் பொறுப்பாளராக இருப்பவர் பெயர் ‘வீல்’ மல்லிகா. ‘வீல்’ என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.அரவாணிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார் மல்லிகா.அந்த சமூக சேவகியை அவரின் தொண்டு நிறுவனத்தில் வைத்து சந்தித்தோம்.
அறுபது குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

“இந்தக் குழந்தைகளோட பெற்றோர்கள் எல்லோரும் எயிட்ஸ் நோயாளர்கள்.அதனால் தான் அவர்களின் குழந்தைகளை எடுத்து என் பாதுகாப்பில் வளர்த்து வருகிறேன்.இவர்களோடு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.வாழ்க்கையில் ஏதோ பெரிசா சாதிச்சிட்ட மாதிரி தோன்றுகிறது.”என்றார் மல்லிகா. எயிட்ஸ் நோயாளர் ஒரு வீட்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தால் அந்த வீட்டையே கொழுத்தும் இந்த உலகத்தில் மல்லிகாவை பார்க்க தெய்வமாக தெரியவில்லை? பி.கொம் பட்டதரியான மல்லிகா,ஆறு ஆண்டுகளாக சென்னை அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றி இருக்கிறாராம். சமூக சேவை செய்யும் நோக்கம் எப்படி வந்தது? என்று அவரிடம் கேட்டால்

“பாதையில் போகும் அரவாணிகளை சிலர் கல்லால் அடிப்பதும்,தகாத வார்த்தைகளில் திட்டுவதையும் நான் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.இவர்களுக்கு உதவ வேண்டும் என்று மேலிட்ட எண்ணம்தான் என்னை சமூக சேவகியாக்கியது என்றார் மல்லிகா.  “அப்போதெல்லாம் எனக்குள் ஒரு எண்ணம் மேலிடும்;.இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோண்றும்.இதையடுத்து இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன்.

காப்பகத்தில் குழந்தைகள்
இதன் ஊடாக அரவாணிகள் எதிர்நோக்கிய நிறைய பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்திருக்கிறேன்.ஒரு குடும்பத்தில் அரவாணி என்று ஒருவன் அடையாளம் காணப்பட்டால்.அவனை அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள்.அப்படித் தெருவுக்கு வருபவர்கள் வாழ வழியுமில்லாமல் தங்க இடமும் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.அப்படித் தவிப்பவர்களில் சிலர் தாமாகவே அரவாணிகள் சங்கத்தில் இணைந்து விடுவார்கள்.”

வேலூர் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவியாக கங்கா இருக்கிறார்.இரண்டாயிரம் அரவாணிகளுக்கு தலைவியாக இருக்கிறார்.அப்படி இருக்கும் அரவாணிகளுக்கு தங்க இடமில்லாமல் கஷ்டப்படுவதை தெரிந்துக் கொண்டு வேலூர் மாவட்ட கலக்டரிடம் முறையிட்டு அரவாணிகளுக்கு தனியாக ஓரிடத்தில் இருபது வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.முக்கிமாக ஆண்களாக இருந்து பெண்களாக மாறும் இவர்கள் தாமாகவே தமது ஆண் உறுப்பை வெட்டி எறிந்தார்கள்.அப்படி வெட்டும் போது புண் ஏற்பட்டு ஏற்புவலி உண்டாகி சிலர் இறந்து போனார்கள்.

எனவே இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதற்காக அரசே இலவசமாக ஆண் உறுப்பை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.முதலில் எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.பிறகு வேலூரில் அரவாணிகளை எல்லாம் ஒன்று திரட்டி பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினேன்.அதன் பயனாலேயே முதற்கட்டமாக ஐந்து அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அது முழு அளவில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கு தொன்னூறூ சதவீதமான அரவாணிகள் இன்று அறுவை சிகிச்சையின் மூலமாக ஆணுறுப்பை அகற்றிக் கொள்கிறார்கள்.

