Saturday, July 20, 2013

'பெற்றோரை வறுமை வறுத்தெடுத்து கொன்று விட்டது. அது பற்றி நாம் பேச வேண்டாம்'

உரையாடியவர்- மணி ஸ்ரீகாந்தன்

 வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய குள்ளமான நடிகர் அப்புக்குட்டி, குள்ளநரிக்கூட்டம், சுந்தரப்பாண்டியன், அழகர்சாமியன் குதிரை, மன்னாரு உள்ளிட்டு படங்களில் நடித்து தேசிய விருதுப் பெற்று எம்மை ஆச்சர்யப்பட வைத்த அந்த வெள்ளை சிரிப்பு, வெள்ளந்தி மனிதரை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

வீட்டுக்குள் நுழைந்த போது அப்புக்குட்டி உடற்பயிற்சி மெஷினில் நின்றபடி தமது உடம்பை முறுக்கேற்றி கொண்டிருந்தார்.

"என்ன சார் சிக்ஸ் பேக்கா?" என்றோம்.
"அட சும்மா இருங்க. சிக்ஸ் பேக் காட்டி படம் பண்ண நாம் என்ன சூர்யாவா? இப்போதான் எழும்பினேன். அதுதான் சோம்பல் முறிக்கிறேன்" என்றார்.
அந்த வீட்டில் அப்புக்குட்டியைத் தவிர வேறு யாரும் இல்லை... "சாரி சார்...ஒரு டீ போட்டு கொடுக்கக்கூட ஆளில்லை. நம்ம பிரண்டு வெளியே போனவனை காணோம்..." என்று தடுமாறிய அப்புகுட்டியை "பரவாயில்லீங்க சீக்கிரமே ஒரு கல்யாணத்தை பண்ணவேண்டியதுதானே..."என்றோம்.

"நான் சினிமாவில் இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டி இருக்கிறது. பிறகு பார்ப்போம்"என்று நாம் கேட்ட கல்யாண விசயத்திற்கு ஒரு முற்றுபுள்ளி போட்டார் அப்புக்குட்டி. தமிழில் இருபத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர்,  வெண்ணிலா கபடி குழு மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானாலும்,  கில்லி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபா நோட்டு, மறுமலர்ச்சி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்திருக்கிறாராம்.

"நிறையப் படங்களில் நடிக்க வாய்புகள் வருது, ஆனாலும் நமக்கேற்ற கதை அமைந்தால் நடிக்கலாம்,  அழகர்சாமி, மன்னாரு ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், அடுத்தடுத்து கதாநாயகனாக பண்ண முடியாது. ஏனென்றால் இளம் நாயகிகளோடு டூயட் பாடவோ, பறந்து பறந்து சண்டை  போடவோ இந்த உருவ அமைப்பு ஒத்துழைக்காது..." என்று சொல்லும் அப்புக்குட்டியின் நிஜப் பெயர் சிவபாலன் திருச்செந்தூருக்கு பக்கத்தில் இருக்கும் நாதன்கிணறுதான் இவரின் சொந்த ஊர்.

"நாதன்கிணறுக்கு பக்கத்தில் தான் எனது அம்மாவின் ஊரான வள்ளிவிளை கிராமம். அங்கே இருந்த வள்ளிவிளை நடுநிலை பள்ளியில் எட்டாவது வரைக்கும்தான் நான் படித்தேன். அப்பா சித்ரவேலு, அம்மா சந்திரா தம்பதியினருக்கு நான் மட்டும்தான் ஒரே பிள்ளை. விவசாயக் குடும்பம். ஆனால் எங்களுக்கென்று சொந்தமாக காணி நிலம் எதுவும் கிடையாது,"என்று சொல்லும் அப்புக்குட்டியின் பெற்றோர்கள் இன்று உயிரோடு இல்லை. வறுமை வறுத்தெடுத்து அவர்களை கொன்றுவிட்டதாகவும் அதுபற்றி பேச வேண்டாம் என்றும் அன்புகட்டளைப் போட்டார் அப்பு.

"சின்னவயசில் பள்ளிக்கூடத்திற்கு கட் அடிச்சிட்டு மீன் பிடிக்க போறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் நண்பர் சேமராஜியும் மீன் பிடிக்க தூண்டிலில் மண் புழுவை குத்தி எடுத்திட்டு குளத்திற்கு போய் மீன் பிடித்து வருவோம். வீடு திரும்பினா அம்மா திட்டுவாங்க. பிறகு அதை குழம்பு வச்சி சாப்பிடுவோம்... ஒருநாள் அப்படித்தான் நான் குளத்தில் தூண்டியை போட்டு சுண்டி இழுத்ததில் தூண்டில் சர்ரென்று வந்து எனக்கு பின்னாடி நின்றிருந்த

