Monday, August 19, 2013

500 ஆடு,கோழிகளை சாமிக்கு வெட்டிப் பலி கொடுத்திருக்கிறார் இந்தக் கார்மேகம்!

‘சாமிக்கு பலி கொடுக்க மறந்ததால்தான் அக்கிரமம் அதிகரிக்கிறது!’


மணி  ஸ்ரீகாந்தன்

“சாமி கருப்பு, சாமி கருப்பு ,சாமி கருப்பு,
வாடா….வெட்டரிவாள் வீறு கொண்டு வெள்ளை குதிரை ஏறி வாடா…” என்ற பாட்டுச் சத்தம் வானை பிளக்கிறது.

கருப்புச்சாமி,மாடசாமி,மதுரை வீரன்,ருத்ரகாளி,ரோதமுனி,சென்டாகட்டி, என ஒரு டஜன் கிராம தெய்வங்களை வழிப்படுகிற ஊர் றைகம.இது கொழும்பிலிருந்து 58,கிலோ மீட்டர்களுக்கு அப்பால் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு தோட்டப் பிரதேசம்.இங்கே கடவுளின் பெயரால் வருடம்தோறும் சில குடும்பங்கள் மிருக பலியை தங்களின் இஷ்ட
குலதெய்வத்துக்கு  காவு கொடுத்து கொண்டாடுகிறார்கள்.இவ்வாறு நேர்த்திக்கடனுக்குக்காக  கொண்டு வரப்படும் ஆடு,கோழிகளை அருவாளோடு சாமிக்கு பலிகொடுக்கிறவர்தான் கார்மேகம் என்கிற நாராயணன்.
இவருக்கு இப்போது 54 வயதாகிறது.கடந்த 35 வருடகாலமாக இதையே ஒரு தொழிலாக செய்து வருகிறார் கார்மேகம்.

சாமிக்கு படையல் போடுவதிலிருந்து பலிக்கொடுப்பது வரை மிகவும் நேர்த்தியாகச் செய்வதில் கைதேர்ந்தவர். விரிந்து கிளை பரப்பி நிற்கும்.ஆலமரத்தின் கருமை படர்ந்த நிழலில் மாடசாமிக்கு முன் மண்டியிட்டு விளக்கேற்றி பயபக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தவரை பத்திரிகை பேட்டிக்காக சந்தித்தோம்.

அவராகவே தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். “நாங்க பரம்பரை பரம்பரையாகவே மதுரை வீரனை குலதெய்வமாக கொண்டவங்க…என் தாத்தா செல்லமுத்து கங்காணி இந்தியாவில இருந்து வரும் போதே மதுரை வீரன் சாமி கோவில் மண் எடுத்து வந்து தெபுவன தோட்டத்திலே ஒரு அரசமரத்தடியில் வைத்து வழிப்பட்டிருக்கிறார்.பெரகு எங்க அப்பா  நாச்சியப்பன்…அதன் பெறகு நான்..இப்படி எங்கள் பரம்பரை குலதெய்வமாக மதுரை வீரனே இருக்கிறார்.எனது மனைவி பெயர் வள்ளி.எனக்கு நான்கு ஆணும் ஒரு பெண்ணுமாக மொத்தம் ஐந்து பிள்ளைகள்.எல்லோரும் திருமணம் முடித்து விட்டார்கள்.
நானும் எனது வாழ்க்கையின் கடைசி காலம் வரைக்கும் மதுரை வீரன்
சாமிக்கு அடிப்பணிந்து சேவை செய்வதையே பெருமையாக கருதுகிறேன்.”
“உங்க தோட்டத்தில சாமிக்கு பலிகொடுப்பது இப்போதும் நடைபெறுகிறதா…?”
“முன்ன மாதிரி இப்போதெல்லாம் சாமிக்கு ஆடு ,கோழி நேர்ந்து விடுறதில்லை.தெய்வம் மீது ஜனங்களுக்கு இருந்த நம்பிக்கை படிப்படியா குறைஞ்சிட்டே  வருது.தெய்வம்னா என்னான்னு கேட்கிற பிள்ளைகளும் இருக்கிறாங்க….அந்தக் காலத்தில வருடத்திற்கு கடா ஆடு அப்புறம் கோழியை பலியாக கொடுத்து சாமியோட கோபத்தை அடக்குவாங்க.இப்போ அதெல்லாம் இல்லாததாலத்தான் சாமியோட கோபப்பார்வை சுனாமி,சூறாவளி , பூகம்பம்னு பேரு தெரியாத வியாதி அனர்த்தம்னு வந்து மக்களை அழிக்குதுங்க.” என்று கூறிய கார்மேகத்திடம் “அப்போ பலிக் கொடுப்பது நல்ல காரியம்னு நீங்க சொல்றீங்களா..?”என்று கேட்டோம்.

