Saturday, August 3, 2013

கூவாகத்தில் அரவாணிகள்.(2ம் பாகம்)

நாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்யும் உரிமை வேண்டும்

கூவாகத்திலிருந்து  மணி ஸ்ரீகாந்தன்.

 

 மெதுவாக சென்று கதவைத் திறந்தேன்.பாண்டிச்சேரி தினகரன் பதிப்பிலிருந்து வந்திருந்த செய்தியாளர் நின்றிருந்தார். ‘அரவான் களப்பலி கொடுக்கப்படுவதை பார்க்க வேண்டுமென்றால் இங்கிருந்து நாலு மணிக்காவது கிளம்பவேண்டும்.தயாராக இருங்க’என்று சொல்லி விட்டு சென்றார்.பின்னர் சுமார் நாலரை மணியளவில் விழுப்புரத்திலிருந்து கிளம்பினோம்.

கூவாகம் செல்லும் ஏழாதிமங்களம் ,திருவெண்ணெய் நல்லூர் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் பயணம் சிரமமாக இருந்தது.கூவாகம் கூத்தாண்டவர் கோயிலை அண்மித்ததும் ஒப்பாரி சத்தம் அந்தப் பகுதி முழுவதும் கேட்டது.கூத்தாண்டவர் களப்பலியாகும் தினம் என்ற செய்தியை நண்பர் காதில்  குசு குசுத்தார். கூவாகத்தில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தோம். வழி நெடுங்கிலும் அரவாணிகள் தலையில் அடித்து ஒப்பாரி வைத்து அழுதுக்கொண்டிருந்தனர்.

அப்படி அழுதுக்கொண்டிருந்த திருநங்கை மும்தாஜிடம் ‘என்னங்க தலையால அடித்து ஒப்பாரி வைக்கிறீங்க ஆனா கண்களில் கண்ணீரை காணலியே?’என்றோம் அப்பாவியாக,அதற்கு மும்தாஜ் ‘ஆமா சத்தம் போட்டு கண்ணீர்விட்டு  அழ இது என்ன எழவு வீடா? ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். வருடா வருடம் இங்கே வந்து ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து சந்தோஷமாக கொண்டாடுகிறோம். கூவாகம் திருவிழா என்றால் எங்களுக்கு அது பெரிய சந்தோசம் தான்.’என்ற மும்தாஜ் தாலி அறுக்க நேரமாகி விட்டதாக சொல்லி இடத்தை காலி செய்தார்.நாமும் அவரை பின் தொடர்ந்தோம்.கூவாகம் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புளிய மரத்தை நோக்கித்தான் அரவாணிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றுக் கொண்டிருந்தார்கள்.
சுட்டெரிக்கும் அக்னி வெயிலையும் பொருட்ப்படுத்தாது நாமும் அந்த புழுதி மண்ணில் நடைப்போட்டோம்.புளியந்தோப்பில் உள்ள ஒரு பெரிய மரத்தடியில் அரவாணிகளுக்கு தாலி அறுக்கும் சடங்கை பூசாரிகள் செய்து கொண்டிருந்தார்கள்.கை வலையல்களை உடைத்து,குங்குமம் அழித்து,தலைமுடி களைந்து மூலியாக நின்றார்கள்.கூட்டமாக நிற்கும் அரவாணிகள் கழுத்திலுள்ள தாலியை கத்தியால் அறுத்து எடுத்து புளிய மரக்கிளைகளில் மாட்டியிருந்தார்கள்.அப்படி மாட்டியிருக்கும் தாலிகள் இலட்சக்கணக்கில் அந்த மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்தன.மரம் முழுவதும் தாலிக் கயிறுகளாக இருந்தது.

