Sunday, June 2, 2013

மரண விசாரணை மன்றில் கேட்ட கதைகள்

எமனை நோக்கி எஸ்கேப் ஓட்டம்!

 எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக சென்று செய்தி சேகரித்து வரும் கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை இங்கே உங்களுடன் சுவைபட பகிர்ந்து கொள்கிறார்.

  
ஏ.மதுரை வீரன்

ஜினதாஸ முதலாளி பெரிய ஜவுளிக்கடை பிஸினஸ்மேன். மற்றொரு ஜவுளிக்கடை முதலாளியின்  மகளை திருமணம் செய்ததன் மூலம் ஒரு ஜவுளிக்கடை இரண்டாகி இப்போது மூன்றாகியிருக்கிறது.

இவருக்கு இரண்டு பிள்ளைகள். ரூபன் என்றொரு மகன், ரூபினி என்றொரு மகள். இவர்கள் இரண்டு பேருக்கும் பணக்காரத்தன்மை மனதுக்குள் வந்துவிடக் கூடாது,தாம் மத்திய குடும்பத்தினர் என்றே அவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் அளவோடு செலவு, அதனை மீறாத கவனம் ஆகியவற்றை சிறு வயதில் இருந்தே தனது பிள்ளைகள் கற்றுணர வேண்டும் என்ற வேட்கையில் ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் இருந்தும் தனது பிள்ளைகளை பஸ்ஸிலேயே பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்.

ரூபன் மற்றும் ரூபினியின் மாடி வீடு அமைந்திருந்த இடத்துக்கு பின்னால் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் குடியிருந்த ஒரு வீட்டுத் தொகுதி. நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கே இருந்தன. அவற்றில் பாடசாலை செல்லும் மாணவ மாணவியர் பெருமளவில் இருந்தனர்.

அங்கிருந்த கிரிக்கெட் மற்றும் றகர் அணிகளின் ஒட்டு மொத்த ஸ்டார் மகேஸ். ஆனால் அந்த அணிகளுக்கு காப்டன்களாக இருந்தவர்களும் மகேஸின் ஆலோசனையுடன் தான் செயற்பட்டனர்.

விளையாட்டில் மட்டுமல்ல கணக்கிலும் மகேஸ் புலி. கணக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள இளம் மாணவர்களை மைதானத்தில் வைத்துக்கூட மகேஸை அணுகுவதுண்டு.

ரூபினி மட்டும் என்ன... அந்த வீட்டுத் தொகுதியில் இருந்த மாணவியர் சிலர் அவளது நண்பிகள் லிஸ்ட்டில் இருந்தனர். ஆனால் அதை அவள் வீட்டுக்குத் தெரியாமலே வைத்திருந்தாள்.

அவர்கள் தந்தை ஜினதாஸ முதலாளி ஆரம்பத்தில் வறுமையில் வாடியவராக இருந்தாலும் தமது பிள்ளைகள் எப்போதுமே செல்வத்தில் மிதக்க வேண்டுமே தவிர வறுமையில் உழலும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடன் பழகக் கூடாது. அவர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது என்று கருதுபவர்.

இந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது.

அன்று அந்த பஸ்ஸில் நிறையக் கூட்டம் இருந்தது. அதில் முக்கால் வாசிப்பேர் பாடசாலை மாணவ மாணவியர். மகேஸ், அவனது நண்பர்கள், ரூபன், ரூபினி ஆகியோருடன் நகரில் இருந்த பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் உயர் மட்ட மாணவர் குழுவும் அந்த பஸ்ஸில் பயணம் செய்தனர்.

நீண்ட காலமாகவே ரூபினியை குறிவைத்திருந்த ஒரு மாணவன்தான் அந்தக் குழுவில் தலைவன். சொந்த கார் வைத்திருந்தான். அதில்தான் கல்லூரிக்கு வருவான். ஆனால் வாரம் ஓரிருமுறை அவனது பரிவாரங்களுடன் பஸ்ஸில் வருவான். வேறெதற்கு ரூபினியை பார்ப்பதற்குத்தான்!

