Sunday, June 30, 2013

கைப்பேசிக்கு 40 வயது!

"ரீலோட் போடுவதற்காகவே சில பெண்கள் 'காதலர்'களை செட்டப் பண்ணி வைத்திருக்கிறார்கள்"


மணி ஸ்ரீகாந்தன்

கைப்பேசி இன்று தவிர்க்க முடியாத குட்டிச் சாத்தானாக நம்முடன் ஒட்டிக்கொண்டு விட்டது. சாத்தானிடம் சாமர்த்தியமாக வேலை வாங்கத் தெரிந்த மந்திரவாதியாக நாம் இல்லாவிட்டால் அது நம்மை தாக்கி வீழ்த்தி விடும். இதை ஆராய்கிறது இக்கட்டுரை.


நாற்பது வருடங்களுக்கு முன்னர் நியூயோர்க் ஹில்டன் ஹோட்டல் அருகே நின்றபடி ஒருவர் தன் கையில் இருந்த ஒரு கருவியின் மூலம் தொலைப்பேசி அழைப்பொன்றை எடுத்தார். அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பு. அவர் பெயர் மார்டின் கூப்பர். 1972ம் ஆண்டு ஏப்ரல் 03ம் திகதி அவர் இந்த அழைப்பை மேற்கொண்டார். இன்று உங்களுடன் இணைபிரியா தோழனாக ஒட்டிக்கொண்டிருக்கும் கைப்பேசி பிறந்த நாள் அன்றைக்குத்தான் நிகழ்ந்தது.
மார்டின்
கூப்பர்
மோட்டரோலா நிறுவனத்தின் தலைவரான மார்டின் கூப்பர் அந்த அழைப்பை பெல் நிறுவன ஆய்வு பிரிவின் தலைவருக்கே எடுத்தார். அச்சமயம் பெல் நிறுவனமும் ஒரு கைப்பேசியை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தது. வெற்றி பெற்றவர் மார்டின் கூப்பர். இவர் தன் கையில் வைத்திருந்த ஃபோனின் பெயர் டைனாடெக்.

1972ம் ஆண்டே கைபேசி கண்டுபிடிக்கப்பட்ட போதும் சுமார் பத்து ஆண்டுகளின் பின்னரேயே அத்தொழில் நுட்பம் வர்த்தக ரீதியாக சாத்தியமாயிற்று. 1988-89 காலப்பகுதியைத்தான் அது உலக நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்த பருவமாகக் கொள்ளவேண்டும். அது, இலங்கைக் கரையை தொண்ணூறுகளில் எட்டியது. இலங்கைக்கு கைபேசியை அறிமுகம் செய்த நிறுவனம் செல்டெல். அதன் பின் ஒரு பத்து வருடங்களாக இத்தொலைபேசியை கைபேசியென்றோ செல்போன் என்றோ அழைக்காமல் பலரும் செல்டெல் என்றே அழைத்துக்கொண்டிருந்தார்கள். இலங்கையில் கைபேசி புரட்சி ஏற்பட்டது எல்லாம் ஒரு 7 வருட காலத்துக்குள்தான். டயலொக் நிறுவனம் வந்த பின்னரேயே, இலட்சாதிபதிகள் கைகளில் இருந்த கைப்பேசி, கொழுந்து பறிப்பவர்கள், மற்றும் கீரை கட்டு விற்கும் பாட்டிமார்களின் கைகளுக்குத் தாவியது. இது இலங்கையில் டயலொக் நிறுவனம் நிகழ்த்திய பெரும் புரட்சி.

யோகராணி
இன்று மூவாயிரம் ரூபாவுக்கு ஒரு சீன ஃபோன் வாங்கலாம். பத்தாயிரம் ரூபாவுக்கு சகல வசதிகளும் அடங்கிய நவீன கைபேசி வாங்க முடியும். ஆரம்பகாலத்தில், செல்டெல் வந்தபோது ஒரு ஃபோனின் விலை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஒரு செங்கல் அளவு உயரமும் பருமனும் கொண்ட ஆரம்பகால கைபேசி ஒரு கிலோ எடை கொண்டதாகவும் அதேசமயம் ஆடம்பரச் சின்னமாகவும் விளங்கியது. அதைக் காவிக் கொண்டுதான் அன்றைய செல்வந்தர்கள் 'ஷோ' காட்டினார்கள்! அவர்கள் கைகளில் இருந்த இந்த செங்கல் ஃபோனைப் பார்த்து நாம் பொறாமைப்பட்டுக்கொண்டிருந்தோம்.

1992 ஆண்டிலேயே எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி அறிமுகத்துக்கு வந்தது. இன்று உலகெங்கும் இரண்டரை லட்சம் குறுந்தகவல்கள் ஒவ்வொரு வினாடியும்  அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மாத்திரம் பாவனையில் உள்ள ஆறு பில்லியன் ஃபோன்கள் எட்டு டிரில்லியன் எஸ்.எம்.எஸ்களை அனுப்பி சாதனை புரிந்துள்ளன.

இப்போது 5G தொழில்நுட்பத்துடன் கூடிய கைபேசிகள் வரவுள்ளன. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கைபேசிகளில் என்னென்ன புதிய விஷயங்கள் அடங்கியிருக்குமோ, கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு யோசியுங்கள்.

இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சாதனம் கைக்கு வந்திருப்பதால் அதை மூளையைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாகவும் சமூக பொறுப்புணர்வுடனும் உபயோகிக்க வேண்டியது நமது கடமை.

சிவஞானம்
சிலர் இப்படி நடந்து கொள்வதில்லை. ஆக்க சக்தியாக இது எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல அழிவுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கைபேசிகளில் வந்துள்ள புதிய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தினால் குட்டிச் சுவராகியும் விடலாம்.

எனினும் இக்குட்டிப் பிசாசு நம்மை விட்டுப் போகப்போவதில்லை. அது என்னவெல்லாம் செய்யும், செய்கிறது என்பதை இதோ உங்களுடன் பேச வந்திருப்பவர்கள் சொல்லக் கேட்டுப் பாருங்கள்.

செல்போன் தொடர்பாக கொழும்பிற்கு அண்மையில் உள்ள றைகம் தோட்டத்திற்கு ஒரு விசிட் செய்து சிலரைப் பார்த்துப் பேசினோம். தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றும் சுப்ரமணியம் சிவஞானம் அகப்பட்டார்.

"தோட்ட வேலைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இந்த செல்ஃபோன் இருக்கிறது. என்னிடம் வேலை செய்யும் இருபது பேரில் எட்டு பேரிடம் செல்ஃபோன் இருக்கிறது. வேலை நேரத்தில் போன் எடுத்துப் பேசுவதால் வேலை தாமதமாகிறது. ஒரு நாளில் முடிக்கவேண்டிய வேலை இரண்டு நாள் இழுபடுகிறது. நானும் எவ்வளவோ சொல்லியும் கேட்கிறார்கள் இல்லை. ஆனாலும் சிலருக்கு மனிதாபிமான அடிப்படையில் முக்கிய கோலாக இருந்தா பேசுங்க என்பேன். அப்படிச் சிலர் பொக்கட்டில் இருக்கும் ஃபோனை எடுத்துப் பேசிவிட்டு பொக்கட்டில் வைக்கும்போது திரும்பவும் ஃ போன் அலறும். அது முடிய இன்னொரு கோல்... இன்னொரு கோல் என முடிவே இருக்காது.  ஃபோன் விசயத்தில் நான் ரொம்பவும் நொந்து போயிருக்கேன். சிலர் மிஸ்ட் கோல் எடுத்து எவனையாவது கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டிருப்பான். அம்மாடியோவ் இந்த ஃபோனால் நான் ரொம்பவும் நொந்து போய் இருக்கேங்க. நான் செல்ஃபோன் பாவிக்கிறது இல்ல... எவனாவது நமக்கு மிஸ்ட் கோல் எடுக்க அப்புறம் நான் என் காசை போட்டு யாருடா நீ என்று கேட்க அவன் என்ன திட்ட எனக்கு தேவையாங்க இது...

அற்புதம்
இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடமும் நான் முறைப்பாடு செய்திருக்கிறேன். செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் நமக்கெல்லாம் சாமிமாதிரிதாங்க. ஆனா அதுவே நம்ப பொழைப்புக்கு கெடுதலா இருந்தா எப்படிங்க அதை வரவேற்க முடியும்? செல்போனில் நன்மை பத்து வீதம்னா 90 வீதம் அழிவுதான்" என்று சிவஞானம் சொல்லி முடிக்கும்போது தேயிலை செடிக்குள் இருந்து "மாமா... நீ எங்கே இருக்கே.." என்று செல்போன் ரிங்டோன் அழைத்தது.

ஆத்திரம் எகிற "உங்களுக்கு இன்னைக்கு அரை பேர்தான்டா!" என்று கத்தியபடியே சிவஞானம் செல்போன் சத்தம் வந்த புதரை நோக்கி ஓடினார்.

சிவஞானத்தின் கருத்துக்கு நேர்மாறான கருத்து தெரிவித்தவர் அற்புதம் கங்கானி.

