Friday, August 30, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க- 04

காவிரியில் முழுகினா தோஷம் விலகிடுமாம்!

மணி  ஸ்ரீகாந்தன்

அந்த காலத்தில் இந்தியாவுக்கு போய் வருவதை அக்கரைக்கு போய் வருவது என்றுதான் மலைநாட்டு தமிழர்கள் கூறுவார்கள்.அப்படி அக்கறைக்கு போய் வந்த கதையை இப்போது தனது எழுபதாவது வயதில் சுவைப்பட கூறுகிறார் நாகம்மா.
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தோட்டமொன்றில் வசித்து வரும் நாகம்மாவின் கணவர் அண்மையில் இறந்துவிட தனிமையில்தான் வாழ்ந்து வருகிறார் நாகம்மா.
“அக்கரையை பார்க்கணும்கிறது எனது சின்ன வயது ஆசை.எங்கப்பா அடிக்கடி ஊருக்கு போய் வருவாரு.அப்படி போனப்போதுதான் என்னையும் அழைச்சிட்டு போனாரு.எனக்கு அப்போ பதினாரு வயது இருக்கும்.நான் நல்லா அழகா இருந்தேனாம்.(அதற்கான அடையாளங்கள் இப்போதும் இருக்கின்றன)நான் ரோட்டுல நடந்தா ஊரு கண்ணே என் மேலதான் படும் என்பார் எங்கம்மா.அப்படி என் மேல ஊரு கண்ணுபட்டுட கூடாது என்பதற்காக வாரத்திற்கு ஒரு முறை எங்கம்மா எனக்கு திருஷ்டி சுத்திப் போடும்.
நானும் எங்கப்பாவும் இங்கே இருந்து கப்பலில போயி பிறகு ராமேஸ்வரத்தில் ரயில் பிடித்து எங்க ஊருக்கு போனோம்.

திருச்சி பக்கத்தில உள்ள நாமக்கல்தான் எங்க ஊரு.அங்கே போனதும் எனக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.   ‘சிலோன் புள்ள நல்லா அழகா இருக்கு’ன்னு பேசிக்கிட்டாங்க.எனக்கு வெட்கமாகி விட்டது. என் அப்பாவுடைய தங்கச்சி வீட்டுலதான் தங்கி இருந்தோம். அடுத்த நாள் என் அப்பாவுடைய அக்கா வீட்டுக்காரங்க பழத் தட்டோட ஆரவாரமா வீட்டுக்கு வந்தாங்க.அவங்க பேசியதை கேட்டப்போதுதான் அவங்க என்னை பெண் கேட்க வந்திருப்பது தெரியும்.


இன்னைக்கே பரிசம் போட்டுடலாம்னு சொன்னாங்க. ஆனா எங்கப்பா உடன்படல அவருக்கு கோபம் வந்திருச்சி ‘இந்தப்புள்ள இன்னும் வயசுக்கே வரலை…அதுக்குள்ள இதெல்லாம் என்னத்திற்கு’ன்னு கேட்டாரு.அதற்கு அவங்க ‘இப்போ பரிசம் போட்டு பேசி முடிச்சிட்டா அப்புறம் வயசுக்கு வந்ததும் கல்யாணத்தை முடிச்சிடலாம்’னு சொன்னாங்க அதற்கு எங்கப்பா மறுத்திட்டாரு.பிறகு அவங்களும் சண்டை போட்டுட்டு ‘இனி நான் செத்த சாவுக்கு கூட நீ வரக்கூடாது’ன்னு சொல்லிட்டு என் அத்தை அவங்க பையனை கூட்டிட்டு போயிட்டாங்க. என் அப்பா அந்த சம்பந்தத்தை அடியோடு மறுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கு. என் அத்தை பையனுக்கு என்னை விட இருபது வயது அதிகமாம். அதற்கு பிறகு நாமக்கல் சின்னத்தை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.

குளிப்பதற்கு காவேரி ஆற்றுக்குத் தான் போகணும்.திருச்சி எங்கும் காவேரிதான் ஓடி வருது.அந்த ஆற்றுக்குத்தான்  என் உறவுக்கார புள்ளைங்களோட குளிக்கப் போனேன்.இலங்கையில் காவிரி தண்ணீர்னு சொன்னாலே தொட்டுக் கும்பிடுவாங்க.அது தவிர கோயில் கும்பாபிஷேகத்துக்கும் கலசத்துக்கு வார்க்கிறதுக்கு காவிரி ஆற்றில இருந்துதான் தண்ணீர் கொண்டு வருவாங்க.ஆனா இந்தியாவில உள்ள படுபாவிங்க அந்த தண்ணீர்லதான் மலம் கழிக்கிறாங்க.

கொஞ்சம் கூட வெட்கம் கிடையாது.நாங்க பொண்ணுங்க போனாலும் எழும்ப மாட்டாங்க.ஆத்தோரத்தில உட்கார்ந்து ஆற்று தண்ணீர்ல மலம் கழிப்பதைதான் வழக்கமா கொண்டிருக்காங்க.இதையெல்லாம் பார்த்து எனக்கு வெட்கமாகவும்,அருவருப்பாகவும் இருந்தது.
அந்த காவிரி தண்ணியிலதான் நானும் குளிச்சேன்.குளிச்சிடடு வீட்டுக்கு வந்ததும் எங்க அத்தை என்ன சொன்னாங்க தெரியுமா ‘காவிரி ஆத்துல குளிச்சிட்டு வந்தியா…இனி உன்னை புடிச்சிருந்த எல்லா தோசமும் விலகிடும்’னு  சொன்னாங்க!

Monday, August 19, 2013

500 ஆடு,கோழிகளை சாமிக்கு வெட்டிப் பலி கொடுத்திருக்கிறார் இந்தக் கார்மேகம்!

‘சாமிக்கு பலி கொடுக்க மறந்ததால்தான் அக்கிரமம் அதிகரிக்கிறது!’


மணி  ஸ்ரீகாந்தன்

“சாமி கருப்பு, சாமி கருப்பு ,சாமி கருப்பு,
வாடா….வெட்டரிவாள் வீறு கொண்டு வெள்ளை குதிரை ஏறி வாடா…” என்ற பாட்டுச் சத்தம் வானை பிளக்கிறது.

