Thursday, April 25, 2013

இலக்கிய ஆர்வலர் எஸ்.ராமனின் ஞாபக வீதியில்…

"எனது மொழி ஆர்வத்திற்கு வித்திட்ட திராவிடக் கழகம்''


 நேரில்: மணி ஸ்ரீகாந்தன்

இலக்கிய வட்டத்தில் ராமனுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அநேக இலக்கிய அன்பர்களுக்கு இவரைத் தெரிகிறது. இலக்கிய உலகில் இவர் ஒன்றும் பெரிய படைப்புகளைத் தரவில்லைதான். ஆனாலும் பேங்ஷால் வீதியில் உள்ள ‘கோல்டன் கபே’யில் பெயருக்கு தகுந்தாற் போலவே நாவுக்கு ருசியாக உணவையும், அறிவுக்கு தீனியையும் வழங்கி வருகிறார். இவர் தொகுத்தெழுதிய சிதறிய முத்துக்கள், பொன் மொழிகளில் பெண்மணிகள் உள்ளிட்ட இரண்டு நூல்களையும் அவரின் உணவகத்தில் விற்பனைக்கு வைத்திருக்கிறார். படிப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. வெறும் உணவகத்தின் உரிமையாளராக மாத்திரமல்ல, இந்த நிறுவனத்திலிருந்து கொண்டே பல நல்லிதயங்களின் நட்பையும் பெற்று, அதைச் சிறப்பாகவும் பாதுகாத்து வருகிறார். அந்திசாயும் ஒரு மாலைப் பொழுதில் அவரின் அந்தக்கால அனுபவங்களை எம்மோடு இப்படி பகிர்ந்து கொள்கிறார்.

படம் பார்ப்பதென்றால் நண்பர்களுடன் ஒரு கூட்டமாகத்தான் வருவோம். எனக்கு பிடித்த நடிகர் எஸ். எஸ். கொக்கோ, அவர் மாதிரி நானும் வரவேண்டும் என்றுதான் சின்ன வயதிலே ஆசைப்பட்டேன்.
டிக்கெட் விலை ஐந்து பைசாதான். ஒரே சமமான மண் தரையில் அமர்ந்திருக்கும் போது முன்னாடி அமர்ந்திருப்பவர் எங்களை மறைத்துக் கொண்டிருப்பார். அதற்கு நாங்கள் ஒரு வேலை செய்வோம். மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து கொள்வோம். இப்போது நாங்கள் எங்கள் பின்னாடி அமர்ந்திருப்பவர்களுக்கு பிரச்சினையாக இருப்போம். அதற்கு பின்னாடி
அமர்ந்திருப்பவர்கள் ஒரு வேலை செய்வார்கள். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் எங்களை நாங்கள் மறந்திருக்கும் அந்த நேரத்தில் எங்களின் மணல் குவியலை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னாலிருந்து பறித்துவிட நாங்கள் அப்படியே பழையபடி கீழே சரிந்து விடுவோம். இந்த விசயம் தரையில் அமர்ந்து படம் பார்த்தவர்களுக்கு புரியும் என்று சிரிக்கிறார் ராமன். தனது பூர்வீகம் பற்றி ராமன் கூறும்போது,