"செல்போன் ரொம்பவும் நல்ல விசயம்... என்னோட வேலை செய்யும் பெண்களிடம் எல்லாம் செல்போன் இருக்கிறது. அதனால் வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லை... கொளுந்து பறிக்கும் பெண்கள் தலையில் தொப்பி
போட்டுக்கிட்டு காது இடுக்கில் செல்போனை செருகி வைத்து போன் பேசிக்கொண்டே  வேலையும் செய்வதால் எந்தப் பிரச்சினையம் இல்லை..." என்று செல்போனுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார் அற்புதம்மாள்.

அடுத்தவர் யோகராணி.

"செல்போனை யாரு கண்டுபிடிச்சாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனால் அவங்க நல்லா இருக்கணும். இன்னைக்கு வாழ்ற ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய பாதுகாப்புன்னா அது செல்போனுதாங்க... எங்க வீட்டுக்காரர் ரொம்ப தூரத்தில வேலை செய்யிறாரு... எங்க அம்மா அப்பாவும் வயசானவங்க. மாமியும் ஒரு நோயாளி. ஏதோ அவசர உதவிக்கு யாரையாவது கூப்பிடனும். நான் ஒரு தனி மனுஷி என்ன பண்ணுவேன்... அப்படியான நேரங்களில் செல்போன் எங்களுக்கு உதவுது... எங்க பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கும் எங்க போன் நம்பரை கொடுத்து வச்சிருக்கோம். ஏதேனும் பிரச்சினைனா பட்டன தட்டி காரியத்தை முடிக்கலாம். செல்போன் ஒரு கத்தி மாதிரி. காய்கறியும் வெட்டலாம். கொலையும் பண்ணலாம்"என்று நச்சென்று பதில் சொன்னவர் கொளுந்து பறிக்கும் தொழிலாளியான யோகராணி.
வீ.கே.டீ.பாலன்
"மின்சாரம் ரொம்பவும் அபாயகரமானது. தொட்டால் ஆளை காலிபன்னும். இது தெரிந்தும் அதை வீட்டிலேயே வைத்திருக்கோம். மின்சாரம் அபாயகரமானது என்றால் எண்ணெய் விளக்கு கொளுத்தலாம்தான். அதேசமயம் விளக்கு கவிழ்ந்து வீடு பற்றி எரிந்தால் விளக்கையும் வேண்டாம் என்பதா? நாமத்தான் கவனமா நடந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம். செல்ஃபோனும் அது மாதிரிதான். எத்தனையோ விடயங்களில் உற்ற நண்பனாக உதவுகிறது. நமக்கு தெரியாத ஒரு இலக்கத்தில் இருந்து யாராவது பேசினால் அவங்க யாரென்று நாம் ஏன் கேட்கணும்...? குறிப்பா பெண்கள் இந்த விசயத்தில ஜாக்கிரதையா இருக்கனும். தேவையில்லாத அழைப்புகளுக்கு பதில் சொல்லப் போனால் அதுவே நம்மை சிக்கலில் தள்ளி வாழ்க்கையை பாழாக்கிவிடும்..." என்று எச்சரிக்கிறார் கண்டி திகனையைச் சேர்ந்த ப்ரியா ராமலிங்கம்.

பம்பலபிட்டியில் உள்ள ஒரு பார்மஸியில் பணியாற்றும் ரம்பொடை தீபமலரிடம் நாம் கேட்டபோது...

"மலிவு விலையில் செல்போன் கிடைப்பதால் எல்லோரும் செல்லை பயன்படுத்தி அதன் மதிப்பையே கெடுத்துவிட்டார்கள். ஒரு சில பெண்கள் செய்யும் தவறுகளால் இந்த சமூகம் செல்போன் பாவிக்கும் பெண்களை தவறாக நினைக்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. ஆனால் என்னைப் போன்ற ஹொஸ்டலில் தங்கி வேலை செய்பவர்கள் வெளியே போகமுடியாது. இந்த சூழலில் என் அம்மா, அப்பா, சகோதரனுடன் கதைக்க எனக்கு உறவுப் பாலமாக இருப்பது இந்த செல்ஃபோன்தான்.

அந்த காலத்தில் பெண்களுக்கு கோல் போட்டு கலாய்ப்பது பையன்கள்தான். ஆனால் இன்று பெண்கள் தான் ஏதோ ஒரு நம்பரை தட்டி எதிர்முனையில் சிக்கும் பையனை மடக்கி கலாய்க்கிறார்கள். சிலப் பெண்கள் தங்கள் போன்களுக்கு ரீலோட் போடுவதற்காக பையன்களை ஃபோனில் நண்பர்களாக வைத்துக்கொள்கிறார்கள். ஒரு பெண் குறைந்த பட்சம் இரண்டு பையன்களையாவது ரீலோடுக்காக வைத்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? யாரோ, எவனோ ஒரு இளிச்சவாயன் இந்தப் பெண்களுக்கு ரீலோட் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் அந்தப் பெண் அந்த ரீலோட் பையனை என்றைக்குமே சந்திக்கப் போவதும் இல்லை, அவனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப்போவதும் இல்லை. அவன் சந்தித்தே ஆக வேண்டும் என்று தொந்தரவு பண்ணினால் அவனை கழற்றி விடடு விட்டு இன்னொரு பையைனை நண்பர்களாக்கிக் கொள்வாள் ரீலோடுக்காக! இப்படி சில உண்மைகளை போட்டு உடைத்தார் தீபமலர்.

நான் அண்மையில் சென்னையில் சுற்றுலா சேவையை திறம்பட நடாத்திக்கொண்டிருக்கும் மதுரா டிரவல்ஸ் அதிபர் வீ.கே.டி பாலனை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது தொழில் நுட்ப வளர்ச்சிபற்றி கூறிய அவர், செல்போன் இக்கட்டான சந்தர்ப்பங்களில் உற்ற நண்பனாக இடுக்கண் களைவதைப் பற்றி குறிப்பிட்டார்.

ஒரு முறை சென்னையிலிருந்து கொழும்பிற்கு செல்லும் ஒரு பயணி விமான நிலைய குடிவரவு குடியகல்வு அலுவலரிடம் கடவுச்சீட்டையும் டிக்கெட்டையும் கொடுக்கும்போது தான் தன்னிடம் டிக்கட் இல்லையென்பதை அதிர்ச்சியுடன் அறிந்துக்கொண்டார். என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. விமானம் புறப்பட அரை மணி நேரம்தான் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செல்பேசியில் எமது நிறுவனத்திடம் பேசி நிலைமையை சொல்லி என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். உடனே எமது பணியாளர்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று கூறி அவர் பெயரை வைத்து டிக்கட் இலக்கத்தையும் கண்டு பிடித்து அவரின் செல்லுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். உடனே அந்த பயணி அந்த செல்லில் வந்த டிக்கட் தகவலை குடிவரவு அதிகாரிகளிடம் காட்டிவிட்டு பயணத்தை தடையின்றி மேற்கொண்டிருக்கிறார். பாருங்களேன் இக்கட்டிலிருந்து தப்புவதற்கு செல்ஃபோன் எப்படி உதவியிருக்கிறது என்று கூறி வியந்தார் வி.கே.டி. பாலன்.

அலெக்சாண்டர் கிரஹம் பெல்

முதன்முதலில் தொலைப்பேசியை கண்டுபிடித்து பேசிக் காட்டியவர் கிரஹம் பெல் (1847- 1922).  அமெரிக்கரான இவர் 1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி இதை நிகழ்த்திக் காட்டினார். பொஸ்டனில் அமைந்திருந்த கட்டடத்தின் மாடி அறையில் இருந்தபடி கீழ்தளத்தில் இருந்த தன் உதவியாளரை தன் தொலைபேசி ஊடாக அழைத்தார். "மிஸ்டர் வொட்சன், இங்கே வரமுடியுமா? நான் உங்களைப் பார்க்க வேண்டும்." (mr.watsan,can you come here,i want to see you) என்பதே அவர் விடுத்த அந்த முதல் அழைப்பு. தன் அறையில் இருந்த
வொட்சன கிரஹம் பெல்லின் குரலைக் கேட்டதும் ஏற்பட்ட ஆனந்தத்தில் அவருக்கு தலைகால் புரியாமல் போய்விட்டதாம்!
குரலை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தலாம் என்ற இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனை. எவ்வளவு ஒரு மகத்தான தொலைதொடர்பு புரட்சிக்கு அந்தக் குரல் வழிவகுத்து விட்டிருந்தது!

Tuesday, June 18, 2013

வானவில் சினி கேள்வி பதில் -02

ரஜினி தன் வயதுக்கேற்ற வேடத்தில் நடிப்பதில்லையே?
எஸ். விஜி. சுன்னாகம்

நீங்கள் தமிழ்ப் படங்களை மட்டுமே பார்ப்பவர் போல் தெரிகிறதே! ஆங்கில படங்களை பொறுத்தவரை 50, 60 களில்தான் நடிகர்கள் மிளிர்கிறார்கள்.
George cloney, Jason Statham, Bruce Willsin ஆகியோர் இந்த வயதெல்லையில்தான்
உள்ளனர். அதிரடி அக்ஷன் படங்களில் வெளுத்து வாங்குகின்றனர். ரஜனிக்கும் கமலுக்கும் இந்த வயதெல்லைதான். விஸவரூபம் 2,  கோச்சடையான் வந்த பின் பாருங்கள். இவர்கள் எங்கோ போய்விடுவார்கள். வருடத்துக்கு தலா 2 படமாவது தருவார்கள்.

ரஜினி, கமல் சீசன் இனிதான் ஆரம்பம்!