தாலி என்ற பெயரில் சம்பிரதாயத்துக்காக மஞ்சள் துண்டை மஞ்சள் கயிற்றில் கட்டியிருந்தார்கள்.அந்த மரத்தடியில் நிறையப் பேர் கற்பூரம் கொழுத்தி வழிப்பட்டார்கள்.அந்த மரத்தடியிலும் அரவாணிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அதை வேடிக்கைப் பார்க்க குவிந்திருந்த இளைஞர்கள் அங்கேயும் சில்மிஷசங்களில் இறங்க அவர்களை அரவாணிகள் வாய்க்கு வந்தப்படி
திட்டிக்கொண்டிருந்தார்கள்.அதன் பிறகு அரவாணிகள் குளிக்கும் கிணற்றுக்கு வந்தோம்.அது ஒரு பெரிய கிணறு ,குளம் போன்ற அமைப்பில் இருந்தது.அதில் ஒரே சமயத்தில் ஐம்பது பேர் இறங்கி குளிக்கலாம்.அதில் உடைகளை களைந்து விட்டு பாவாடையால் மார்புவரை கட்டிக் கொண்டு கிணற்றில் கும்மியடித்து குஷியாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.அரவாணிகள் குளிப்பதை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘என்னங்க இவங்க குளிப்பதை இப்படி வேடிக்கை பார்க்குறீங்களே?’ என்று அங்கு நின்றுக்கொண்டிருந்தவரிடம் கேட்டோம். ‘நம்மளும் அவங்களும் ஒண்ணுதானே அதுதான் உரிமையோடு பார்க்கிறோம்.ஆம்பளையா இருந்து பொம்பளையா மாறியவங்கதானே!’என்று தமது பார்வையை நியாயப்படுத்தி பேசியதைக் கேட்டுக்கொண்டே அரவாணிகள் உடைமாற்றிக் கொண்டிருக்கும் பக்கத்துக்கு சென்றோம்.குளித்து முடித்த அரவாணிகள் அனைவரும் வெள்ளை சேலைக்கு மாறிக் கொண்டிருந்தார்கள்.அவர்களை கொஞ்சம் நெருங்கிப் போய் போட்டோ பிடிக்கப் முற்பட்டப்போது.ஒரு அரவாணிக்கு கோபம் வந்து விட்டது.
 ‘ஏன்டா பரதேசி உங்க அக்கா தங்கச்சி சேலை மாற்றினா இப்படி படம் பிடிப்பாயா? நாங்களும் பொண்ணுதான்.பார்த்தா தெரியலை?’என்று எம்மை பார்த்து முறைத்தார்.இதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.வெள்ளை சேலை அணிந்துக் கொண்ட அரவாணிகள் தமது ஊர்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள்.வட நாட்டிலிருந்து வந்திருந்த அரவாணிகள் நிறைய தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வழி நெடுகிலும் உள்ளவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வந்தார்கள். விழுப்புரம் பஸ் முழுவதும் அரவாணிகள் நிரம்பி காணப்பட்டார்கள்.நாங்களும் அதில் ஏறி கூட்டத்தோடு கூட்டமாக பயணித்தோம்.நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு கீழே உட்கார்ந்திருந்த அரவாணிகள் கூத்தாண்டவர் விழா பற்றி பேசிக் கொண்டு வந்தார்கள்.
அதில் ஒரு அரவாணி சென்னை கோயம்பேட்டில் வசிக்கிறாராம்.ஒவ்வொரு வருடமும் கூவாகம் வந்து விடும் இவர் இந்த ஆண்டும் கூவாகத்திற்கு வந்திருக்கிறார். போலிஸ் பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.பெண் பொலிஸ் குறைவாக இருந்ததால் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் கிள்ளுகிறார்கள் என்றும் அவர் குறையிட்டுக் கொண்டார்.