மேலும் அரவாணிகளுக்கு ஆயுள் காப்புறுதி செய்ய முடியாது.என்ற ஒரு நிலை இருந்தது.ஆடு,மாடுகளுக்கெல்லாம்.கூட காப்புறுதி செய்யும் போது அரவாணிகளுக்கு ஏன் காப்புறுதி வசதி கிடையாது என்று கேட்டு போராட்டம் நடத்தி அதிலும் வெற்றிப் பெற்றோம்.இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம்தான்.ஆனால் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.வேலூரில் அரவாணிகள் நூற்றி ஐம்பது பேருக்கு குடும்ப பங்கீட்டு அட்டை வாங்கி கொடுத்திருக்கிறோம்.அடுத்து வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கவும் அவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

தற்போது தமிழக அரசு அரவாணிகளுக்கென்று தனியாக ஒரு நலவாரியம் அமைத்திருப்பதால் அவர்களின் கல்வி,திறமைக்கேற்ப தொழில் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. இனி அரவாணிகள் பிச்சை எடுக்கும் நிலை நீடிக்காது.பொது மேடை,தொலைக்காட்சி என்று அரவாணிகள் எல்லா இடங்களிலும் கௌரவம் பெறுவதால் அரவாணிகள் மீதான நம் சமூகத்தின் வெறுப்பு விலகிப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.”

இவ்வாறு சொல்லும் மல்லிகாவிடம் அரவாணிகளோடு சகஜமாக பழகுவதற்கு கூச்சமாக இல்லையா என்றோம்.  “அப்படி ஒன்றுமில்லை.பொதுவாக பெண்கள் அரவாணிகளை கண்டு பயப்படவோ வெட்கப் படவோ தேவையில்லை.ஏனென்றால் அரவாணிகளின் உணர்வுகள் செயல்பாடுகள் எல்லாமே பெண்கள் மாதிரியே தான் இருக்கும்.அரவாணிகள் பெண்களை தங்களைப் போலவே நினைத்துக் கொள்வார்கள்.ஆனால் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” என்று சிரிக்கும் மல்லிகாவிடம் அரவாணிகள் எப்படி உருவாகிறார்கள்?என்று அடுத்த வினாவை முன்வைத்தோம்.


"இதில் பெரும்பாலானவர்களுக்கு பிறப்பிலேயே இந்தக் குறைப்பாடு வந்து விடுகிறது. குறிப்பாக ஒரு அரவாணியை ஐந்து,ஆறு வயதிலேயே அடையாளம் கண்டு விடலாம்.இதற்கு மருந்து சிகிச்சை என்று எதுவுமே கிடையாது.ஆனால் சில அரவாணிகளை காலம் உருவாக்குவதாக சொல்கிறார்கள்.அதாவது.சில பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு  ஜடை பின்னி விட்டு பொட்டுவைத்து பாவாடை சட்டை போட்டு அழகு பார்க்கிறார்கள். இந்த செயற்பாடு அந்த ஆண் குழந்தையை பெண்கள் மீதான பிரியத்தை அதிகப்படுத்தி தங்களைப் பெண்ணாக நினைத்துக் கொள்ள தூண்டுகிறது.அதுவே நாளடைவில் அவர்கள் அரவாணிகளாக உருவாக வழிவகுத்து விடுகிறது.”

அரவாணிளை கேலிப் பொருளாக பார்க்கும் பழக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறதா? “ஆமாம் வட இந்தியாவில் அரவாணிகளை தெய்வமாக மதிக்க,இங்கே நம் ஊரிலோ, அவர்களை கிண்டல் செய்கிறோம்.இப்படியானவர்களை நாம் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் வருடம்தோறும் நடக்கும் ‘கூவாகம்’திருவிழாவில் கலந்து கொள்ள வரும் ஆயிரக்கணக்கான அரவாணிகள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு சந்தோசமாக இருக்கவே வருகிறார்கள்.ஆனால் அங்கேயும் கூடி விடும் இளைஞர்கள் அரவாணிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.நானே அதை நேரில் பார்த்திருக்கிறேன்.அரவாணிகள் குளிப்பதையும்,உடை மாற்றுவதையும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலம்.அவர்களும் மனிதர்கள்தான் என்பதை ஏன் உணர்வதில்லை” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் மல்லிகா.

ஆடை மாற்றும் அரவாணிகளை
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்
சமூக சேவையில் வேறு ஏதாவது செய்திருக்கிறீர்களா?என்றும் மும்பை சிவப்பு விளக்கு ஏரியாவுக்கு கடத்தப்பட்டிருந்த தமிழ் நாட்டு பெண்கள் பத்துப் பேரை தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சென்று மீட்டு வந்தோம்.இப்போது அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டு புது மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.என்று கூறியவரிடம் இப்படி ஆபத்தான காரியங்களில் எல்லாம் இறங்குகிறீர்களே இதற்கு உங்கள் கணவர் எப்படி சம்மதிக்கிறார்?என்று ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டோம்.ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பினனாலும் ஒரு ஆண் இருப்பார்.அது எனக்கு தான் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன்.எனது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எனது கணவர் சந்திரன் உதவியாகத்தான் இருக்கிறார்.எனது வெற்றிகளுக்கு காரணம் எனது முயற்சியும் எனது கணவரின் ஒத்துழைப்பும் தான் என்று பெருமதம் கொள்கிறார் மல்லிகா. வாழ்க!

