Sunday, March 17, 2013

பவர் ஸ்டாருடன் ஒரு open interview


தமிழ் நாடு முழுவதும் கரண்ட் கட் ஆனாலும் அண்ணா நகர் சாந்தி காலனி மட்டும் இருளிலும் பிரகாசமாகத்தான் இருக்கிறது.

ஏன் அங்கே பவர் புல் ஜெனரேட்டர் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. ஜெனரேட்டரையும் தாண்டி அங்கே அகிலத்தை ஆட்ட வந்த சுனுஓ ஆட்டோ பாம் அண்ணன் பவர் ஸ்டாரின் அலுவலகம் அமைந்திருக்கிறது.

‘உலகம் முழுவதும் வாழும் 12 கோடி தமிழர்களும் தனக்கு ரசிகர்களே என்று தமக்கேயுரிய டிரேட் மார்க் புன்னகையுடன் மார்தட்டுகிறார் பவர்.

அண்ணா நகர் சாந்தி காலனி ‘விஜய் பெரடைஸ் அடுக்கு மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் தான் பவர் ஸ்டாரின் அலுவலகம் அமைந்திருக்கிறது.

எப்போதும் அவரின் அலுவலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் விட மின்சார வேகத்தில் பணியாற்றுகின்ற பவரின் ஊழியர்கள்! இப்படி பரபரப்பாக இயங்கும் அலுவலகத்தில், கடந்த வாரம் ஒரு காலை வேளையில் நுழைந்தோம்.

பவர் ஸ்டார் சீனிவாசனை வாழ்த்தி பூச்செண்டு, பொன்னாடை போர்த்தி கை குலுக்கவும், கோயில் திருவிழா, திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைக்க அண்ணனின் ஆருயிர் விழுதுகள் வாசலில் காத்துக் கிடந்தார்கள்.

அவர்களோடு அடுத்த படத்திற்கு பவரை புக் செய்யத் துடிக்கும் தயாரிப்பாளர்கள்,புதிய இயக்குனர்கள்.என்று ஏகப்பட்ட கூட்டம்

சுமார் ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பிறகே அவரைச் சந்திக்க அவரின் உதவியாளர்கள் அனுமதியளித்தார்கள்.

உள்ளே நாம் நுழையவும் பவர் கட்டாகவும் சரியாக இருந்தது.

“"என்ன சார் பவர் ஸ்டார் ஆபிஸிலேயே கரண்ட் கட்டா?" ”என்றோம்.

“"அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்?"”என்று சிரிக்கிறார்.

(பவரை பற்றிப் பேசி அம்மாவிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. கமல் பட்டது போதாதா? என்பதில் கவனமாக இருக்கிறார்.)மிகக் குறுகியக் காலத்தில் எப்படி இப்படி புகழின் உச்சிக்கு சென்றீர்கள்? என்று நாம் முதல் கேள்வியை தொடுத்தோம்.

“"ரசிகர்களோட ஆதரவுதான். முக்கியமா உங்க மனசில அப்புறம் குறிப்பா சொல்லனும்னா இளைஞர்கள், குழந்தைகள்,மாணவர்கள் மனசில நான் இருக்கிறேன்.

அது கடவுளோட கிருபைன்னு தான் சொல்லனும். எதுமே என் கையில இல்லை. இதையெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை," என்று தமது வளர்ச்சிக்கு ஏதோ தெய்வ சக்திதான் காரணம் என்று நம்பும் பவருக்கு சினிமா ஆசை இருந்தது இல்லையாம்.
"நான் சென்னையில் லத்திகா மருத்துவமனை நடாத்தி வரும் நேரத்தில் பொல்லாச்சியிலிருந்து ஒரு பேஷண்ட் வைத்தியம் பார்க்க வந்;து எனது மருத்துவமனையில் தங்கியிருந்தாங்க. ஒரு நாள் அவங்க சேர்மனை பார்க்கனும் என்று கேட்டிருக்காங்க.நானும் அவங்கள அழைத்து வாங்கன்னு சொன்னேன். என்னை சந்தித்த அந்த அம்மா தனக்கு ஒரு உதவி செய்யணும் என்று கேட்டாங்க.