கருப்புச்சாமி,மாடசாமி,மதுரை வீரன்,ருத்ரகாளி,ரோதமுனி,சென்டாகட்டி, என ஒரு டஜன் கிராம தெய்வங்களை வழிப்படுகிற ஊர் றைகம.இது கொழும்பிலிருந்து 58,கிலோ மீட்டர்களுக்கு அப்பால் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு தோட்டப் பிரதேசம்.இங்கே கடவுளின் பெயரால் வருடம்தோறும் சில குடும்பங்கள் மிருக பலியை தங்களின் இஷ்ட
குலதெய்வத்துக்கு  காவு கொடுத்து கொண்டாடுகிறார்கள்.இவ்வாறு நேர்த்திக்கடனுக்குக்காக  கொண்டு வரப்படும் ஆடு,கோழிகளை அருவாளோடு சாமிக்கு பலிகொடுக்கிறவர்தான் கார்மேகம் என்கிற நாராயணன்.
இவருக்கு இப்போது 54 வயதாகிறது.கடந்த 35 வருடகாலமாக இதையே ஒரு தொழிலாக செய்து வருகிறார் கார்மேகம்.

சாமிக்கு படையல் போடுவதிலிருந்து பலிக்கொடுப்பது வரை மிகவும் நேர்த்தியாகச் செய்வதில் கைதேர்ந்தவர். விரிந்து கிளை பரப்பி நிற்கும்.ஆலமரத்தின் கருமை படர்ந்த நிழலில் மாடசாமிக்கு முன் மண்டியிட்டு விளக்கேற்றி பயபக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தவரை பத்திரிகை பேட்டிக்காக சந்தித்தோம்.

அவராகவே தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். “நாங்க பரம்பரை பரம்பரையாகவே மதுரை வீரனை குலதெய்வமாக கொண்டவங்க…என் தாத்தா செல்லமுத்து கங்காணி இந்தியாவில இருந்து வரும் போதே மதுரை வீரன் சாமி கோவில் மண் எடுத்து வந்து தெபுவன தோட்டத்திலே ஒரு அரசமரத்தடியில் வைத்து வழிப்பட்டிருக்கிறார்.பெரகு எங்க அப்பா  நாச்சியப்பன்…அதன் பெறகு நான்..இப்படி எங்கள் பரம்பரை குலதெய்வமாக மதுரை வீரனே இருக்கிறார்.எனது மனைவி பெயர் வள்ளி.எனக்கு நான்கு ஆணும் ஒரு பெண்ணுமாக மொத்தம் ஐந்து பிள்ளைகள்.எல்லோரும் திருமணம் முடித்து விட்டார்கள்.
நானும் எனது வாழ்க்கையின் கடைசி காலம் வரைக்கும் மதுரை வீரன்
சாமிக்கு அடிப்பணிந்து சேவை செய்வதையே பெருமையாக கருதுகிறேன்.”
“உங்க தோட்டத்தில சாமிக்கு பலிகொடுப்பது இப்போதும் நடைபெறுகிறதா…?”
“முன்ன மாதிரி இப்போதெல்லாம் சாமிக்கு ஆடு ,கோழி நேர்ந்து விடுறதில்லை.தெய்வம் மீது ஜனங்களுக்கு இருந்த நம்பிக்கை படிப்படியா குறைஞ்சிட்டே  வருது.தெய்வம்னா என்னான்னு கேட்கிற பிள்ளைகளும் இருக்கிறாங்க….அந்தக் காலத்தில வருடத்திற்கு கடா ஆடு அப்புறம் கோழியை பலியாக கொடுத்து சாமியோட கோபத்தை அடக்குவாங்க.இப்போ அதெல்லாம் இல்லாததாலத்தான் சாமியோட கோபப்பார்வை சுனாமி,சூறாவளி , பூகம்பம்னு பேரு தெரியாத வியாதி அனர்த்தம்னு வந்து மக்களை அழிக்குதுங்க.” என்று கூறிய கார்மேகத்திடம் “அப்போ பலிக் கொடுப்பது நல்ல காரியம்னு நீங்க சொல்றீங்களா..?”என்று கேட்டோம்.

“ஆமாங்க அதில என்ன தப்பு இருக்கு அந்தந்த சாமிக்கு பிடிக்கிறதுகளை நாம படைச்சா எந்த குத்தமும் இல்லீங்க..இப்போ இராமர் சாமிக்கு மச்சம் புடிக்கிறது இல்ல அதனால நாம அதெல்லாம்  படைக்கிறதும் இல்ல.ஆனா மதுரை வீரன்,மாடசாமி,கருப்புசாமிக்கு இறைச்சி சுருட்ட சாராயம் முட்டை எல்லாம் படைச்சாத்தான் அவங்க திருப்தி அடைவாங்க.ஒரு காலத்தில அரசாங்கம் முன்னேஸ்வரம் கோவிலில பலிகொடுப்பதை தடுத்ததாலதான் இந்த ஊரே சாமி குத்ததிற்கு ஆளாகி கிடந்தது! என்று சொல்லும் கார்மேகத்திடம்  “உங்களுக்கு சாமி அருள் எந்த வயதில் வந்ததது?”என்று கேட்டப்போது,

“என் மனைவி வள்ளியை திருமணம் முடித்த பிறகுதான் எனக்கு மதுரை வீரன் அருள் வந்தது”என்று பதில் சொன்னார்.
“எங்க மச்சான் ஒரு தீவிர மதுரை வீரன் பக்தர் அவரு இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு போகும் போது அவரு உடம்பில மதுரை வீரன் சாமி வந்தார்.சாமி ஆடிய அவர் என்னை கூப்பிட்டு மதுரை வீரன் படத்தை என்னிடம் கொடுத்தார்.அந்தப் படத்தை கவனமா வைக்கும்படியும் குடிசையில இருந்தாலும்,குப்பையில இருந்தாலும் படத்தை வச்சி கும்பிடனும்னு சொன்னாரு.அன்றிலிருந்து நான் மதுரை வீரன் நினைவாகவே இருந்தேன்.அதனாலதான் அந்த சாமி என் ஒடம்புக்குள்ள வந்திருக்கு.”என்று விளக்கமாக என்னிடம் தெரிவித்த இவருக்கு இன்றைய கோவில் வைபவங்களில் கடும் அதிருப்தி.

