Sunday, June 30, 2013

கைப்பேசிக்கு 40 வயது!

"ரீலோட் போடுவதற்காகவே சில பெண்கள் 'காதலர்'களை செட்டப் பண்ணி வைத்திருக்கிறார்கள்"


மணி ஸ்ரீகாந்தன்

கைப்பேசி இன்று தவிர்க்க முடியாத குட்டிச் சாத்தானாக நம்முடன் ஒட்டிக்கொண்டு விட்டது. சாத்தானிடம் சாமர்த்தியமாக வேலை வாங்கத் தெரிந்த மந்திரவாதியாக நாம் இல்லாவிட்டால் அது நம்மை தாக்கி வீழ்த்தி விடும். இதை ஆராய்கிறது இக்கட்டுரை.


நாற்பது வருடங்களுக்கு முன்னர் நியூயோர்க் ஹில்டன் ஹோட்டல் அருகே நின்றபடி ஒருவர் தன் கையில் இருந்த ஒரு கருவியின் மூலம் தொலைப்பேசி அழைப்பொன்றை எடுத்தார். அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பு. அவர் பெயர் மார்டின் கூப்பர். 1972ம் ஆண்டு ஏப்ரல் 03ம் திகதி அவர் இந்த அழைப்பை மேற்கொண்டார். இன்று உங்களுடன் இணைபிரியா தோழனாக ஒட்டிக்கொண்டிருக்கும் கைப்பேசி பிறந்த நாள் அன்றைக்குத்தான் நிகழ்ந்தது.
மார்டின்
கூப்பர்
மோட்டரோலா நிறுவனத்தின் தலைவரான மார்டின் கூப்பர் அந்த அழைப்பை பெல் நிறுவன ஆய்வு பிரிவின் தலைவருக்கே எடுத்தார். அச்சமயம் பெல் நிறுவனமும் ஒரு கைப்பேசியை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தது. வெற்றி பெற்றவர் மார்டின் கூப்பர். இவர் தன் கையில் வைத்திருந்த ஃபோனின் பெயர் டைனாடெக்.

1972ம் ஆண்டே கைபேசி கண்டுபிடிக்கப்பட்ட போதும் சுமார் பத்து ஆண்டுகளின் பின்னரேயே அத்தொழில் நுட்பம் வர்த்தக ரீதியாக சாத்தியமாயிற்று. 1988-89 காலப்பகுதியைத்தான் அது உலக நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்த பருவமாகக் கொள்ளவேண்டும். அது, இலங்கைக் கரையை தொண்ணூறுகளில் எட்டியது. இலங்கைக்கு கைபேசியை அறிமுகம் செய்த நிறுவனம் செல்டெல். அதன் பின் ஒரு பத்து வருடங்களாக இத்தொலைபேசியை கைபேசியென்றோ செல்போன் என்றோ அழைக்காமல் பலரும் செல்டெல் என்றே அழைத்துக்கொண்டிருந்தார்கள். இலங்கையில் கைபேசி புரட்சி ஏற்பட்டது எல்லாம் ஒரு 7 வருட காலத்துக்குள்தான். டயலொக் நிறுவனம் வந்த பின்னரேயே, இலட்சாதிபதிகள் கைகளில் இருந்த கைப்பேசி, கொழுந்து பறிப்பவர்கள், மற்றும் கீரை கட்டு விற்கும் பாட்டிமார்களின் கைகளுக்குத் தாவியது. இது இலங்கையில் டயலொக் நிறுவனம் நிகழ்த்திய பெரும் புரட்சி.

யோகராணி
இன்று மூவாயிரம் ரூபாவுக்கு ஒரு சீன ஃபோன் வாங்கலாம். பத்தாயிரம் ரூபாவுக்கு சகல வசதிகளும் அடங்கிய நவீன கைபேசி வாங்க முடியும். ஆரம்பகாலத்தில், செல்டெல் வந்தபோது ஒரு ஃபோனின் விலை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஒரு செங்கல் அளவு உயரமும் பருமனும் கொண்ட ஆரம்பகால கைபேசி ஒரு கிலோ எடை கொண்டதாகவும் அதேசமயம் ஆடம்பரச் சின்னமாகவும் விளங்கியது. அதைக் காவிக் கொண்டுதான் அன்றைய செல்வந்தர்கள் 'ஷோ' காட்டினார்கள்! அவர்கள் கைகளில் இருந்த இந்த செங்கல் ஃபோனைப் பார்த்து நாம் பொறாமைப்பட்டுக்கொண்டிருந்தோம்.