நானும் என்ன பண்ணணும் என்று விசாரிக்க அதற்கு அவங்க, “''சார் நாங்க பல லட்சம் போட்டு ஒரு சினிமா எடுத்தோம். அந்தப் படம் பாதியிலேயே நின்னுடுச்சி

மீதிப் பணத்தை நீங்க போட்டா படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணி உங்களுக்கும் பணத்தை தந்திடலாம்,' என்றார்.
அதற்கு நான் அய்யோ அதில ஆர்வம் இல்லீங்க. சினிமா பற்றி எனக்கு ஏ.டு.இஸட் தெரியாது, என்ற போது அந்த அம்மா ஒரு விசயத்தை சொன்னாங்க.

“சார் நாங்க படம் எடுக்கிறது இலாபத்திற்காக இல்லை. ஒரு நூற்றி ஐம்பது குடும்பம் இந்த சினிமாவுக்கு பின்னால வாழ்ந்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு செய்கிற உதவியா நினைங்க, சினிமான்னு நினைக்காதீங்க! என்று அவங்க சொன்னப்போது நான் யோசித்தேன். பரவாயில்லை பார்க்கலாம் உதவின்னு வேற சொல்லுறாங்க என்று யோசித்தேன். பிறகு சினிமா சூட்டிங் பார்க்க போனேன். அப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. சினிமாவுக்கு பின்னாலயும் பல குடும்பங்கள் வாழுதுன்னு. பிறகு அவங்களுக்கு உதவி பண்ணலாம்னு முடிவெடுத்தேன். லாபமோ நஷ்டமோ நாம பண்ணுற உதவி அந்த நூற்றியம்பது குடும்பத்திற்கு போனா போதும்கிறது மட்டும்தான் என் மனசில இருந்திச்சு. அந்தப் படத்தோட பேரு 'உனக்காக ஒரு கவிதை' ’அதில் முதல் முதலாக ஒரு கௌரவ வேடத்தில் நான் நடித்தேன்.

அந்தப் படத்திற்கு பிறகு நாமலே சொந்தமா படம் எடுத்து மற்றவங்களுக்கு உதவி பண்ணலாமேன்னு நினைச்சி, என்னோட குழந்தையின் பெயரில் ‘லத்திகா’ படத்தை தயாரித்து இயக்கி நடித்தேன். அந்தப் படத்தோட சூட்டிங் மூன்று மாதமாக நடந்தது அந்த முன்று மாதத்தில என்னால ஒரு நூற்றி ஐம்பது குடும்பம் வாழ்ந்ததை நினைக்கும் போது எனக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது.

லத்திகா’ வெளியான பிறகு நிறையப் பேர் என்னைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

இவரெல்லாம் ஏன் நடிக்க வரணும்? இவருக்கு இது தேவையா? சினிமாவில் இவரு என்னத்த சாதிக்க போறாரு? என்று மட்டமாகத் திட்டினார்கள். அப்பத்தான் எனக்குள்ள ஒரு வைராக்கியம் எழுந்தது.  நாம சினிமாவில நிலையா நின்னு காட்டணும். என்னை கேலிப் பண்ணுறவங்க முகத்தை கிழிக்கனும்னு முடிவு செய்தேன்.

அந்த நெருப்புதான் இப்போ பத்திக்கிட்டு எரியுது. அன்றைக்கு என்னை இகழ்ந்தவனும், தூற்றியவனும் இன்னைக்கு என்னை புகழ்றான். நரம்பில்லாத நாக்கு எதுவும் பேசுங்க,|| என்று சொல்லும் பவருக்கு, ‘'கண்ணா லட்டு தின்ன ஆசையா'’மிகப் பெரிய சூப்பர் டூப்பர் படமாக அமைந்து விட்டது.

“"இந்தப் படத்திற்கு பிறகு சினிமா என்பது எனக்கு உயிர் மாதிரி ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சினிமா வேண்டாம்னு சொன்ன என் மனைவியும் குழந்தையும் நான் தொடர்ந்து நடிக்கனும்னு ஆசைப் படுறாங்க. என் கலைப் பயணத்திற்கு உதவியாகவும் இருக்கிறாங்க," என்ற பவரிடம் நீங்கள் நாயகனாக களமிறங்கவிருந்த ‘ஆனந்த தொல்லை’, மன்னவா, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களுக்கு என்ன நடந்தது என்று பழையதை கிளறிவிட்டோம்.