 

நயன்தாரா இப்போது கிறிஸ்தவரா, இந்துவா?
வி. மாணிக்கம், கண்டி    

சினிமாவுக்கு வரும் வரை நயன் கிறிஸ்தவ பெண்தான். அவரது இயற்பெயர் டயானா மரியம். சிம்புவுடன் ஆடிப்பாடியபோது அவர் நயன்தாரா.
பிரவுதேவாவுடன் குடித்தனம் நடத்தியபோது இந்துவாக மதம் மாறியதாக கேள்வி. ஆனால் பிரவுதேவாவை பிரிந்ததும் மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துகொண்டார். இப்போது ஆர்யாவுடன் டூயட் பாடுகிறார். முஸ்லிமாக மாறினாலும் மாறலாம்.

மதம் மனதில் இருந்தால் போதுமே


சசிகுமாருக்கும் கும்கி லக்ஷ்மி மேனனுக்கும் என்ன உறவு?
தீ. வாகீஷன்- மஸ்கெலிய

டைரக்டர், நடிகை என்ற உறவுதான். வேறு எதுவும் இல்லை. ஒரு நடிகை ஒரு டைரக்டரின் பாணி அல்லது Style   ஐ புரிந்து கொண்டால் இருவருக்கும்
வேலை செய்வது சுலபமாக இருக்கும். ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்று  கே. பாலசந்தர் விரும்புகிறாரோ, அதை அப்படியே நாகேஷ் கமல் ஆகியோர் சரியாக புரிந்து கொண்டு நடிப்பார்களாம். அவ்வளவு புரிந்துணர்வு அவர்களிடையே இருந்தது. அதுபோலத்தான் இதுவும்.

டைரக்டர், நடிகை  உறவுதான்.


பாவனா நடிப்புத் தொழிலை கைவிட்டு விட்டாரா?
நந்து, இங்கிரிய

யார் சொன்னது? தமிழில் தான் இல்லை. மலையாளப்படங்களில் நடிக்கிறாரே! தமிழில் வரும் புது டைரக்டர்கள் புதுப்புது நடிகைகளைத்தானே
தேடுகிறார்கள். இதனால் பாவனா, பூமிகா ஆகியோர் இவர்கள் கண்களில் படுவதில்லை.

மலையாளத்தில் நடிக்கிறார்.


அதர்வா யாரையாவது 'லவ்' பண்ணுகிறாரா?
இல்ஷானா- வெலிகமை

அதர்வா, ஜனனி ஐயரை  (அவன் இவனில் நடித்தவர்) காதலிக்கிறார்.
கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறாராம். இவர்கள் இருவரும் எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. பொதுவான ஒரு நண்பர் ஒருவரின் மூலம் அறிமுகமாகி இன்று காதலராகியுள்ளனர்.

அதர்வா + ஜனனி = காதல் கல்யாணம்


பவர் ஸ்டாரின் போன் நம்பரை தர முடியுமா?
வாசன்- வவுனியா

பவர் ஸ்டாருக்கு இப்போது உங்களிடம் பேச நேரமில்லை. வேலூர் ஜெயிலில்
நெஞ்சிக்கு அநீதி என்ற புத்தகம் எழுதிவருகிறாராம்…

பேசக்கூட  நேரமில்லை


Saturday, June 15, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…-03

மச்சானைப் பார்க்காததால் மாறிப்போன வாழ்க்கை

 

மணி ஸ்ரீகாந்தன்

அறுபத்தைந்தாம் ஆண்டுக்காலப் பகுதியில் தென்னிந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர் களுத்துறை பகுதியை சேர்ந்த நாகம்மா.தனது பதினெட்டு வயதில் ராமானுஜம் கப்பல் மூலமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டாராம். “எங்கப்பாதான் என்னை கூட்டிகிட்டு போனாரு.திருச்சி பக்கத்தில் உள்ள துவரம் பட்டிதான் எங்க ஊரு.துவரம் பட்டியிலிருந்து குதிரை வண்டியிலதான் நாங்க பயணம் செய்தோம்.அங்க எங்க பாட்டி வீட்டுக்கு போனோம்.இங்கே மாதிரி மேசை,கதிரை என்று எதுவுமே அந்த வீட்டுல இல்லை.உட்கார தின்னைதான் இருந்தது. அதில்தான் உட்கார்ந்து இருந்தோம்.வீட்டுல உள்ள எங்க சொந்தக்காரங்க எல்லோரும் தரையில பாய் போடடுதான் அமர்ந்தாங்க.

கண்டி புள்ளைங்க நம்ம ஊரு புள்ளைங்க மாதிரி கூல் குடிக்காதுங்க.சோறுதான் சாப்பிடுங்க!என்று சொன்ன என் உறவுக்காரங்க உடனடியாக நெல்லை உரல்ல போட்டு குத்தி அரிசியாக்கி சோறு சமைச்சி தந்தாங்க.இப்படியே மூணு வேளையும் புது நெல்லு குத்திதான் சோறு சமைச்சி தந்தாங்க.நெல் வீட்டில் இருந்தும் ஏனோ அவங்க சோறு சாப்பிடவில்லை.எங்கப்பா என்னை அவரு பாட்டி வீட்டுல விட்டுட்டு பக்கத்து கிராமத்துல உள்ள அவரு தங்கச்சி வீட்டுக்கு போயிட்டாரு.இரவு அந்த வீட்டு தின்னையிலதான் தூங்கினேன்.புது இடமானதால் எனக்கு தூக்கமே வரலை.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்த எங்கப்பா உன்னை உன் மச்சான் ஆதிமூலம் பார்க்கணும்னு சொல்லுராரு..நாளைக்கு போயிட்டு வா,கண்டி பொண்ணு எப்படி இருக்கும்னு எல்லோரும் கேட்குறாங்க.இப்படி அவரு சொல்ல என்க்கு ரொம்பவும் வெட்கமா போயிடுச்சி..நான் போகமாட்டேன்னு பொய் சொல்லிட்டேன்.ஆனாலும் மச்சானை பார்க்கணும்னு நினைப்பு மனசுக்குள் இருக்கத்தான் செய்தது.

என்ன செய்ய என் துரதிர்ஷ்டம் அடுத்த நாள் காலையிலையே சிலோன்ல இருந்து என் தம்பிக்கு சுகமில்லைன்னு தந்தி வந்திருச்சி.அதனால உடனே கிளம்பி சிலோனுக்கு வந்திட்டோம்.அதுக்குப் பிறகு ஒரு வாரம் கழிச்சி எங்க வீட்டுக்கு இந்தியாவில இருந்து ஒரு தந்தி வந்திச்சு!அந்த தந்திய பார்த்த எங்கப்பா கதறி அழுதாரு.ஏன்னா எங்க மச்சான் ஆதிமூலத்தை துருச்சி பேய் அடிச்சி கொண்டுச்சாம்.(துருச்சி பேய் இந்திய பேய்களில் ஒன்றாம்)என் மச்சானை கடைசி வரைக்கும் என்னால முடியாம போயிடுச்சி.பிறகு நான் இராமன் பூசாரியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..என்ன செய்ய..என்னோட அழகுக்கும் அவர் மாதிரிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.அவருக்கு நான் சம்மதம் சொன்னது மனப்பூர்வமா இருந்திருக்காது.

எனக்கு மருந்து வச்சிதான் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டாருன்னு தான் நினைக்கிறேன்.எங்கம்மா பொன்னி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. “நான் இந்தியாவில இருந்து வந்தப்போ இந்த ராமன் பயல் கோடாலி கொண்டை போட்டுக்கிட்டு கிட்டிப்புல் விளையாடிட்டு இருந்தான்.அவனுக்கு போய் என் புள்ளைய கொடுப்பேன்னா..”அம்மா பிடிவாதமா இருந்திச்சி.

ஆனால் என் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் அதுல இரண்டாவது மனைவி பெரியாயி.என்னை இராமன் பூசாரியை கட்டிக்க சொல்லி கட்டாயப்படுத்திச்சி..எங்கம்மாவோட ஆசிர்வாதம் இல்லாமலேயே எங்க கல்யாணம் நடந்தது. “என் பேச்சை கேட்காமல் கல்யாணம் செய்திட்ட நீ நல்லா இருக்க மாட்டேன்னு”சொல்லி எங்க விட்டுக்கு முன்னால உள்ள முருங்கை மரத்தையும் ரெண்டா வெட்டி போட்டுருச்சி எங்கம்மா.
இப்போ இராமனும் செத்து போயிட்டது என்று சொல்லும் நாகம்மா இன்னமும் இந்தியாவில் இருந்த அந்த மச்சானின் ஞாபகத்திலிருந்து விடுபடவேயில்லை.அந்த மச்சானை பார்க்காத ஏக்கத்தில் இவர் இக்கரையில் இருக்கிறார்.இந்தியாவுக்கு போன இந்தக் கதையில் ஒரு காதலர் தினக் கதையும் ஒளிந்திருக்கிறதல்லவா..? 


Thursday, June 13, 2013

வானவில் சினி கேள்வி பதில்


தல படம் ரெடியா?


