Monday, April 15, 2013

மன்சூர் அலிகானுடன் திக் திக் நேர்காணல்

"என் படம் டைமுக்கு வெளிவரலையோ மவனே அப்புறம்..."


நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன்

"முடியை கோதிவிடுறவனும் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறவனும் சி.எம் ஆக முடியாது என்று சொன்னது சரியாகத்தான் இருந்தது."

 

 "பவர் ஸ்டார் தொப்பையில பெரியவரு, வயசில பெரியவரு, வழுக்கையில பெரியவரு..."

 

 "சிலருக்கு டிக்கி பிடிக்கும்... சிலருக்கு பொனட் பிடிக்கும்...


தமிழ்த் திரையுலகை மிரட்டும் வில்லன்களில் மன்சூர் அலிகான் முதன்மையானவர். திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக வாழ்ந்துவரும் ஒரு மனிதர் என்பதனால்தான் அவர் முதன்மையானவராகிறார். நல்ல தமிழ் பற்றாளர். சிறைநிரப்பு போராட்டம், சாலை மறியல், அடிதடி என்று மாதந்தோறும் நீதிமன்றத்துக்கும் சில சமயம் சிறைக்கும் செல்வது என்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணியில் வெளிவந்த படங்களில் வில்லனாக அறிமுகமாகி இன்று கிடைக்கும் வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.

தற்போது அவர் கதநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் 'லொள்ளு தாதா பராக் பராக்' படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பொறுமை இழந்த மன்சூர் அலிகான் சென்னை முழுவதும் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டினார். அதில் 'எல்லா தியேட்டர்லையும் உங்க படத்தையே ரிலீஸ் பண்ணினா என் படத்தை கக்கூசிலும் கெண்டீனிலுமா ரிலீஸ் பண்ணுவேன்?' என்று அச்சிடப்பட்டிருந்தது. இது துப்பாக்கி வெளியான சமயத்தில், விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர். ஆனால் இந்த போஸ்டர்தான் எம்மை மன்சூரின் இல்லம் அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு இழுத்துச்சென்றது.

'லொள்ளு தாதா' சூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. நல்ல கொமடி படம். நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. பெரிய படங்கள் வருவதால் என் படம் தள்ளித் தள்ளிப் போகுது.  'கொச்ச கொச்சன்னு எல்லாரும் கட்டப்பஞ்சாயத்து பண்ணுறவன், கொலைகாரன், கொள்ளையடிக்கிறவன், மொள்ளமாறி, முடிச்சுமாறி, கேப்மாறி பசங்கதான்... கொஞ்சம் நல்லவனும் படம் எடுக்க வர்றாங்க. எல்லாமே சினிமா ஹீரோ ஆகனும்னு வர்ரான்... அதனால் 'வச்ச வச்ச'ன்னு ஓவரா படம் வருது. நாட்டுல சாராய கடைதான் எல்லா இடத்திலும் இருக்கு. அதே மாதிரி நிறைய சினிமா எடுக்கிறாங்க... அதனால் தியேட்டர் இல்லாம நம்ப படத்தை ரிலீஸ் பண்ண முடியல. இன்னும் ரெண்டு வாரத்தில் ரிலீஸ் பண்ணிறலாம்..." என்று நம்பிக்கை தெரிவித்தார் மன்சூர்.

"நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்." நீங்க எத்தனை கெரக்டரில் நடிக்கிறீர்கள்? என்று கேட்டோம்

"அதில கேரட்டு இருக்கு, பீன்ஸ் இருக்கு, பீட்ரூட் இருக்கு அது மாதிரி நிறைய கேரக்ட்ரு, கேரக்ட்ரு இருக்கு!" என்றார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ரசனை எப்படி இருக்கிறது? சுண்டு விரலை அசைக்கிறவனை எல்லாம் சுப்பர் ஹீரோன்னு சொல்லுறாங்களே? என்றோம்.

"சிலருக்கு டிக்கி பிடிக்கும்... சிலருக்கு பொனட் பிடிக்கும்... சிலருக்கு லஸ்ஸி பிடிக்கும்... சிலருக்கு மோர் பிடிக்கும்... அதெல்லாம் அவங்கவங்க ருசியை பொருத்தது. காலம் மாறுது அதனால் அவங்கவங்க விருப்பத்திற்கு சினிமா பார்க்கிறான். விசிலடிக்கிறான். உங்களுக்கென்ன கொள்ள போகுது? நீங்க  பார்த்தா பாருங்க பார்க்காட்டி போங்க.." என்று கோபமாக பார்த்தவரிடம் "நீங்க நிஜத்திலும் வில்லனா" என்று மேலும் அவரை உசுப்பேத்தினோம்.

"நிஜத்தில் உங்களுக்கு வில்லன் கெட்டவனுங்களுக்கு வில்லன்" என்று சொல்லி மன்சூர்  முறைத்தபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

உங்களின் அரசியல் வாழ்க்கை எப்படிப்போகிறது? இன்னும் திருமாவளவனோடுதான் இருக்கிறீர்களா? என்று மன்சூரின் கோபப் பார்வையை திசை திருப்பினோம்.

"நான் யார் கூடவும் இல்ல. தனியாத்தான் இருக்கேன். அரசியல்வாதிகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள்," என்று நச்சென்று பதில் வந்தது...

தீபாவளிக்கு நீங்கள் ஒட்டிய போஸ்டரில் பலகாரம் ஜீரணம் ஆன பின் வெளியிடுவேன் என்று போட்டிருந்தீர்களே...?