1992 ஆண்டிலேயே எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி அறிமுகத்துக்கு வந்தது. இன்று உலகெங்கும் இரண்டரை லட்சம் குறுந்தகவல்கள் ஒவ்வொரு வினாடியும்  அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மாத்திரம் பாவனையில் உள்ள ஆறு பில்லியன் ஃபோன்கள் எட்டு டிரில்லியன் எஸ்.எம்.எஸ்களை அனுப்பி சாதனை புரிந்துள்ளன.

இப்போது 5G தொழில்நுட்பத்துடன் கூடிய கைபேசிகள் வரவுள்ளன. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கைபேசிகளில் என்னென்ன புதிய விஷயங்கள் அடங்கியிருக்குமோ, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு யோசியுங்கள்.

இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சாதனம் கைக்கு வந்திருப்பதால் அதை மூளையைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாகவும் சமூக பொறுப்புணர்வுடனும் உபயோகிக்க வேண்டியது நமது கடமை.

சிவஞானம்
சிலர் இப்படி நடந்து கொள்வதில்லை. ஆக்க சக்தியாக இது எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல அழிவுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கைபேசிகளில் வந்துள்ள புதிய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தினால் குட்டிச் சுவராகியும் விடலாம்.

எனினும் இக்குட்டிப் பிசாசு நம்மை விட்டுப் போகப்போவதில்லை. அது என்னவெல்லாம் செய்யும், செய்கிறது என்பதை இதோ உங்களுடன் பேச வந்திருப்பவர்கள் சொல்லக் கேட்டுப் பாருங்கள்.

செல்போன் தொடர்பாக கொழும்பிற்கு அண்மையில் உள்ள றைகம் தோட்டத்திற்கு ஒரு விசிட் செய்து சிலரைப் பார்த்துப் பேசினோம். தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றும் சுப்ரமணியம் சிவஞானம் அகப்பட்டார்.

"தோட்ட வேலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இந்த செல்ஃபோன் இருக்கிறது. என்னிடம் வேலை செய்யும் இருபது பேரில் எட்டு பேரிடம் செல்ஃபோன் இருக்கிறது. வேலை நேரத்தில் போன் எடுத்துப் பேசுவதால் வேலை தாமதமாகிறது. ஒரு நாளில் முடிக்கவேண்டிய வேலை இரண்டு நாள் இழுபடுகிறது. நானும் எவ்வளவோ சொல்லியும் கேட்கிறார்கள் இல்லை. ஆனாலும் சிலருக்கு மனிதாபிமான அடிப்படையில் முக்கிய கோலாக இருந்தா பேசுங்க என்பேன். அப்படிச் சிலர் பொக்கட்டில் இருக்கும் ஃபோனை எடுத்துப் பேசிவிட்டு பொக்கட்டில் வைக்கும்போது திரும்பவும் ஃ போன் அலறும். அது முடிய இன்னொரு கோல்... இன்னொரு கோல் என முடிவே இருக்காது.  ஃபோன் விசயத்தில் நான் ரொம்பவும் நொந்து போயிருக்கேன். சிலர் மிஸ்ட் கோல் எடுத்து எவனையாவது கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டிருப்பான். அம்மாடியோவ் இந்த ஃபோனால் நான் ரொம்பவும் நொந்து போய் இருக்கேங்க. நான் செல்ஃபோன் பாவிக்கிறது இல்ல... எவனாவது நமக்கு மிஸ்ட் கோல் எடுக்க அப்புறம் நான் என் காசை போட்டு யாருடா நீ என்று கேட்க அவன் என்ன திட்ட எனக்கு தேவையாங்க இது...

அற்புதம்
இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடமும் நான் முறைப்பாடு செய்திருக்கிறேன். செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் நமக்கெல்லாம் சாமிமாதிரிதாங்க. ஆனா அதுவே நம்ப பொழைப்புக்கு கெடுதலா இருந்தா எப்படிங்க அதை வரவேற்க முடியும்? செல்போனில் நன்மை பத்து வீதம்னா 90 வீதம் அழிவுதான்" என்று சிவஞானம் சொல்லி முடிக்கும்போது தேயிலை செடிக்குள் இருந்து "மாமா... நீ எங்கே இருக்கே.." என்று செல்போன் ரிங்டோன் அழைத்தது.

