Sunday, February 24, 2013

சிவாஜி மௌலானாவின் ஞாபக வீதியில்...


செயிட் ஓ சிவாஜி மெளலானா, தலைநகரில் பிரபலமானவர்களில் ஒருவர். தலைநகரின் கலையுலகிலும், வியாபார உலகிலும் நன்கு அறிமுகமான மனிதர். இரண்டாம் குறுக்குத்தெரு மெளலானா பில்டிங்கின் உரிமையாளர் தொழிலதிபர், இரத்தினக்கல் வியாபாரி எனப் பல முகங்கள். இவரை மெளலானா என்றால் பலருக்குப் புரிவதில்லை. சிவாஜி மெளலானா என்றால்தான் பலருக்கும் புரியும்.

சிங்கள படவுலகில் குறிப்பிட்ட சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். அதவத்தகே வேதனா, என்கிற சிங்களப்படத்தில் ‘ஹாலம்’ என்கிற இந்திய நடிகையுடன் ஒரு பாடலுக்கு குத்து டான்சும் போட்டிருக்கிறார்.

சிவாஜி, இந்தப் பெயரைக் கேட்டாலே அதிருமே! தமிழ் கூறும் நல்லுலகில் காலத்தால் அழிக்க முடியாத பெயர்களில் மிகவும் முக்கியமான பெயர். இந்தப் பெயரை கொண்டவர்கள் பெரும்பாலும் பெரிய மனிதர்கள்தான். மராட்டிய மன்னன் சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி, சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற சூப்பர் ஸ்டார் போன்றவர்களை குறிப்பிடலாம். இந்தப் பெயர்களால் சிவாஜி நடிப்புலகில் சக்கரவர்த்தியாக தமிழர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். அவரின் பாதிப்பு கலையுலகில் பலருக்கும் இருந்து வருகிறது.

அவரின் பாதிப்பு இல்லாத ஒரு தமிழ் கலைஞனை பார்க்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் சிவாஜியின் மனதைவென்ற ஒரு ரசிகனாக நண்பனாக இருந்தவர்தான் சிவாஜி மெளலானா. அங்க அசைவுகள், பேச்சு, நடை உடைபாவனை என்று தனது ஒவ்வொரு அசைவிலும் சிவாஜியை ஞாபகப்படுத்துகிறார் மெளலானா. அவரோடு பேசுவோர் ‘உங்களோடு பேசும் போது சிவாஜியோடு பேசுவது மாதிரியே’ இருக்கு என்கிறார்களாம். அப்போதெல்லாம் மெளலானாவுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்குமாம்.

“சிவாஜி எவ்வளவு பெரிய மனிதர்! அவரின் பெயரைச் சொல்லி என்னை எல்லோரும் அழைக்கும் போது எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது. உண்மையில் எனது பெயருக்கு முன்னால் சிவாஜி என்கிற பெயரை நானாக போட்டுக் கொள்ளவில்லை.

எனது உடல் அசைவு, நடை உடை பாவனைகளை வைத்தே எனது நண்பர்களால் நான் சிவாஜி மெளலானா என்று அழைக்கப் படுகிறேன்” என்று சொன்னவர் ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தினார்.

“ஒரு முறை சென்னையிலுள்ள அன்னை இல்லத்தில் வைத்து சிவாஜியும் நானும் அருகருகே அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சிவாஜி சிகரெட்டை ஒரு ஸ்டைலாக பிடித்து புகைவிட்டார். நானும் சிகரெட் பிடிக்கும் போது அதே மாதிரி பிடித்து புகைவிட்டேன்.
இது தற்செயலாகத்தான் நடந்தது. அவரை நான் கொப்பி பண்ணவில்லை. ஆனால் நான்தான் சிவாஜி மெளலானா ஆச்சே! ஆனால் அதை கவனித்த சிவாஜி ‘ஏன்டா படவா, என்னையே கிண்டல் பன்றியா....?’ என்று சொல்லிச் சிரித்தார். என்று அந்தக்கால இனிக்கும் ஞாபகங்களில் மிதந்தார் சிவாஜி மெளலானா.