“இப்போதெல்லாம் நகர்புறம் மாதிரி தோட்டப்பகுதி கோயில்களிலும் நவீன முறையில் திருவிழா நடத்துறாங்க.பழைய முறைப்படி கரகம் பாலித்து சக்தி கரகம் தூக்கி சாமி ஆடி திருவிழா நடாத்தினால்தான் அது திருவிழா.அந்தக் காலத்தில் எங்க ஊர்ல கரகம் பாலித்து சக்தி கரகம் தூக்கியவுடன் மாடசாமி ஒரு கையால் கத்தியையும்,தீப்பந்தத்தையும் தூக்கியபடி மாரியம்மன் கோயிலுக்கு முன்னாடி நின்று கூக்குரலிடும்.சுடுகாடு நோக்கி ஓடி பாடைமாத்தியில் ஒரு கோடு கீறி அந்த இடத்தில் கற்பூரத்தை கொழுத்தி விட்டு சுடுகாட்டுக்கு ஓடும்.பறை அடிக்கிறவன் அந்த கற்பூரம் எரிகிற
இடத்தில நிற்கனும்.சுடுகாட்டுக்கு ஓடிய மாடசாமி அங்கே புதை குழியை தோண்டி கிடைக்கிற எழும்பு துண்டுகளையும்,குடல்களையும் எடுத்து மாலையா போட்டுக்கிட்டு ‘ஊ’ சத்தம் வச்சப்படியே மாரியம்மன் கோயிலுக்கு ஓடி வரும்.இங்கே கோயிலுக்கு வெளியே நிற்கிற பக்தர்களுக்கு நல்லது சொல்லும்.அப்போ சாசக் கிடக்கிறவன கூட எங்க மாட சாமி காப்பாத்தும்.
வீதி உலா புறப்படும் நேரம் தேருக்கு பாதுகாப்பாக மாடசாமி கோழியை வாயில் கடிச்சப்படி ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோசமா கத்திக்கிட்டே தேருக்கு முன்னாடி ஆடி வரும்.”என்று அந்தக்கால நினைவுகளில் மூழ்கி விடுகிறார் கார்மேகம்.அவர் சொல்வதை புல்லரிக்க புல்லரிக்க நாமும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“அந்தக் காலத்தில் மாடு பூட்டிய தேர்தான்.இந்த தேர் வீதி உலாப் போவதை முணியான்டி சாமி வழி மறிக்கும்.அப்போ மாடு தேரை இழுக்க முடியாமல் கீழே படுத்து விடும்.அப்போ மாடசாமிதான் எழுமிச்ச பழத்தை வாயில் கடிச்சி நாலா பக்கமும் எறிய முணியான்டி சாமி ஓடி விடும்.அப்புறம் மாடு துள்ளி எழுந்திருச்சி சும்மா ஜம்மு ஜம்முன்னு ரோட்டுல போகும்.ஆனா இப்போ மாடு பூட்டிய தேரும் இல்ல மாடசாமியும் இல்ல.இப்போ டிராக்டரிலதானே தேர் இழுக்கிறாங்க…”என்று சொல்லும் போது அவரது கம்பீரமான கரகரத்த குரலில் சோகம் கப்புகிறது. பேச்சு மெதுவாக ரோதமுணி பக்கம் திரும்புகிறது.தேயிலை,இரப்பர் தொழிற்சாலைகளில் பெரிய சக்கரங்களைக் கொண்ட பல இயந்திரங்கள் காணப்படும்.

மோட்டார் பாவனைக்கு வராத அந்தக் காலத்தில் பிரதான இரும்பு சக்கரத்தை கைகளினால் சுழற்றித்தான் இயந்திரத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.சில சமயம் இந்த சக்கரம் வேலை செய்ய மறுத்துவிடும். இப்படி சக்கரம் குழப்படி செய்வதற்கு (சக்கரசாமி)ரோதமுணிதான் காரணம் என்பது ஐதீகம்.இனி கார்மேகம் சொல்வதை கேழுங்கள்.

“முன்பெல்லாம் ஆண்டுதோறும் ஒரு சேவலை ரோதமுணிக்கு பலிக் கொடுப்போம்.ஆனா இப்போ இப் பழக்கம் அத்துப்போச்சி.ரோதமுணி இருக்கிற இடம் காடாக கிடக்கு.நான் அப்பப்போ அங்கே போய் கோழி அறுப்பேன்.இப்போ இதை யாரும் செய்யிறது இல்லை.சாமி ஆடுறது எல்லாம் பொய்,சாராயம் குடிச்சிட்டு ஆடுறோம்னு கேலி செய்றாங்க.அதுதான் ரோதமுணி வருசத்தில ஒருவரிடமிருந்தாவது கையை,விரல்களை காவு வாங்கி விடுகிறது.இதை இங்கே உள்ளவங்களுக்கு சொன்னாலும் புரிவதில்லை.என்று புலம்பும் கார்மேகம். வருடம் தோறும் கோழி,ஆட்டுக்கடா  ஏதாவது ஒன்றை மாடசாமிக்கு பலிகொடுத்து விடுகிறார்.
 றைகம் மாடசாமி ரொம்பவும் சக்தி வாய்ந்தவர் என்பது இவரது அபிப்பிராயம்.  “மாலை ஆறு மணிக்குப் பிறகு டவுனில இருந்து ஊருக்குள்ள வரும் போது 'அப்பனே மாடையா! நான் தனியா போறேன்.கள்ளன் களவானியோ, இல்ல பேய் பிசாசுகளோ வரக்கூடாது.நான் மீன்,இறைச்சி கொண்டு போறேன்.எனக்கு நீதான் துணைன்னு’ வேண்டிக்கிட்டே வந்தா ஒரு விக்கினமும் வராதுங்க.
“இப்போ அப்படியெல்லாம் இல்லை.சாமியை யாரும் நினைக்கிறதே இல்லை.அந்தக் காலத்தில மூணு கடா வெட்டி ஊருக்கே அன்னதானம் நடக்கும். ஆனா இன்னைக்கு மாடசாமி கோயில்ல ஆள் அரவமே இல்லை!”என்று விரக்தியுடன் சொல்கிறார் கார்மேகம்.
இதுவரை இவர் 500 ஆடு,கோழிகளை வெட்டி காணிக்கையாகப் படைத்திருக்கிறார்.புண்ணிய கைங்கரியமாகவே இவர் இதை கருதுகிறார்.
“சாமிக்கு பலிக் கொடுக்கப்படும் ஆட்டை வெட்டும் போது அது சம்மதம் தெரிவித்து தலையை ஆட்டுமாமே?”