‘திருநெல்வேலிதான் எனது சொந்த ஊர். அங்கே மூலைக்கரைப்பட்டி என்ற ஒரு பின்தங்கிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எனது அப்பாவின் பெயர் சங்கர நாராயண ரெட்டியார். அம்மா ஆளம்மாள். என் அப்பா நல்ல உயரம் முறுக்கு மீசை வைத்து ரொம்பவும் கம்பீரமாக இருப்பார். கட்டபொம்மனின் மண்தானே. அதனால் அந்த மண்ணின் வீரம் என் அப்பாவின் தோற்றத்திலும் அப்படியே இருந்தது. ரொம்பவும் வறுமையான குடும்பம் எங்களுடையது.
அப்பா சமையல்காரராக வேலை செய்தார். இலங்கையின் ரூபா அப்போ ரொம்ப பெறுமதியாக இருந்தது. இலங்கை ஒரு ரூபாய்க்கு இந்தியாவில் இரண்டு ரூபாய் தந்தார்களாம். அதனால் அப்பா இலங்கையில்தான் வேலை செய்தார். வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலிக்கு வருவார். அவர் வரும்போது இலங்கையிலிருந்து பிஸ்கட் வாங்கி வருவார். அது ரொம்பவும் ருஷியாக இருக்கும். அப்பா கொண்டு வரும் அந்த பிஸ்கட்டுகளுக்காக நாங்கள் அப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருப்போம். நான் படித்தது குறைவுதான். பகுத்தறிவுதான் அதிகம். மூலைக்கரை ஆரம்ப பாடசாலை எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் இருந்தது. முதல் நாள் ஸ்கூலுக்கு என்னை அம்மாதான் அழைத்துக் கொண்டு சென்றார். எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரை எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆரம்பத்தில் எழுத்தாணியை கொண்டு ஓலையில்தான் எழுதி படித்தேன். அது மட்டும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது.

மனைவி சரோஜாவுடன் ராமன்.
எங்கள் ஊரைச் சேர்ந்த வேலு, கருப்பையா ஆகியோரும் அந்த பள்ளியில் படித்தார்கள். எனக்கு அவங்கதான் நண்பர்கள்.
அவர்களோடுதான் விளையாடுவேன். சின்ன மூலைக்கரை குளத்தில்தான் குளிப்போம். நான் அதில் கரணம் போட்டு குளிப்பேன். அப்படி குளிப்பதில் எனக்கொரு அலாதி இன்பம். ஒரு நாள் நானும் நண்பர்களும் பாடசாலைவிட்டு வரும்போது வழியில் ஒரு மரத்தில் தேன் கூடு தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த நாங்கள் அதை கல்லால் அடித்து கலைக்க, அது எங்களை துரத்த, நாங்கள் கத்திக்கொண்டு ஓடினோம். ஓடி ஒரு பற்றைக்குள் பதுங்கிக் கொண்டோம். அந்த பொல்லாத தேனீக்கள் சும்மா விடுமா. எனது முகத்தை குறிபார்த்து கொத்தித் தள்ளியது. நான் கத்திக்கொண்டு ஓடினேன். ரொம்ப தூரம் ஓடிய பிறகுதான் அந்த தேனீக்கள் எங்களை துரத்துவதை நிறுத்தியது. தேனீக்கள் கொத்தியதால் என் முகம் வீங்கிவிட்டது. இப்படியே வீட்டிற்கு போனால் வீட்டில் அம்மா அடிப்பாங்க என்று பயந்து கொண்டு எனது உறவினர்கள் வீட்டில் சென்று தங்கிவிட்டு அடுத்த நாள் வீக்கம் வற்றிய பிறகுதான் வீட்டிற்கே சென்றேன். நாலாவதோடு நம்ம படிப்பு நின்றுவிட்டது. அதற்கு மேல் தொடர முடியவில்லை. அந்தளவுக்கு வறுமை. நான் பாடசாலை சென்ற அந்தக் காலத்தில் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மாட்டு சாணத்தை அள்ளிவந்து ‘வரட்டி’ தட்டி சுவரில் அடித்து காய வைத்து விற்பதுதான் என் வேலையாக இருந்தது என்கிறார் இவர்.

எப்போது கொழும்பிற்கு வந்தீர்கள்?

‘எவ்வளவு நாளைக்குதான் ‘வரட்டி’ தட்டுவது நானும் என் அப்பா மாதிரி உழைக்க வேண்டும் என்ற ஆசையில் கொழும்புக்கு புறப்பட்டேன். கட்டின துணியோடு வந்தார்கள் என்று சொல்வார்களே அதுமாதிரிதான் நானும் ஒரு துண்டு வேட்டியும், முண்டா பெனியனையும் போட்டுக்கிட்டு என் உறவினர் ஒருவருடன் வந்தேன். இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் பத்து நாள் தங்கி ராமானுஜம் கப்பலில் ஏறி கொழும்பிற்கு வந்தேன். இங்கு வந்த பிறகு அப்பா வேலை செய்த கொம்பனித்தெரு லட்சுமி விலாஸ் ஹோட்டலில் எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார்.