“கொழும்பு தெமட்டக்கொடையில் தான் நான் பிறந்தேன். குடும்பத்தில் நான் ஒன்பதாவது ஆள். வசதியான குடும்பம். மருதானை சென்ஜோசப் கல்லூரியில் என் ஆரம்பக் கல்வியை கற்றேன். அந்த நாட்கள் ரொம்பவும் இனிமையானவை.

பள்ளியில் படித்த நாட்களில் பெரும்பாலும் பாடசாலைக்கு கட்அடித்துவிட்டு சினிமாவுக்குத்தான் செல்வேன். புதுபடம் ரிலீசாகுதென்றால் முதல் நாளே படம் பார்க்க எனது நண்பர்களோடு பிளேன் பண்ணுவேன். அந்த குழுவில் ரவீந்திரன், எனசிலின் மாதவன், அரசன் இல்லை ஆகியோர் இருப்பார்கள். அவர்களோடு சினிமாவுக்கு செல்வேன். ஒலிம்பியா, காமினி, தியேட்டர்களில் அதிகமான படங்களை பார்த்திருக்கிறேன்.

இப்போது காமினி தியேட்டர் இல்லை. ஜூலை கலவரத்தில் எரித்து விட்டார்கள். அந்த இடத்தில் உள்ள பஸ் தரிப்பிடம் இன்றும் ‘காமினி ஹோல்’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

எனது நண்பர் குழுவில் ஒருவரான ‘அரசன் இல்லை’ இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரின் பெயரே வித்தியாசமானதுதான்’ என்று சொல்லும் சிவாஜி மெளலானா, தனக்கு பிரியமான ‘தோசை டயட்’ பற்றியும் விவேகானந்தா லொட்ஜ் பற்றியும் சொல்கிறார்.

வெள்ளவத்தையில் விவேகானந்தா லொட்ஜ் இருக்கிறது. நான் என் நண்பர்களோடு சென்று ருசியாக சாப்பிடும் இடம் அது. இன்றும் அந்த வழியாக நான் காரில் கடந்து செல்லும் போது அந்த விவேகானந்தா லொட்ஜை பார்த்ததும் பழைய ஞாபகம் வரும்.

ஒருநாள் காரை நிறுத்திவிட்டு அந்த ஹோட்டலுக்குள் சென்றேன். நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று நான் பார்த்த அதே முதலாளி இன்றும் அதே கல்லாவில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்னைப் பற்றி சொன்னேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு ரொம்பவும் சந்தோசப் பட்டார்.”

சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்பு?

என்ற கேள்வியைத் தொடுத்ததும் மெளலானாவுக்கு ரொம்பவும் சந்தோசம். திடீரென்று அவருக்கு இருபது வயது குறைந்தது போன்று ஒரு மலர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.

“நிறைய இருக்கு.... சின்ன வயசிலே எனது அண்ணன் காமில் என்னை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக காரின் பின் கதவை திறந்து விட்டு அவர் முன் கதவை திறந்து சாரதியின் ஆசனத்தில் அமர்வார். நான் அந்த நொடியை பயன்படுத்திக் கொண்டு காரின் உள்ளே சென்று அமர்வது போல பாசாங்கு செய்து அவர் காரை ஸ்டாட் செய்வதற்குள் மறுபக்கக் கதவைத் திறந்து வெளியே வந்து வீட்டிற்குள் ஓடிவிடுவேன். பிறகு என்னை வீட்டார்கள் தூக்கிக்கொண்டு வந்து காரில் போட்டு பாடசாலைக்கு அனுப்புவார்கள்.
 
