Saturday, April 27, 2013

ஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…

'தீ' யில் நடிக்க வந்த அந்த பரட்டைத் தலை மனிதன்...

சந்திப்பு: மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை சிங்களத் திரைப்படத் துறையில் சுடர்விட்டுப் பிரகாசித்த தமிழர்களில் வாமதேவன் முக்கியமானவர். 1957 இல் ‘வனலிய’ என்ற சிங்களத் திரைப்படத்தில் உதவி கமராமேனாக தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த வாமதேவன், ஒளிப்பதிவாளராக, ஒளிப்பதிவு இயக்குநராக, வெளிநாட்டு படங்களில் உதவி ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு இயக்குநராக பணிபுரிந்து, முன்னணி ஒளிப்பதிவாளராக பெயரெடுத்தவர். 1996 வரை சிங்களத் திரையுலகில் பிரகாசித்தவர். மொத்தம் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

1952இல் வெளியான எலிபண்ட் போய், 1959இல் வெளியான ‘த்ரீ யெலோ தெட்ஸ்’ ஆகிய படங்களில் பணியாற்றிய இவருக்கு, காமினி பொன்சேகாவின் ‘ரம்பேஜ்’, ‘கொடிவல்கய’ (1982), நொமியென் மினிஸ்சு (1995) ஆகிய படங்கள் புகழ் சேர்த்தவற்றில் சில. சிங்களத் திரையுலகில் வாமதேவன் ஒரு சகாப்தம்.

  “பாட புத்தகங்களுக்கு பதிலாக சினிமா புத்தகங்களை பையில் வைத்துக்கொண்டு பாடசாலை செல்வதுதான் என் வழக்கம். பாடம் நடைபெறும் நேரத்தில் என் கையில் பேசும்படம் சினிமா சஞ்சிகை தான் இருக்கும்.

என்னை தட்டிக் கேட்கவோ, தண்டிக்கவோ அந்தப் பாடசாலையில் யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. படிக்கிற வயதில் நான் தனிக்காட்டு ராஜாவாக திரிந்த காலம் அது.
யாழ்ப்பாணத்தில் நான் கல்வி கற்க ஆரம்பித்த போதே என் சேட்டைகளும் தொடங்கிவிட்டன. என் சேட்டைகளை சகித்துக்கொள்ள முடியாத சில பள்ளி நிர்வாகங்கள் என்னை பாடசாலையிலிருந்து வெளியேற்றின.

இதனால் பத்தாம் வகுப்புக்குள் நான் பிரவேசம் செய்யும் போது நான் எட்டு பாடசாலைகளில் படித்திருந்தேன். எப்படி என் சாதனை? அதாவது அவ்வளவு வெறுக்கப்படும் மாணவனாக நான் இருந்திருக்கிறேன்!

ஒருமுறை வகுப்பறையில் சினிமா புத்தகத்தில் நான் மூழ்கியிருந்தேன். என்னை அழைத்த ஆறுமுகம் சேர் ‘ஏன்டா இப்படி சினிமா புத்தகங்களை பார்த்து கெட்டுப் போற? சினிமா உனக்கு சோறு போடாது! உன் வாழ்க்கைக்கு அடித்தளமா அமையப் போவது கல்விதான்; சினிமாவல்ல. நீயும் கெட்டு மற்றவர்களையும் கெட்டுப் போகச் செய்கிறாயே!

இதற்கு பதிலாக எங்காவது வெளியில் போய் வேலை செய்யலாம்... குடும்பத்திற்காகவது நன்மையாக இருக்கும்’ என்று அட்வைஸ் செய்தார்’ என்று தனது வீறாப்பான மாணவ பருவத்தை மீட்டுகிறார் வாமதேவன்.

அச்சுவேலியில் வைரமுத்து - செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாக பிறந்தவர் வாமதேவன்.

ஆம்பக் கல்வி சங்கானை தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பம். பாடசாலையில் எந்த ஆசிரியருக்கும் இவரைப் பிடிக்காது. அந்தளவுக்கு இவர் மாணவ சண்டியனாக இருந்திருக்கிறார்.

“வெள்ளைச் சட்டையுடன் வரும் ஆசிரியர்கள் வகுப்பை விட்டு வெளியேறிச் செல்லும் போது தீந்தைப் பேனையின் மூடியை கழற்றி ஆசிரியரின் முதுகுப்புறமாக விசிறியடிப்பேன். மை கறைபட்டது ஆசிரியர்களுக்குத் தெரியாது.