எல்லா அரவாணிகளுக்கும் முழுமையான மார்பக வளர்ச்சி இருப்பதில்லை.சிலர் ஹோர்மோன் ஊசி ஏற்றி மார்பகங்களை பெரிதாக்கி கொள்வார்கள்.சிலர் பஞ்சு அல்லது தண்ணீர் பாக்கெட்டுக்களை மார்பு கச்சைக்குள் அடக்கி கொள்வார்கள்.பஸ்சில் பயணித்த அந்த அரவாணி
பெருமையுடன்,தனக்கு உண்மையாகவே மார்பகம் இருப்பதாகவும் எனவே வலி தாங்க முடியவில்லை என்று தமிழக பொலிஸை திட்டினார்.அந்த உரையாடலை கேட்டுக் கொண்டே விழுப்புரத்தில் வந்து இறங்கினோம். பின்னர் வேலூர் அரவாணிகள் சங்கத்தலைவி கங்காவின் முகவரியை தேடிப் பிடித்தோம்.
கங்கா வேலூர் பழைய நகரில் உள்ள தோல்கிடங்கு என்ற இடத்தில் வசிக்கிறார்.வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம் சுமார் பதினைந்து திருநங்கைமார் தரையில் அமர்ந்து டீவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.எம்மை கண்டதும் ‘நீங்கள் யாரைப் பார்க்கணும்?’ என்று கேட்டார்கள்.நாங்க பிரஸ்சுல இருந்து வாறோம் தலைவி கங்காவை பார்க்கணும் என்றோம் உடனே வீட்டுக்குள்ளிருந்து நெற்றியில் பெரிய பொட்டுடன் கங்கா வெளியே வந்தார்.
“வாங்க சார்”என்றவரிடம் நாம் வந்த நோக்கத்தைச் சொன்னோம்.  “இப்போவெல்லாம் முன்ன மாதிரி இல்லீங்க எங்களுக்கு கொஞ்சம் மரியாதைக் கிடைக்குது பத்திரிகை மீடியா எல்லாத்திலையும் எங்கள் பிரச்சினைப் பற்றி பேசுகிறார்கள்.ஆனாலும் சில ஊர்களில் இன்னமும் எங்களைக் கண்டால் கேலிப் பேசுவது கல்லால் அடிப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.வட நாட்டில் எல்லாம் எங்களை சாமி மாதிரி நினைத்து கௌரவம் செய்கிறார்கள்.எங்களை கிருஸ்ணனின்
அவதாரமாக நினைக்கிறார்கள்.அவர்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கு எங்களை முன் நிறுத்துகிறார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் இந்த பழக்கம் இன்னும் ஏற்படவில்லை.இளைஞர்களின் தொல்லை தாங்காமல் பொலிஸ் ஸ்டேசனுக்கு போனால் அங்கும் தொல்லை தாங்க முடியல.அந்த புகாரை கணக்கில் எடுப்பதில்லை,அவங்களும் தேவையில்லாத கதையெல்லாம் பேசுறாங்க,” என்று காவல் துறையிடம் கோபப்படும் கங்காவிடம் நீங்கள் ஏன் மகளிர் காவல் துறையிடம் போகக் கூடாது என்றுக் கேட்டோம்.
“அட நீங்க வேற சார்…அங்கே போனா பெண் போலிஸ் நீங்க இங்கே வராதீங்க ஆம்பளை பொலிஸ் ஸ்டேசனுக்கு போங்கன்னு விரட்டுறாங்க!நாங்க ரெண்டும் கெட்டான் நிலையில இருக்கோம்.இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டவே எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க சொல்லி அரசாங்கத்ததை வலியுறுத்துகிறோம்.ஆனால் இன்னும் அது முறையாக அமுலுக்க வந்த மாதிரி தெரியலீங்க…   அடுத்த தேர்தல்ல எங்களை