சிவாஜியுடன் சிவாஜி
சில நாட்களில் எட்டு மணிக்கு பாடசாலை செல்ல வேண்டும்மென்றால் யாருக்கும் தெரியாமல் வீட்டிலுள்ள கடிகாரத்தின் முள்ளை ஒன்பது மணியாக மாற்றிவைத்து விட்டு நேரமாகி விட்டது இனி செல்லமுடியாது என்று சொல்லி விடுவேன்.

வீட்டிலுள்ளோரும் நேரமாகி விட்டதாக நினைத்து என்னை பாடசாலைக்கு அனுப்பாது நிறுத்தி விடுவார்கள். இப்படிப் பலநாள் செய்திருக்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொள்ளவே இல்லை. அவ்வளவு அற்புதமாக நடிப்பேன். மருதானை சென் ஜோசப் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒரு முதியோர் இல்லம் இருந்தது. அங்கே நிறைய வாழை மரங்கள் வளர்ந்திருக்கும். எங்கள் கல்லூரியில் இருந்து பார்த்தால் தெரியும். அங்கே செல்வதென்றால் மதில்மேல் ஏறி மறுபக்கம் குதித்துத்தான் செல்லவேண்டும்.

நானும் எனது நண்பர்களும் அந்த வாழைத்தோட்டத்தில் பழங்கள் பழுத்திருக்கா என்று பார்க்க மதில்மேல் ஏறுவோம். அப்படி பழுத்திருந்தால் பாண் வாங்கிச் சென்று அந்த வாழைத்தோட்டத்தின் மத்தியில் பெரிய துண்டு விரித்து அதில் அமர்ந்து பாணோடு வாழைப்பழத்தையும் பறித்து சாப்பிடுவோம்.

பிக்னிக் செல்பவர்கள் உல்லாசமாக சாப்பிடுவார்களே அதுமாதிரிதான். அப்படி நாங்கள் திருட்டுத்தனமாக வாழைப்பழம் பறித்துச் சாப்பிடுவது முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.

இப்படி தொடர்ந்த எமது வாழைப்பழ வேட்டைக்கு ஒரு நாள் ஆபத்து வந்தது.

அந்த இல்லத்தின் தலைவிக்கு எப்படியோ விசயம் தெரிந்து ஒருநாள் நாங்கள் வாழைப்பழம் பறித்து சாப்பிவதை கண்டு துரத்திக்கொண்டு வந்தார்.

நாங்கள் பாண் கீழே விரிக்கும் சீட் போன்ற வற்றை அப்படியே விட்டு விட்டு தட்டுத் தடுமாறி மதில்மேல் ஏறித் தப்பினோம். தலை தப்பியதே புண்ணியம் என்று அன்றோடு அந்த வேலைக்கு குட்பை சொல்லிவிட்டேன். அதன் பிறகு ஒரு சம்பவம் நடந்தது.

அதை இன்று நினைத்தாலும் என் மனசு பகீரென்கிறது. சென் ஜோசப் கல்லூரியின் விஞ்ஞான கூடத்தில் படிப்பிக்க வந்த ஆறுமுகம் சேருக்கு அவர் அமரும் ஆசனத்தில் எங்களோடு படித்த ஒரு முரட்டு மாணவன் ‘ஆசிட்டை’ ஊற்றி வைத்திருந்தான். அது தெரியாத ஆறுமுகம் சேர் அதில் அமர்ந்ததும் துடித்துப் போனார்.

இன்று நினைத்தாலும் அந்த காட்சி அப்படியே என் கண்முன்னால் தெரியுது’ என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் மெளலானா. சிவாஜியுடனான நட்பு பற்றி கேட்டோம்.