“ஆமாங்க அதில என்ன தப்பு இருக்கு அந்தந்த சாமிக்கு பிடிக்கிறதுகளை நாம படைச்சா எந்த குத்தமும் இல்லீங்க..இப்போ இராமர் சாமிக்கு மச்சம் புடிக்கிறது இல்ல அதனால நாம அதெல்லாம்  படைக்கிறதும் இல்ல.ஆனா மதுரை வீரன்,மாடசாமி,கருப்புசாமிக்கு இறைச்சி சுருட்ட சாராயம் முட்டை எல்லாம் படைச்சாத்தான் அவங்க திருப்தி அடைவாங்க.ஒரு காலத்தில அரசாங்கம் முன்னேஸ்வரம் கோவிலில பலிகொடுப்பதை தடுத்ததாலதான் இந்த ஊரே சாமி குத்ததிற்கு ஆளாகி கிடந்தது! என்று சொல்லும் கார்மேகத்திடம்  “உங்களுக்கு சாமி அருள் எந்த வயதில் வந்ததது?”என்று கேட்டப்போது,

“என் மனைவி வள்ளியை திருமணம் முடித்த பிறகுதான் எனக்கு மதுரை வீரன் அருள் வந்தது”என்று பதில் சொன்னார்.
“எங்க மச்சான் ஒரு தீவிர மதுரை வீரன் பக்தர் அவரு இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு போகும் போது அவரு உடம்பில மதுரை வீரன் சாமி வந்தார்.சாமி ஆடிய அவர் என்னை கூப்பிட்டு மதுரை வீரன் படத்தை என்னிடம் கொடுத்தார்.அந்தப் படத்தை கவனமா வைக்கும்படியும் குடிசையில இருந்தாலும்,குப்பையில இருந்தாலும் படத்தை வச்சி கும்பிடனும்னு சொன்னாரு.அன்றிலிருந்து நான் மதுரை வீரன் நினைவாகவே இருந்தேன்.அதனாலதான் அந்த சாமி என் ஒடம்புக்குள்ள வந்திருக்கு.”என்று விளக்கமாக என்னிடம் தெரிவித்த இவருக்கு இன்றைய கோவில் வைபவங்களில் கடும் அதிருப்தி.

“இப்போதெல்லாம் நகர்புறம் மாதிரி தோட்டப்பகுதி கோயில்களிலும் நவீன முறையில் திருவிழா நடத்துறாங்க.பழைய முறைப்படி கரகம் பாலித்து சக்தி கரகம் தூக்கி சாமி ஆடி திருவிழா நடாத்தினால்தான் அது திருவிழா.அந்தக் காலத்தில் எங்க ஊர்ல கரகம் பாலித்து சக்தி கரகம் தூக்கியவுடன் மாடசாமி ஒரு கையால் கத்தியையும்,தீப்பந்தத்தையும் தூக்கியபடி மாரியம்மன் கோயிலுக்கு முன்னாடி நின்று கூக்குரலிடும்.சுடுகாடு நோக்கி ஓடி பாடைமாத்தியில் ஒரு கோடு கீறி அந்த இடத்தில் கற்பூரத்தை கொழுத்தி விட்டு சுடுகாட்டுக்கு ஓடும்.பறை அடிக்கிறவன் அந்த கற்பூரம் எரிகிற
இடத்தில நிற்கனும்.சுடுகாட்டுக்கு ஓடிய மாடசாமி அங்கே புதை குழியை தோண்டி கிடைக்கிற எழும்பு துண்டுகளையும்,குடல்களையும் எடுத்து மாலையா போட்டுக்கிட்டு ‘ஊ’ சத்தம் வச்சப்படியே மாரியம்மன் கோயிலுக்கு ஓடி வரும்.இங்கே கோயிலுக்கு வெளியே நிற்கிற பக்தர்களுக்கு நல்லது சொல்லும்.அப்போ சாசக் கிடக்கிறவன கூட எங்க மாட சாமி காப்பாத்தும்.
வீதி உலா புறப்படும் நேரம் தேருக்கு பாதுகாப்பாக மாடசாமி கோழியை வாயில் கடிச்சப்படி ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமா கத்திக்கிட்டே தேருக்கு முன்னாடி ஆடி வரும்.”என்று அந்தக்கால நினைவுகளில் மூழ்கி விடுகிறார் கார்மேகம்.அவர் சொல்வதை புல்லரிக்க புல்லரிக்க நாமும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“அந்தக் காலத்தில் மாடு பூட்டிய தேர்தான்.இந்த தேர் வீதி உலாப் போவதை முணியான்டி சாமி வழி மறிக்கும்.அப்போ மாடு தேரை இழுக்க முடியாமல் கீழே படுத்து விடும்.அப்போ மாடசாமிதான் எழுமிச்ச பழத்தை வாயில் கடிச்சி நாலா பக்கமும் எறிய முணியான்டி சாமி ஓடி விடும்.அப்புறம் மாடு துள்ளி எழுந்திருச்சி சும்மா ஜம்மு ஜம்முன்னு ரோட்டுல போகும்.ஆனா இப்போ மாடு பூட்டிய தேரும் இல்ல மாடசாமியும் இல்ல.இப்போ டிராக்டரிலதானே தேர் இழுக்கிறாங்க…”என்று சொல்லும் போது அவரது கம்பீரமான கரகரத்த குரலில் சோகம் கப்புகிறது. பேச்சு மெதுவாக ரோதமுணி பக்கம் திரும்புகிறது.தேயிலை,இரப்பர் தொழிற்சாலைகளில் பெரிய சக்கரங்களைக் கொண்ட பல இயந்திரங்கள் காணப்படும்.