1957ல் சிலோன் ஸ்டூடியோவில் பிடிக்கப்பட்ட இப்படத்தில்
பிரேம்நாத் மொராயஸ், வானகுரு, மல்லிகா காந்தாவெல,
கிருஷ்ணா ரஜனி, டி. வை. எம். சாமி (ஒளிப்பதிவாளர்),
டி கே. பாபு (ஒப்பனையாளர்), ரூபசேன, ஜின்னாபாபுஜி (இயக்குநர்)
 ஏ. டி. அரஸ் (உதவி இயக்குநர்),
 வீ. வாமதேவன் உதவி ஒளிப்பதிவாளர்.
சக மாணவர்கள் இதை கவனித்தாலும் காணாதவாறு இருந்து விடுவார்கள். சண்டியனான என்னுடன் பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

ஒருமுறை ஆர்ட் மாஸ்டர் என்னை பிரம்பால் தலையில் அடித்துவிட்டார். எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. தாயில்லாத பிள்ளையைத் தான் தலையில் அடிப்பார்கள்’ என்ற பழமொழி எங்க ஊரில் ரொம்பவும் பிரசித்தம்.

அதனால் வந்த கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ட் மாஸ்டரின் சட்டையை பிடித்து உலுக்கி கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு அடுத்த நொடியே மதில்மேல் ஏறிக் குதித்து வீட்டுக்கு ஓடிவிட்டேன். வீட்டில் நடந்ததை சொன்னேன். வீட்டில் உள்ளோருக்கு ஆர்ட் மாஸ்டர் மீது தான் ஆத்திரம்.

‘எப்படி என் பிள்ளையை தலையில் அடிக்கலாம் என்ற வாதமே மேலோங்கியது.

எங்கள் ஊரில் எனது சித்தப்பா தங்கராஜா பெரிய செல்வாக்கான மனிதர். கவர்னர் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பார்கள். அவருக்கும் ஆர்ட் மாஸ்டர் மீது பயங்கர ஆத்திரம் எகிறியது.

ஸ்கூல் முடிந்து அவன் வரட்டும் என்று கத்திக்கொண்டிருந்தார். விசயம் பாடசாலைக்கு தெரியவர பதறியடித்துக் கொண்டு எனது வீட்டுக்கு ஓடி வந்தார் பாடசாலை அதிபர். எனது சித்தப்பாவை சமாதானப்படுத்தி நிலைமையை சமாளித்தார். அதன் பிறகு அந்தப் பாடசாலையில் என்னை அந்த வாத்தியார் திரும்பியும் பார்ப்பதில்லை.

ருக்மணிதேவியுடன்...
என் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாடசாலையில்தான் அப்படியென்றால் வீட்டிலும் எனக்கு நல்ல பெயர் கிடையாது. இரவு காட்சி சினிமா பார்க்கப் போவதென்றால் நான் படுக்கையில் படுத்திருப்பது போல தலையணை மீது போர்வையை போர்த்தி சரிசெய்து விட்டு யாருக்கும் தெரியாமல் போய்விடுவேன்.

அக்காலத்தில் வாடகை சைக்கிள் டைனமோ வெளிச்சம் இல்லாமல் 50 சதம் என்றும் விளக்கு வெளிச்சம் உள்ளது 75 சதம் என்பதாகக் கிடைக்கும். 50 சதம் கொடுத்து வெளிச்ச வசதி இல்லாத வாடகை சைக்கிளை வாங்கி ஏற்கனவே திருடி வைத்திருக்கும் லைட்டை அந்த சைக்கிளில் பொருத்தி ஓட்டிச் செல்வேன்.

லைட் இல்லாமல் சைக்கிளில் போனால் பொலிசில் பிடிப்பார்கள். தவராஜா, தங்கராஜா, கிருஷ்ணலிங்கம் ஆகியோரும் என்னோடு சைக்கிளில் வருவார்கள். அச்சுவேலியிலிருந்து நெல்லியடிக்கு ஆறு கிலோ மீட்டர். அங்கே மகாத்மா தியேட்டர் மற்றும் லக்ஷ்மி தியேட்டரில் சினிமா பார்ப்போம்.