“அது ஒரு பசுமையான காலம். இலங்கையில் ஜெமினிகணேசன் ரசிகர் மன்றம் இயங்கிவந்த காலம். நான் சிவாஜியின் ரசிகனாகத் தான் இருந்தேன். அந்த சமயத்தில் ரசிகர் மன்றத்தின் அழைப்பின் பேரில் நடிகர் ஜெமினிகணேசன் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது ஜெமினி சங்க மன்றத்தின் தலைவராக பி. எம். ஏ. சலாவுதீன் இருந்தார். அவர் ஊடாக நான் ஜெமினியை சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் அவர் என்னை இந்தியாவுக்கு சூட்டிங் பார்க்க அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
 
நடிகை ராஜஸ்ரீ,மற்றும் அவரது சகோதரியுடன்
மௌலானா
 பிறகு ஒரு நாள் நான் இந்தியாவிற்கு சென்று ஜெமினியை சந்தித்து அவருடன் சூட்டிங் பார்க்க ஏ. வி. எம். ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அங்கே ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பிடிப்புக்காக சிவாஜி வருவதாக செய்தி அடிபட்டது. நானும் சிவாஜியின் வருகைக்காக காத்திருந்தேன். அப்போது காரில் வந்து இறங்கினார் சிவாஜி. அவரை கண்டதும் எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. நான் சினிமாவில் பார்த்த அந்த நாயகன் என் கண்ணெதிரே நின்றபோது உடம்பு விதிர்த்துப் போனது. அவர் அருகில் சென்று என்னை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினி. சிவாஜி என் கைகளைப் பற்றினார். அவரின் கை பட்டதும் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த மாதிரி உணர்ந்தேன்.

ஆனந்த சுகம் அது! “சூட்டிங் பார்க்க வந்தியா?” என்றபடி நடந்தார்.

நான் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவனைப் போல ஜெமினியை மறந்து சிவாஜியின் பின்னே சென்று விட்டேன்.

அப்போது அவர் பின்னால் சென்றவன் தான். அதற்கு பிறகு நானும் ஜெமினியை மறந்து விட்டேன்.

ராமன் எத்தனை ராமனடி படப்பிடிப்பில் அவர் அன்று பேசிய வசனம் இன்றும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.

சிவாஜியின் அம்மாவாக எஸ். என். லக்ஷ்மி நிற்க, அவரை பார்த்து சிவாஜி சொல்கிறார்:

“இருட்டில இருந்த என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும் ஒரு பொண்ணுதான். வெளிச்சத்தில இருந்த என்னை இருட்டிற்கு கொண்டு போனதும் ஒரு பொண்ணுதான். சுகத்தை தாங்கின எனக்கு துக்கத்த தாங்க முடியலையே ஆயா!” என்று சொல்வார்.

அந்த படப்பிடிப்பை பார்த்ததுமே நான் திணறிவிட்டேன். அடடா இப்படி ஒரு கலைஞனை இவ்வளவு காலமா கவனிக்காமல் விட்டு விட்டேனே’ என்று தோன்றியது. அதன் பிறகு எனது நட்பு அவருடன் தொடர்ந்தது. சென்னைக்கு சென்றால் அன்னை இல்லத்தில் தங்குமளவுக்கு வளர்ந்திருந்தது. நான் அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். பதிலுக்கு அவர் ‘படவா, ராஸ்கல்’ என்று சொல்வார்.
 
சிவாஜியின் அரவனைப்பில்
 அது அவரின் அதீத அன்பின் வெளிப்பாடுதான். ஒருமுறை இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராம்குமார், பிரபு வந்திருந்தார்கள். சிவாஜியும் வருவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.

நான் ராம்குமாரிடம் அண்ணன் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.

அதற்கு ராம்குமார் ‘இலங்கையில் ஒரு சிவாஜி இருக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு போங்கள்’ என்று அப்பா சொன்னார் என்றார். இதைக் கேட்ட எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

எவ்வளவு பெரிய நடிகர்! நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்! என்று நினைத்தேன்.