மோட்டார் பாவனைக்கு வராத அந்தக் காலத்தில் பிரதான இரும்பு சக்கரத்தை கைகளினால் சுழற்றித்தான் இயந்திரத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.சில சமயம் இந்த சக்கரம் வேலை செய்ய மறுத்துவிடும். இப்படி சக்கரம் குழப்படி செய்வதற்கு (சக்கரசாமி)ரோதமுணிதான் காரணம் என்பது ஐதீகம்.இனி கார்மேகம் சொல்வதை கேழுங்கள்.

“முன்பெல்லாம் ஆண்டுதோறும் ஒரு சேவலை ரோதமுணிக்கு பலிக் கொடுப்போம்.ஆனா இப்போ இப் பழக்கம் அத்துப்போச்சி.ரோதமுணி இருக்கிற இடம் காடாக கிடக்கு.நான் அப்பப்போ அங்கே போய் கோழி அறுப்பேன்.இப்போ இதை யாரும் செய்யிறது இல்லை.சாமி ஆடுறது எல்லாம் பொய்,சாராயம் குடிச்சிட்டு ஆடுறோம்னு கேலி செய்றாங்க.அதுதான் ரோதமுணி வருசத்தில ஒருவரிடமிருந்தாவது கையை,விரல்களை காவு வாங்கி விடுகிறது.இதை இங்கே உள்ளவங்களுக்கு சொன்னாலும் புரிவதில்லை.என்று புலம்பும் கார்மேகம். வருடம் தோறும் கோழி,ஆட்டுக்கடா  ஏதாவது ஒன்றை மாடசாமிக்கு பலிகொடுத்து விடுகிறார்.
 றைகம் மாடசாமி ரொம்பவும் சக்தி வாய்ந்தவர் என்பது இவரது அபிப்பிராயம்.  “மாலை ஆறு மணிக்குப் பிறகு டவுனில இருந்து ஊருக்குள்ள வரும் போது 'அப்பனே மாடையா! நான் தனியா போறேன்.கள்ளன் களவானியோ, இல்ல பேய் பிசாசுகளோ வரக்கூடாது.நான் மீன்,இறைச்சி கொண்டு போறேன்.எனக்கு நீதான் துணைன்னு’ வேண்டிக்கிட்டே வந்தா ஒரு விக்கினமும் வராதுங்க.
“இப்போ அப்படியெல்லாம் இல்லை.சாமியை யாரும் நினைக்கிறதே இல்லை.அந்தக் காலத்தில மூணு கடா வெட்டி ஊருக்கே அன்னதானம் நடக்கும். ஆனா இன்னைக்கு மாடசாமி கோயில்ல ஆள் அரவமே இல்லை!”என்று விரக்தியுடன் சொல்கிறார் கார்மேகம்.
இதுவரை இவர் 500 ஆடு,கோழிகளை வெட்டி காணிக்கையாகப் படைத்திருக்கிறார்.புண்ணிய கைங்கரியமாகவே இவர் இதை கருதுகிறார்.
“சாமிக்கு பலிக் கொடுக்கப்படும் ஆட்டை வெட்டும் போது அது சம்மதம் தெரிவித்து தலையை ஆட்டுமாமே?”

“தலையை மட்டுமல்ல உடம்பையையே ஆட்டும்.மஞ்சத் தண்ணியை அதன் மேல தெளிச்சதும் முடி செங்குத்தா எழும்பி நிற்கும்.உடம்பு வெடவெடன்னு ஆடத் தொடங்கும்.முகத்தை மட்டும் கம்பீரமா வச்சுக்கும். அப்போது சாமி வரம் கொடுத்து விட்டதாக நினைத்து ஒரே வெட்டா தலையை துண்டாக்குவோம். இரண்டு மூன்று தடவை வெட்டினால் பலி கொடுக்கிறவங்களுக்கு சாமி குத்தம் இருக்குனு அர்த்தம்.”
கார்மேகம் இப்போது தன் மகன் ஸ்ரீகாந்திடம் பலி ஆடுகளை வெட்டும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறர்.மதுரை வீரன் ஸ்ரீகாந்தின் உடலில் இறங்குவதாக பெருமையோடு சொல்கிறார்.

இவரது கூற்றுக்களை நீங்கள் எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டாலும் சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கும் நிலவிவரும் இந்த ஆண்டவனுக்குப் பலி கொடுக்கும் நம்பிக்கை இன்னும் சில நூற்றாண்டுகளுக்குத் தொடரத்தான் போகிறது.

No comments:

Post a Comment