மூன்றாவது பாலினமா சேர்த்து ஓட்டுப்போடும் உரிமையை வாங்கித்தரப் போறதா சொல்லுறாங்க அப்படி கிடைத்தால் சந்தோசம்தான்.எங்களின் எல்லாத் தேவையையும் நாங்க போராட்டம் நடத்திதான் வாங்க வேண்டியதா இருக்கு.ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்வதற்கு அரசு அனுமதியளிக்காததால் அதற்காக பெரிய போராட்டத்தை நடத்தி இப்போது அனுமதி வாங்கியிருக்கிறோம். அனைத்து அரவாணிகளுக்கும் இப்போது இலவசமாக ஆபரேஷன் செய்கிறார்கள்.” என்றார் கங்கா.
ஏன் ஆபரேஷன் செய்துக் கொள்ள வேண்டும் ?  “அதை அறுத்து எறிந்தால்தான் எங்களுக்கு நிம்மதியே!எங்க உடம்புல தேவையில்லாத ஒரு உறுப்பாகத்தான் அதை நாங்கள் நினைக்கிறோம். ஆபரேஷன் செய்த பிறகுதான் எங்களுக்கு ஒரு புதுத் தெம்பு ஏற்ப்படுகிறது.” என்று அவர் சொன்னப் போது பாவமாக இருந்தது. நமக்கு வியப்பும் சிரிப்புமாக இருக்கும் ஒரு விசயம் அவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. 
 அரவாணிகள் என்பதற்க்கு பதிலாக ‘திருநங்கை’ என்ற சொல்லை இன்றைய ஊடகங்களில் பயன்படுத்துகிறார்களே..?என்று ஒரு கேள்வியை முன் வைத்தோம். “எங்களுக்கு அதில் உடன்பாடு கிடையாது.திருநங்கை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் என்ற கருத்து நிலவுகிறது.இதுதான் எங்களுக்கு பிரச்சினையே.அதனால் எங்களுக்கு அந்தப் பெயரில் விருப்பமில்லை.யாரோ ஒருவர் தன்னிச்சையாக இந்த பெயரை வைத்திருக்கிறார்.அனைத்து இந்திய அரவாணிகளை ஒன்று திரட்டி எங்களிடம் இந்தப் பெயர் பற்றி விவாதித்திருக்க வேண்டும்.அதை யாரும் செய்யவில்லை.எங்களுக்கு அரவாணிகள் என்ற பெயர்தான் பிடித்திருக்கிறது.”என்றவரிடம் அரசிடம் வேறு என்ன கோரிக்கைகளை முன் வைத்து இருக்குறீர்கள். என்று கேட்டோம்.
“வேலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது அரவாணிகள் இருக்கிறார்கள்.  அதற்கு நான்தான் தலைவி.இப்படி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கிலும் நாங்கள் இருக்கிறோம்.
 எங்கள் பிரச்சினையம் பெரியதுதான்.ஆனாலும் மற்றவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளையும் சலுகைகளையும்தான் நாங்கள் கேட்கிறோம்.
நாங்கள் ஒரு ஆணை திருமணம் செய்ய விரும்பினால். எங்கள் திருமணத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்.முதியோர் பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.இப்போது ரேஷன் அட்டை கிடைக்கிறது.முக்கியமாக எங்களின் படிப்புக்கு தகுந்த வேலை வழங்கப்பட வேண்டும்.  எங்களுக்கு வேலை மடடும் கிடைத்து விட்டால் நாங்கள் கடை கடையாக பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் எழாது.”என்றார் கங்கா உறுதியாக.                                                                                                                                