“தலையை மட்டுமல்ல உடம்பையையே ஆட்டும்.மஞ்சத் தண்ணியை அதன் மேல தெளிச்சதும் முடி செங்குத்தா எழும்பி நிற்கும்.உடம்பு வெடவெடன்னு ஆடத் தொடங்கும்.முகத்தை மட்டும் கம்பீரமா வச்சுக்கும். அப்போது சாமி வரம் கொடுத்து விட்டதாக நினைத்து ஒரே வெட்டா தலையை துண்டாக்குவோம். இரண்டு மூன்று தடவை வெட்டினால் பலி கொடுக்கிறவங்களுக்கு சாமி குத்தம் இருக்குனு அர்த்தம்.”
கார்மேகம் இப்போது தன் மகன் ஸ்ரீகாந்திடம் பலி ஆடுகளை வெட்டும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறர்.மதுரை வீரன் ஸ்ரீகாந்தின் உடலில் இறங்குவதாக பெருமையோடு சொல்கிறார்.

இவரது கூற்றுக்களை நீங்கள் எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டாலும் சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகெங்கும் நிலவிவரும் இந்த ஆண்டவனுக்குப் பலி கொடுக்கும் நம்பிக்கை இன்னும் சில நூற்றாண்டுகளுக்குத் தொடரத்தான் போகிறது.

Friday, August 9, 2013

இனிய ஞாபக வீதியில் பட்டக்கண்ணு தியாகராஜா

"எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்!"


மணி ஸ்ரீகாந்தன்

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான்  அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"


தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1967ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே  தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா


தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு  கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி,  பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே,  எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம்  அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும்  வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும்  சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர்,  தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

Monday, August 5, 2013

வானவில் சினி கேள்வி பதில் -04


சிங்கம்- 3 வருமா?

எல். ராஜேஸ்வரி, கண்டி

சிங்கம்- 2 ன் கர்ஜனையை பார்த்தால் சிங்கம் மட்டுமல்ல சிறுத்தையும் மீண்டும் உறுமும் போல் n;தரிகிறதே! இவற்றின் வருகையை மக்கள்
மத்தியில் ஏகத்துக்கு விளம்பரப்படுத்தி நிறையபேரை பார்க்க வைத்து விட்டார்கள். பிறகென்ன அவையும் குட்டி போடும். இந்த சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

சிங்கம்... சிங்கம் 2... துரைசிங்கம்... வீரசிங்கம்... ரட்னசிங்கம்... இவற்றை வரிசையாகப் பார்க்கலாம்... கொஞ்சம் பொறுங்கஅடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூர்யாவுக்கா- விஜய்க்கா.

ஷப்னா- அம்பாறை

சூப்பர் ஸ்டார் ஒரே ஒருவர்தான்... அவருக்கு இணை இல்லை. அந்த ஒருவர் ரஜனிதான் என்பது எப்போதோ தீர்க்கப்பட்ட முடிவு.

இப்போது சூப்பர் ஸ்டார்-2வுக்குதான் போட்டி வந்திருக்கிறது.

சூர்யா- விஜய்
பத்மினி- வைஜயந்தி
சினிமா (வஞ்சி) கோட்டை- அரசன் (வாலிபன்)
முரசுகள் முழங்கட்டும்
சங்குகள் ஒலிக்கட்டும்
சிங்கம் 2- தலைவா

ஆக்ரோஷமான போட்டி ஆரம்பமாகும்

முதல் ரவுண்டில் வெற்றி- ???


புதிய பரட்டைத் தலை கதாநாயகர்கள் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறார்களே? என்ன காரணம்?

ஆர். லலிதா- இறக்குவானை


Next dood Boy,  Next door Girls Syndrome  என்ற ஆங்கிலத்தில் இதனை சொல்வார்கள். தமிழில் வேண்டுமானால் அடுத்த வீட்டு பையன். அடுத்த வீட்டு பொண்ணு என்று வைத்துக் கொள்ளலாம்.. அவர் பிரமாதமான அழகனாகவோ அழகியாகவோ  இருக்க மாட்டார். ஆனால் அடிக்கடி உங்கள் பார்வையில்
படுவார். அத்துடன் சிரிக்கவும செய்வார். அடிக்கடி பார்ப்பதால் உங்களுக்கு பிடிக்கவும் செய்வார். அது மட்டுமன்றி உங்களுக்கு உதவியும் செய்வார். வேறு இடங்களில் கண்டால் அட நம்ம அடுத்த வீட்டு பையன் என்று முனுமுனுக்க வைப்பார்கள். ரசிகர்கள் மனதில் இப்படித் தோற்றத்துடன் இடம் பிடிப்பவர்கள்தான் நடிகர் தனுஷ், மற்றும் நடிகை அமலாபால்.

'ராஞ்சனா' இந்திப்படத்தில் தனுஷ் வடநாட்டில் கொடிகட்டிப் பறக்க உதவியது இந்த இமேஜ்தான்.

அப்புக்குட்டி, சிவகார்த்திகேயன், பவர்ஸ்டார், மிர்ச்சி சிவா, இந்த ரகத்தில் ஆண்கள்.

லைலா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் இந்த ரகத்தில் பெண்கள்.

அடுத்த வீடடுக்கார தோற்றம் தான் காரணம்


ரஜனிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக மீனா தயாராக இருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறதே. உண்மையா?

கே.எஸ். ராஜன், வவுனியா

இல்லையே... இப்போதும் மீனா ரஜனிக்கு தங்கையாகக் கூட நடிக்கலாம்.
அவரிடம் இருந்த டிரிம்... துறு துறு இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

தமிழில் மீனா இன்னொரு ரவுண்டு வரலாம். ஆனால் ஜோடியாக பகவதி வேண்டாம்.


நமீதாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்களாமே? அம்மணியை கட்டிக்கப்போற அந்த புண்ணியவான் யாருங்க?

எஸ். விஜிதா. கொழும்பு 13

6  1/2 அடி உயரத்துடன் 140 கிலோ எடையுள்ள புண்ணியவான் மாப்பிள்ளை
தேடுவது சுலபமல்ல.

அப்படியொருவர் கிடைக்கும் வரை

பாயில் படுக்கும் ரசிகர்களுக்கு மட்டும் நமீதா கனவுக்கன்னிதான்; கட்டில் தாங்காது

 

 நன்றி- வண்ண வானவில் (01-08-2013)

Saturday, August 3, 2013

மரியான்- வானவில் விமர்சனம்


தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களின் ஒருவர் தனுஷ் என்பதற்கு 'ஆடுகளம்' தேசிய விருது ஒன்றே சான்று.