டொமினிக் ஜீவாவுடன்.
ஹோட்டலில் மேசை துடைக்கும் வேலை. ஆரம்பத்தில் எனக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் தந்தார்கள். அங்கே வேலை செய்தேன். லட்சுமி விலாஸ் ஹோட்டல் ஜாவா லேனில் இலக்கம் 23ல் தான் இருந்தது. அந்தக் கடைக்கு பக்கத்தில ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டிற்கு நான் காலை சாப்பாடு எடுத்துச் சென்று கொடுப்பேன். அந்த வீட்டு துரைக்கு பிள்ளைகள் இல்லை. அதனால் என் மீது ரொம்பவும் பாசம் காட்டினார்கள். சில காலங்களுக்கு பிறகு ‘லட்சுமி விலாஸ்’ ஹோட்டலின் நிர்வாகத்தை பக்கத்தில் இருந்த அந்த பெரிய வீட்டு துரை எடுத்தார். அப்போது அந்தக் கடையின் காசாளராக என்னை நியமித்தார்கள். அங்கே நான் ரொம்ப காலம் பணியாற்றினேன். அப்போது எனக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கொம்பனித்தெருவில் இருக்கும் சர்ச்சில் இரவு நேர ஆங்கில வகுப்பு நடைபெற்றது. அதில் சேர்ந்து ஆங்கிலம் கற்றேன். பிறகு எனது உறவினர் ஒருவர் 1953ல் பேங்சால் வீதியில் ‘கோல்டன் கபே’ என்ற கடையை தொடங்கிய போது அந்தக் கடைக்கு என்னை காசாளராக நியமித்தார்கள். அப்போது எனது தந்தையும் இந்தியாவிற்கு சென்று சொந்த ஊரிலேயே தங்கிவிடுவது என்ற முடிவோடு தாயகத்திற்கு சென்றுவிட, நான் இங்கேயே இருந்துவிட்டேன்.

இந்தியாவிற்கு சென்ற என் அப்பா சில வருடங்களுக்கு பிறகு இறந்துவிட, அவரின் மரணத்திற்கு கூட என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. 48ல் கொழும்பிற்கு வந்த நான் இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகுதான் என் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றேன். அங்கே எல்லாமே மாறிப்போயிருந்தது. என் அம்மா வயதாகி இருந்தாள். என் சகோதரிகளும் குடும்பமாகி இருந்தார்கள். ஆனால் என் வீடும், எங்க குலசாமி அக்னி அம்மாள் கோவிலும் அப்படியே இருந்தது. நான் நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு இவைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு தீர்மானம் போட்டேன். அதற்கு பிறகு கோல்டன் கபேயின் நிர்வாகத்தை என் உறவினர்களால் ஒழுங்காக நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே என்னிடம் இந்தக் கடையை கொடுத்து என்னையே நடத்திச் செல்லும்படி பணித்தார்கள். அதற்கு பிறகு ‘கோல்டன் கபே’யை நான் பொறுப்பெடுத்தேன். இப்போது என் குலதெய்வம் அக்னி அம்மாளின் கோவிலை திருத்தி அமைத்துவிட்டேன்.