சுற்றிலும் தனது நண்பர்கள் பரிவாரம் என்ற திமிரில் ரூபினியை கட்டிப்பிடித்து முத்தமிட்டான். ரூபினி ஐயோ, குய்யோ என்று அலறினாள். அவளது தோழிகளுக்கு அதிர்ச்சி கூச்சலை கேட்ட டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மன்சூர் அலிகான் உடம்பானை வெளியே இழுத்தான் மகேஷ். சரமாரியான அடி உதை. அவனது நண்பர்கள் பறந்தோடித் தப்பினர்.

அன்று ஆரம்பித்தது மகேஸ்- ரூபினி லவ் எபிசோட்!

இப்போது நூறாவது அங்கத்தையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இத்தனை தூரம் சென்ற பின்னர்தான் ஜினதாஸ முதலாளிக்கு விஷயமே தெரிந்தது.  காதல் ஜோடிகள் பேசிக்கொண்டிருப்பதை அவரது நண்பர் ஒருவர் பார்த்திருக்கிறார். போட்டுக்கொடுத்துவிட்டார்.

அதைக் கேட்ட ஜினதாஸ முதலாளி கோபமூர்த்தியானார். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து ரூபினியின் தலைமுடியை பற்றியிழுத்து சரமாரியாக அடியும் உதையும் கொடுத்தார்.

'பரதேசியுடன் படுக்கை சுகம் கேட்குதா உனக்கு' என்று கத்தியவர் மகேஸ் குடும்பத்தினரை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.

கோபமூர்த்தியுடன் ரூபினியின் அம்மா, பாட்டி, மாமா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ரூபினியை அவர்களும் அடித்துத் துவைத்தனர். அறைக்குள் போட்டு பூட்டிவிட்டனர்.

ரூபன் பாவம். தங்கையை காப்பாற்ற வழி தேடினான். கிடைக்கவில்லை. அரச மரத்தடி பிள்ளையார் போல் உட்கார்ந்து விட்டான். மனது மட்டும் ரூபினியை நினைத்து அழுதது.

ரூபினி பூட்டி வைக்கப்பட்ட அறையின் வெளி ஜன்னல் மூலம் சாப்பாடு உள்ளே சென்றது அந்த அறையை அடுத்து பாத்ரூமும் இருந்ததால் ரூபினியின் நிலை முற்றிலும் மோசமாகி விடவில்லை. ஆனால் நான்கு நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டு கிடந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாள் ரூபினி.

ரூபினி இருந்த அறைக்கு வெளியில்  இருந்த அத்தனை ஜன்னல்களுக்கும் ஆணி அடித்து சீல் வைத்திருந்தனர்.

ரூபனுக்கு தங்கையை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால் மிகுந்த சிரமத்துடன் ஒரு ஜன்னலுக்கு அடித்திருந்த ஆணியை மட்டும் கழற்றி ஜன்னலை திறக்க மகேஸின் உதவியுடன் திட்டம் தீட்டினான்.

இரவு 10 மணிக்கு வெளியே தப்பிவிடு. மகேஸ் மற்றும் அவனது நண்பர்கள் உன்னை அழைத்துச் செல்ல தயாராக இருப்பார்கள் என்ற தகவலையும் ரூபினிக்கு தெரிவித்து விட்டான்.

அப்போது பகல் 2 மணி. 4 நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த வெறி. எவருமே ஆதரவு காட்டாததால் ஏற்பட்ட ஆதங்கம், எப்படியாவது தப்பவேண்டும் என்ற வேட்கை. எல்லாம் சேர்ந்து ரூபினியை ரொம்பவும் படுத்திவிட்டன.

இருகில் இருந்த நோட்புக்கை எடுத்தாள். ஒரு நீண்ட கடிதத்தை எழுதினாள். அதனை மேசையில் வைத்தபின் யோசித்தாள்.

எல்லாம் சரி. இரவு 10 மணிக்கு தப்பும்போது மகேஸ் சொன்னபடி அங்கு இருக்காவிட்டால்? அந்த நினைப்பே ரூபினியை ரொம்பவும் தவிக்க வைத்தது.

இப்போதே பகலிலேயே தப்பினால் என்ன? தோழியர் வீட்டுக்காவது சென்று விடலாமே.