ஆத்திரம் எகிற "உங்களுக்கு இன்னைக்கு அரை பேர்தான்டா!" என்று கத்தியபடியே சிவஞானம் செல்போன் சத்தம் வந்த புதரை நோக்கி ஓடினார்.

சிவஞானத்தின் கருத்துக்கு நேர்மாறான கருத்து தெரிவித்தவர் அற்புதம் கங்கானி.

"செல்போன் ரொம்பவும் நல்ல விசயம்... என்னோட வேலை செய்யும் பெண்களிடம் எல்லாம் செல்போன் இருக்கிறது. அதனால் வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லை... கொளுந்து பறிக்கும் பெண்கள் தலையில் தொப்பி
போட்டுக்கிட்டு காது இடுக்கில் செல்போனை செருகி வைத்து போன் பேசிக்கொண்டே  வேலையும் செய்வதால் எந்தப் பிரச்சினையம் இல்லை..." என்று செல்போனுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார் அற்புதம்மாள்.

அடுத்தவர் யோகராணி.

"செல்போனை யாரு கண்டுபிடிச்சாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனால் அவங்க நல்லா இருக்கணும். இன்னைக்கு வாழ்ற ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய பாதுகாப்புன்னா அது செல்போனுதாங்க... எங்க வீட்டுக்காரர் ரொம்ப தூரத்தில வேலை செய்யிறாரு... எங்க அம்மா அப்பாவும் வயசானவங்க. மாமியும் ஒரு நோயாளி. ஏதோ அவசர உதவிக்கு யாரையாவது கூப்பிடனும். நான் ஒரு தனி மனுஷி என்ன பண்ணுவேன்... அப்படியான நேரங்களில் செல்போன் எங்களுக்கு உதவுது... எங்க பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கும் எங்க போன் நம்பரை கொடுத்து வச்சிருக்கோம். ஏதேனும் பிரச்சினைனா பட்டன தட்டி காரியத்தை முடிக்கலாம். செல்போன் ஒரு கத்தி மாதிரி. காய்கறியும் வெட்டலாம். கொலையும் பண்ணலாம்"என்று நச்சென்று பதில் சொன்னவர் கொளுந்து பறிக்கும் தொழிலாளியான யோகராணி.
வீ.கே.டீ.பாலன்
"மின்சாரம் ரொம்பவும் அபாயகரமானது. தொட்டால் ஆளை காலிபன்னும். இது தெரிந்தும் அதை வீட்டிலேயே வைத்திருக்கோம். மின்சாரம் அபாயகரமானது என்றால் எண்ணெய் விளக்கு கொளுத்தலாம்தான். அதேசமயம் விளக்கு கவிழ்ந்து வீடு பற்றி எரிந்தால் விளக்கையும் வேண்டாம் என்பதா? நாமத்தான் கவனமா நடந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம். செல்ஃபோனும் அது மாதிரிதான். எத்தனையோ விடயங்களில் உற்ற நண்பனாக உதவுகிறது. நமக்கு தெரியாத ஒரு இலக்கத்தில் இருந்து யாராவது பேசினால் அவங்க யாரென்று நாம் ஏன் கேட்கணும்...? குறிப்பா பெண்கள் இந்த விசயத்தில ஜாக்கிரதையா இருக்கனும். தேவையில்லாத அழைப்புகளுக்கு பதில் சொல்லப் போனால் அதுவே நம்மை சிக்கலில் தள்ளி வாழ்க்கையை பாழாக்கிவிடும்..." என்று எச்சரிக்கிறார் கண்டி திகனையைச் சேர்ந்த ப்ரியா ராமலிங்கம்.

பம்பலபிட்டியில் உள்ள ஒரு பார்மஸியில் பணியாற்றும் ரம்பொடை தீபமலரிடம் நாம் கேட்டபோது...

"மலிவு விலையில் செல்போன் கிடைப்பதால் எல்லோரும் செல்லை பயன்படுத்தி அதன் மதிப்பையே கெடுத்துவிட்டார்கள். ஒரு சில பெண்கள் செய்யும் தவறுகளால் இந்த சமூகம் செல்போன் பாவிக்கும் பெண்களை தவறாக நினைக்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. ஆனால் என்னைப் போன்ற ஹொஸ்டலில் தங்கி வேலை செய்பவர்கள் வெளியே போகமுடியாது. இந்த சூழலில் என் அம்மா, அப்பா, சகோதரனுடன் கதைக்க எனக்கு உறவுப் பாலமாக இருப்பது இந்த செல்ஃபோன்தான்.