 நண்பர் செல்வகுமாரின் கண் இமையில் மாட்டிக்கொண்டது. குத்திய தூண்டியை எடுக்க படாத பாடு பட்டோம். கண்ணை மூடினாள் காயம் தெரியும் என்பதற்காக நண்பர் செல்வகுமார் அவரின் அம்மாவிற்கு முன்னால் கண்களை திறந்து வைத்தபடியே அன்று முழுவதும் நடமாடி இருக்கிறான். எங்கே நான் மாட்டிக் கொள்வேனோ என்று அன்று முழுவதும் நான் பயந்து கொண்டே இருந்தேன். கடைசிவரை அந்த விடயத்தில் நான் மாட்டவில்லை... சென்னைக்கு வந்து பதினேழு வருடங்களின் பின் நாதன்கிணறு கிராமத்திற்கு சென்றேன். என் நண்பர்கள் எல்லோரையும் சந்தித்தேன். ஆனால் செல்வகுமாரை மட்டும் பார்க்கவில்லை. செல்வா எங்கே இருக்கானோ..."என்று பெருமூச்சு விடுகிறார் அப்புக்குட்டி.

93ம் ஆண்டில் ஒருநாள்  அப்புக்குட்டியை அவரது தந்தை சென்னைக்கு அழைத்து வந்து வடபழனி சரவணபவன் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்திருக்கிறார். "அந்த ஹோட்டலில் மேசை துடைத்தும் சாப்பாட்டு தட்டை கழுவும் வேலையை பல வருடங்களாக செய்து வந்தேன். ஒருநாள் சரவணபவனில் சாப்பிட வந்த ஒருவர் என்னை பார்த்து 'நீ சினிமாவில் நடிக்கிறியா?' என்றார். எனக்கு அவர் அப்படி கேட்டது வியப்பாக இருந்தது. ஜோக் அடிக்கிறார் என்று நினைத்தேன். நான் பதில் சொல்வதற்கு முன் 'வெளியே காத்திருக்கிறேன் வா' என்றவர் வெளியே போய்விட்டார். ஆனால் எனக்கு உடனே வெளியே போக முடியவில்லை. முதலாளியிடம் அனுமதி பெற்று நான் வெளியே போனபோது அந்த நபர் அங்கே இல்லை. அதன் பிறகுதான் எனக்கு சினிமா ஆசை வந்தது. சரவணபவனுக்கு அருகிலேயே ஏவிஎம் இருந்ததால் எனக்கு வசதியாக போய்விட்டது. முதன் முதலில் பாக்கியராஜ் சாரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவர் என்னை நடித்துக் காட்டச் சொன்னார். எனக்கு அவரை பார்த்ததில் கை கால் நடுங்கியதால் எனக்கு நடிப்பு ஒழுங்காக வரவில்லை. அதனால்தான் எனக்கு அவர் வாய்ப்பு தரவில்லை.

அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் தலைக் காட்டினேன். ஆனால் வெண்ணிலா கபடி குழு மூலமாக எனது நடிப்புக்கு தீனிப்போட்டு என்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்  இயக்குனர் சுசீந்திரன். அதன் பிறகு அவரின் அழகர்சாமியின் குதிரை எனக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது" என்று சொல்லும் அப்புக்குட்டியிடம் விருது கிடைத்த சந்தோஷம் பற்றிக் கேட்டோம்.

விருதை வாங்கி வந்து வீட்டில் வச்சிருக்கேன். அதை என் அம்மா அப்பாவிடம் காட்டி சந்தோஷப்பட எனக்கு யாருங்க இருக்கா... என்று சொல்லும் போது அப்புக்குட்டியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் எட்டிப்பார்த்தன.

கொஞ்சகாலமாக ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சைக்கிளில் சென்று இறங்கிய அப்புகுட்டி புதிதாக ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி இருக்கிறார்.

"என் அம்மா, அப்பா வசதியானவங்களா  இருந்திருந்தா நான் காரில் போயிருப்பேன். என்கிட்டே வசதி இல்ல... அதனாலதான் சைக்கிள்ல
வண்ண வானவில்- ஜுலை,2013
போனேன். ஆனால் சைக்கிள் மிதிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நாதன்கிணறுல நான் வாழ்ந்த காலத்தில் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஆறுமுகநேரிக்கு சினிமா பார்க்க நானும் நண்பர்களும் சைக்கிளில் போவோம். நைட்ஷோ தான் பார்க்கப் போவோம். சைக்கிளை மிதித்துக் கொண்டு பாட்டு பாடிக்கிட்டே போவது ஒரு தனிச்சுகம்...

என்னதான் நாம ஏஸி கார்ல போனாலும் அந்த சுகம் இதில் கிடைப்பதில்லை"என்று அந்த பசுமையான காலத்தை நினைத்து புல்லரித்து பேசும்  அப்புக்குட்டி தமிழ் சினிமாவில்  இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.

படங்களில் சித்திரிக்கப்படுவதைப் போலவே நேரிலும் அப்பாவியான நல்ல மனிதராகவே இவர் காட்சியளிக்கிறார்.

1 comment:

  1. அருமையான பதிவு ஐயா..... மனதை தொட்ட பதிவும் கூட நன்றி வாழ்த்துக்கள்...

    ReplyDelete