இரண்டாவது ஜன்னலை மெல்லத் தள்ளினாள். ரூபன் சொன்னது உண்மைதான். ஜன்னல் திறந்து கொண்டது. வெளியே பார்த்தாள். ஒருவரையும் காணவில்லை. ஜன்னலை நன்றாக திறந்து வெளியே குதித்தாள்.

இனி விடுதலை என்ற சந்தோஷத்துடன் சில அடி தூரம்தான் சென்றிருப்பாள். ஜினதாஸ முதலாளி அங்கு காவலுக்கு இருவரை நிற்க வைத்திருந்தார்.

ரூபினியின் துரதிர்ஷ்டம் அந்த இரண்டு தடியன்களும் அவள் ஜன்னல் வழியாக குதிப்பதை கண்டுவிட்டார்கள். சினிமா பாணியில் விரட்டுதான்.

ஏற்கனவே அறைச் சிறையில் கிடந்த ரூபினியின் மனதும் உடலும் பெரிதும் பாழ்பட்டிருந்தது. தப்பியோடுவதற்கு ஏற்ற உடல் வலுவுடன் அவள் இருக்கவில்லை. இருந்தாலும் ஓடினாள்.

அடுத்த  தெருவுக்கு ஓடிவிட்டாள். தடியன்களும் விரட்டினார்கள். அடுத்தது ஒரு பாழடைந்த கட்டிடம். அதன் பின் ஒரு அரை மதில். அதனையும் தாண்டினாள். அது ஒரு ரயில் பாதை.

ரயில் பாதை வழியே ஓடினாள். சிறிது தூரத்தில் களைப்படைந்து விட்டாள். தண்டவாளத்துக்கு இடையில் நின்று கொண்டாள்.

தண்டவாளம் வழியே ஓடுவதா இல்லை தண்டவாளத்தை தாண்டி கடற்கரை ஓரமாக ஓடுவதா? முன்னால் பார்த்தாள். தூரத்தில் ஆள்நடமாட்டமே இல்லை. எனவே தண்டவாள வழியே ஓடுவதுதான் சரி. பின்னால் பார்த்தாள். தடியன்கள் 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் ஓடிய பின் கடற்கரை பகுதிக்கு ஓடித் தப்பும் நோக்கில் அடுத்த ரயில் பாதைக்கு தாவினாள்.

அவளது கெட்ட காலம். அந்த பாதையில் அப்போது வேகமாக வந்தது ருகுணு குமாரி.

ரூபினியும் ருகுணுகுமாரியும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டனர்.

ரூபினி இரண்டானாள். ருகுணு குமாரிக்கு பாதிப்பில்லை. விபத்து மரணம் என்று சட்ட வைத்திய நிபுணரின் சான்றிதழ் கூறியது.மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபினியின் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. நான் தப்பிப் போகிறேன். மகேசுடன் இணையப் போகிறேன். இம்முயற்சியில் எனது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுமானால் அடுத்த பிறவியில் பாம்பு போல் வந்து அப்பா ஜினதாஸ முதலாளி, அம்மா, பாட்டி, மாமா ஆகியோரை கொத்திக் கொல்லுவேன். இது நிச்சயம், நிச்சயம், நிச்சயம் என்று எழுதப்பட்டிருந்தது.

ரூபினி உயிரிழந்த அடுத்த மாதம் அவளது பாட்டிக்கு பாம்பு கடித்து விட்டது. சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பெரிதும் மிரண்டு போன ஜினதாஸ அந்த வீட்டை அப்படியே விட்டு விட்டு தூர இடத்துக்கு குடிபெயர்ந்தார். இப்போது அந்த இரட்டை மாடி வீடு பாழடைந்து கிடக்கிறது. மகேஸ் சில சமயங்களில் ரூபினி நினைவு  வரும்போது அங்கு வந்து செல்கிறான். ஒரு நாகப்பாம்பு அந்த வீட்டு வளவில் காணப்படுவதாக அக்கம் பக்கத்தவர்கள் கூறுகின்றனர்.

 நன்றி: வண்ண வானவில்

No comments:

Post a Comment