அரவாணி  'ரோஸ்' நேர்காணலை படிக்க…

ரோஸ்சுடன் சில நிமிடங்கள்....

Thursday, September 5, 2013

சினிமானந்தா பதில்கள்-05


தனுஷ் இந்திக்கு சென்றுள்ளாரே, சாதிப்பாரா?

ரமணி, பொகவந்தலாவ

இந்திக்கு சென்று கொடி கட்டிய தென்னிந்திய நடிகர்கள் எவரும் இல்லை. கமல் (சாகர், ஏக்துஜே கேலியே) ரஜனி (அந்தாகானுன்) மற்றும் நாகர்ஜுன் ஆகியோர் நன்றாகத்தான் ஆரம்பித்தார்கள். ஆனால் அங்கிருந்த போட்டியும் பொறாமையும் அவர்களை முன்னேற முடியாமல் தடுத்தது. தமிழே போதும் என்று திரும்பி விட்டார்கள். ஆனால் அவர்களது எல்லாப்படங்களுமே இந்தியில் டப் செய்யப்பட்டு இப்போதும் வடக்கில் திரையிடப்படுகின்றன. கமலின் விஸ்வரூபம் கூட அங்கு பெரிதாக பேசப்படவில்லை.

ஆனால் தெற்கில் இருந்து வடக்கு சென்ற 3 நடிகைகளான பத்மினி, வைஜயந்திமாலா, ஜெயப்பிரதா (கிட்டத்தட்ட ஒரே காலகட்டம்) பின்னர் ஸ்ரீதேவி, ஆகியோரின் அழகில் வடக்கு மொத்தமாக கிறங்கிப்போனது. இவர்கள் மூவரும் இரண்டு தசாப்தங்களாக கோலோச்;சினர். அதுமட்டுமல்ல வடக்கு அவர்களை மருமகள்களாகவும் ஆக்கிக்கொண்டது. ஆனால் நிறைய நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டனர். தமிழக முதல்வர் கூட தர்மேந்திராவுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அங்கு சென்றுள்ள தனுஷ் ராஞ்சனா (அம்பிகாபதி) மூலம் வடக்கத்தியர்களின் செல்லப்பிள்ளையாகிவிட்டார். அவரது நடிப்புக்கு அங்கு மிகப்பெரிய பாராட்டு. இனி வருடத்துக்கு ஒரு இந்திப்படமாவது செய்யவேண்டியது நிர்ப்பந்தமாகியுள்ளது.
 தனுஷ் வடக்கில் வெற்றி

இன்றைய தமிழ் சினிமா முன்னேறுகிறதா?

பி. தினேஸ். கொழும்பு 14

இப்போது பிரபலங்கள் இல்லாத திரைப்படங்கள் சக்கை போடு போடுகின்றன. க.ல.தி.ஆ... எதிர்நீச்சல்... கே.பி.கி.ர, தீ.வே.கு... தில்லு முல்லு,... ஆகிய படங்களைத்தான் சொல்கிறோம்.

பவர்ஸ்டார் க.ல.தி.ஆ என்ற முதல் படத்திலேயே பிரபலமாகி தமிழ்நாட்டிலிருந்து தீகாருக்கே  போய்விட்டார். டி.வி. தொகுப்பாளரான சிவகார்த்திகேயன் விமலையும் மிஞ்சிவிட்டார். தீ.வே.கு. படத்துக்கு பின்னரே சித்தார்த் மார்க்கட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தில்லுமுல்லு சிவா இப்போதும் ரேடியோ மிர்ச்சியில் தான். இந்த பகுதி நேர ஸ்டார்கள் கோடிகள் வாங்கும் பிரபலங்களை மிஞ்சியுள்ளனர்.
இது ஆரோக்கியமான முன்னேற்றம் தானே!
கானா பாலாவுக்குத்தான் இப்போது மவுசு... பாடும் நிலா கூட ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.
 இதுகூட முன்னேற்றம்தானே...
புல்லாங்குழல், வீணை, வயலின், மெலடி மறக்கப்பட்டு டிரம்ஸ் அதிரடி, ஒரே டிய+னை மாற்றி மாற்றி மாவாக அரைப்பதுடன் மெலடியை மறப்பது.
இதுவும் முன்னேற்றம் தான்.
சாதனை படைத்த பழைய படங்களை புதிய (அல்லது அதே) பெயரில் மீண்டும் ஆக்கிப் படைப்பதுவும் முன்னேற்றம்தான்.
ஜனவரி முதல் இதுவரை 80 படங்கள். அதில் 8க்கு மேல் தேறவில்லை.
இதுவும் கூட சாதனை மிகு முன்னேற்றம்தானே! 
ஒன்றா... இரண்டா எடுத்துச் சொல்ல...

