Saturday, June 15, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…-03

மச்சானைப் பார்க்காததால் மாறிப்போன வாழ்க்கை

 

மணி ஸ்ரீகாந்தன்

அறுபத்தைந்தாம் ஆண்டுக்காலப் பகுதியில் தென்னிந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர் களுத்துறை பகுதியை சேர்ந்த நாகம்மா.தனது பதினெட்டு வயதில் ராமானுஜம் கப்பல் மூலமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டாராம். “எங்கப்பாதான் என்னை கூட்டிகிட்டு போனாரு.திருச்சி பக்கத்தில் உள்ள துவரம் பட்டிதான் எங்க ஊரு.துவரம் பட்டியிலிருந்து குதிரை வண்டியிலதான் நாங்க பயணம் செய்தோம்.அங்க எங்க பாட்டி வீட்டுக்கு போனோம்.இங்கே மாதிரி மேசை,கதிரை என்று எதுவுமே அந்த வீட்டுல இல்லை.உட்கார தின்னைதான் இருந்தது. அதில்தான் உட்கார்ந்து இருந்தோம்.வீட்டுல உள்ள எங்க சொந்தக்காரங்க எல்லோரும் தரையில பாய் போடடுதான் அமர்ந்தாங்க.

கண்டி புள்ளைங்க நம்ம ஊரு புள்ளைங்க மாதிரி கூல் குடிக்காதுங்க.சோறுதான் சாப்பிடுங்க!என்று சொன்ன என் உறவுக்காரங்க உடனடியாக நெல்லை உரல்ல போட்டு குத்தி அரிசியாக்கி சோறு சமைச்சி தந்தாங்க.இப்படியே மூணு வேளையும் புது நெல்லு குத்திதான் சோறு சமைச்சி தந்தாங்க.நெல் வீட்டில் இருந்தும் ஏனோ அவங்க சோறு சாப்பிடவில்லை.எங்கப்பா என்னை அவரு பாட்டி வீட்டுல விட்டுட்டு பக்கத்து கிராமத்துல உள்ள அவரு தங்கச்சி வீட்டுக்கு போயிட்டாரு.இரவு அந்த வீட்டு தின்னையிலதான் தூங்கினேன்.புது இடமானதால் எனக்கு தூக்கமே வரலை.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்த எங்கப்பா உன்னை உன் மச்சான் ஆதிமூலம் பார்க்கணும்னு சொல்லுராரு..நாளைக்கு போயிட்டு வா,கண்டி பொண்ணு எப்படி இருக்கும்னு எல்லோரும் கேட்குறாங்க.இப்படி அவரு சொல்ல என்க்கு ரொம்பவும் வெட்கமா போயிடுச்சி..நான் போகமாட்டேன்னு பொய் சொல்லிட்டேன்.ஆனாலும் மச்சானை பார்க்கணும்னு நினைப்பு மனசுக்குள் இருக்கத்தான் செய்தது.

என்ன செய்ய என் துரதிர்ஷ்டம் அடுத்த நாள் காலையிலையே சிலோன்ல இருந்து என் தம்பிக்கு சுகமில்லைன்னு தந்தி வந்திருச்சி.அதனால உடனே கிளம்பி சிலோனுக்கு வந்திட்டோம்.அதுக்குப் பிறகு ஒரு வாரம் கழிச்சி எங்க வீட்டுக்கு இந்தியாவில இருந்து ஒரு தந்தி வந்திச்சு!அந்த தந்திய பார்த்த எங்கப்பா கதறி அழுதாரு.ஏன்னா எங்க மச்சான் ஆதிமூலத்தை துருச்சி பேய் அடிச்சி கொண்டுச்சாம்.(துருச்சி பேய் இந்திய பேய்களில் ஒன்றாம்)என் மச்சானை கடைசி வரைக்கும் என்னால முடியாம போயிடுச்சி.பிறகு நான் இராமன் பூசாரியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..என்ன செய்ய..என்னோட அழகுக்கும் அவர் மாதிரிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.அவருக்கு நான் சம்மதம் சொன்னது மனப்பூர்வமா இருந்திருக்காது.

எனக்கு மருந்து வச்சிதான் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டாருன்னு தான் நினைக்கிறேன்.எங்கம்மா பொன்னி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. “நான் இந்தியாவில இருந்து வந்தப்போ இந்த ராமன் பயல் கோடாலி கொண்டை போட்டுக்கிட்டு கிட்டிப்புல் விளையாடிட்டு இருந்தான்.அவனுக்கு போய் என் புள்ளைய கொடுப்பேன்னா..”அம்மா பிடிவாதமா இருந்திச்சி.

ஆனால் என் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் அதுல இரண்டாவது மனைவி பெரியாயி.என்னை இராமன் பூசாரியை கட்டிக்க சொல்லி கட்டாயப்படுத்திச்சி..எங்கம்மாவோட ஆசிர்வாதம் இல்லாமலேயே எங்க கல்யாணம் நடந்தது. “என் பேச்சை கேட்காமல் கல்யாணம் செய்திட்ட நீ நல்லா இருக்க மாட்டேன்னு”சொல்லி எங்க விட்டுக்கு முன்னால உள்ள முருங்கை மரத்தையும் ரெண்டா வெட்டி போட்டுருச்சி எங்கம்மா.
இப்போ இராமனும் செத்து போயிட்டது என்று சொல்லும் நாகம்மா இன்னமும் இந்தியாவில் இருந்த அந்த மச்சானின் ஞாபகத்திலிருந்து விடுபடவேயில்லை.அந்த மச்சானை பார்க்காத ஏக்கத்தில் இவர் இக்கரையில் இருக்கிறார்.இந்தியாவுக்கு போன இந்தக் கதையில் ஒரு காதலர் தினக் கதையும் ஒளிந்திருக்கிறதல்லவா..? 


No comments:

Post a Comment