Friday, June 7, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…-2

“சோப் என்று தமிழில் சொல்லுங்கள்!”

மணி  ஸ்ரீகாந்தன்


ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழர்களால் இன்னும் மறக்க முடியாத இடம் என்றால் அது இராமேஸ்வரம் மண்டபம் முகாம்தான்.சுட்டெரிக்கும் வெப்பத்தால் வரண்டு போன பொட்டல் வெளியாக காட்சியளிக்கும் இராமேஸ்வரத்தில் வந்திறங்கும் அகதிகள்,பயனிகளுக்கு இளைப்பாறும் இடம் மண்டபம்தான்.

இலங்கை தோட்டங்களுக்கு இந்திய தொழிளாலர்கள் வரத் தொடங்கிய பின்னர் அவர்களைப் பரிசோதித்து அனுப்பும் ‘டிரான்சிட்’ இடமாக பிரிட்டிஸ் அரசு இந்த மணடபத்தை அமைத்தது.பரவக் கூடிய நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதே மண்டபத்தின் பிரதான வேலையாக இருந்தது.

சில சமயம் சில வாரங்களை மண்டபத்தில் கழித்த பின்னர்தான் இலங்கைக்கு கப்பல் ஏற அனுமதி கிடைக்குமாம்.இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வரும் அல்லது செல்லும் வியாபாரிகள்.மற்றும் பயணிகளின் பயணப் பொதிகளை சோதனை செய்யும் இடமாகவும் மணடபம் விளங்கியது.
எனவே எப்போதும் ஜே, ஜே என மண்டபத்தில் கூட்டம் இருக்கும்.இப்படி மண்டபத்தில் சில காலம் தங்கியிருந்தவர்தான் தெய்வானை.தற்போது வேலூர் மேல்மொணவூரில் வசித்து வரும் இவருக்கு அறுபத்தெட்டு வயதாகிறது.
இரத்தினபுரி வட்டாபத்தை தோட்டத்தைச் சேர்ந்த இவர் மணடபம் முகாமில் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் காலையில் முகாமுக்கு அருகில் இருந்த கடைக்கு சென்று சவர்க்காரமும், சீனி கால் இறாத்தலும் கேட்டிருக்கிறார்.ஆனால் அந்தக் கடைக்காருக்கு இவர் பேசியது சுத்தமாக புரியவில்லையாம்.
“இந்தம்மா சொல்லுறது ஒண்ணுமே புரியல்லியே” என்றாராம் கடைக்காரர்.
அதற்கு தெய்வானை “அட என்னங்க முதலாளி நீங்களும் தமிழு நானும் தமிழு..நான் சொல்லுறது விளங்கல்லியா? எனக் கேட்டிருக்கிறார் . உங்களுக்கு காது கேளாது போல என்ற தெய்வானை அந்தக் கடை முதலாளியின் அருகில் சென்று சத்தமாக “சவுக்காரம் சீனி இருக்கா?”என்று கேட்டிருக்கிறார்.இதனால் எரிச்சலடைந்த கடைக்காரர். “ஏய் எனக்கு காது நல்லாதான் கேட்குது.

நீ பேசும் பாஷைதான் புரியல்ல.நீ தெலுங்கா,மலையாளமா?”என்று திறுப்பிக் கேட்டிருக்கிறார். “அய்யய்யே என்னடா இந்த மொதலாளி பாஷை அது இதுன்னு பேசுறாரே…நாங்க இந்த பாஷையை வச்சி சிங்கள நாட்டிலயே காலத்தை ஓட்டினோமே…”என்று வீராப்பாக பேசிய தெய்வானையிடம் அந்தக் கடைக்காரர்,

கடையில் உள்ள சில பொருட்களை சுட்டிக்காட்டி தேவைப்படும் பொருள் இதுவா இல்லை அதுவா எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.தெய்வானை இல்லை என்று சொல்லவே நீ கேட்கும் அந்த சவர்க்காரம் எதற்கு பாவிப்பார்கள் என்று புத்திச்சாலித்தனமாக ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

இதற்கு தெய்வானை குளிப்பதற்குப் போடுவார்களே…வாசைனயா இருக்குமே! என்று பொழிப்புரை செய்திருக்கிறார்.தெய்வானை கேட்கும் பொருளை கண்டு பிடித்து விட்ட சந்தோசத்தில் அந்தக் கடை முதலாளி சீகைக்காய் தூளை எடுத்துத் தந்திருக்கிறார். “அது தூளாக இருக்காது.கெட்டியாக இருக்கும் போட்டா நுரை வரும்”என்று தெய்வானை விளக்கமாகச் சொல்லவும்,கடைக்காரருக்கு அந்த மர்மப் பொருள் மண்டையில் பளிச்சிட்டிருக்கிறது.

“அட ‘சோப்’தான் கேட்டியா!”என்ற முதலாளி ஒரு அரசன் சோப் கட்டியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.தெய்வானை பழக்க தோஷத்தில் சன்லைட் சவர்க்காரம் தாங்க என்று கேட்க,அதெல்லாம் இங்கு கிடையாது என்று தமிழகத்தில் கிடைக்கும் சவர்க்காரதத்தை கொடுத்திருக்கிறார்.
பிறகு சீனியையும் ‘தேநீருக்குப் போட்டுக் குடிக்கிறது’என்று தெய்வானை விளக்கிச் சொல்லியும் அந்த மனிதருக்கு புரியவில்லை.

தமிழ்நாட்டில் ‘டீ’அல்லது ‘டிக்காஷன்’என்றால்தான் புரியும் என்பது பாவம் தோட்டத்தில் வாழ்ந்த தெய்வானைக்குத் தெரிய வாய்ப்பில்லைதானே!பிறகு ஒரு வழியாக கடையில் இருந்த சீனியைக் காட்டி இதுதான் என்றாராம்.
“சக்கரை கேட்டியா?”என்று முதலாளி “மொழி தெரியாத ஆளுங்களால நம்ம பாடு பெரிய திண்டாட்டம்தான் என்றாராம்!”இப்படியான சம்பவங்கள் நடைப்பெற்ற மண்டபம் முகாம் பகுதி இன்று ஈழத் தமிழர்கள் வாழும் அகதி முகாமாக மாறியிருக்கிறது.

No comments:

Post a Comment