தனுசுக்கு சிங்கம் போல் கர்ச்சிக்கத் தெரியாது. துப்பாக்கி போல் வெடிக்கவும் தெரியாது. அடக்கி வாசித்து ரசிகர்கள் மனதுக்குள் நுழையத்தான் தெரியும். அடுத்தவீட்டு பையன் இமேஜ் இதற்கு பெரிதும் துணை போகிறது.

'ஆடுகளம்' படத்தின் 'கைலி' டான்ஸ் தனுசுக்கு மட்டுமே கை வந்தது. தமிழ் திரைப்பட உலகில் எந்தவொரு நடிகரும. செய்ய முடியாதது அது. அந்த யதார்த்த தனித்துவம் தனுசுக்கு மட்டுமே உரித்தானது.

ஒல்லி உடம்பு, டிரிம் இல்லா இயற்கை தாடி, தூங்குமுகம். அக்மார்க் மீனவ முகம். 'மரியான்' வேடத்துக்கு கனகச்சிதம். அத்துடன் அவ்வப்போது முகத்தில் தோன்றி மறையும் சின்னச்சின்ன மெனரிஷங்கள் மூலம் தனுஷ் மரியாதை வாழ்த்து காட்டியிருக்கிறார்.

பூனாக+பார்வதி குறைந்த மேக் அப்பில் 'பளிச்' கதைப்படி காமுறும் நாயகியாக முதற்பாதியிலும், காதலுக்காக உருகும் பிற்பாதியிலும் தனுசுடன் நடிப்பில் போட்டிபோடுகிறார்.

இரட்டை ஒஸ்கார் ரஹ்மானின் மூன்று பாடல்கள் (இன்னும் கொஞ்ச நேரம், நெஞ்சே எழு, கடல் ராசா) மீண்டும், மீண்டும் கேட்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் மார்க் கொஹின்க்ஸ் ஒரு பிரெஞ்சுக்காரர்.
(Sleeping beauty, Queen Margeret) ஆகிய படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர். மரியானில் நீருக்கடியில் உள்ள காட்சிகளை நன்றாக செய்துள்ளார். அதேபோல்தான் Sudan பாலைவனம். ஒரு தேர்ந்த காமிராக்காரர் என்பதை நிரூபிக்கிறார்.

அந்தந்த பிரிவுகளில் மேற்கூறிய அனைத்துமே முதல் தரம். ஆனால் தொய்ந்து போன திரைக்கதை மூலம் 'மரியான்' தடுமாறுகிறது.

மரியானின் முதல் பாதிதான் மீனவக்கதை. இரண்டாவது பாதி பெயரிடவில்லை 'மனிதவேட்டை' என்று பெயர் வைத்திருக்கலாம்.

ஒரு படத்தில் இரண்டு கதைகள். பரத்பாலாவின் புதிய உத்தி எடுபட்டதாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு இரண்டாம் பாதியில் சிறுத்தைகள், கற்பகத்தரு என்று கற்பனைகள் வேறு. இந்த குயவெயளல நினைப்புகள் விறுவிறுப்பை பெரிதும் குறைந்துள்ளன. இதனால் Climex சப்பென்று ஆகியுள்ளது.

'செம்மீன்'என்றொரு மலையாளப்படம் 1960களின் பிற்பாதியில் பார்த்தது. ஷீலா, சத்யன் நடித்தது. பொரல்ல லிடோ தியேட்டரில் பார்த்தது. படம் மட்டுமல்ல அதைப்பார்த்த சூழ்நிலையும் இன்னும் மனதில் நிழலாடுகிறது.

'செம்மீன்'மறக்க முடியாத மீனவ படம். 6 மாதங்களுக்கு முன் வந்த நீர்ப்பறவையில் கூட பல காட்சிகள் இன்னும் மனதில் நிற்கின்றன.

ஆனால் மரியான்???

ஓரிரு வாரங்களுக்கு மட்டும் நினைவில்

பாடல்கள் என்றென்றும் நினைவில்

பரத்-பால அடுத்த படத்தில் திரைக்கதைதான் முக்கியம் என்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பார்.

வானவில் விமர்சனக் குழு

யார் இந்த பரத் பாலா

ஜப்பானின் 'சோனி' நிறுவனம் ஆரம்பத்தில் இலத்திரனியல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு இப்போது திரைப்படம், இசை ஆகிய துறைகளுக்கு வியாபித்துள்ளது.

சோனி அமெரிக்காவின் திரைப்படத்துறைக்குள் நுழைந்து இப்போது தமிழ் திரைப்படத்துறைக்கும் வந்துவிட்டது.

அத்துடன் இசையினால் இந்தியர்களின் மனதை கொள்ளையடிக்க நூறு கோடி ரூபா செலவில் திட்டம் வகுத்தது.

இந்திய சுதந்திரத்தின் பொன்விழா அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

இந்தியாவின் இரட்டை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை சோனி வளைத்தது. 'வந்தேமாதரம் 1997'அதில் பிறந்தது.

வந்தே மாதரத்தை விடியோ ஆல்பமாக்க 'பரத்பாலா-கனிகா' தம்பதிகளை காட்டினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நூறு கோடி ரூபா இவர்களுக்கு மழையாகப் பொழிந்தது.

தனது 'கார்ப்பரேட்'நண்பர்களுக்கு ரஹ்மான் காட்டிய கருணை அது.

(இசைக்காக ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட தொகை தனி)

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது 'வந்தே மாதரம் 1997'

ரஹ்மானின் இசைப்பயணத்தில் முக்கிய மைல்கல்  இது.

அதனை விடியோ அல்பமாக தயாரித்தவர் பரத்பாலா.

இவரது முதலாவது திரைப்படம்தான் 'மரியான்'

கூவாகத்தில் அரவாணிகள்.(2ம் பாகம்)

நாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்யும் உரிமை வேண்டும்

கூவாகத்திலிருந்து  மணி ஸ்ரீகாந்தன்.

 

 மெதுவாக சென்று கதவைத் திறந்தேன்.பாண்டிச்சேரி தினகரன் பதிப்பிலிருந்து வந்திருந்த செய்தியாளர் நின்றிருந்தார். ‘அரவான் களப்பலி கொடுக்கப்படுவதை பார்க்க வேண்டுமென்றால் இங்கிருந்து நாலு மணிக்காவது கிளம்பவேண்டும்.தயாராக இருங்க’என்று சொல்லி விட்டு சென்றார்.பின்னர் சுமார் நாலரை மணியளவில் விழுப்புரத்திலிருந்து கிளம்பினோம்.