ஆர். ஜெயராஜ், வாழைச்சேனை

ரெடி. ஆனால் இன்னும் படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை. தயாரிப்பு பெயரா 'வலை'ன்னு வச்சிருக்காங்க. தயாரிப்புக்கு வைக்கிற
பெயரை படத்துக்கு வைக்கிறது 'அபூர்வம்'. அஜித்தின் 53 ஆவது படம் இது. எனவே 'அஜித் 53’ என்ற பெயரில் வெளியான இந்த படத்தின் இணையதள முன்னோட்டத்தை 48 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இது ஒரு சாதனை என்று பேசிக்கொள்கிறார்கள்.

you tube இன் சாதனை திரையிலும் தொடருமா?

 


நமீதாவின் எடை நூற்றி ஐம்பது கிலோ என்று நண்பன் சொல்கிறான். உண்மையாக இருக்குமா?

எஸ். புவனேஸ்வரி, வவுனியா
இருக்காதே பின்னே. நீளவாக்கிலும் பக்கவாக்கிலும் நமீதாதானே டொப்! வேண்டுமானால் பக்கவாக்கில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி மட்டும்
போட்டிக்கு நிற்கலாம். மத்தவங்களுக்கு நோ சான்ஸ்

பிஞ்சு முகம் + திம்சு உடம்பு= நமீதா

 


பவர் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டாராமே?

தர்ஷி. யாழ்ப்பாணம்
 நண்பர்களை நம்பினாராம். காலை வாரிவிட்டார்களாம்.
வேலூர் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோது ஊடகவியலாரிடம் அவரே நேரில் சொன்னது இது.

நண்பர்களை நம்பினால் சங்குதான்.

 

படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது ஆரோக்கியமான விஷயமா?

கே. பாஸ்கரன். மஸ்கெலியா

இப்போதைய நிலையில் படத்துக்கு பெயர் வைப்பதே பிரச்சினைதான். சிம்புவின் "வாலு” படத்துக்கு நடந்த கதி தெரியுமா? அதே தலைப்பை

வேறொருவர் தனது படத்துக்கு வைத்து விளம்பரமும் செய்து விட்டார். இப்போது இருவரும் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். ஒரு படத்துக்கு பெயர் வைக்கும் போது இன்னும் ஐந்து பெயரையாவது தயாராக வைத்திருக்கணும்.

பெயரை வைத்தால் மட்டும் போதாது அதனை பாதுகாக்கவும் தெரியனும்.

 

சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதா?

எம்.ஷரீனா,  வரக்காப்பொல

திருமணம் நடக்கவில்லை. ஆனால் குடித்தனம் நடத்தியிருக்கிறார். அதுவும் ஸ்ருதிஹாசனுடன். தப்புன்னு தெரிஞ்சு தப்பை தப்பா செய்தா
சினிமாத்துறையில் அதற்கு ரைட்டுன்னு அர்த்தம்.

சினிமாவில் இதுவெல்லாம் சகஜம்.

 

அஞ்சலி 'எயிட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரமே... உண்மையா?

எம்.எப்.எஸ்.சுக்னா. காத்தான்குடி

இப்படியெல்லாம் வதந்தி கிளம்புதா.
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது

அஞ்சலி பாவம் அப்புராணி

 

மன்சூர் அலிகானின் 'லொள்ளுதாதா' படம் வெளியாகியதா?

எம். ரிஸ்வான், வாழைச்சேனை
'லொள்ளுதாதா' படம் வெளியாகி ஓரிரு நாள் ஓடியதாக
கேள்வி. அதுபோதும் ஒரு நாள் ஓடினால் கூடப்போதும் தயாரிப்பாளரோட...

சினிமா ரகசியத்தை சொல்லப்படாது

 

பழைய படங்களை தூசு தட்டி டிஜிட்டலுக்கு மாற்றினார்களே. அதற்கு என்ன நடந்தது?

எம்.விதூஷா. கொழும்பு 10

பழைய படங்களா? கர்ணன் வந்தது. ஓரளவு ஓடியது. ஆனா தமிழ் சினிமா டிரென்ட் என்ன தெரியும்? நல்ல படங்கள் கவிழுது. மொக்கை படங்கள் எகிறுது.

தமிழ் சினிமா வர வர...

 

ரஹ்மான் தனது கவனத்தை தமிழ் திரையுலகில் மீண்டும் செலுத்த ஆரம்பித்து விட்டாராமே?

எல். லோஜினி

உலகத்தை சுத்தி வந்திருக்காரு. ரொம்ப டயர்டு. அதனால் கொஞ்ச நாள்
இந்தியாவிலேயே தங்கப்போகிறாராம். அதனால்தான் மீண்டும் தமிழ்ப் படங்களோட பக்கம் திரும்பியிருக்காரு.  உலகம் உருண்டைதானே!

பெரிய பட்ஜெட் படங்கள் இனி அடிக்கடி வரும்.

 

அனுஷ்கா தொடை அழகியா, இடுப்பழகியா, கண்ணழகியா?

எல். குமார், மானிப்பாய்
அனுஷ்கா முகத்தை காட்டினாலே போதுமே!

அனுஷ்கா முக அழகி

Friday, June 7, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…-2

“சோப் என்று தமிழில் சொல்லுங்கள்!”

மணி  ஸ்ரீகாந்தன்


ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழித் தமிழர்களால் இன்னும் மறக்க முடியாத இடம் என்றால் அது இராமேஸ்வரம் மண்டபம் முகாம்தான்.சுட்டெரிக்கும் வெப்பத்தால் வரண்டு போன பொட்டல் வெளியாக காட்சியளிக்கும் இராமேஸ்வரத்தில் வந்திறங்கும் அகதிகள்,பயனிகளுக்கு இளைப்பாறும் இடம் மண்டபம்தான்.

இலங்கை தோட்டங்களுக்கு இந்திய தொழிளாலர்கள் வரத் தொடங்கிய பின்னர் அவர்களைப் பரிசோதித்து அனுப்பும் ‘டிரான்சிட்’ இடமாக பிரிட்டிஸ் அரசு இந்த மணடபத்தை அமைத்தது.பரவக் கூடிய நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதே மண்டபத்தின் பிரதான வேலையாக இருந்தது.

சில சமயம் சில வாரங்களை மண்டபத்தில் கழித்த பின்னர்தான் இலங்கைக்கு கப்பல் ஏற அனுமதி கிடைக்குமாம்.இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வரும் அல்லது செல்லும் வியாபாரிகள்.மற்றும் பயணிகளின் பயணப் பொதிகளை சோதனை செய்யும் இடமாகவும் மணடபம் விளங்கியது.
எனவே எப்போதும் ஜே, ஜே என மண்டபத்தில் கூட்டம் இருக்கும்.இப்படி மண்டபத்தில் சில காலம் தங்கியிருந்தவர்தான் தெய்வானை.தற்போது வேலூர் மேல்மொணவூரில் வசித்து வரும் இவருக்கு அறுபத்தெட்டு வயதாகிறது.
இரத்தினபுரி வட்டாபத்தை தோட்டத்தைச் சேர்ந்த இவர் மணடபம் முகாமில் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் காலையில் முகாமுக்கு அருகில் இருந்த கடைக்கு சென்று சவர்க்காரமும், சீனி கால் இறாத்தலும் கேட்டிருக்கிறார்.ஆனால் அந்தக் கடைக்காருக்கு இவர் பேசியது சுத்தமாக புரியவில்லையாம்.
“இந்தம்மா சொல்லுறது ஒண்ணுமே புரியல்லியே” என்றாராம் கடைக்காரர்.
அதற்கு தெய்வானை “அட என்னங்க முதலாளி நீங்களும் தமிழு நானும் தமிழு..நான் சொல்லுறது விளங்கல்லியா? எனக் கேட்டிருக்கிறார் . உங்களுக்கு காது கேளாது போல என்ற தெய்வானை அந்தக் கடை முதலாளியின் அருகில் சென்று சத்தமாக “சவுக்காரம் சீனி இருக்கா?”என்று கேட்டிருக்கிறார்.இதனால் எரிச்சலடைந்த கடைக்காரர். “ஏய் எனக்கு காது நல்லாதான் கேட்குது.

நீ பேசும் பாஷைதான் புரியல்ல.நீ தெலுங்கா,மலையாளமா?”என்று திறுப்பிக் கேட்டிருக்கிறார். “அய்யய்யே என்னடா இந்த மொதலாளி பாஷை அது இதுன்னு பேசுறாரே…நாங்க இந்த பாஷையை வச்சி சிங்கள நாட்டிலயே காலத்தை ஓட்டினோமே…”என்று வீராப்பாக பேசிய தெய்வானையிடம் அந்தக் கடைக்காரர்,

கடையில் உள்ள சில பொருட்களை சுட்டிக்காட்டி தேவைப்படும் பொருள் இதுவா இல்லை அதுவா எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.தெய்வானை இல்லை என்று சொல்லவே நீ கேட்கும் அந்த சவர்க்காரம் எதற்கு பாவிப்பார்கள் என்று புத்திச்சாலித்தனமாக ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

இதற்கு தெய்வானை குளிப்பதற்குப் போடுவார்களே…வாசைனயா இருக்குமே! என்று பொழிப்புரை செய்திருக்கிறார்.தெய்வானை கேட்கும் பொருளை கண்டு பிடித்து விட்ட சந்தோசத்தில் அந்தக் கடை முதலாளி சீகைக்காய் தூளை எடுத்துத் தந்திருக்கிறார். “அது தூளாக இருக்காது.கெட்டியாக இருக்கும் போட்டா நுரை வரும்”என்று தெய்வானை விளக்கமாகச் சொல்லவும்,கடைக்காரருக்கு அந்த மர்மப் பொருள் மண்டையில் பளிச்சிட்டிருக்கிறது.

