Tuesday, June 4, 2013

நிரஞ்சனியின் பளீர் பதில்கள்..


உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்

 

"திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்றதும் வீட்டில் ஒரே அமளிதுமளியாகி விட்டது. இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு கடைசியில் அம்மா அனுமதி தந்தார்."


"சிங்கள ரசிகர்கள் அடையாளம் கண்டு புன்னகைக்கிறார்கள். பேசுகிறார்கள். தமிழ் ரசிகர்கள் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஏழையாக பிறக்கும் விஜய் ஒரே பாடலில் கோடீஸ்வரராவதை கைதட்டி ஏற்கும் இவர்கள் எங்களைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு புன்னகையாவது..."


நம் நாட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் அசோக்க ஹந்தகமவின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் 'இனி அவன்'. போருக்குப் பின் ஒரு புனர்வாழ்வு பெற்ற போராளியின் வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இரண்டு நாயகிகள். அதில் நிரஞ்சனி நடித்திருந்த பாத்திரம் பெரும் விமர்சனத்திற்கும், தமிழ் பண்பாட்டு தீவிரவாதிகளின் முகசுளிப்புக்கும் ஆளானது. ஆனாலும் நிரஞ்சனி ரொம்பவும் தைரியமான பெண். இந்த சமூகம் தீயாய் வாரிக் கொட்டிய விமர்சனங்களை தாண்டி வந்திருக்கிறார்.

"படத்தில் நான் நடித்த அந்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறேன். ஆனால் நம் சமூகத்தவர்கள் உண்மை நிலையை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏழையாக பிறக்கும் விஜய் ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவதை கைதட்டி வரவேற்கிறார்கள். அதுதான் சினிமா என்கிறார்கள். ஆனால் எங்களை பாராட்டவேண்டாம். ஒரு புன்னகையாவது செய்யலாமே! நான் அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டேன். நாய் வேசம் போட்டால் குரைத்துதானே ஆகவேண்டும்?" என்று கொஞ்சம் உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி பேசுகிறார் நிரஞ்சனி.

இனிஅவன் திரைப்படத்தில் நடித்த பிறகு சிங்கள ஊடகங்கள் அனைத்தும் தன்னை நேர்கண்டு பேட்டி வெளியிட்டதை பெருமையாக கூறும் அவர்,  தமிழ் ஊடகங்கள் தன்னைக் கண்டு கொள்வே இல்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார்.

இனி அவன் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது என்று எமது முதல் கேள்வியை தொடுத்தோம்.

"நான் நேத்ரா தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அந்த நாட்களில் யா டிவி தயாரிக்கும் தமிழ், சிங்கள ரேடியோ நாடகங்களுக்கு நான் இரண்டு மொழிகளிலும் குரல் கொடுப்பேன். அப்போது அங்கே பணியாற்றிய ஜானக, தரங்கா அக்கா ஆகியோருடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அவர்கள் தான் இலங்கையில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படத்திற்கு நடிகை தேவை என்ற செய்தியை  சொல்லி அமல் அல்விஸ் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரோடு பேசியதில் அவர் அசோக ஹந்தகமையின் உதவி இயக்குனர் என்று புரிந்தது. சத்தியமா எனக்கு அதுவரை அசோக்க ஹந்தகமையை தெரியாது.

அதன் பிறகு எனது சிங்கள நண்பர்களிடம் விசாரித்தபோது அசோக்க இலங்கையின் பிரபல இயக்குனர் என்றும் அவரின் சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு உன்னை தேடி வந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் கூறினார்கள். அதன் பிறகே சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற  ஆசை என் மனதில் துளிர் விடத் தொடங்கியது," என்று கூற ஆரம்பித்தார் நிரஞ்சனி.