கூவாகம் செல்லும் ஏழாதிமங்களம் ,திருவெண்ணெய் நல்லூர் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் பயணம் சிரமமாக இருந்தது.கூவாகம் கூத்தாண்டவர் கோயிலை அண்மித்ததும் ஒப்பாரி சத்தம் அந்தப் பகுதி முழுவதும் கேட்டது.கூத்தாண்டவர் களப்பலியாகும் தினம் என்ற செய்தியை நண்பர் காதில்  குசு குசுத்தார். கூவாகத்தில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தோம். வழி நெடுங்கிலும் அரவாணிகள் தலையில் அடித்து ஒப்பாரி வைத்து அழுதுக்கொண்டிருந்தனர்.

அப்படி அழுதுக்கொண்டிருந்த திருநங்கை மும்தாஜிடம் ‘என்னங்க தலையால அடித்து ஒப்பாரி வைக்கிறீங்க ஆனா கண்களில் கண்ணீரை காணலியே?’என்றோம் அப்பாவியாக,அதற்கு மும்தாஜ் ‘ஆமா சத்தம் போட்டு கண்ணீர்விட்டு  அழ இது என்ன எழவு வீடா? ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். வருடா வருடம் இங்கே வந்து ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து சந்தோஷமாக கொண்டாடுகிறோம். கூவாகம் திருவிழா என்றால் எங்களுக்கு அது பெரிய சந்தோசம் தான்.’என்ற மும்தாஜ் தாலி அறுக்க நேரமாகி விட்டதாக சொல்லி இடத்தை காலி செய்தார்.நாமும் அவரை பின் தொடர்ந்தோம்.கூவாகம் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புளிய மரத்தை நோக்கித்தான் அரவாணிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றுக் கொண்டிருந்தார்கள்.
சுட்டெரிக்கும் அக்னி வெயிலையும் பொருட்ப்படுத்தாது நாமும் அந்த புழுதி மண்ணில் நடைப்போட்டோம்.புளியந்தோப்பில் உள்ள ஒரு பெரிய மரத்தடியில் அரவாணிகளுக்கு தாலி அறுக்கும் சடங்கை பூசாரிகள் செய்து கொண்டிருந்தார்கள்.கை வலையல்களை உடைத்து,குங்குமம் அழித்து,தலைமுடி களைந்து மூலியாக நின்றார்கள்.கூட்டமாக நிற்கும் அரவாணிகள் கழுத்திலுள்ள தாலியை கத்தியால் அறுத்து எடுத்து புளிய மரக்கிளைகளில் மாட்டியிருந்தார்கள்.அப்படி மாட்டியிருக்கும் தாலிகள் இலட்சக்கணக்கில் அந்த மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்தன.மரம் முழுவதும் தாலிக் கயிறுகளாக இருந்தது.