“அது மொத்தம் ஐந்து படங்கள். ஆனந்த தொல்லை படத்தில நான் வில்லனாகவும், நாயகனாகவும் நடிக்கிறேன். அந்தப் படம் வெயிட்டிங்ல இருக்கு. புதிய வாய்ப்புகள் என்னை தேடி வருவதால் என்னுடைய சொந்தப் படங்களில் என்னால் கவனம் செலுத்த முடியாது உள்ளது.
நான் சினி பீல்டுக்கு வந்து இப்போ இரண்டு வருசம் தான் ஆகிறது. நான் இப்போ முழு நேர நடிகனாக மாறி விட்டேன். என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து ஐம்பது வீதமானோர் மகிழ்ச்சியடைந்தால் அதே அளவானோர் ‘என்னடா இவன் இப்படி வளர்ந்துடானேன்னு பொறாமையும் படுகிறார்கள். என் பெயரை களங்கப்படுத்தவும் முயற்சியும் செய்யுறாங்க.

அதனாலதான் நான் அண்மையில் கைது செய்யப் பட்டேன். ஆனால் என்னை வீழ்த்த யாராலும் முடியாது. எல்லாம் ஆண்டவன் கையிலதாங்க இருக்கு. அவன் எப்படி ஆசைப்படுறானோ அதன்படிதான் நடக்கும்."

தற்போது ஷங்கரின் ‘ஐ’ யாயா, சும்மா நச்சுன்னு இருக்கு உள்ளிட்ட படங்களில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாராம் பவர் ஸ்டார்.

“"சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில எனக்கு மொத்தமாக பதினைந்து நாள் தான் படப்பிடிப்பு இருக்கு அதில டபள் ரோலில் நடிக்கிறேன். யாயாவில் நான், சந்தானம், சிவா என மூவர் இணைந்து நடிக்கிறோம். நான் காமடி ரோலில் கலக்குறேன். ஐ படத்தில் நானும் சந்தானமும். எனக்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. எனது ரோல் பற்றி எதுவும் கேட்காதீங்க ஷங்கர் யாரிடமும் மூச்சு விடக் கூடாதுன்னு அன்பு கட்டளை போட்டிருக்கிறார்,"என்றார் பவர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு உங்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா?

“"ஆமா ஐம்பது லட்சமாக இருந்த என் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதனால் தமிழ் நாட்டில் இருக்கும் 33 மாவட்டங்களிலும் இருந்து தலா ஒரு மாவட்டத்திற்கு ஐந்து லட்சம் கணக்கில் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 65 லட்சம் ரசிகர்களை திரட்டும்படி என் ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். விரைவில் என் ரசிகர்களை வைத்து  மிகப் பெரிய மாநாடொன்றை சென்னையில் நடாத்தப் போகிறேன்.

இது என்னை மத்தவங்க மதிக்கணும் என்பதற்காக அல்ல. தமிழக அரசு நல்ல திட்டங்களை செய்து வருகிறது. அதற்கு மேலாக நானும் என் ரசிகர்களை வைத்து ஏழைகள், குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்யவும் இரத்ததானம் உள்ளிட்ட சமுக சேவைகளில் என் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்ப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு மாநாடாகவும் இது அமையப்போகிறது|| என்றவரிடம் அப்போ அடுத்து அரசியலில் சிஎம்மு, பியம்முன்னு ஏதாவது ஐடியா இருக்கா? என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் குபீரென்று சிரிக்கிறார். (நாம் சிங்கத்தை உசுப்பேத்துவதை புரிந்து கொண்டாரோ...)

தமிழ் நாட்டில் ரஜினிக்கு போட்டியாக நீங்கள் தான் களத்தில் இருக்கிறீர்களாம்?

"இல்லை போட்டியெல்லாம் ஒன்றும் கிடையாது. அது பிஸினஸ் தந்திரம்.

நான் ரஜினியை மதிக்கிறேன், அவரை என் உடன் பிறப்பாதான் நினைக்கிறேன். என் ரோல் மாடல் அவருதான். அவரு மாதிரி வர முடியலன்னாலும் பரவாயில்லை. அவரு நிழலாக இருக்கனும் என்று ஆசைப்படுறேன். அண்மையில் ரஜினி தொலைபேசியில தொடர்பு கொண்டு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையாவில பவரு பட்டைய கிளப்பிட்டாருன்னு சொன்னப்போது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது

அதேப் போல ஷங்கரோட போட்டோ எடுக்க நான் ஆசைப்பட ‘அவரோ நானே உங்க ரசிகன் நான்தான் உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று அவரு சொன்னப் போது என் உடம்பு சிலிர்த்து விட்டது. இதே மாதிரிதான் ஒரு விழாவில உலக நாயகன் கமலை பார்த்து ‘"சார் என்னை உங்களுக்கு தெரியுதா?’என்றதும் 'பவர தெரியாம இருக்குமா?' என்றார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நான் சினிமாவில ஏதோ கொஞ்சம் சாதித்து விட்டதாக எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. என்று சொல்லும் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயரில் ஒரு பவர் இருந்தாலும் அவர் ரொம்பவும் அமைதியான சமத்து பிள்ளையாகத்தான் இருக்கிறார்.