அரவான் திருமணம்

குருஷேத்திரத்தில் பாரதப் போர் மூள்வது நிச்சயமாகிவிட்ட நிலையில் போரில் யாருக்கு வெற்றி என்பதை சோதிடத்தின் மூலம் தெரிந்துக் கொள்ள முயற்சி நடக்கிறது.சகாதேவன் சிறந்த சோதிடன் அவன் சோதிடம் பார்த்து ஒரு முழுமையான வீரனான ஆணை அமாவாசையன்று பலி கொடுத்தால் அந்தப் பக்கம் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.என்று கூறுகிறான்.இதை அறிந்த துரியோதனன் பலி கொடுப்பதற்காக இளைஞனை தேடுகிறான்.
அர்ஜுனனுக்கு சென்ற இடமெல்லாம் மனைவியர்,குழந்தைகள் அவனது ராசி அப்படி.அவனுக்கும் ஆதிஷேசனின் மகளான உலோபி என்ற நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான் ஆணுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்திய அவன் சிறந்த வீரனும் கூட அவனை அணுகும் துரியோதனன் அவனை களப்பலிக்கு இணங்கச் செய்து திகதியையும் வாங்கி வந்து விடுகிறான்.ஆனால் அவனிடத்தில் ஒரு குறை. ஏனெனில் அவனுக்கு
திருமணமாகவில்லை.களப்பலியாகிறவன் திருமணமானவனாக இருக்க வேண்டும்.உடனடியாக அரவானுக்கு பெண் தேடும் படலம் அவசர அவசரமாக நடக்கிறது. ஆனால் ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருக்க எந்த பெண்ணும் தயாராக இல்லை.
இந்த நிலையில் விஷயத்தை அறிந்து கொண்ட கிருஸ்ணர்.ஒரு யுக்தி செய்கிறார்.களப்பலியை பாண்டவர்களுக்கு சாதகமாக முடிப்பதற்காக அவர் மோகினி உருவெடுத்து வருகிறார்.ஆனால் பெண்ணாக இல்லை அரவாணியாக.அமாவாசை தினத்தன்று களப்பலி நிகழ்ந்தால் அது கௌரவர்களுக்கு சாதகமாகி விடும்.என்பதால் அமவாசையை ஒரு நாள் முன்கூட்டி வருகின்ற மாதிரி பாவனையை ஏற்படுத்தி அமாவாசைக்கு  முன்தினமே களப்பலி நிகழ்வதாக பார்த்துக் கொள்கிறார்.தான் (மோகினி) அரவானைத் திருமணம் செய்து ஒருநாள் மனைவியாக இருப்பதற்கு சம்மதம் எனத் தெரிவித்ததை துரியோதனன் ஏற்றுக்கொள்ள களப்பலிக்கு முதல் நாள் திருமணம் நடக்க ஏற்பாடாகிறது.
அரவான் என்ற அந்த இளைஞன் ஆணுமற்ற பெண்ணுமற்ற அவளை திருமணம் செய்து கொள்கிறான்.முதலிரவையும் உல்லாசமாக அனுபவிக்கிறான்.மறு நாள் கௌரவர்களினால் அரவான் களப்பலியாக கொல்லப்படுகிறான்.
அரவான் என்ற ஆண் பெயரைப் பெண்ணாக மாற்றும் போது அரவாணி என்றாகிறது.பேடி,அலி,அந்நகர்,திருநங்கை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவர்களுக்கு அரவாணி என்றப் பெயர் இப்படித்தான் தோன்றியது.கூவாகத்தின் கூத்தாண்டவர் கோவிலில் வீற்றிருக்கும் அரவான் (கட்டை வடிவில்)தெய்வத்தை திருமணம் செய்வதாகவும் மறுதினம் அரவான் களப்பலியாவதால் தாலி அறுத்து ஒப்பாரிவைப்பதாகவும் இங்கே நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.இதில் விஷேசம் அரவாணிகள் தம்மை கிருஸ்ணரின் பிரதிநிதியாக கருதி அரவானைத் திருமணம் செய்துக் கொள்வதுதான்.சமூகத்தால் ஒதுக்கப் படும் இவர்கள்.இறைவனின் பிரதிநிதியாக திகழ்வதில் பெருமையடைகிறார்கள்.
சரி பெண் வடிவில் வராமல் கிருஸ்ணர் ஏன் அரவாணி வடிவில் வரவேண்டும்?
 அரவான் திருமணம் செய்து கொண்டது ஒரு ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒருவரை.அது சாதாரண செல்லுப்படியாகக்கூடிய திருமணம் அல்ல.அரவான் கொல்லப்பட்டதும் மனைவி விதவையாகவும் முடியாது.எனவே களப்பலி குறையுள்ளதாகிறது.மேலும் மறுதினம் இறக்கப்போகின்ற அரவானின் எல்லா வகையான காம இச்சைகளுக்கு ஈடுகொடுக்கும் இரு பாலுறுப்பு கொண்ட வடிவமாகவும் மோகினி இருந்திருக்கலாம்.

 அரவாணிகள் பற்றி மேலும் வாசிக்க…

“அரவாணிகளை கேலி செய்பவர்களை கண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்”

1 comment:

  1. அனைவரின் முன்னேற்றமும் வேண்டும் .

    ReplyDelete