தாலி என்ற பெயரில் சம்பிரதாயத்துக்காக மஞ்சள் துண்டை மஞ்சள் கயிற்றில் கட்டியிருந்தார்கள்.அந்த மரத்தடியில் நிறையப் பேர் கற்பூரம் கொழுத்தி வழிப்பட்டார்கள்.அந்த மரத்தடியிலும் அரவாணிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அதை வேடிக்கைப் பார்க்க குவிந்திருந்த இளைஞர்கள் அங்கேயும் சில்மிஷசங்களில் இறங்க அவர்களை அரவாணிகள் வாய்க்கு வந்தப்படி
திட்டிக்கொண்டிருந்தார்கள்.அதன் பிறகு அரவாணிகள் குளிக்கும் கிணற்றுக்கு வந்தோம்.அது ஒரு பெரிய கிணறு ,குளம் போன்ற அமைப்பில் இருந்தது.அதில் ஒரே சமயத்தில் ஐம்பது பேர் இறங்கி குளிக்கலாம்.அதில் உடைகளை களைந்து விட்டு பாவாடையால் மார்புவரை கட்டிக் கொண்டு கிணற்றில் கும்மியடித்து குஷியாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.அரவாணிகள் குளிப்பதை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘என்னங்க இவங்க குளிப்பதை இப்படி வேடிக்கை பார்க்குறீங்களே?’ என்று அங்கு நின்றுக்கொண்டிருந்தவரிடம் கேட்டோம். ‘நம்மளும் அவங்களும் ஒண்ணுதானே அதுதான் உரிமையோடு பார்க்கிறோம்.ஆம்பளையா இருந்து பொம்பளையா மாறியவங்கதானே!’என்று தமது பார்வையை நியாயப்படுத்தி பேசியதைக் கேட்டுக்கொண்டே அரவாணிகள் உடைமாற்றிக் கொண்டிருக்கும் பக்கத்துக்கு சென்றோம்.குளித்து முடித்த அரவாணிகள் அனைவரும் வெள்ளை சேலைக்கு மாறிக் கொண்டிருந்தார்கள்.அவர்களை கொஞ்சம் நெருங்கிப் போய் போட்டோ பிடிக்கப் முற்பட்டப்போது.ஒரு அரவாணிக்கு கோபம் வந்து விட்டது.
 ‘ஏன்டா பரதேசி உங்க அக்கா தங்கச்சி சேலை மாற்றினா இப்படி படம் பிடிப்பாயா? நாங்களும் பொண்ணுதான்.பார்த்தா தெரியலை?’என்று எம்மை பார்த்து முறைத்தார்.இதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.வெள்ளை சேலை அணிந்துக் கொண்ட அரவாணிகள் தமது ஊர்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள்.வட நாட்டிலிருந்து வந்திருந்த அரவாணிகள் நிறைய தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வழி நெடுகிலும் உள்ளவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வந்தார்கள். விழுப்புரம் பஸ் முழுவதும் அரவாணிகள் நிரம்பி காணப்பட்டார்கள்.நாங்களும் அதில் ஏறி கூட்டத்தோடு கூட்டமாக பயணித்தோம்.நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு கீழே உட்கார்ந்திருந்த அரவாணிகள் கூத்தாண்டவர் விழா பற்றி பேசிக் கொண்டு வந்தார்கள்.
அதில் ஒரு அரவாணி சென்னை கோயம்பேட்டில் வசிக்கிறாராம்.ஒவ்வொரு வருடமும் கூவாகம் வந்து விடும் இவர் இந்த ஆண்டும் கூவாகத்திற்கு வந்திருக்கிறார். போலிஸ் பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.பெண் பொலிஸ் குறைவாக இருந்ததால் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் கிள்ளுகிறார்கள் என்றும் அவர் குறையிட்டுக் கொண்டார்.
எல்லா அரவாணிகளுக்கும் முழுமையான மார்பக வளர்ச்சி இருப்பதில்லை.சிலர் ஹோர்மோன் ஊசி ஏற்றி மார்பகங்களை பெரிதாக்கி கொள்வார்கள்.சிலர் பஞ்சு அல்லது தண்ணீர் பாக்கெட்டுக்களை மார்பு கச்சைக்குள் அடக்கி கொள்வார்கள்.பஸ்சில் பயணித்த அந்த அரவாணி
பெருமையுடன்,தனக்கு உண்மையாகவே மார்பகம் இருப்பதாகவும் எனவே வலி தாங்க முடியவில்லை என்று தமிழக பொலிஸை திட்டினார்.அந்த உரையாடலை கேட்டுக் கொண்டே விழுப்புரத்தில் வந்து இறங்கினோம். பின்னர் வேலூர் அரவாணிகள் சங்கத்தலைவி கங்காவின் முகவரியை தேடிப் பிடித்தோம்.
கங்கா வேலூர் பழைய நகரில் உள்ள தோல்கிடங்கு என்ற இடத்தில் வசிக்கிறார்.வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம் சுமார் பதினைந்து திருநங்கைமார் தரையில் அமர்ந்து டீவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.எம்மை கண்டதும் ‘நீங்கள் யாரைப் பார்க்கணும்?’ என்று கேட்டார்கள்.நாங்க பிரஸ்சுல இருந்து வாறோம் தலைவி கங்காவை பார்க்கணும் என்றோம் உடனே வீட்டுக்குள்ளிருந்து நெற்றியில் பெரிய பொட்டுடன் கங்கா வெளியே வந்தார்.
“வாங்க சார்”என்றவரிடம் நாம் வந்த நோக்கத்தைச் சொன்னோம்.  “இப்போவெல்லாம் முன்ன மாதிரி இல்லீங்க எங்களுக்கு கொஞ்சம் மரியாதைக் கிடைக்குது பத்திரிகை மீடியா எல்லாத்திலையும் எங்கள் பிரச்சினைப் பற்றி பேசுகிறார்கள்.ஆனாலும் சில ஊர்களில் இன்னமும் எங்களைக் கண்டால் கேலிப் பேசுவது கல்லால் அடிப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.வட நாட்டில் எல்லாம் எங்களை சாமி மாதிரி நினைத்து கௌரவம் செய்கிறார்கள்.எங்களை கிருஸ்ணனின்
அவதாரமாக நினைக்கிறார்கள்.அவர்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கு எங்களை முன் நிறுத்துகிறார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் இந்த பழக்கம் இன்னும் ஏற்படவில்லை.இளைஞர்களின் தொல்லை தாங்காமல் பொலிஸ் ஸ்டேசனுக்கு போனால் அங்கும் தொல்லை தாங்க முடியல.அந்த புகாரை கணக்கில் எடுப்பதில்லை,அவங்களும் தேவையில்லாத கதையெல்லாம் பேசுறாங்க,” என்று காவல் துறையிடம் கோபப்படும் கங்காவிடம் நீங்கள் ஏன் மகளிர் காவல் துறையிடம் போகக் கூடாது என்றுக் கேட்டோம்.
“அட நீங்க வேற சார்…அங்கே போனா பெண் போலிஸ் நீங்க இங்கே வராதீங்க ஆம்பளை பொலிஸ் ஸ்டேசனுக்கு போங்கன்னு விரட்டுறாங்க!நாங்க ரெண்டும் கெட்டான் நிலையில இருக்கோம்.இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டவே எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க சொல்லி அரசாங்கத்ததை வலியுறுத்துகிறோம்.ஆனால் இன்னும் அது முறையாக அமுலுக்க வந்த மாதிரி தெரியலீங்க…   அடுத்த தேர்தல்ல எங்களை
மூன்றாவது பாலினமா சேர்த்து ஓட்டுப்போடும் உரிமையை வாங்கித்தரப் போறதா சொல்லுறாங்க அப்படி கிடைத்தால் சந்தோசம்தான்.எங்களின் எல்லாத் தேவையையும் நாங்க போராட்டம் நடத்திதான் வாங்க வேண்டியதா இருக்கு.ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்வதற்கு அரசு அனுமதியளிக்காததால் அதற்காக பெரிய போராட்டத்தை நடத்தி இப்போது அனுமதி வாங்கியிருக்கிறோம். அனைத்து அரவாணிகளுக்கும் இப்போது இலவசமாக ஆபரேஷன் செய்கிறார்கள்.” என்றார் கங்கா.
ஏன் ஆபரேஷன் செய்துக் கொள்ள வேண்டும் ?  “அதை அறுத்து எறிந்தால்தான் எங்களுக்கு நிம்மதியே!எங்க உடம்புல தேவையில்லாத ஒரு உறுப்பாகத்தான் அதை நாங்கள் நினைக்கிறோம். ஆபரேஷன் செய்த பிறகுதான் எங்களுக்கு ஒரு புதுத் தெம்பு ஏற்ப்படுகிறது.” என்று அவர் சொன்னப் போது பாவமாக இருந்தது. நமக்கு வியப்பும் சிரிப்புமாக இருக்கும் ஒரு விசயம் அவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. 
 அரவாணிகள் என்பதற்க்கு பதிலாக ‘திருநங்கை’ என்ற சொல்லை இன்றைய ஊடகங்களில் பயன்படுத்துகிறார்களே..?என்று ஒரு கேள்வியை முன் வைத்தோம். “எங்களுக்கு அதில் உடன்பாடு கிடையாது.திருநங்கை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் என்ற கருத்து நிலவுகிறது.இதுதான் எங்களுக்கு பிரச்சினையே.அதனால் எங்களுக்கு அந்தப் பெயரில் விருப்பமில்லை.யாரோ ஒருவர் தன்னிச்சையாக இந்த பெயரை வைத்திருக்கிறார்.அனைத்து இந்திய அரவாணிகளை ஒன்று திரட்டி எங்களிடம் இந்தப் பெயர் பற்றி விவாதித்திருக்க வேண்டும்.அதை யாரும் செய்யவில்லை.எங்களுக்கு அரவாணிகள் என்ற பெயர்தான் பிடித்திருக்கிறது.”என்றவரிடம் அரசிடம் வேறு என்ன கோரிக்கைகளை முன் வைத்து இருக்குறீர்கள். என்று கேட்டோம்.
“வேலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது அரவாணிகள் இருக்கிறார்கள்.  அதற்கு நான்தான் தலைவி.இப்படி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கிலும் நாங்கள் இருக்கிறோம்.
 எங்கள் பிரச்சினையம் பெரியதுதான்.ஆனாலும் மற்றவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளையும் சலுகைகளையும்தான் நாங்கள் கேட்கிறோம்.
நாங்கள் ஒரு ஆணை திருமணம் செய்ய விரும்பினால். எங்கள் திருமணத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்.முதியோர் பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.இப்போது ரேஷன் அட்டை கிடைக்கிறது.முக்கியமாக எங்களின் படிப்புக்கு தகுந்த வேலை வழங்கப்பட வேண்டும்.  எங்களுக்கு வேலை மடடும் கிடைத்து விட்டால் நாங்கள் கடை கடையாக பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் எழாது.”என்றார் கங்கா உறுதியாக.                                                                                                                                