"ஆமா பலகாரம் நிறைய சாப்பிட்டதால இன்னும் ஜீரணமாகலை. ஜீரணம் ஆன உடன் வெளியிடுவேன். அப்படியும் வெளிவரவில்லை என்றால் மவனே சென்னையில் உள்ள தியேட்டர்களை எல்லாம் நொருக்குவேன். நானும் கொஞ்சகாலமாக ஜெயிலுக்கு போகல... போய் வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று கர்ஜித்தார்.

முடியை கோதிவிடுறவனெல்லாம் முதலமைச்சர் ஆகமுடியாது. சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கிறவனெல்லாம் 'சி எம்' ஆக முடியாதுன்னு  சொல்லிட்டு படையப்பாவில்  ரஜினியிடம் பதுங்கி நடித்தீர்களே என்று மன்சூரை மீண்டும் சீண்டினோம்.

"ஆமா நான் சொன்னது உண்மைத்தான். நான் சொன்னப்படிதான் அந்த நேரத்தில் நடந்தது. அவரு சூப்பர் ஸ்டாருன்னா இருந்துட்டு போகட்டும். தமிழ் நாட்டில் கேனையன்கள் நிறைய. தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்துக்கு போயி அங்கே எவனும் கோலோச்ச முடியாது. இங்கே பார்த்தீங்கன்னா பத்தில ஒன்பது பேரு வெளி மாநிலத்துக்காரன்தான். நமக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு போய் கதாநாயகனா நிற்க முடியாது. ஏதோ சின்ன சின்ன ரோல்களில் நடிக்கலாம். அவ்வளவுதான். தமிழ்நாட்டுல மட்டும்தான் எல்லா பயலுகளும் வந்து குப்பை கொட்டுறானுங்க. இங்க உள்ள சொத்தையெல்லாம் கர்நாடகாவில் கொண்டுபோய் சேர்க்கிறானுங்க...

இதனால் ரஜினிகாந்த் என்பவர் ஒரு நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர். கே. எஸ். ரவிகுமார்  கூப்பிட்டாரு நடிச்சேன். மக்கள், என் மன்னன் என்று வரும்போது நான் மக்களுக்காகத்தான் பேசுவேன். தமிழ் நாட்டில் அரசியல் தடம் புரண்டு கிடக்கு. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு துதிப்பாடிக்கொண்டு, கையாலாகாத நாடாக இருக்கிறது. கிட்டத்தட்ட நானும் ஒரு நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து இருக்கிறேன்..."என்று நொந்துப்போய் பதிலளித்த அவரிடம் ,  கொடூர வில்லனாக நடித்த நீங்கள் இப்போது நகைச்சுவை நடிகராக மாறிவிட்டீர்களே? என்று கேட்டோம் அவரிடம்.

"ஆமா, எவ்வளவு காலத்துக்குத்தான் நானும் அப்படியே நடிக்கிறது? சந்தன வீரப்பனை போட்டுட்டாங்க. அதுக்கப்புறம் நானும் வீரத்தை விட்டுட்டு காமடி நடிகராக மாறிட்டேன்," என்றவரிடம் வில்லன் சான்ஸ் வந்தா நடிப்பீங்களா என்று கேட்டோம்.

"நாட்டில என்னைத் தவிர எல்லாமே வில்லனாகத்தான் இருக்கிறானுங்க. ஆடுறவனுங்க... பே...றவனுங்க" என்று எழுத முடியாத வசனங்களை உபயோகித்து வெறுப்பில் பதிலளிக்கும் அவரிடம் தமிழகத்தில் புது அவதாரம் எடுத்திருக்கும் பவர்ஸ்டார் பற்றி கேட்டோம். "பவர்ஸ்டார் ரொம்பவும் பெரிய ஆளு. (அவரு தமிழர்தானா என்பதை பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் கேட்டு உறுதிபடுத்திய பின்) வயிசில பெரியவரு, தொப்பையில பெரியவரு, வழுக்கையில பெரிய ஆளு. அவரோட தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்.

சினிமாவில ஒரு இடம் காலியாக இருந்தது. அதனால அவரு நடிக்கிறாரு. பவர் ஸ்டார் இஸ் கிரேட். ஐ சப்போர்ட் பவர் ஸ்டார். பிக் ஸ்டார் எல்லாம் தூரமா இருக்கிறார்கள். நாம இப்படியான ஸ்டாரைதான் பார்த்துக்கணும்..."என்றவர் எம்மை பார்த்து, "இருங்க சார் டீ சாப்பிட்டு போகலாம் என்றார். அவரின் கடுமையான கட்டளைக்கு உடன்பட்டு டீக்காக காத்திருந்தோம். டீ வர தாமதிக்கவே அங்கே என்ன புடுங்குறீங்க. சீக்கிரமா டீயைக் கொண்டுவாமா என்று சத்தம் போட்டார். போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது. ஒரு வயதான பெண்மணி கிளாசை கையிலெடுத்து ஓடி வந்து என்னிடம் நீட்ட,"சர்க்கரை கரக்டா இருக்காணு சொல்லுங்க சார்" என்றார் மன்சூர். நாமும் ருசி பார்த்து விட்டு ஓகே! சொல்ல அந்த அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டப்படி இடத்தை காலி செய்தார். அந்த பெண்மணி அவசரத்தில் ஓடி வந்ததில் டீ சிந்தி கிளாஸை; நனைத்திருந்தது. எங்கே மன்சூர் அதைப் பார்த்து விடுவாரோ என்று அவசர அவசரமாக டீயை குடித்து டீ கிளாசை ஒரு ஓரமாக வைத்து விட்டு விடைபெற்றோம்.

No comments:

Post a Comment