அதுதவிர யாழ்ப்பாணம் வெலிங்டன், வின்சர், மனோஹரா தியேட்டர்களுக்குச் செல்வோம். அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 12 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். நான் எம். ஜி. ஆர். பைத்தியம்.

தலைவர் படத்தை முதல்நாள் ரிலீஸ் அன்றே பார்த்துவிடுவேன். பார்க்கக் கிடைக்காவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும்.

சினிமாவின் பாதிப்பு சின்ன வயசிலேயே என்னுள் வளரத் தொடங்கிவிட்டது. அப்போது நெல்லியடி மகாத்மா தியேட்டரில் துளிவிஷம் என்ற திரைப்படத்தை காண்பித்தார்கள்.

அதில் முக்கமாலா என்ற தெலுங்கு நடிகர் நடித்திருந்தார். ஒரு காட்சியில் கண்ணாடி உடைத்துக் கொண்டு வெளியே வந்து குதிரையில் அமர்ந்து சென்று வருவது போன்று ஒரு காட்சி வரும். இந்த காட்சிக்காகவே இந்தப் படத்தை நான் பல தடவை பார்த்திருக்கிறேன்.

எம். மஸ்தான் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். அவரின் தீவிர ரசிகனாக நான் மாறுவதற்கு இப்படம் வித்திட்டது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது என்று சொன்னேன்... ஆனால் மிஸ் விஸ்வலிங்கம் டீச்சருக்கு என்மீது ரொம்பப் பிரியம். எனக்கும் அவள்மீது இஷ்டம். டீச்சர் வீதியில் போனால் தங்க ரதம் ஆடி அசைந்து போவது போல் இருக்கும்.

எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். அந்த டீச்சருக்கு வயது ஒரு இருபதைத் தாண்டியிருக்கும். டீச்சரை யாராவது ஏதாவது சொன்னா அவர்களை அடிக்கவே போயிடுவேன். அந்தளவுக்கு ஒரு அன்பு. அதற்கு என்ன பெயரென்றே எனக்கு இன்றைக்கு வரைக்கும் தெரியாது.’ என்று சொல்லும் வாமதேவன் நண்பர்களோடு செம்மீன் பிடித்த கதையை சுவை பட இப்படிச் சொல்கிறார்.

தொண்டமானாறு மன்னார் கடலோடு கலக்கும் இடத்தை வள்ளக்கடல் என்று சொல்வார்கள். அங்கே முழங்காலளவு தான் தண்ணீர் இருக்கும். செம்மீன் பிடிப்பவர்கள் மாலையானதும் ஈக்கில்களால் செய்யப்பட்ட கூடையை தண்ணீரில் கவிழ்த்து வைத்துவிட்டு சென்றிருப்பார்கள்.

அதற்குள்  மீன் நுழைந்தால் மறுபடியும் வெளியே வர முடியாது. எனவே மீன்பிடிப்பவர்கள் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கூடையை எடுப்பார்கள் நானும் எனது நண்பர்களும் நள்ளிரவே வள்ளக் கடலுக்கு சென்று கூடையில் சிக்கியிருக்கும் மீன்களை பிடித்து எடுத்துச் சென்று விடுவோம். பக்கத்து தோட்டத்திலிருக்கும் மரவள்ளிக் கிழக்கை தோண்டியெடுத்து அவித்து மீனோடு சாப்பிடுவோம்.

இதில் என்ன வேடிக்கை என்றால், மரவள்ளி கிழங்கு திருடும் போது கூட வரும் நண்பர்களுக்குத் தெரியாமல் அவர்களின் தோட்டங்களிலேயே திருடி வந்து சம்பந்தப்பட்ட நண்பர்களோடே உட்கார்ந்து சாப்பிடுவதுதான்.

அடுத்த நாள் அவர்களே வந்து, ‘மச்சான், யாரோ என் வீட்டுத் தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கை திருடி இருக்காங்கடா என்று என்னிடமே சொல்வார்கள். நான் தெரியாத மாதிரி இருந்து விடுவேன்’ என்று தான் அடித்த கூத்துக்களை மெய்சிலிர்க்க சொல்லும் வாமதேவன் கொழும்பிற்கு வந்த கதையைக் கொஞ்சம் கேட்போம்.