“அட ‘சோப்’தான் கேட்டியா!”என்ற முதலாளி ஒரு அரசன் சோப் கட்டியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.தெய்வானை பழக்க தோஷத்தில் சன்லைட் சவர்க்காரம் தாங்க என்று கேட்க,அதெல்லாம் இங்கு கிடையாது என்று தமிழகத்தில் கிடைக்கும் சவர்க்காரதத்தை கொடுத்திருக்கிறார்.
பிறகு சீனியையும் ‘தேநீருக்குப் போட்டுக் குடிக்கிறது’என்று தெய்வானை விளக்கிச் சொல்லியும் அந்த மனிதருக்கு புரியவில்லை.

தமிழ்நாட்டில் ‘டீ’அல்லது ‘டிக்காஷன்’என்றால்தான் புரியும் என்பது பாவம் தோட்டத்தில் வாழ்ந்த தெய்வானைக்குத் தெரிய வாய்ப்பில்லைதானே!பிறகு ஒரு வழியாக கடையில் இருந்த சீனியைக் காட்டி இதுதான் என்றாராம்.
“சக்கரை கேட்டியா?”என்று முதலாளி “மொழி தெரியாத ஆளுங்களால நம்ம பாடு பெரிய திண்டாட்டம்தான் என்றாராம்!”இப்படியான சம்பவங்கள் நடைப்பெற்ற மண்டபம் முகாம் பகுதி இன்று ஈழத் தமிழர்கள் வாழும் அகதி முகாமாக மாறியிருக்கிறது.

Tuesday, June 4, 2013

நிரஞ்சனியின் பளீர் பதில்கள்..


உரையாடியவர்: மணி ஸ்ரீகாந்தன்

 

"திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்றதும் வீட்டில் ஒரே அமளிதுமளியாகி விட்டது. இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு கடைசியில் அம்மா அனுமதி தந்தார்."


"சிங்கள ரசிகர்கள் அடையாளம் கண்டு புன்னகைக்கிறார்கள். பேசுகிறார்கள். தமிழ் ரசிகர்கள் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஏழையாக பிறக்கும் விஜய் ஒரே பாடலில் கோடீஸ்வரராவதை கைதட்டி ஏற்கும் இவர்கள் எங்களைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு புன்னகையாவது..."


நம் நாட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் அசோக்க ஹந்தகமவின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் 'இனி அவன்'. போருக்குப் பின் ஒரு புனர்வாழ்வு பெற்ற போராளியின் வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இரண்டு நாயகிகள். அதில் நிரஞ்சனி நடித்திருந்த பாத்திரம் பெரும் விமர்சனத்திற்கும், தமிழ் பண்பாட்டு தீவிரவாதிகளின் முகசுளிப்புக்கும் ஆளானது. ஆனாலும் நிரஞ்சனி ரொம்பவும் தைரியமான பெண். இந்த சமூகம் தீயாய் வாரிக் கொட்டிய விமர்சனங்களை தாண்டி வந்திருக்கிறார்.

"படத்தில் நான் நடித்த அந்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறேன். ஆனால் நம் சமூகத்தவர்கள் உண்மை நிலையை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏழையாக பிறக்கும் விஜய் ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆவதை கைதட்டி வரவேற்கிறார்கள். அதுதான் சினிமா என்கிறார்கள். ஆனால் எங்களை பாராட்டவேண்டாம். ஒரு புன்னகையாவது செய்யலாமே! நான் அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டேன். நாய் வேசம் போட்டால் குரைத்துதானே ஆகவேண்டும்?" என்று கொஞ்சம் உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி பேசுகிறார் நிரஞ்சனி.

இனிஅவன் திரைப்படத்தில் நடித்த பிறகு சிங்கள ஊடகங்கள் அனைத்தும் தன்னை நேர்கண்டு பேட்டி வெளியிட்டதை பெருமையாக கூறும் அவர்,  தமிழ் ஊடகங்கள் தன்னைக் கண்டு கொள்வே இல்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார்.

இனி அவன் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது என்று எமது முதல் கேள்வியை தொடுத்தோம்.

"நான் நேத்ரா தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அந்த நாட்களில் யா டிவி தயாரிக்கும் தமிழ், சிங்கள ரேடியோ நாடகங்களுக்கு நான் இரண்டு மொழிகளிலும் குரல் கொடுப்பேன். அப்போது அங்கே பணியாற்றிய ஜானக, தரங்கா அக்கா ஆகியோருடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அவர்கள் தான் இலங்கையில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படத்திற்கு நடிகை தேவை என்ற செய்தியை  சொல்லி அமல் அல்விஸ் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரோடு பேசியதில் அவர் அசோக ஹந்தகமையின் உதவி இயக்குனர் என்று புரிந்தது. சத்தியமா எனக்கு அதுவரை அசோக்க ஹந்தகமையை தெரியாது.

அதன் பிறகு எனது சிங்கள நண்பர்களிடம் விசாரித்தபோது அசோக்க இலங்கையின் பிரபல இயக்குனர் என்றும் அவரின் சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு உன்னை தேடி வந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் கூறினார்கள். அதன் பிறகே சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற  ஆசை என் மனதில் துளிர் விடத் தொடங்கியது," என்று கூற ஆரம்பித்தார் நிரஞ்சனி.

இந்த இளம் நடிகை நிரஞ்சனியின் பூர்வீகம் கண்டி. ரொம்பவும் கட்டுப்பாடான ஆசாரமான குடும்பத்தை சேர்ந்தவர். ஆரம்ப நாட்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கும் நிரஞ்சனிக்கு 2011 யூத் டெலி டிராமா விழாவில் தென்மாகாணத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது. யூத் டெலிடிராமா தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக ஒரு தமிழர் சிங்கள குறுநாடகத்திற்காக விருது பெற்றிருப்பது நிரஞ்சனி தமிழுக்கு சேர்த்திருக்கும் சிறப்பு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

"நாடகத்தில் என் வீட்டில் அனுமதி வாங்கவே நான் பாடாத பாடு பட்டிருக்கிறேன். சினிமா என்றால் சொல்லலவா வேண்டும்..." என்று கலகலப்பாக சிரித்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார்.

"நான் குழந்தையாக இருக்கும் போதே அப்பா இறந்து விட அம்மாதான் என்னையும் அக்காவையும் வளர்த்து படிக்க வைத்தார். வீட்டில் நான் செல்லப் பிள்ளையாக வளர்ந்தாலும் அம்மாவின் கவனமெல்லாம் என்மீது தான்.

சினிமாவில் நடித்தால் என்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்ற பயம் அம்மாவுக்கு. அதனால் எனக்கு சீக்கிரமே ஒரு கல்யாணத்தை செய்து முடித்துவிட வேண்டும் என்பதிலேயே அம்மா குறியாக இருந்தார்.

நான்தான் அம்மாவிடம் போராடி,  நாடகத்தில் நடித்ததோடு டிவி அறிவிப்பாளராகவும் ஒரு பரிமாணம் எடுத்தேன். அதன் பிறகு சினிமா... அம்மாவிடம் அனுமதி கேட்க ரொம்பவும் பயமாக இருந்தது. அதுவும் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில். அவ்வளவு தூரத்திற்கு என்னை அனுப்புவது சாத்தியமில்லை. யாழ்ப்பாணம் போக இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அம்மாவிடம் விசயத்தைச் சொன்னேன். கடவுளே! வீட்டில் ஒரே அமளி துமளி. பெரிய பிரச்சினையாக போயிட்டது. அம்மா முடியாது என்று மறுக்க அதற்கு நான் அக்ரிமெண்டுல கையெழுத்துப் போட்டுட்டேன். நான் போகாட்டி வழக்கு போட்டுடுவாங்கன்னு அம்மாவிடம் ஒரு பொய்யை சொன்னேன். அம்மா கதையை கேட்க யுத்தம் சம்பந்தமான ஒரு கதை என்று ஒரு வரியில் சொன்னேன். முழுக்கதையையும் சொல்லி இருந்தா அனுமதி கிடைத்திருக்காது. அம்மாவும் இதுதான் உனக்கு முதலும் கடைசியும் இனி சினிமாவில் நடிக்கக் கூடாது என்ற கட்டளையோடு அனுமதி தந்தார்."

நிரஞ்சனி சம்பந்தப்பட்ட காட்சிகளை பத்து நாட்களில் படமாக்கி இருக்கிறார்கள். படத்தில் நிரஞ்சனி அம்மாவில் சேலையை கட்டித்தான் நடித்தாராம்.

"படம் வெளியான பிறகு முதல் சிறப்பு காட்சிக்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த என் போஸ்டரை பார்த்ததுமே அம்மா மிரண்டு போனாள்.

'இது என்ன? ஏன் உன்னை இப்படி அசிங்கமாக காட்டியிருக்கிறார்கள்?' என்றார் அம்மா. படத்தைப் பார்த்தால் என்ன நடக்குமோ என நான் பயந்துபோனேன். படம் திரையில் வரத் தொடங்கியதும் அம்மாவைப் பார்த்தேன். அம்மா இந்தியப் படங்களைப் பார்த்து பழகிவிட்டதால் நம் நாட்டு படங்களின் ஒலி, ஒளி, வர்ணம் என்று எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவரின் முகத்தை பார்த்து புரிந்துகொண்டேன். படம் முடிந்ததும் என் நடிப்பு பிரமாதம் என்று அம்மா பாராட்டினார். அம்மா பாராட்டினால் அது ஆஸ்கார் விருது கிடைத்த மாதிரிதானே! நான் ரொம்பவும் மகிழ்ந்தேன். என் கதாபாத்திரம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. மகளை வெள்ளித்திரையில் காட்டியதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி அதனால் நான் தப்பினேன்.

என் நடிப்பை நிறையப்பேர் பாராட்டினார்கள். குறிப்பாக சிங்கள ரசிகர்கள். 'நீங்கள் தானே இனிஅவன் நடிகை?' என்று பக்கத்தில் வந்து கைகொடுத்து பாராட்டினார்கள். ஆனால் தமிழர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டாலும் தெரியாதமாதிரி இருந்து விடுகிறார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தால் கூட அவர்கள் சிரிப்பதில்லை. நாம் எதற்கு ஒரு இலங்கை நடிகையை பாராட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு குடை பிடிக்கும் ஒருவன் இங்கு வந்தால் ஓடிச் சென்று பல் இளித்து அவர்களோடு படம் எடுத்து பத்திரிகையில் போட்டு பெருமைப்பட துடிக்கிறார்கள். என்ன மனிதர்களோ இவர்கள்..."என்று வெறுப்பில் குமுறுகிறார் நிரஞ்சனி.

நிரஞ்சனியை நம்நாட்டு தமிழ் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும் புலம்பெயர் நாடுகளின் இணையத்தளங்கள் பல புகழாரம் சூட்டி எழுதியுள்ளன.

2009ல் நேத்ரா தொலைக்காட்சியில் பிரவேசம் செய்த இவர் லன்ச்டைம் மியூசிக்,  நேத்ரா எக்ஸ்பிரஸ்,  சமையல்கலரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வளங்குகிறார்.

"இனியவன் படப்பிடிப்பு யாழ்ப்பாண தீவுப் பகுதி கடலோரத்தில் நடந்த போது ஒரு காட்சியில் தர்ஷனும்,  ராஜாகணேசனும் கடலோரத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வேணுக்குள் அமர்ந்திருப்பேன். அந்தக் காட்சி உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் போது படமாக்கப்பட்டது. அப்போது அங்கே சில்வர்சீட் (ரிப்ளெக்டர் போர்ட்) வைத்திருந்தார்கள். நான் வேனுக்குள் இருந்தவாறே அந்த ரிப்ளெக்டர் போர்ட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வெளிச்சம் என்னை குழப்ப திடீரென்று எனக்கு தலை சுற்றிக்கொண்டு வந்து கீழே விழ,  டைரக்டர் கட் சொல்லி காட்சியை நிறுத்திவிட்டு,  ஓடி வந்தார். அதன் பிறகு அன்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அடுத்த நாள்தான் அந்தக் காட்சியை படமாக்கினார்கள்," என்று சொல்லும் நிரஞ்சனி,  ஒரு'தல' ரசிகை. மணிபர்சு, போன் என்று அனைத்திலும் அஜித் போட்டோதான். உங்கள் ரோல் மொடல் யார் என்று கேட்டதற்கு 'தல' புராணம் பாடத்தொடங்கி விட்டார்.

"நான் சின்ன வயசில் ரொம்பவும் வாயாடி பொண்ணுங்க. யாருக்கும் பயப்பட மாட்டேன். கண்டி கலவன் பாடசாலை ஒன்றில் படிக்கும் போது நான்தான் மொனிட்டரா இருந்தேன். பையன்கள் எனக்கு அடங்கி இருக்கணும் என்று நினைப்பேன். ஒரு தடவை வகுப்பில் கேதீஸ் என்ற பையன் நான் சொல்வதை கேட்காமல் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்தான். ஆத்திரம் தாங்காமல் ஓங்கி ஒரு அறை கொடுத்தேன். அவ்வளவுதான் அவன் மயங்கி சுருண்டு விழுந்தான். இப்போது அவன் ரொம்பவும் பெரிய ஆள். கொழும்பில் இருக்கிறான்" என்றவரிடம் உங்கள பார்க்கும்போது லேடி சிங்கம் மாதிரிதான் தெரியுது... ஒன்றரை கிலோ வெயிட் போட்டு  அடிச்சிங்களா? என்றதும் சிரிக்கிறார். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் மாதிரி வீரப் பெண்களின் வேடத்தில் நடிக்க ரஞ்சனிக்கு ஆசையாம்... நிரஞ்சனியின் தைரியம் அவரை வாழ வைக்கும். வாழ்த்துக்கள் நிரஞ்சனி.

Sunday, June 2, 2013

மரண விசாரணை மன்றில் கேட்ட கதைகள்

எமனை நோக்கி எஸ்கேப் ஓட்டம்!

 எழுபதுகள் முதல் கொழும்பு திடீர் மரண விசாரணை மன்றுக்கு பத்திரிகையாளராக சென்று செய்தி சேகரித்து வரும் கட்டுரையாளர் தனக்கு தெரியவந்த உண்மைச் சம்பவங்களை இங்கே உங்களுடன் சுவைபட பகிர்ந்து கொள்கிறார்.

  
ஏ.மதுரை வீரன்

ஜினதாஸ முதலாளி பெரிய ஜவுளிக்கடை பிஸினஸ்மேன். மற்றொரு ஜவுளிக்கடை முதலாளியின்  மகளை திருமணம் செய்ததன் மூலம் ஒரு ஜவுளிக்கடை இரண்டாகி இப்போது மூன்றாகியிருக்கிறது.

இவருக்கு இரண்டு பிள்ளைகள். ரூபன் என்றொரு மகன், ரூபினி என்றொரு மகள். இவர்கள் இரண்டு பேருக்கும் பணக்காரத்தன்மை மனதுக்குள் வந்துவிடக் கூடாது,தாம் மத்திய குடும்பத்தினர் என்றே அவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் அளவோடு செலவு, அதனை மீறாத கவனம் ஆகியவற்றை சிறு வயதில் இருந்தே தனது பிள்ளைகள் கற்றுணர வேண்டும் என்ற வேட்கையில் ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் இருந்தும் தனது பிள்ளைகளை பஸ்ஸிலேயே பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்.

ரூபன் மற்றும் ரூபினியின் மாடி வீடு அமைந்திருந்த இடத்துக்கு பின்னால் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் குடியிருந்த ஒரு வீட்டுத் தொகுதி. நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கே இருந்தன. அவற்றில் பாடசாலை செல்லும் மாணவ மாணவியர் பெருமளவில் இருந்தனர்.

அங்கிருந்த கிரிக்கெட் மற்றும் றகர் அணிகளின் ஒட்டு மொத்த ஸ்டார் மகேஸ். ஆனால் அந்த அணிகளுக்கு காப்டன்களாக இருந்தவர்களும் மகேஸின் ஆலோசனையுடன் தான் செயற்பட்டனர்.

விளையாட்டில் மட்டுமல்ல கணக்கிலும் மகேஸ் புலி. கணக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள இளம் மாணவர்களை மைதானத்தில் வைத்துக்கூட மகேஸை அணுகுவதுண்டு.

ரூபினி மட்டும் என்ன... அந்த வீட்டுத் தொகுதியில் இருந்த மாணவியர் சிலர் அவளது நண்பிகள் லிஸ்ட்டில் இருந்தனர். ஆனால் அதை அவள் வீட்டுக்குத் தெரியாமலே வைத்திருந்தாள்.

அவர்கள் தந்தை ஜினதாஸ முதலாளி ஆரம்பத்தில் வறுமையில் வாடியவராக இருந்தாலும் தமது பிள்ளைகள் எப்போதுமே செல்வத்தில் மிதக்க வேண்டுமே தவிர வறுமையில் உழலும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடன் பழகக் கூடாது. அவர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது என்று கருதுபவர்.

இந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது.

அன்று அந்த பஸ்ஸில் நிறையக் கூட்டம் இருந்தது. அதில் முக்கால் வாசிப்பேர் பாடசாலை மாணவ மாணவியர். மகேஸ், அவனது நண்பர்கள், ரூபன், ரூபினி ஆகியோருடன் நகரில் இருந்த பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் உயர் மட்ட மாணவர் குழுவும் அந்த பஸ்ஸில் பயணம் செய்தனர்.

நீண்ட காலமாகவே ரூபினியை குறிவைத்திருந்த ஒரு மாணவன்தான் அந்தக் குழுவில் தலைவன். சொந்த கார் வைத்திருந்தான். அதில்தான் கல்லூரிக்கு வருவான். ஆனால் வாரம் ஓரிருமுறை அவனது பரிவாரங்களுடன் பஸ்ஸில் வருவான். வேறெதற்கு ரூபினியை பார்ப்பதற்குத்தான்!

சுற்றிலும் தனது நண்பர்கள் பரிவாரம் என்ற திமிரில் ரூபினியை கட்டிப்பிடித்து முத்தமிட்டான். ரூபினி ஐயோ, குய்யோ என்று அலறினாள். அவளது தோழிகளுக்கு அதிர்ச்சி கூச்சலை கேட்ட டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மன்சூர் அலிகான் உடம்பானை வெளியே இழுத்தான் மகேஷ். சரமாரியான அடி உதை. அவனது நண்பர்கள் பறந்தோடித் தப்பினர்.

அன்று ஆரம்பித்தது மகேஸ்- ரூபினி லவ் எபிசோட்!

இப்போது நூறாவது அங்கத்தையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இத்தனை தூரம் சென்ற பின்னர்தான் ஜினதாஸ முதலாளிக்கு விஷயமே தெரிந்தது.  காதல் ஜோடிகள் பேசிக்கொண்டிருப்பதை அவரது நண்பர் ஒருவர் பார்த்திருக்கிறார். போட்டுக்கொடுத்துவிட்டார்.

அதைக் கேட்ட ஜினதாஸ முதலாளி கோபமூர்த்தியானார். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து ரூபினியின் தலைமுடியை பற்றியிழுத்து சரமாரியாக அடியும் உதையும் கொடுத்தார்.

'பரதேசியுடன் படுக்கை சுகம் கேட்குதா உனக்கு' என்று கத்தியவர் மகேஸ் குடும்பத்தினரை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.

கோபமூர்த்தியுடன் ரூபினியின் அம்மா, பாட்டி, மாமா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ரூபினியை அவர்களும் அடித்துத் துவைத்தனர். அறைக்குள் போட்டு பூட்டிவிட்டனர்.

ரூபன் பாவம். தங்கையை காப்பாற்ற வழி தேடினான். கிடைக்கவில்லை. அரச மரத்தடி பிள்ளையார் போல் உட்கார்ந்து விட்டான். மனது மட்டும் ரூபினியை நினைத்து அழுதது.

ரூபினி பூட்டி வைக்கப்பட்ட அறையின் வெளி ஜன்னல் மூலம் சாப்பாடு உள்ளே சென்றது அந்த அறையை அடுத்து பாத்ரூமும் இருந்ததால் ரூபினியின் நிலை முற்றிலும் மோசமாகி விடவில்லை. ஆனால் நான்கு நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டு கிடந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாள் ரூபினி.

ரூபினி இருந்த அறைக்கு வெளியில்  இருந்த அத்தனை ஜன்னல்களுக்கும் ஆணி அடித்து சீல் வைத்திருந்தனர்.

ரூபனுக்கு தங்கையை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால் மிகுந்த சிரமத்துடன் ஒரு ஜன்னலுக்கு அடித்திருந்த ஆணியை மட்டும் கழற்றி ஜன்னலை திறக்க மகேஸின் உதவியுடன் திட்டம் தீட்டினான்.

இரவு 10 மணிக்கு வெளியே தப்பிவிடு. மகேஸ் மற்றும் அவனது நண்பர்கள் உன்னை அழைத்துச் செல்ல தயாராக இருப்பார்கள் என்ற தகவலையும் ரூபினிக்கு தெரிவித்து விட்டான்.

அப்போது பகல் 2 மணி. 4 நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த வெறி. எவருமே ஆதரவு காட்டாததால் ஏற்பட்ட ஆதங்கம், எப்படியாவது தப்பவேண்டும் என்ற வேட்கை. எல்லாம் சேர்ந்து ரூபினியை ரொம்பவும் படுத்திவிட்டன.

இருகில் இருந்த நோட்புக்கை எடுத்தாள். ஒரு நீண்ட கடிதத்தை எழுதினாள். அதனை மேசையில் வைத்தபின் யோசித்தாள்.

எல்லாம் சரி. இரவு 10 மணிக்கு தப்பும்போது மகேஸ் சொன்னபடி அங்கு இருக்காவிட்டால்? அந்த நினைப்பே ரூபினியை ரொம்பவும் தவிக்க வைத்தது.

இப்போதே பகலிலேயே தப்பினால் என்ன? தோழியர் வீட்டுக்காவது சென்று விடலாமே.

இரண்டாவது ஜன்னலை மெல்லத் தள்ளினாள். ரூபன் சொன்னது உண்மைதான். ஜன்னல் திறந்து கொண்டது. வெளியே பார்த்தாள். ஒருவரையும் காணவில்லை. ஜன்னலை நன்றாக திறந்து வெளியே குதித்தாள்.

இனி விடுதலை என்ற சந்தோஷத்துடன் சில அடி தூரம்தான் சென்றிருப்பாள். ஜினதாஸ முதலாளி அங்கு காவலுக்கு இருவரை நிற்க வைத்திருந்தார்.

ரூபினியின் துரதிர்ஷ்டம் அந்த இரண்டு தடியன்களும் அவள் ஜன்னல் வழியாக குதிப்பதை கண்டுவிட்டார்கள். சினிமா பாணியில் விரட்டுதான்.

ஏற்கனவே அறைச் சிறையில் கிடந்த ரூபினியின் மனதும் உடலும் பெரிதும் பாழ்பட்டிருந்தது. தப்பியோடுவதற்கு ஏற்ற உடல் வலுவுடன் அவள் இருக்கவில்லை. இருந்தாலும் ஓடினாள்.

அடுத்த  தெருவுக்கு ஓடிவிட்டாள். தடியன்களும் விரட்டினார்கள். அடுத்தது ஒரு பாழடைந்த கட்டிடம். அதன் பின் ஒரு அரை மதில். அதனையும் தாண்டினாள். அது ஒரு ரயில் பாதை.

ரயில் பாதை வழியே ஓடினாள். சிறிது தூரத்தில் களைப்படைந்து விட்டாள். தண்டவாளத்துக்கு இடையில் நின்று கொண்டாள்.

தண்டவாளம் வழியே ஓடுவதா இல்லை தண்டவாளத்தை தாண்டி கடற்கரை ஓரமாக ஓடுவதா? முன்னால் பார்த்தாள். தூரத்தில் ஆள்நடமாட்டமே இல்லை. எனவே தண்டவாள வழியே ஓடுவதுதான் சரி. பின்னால் பார்த்தாள். தடியன்கள் 50 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் ஓடிய பின் கடற்கரை பகுதிக்கு ஓடித் தப்பும் நோக்கில் அடுத்த ரயில் பாதைக்கு தாவினாள்.

அவளது கெட்ட காலம். அந்த பாதையில் அப்போது வேகமாக வந்தது ருகுணு குமாரி.

ரூபினியும் ருகுணுகுமாரியும் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டனர்.

ரூபினி இரண்டானாள். ருகுணு குமாரிக்கு பாதிப்பில்லை. விபத்து மரணம் என்று சட்ட வைத்திய நிபுணரின் சான்றிதழ் கூறியது.மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபினியின் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது. நான் தப்பிப் போகிறேன். மகேசுடன் இணையப் போகிறேன். இம்முயற்சியில் எனது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுமானால் அடுத்த பிறவியில் பாம்பு போல் வந்து அப்பா ஜினதாஸ முதலாளி, அம்மா, பாட்டி, மாமா ஆகியோரை கொத்திக் கொல்லுவேன். இது நிச்சயம், நிச்சயம், நிச்சயம் என்று எழுதப்பட்டிருந்தது.

ரூபினி உயிரிழந்த அடுத்த மாதம் அவளது பாட்டிக்கு பாம்பு கடித்து விட்டது. சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பெரிதும் மிரண்டு போன ஜினதாஸ அந்த வீட்டை அப்படியே விட்டு விட்டு தூர இடத்துக்கு குடிபெயர்ந்தார். இப்போது அந்த இரட்டை மாடி வீடு பாழடைந்து கிடக்கிறது. மகேஸ் சில சமயங்களில் ரூபினி நினைவு  வரும்போது அங்கு வந்து செல்கிறான். ஒரு நாகப்பாம்பு அந்த வீட்டு வளவில் காணப்படுவதாக அக்கம் பக்கத்தவர்கள் கூறுகின்றனர்.

 நன்றி: வண்ண வானவில்

Saturday, June 1, 2013

லண்டன் டயறி

மரணமும் லண்டனில் EXPENSIVE ஆன விஷயம்தான்

 இளைய அப்துல்லாஹ்


லண்டனுக்கு வந்ததன் பின்பு நிறைய நாளாக மையத்துத் தொழுகைக்குப் போக எனக்கு நேரம் கிடைக்கவில்லை. நோன்பு நேரத்தில் பகல் வேளையில் பள்ளி வாசலுக்குப் போனபோது ஒரு மரணத் தொழுகைக்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

நானும் மகனும் மையத்துக்குப் பின்னால் அடக்கஸ்தலத்துக்குப் போனோம். முதன் முதலாக அன்றுதான் அடக்கஸ்த்தலத்துக்குப் போகிறேன் லண்டனில்.

கொழும்பு, கண்டியைப் போல அல்லது எங்களது கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களைப்போல அருகிலே மையத்தை அடக்கும் இடம் இல்லை. பெட்டியில் மையத்தை வைத்து காரில் கொண்டு போகவேண்டும்.

ஊரில் மாதிரி சந்தூக்கில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லும் மரண ஊர்வலங்கள்போல லண்டனில் செல்ல முடியாது. எல்லாம் காரில் கொண்டுதான் போகவேண்டும்.

நீண்ட தூரம் காரில் கொண்டு போய் நிறுத்தியதும் அந்த இடத்தைப் பார்த்த எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் அது ஒரு சேமக்காலை. கிறிஸ்தவர்களின் இறந்த உடலைப் புதைக்கும் இடம். கொஞ்ச தூரம்போக முஸ்லிம்களை அடக்கம் செய்யும் இடம் வந்தது. பரந்து விரிந்த சேமக்காலையில் ஒரு சிறிய பகுதியை முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்யக் கொடுத்திருக்கிறது கவுன்ஸில் (நகரசபை).

இங்கு லண்டனில் இருக்கும் பூமி முழுவதும் அரசாங்கத்துக்குச் சொந்தம். அதில் ஒவ்வொரு பகுதி கவுன்ஸிலுக்கும் அதன் பரிபாலனத்துக்கும் உரியது.

வீட்டுவரி, கடைவரி, நிலவரி என்று கவுன்ஸில் அறவிட்டு அந்தப் பணத்தை கவுன்ஸில் தனது எல்லைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்குப் பயன்படுத்தும்.

ஆகவே மையத்துப் பிட்டி நிலமும் கவுன்ஸிலுக்கு சொந்தமானது. நாங்கள் கொண்டுபோன மையத்துக்கு அடக்கவென்று ஆறு அடிநிலம் சரியாக இஸ்லாமிய விதிப்படி ஆழ அகலமாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

மையத்தை அந்தக் குழிக்குள் அப்படியே பெட்டியோடு வைத்தார்கள். எங்கள் ஊர்களில் பெட்டியோடு மையத்தை அடக்கம் செய்வதில்லை. மையத்தைத் தரையில் வைத்துவிட்டு குழிக்கு மேலால் பலகையைப் போட்டு அதற்கு மேலால்தான் மண்ணைப்போட்டு மூடுவோம்.

ஆனால் லண்டனில் அப்படிச் செய்ய கவுன்ஸிலும் சுகாதாரத்துறையும் விடமாட்டார்கள். சுகாதார மாசு ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். பெட்டியோடுதான் அடக்கம் செய்யவேண்டும். பேர்மிங்ஹாம் போன்ற இடங்களில் சில பகுதிகளில் இலங்கையில் உள்ளது போல மையத்தை அடக்க முடியும் என்று அதில் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்.

பெட்டியோடு அடக்குதல், பெட்டியில்லாமல் அடக்குதல் என்ற விடயத்தை ஏன் நான் இங்கு குறிப்பிடவேண்டும் என்றால்,இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி மரணித்த ஒருவருக்கான கேள்வி கணக்குகள் மரணக் குழியில் இருந்தே ஆரம்பிக்கின்றன என்பதாலாகும்.
அவரை மையத்தை எழுப்பி உட்காரவைத்தே கேள்வி கணக்குகள் நன்மை தீமை தொடர்பாக ஆரம்பிக்கப்படும் என்பதே இஸ்லாமிய மார்க்கம் சொல்லுகின்ற விடயம்.

ஆகவே இது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பெரிய விடயம்தான்.

விடயம் என்னவெனில் பள்ளி வாசலில் இருந்து மையத்து காரை ஓட்டுகின்றவரைப் பிடித்து விசாரித்தேன். ஒரு மரணத்துக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. ஏனெனில் நாங்களும் லண்டனில்தானே இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு.

'இரண்டாயிரம் பவுனட்;' என்றதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. தற்செயலாக இப்பொழுது என்னையோ அல்லது வீட்டில் யாரையாவதோ அடக்கம் செய்ய அவ்வளவு பணம் இல்லை என் கையில். யாராவது அனாதைகளை அடக்கம் செய்வதைப்போலத்தான் எங்களை அடக்கம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் மைய வாடிக்கு பிணத்தை எடுத்துக்கொண்டு போவதற்கே இரண்டாயிரம் பவுன் பணம் வேண்டும்!

ஏன் அவ்வளவு பணம் செலவாகிறது என்று அவரைக் கேட்டேன். மையவாடியில் ஆறு அடி நிலத்துக்கு கவுன்ஸில் கேட்கும் தொகை ஆயிரத்து ஐநூறு பவுன்கள். இதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும.; கொடுக்காவிட்டால் நிலம் தரமாட்டார்கள். கார், பெட்டி, மையத்தை அடக்கும் இடத்துக்குக் கொண்டு வருவது, குழி தோண்டுவது, மூடுவது என்று பள்ளி வாசலுக்கு ஐநூறு பவுன்ட் கொடுக்கவேண்டும். இரண்டு செலவுகளுமாகச் சேர்த்து இரண்டாயிரம் பவுனட்;. ஒரு மையத்தை அடக்கம் செய்ய செலவாகும் இந்தச் செலவு. தற்செயலாக இரண்டுபேர் ஒரு வீட்டில் மௌத்தாகினால் நாலாயிரம் பவுன்களாகிவிடும் என்று அவர் விளக்கமாகச் சொன்னார்.

எங்கு போவது இவ்வளவு காசுக்கு! இலங்கைக் காசுக்கு இரண்டாயிர பவுன் நாலு லட்சம்ரூபா. ஆண்டவனே, இப்படி ஒரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அந்த மையவாடியில் வைத்து பிரார்த்தனை செய்தேன்.

அடக்கம் செய்கின்ற செலவை எண்ணி லண்டனில் மரணமாகக்கூடாது இலங்கையில்தான் மரணிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மரணம்கூட பெரும் எக்ஸ்பன்ஸிவ் ஆக இருக்கிறது லண்டனில்.

லண்டனில் எல்லாமே இப்பொழுது பெரும் செலவானதாக மாறிக்கொண்டு வருகிறது தினமும் கம்பனிகள் தொழில் செய்வோர் எண்ணிக்கையை குறைத்து குறைத்து இப்பொழுது பல சொப்ட்வெயார் கம்பனிகள் ஆட்களை நிறுத்தியே விட்டார்கள். அதனால் இந்தியாவில் இருந்து இங்கு வந்த பலர் வேலை இல்லாமல் அலைந்து திரிகின்றனர்.

வேலைகேட்டு கடைகளுக்கும் போகமுடியாமல் இருக்கிறது. முந்தி என்றால் தமிழர்களின் பெற்றோல் ஸ்டேசன்கள் எப்பொழுதும் எங்களுக்காகத் திறந்தே இருக்கும். வேலைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அப்பொழுது. 90 களில் நாங்கள் இங்கு வந்தபொழுது அகதிகளுக்கும் சரி, சாதாரணமாக இங்கு வந்து வேலை செய்பவர்களுக்கும் சரி வேலை வாய்ப்பு இருந்தது. மொழி ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

மொழி தெரியாதவர்கள்கூட தமிழர்களின் கடைகளில் வேலை செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்பொழுது இன்சூரன்ஸ் நம்பர் இல்லாமல் வேலை செய்வதை எண்ணிப் பார்க்கவே முடியாது.

 ஒவ்வொரு கடைகள் அலுவலகங்கள் என்று இமிக்கிறேசன் ஒஃபிஸர்மார் ஓடித்தான் திரிகிறார்கள். திடீர் திடீர் என்று செக் பண்ண வருகின்றனர். கையில் எப்பொழுதும் சரியான ஆவணங்களை எல்லோரும் வைத்திருக்கவேண்டும். அல்லது வேலை கொடுப்போர் வேலை செய்வோர் எல்லோரும்பெரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்சூரன்ஸ் நம்பர்தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரி கட்டாமல் யாரும் வேலை செய்யமுடியாது லண்டனில்.வேர்க் பேர்மிட்டுடன் வருகிறவர்களுக்கும் பெரும் நெருக்கடி வந்துவிட்டது. இப்பொழுது அதாவது மூன்று வருடத்துக்கு முன்புபோல 5 வருடம் வேர்க் பேர்மிட் விசா கொடுக்கிறார்களில்லை. இரண்டு வருடம் மாத்திரமே விசா கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு கம்பனி வேர்க் பேர்மிட்டில் ஒருவரை இலங்கையில் இருந்து எடுப்பதானால் முதலில் கம்பனி, ஹோம் ஓஃபிஸில் றிஜிஸ்டர் பண்ண வேண்டும். அதற்குப் பிறகு யாருக்கு விசா கொடுக்கவேண்டும் என்று கம்பனி கேட்கிறதோ அவரின் எல்லா விபரங்களையும் அந்த நிறுவனமே சரி பார்க்க வேண்டும். முழுப் பொறுப்பும் நிறுவனத்துக்குரியது.

இதில் மயிர்போல சிறு பிழை நடந்தாலும் நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படி வேர்க் பேர்மிட்டில் விசாவில் வந்தவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யவேண்டும். 10 நாள் அவர் வேலைக்கு வராமல் விட்டால் ஹோம் ஓஃபிஸ்சுக்கு அறிவிக்கவேண்டும்.

முதல் என்றால் வேர்க் பேர்மிட்டில் ஐந்து வருடம் இருந்தால் பெர்மனண்ட் றெசிடன்ட் கொடுத்தார்கள். அதற்குப்பிறகு பிரிட்டிஸ் சிட்டிசன் எடுக்கலாம். இப்ப அப்படி இல்லை. ஸ்டூடன்ட் விசாவும் பெரும் சிக்கல்.

இதனை நான் சொல்லும்பொழுது இடியாப்பச் சிக்கல் மாதிரி உங்களுக்குத் தெரியுதல்லவா? ஆனால் அதைவிட சிக்கல் லண்டனில் இருக்கிறது.

லண்டனில் வாழ்வதும் எக்ஸ்பென்ஸிவ். மரணிப்பதும் எக்ஸ்பென்ஸிவ். ஆனால் லண்டன் ஆசை யாரைத்தான் விட்டது?

  நன்றி: வண்ண வானவில்