அந்த காலத்தில் பெண்களுக்கு கோல் போட்டு கலாய்ப்பது பையன்கள்தான். ஆனால் இன்று பெண்கள் தான் ஏதோ ஒரு நம்பரை தட்டி எதிர்முனையில் சிக்கும் பையனை மடக்கி கலாய்க்கிறார்கள். சிலப் பெண்கள் தங்கள் போன்களுக்கு ரீலோட் போடுவதற்காக பையன்களை ஃபோனில் நண்பர்களாக வைத்துக்கொள்கிறார்கள். ஒரு பெண் குறைந்த பட்சம் இரண்டு பையன்களையாவது ரீலோடுக்காக வைத்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? யாரோ, எவனோ ஒரு இளிச்சவாயன் இந்தப் பெண்களுக்கு ரீலோட் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் அந்தப் பெண் அந்த ரீலோட் பையனை என்றைக்குமே சந்திக்கப் போவதும் இல்லை, அவனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்போவதும் இல்லை. அவன் சந்தித்தே ஆக வேண்டும் என்று தொந்தரவு பண்ணினால் அவனை கழற்றி விடடு விட்டு இன்னொரு பையைனை நண்பர்களாக்கிக் கொள்வாள் ரீலோடுக்காக! இப்படி சில உண்மைகளை போட்டு உடைத்தார் தீபமலர்.

நான் அண்மையில் சென்னையில் சுற்றுலா சேவையை திறம்பட நடாத்திக்கொண்டிருக்கும் மதுரா டிரவல்ஸ் அதிபர் வீ.கே.டி பாலனை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது தொழில் நுட்ப வளர்ச்சிபற்றி கூறிய அவர், செல்போன் இக்கட்டான சந்தர்ப்பங்களில் உற்ற நண்பனாக இடுக்கண் களைவதைப் பற்றி குறிப்பிட்டார்.

ஒரு முறை சென்னையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ஒரு பயணி விமான நிலைய குடிவரவு குடியகல்வு அலுவலரிடம் கடவுச்சீட்டையும் டிக்கெட்டையும் கொடுக்கும்போது தான் தன்னிடம் டிக்கட் இல்லையென்பதை அதிர்ச்சியுடன் அறிந்துக்கொண்டார். என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. விமானம் புறப்பட அரை மணி நேரம்தான் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செல்பேசியில் எமது நிறுவனத்திடம் பேசி நிலைமையை சொல்லி என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். உடனே எமது பணியாளர்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று கூறி அவர் பெயரை வைத்து டிக்கட் இலக்கத்தையும் கண்டு பிடித்து அவரின் செல்லுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். உடனே அந்த பயணி அந்த செல்லில் வந்த டிக்கட் தகவலை குடிவரவு அதிகாரிகளிடம் காட்டிவிட்டு பயணத்தை தடையின்றி மேற்கொண்டிருக்கிறார். பாருங்களேன் இக்கட்டிலிருந்து தப்புவதற்கு செல்ஃபோன் எப்படி உதவியிருக்கிறது என்று கூறி வியந்தார் வி.கே.டி. பாலன்.

அலெக்சாண்டர் கிரஹம் பெல்

முதன்முதலில் தொலைப்பேசியை கண்டுபிடித்து பேசிக் காட்டியவர் கிரஹம் பெல் (1847- 1922).  அமெரிக்கரான இவர் 1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி இதை நிகழ்த்திக் காட்டினார். பொஸ்டனில் அமைந்திருந்த கட்டடத்தின் மாடி அறையில் இருந்தபடி கீழ்தளத்தில் இருந்த தன் உதவியாளரை தன் தொலைபேசி ஊடாக அழைத்தார். "மிஸ்டர் வொட்சன், இங்கே வரமுடியுமா? நான் உங்களைப் பார்க்க வேண்டும்." (mr.watsan,can you come here,i want to see you) என்பதே அவர் விடுத்த அந்த முதல் அழைப்பு. தன் அறையில் இருந்த
வொட்சன கிரஹம் பெல்லின் குரலைக் கேட்டதும் ஏற்பட்ட ஆனந்தத்தில் அவருக்கு தலைகால் புரியாமல் போய்விட்டதாம்!
குரலை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தலாம் என்ற இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனை. எவ்வளவு ஒரு மகத்தான தொலைதொடர்பு புரட்சிக்கு அந்தக் குரல் வழிவகுத்து விட்டிருந்தது!

No comments:

Post a Comment