‘எனது அப்பாவின் ஊர் சங்கானை. அங்கே சண்டித்துரை என்ற ஒரு சண்டியர் இருந்தார். அடிக்கடி சிறைக்கு சென்று வருவதுதான் அவர் வேலை. அம்மா என்னை திட்டும் போது ‘நீ ஒன்றுக்கும் உருப்பட மாட்ட... அந்த சண்டித்துரை மாதிரி நீயும் வருவாய்.

கடைசியில் ஜெயில்தான் உன் காலம் கழியும்’ என்று சொல்வார். நான் கொழும்பு வரும்போது அம்மா எனக்கு கொடுத்த ஆசீர்வாதமும் இதுதான்.

நான் அச்சுவேலியிலிருந்து கொழும்பு வந்தபோது ரொம்பவும் சந்தோசப்பட்டது எனது பாடசாலை ஆசிரியர்கள் தான். விஸ்வலிங்கம் டீச்சருக்கு கவலைதான். ஆனால் அவளின் முயற்சியில்தான் நான் கொழும்பு வந்தேன்.

வரும்போது எனது உறவினரான பாருபிள்ளைதான் என் கை செலவுக்கு பதினைந்து ரூபா பணம் கொடுத்து, ‘கொழும்புக்கு போகும் நீ அங்க போய் இங்க மாதிரி ஆடாதடா. பத்திரமா இரு’ என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

கொழும்பில் விஸ்வலிங்கத்தின் சகோதரர் புவனசுந்தரத்தின் வீட்டில்தான் இருந்தேன். இந்தியாவிற்கு சென்று சினிமா ஒளிப்பதிவு பற்றி கற்று வரவேண்டும் என்பதுதான் என் இலட்சியமாக இருந்தது. கொழும்பில் மெய்கண்டான் பிரஸ், சுதந்திரன் பத்திரிகை போன்றவற்றில் வேலைசெய்தேன்.

அப்போதுதான் புதுச் செட்டி வீதியில் இருந்த சுவைர் அமீர் எனக்கு நண்பரானார். அவர் கலையார்வம் கொண்டவர்.

நாடக தயாரிப்பாளராகவும் இருந்தார். அவருடன் நாடகம் பார்க்கப் போவேன்.

பிறகு சிலோன் தியேட்டரில் வேலை செய்த மகேந்திரன் ஊடாக சிலோன் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளர் சாமியின் உதவியாளராக வேலை கிடைத்தது. சாமி ஒரு இந்தியர் ரொம்பவும் கண்டிப்பானவர்.

அவர் வாயிலிருந்து எப்போதும் கெட்ட வார்த்தைதான் வரும். யாராவது மரியாதையாக திட்டினாலே ஆத்திரப்பட்டு அடிக்கப் போகும் நான் சாமி என்னை தரக்குறைவாக பேசும் போதெல்லாம் தாங்கிக்கொண்டேன். வேலையை கற்றுக்கொள்ள வேண்டுமே என்ற வெறிதான் என்னுள் இருந்தது.

ஒரு நாள் நான் டிப்டொப்பாக ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு போனேன். என்னைக் கவனித்த சாமி ‘டேய் வாடா இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்க... பொண்ணு பார்க்க வந்தியா? என்று நக்கலாகக் கேட்டார்.

அதன்பின் அவர் செய்த காரியம் என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. கீழே கிடந்த சேற்றை அள்ளி என் சட்டையில் தேய்த்தார். என் சட்டையை அலங்கோலப்படுத்திய பின்னர் ‘இப்போ போய் வேலை செய்’ என்று துரத்தினார். அப்படிப் பட்ட ஒரு மோசமான மனிதர் அவர்.

அதன்பிறகு இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்றது. தூக்கமே இல்லை. மூன்றாவது நாள் சாமியிடம் சென்று ‘மூன்று நாள் தூக்கம் இல்ல சேர்... எனக்கு நாளை மட்டும் ஒரு நாள் லீவு தாங்க சேர்!’ என்று கெஞ்சினேன்.

சாமி சிரித்துக்கொண்டே ‘அடடா! மறந்தே போச்சே எனக்கு! மூன்று நாளா கஷ்டப்பட்டு வேலை செய்திருக்க... பாவம் நீ! உனக்கு லீவு தராம வேறு யாருக்குடா தருவேன்?’ என்று அவர் ஆரம்பித்த போது நான் உச்சி குளிர்ந்து போனேன். சாமி தொடர் ந்தார்.