கோபிநாத் கேட்ட கேள்வி கணைகளையெல்லாம் எப்படி பூக்களாக மாற்றி தாங்கிக் கொண்டீர்கள்? என்று கேட்டோம். "கேள்வி கேட்குறது கோபிநாத் வேலை பதில் சொல்வது நம்ம வேலை. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு ரசிகர்கள் பன் மடங்காக அதிகரி;த்தார்கள் என்பதை நீங்கள் இணையத்தளங்களைப் பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்."

"இப்போ கூட நெட்டுலயும், பேப்பரிலயும் என்னைப் பற்றி கிண்டல் பண்ணுறாங்க. சிலர் போனில தொடர்பு கொண்டு ‘ஏன்டா நீயெல்லாம் நடிக்க வரனும்னு இப்போ யாரு அழுதா? உனக்கு இது தேவையான்னு’கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. ஆனால் நான் டென்ஷன் ஆகாமல் தொடர்பை துண்டிக்காமல் அவர்களோடு பாசமாக உரையாடுகிறேன். பிறகு அவர்களே என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறார்கள். எனக்கு எதிரி நீங்கதான்னு நான் கோபியைப் பார்த்து சொன்னது கூட அவர் மீதான கோபத்தில் இல்லை. அவரு நீங்க ஏன் சினிமாவுக்கு வரணும் வேறு ஏதாவது துறையை தெரிவு செய்திருக்கலாம் என்று சொன்னார் அது எனக்கு பிடிக்கவில்லை.

எனக்கான துறையை தெரிவு செய்கிற அதிகாரம் எனக்குதான் இருக்கு அதை தடுக்கிற அதிகாரம் யாருக்கும் கிடையாது. அதை கோபிக்கு உணர்த்துவதற்க்காக தான் அப்படி சொன்னேன்.”

இப்போ டி.வி பேட்டி என்றால் என்ன டி.வி என்னமாதிரி கேள்வி என்று விசாரித்து விட்டுதான் பேட்டிக் கொடுக்கிறேன்,"

பவரு சூடு கண்ட பின்பு ரொம்பவும் ஜாக்கிறதையாக இருக்கிறார்.

பவர் ஸ்டார் என்ற பெயர் தனக்கு எப்படி வந்தது என்பதையும் பவரே சொன்னார்.

"லத்திகா”படத்தோட ஓடியோ ரிலீசுக்கு தொல் திருமாவளவனை அழைத்திருந்தேன்.

அவருதான் எனக்கு பவர் ஸ்டார் என்ற பெயரை மேடையில் சொல்லி அழைத்தார். அவரின் வாய் மொழி இன்று தமிழர்களிடையே ரொம்பவும் ரீச்சாகி விட்டது," என்று பெருமிதம் கொள்ளும் பவர் சந்தானத்தை ரொம்பவே புகழ்கிறார்.

“எனக்கு ரொம்பவும் உறுதுணையாக, இருந்து எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து, பிழைகளை சரி செய்த தம்பி சந்தானத்தை மறக்க முடியாது. தம்பி சந்தானம் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன்."

என்று பவரு எம்மிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவரின் செல் சிணுங்கியது. அதை எடுத்து பேசி விட்டு “மானா மதுரையில எனக்கு ரசிகர் மன்றம் வைக்கணும் என்று கேட்குறாங்க. இப்படித்தான் டெய்லி ஏகப்பட்ட டெலிப்போன் கோல் வருது. சிலோனில கூட எனக்கு ஐந்த லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அவர்களில் சிலர் என்னை வந்து பார்க்கனும் என்று கேட்டாங்க வரச் சொல்லியிருக்கேன்!"என்ற பவருக்கு அன்று மாலை வட சென்னையில் ஒரு பாராட்டு விழா நடக்கிறதாம். அதற்கு புறப்பட ஆயத்தமானார். நாமும் அவரின் பொன்னான நேரம் கருதி பேட்டியை நிறைவு செய்தோம்.

1 comment: