Saturday, May 4, 2013

ரேடியோ வீட்டுக்கு வந்த கதை

"வானொலி பெட்டிக்குள்  குள்ள மனிதர்கள் இருக்கிறார்களா என நோட்டம் விட்டேன்."


மணி  ஸ்ரீகாந்தன்

இன்று நம் வீடுகளில் கம்பியூட்டர் சிறிதும் பெரிதுமாக வந்து உட்கார்ந்து சண்டித்தனம் பண்ணுகிறது. 1940களின் கடைசியில் இந்த சண்டியன் வரிசையில் முதல் சண்டியன் நம் வீட்டுக்குள் புகுந்தான். அன்றைய மக்கள் அதை எப்படிப்பார்த்தார்கள், எப்படி வரவேற்றார்கள் என்பதை இச்சிறு கட்டுரைத் தொடர் சொல்கிறது. நீங்கள் ஐம்பதைத் தாண்டியவராக இருந்தால் உங்கள் ரேடியோ அனுபவங்களை இரை மீட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை ரேடியோ பெட்டிக்கு சாவு மணி அடித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் நடுவீட்டில் சண்டியராக இருந்து வானொலி பெட்டிகள் ஆட்டிப்படைத்து வந்தன. இன்றோ ஒவ்வொரு வீட்டு பரணிலும், மூலை முடுக்குகளிலும் கவனிப்பாரற்று, தூசி படிந்து கிடக்கின்றன. பழைய ரேடியோ திருத்தும் கடைகளுக்கு சென்று பார்த்தால் நூற்றுக்கணக்கான பழைய ரேடியோக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

"அந்தக்காலத்தில் ஒரு வீட்டுக்கு ரேடியோ பெட்டி வந்துவிட்டால் கூடவே டெய்லரும் வந்திடுவார். ரேடியோ பெட்டியை அளவெடுத்து அதுக்கு ஒரு சிற்றாடை தைத்து கொடுக்க. அதை ரேடியோவிற்கு அணிவித்து ஜம்முன்னு நடுவீட்டில்  உட்கார வைப்பாங்க" என்று சொல்கிறார் மருதமுத்து. றைகம் தோட்டத்தை சேர்ந்த  மருதமுத்துக்கு இப்போ 70 வயதாகிறது. அந்தக் காலத்தில் றைகம் தோட்டத்திற்கு ரேடியோவை கொண்டு வந்தவர்களில் முதலாம் இடம் இவர்களின் குடும்பத்துக்குத்தானாம்.

ஆரம்பத்தில் றைகம் தோட்டத்தின் இன்ஜின் டிரைவர் பீட்டர் சிங்கம் வீட்டில்தான் ரேடியோ இருந்தது. அந்த சமயத்தில்தான் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ரேடியோவில் ஒலிபரப்பினாங்க... றைகம் தோட்டத்து சனமே இன்ஜின் டிரைவர் வீட்டை முற்றுகை இட்ட மாதிரிதான் நிறைஞ்சு இருந்தாங்க... பாபுஜி.... பாபுஜின்னு டெல்லியில் மக்கள் போடுற சத்தத்தை வானொலியில் கேட்டபோது எல்லோருக்கும் ஆச்சர்யம்... சிலையாகிப் போனாங்க...

சில மாதங்கள் கழித்து என் மச்சான் செல்லையா டிரைவர் ஒரு ரேடியோ வாங்க முடிவு செய்தார்... எனக்கு ஒரே சந்தோசம். எங்க வீட்டுக்கு ரேடியோ வரப்போற கதையை நான் பலரிடம் பரப்பி விட்டேன். அதனால் எல்லோருடைய பார்வையும் எங்க வீட்டு மீதுதான் இருந்தது. என் மச்சான் சொன்னபடியே இங்கிரிய எட்மன்  ஸ்டோர்சில் 300 ரூபாய்க்கு பிலிப்ஸ் கம்பனி ரேடியோவை வாங்கி வந்தார்... அந்தக் காலத்தில் ரேடியோவிற்கு அண்டனா (அதை அப்போது ஏரியல்) கட்டினால் தான் வேலை செய்யும்.

பெரிய மூங்கில்கள் கொண்டு வந்து நட்டு அதில் ஒரு வயரை கட்டி அதன் மறுமுனையை எதிர்புரத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இணைத்துக்கட்டி அந்த வயரின் நடுமத்தியில் மற்றொரு வயரை இணைத்து அந்த வயரை ரேடியோவில் இணைக்கவேண்டும். எங்க வீட்டு ரேடியோவிற்கு அண்டனா கட்ட ஆள் ஆளுக்கு போட்டி போட்டுக்கொண்டு மூங்கில் வெட்டி வந்து கட்டினாங்க

றைகமை தோட்டத் தொழிலாளர் வீட்டில் முதல் ரேடியோ என்பதால் எங்க வீட்டு ரேடியோவுக்கு பெரிய மவுசு. ஊர் சனமே வீட்டுக்கு முன்னால் நின்று அதில் வரப்போகும் சத்தத்திற்காக காத்திருந்தார்கள். அது ஒரு பெரிய ரேடியோ. இப்போ இருக்கிற டீவி மாதிரி இருந்தது. ரேடியோவை என் மச்சான் ஒன் பண்ணி மீட்டரை கரகரவென்று ஓசை வர திருப்பி மீட்டரை பிடித்தார். ரேடியோவில் பாட்டு சத்தம் கேட்டதும் எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். ஆனந்தம். அந்த மாதம் முழுவதும் றைகம் தோட்டதில் எல்லா இடங்களிலும் எங்க வீட்டு ரேடியோவை பற்றிய பேச்சுதான். ரேடியோவிற்கு சாமுவேல் கங்காணிதான் சட்டை தைத்து போட்டார்!

அப்புறம் எங்க மச்சான் செல்லையா ஒரு விசயத்தையும் சொன்னார். “இந்தாப் பாருங்கப்பா. இந்த ரேடியோவில் குள்ள மனிதர்கள் உள்ள இருக்காங்க. அதனால் நான் வீட்டுல இல்லாத சமயத்தில் ;யாரும் ரேடியோவை தொட்டுறாதீங்க. அப்படி தொட்டுட்டா உங்களை அடிச்சிடுவாங்க" என்று அவர் சொல்ல எனக்கு பயமா போய்விட்டது.

அதனால் நான் ரேடியோ இருக்கும் அறைக்குள் நுழைய மாட்டேன். ரொம்ப தூரத்தில் இருந்து அந்தக் குள்ள மனிதர்கள் வெளியே வருகிறார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தேன். கடைசி வரைக்கும் அவர்கள் வெளியே வரவேயில்லை. பிறகு நான் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் மச்சான் செல்லையா ரேடியோவை சின்னப் பசங்க உடைச்சிடாம பாதுகாக்கத்தான் அப்படி ஒரு பொய்யை சொன்னார் என்பதை புரிந்துக் கொண்டேன்.No comments:

Post a Comment