Saturday, June 1, 2013

லண்டன் டயறி

மரணமும் லண்டனில் EXPENSIVE ஆன விஷயம்தான்

 இளைய அப்துல்லாஹ்


லண்டனுக்கு வந்ததன் பின்பு நிறைய நாளாக மையத்துத் தொழுகைக்குப் போக எனக்கு நேரம் கிடைக்கவில்லை. நோன்பு நேரத்தில் பகல் வேளையில் பள்ளி வாசலுக்குப் போனபோது ஒரு மரணத் தொழுகைக்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

நானும் மகனும் மையத்துக்குப் பின்னால் அடக்கஸ்தலத்துக்குப் போனோம். முதன் முதலாக அன்றுதான் அடக்கஸ்த்தலத்துக்குப் போகிறேன் லண்டனில்.

கொழும்பு, கண்டியைப் போல அல்லது எங்களது கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களைப்போல அருகிலே மையத்தை அடக்கும் இடம் இல்லை. பெட்டியில் மையத்தை வைத்து காரில் கொண்டு போகவேண்டும்.

ஊரில் மாதிரி சந்தூக்கில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லும் மரண ஊர்வலங்கள்போல லண்டனில் செல்ல முடியாது. எல்லாம் காரில் கொண்டுதான் போகவேண்டும்.

நீண்ட தூரம் காரில் கொண்டு போய் நிறுத்தியதும் அந்த இடத்தைப் பார்த்த எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் அது ஒரு சேமக்காலை. கிறிஸ்தவர்களின் இறந்த உடலைப் புதைக்கும் இடம். கொஞ்ச தூரம்போக முஸ்லிம்களை அடக்கம் செய்யும் இடம் வந்தது. பரந்து விரிந்த சேமக்காலையில் ஒரு சிறிய பகுதியை முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்யக் கொடுத்திருக்கிறது கவுன்ஸில் (நகரசபை).

இங்கு லண்டனில் இருக்கும் பூமி முழுவதும் அரசாங்கத்துக்குச் சொந்தம். அதில் ஒவ்வொரு பகுதி கவுன்ஸிலுக்கும் அதன் பரிபாலனத்துக்கும் உரியது.

வீட்டுவரி, கடைவரி, நிலவரி என்று கவுன்ஸில் அறவிட்டு அந்தப் பணத்தை கவுன்ஸில் தனது எல்லைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்குப் பயன்படுத்தும்.

ஆகவே மையத்துப் பிட்டி நிலமும் கவுன்ஸிலுக்கு சொந்தமானது. நாங்கள் கொண்டுபோன மையத்துக்கு அடக்கவென்று ஆறு அடிநிலம் சரியாக இஸ்லாமிய விதிப்படி ஆழ அகலமாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

மையத்தை அந்தக் குழிக்குள் அப்படியே பெட்டியோடு வைத்தார்கள். எங்கள் ஊர்களில் பெட்டியோடு மையத்தை அடக்கம் செய்வதில்லை. மையத்தைத் தரையில் வைத்துவிட்டு குழிக்கு மேலால் பலகையைப் போட்டு அதற்கு மேலால்தான் மண்ணைப்போட்டு மூடுவோம்.

ஆனால் லண்டனில் அப்படிச் செய்ய கவுன்ஸிலும் சுகாதாரத்துறையும் விடமாட்டார்கள். சுகாதார மாசு ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். பெட்டியோடுதான் அடக்கம் செய்யவேண்டும். பேர்மிங்ஹாம் போன்ற இடங்களில் சில பகுதிகளில் இலங்கையில் உள்ளது போல மையத்தை அடக்க முடியும் என்று அதில் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்.

பெட்டியோடு அடக்குதல், பெட்டியில்லாமல் அடக்குதல் என்ற விடயத்தை ஏன் நான் இங்கு குறிப்பிடவேண்டும் என்றால்,இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி மரணித்த ஒருவருக்கான கேள்வி கணக்குகள் மரணக் குழியில் இருந்தே ஆரம்பிக்கின்றன என்பதாலாகும்.
அவரை மையத்தை எழுப்பி உட்காரவைத்தே கேள்வி கணக்குகள் நன்மை தீமை தொடர்பாக ஆரம்பிக்கப்படும் என்பதே இஸ்லாமிய மார்க்கம் சொல்லுகின்ற விடயம்.

ஆகவே இது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பெரிய விடயம்தான்.

விடயம் என்னவெனில் பள்ளி வாசலில் இருந்து மையத்து காரை ஓட்டுகின்றவரைப் பிடித்து விசாரித்தேன். ஒரு மரணத்துக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. ஏனெனில் நாங்களும் லண்டனில்தானே இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு.

'இரண்டாயிரம் பவுனட்;' என்றதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. தற்செயலாக இப்பொழுது என்னையோ அல்லது வீட்டில் யாரையாவதோ அடக்கம் செய்ய அவ்வளவு பணம் இல்லை என் கையில். யாராவது அனாதைகளை அடக்கம் செய்வதைப்போலத்தான் எங்களை அடக்கம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் மைய வாடிக்கு பிணத்தை எடுத்துக்கொண்டு போவதற்கே இரண்டாயிரம் பவுன் பணம் வேண்டும்!

ஏன் அவ்வளவு பணம் செலவாகிறது என்று அவரைக் கேட்டேன். மையவாடியில் ஆறு அடி நிலத்துக்கு கவுன்ஸில் கேட்கும் தொகை ஆயிரத்து ஐநூறு பவுன்கள். இதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும.; கொடுக்காவிட்டால் நிலம் தரமாட்டார்கள். கார், பெட்டி, மையத்தை அடக்கும் இடத்துக்குக் கொண்டு வருவது, குழி தோண்டுவது, மூடுவது என்று பள்ளி வாசலுக்கு ஐநூறு பவுன்ட் கொடுக்கவேண்டும். இரண்டு செலவுகளுமாகச் சேர்த்து இரண்டாயிரம் பவுனட்;. ஒரு மையத்தை அடக்கம் செய்ய செலவாகும் இந்தச் செலவு. தற்செயலாக இரண்டுபேர் ஒரு வீட்டில் மௌத்தாகினால் நாலாயிரம் பவுன்களாகிவிடும் என்று அவர் விளக்கமாகச் சொன்னார்.

எங்கு போவது இவ்வளவு காசுக்கு! இலங்கைக் காசுக்கு இரண்டாயிர பவுன் நாலு லட்சம்ரூபா. ஆண்டவனே, இப்படி ஒரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அந்த மையவாடியில் வைத்து பிரார்த்தனை செய்தேன்.

அடக்கம் செய்கின்ற செலவை எண்ணி லண்டனில் மரணமாகக்கூடாது இலங்கையில்தான் மரணிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மரணம்கூட பெரும் எக்ஸ்பன்ஸிவ் ஆக இருக்கிறது லண்டனில்.

லண்டனில் எல்லாமே இப்பொழுது பெரும் செலவானதாக மாறிக்கொண்டு வருகிறது தினமும் கம்பனிகள் தொழில் செய்வோர் எண்ணிக்கையை குறைத்து குறைத்து இப்பொழுது பல சொப்ட்வெயார் கம்பனிகள் ஆட்களை நிறுத்தியே விட்டார்கள். அதனால் இந்தியாவில் இருந்து இங்கு வந்த பலர் வேலை இல்லாமல் அலைந்து திரிகின்றனர்.

வேலைகேட்டு கடைகளுக்கும் போகமுடியாமல் இருக்கிறது. முந்தி என்றால் தமிழர்களின் பெற்றோல் ஸ்டேசன்கள் எப்பொழுதும் எங்களுக்காகத் திறந்தே இருக்கும். வேலைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அப்பொழுது. 90 களில் நாங்கள் இங்கு வந்தபொழுது அகதிகளுக்கும் சரி, சாதாரணமாக இங்கு வந்து வேலை செய்பவர்களுக்கும் சரி வேலை வாய்ப்பு இருந்தது. மொழி ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

மொழி தெரியாதவர்கள்கூட தமிழர்களின் கடைகளில் வேலை செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்பொழுது இன்சூரன்ஸ் நம்பர் இல்லாமல் வேலை செய்வதை எண்ணிப் பார்க்கவே முடியாது.

 ஒவ்வொரு கடைகள் அலுவலகங்கள் என்று இமிக்கிறேசன் ஒஃபிஸர்மார் ஓடித்தான் திரிகிறார்கள். திடீர் திடீர் என்று செக் பண்ண வருகின்றனர். கையில் எப்பொழுதும் சரியான ஆவணங்களை எல்லோரும் வைத்திருக்கவேண்டும். அல்லது வேலை கொடுப்போர் வேலை செய்வோர் எல்லோரும்பெரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்சூரன்ஸ் நம்பர்தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரி கட்டாமல் யாரும் வேலை செய்யமுடியாது லண்டனில்.வேர்க் பேர்மிட்டுடன் வருகிறவர்களுக்கும் பெரும் நெருக்கடி வந்துவிட்டது. இப்பொழுது அதாவது மூன்று வருடத்துக்கு முன்புபோல 5 வருடம் வேர்க் பேர்மிட் விசா கொடுக்கிறார்களில்லை. இரண்டு வருடம் மாத்திரமே விசா கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு கம்பனி வேர்க் பேர்மிட்டில் ஒருவரை இலங்கையில் இருந்து எடுப்பதானால் முதலில் கம்பனி, ஹோம் ஓஃபிஸில் றிஜிஸ்டர் பண்ண வேண்டும். அதற்குப் பிறகு யாருக்கு விசா கொடுக்கவேண்டும் என்று கம்பனி கேட்கிறதோ அவரின் எல்லா விபரங்களையும் அந்த நிறுவனமே சரி பார்க்க வேண்டும். முழுப் பொறுப்பும் நிறுவனத்துக்குரியது.

இதில் மயிர்போல சிறு பிழை நடந்தாலும் நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படி வேர்க் பேர்மிட்டில் விசாவில் வந்தவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யவேண்டும். 10 நாள் அவர் வேலைக்கு வராமல் விட்டால் ஹோம் ஓஃபிஸ்சுக்கு அறிவிக்கவேண்டும்.

முதல் என்றால் வேர்க் பேர்மிட்டில் ஐந்து வருடம் இருந்தால் பெர்மனண்ட் றெசிடன்ட் கொடுத்தார்கள். அதற்குப்பிறகு பிரிட்டிஸ் சிட்டிசன் எடுக்கலாம். இப்ப அப்படி இல்லை. ஸ்டூடன்ட் விசாவும் பெரும் சிக்கல்.

இதனை நான் சொல்லும்பொழுது இடியாப்பச் சிக்கல் மாதிரி உங்களுக்குத் தெரியுதல்லவா? ஆனால் அதைவிட சிக்கல் லண்டனில் இருக்கிறது.

லண்டனில் வாழ்வதும் எக்ஸ்பென்ஸிவ். மரணிப்பதும் எக்ஸ்பென்ஸிவ். ஆனால் லண்டன் ஆசை யாரைத்தான் விட்டது?

  நன்றி: வண்ண வானவில்


No comments:

Post a Comment