இந்த இளம் நடிகை நிரஞ்சனியின் பூர்வீகம் கண்டி. ரொம்பவும் கட்டுப்பாடான ஆசாரமான குடும்பத்தை சேர்ந்தவர். ஆரம்ப நாட்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கும் நிரஞ்சனிக்கு 2011 யூத் டெலி டிராமா விழாவில் தென்மாகாணத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது. யூத் டெலிடிராமா தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக ஒரு தமிழர் சிங்கள குறுநாடகத்திற்காக விருது பெற்றிருப்பது நிரஞ்சனி தமிழுக்கு சேர்த்திருக்கும் சிறப்பு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

"நாடகத்தில் என் வீட்டில் அனுமதி வாங்கவே நான் பாடாத பாடு பட்டிருக்கிறேன். சினிமா என்றால் சொல்லலவா வேண்டும்..." என்று கலகலப்பாக சிரித்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார்.

"நான் குழந்தையாக இருக்கும் போதே அப்பா இறந்து விட அம்மாதான் என்னையும் அக்காவையும் வளர்த்து படிக்க வைத்தார். வீட்டில் நான் செல்லப் பிள்ளையாக வளர்ந்தாலும் அம்மாவின் கவனமெல்லாம் என்மீது தான்.

சினிமாவில் நடித்தால் என்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்ற பயம் அம்மாவுக்கு. அதனால் எனக்கு சீக்கிரமே ஒரு கல்யாணத்தை செய்து முடித்துவிட வேண்டும் என்பதிலேயே அம்மா குறியாக இருந்தார்.

நான்தான் அம்மாவிடம் போராடி,  நாடகத்தில் நடித்ததோடு டிவி அறிவிப்பாளராகவும் ஒரு பரிமாணம் எடுத்தேன். அதன் பிறகு சினிமா... அம்மாவிடம் அனுமதி கேட்க ரொம்பவும் பயமாக இருந்தது. அதுவும் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில். அவ்வளவு தூரத்திற்கு என்னை அனுப்புவது சாத்தியமில்லை. யாழ்ப்பாணம் போக இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அம்மாவிடம் விசயத்தைச் சொன்னேன். கடவுளே! வீட்டில் ஒரே அமளி துமளி. பெரிய பிரச்சினையாக போயிட்டது. அம்மா முடியாது என்று மறுக்க அதற்கு நான் அக்ரிமெண்டுல கையெழுத்துப் போட்டுட்டேன். நான் போகாட்டி வழக்கு போட்டுடுவாங்கன்னு அம்மாவிடம் ஒரு பொய்யை சொன்னேன். அம்மா கதையை கேட்க யுத்தம் சம்பந்தமான ஒரு கதை என்று ஒரு வரியில் சொன்னேன். முழுக்கதையையும் சொல்லி இருந்தா அனுமதி கிடைத்திருக்காது. அம்மாவும் இதுதான் உனக்கு முதலும் கடைசியும் இனி சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற கட்டளையோடு அனுமதி தந்தார்."

நிரஞ்சனி சம்பந்தப்பட்ட காட்சிகளை பத்து நாட்களில் படமாக்கி இருக்கிறார்கள். படத்தில் நிரஞ்சனி அம்மாவில் சேலையை கட்டித்தான் நடித்தாராம்.

"படம் வெளியான பிறகு முதல் சிறப்பு காட்சிக்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த என் போஸ்டரை பார்த்ததுமே அம்மா மிரண்டு போனாள்.

'இது என்ன? ஏன் உன்னை இப்படி அசிங்கமாக காட்டியிருக்கிறார்கள்?' என்றார் அம்மா. படத்தைப் பார்த்தால் என்ன நடக்குமோ என நான் பயந்துபோனேன். படம் திரையில் வரத் தொடங்கியதும் அம்மாவைப் பார்த்தேன். அம்மா இந்தியப் படங்களைப் பார்த்து பழகிவிட்டதால் நம் நாட்டு படங்களின் ஒலி, ஒளி, வர்ணம் என்று எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவரின் முகத்தை பார்த்து புரிந்துகொண்டேன். படம் முடிந்ததும் என் நடிப்பு பிரமாதம் என்று அம்மா பாராட்டினார். அம்மா பாராட்டினால் அது ஆஸ்கார் விருது கிடைத்த மாதிரிதானே! நான் ரொம்பவும் மகிழ்ந்தேன். என் கதாபாத்திரம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. மகளை வெள்ளித்திரையில் காட்டியதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி அதனால் நான் தப்பினேன்.