ஒருமுறை அவர் பைலட் பிரேம் நாத் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்த போது மற்றொரு சம்பவம் நடைபெற்றது. அண்ணனுக்கு எங்க வீட்டு சாப்பாடென்றால் ரொம்ப பிடிக்கும். அவரின் வேண்டுகோள்படி அன்றைக்கு பகல் சாப்பாட்டை நான் எடுத்துக் கொண்டு சிவாஜி தங்கியிருந்த ஆமர் வீதி ‘பிரைட்டன் ரெஸ்ட்’ ஹோட்டலுக்கு சென்றிருந்தேன். அப்போது காலை பதினொரு மணியிருக்கும். அப்போது அண்ணன் வத்தளை விஜயாஸ்டூடியேவில் படப்பிடிப்பில் இருந்தார். நான் சாப்பாடு இருக்கும் அடுக்கு கேரியரை சிவாஜியின் மனேஜர் குருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

அவர் அதை சிவாஜியின் அறையில் வைக்காமல் வேறு ஒரு அறையில் வைத்திருக்கிறார். சிவாஜிக்கு முன்னதாகவே அங்கு வந்த விஜயகுமாரியும் மஞ்சுலாவும் அந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு விட்டார்களாம். பிறகு நல்ல பசியோடு வந்த அண்ணன் சாப்பாடு கேரியரை திறந்து பார்க்க அதில் ஒரு பருக்கை கூட இல்லாததை கண்டு கோபத்தில் குருமூர்த்தியை கூப்பிட்டு திட்டியிருக்கிறார். சாப்பிட்டவங்க கொஞ்சம்கூட மிச்சம் வைக்கலேயேன்று தான் அண்ணனுக்கு கோபம்”

இப்படி சிவாஜியுடனான நட்பை சுவைபட சொல்லும் சிவாஜி மெளலானாவிடம் அவரின் அந்தக்கால காதல் அனுபவங்கள் பற்றி கேட்டோம்.

எம்மை பார்த்து ஒரு புன்முறுவலோடு இப்போ நான் சொல்லப்போவது காதல்னு சொல்ல முடியாது.

ஆனாலும் அதுவும் ஒரு இதுதான் என்றவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு மேமன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் இருந்தார். அவருடன் தான் நான் கெரம் விளையாடுவேன். அவரின் தங்கை ரொம்ப அழகானவள்.

அவளை பார்ப்பதற்காகவே அவர் வீட்டிற்கு கெரம் விளையாடச் செல்வேன். அவரிடம் அந்த உணர்வை சொல்லத் தெரியாத வயது. அப்போதெல்லாம் ‘கெரம்’ போட்டிகள் கொழும்பில் நடைபெறும். வழக்கமாக வை. எம். சி. ஏ. வில் தான் போட்டிகள் நடைபெறுவதுண்டு. ஒரு நாள் நடைபெற்ற போட்டியில் நானும் எனது மேமன் நண்பரும் கெரம் போட்டியில் மோதினோம். அப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் நான் வெற்றி பெறும் நிலைக்கு வந்து விட்டேன். வெற்றிக்கு கடைசி சில நிமிடங்கள் தான் இருந்தன.
 
திருமணத்தனறு..
அப்போது நான் ஒருதலையாக காதலிக்கும் மேமனின் தங்கை என் அருகே வந்து அமர்ந்தாள். அவளின் உடம்பு என் மீது மெல்லிய வாசனையுடன் உரசிய போது ஏற்பட்ட ஸ்பரிசம் என் உடம்பை செக்கண்டுகளில் சூடேற்றியது என்னவோ ஆகிப்போனேன்.

என் கண்களுக்கு கெரம் போர்ட்டில் இருக்கும் காய்கள் எதுவுமே தெரியவில்லை. அவ்வளவுதான், நான் தோற்றே போனேன். இது திட்டமிட்டே மேமன் செய்த சதியா, இல்லை யதேச்சையாக நடைபெற்ற சம்பவமா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் கடைசிவரை அவளிடம் என் காதலை சொல்லவில்லை. இன்று அவள் எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை......” என்றவர் தனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார்.