‘அதனால் நீ இப்பவே போ... ஆனால் இனி திரும்ப வேலைக்கு வராதே!’ என்று சாமி முடித்தபோது நான் ஆடிப்போய்விட்டேன்.
‘தீ’படப்பிடிப்பில் ரஜினி,(கொழும்பு கொம்பனி வீதியில்)
பிறகென்ன! மறுபடியும் தூக்கமில்லாமல் வேலை செய்யத் தொடங்கினேன். சாமி எப்போ லீவு தருவாரோ அப்போதுதான் லீவு கிடைக்கும். அதன் பிறகு லெனின் மொறாயஸ் எங்களோடு வந்து இணைந்து கொண்டார்! என்று தமது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தை விபரித்த வாமதேவனும் காமினி பொன்சேகாவும் நல்ல நண்பர்களாம்

‘காமினியின் பெரும்பாலான படங்களுக்கு நான்தான் கெமராமேனாக வேலை செய்திருக்கிறேன். காமினியும் நானும் இணைந்து வேலைசெய்த ‘நொமியன மினுசுன்’ படம் பற்றி சொல்லியேயாக வேண்டும்.

இராணுவ அதிகாரி வேடத்தில் இன்றைய ஜனாதிபதி நடித்தார். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமினி என்னிடம், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆமி டிரஸ் தைக்க வேண்டும் என்றும் அளவெடுத்துக் கொண்டு வரும்படியும் என்னிடம் சொன்னார்.

நான் ஒரு டெய்லரை அழைத்துக்கொண்டு அவரை அளவெடுத்துக் கொண்டு வந்தேன். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் நான் அவரை சந்தித்தேன். அவர் நடித்த காட்சிகளை ஒன்று இரண்டு டேக்குகளிலேயே ஓகே செய்தோம். அந்தளவுக்கு திறமையான கஞைராக அவர் இருந்தார்.

கூச்சமில்லாமல் கெமராவுக்கு முகம் கொடுத்தார். அவர் கெமராவுக்கு முன்னால் நின்ற போது நடிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு கலைஞனை பார்ப்பது மாதிரி இருந்தது.

சிறந்த நடிகராக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு நல்ல தலைவனாக வந்திருக்கிறார். அவர் ஜனாதிபதியான பிறகு நான் அவரை சந்திக்கவில்லை. எனக்கு இன்றும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.’

‘நூற்றுக்கணக்கான சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய வாமதேவன் தமிழில் வி. பி. கணேசன் நடித்த ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் மட்டுமே ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

சில தமிழ்ப் படங்கள் உருவாகவும் இவர் காரணமாக இருந்திருக்கிறார். ரஜினி நடிப்பில் இலங்கையில் தயாரான ‘தீ’ படம் பற்றிய அவரது அனுபவம் அலாதியானது.

ஒருநாள் மகாராஜா, ராஜமகேந்திரன், காமினி பொன்சேகா ஆகியோருடன் நான் பேசிக்கொண்டிருந்த போது நீங்கள் ஒரு தமிழ் படம் எடுத்தால் என்ன என்று கேட்டேன். அதை ராஜா மகேந்திரன் ஏற்றுக்கொண்டார். செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில்தான் ‘தீ’ பட த்தை எடுக்க முன்வந்தார்.

படப்பிடிப்பு தொடங்கியதும், தீ பட கதாநாயகனான ரஜினியை நான் அப்போதுதான் பார்த்தேன். ஒரு ஒல்லியான கரிய உருவம், எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலை, சிகரட் புகைத்து வெள்ளைபடிந்துபோன உதடு... இவரா ஹீரோ என்று வியந்தேன்.

அவரைப் பார்த்து நம்பிக்கை இழந்துபோன நான் படத்திற்கு பெரிதாக செலவு செய்யாதீர்கள் என்று மகாராஜாவிடம் அறிவுரை கூறிவிட்டு வந்துவிட்டேன். ரஜினியுடன் நான் பேசவில்லை.

அப்போது நானும் இலங்கை சிங்கள படவுலகில் புகழின் உச்சத்தில் இருந்த நேரம். அதனால் ரஜினி எனக்கு பெரிய ஆளாகப் படவில்லை.

ஆனால் இன்று அவர் எங்கேயோபோய்விட் டார்’ என்று சொல்லும் வாமதேவன், வத்தளை விஜயா ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்த போது பாலுமகேந்திரா என்ற ஒரு பையனும் தனக்கு உதவியாளராக வேலை செய்தான் என்றும் சொல்கிறார்.

