Saturday, April 6, 2013

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…01

போண்டா சாப்பிட ஆசையா..


மணி ஸ்ரீகாந்தன்.


சுமார் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள் மலைநாடுகளில் குடியேற்றப்பட்டனர்.பின்னர் இவர்கள் அவ்வப்போது தமிழகம் செல்வதும் வருவதுமாக இருந்தனர்.மேலும் அன்று இலங்கையும்,இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால் போக்குவரத்தில் பிரச்சனைகள் தோன்றவில்லை.தலைமன்னார் சென்று தங்கியிருந்து முன்னர் பெரிய படகுகளிலும் பின்னர் பிரிட்டிஷ் நிராவிக் கப்பல்களிலுமாக அக்கரைக்குப் பயனமாகினர்.அதன் பின்னர் ரயில் சேவை வரவே பயணம் மேலும் சுலபமானது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து,வம்சாவளி தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட பின்னர்.இந்த போக்குவரத்து மிகவும் குறைந்து போனது.ஏறக்குறைய தொப்பூள்கொடி அறுந்த மாதிரித்தான்.நாடற்றவர் காலப்பகுதியிலும் இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்தவர்கள் இந்தியாவுக்கு ராமானுஜத்தின் ஊடாக சென்று வந்தனர்.
மேலும்சிங்களவியாபாரிகள்,முஸ்லிம்கள்(பெரும்பாலும் வியாபார நோக்கத்துடன்)தமிழகம் சென்றனர்.முன்னர் அடிக்கடி தமிழகம் சென்று வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இப்போது தமிழக பயணம் லண்டன் பயணம் மாதிரி ஆகிவிட்டது.
ஐம்பது அறுபதுகளில் கையில் பாஸ்போர்ட வைத்திருப்பது ஒருவருக்கு விஐபி அந்தஸ்த்து மாதிரி.கையில் அரிசிக் கூப்பன் வைத்திருந்தால் அவன் பிரஜை,பாஸ்போர்ட் வைத்திருந்தால் சூப்பர் பிரஜை.எனினும் 1964ல் ஸ்ரீமா-சாஸத்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய தமிழர்கள் பலருக்கு குடியுரிமையும்,அதன் மூலம் பாஸ்போர்ட்டும் கிடைக்க இந்தியாவுக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இரண்டாம் தலைமுறையினர்,இந்தியக் கரையையே பார்க்காதவர்கள்.கடலையே காணாதவர்கள்.எல்லாம் கப்பல் ஏறி தமிழ் நாட்டில் இறங்கியதும் அங்கே பார்த்து பேசி,அதிசயத்தவையும் அலாதியான குட்டிக் கதைகள் சுவையானவை.எனினும் இந்த இனிப்பான மேற்பூச்சுகளின் கீழ் வரலாற்று நிகழ்வுகளையும் நாம் காணலாம்.

இங்கே ‘நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க’என்ற சிறு உண்மை அனுபவ சம்பவத் திரட்டு தொடராக வெளிவரவுள்ளது.இது கேலிச் சித்திரமல்ல.ஐம்பது அறுபதுகளின் பின்னர் ராமானுஜம் கப்பலில் எறி இந்தியக் கரையை அடைந்த பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பங்களின் அனுபவங்கள்.இவை பதியப்பட வேண்டியவை.
ராமானுஜம் கப்பலில் அந்த நேரத்தில் பெரும்பாலும் வியாபாரிகளே பயணம் செய்தனர்.
இலங்கையிலிருந்து அதிகளவில் பொருட்களை கொண்டு செல்வதற்காக  சில முதலாளிமார்கள் சிலருக்கு இலவசமாக பாஸ்போர்ட்,வீசா,டிக்கட் செய்து கொடுத்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து செல்வார்கள்.குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு வேலை முதலாளிகள் இக்கரையில் தரும் பொருட்களை அக்கறையில் கொண்டு சென்று கொடுப்பதுதான் பிறகு குறிப்பிடும் இடத்தில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு முதலாளி இந்தியாவில் வாங்கித் தரும் பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்து கொடுப்பார்கள்.
அப்படி முதலாளிகளின் சலுகையில் இந்தியாவை பார்த்தவர்கள் வந்து சொல்லும் கதைகள் ஒரு காலத்தில் தோட்டப்பகுதிகளில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தது.