“கோட்டை இன்டர்கொண்டினன்டல் ஹோட்டலில் எமது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு கொல்வின் ஆர். டீ. சில்வா, ஜே. ஆர். ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

எம்.பி. ஜவர்ஷா என்ற போட்டோகிராப்பர் வீட்டிற்கு வந்து புகைப்படம் எடுத்தார். தேனிலவுக்கு காலி, அம்பாந்தோட்டைக்கு சென்றோம். அந்தக் காலத்தில் ஹனிமூனுக்கு செல்வதென்றால் தனியாக போக முடியாது. நம்மளோடு பத்து பதினைந்து பேர் கூடவே வருவாங்க. இரவில் தூங்கும் நேரத்தில மட்டும் தான் புதுமணத்தம்பதிகள் தனியாக இருக்க முடியும்.

மற்ற நேரங்களில் எல்லாம் நம்மைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். இந்தக்காலத்தில ஹனிமூன் போறவங்க ரொம்ப கொடுத்து வைத்தவங்க” என்று பெருமூச்சு விடுகிறார் மெளலானா.
சிவாஜி மௌலானா,மேஜர் சுந்தர்ராஜன்,
மற்றும் மிப்தார்
 வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் யாராவது இருக்கிறார்களா மெளலானா?

கொஞ்சம் யோசித்து விட்டு சொன்னார்.

“என் தந்தையாருடைய தம்பி மகன் மிப்தார். அவரும் நானும் நண்பர்கள் போல்தான் பழகினோம். எனது நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் அவர்தான் உடனிருப்பார். கண்ணதாசனுக்கு எப்படி கலைஞரோ, அவர் மாதிரிதான் மிப்தாரும் நானும்.

மிப்தாருடன்தான் முதல் முதலாக சிகரெட் குடித்து பழகினேன். பாத்ரூமில் கதவை சாத்திக் கொண்டு ‘விக்டர்’ என்ற பெயருடைய சிகரெட்டை குடிப்போம். முதன் முதலாக சிகரெட்டை குடிக்கும் போது நெஞ்சு எரிந்தது. இருமல் வந்து கொண்டே இருந்தது. ஒரு வகையில் என் சிகரெட் பழக்கத்திற்கு வித்திட்டவர் மிப்தாராகத்தான் இருக்க வேண்டும். ஒரு முறை சினிமா பார்க்க எங்களிடம் காசு இல்லை, பொறளை ரெக்ஸ் தியேட்டரில் ‘சைனாடவுன்’ என்ற படம் வெளியாகிய புதுசு.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டுமே என்ற பதை பதைப்பு.

வோர்ட் பிளேஸ்ல இருந்த எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் நிறைய பலா மரங்கள் இருந்தன. திடீரென்று மிப்தார் கொடுத்த ஐடியாவின்படி நானும் மிப்தாரும் மதில் ஏறி குதித்து, அடுத்த வீட்டு பலாக்காய்களை பறித்தோம்.

மிப்தார்தான் மரம் ஏறி காய்களை பறித்துப் போட்டார். பிறகு ஆளுக்கு இருபத்தைந்து காய்களை உரப்பையில் போட்டு தூக்கி கொண்டு போய் மருதானை மார்க்கட்டில் விற்றோம். கிடைத்த பணத்தில் சைனாடவுன் பார்த்தோம்.

அந்த நண்பரை என்னால் மறக்க முடியாது, என்ற மெளலானாவிடம் இன்றும் நீங்கள் பயப்படுகிற விடயம் என்ன என்று கேட்டோம். “கடவுளுக்கு” என்று ஒரே வார்த்ததையில் பதிலளித்த மெளலானா ஸ்டைலாக சிகரெட்டை உதட்டில் வைத்து பற்றவைத்தபடி திரும்புகிறார்.

அந்த அசைவில் அப்படியே சிவாஜியின் உருவம் தெரிகிறது.

உலகத்தில் ஒருவர் மாதிரியே ஏழுபேர் இருப்பார்களாம்.

மிகுதி ஆறு பேரைத்தான் தேடிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் தான் அச்சு அசலாக இங்கே இருக்கிறாரே!

No comments:

Post a Comment