திருநெல்வேலியில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். மூலைக் கரைப் பட்டியிலிரு ந்த என் பரம்பரை வீட்டை அப்படியே வைத்திருக்கிறேன். என் அம்மா, அப்பா வாழ்ந்த வீடு அப்படியே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த வீட்டை பார்க்கும் ஒவ்வொரு நிமிசமும் என் நினைவில் என் அம்மா, அப்பா வந்து போகிறார்கள் என்று சொல்லும் ராமனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா? என்று கேட்டதற்கு,

‘நான் ஒரு கடும் உழைப் பாளி. இருபத்திநான்கு மணி நேரம் ஹோட்டலில் வேலை செய்தது மட்டும்தான். எனக்கு எப்போதும் காதல் வந்ததில்லை. அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. முப்பத்தைந்து வயதில்தான் எனக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. நான் கட்டப்போற பொண்ணை மணவறையில் தான் பார்த்தேன். அக்கா தான் எனக்கு திருமணத்தை நடாத்தி வைத்தாள். திரு நெல்வேலியில் என் வீட்டு வாசல்ல பந்தல் போட்டு கல்யாணம் நடைபெற்றது. கல்யாணத்திற்கு என் உறவுக் காரர்கள் மட்டும்தான் வந்தி ருந்தார்கள். மனைவியின் பெயர் சரோஜா. திருநெல்வேலி டவுன்ல இருந்த சித்ரா ஸ்டூடியோவில தான் திருமணப் படம் பிடித்தோம். அந்த ஸ்டூடியோ இப்போவும் இருக்கிறது’ என்கிறார்.

மறக்க முடியாத நபர்?

எனக்கு ஒரு கடையை தந்து எனக்கும் இந்த சமூகத்தில் ஒரு அந்தஸ்து தந்த என் முதலாளி ஆர். கிருஸ்ண மூர்த்தியை மறக்கமுடியுமா... என்று பழசை மறக்க முடியாத ஒரு பண்பாலனாக விளங்குகிறார் ராமன்.

நீங்கள் சந்திக்க ஆசைப்பட்டு முடியாமல் போனது?

‘இந்தியாவிற்கு சென்று என் அப்பாவை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியாமல் போய் விட்டது. அப்பாவும் என்னை கடைசியா பார்த்துவிட வேண் டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. என்று சொல்லும் போது துக்கம் ராமனின் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. வாழ்க்கையில் தவறவிட்டதாக நீங்கள் நினைத்து ஏங்குவது?

‘கல்விதான். நிறைய படித்திருக்கலாம். ஆனால் முடியாமல் போய்விட்டது. அதை நினைத்தால் இன்றும் ஏக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். என் மொழி ஆர்வத்திறகு வித்திட்டது  தி. மு. க. வின் அந்த எழுச்சிதான். அண்ணா, சிற்றரசு, இளஞ்செழியன், கலைஞர் உள்ளிட்ட தி. மு. க.வின் எழுச்சி நாயகர்களின் வீர பேச்சில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். நான் தமிழை நேசிக்கவும் முறையாக உச்சரிக்கவும் அவர்களே எனக்கு ஆசான்கள். என்று சொல்லும் ராமன் தான் படித்து சுவைத்த விடயங்களை தொகுத்து இரண்டு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

ம்.... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது...

கொம்பனி வீதியின் லட்சுமி விலாஸ் கடை இன்றும் காலையில் அந்த வழியாக வரும்போது அந்தக் கடையின் ஞாபகம் வரும்... வீதியோரத்தில் நிற்கும் கை ரிக்க்ஷா... மாட்டு வண்டிகள் வாகன சத்தமில்லாத கொம்பனித்தெருவின் அமைதியான தெருக்கள் இன்று நினைத்தாலும் ரொம்பவும் பசுமையாக இருக்கும் அந்த நினைவுகள்... நினைத்தாலே இனிக்கும்.

தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி? என் வாழ்க்கை இனிமையானது, கஷ்டங்கள் நம்மைத் தேடி வருவதில்லை நாம்தான் கஷ்டங்களை உருவாக்குகிறோம். ‘உனக்கு கீழ் உள்ளவர்கள் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’ என்ற கண்ணதாசனின் தத்துவப்படி நடந்தால், வாழ்க்கை இனிமையானதாக அமைந்துவிடும் என்று தனது இனிக்கும் அனுபவங்களை ராமன் முடித்துக்கொள்கிறார்.

No comments:

Post a Comment