சிங்கம் 2- மிகப்பெரிய வெற்றியாமே? அமோக வசூலாமே?

எஸ். ரவி. கொழும்பு 13

வெற்றியும் வசூலும் வெவ்வேறு. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டுக்கொள்ளாதீர்கள்.
வழக்கு எண் 18/9 படத்தை பார்த்த அனைவருமே பாராட்டினார்கள். சிறந்த படம் என்று தேசிய விருது கூட கிடைத்தது. ஆனால் வசூலில் சறுக்கியது மட்டுமல்ல அதில் நடித்த கதாநாயகளுக்கும் கதாநாயகிக்கும் அடுத்த படம் இதுவரை கிடைக்கவில்லை. வெற்றிக்கும் வசூலுக்கும் உள்ள வேறுபாட்டை பார்த்தீர்களா?
வெற்றியை அது கிடைக்காவிட்டாலும் கூடக் காட்டலாம். ஆனால் வசூலை இருந்தால் மட்டுமே அள்ளலாம்.

சிங்கம் 2 க்கு நல்ல வசூல். ஆனால் செலவைக் கூட்டி வசூலில் கழித்தால் மீதி சொல்லிக்கொள்ளும்படி இல்லையாம்.
படத்துக்கு பெரிய பட்ஜெட் அத்துடன் விளம்பரத்துக்கு பல கோடிகள் இறைக்கப்பட்டதாம். சிங்கம் 2 போஸ்ட்டரால் சென்னை நகரமே நிரப்பப்பட்டதாம். எல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காகத்தானம்.

இந்த எக்கச்சக்க விளம்பரச் செலவு, லாபத்தை பாதித்திருக்கவேண்டும். இயற்கைதானே!

சிங்கம் 2 படத்தின் மூலம் பட்டத்துக்காக போட்டியிடும் தகுதி சூர்யாவுக்கு கிடைத்திருப்பதென்னவோ உண்மைதான்.

ஆனால் அடுத்தபடம் சிங்கம் 2 ஐ மிஞ்சவேண்டுமே. ஏற்கனவே 16 கோடி சம்பளம். அடுத்த படத்தில் அது 20 ஆகிவிடும் இந்தச் செலவில் சூர்யாவை வைத்து படம் செய்ய எந்த தயாரிப்பாளர் முன் வருவார்கள்,

Studio Green ஞானவேல்ராஜாவைத் தவிர!
சிங்கம்-2 படுவெற்றி, சூர்யா படு சிக்கலில்

கனகாவை கொன்றுவிட்டார்களே?

எஸ். ஜானகி. அவிசாவளை

யானை மட்டுமல்ல ஊடகங்களுக்கும் அடி சறுக்கும் என்பதை புடம் போட்டு காட்டியிருக்கிறார்கள். விகடன்,
behind the woods ஆகியவை முதலில் போட்டன. ஆராயாமலே மற்றவை பரப்பின.

ஆனால் எல்லாம் நன்மைக்கே என்பதைப் போல் ஆரோக்கியமாக இருப்பதாக அடுத்தநாளே கனகா பிரஸ்மீட் வைத்து சொல்லி விட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவருக்கு உதவுவதாக சரத்குமாரும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழிக்கும்போது சம்பந்தப்பட்ட தரப்பினரே இச்செய்தியை பரப்பியிருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. சினிமா உலகம்தானே, எதுவும் நடக்கலாம். 
ஒரே நாளில் உயிரும் கொடுத்து வாய்ப்பும் தந்திருக்கிறார்களே!

சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் திருமணமாமே?

எஸ். ஜோன்- கொழும்பு 2

அவர்கள் மட்டுமா. ஆர்யா- நயன், பரத்- ஷம்மு, சாந்தனு- கீர்த்தி,
சிவகார்த்திகேயன்- பிரியா ஆனந்த், சித்தார்த்- சமந்தா எல்லோரும் சேர்ந்து சுற்றுகிறார்கள். 
உங்கள் காதில பூ!