இந்தியாவில் ஆசைக்கு ஒரு கல் பார்க்க முடியாது.எங்கு பார்த்தாலும் ஒரே சமமான மணல் தரைதான் என்று ஏதோ சந்திர மண்டலத்தை பார்த்தவர்கள் வந்து சொன்ன கதை மாதிரி கதை அளந்தார்கள்.
அவர்களை சொல்லியும் குற்றமில்லை.ஏனெனில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற முதலாளிகள் அவர்களுக்கு காட்டிய இடம் ராமேஸ்வரம்.சில மாதங்களுக்கு முன்பு சுப்பையா என்ற ஒரு நபரை வழியில் சந்தித்தேன்.அவரும் ராமானுஜம் கப்பலில் இந்தியா சென்று வந்தவராம்.

“நாங்க பயணம் செய்த கப்பல் ரொம்ப பெரிசு அதாவது,மேட்டு லயத்தையும்,பனிய லயத்தையும் ஒண்ணா ஒட்ட வச்சா வருமே பெருசு அந்த மாதிரி.அதிலதான் எங்க முதலாளியோடு நான்,எங்கப்பா,என் அக்கா மற்றும் சில நண்பர்களோடும் போனோம்.கப்பல் பயணம் ரொம்ப ஜாலியா இருந்தது.எங்களை அழைத்து சென்ற அந்த முதலாளி ரொம்ப நல்லவரு.கப்பலில் நாங்கள் ஏறியதுமே எங்களுக்கு சில அறிவுரைகளையும் சொன்னாரு.கப்பலை விட்டு இறங்கியதும் ரொம்ப கவனமா இருக்கனும் அங்கு நிறைய களவானி பயலுங்க இருப்பாங்க!அதனால பணம்,பை கவனம்.அதோட முக்கியமா ஒண்ணு….அங்கு ரோட்டோர பெஞ்ச் கடைகளில் விற்கிற போண்டாவை யாரும் வாங்கி சாப்பிடாதீங்க!என்று ஒரு எச்சரிக்கையும் செய்தார்.

அதற்கு பிறகு என் அப்பா அந்த போண்டாவை பற்றியே கேட்டுட்டு வந்தாரு.நாங்களும் அதை பெரிசா எடுத்துக்கல்ல.இராமேஸ்வரத்தில் இறங்கியதும் என் அப்பாவின் கவனம் முழுவதும் முதலாளி சாப்பிட வேண்டாம்னு சொன்ன அந்த போண்டாவின் மீதுதான் இருந்திருக்கு.பிறகு எங்களுக்கு தெரியாம திருட்டுத்தனமா அந்த போண்டாவை வாங்கி சாப்பிட்டிருக்காரு!

அதன் பிறகு எங்களிடம் வந்தவர் ‘அந்த முதலாளி நம்மள நல்லா ஏமாத்த பார்த்தான்டா..ஐந்து சததிற்கு நல்ல பெரிய போண்டா விற்கிறாங்க…அதை வாங்க வேணான்னு சொல்லி இருக்கான்.நான் அதை வாங்கி சாப்பிட்டு பார்த்திட்டேன்.ஒரு ஆளுக்கு ஒண்ணு சாப்பிட முடியல என்று போண்டா புராணம் பாடிய என் அப்பா சில நிமிடங்களில் வயிறு கலக்குவதாக கூறி பாத்ரூமுக்கு ஓடினார்.
அதன் பிறகு இலங்கை திரும்பும் வரை அவரின் பாத்ரூம் ஓட்டம் நிற்கவில்லை.முதலாளி சொன்னதின் அர்த்தம் லேட்டாகித்தான் என் அப்பாவுக்கு புரிந்தது” என்றார் சுப்பையா!.

No comments:

Post a Comment