அரவான் திருமணம்

குருஷேத்திரத்தில் பாரதப் போர் மூள்வது நிச்சயமாகிவிட்ட நிலையில் போரில் யாருக்கு வெற்றி என்பதை சோதிடத்தின் மூலம் தெரிந்துக் கொள்ள முயற்சி நடக்கிறது.சகாதேவன் சிறந்த சோதிடன் அவன் சோதிடம் பார்த்து ஒரு முழுமையான வீரனான ஆணை அமாவாசையன்று பலி கொடுத்தால் அந்தப் பக்கம் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.என்று கூறுகிறான்.இதை அறிந்த துரியோதனன் பலி கொடுப்பதற்காக இளைஞனை தேடுகிறான்.
அர்ஜுனனுக்கு சென்ற இடமெல்லாம் மனைவியர்,குழந்தைகள் அவனது ராசி அப்படி.அவனுக்கும் ஆதிஷேசனின் மகளான உலோபி என்ற நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான் ஆணுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்திய அவன் சிறந்த வீரனும் கூட அவனை அணுகும் துரியோதனன் அவனை களப்பலிக்கு இணங்கச் செய்து திகதியையும் வாங்கி வந்து விடுகிறான்.ஆனால் அவனிடத்தில் ஒரு குறை. ஏனெனில் அவனுக்கு
திருமணமாகவில்லை.களப்பலியாகிறவன் திருமணமானவனாக இருக்க வேண்டும்.உடனடியாக அரவானுக்கு பெண் தேடும் படலம் அவசர அவசரமாக நடக்கிறது. ஆனால் ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருக்க எந்த பெண்ணும் தயாராக இல்லை.
இந்த நிலையில் விஷயத்தை அறிந்து கொண்ட கிருஸ்ணர்.ஒரு யுக்தி செய்கிறார்.களப்பலியை பாண்டவர்களுக்கு சாதகமாக முடிப்பதற்காக அவர் மோகினி உருவெடுத்து வருகிறார்.ஆனால் பெண்ணாக இல்லை அரவாணியாக.அமாவாசை தினத்தன்று களப்பலி நிகழ்ந்தால் அது கௌரவர்களுக்கு சாதகமாகி விடும்.என்பதால் அமவாசையை ஒரு நாள் முன்கூட்டி வருகின்ற மாதிரி பாவனையை ஏற்படுத்தி அமாவாசைக்கு  முன்தினமே களப்பலி நிகழ்வதாக பார்த்துக் கொள்கிறார்.தான் (மோகினி) அரவானைத் திருமணம் செய்து ஒருநாள் மனைவியாக இருப்பதற்கு சம்மதம் எனத் தெரிவித்ததை துரியோதனன் ஏற்றுக்கொள்ள களப்பலிக்கு முதல் நாள் திருமணம் நடக்க ஏற்பாடாகிறது.
அரவான் என்ற அந்த இளைஞன் ஆணுமற்ற பெண்ணுமற்ற அவளை திருமணம் செய்து கொள்கிறான்.முதலிரவையும் உல்லாசமாக அனுபவிக்கிறான்.மறு நாள் கௌரவர்களினால் அரவான் களப்பலியாக கொல்லப்படுகிறான்.
அரவான் என்ற ஆண் பெயரைப் பெண்ணாக மாற்றும் போது அரவாணி என்றாகிறது.பேடி,அலி,அந்நகர்,திருநங்கை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவர்களுக்கு அரவாணி என்றப் பெயர் இப்படித்தான் தோன்றியது.கூவாகத்தின் கூத்தாண்டவர் கோவிலில் வீற்றிருக்கும் அரவான் (கட்டை வடிவில்)தெய்வத்தை திருமணம் செய்வதாகவும் மறுதினம் அரவான் களப்பலியாவதால் தாலி அறுத்து ஒப்பாரிவைப்பதாகவும் இங்கே நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.இதில் விஷேசம் அரவாணிகள் தம்மை கிருஸ்ணரின் பிரதிநிதியாக கருதி அரவானைத் திருமணம் செய்துக் கொள்வதுதான்.சமூகத்தால் ஒதுக்கப் படும் இவர்கள்.இறைவனின் பிரதிநிதியாக திகழ்வதில் பெருமையடைகிறார்கள்.
சரி பெண் வடிவில் வராமல் கிருஸ்ணர் ஏன் அரவாணி வடிவில் வரவேண்டும்?
 அரவான் திருமணம் செய்து கொண்டது ஒரு ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒருவரை.அது சாதாரண செல்லுப்படியாகக்கூடிய திருமணம் அல்ல.அரவான் கொல்லப்பட்டதும் மனைவி விதவையாகவும் முடியாது.எனவே களப்பலி குறையுள்ளதாகிறது.மேலும் மறுதினம் இறக்கப்போகின்ற அரவானின் எல்லா வகையான காம இச்சைகளுக்கு ஈடுகொடுக்கும் இரு பாலுறுப்பு கொண்ட வடிவமாகவும் மோகினி இருந்திருக்கலாம்.

 அரவாணிகள் பற்றி மேலும் வாசிக்க…

“அரவாணிகளை கேலி செய்பவர்களை கண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்”