என் நடிப்பை நிறையப்பேர் பாராட்டினார்கள். குறிப்பாக சிங்கள ரசிகர்கள். 'நீங்கள் தானே இனிஅவன் நடிகை?' என்று பக்கத்தில் வந்து கைகொடுத்து பாராட்டினார்கள். ஆனால் தமிழர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டாலும் தெரியாதமாதிரி இருந்து விடுகிறார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தால் கூட அவர்கள் சிரிப்பதில்லை. நாம் எதற்கு ஒரு இலங்கை நடிகையை பாராட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு குடை பிடிக்கும் ஒருவன் இங்கு வந்தால் ஓடிச் சென்று பல் இளித்து அவர்களோடு படம் எடுத்து பத்திரிகையில் போட்டு பெருமைப்பட துடிக்கிறார்கள். என்ன மனிதர்களோ இவர்கள்..."என்று வெறுப்பில் குமுறுகிறார் நிரஞ்சனி.

நிரஞ்சனியை நம்நாட்டு தமிழ் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும் புலம்பெயர் நாடுகளின் இணையத்தளங்கள் பல புகழாரம் சூட்டி எழுதியுள்ளன.

2009ல் நேத்ரா தொலைக்காட்சியில் பிரவேசம் செய்த இவர் லன்ச்டைம் மியூசிக்,  நேத்ரா எக்ஸ்பிரஸ்,  சமையல்கலரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வளங்குகிறார்.

"இனியவன் படப்பிடிப்பு யாழ்ப்பாண தீவுப் பகுதி கடலோரத்தில் நடந்த போது ஒரு காட்சியில் தர்ஷனும்,  ராஜாகணேசனும் கடலோரத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வேணுக்குள் அமர்ந்திருப்பேன். அந்தக் காட்சி உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் போது படமாக்கப்பட்டது. அப்போது அங்கே சில்வர்சீட் (ரிப்ளெக்டர் போர்ட்) வைத்திருந்தார்கள். நான் வேனுக்குள் இருந்தவாறே அந்த ரிப்ளெக்டர் போர்ட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வெளிச்சம் என்னை குழப்ப திடீரென்று எனக்கு தலை சுற்றிக்கொண்டு வந்து கீழே விழ,  டைரக்டர் கட் சொல்லி காட்சியை நிறுத்திவிட்டு,  ஓடி வந்தார். அதன் பிறகு அன்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அடுத்த நாள்தான் அந்தக் காட்சியை படமாக்கினார்கள்," என்று சொல்லும் நிரஞ்சனி,  ஒரு'தல' ரசிகை. மணிபர்சு, போன் என்று அனைத்திலும் அஜித் போட்டோதான். உங்கள் ரோல் மொடல் யார் என்று கேட்டதற்கு 'தல' புராணம் பாடத்தொடங்கி விட்டார்.

"நான் சின்ன வயசில் ரொம்பவும் வாயாடி பொண்ணுங்க. யாருக்கும் பயப்பட மாட்டேன். கண்டி கலவன் பாடசாலை ஒன்றில் படிக்கும் போது நான்தான் மொனிட்டரா இருந்தேன். பையன்கள் எனக்கு அடங்கி இருக்கணும் என்று நினைப்பேன். ஒரு தடவை வகுப்பில் கேதீஸ் என்ற பையன் நான் சொல்வதை கேட்காமல் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்தான். ஆத்திரம் தாங்காமல் ஓங்கி ஒரு அறை கொடுத்தேன். அவ்வளவுதான் அவன் மயங்கி சுருண்டு விழுந்தான். இப்போது அவன் ரொம்பவும் பெரிய ஆள். கொழும்பில் இருக்கிறான்" என்றவரிடம் உங்கள பார்க்கும்போது லேடி சிங்கம் மாதிரிதான் தெரியுது... ஒன்றரை கிலோ வெயிட் போட்டு  அடிச்சிங்களா? என்றதும் சிரிக்கிறார். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் மாதிரி வீரப் பெண்களின் வேடத்தில் நடிக்க ரஞ்சனிக்கு ஆசையாம்... நிரஞ்சனியின் தைரியம் அவரை வாழ வைக்கும். வாழ்த்துக்கள் நிரஞ்சனி.

No comments:

Post a Comment