‘பிறகு அவன் இந்தியாவில் உள்ள புனே திரைப்படக் கல்லூரிக்கு படிக்கச் சென்று மறுபடியும் விஜயா ஸ்டியோவிற்கு வந்தான். இங்கே சினிமாவில் அவருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. அவன் இந்தியாவிற்கு சென்றுவிட்டான். அதன்பிறகு அந்தப் பையன் தான் தமிழ்த் திரையுலகில் பெரியளவில் பேசப்படுகின்ற பாலு மகேந்திராவானான்...’ என்று கூறுகிறார் வாமதேவன்.

காதல் உங்கள் வாழ்வில் குறுக்கிடவில்லையா? என்று அவரிடம் கேட்டோம்.

‘நான் பூநகரியில் படித்த போது டிப்டொப்பாக டிரஸ் அணிந்து பாடசாலைக்கு செல்வேன். மற்ற பையன்கள் எல்லாம் ஒரு மாதிரியா தான் இருப்பாங்க. அந்த பாடசாலையில் நான்தான் ஹீரோ.

அங்கே இருந்த ஒரு மாணவியின் மேல் எனக்கு காதல்பிறந்தது. ஆனால் அதை சொல்லத்தெரியாத வயது... எப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை... ஆனால் சிறிது காலத்திலேயே அந்தப் பாடசாலையை விட்டு நான் விலகிச் சென்றுவிட்டேன். அதோடு அவளையும் பார்க்க முடியாமல் போய் விட்டது.

ஆனால் என் மனதை விட்டு அவள் ஞாபகங்கள் மறையவில்லை. இந்த சம்பவத்தை என் அன்புக்குரிய ஆசிரியை விஸ்வலிங்கத்திடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு ஆமர் வீதியில் நான் தங்கியிருந்த போது ஒரு நாள் காலை வேலையில் என் நண்பர்கள் என்னை அவசரமாக எழுப்பி ‘டேய் மச்சான் ரோட்டுல சரோஜாதேவி ஸ்கூலுக்கு போகுது வந்து பாருடா...’ என்றார்கள்.

‘சும்மா இருங்கடா!’ என்று நான் தூங்கிவிட்டேன் அடுத்த நாளும் நண்பர்கள் என்னை எழுப்பி ‘ஓடி வாடா’ சரோஜாதேவி வருகிறது’ என்றார்கள். நானும் போனால்போகிறது என்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நான் அவளை பார்க்கும் போது அவள் என்னைக் கடந்து சென்று விட்டாள்.

அவளின் பின்னழகுதான் தெரிந்தது- நீளமான கூந்தல் ஆடி அசைந்து சென்றதைப் பார்த்ததுமே அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் கிளர்ந்தெழுந்தது. அடுத்தநாள் காலையிலேயே வீட்டு வாசலில் நின்று அவள் வருகிறாளா என்று பார்த்தேன். வந்தாள். நண்பர்கள் சொன்னது உண்மைதான் அவள் சரோஜாதேவிதான். அதன் பிறகு விடுவேனா! நான் வீசிய வலையில் வசமாக அந்த மீன் மாட்டிக்கொள்ள என் காதல் கல்யாணத்தில் முடிந்தது. காமினி என்னை எப்போது பார்த்தாலும் ‘வாமா ஸ்கூல் யுனிபோம் என்றால் விடமாட்டான் என்பார்’ என்று தமது காதல் அனுபவங்களை இனிக்க இனிக்கச் சொன்னார்.

வாழ்க்கையில் எதையாவது இழந்திருக்கிறீர்களா? என்று கேட்டதும் ‘செல்வத்தை’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். வாழ்க்கையை பற்றி சில வார்த்தைகள் கேட்டோம்.

‘வாழ்க்கை வாழ்வதற்கே. மேடு, பள்ளம் உள்ள ரோடு மாதிரிதான் வாழ்க்கை துக்கம், சந்தோசம் என்றும் இரண்டும் மாறி மாறி வரும். ஆனால் நான் வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோசமாக இருந்திருக்கிறேன்.

வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன். வாழ்க்கை மிக அழகான அனுபவம். அதை அனுபவிக்க தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறி முடித்தார் ஒளிப்பதிவாளர் வாமதேவன்.

No comments:

Post a Comment