Sunday, February 10, 2013

இனி அவன் நாயகி சுபாஷினியுடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு


'இனி அவன்' இலங்கைத் தமிழ்ப் படத்தின் மூலம் இலங்கை தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கும் இளமை துள்ளும் இனிமையான நடிகை சுபாஷினி. தென்னிந்திய, இலங்கை சிங்கள சினிமா, தொலைக்காட்சி நாடக வாய்ப்புகள் தம்மை தேடி வந்தாலும் ரொம்பவும் கவனமாக வாய்புகளைத் தேர்வு செய்து அம்மா, அப்பாவுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பதாக கூறுகிறார் சுபா.
"நமக்கென்று ஒரு கலாசாரம் பண்பாடு இருக்கிறது. அதற்கு அமைவாகவே நடந்துகொள்ள வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் அசோக ஹந்தகமை என்னிடம் நடிக்கச் சொல்லி கேட்டப்போது என் பெற்றோரிடம் அனுமதி பெற்ற பிறகே ஓகே சொன்னேன்" என்கிறார் சுபாஷினி.


இலங்கை சிங்கள பட உலகில் அசோக ஹந்தகம சர்ச்சைக்குறிய இயக்குநர். இவர் இயக்கிய ஒரு படம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய படங்கள் சர்ச்சைக்குரியனவாக சிங்களக் கலையுலகில் பேசப்படுவை. இவரது சிந்தனைப் போக்கு பலருக்கு புரிவதில்லை. சிலர் புரிந்துகொள்ள முயல்வதில்லை. வித்தியாசமான பார்வை கொண்ட ஒரு இயக்குநர் இவர். இவர் கையால்தான் சுபாவுக்கு மோதிரக்குட்டு கிடைத்திருக்கிறது!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கி வெளியிட்டு இருக்கும் தமிழ் படமான 'இனி அவன்' மண் திரைப்படத்தின் பின்னர் தமிழ்த் திரையுலகுக்கு மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. அதற்காக படத்தில் உள்ள குறைகளை எல்லாம் தவிர்த்து விட்டு அசோகவை பாராட்டலாம். ஒரு சிங்களவர் தமிழ்த் திரைப்படமொன்றை இயக்கி வெளியிட முன்வந்ததே பெரிய விஷயம்தான்.

"இயக்குனர் அசோகவின் படத்தில் நடிப்பதை கேள்விப்பட்ட சிலர் அவர் படத்திலா? என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் ரொம்பவும் நல்ல இயக்குநர்" என்று அசோக ஹந்தகமவுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் சுபாஷினி.

இந்த இளம் நடிகையின் பிறப்பிடம் கொழும்பு வத்தளை. ஆரம்பத்தில் நேத்ராவில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தொடங்கிய பயணம் சக்தியில் சங்கமித்து இப்போது வசந்தம் டீ.வியில்... வர்ண ஜாலம் காட்டுகிறது இவர் குரல்.
இனி அவன் பட வாய்ப்பு பற்றி சுபாஷினி எம்மிடம் பேசினார்.
"'யா' டிவியில் 'கண்ணகிபுரம்' என்ற ஒரு நாடகம் தயாரித்தார்கள்.  அதில் 'சுபா'என்ற பாத்திரத்தில் நான் நடித்தேன். அந்த நாடகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் வத்தீஸ் வருண். அவரும் அப்போது வசந்தம் டீவியில் பணியாற்றி; கொண்டிருந்தார். அவர் என்னிடத்தில் சினிமாவில் நடிக்க ஒரு கதாநாயகியை தேடுகிறார்கள்... உங்கள் பெயரைக் கொடுக்கவா என்று கேட்டார். நான் அம்மா, அப்பாவிடம் கேட்டு,விட்டு; சொல்கிறேன் என்றேன். அதோடு அந்த விசயத்தை நானும் மறந்து விட்டேன். பிறகு ஒரு நாள் நான் அலுவலகம் விட்டு வெளியே வரும்போது ஒரு காரில் இருந்த இருவர் என்னை கை காட்டி அழைத்தார்கள். நான் பயத்தில் உள்ளே ஓடி ஒளிந்து விட்டேன். சக ஊழியர்களிடம் காரில் வந்தவர்கள் என்னை அழைக்கிறார்கள் என்று விஷயத்தைச் சொன்னேன். என்னை பஸ் தரிப்பிடம் வரை வந்து விடுங்கள் என்று கேட்டேன். அப்போது அங்கே வந்த வதீஸ் வருண் காரில் வந்திருப்பவர்தான் இயக்குநர் அசோக ஹந்தகம என்ற விபரத்தை சொன்னார். என் பயமும் தெளிந்தது.

வெளியே வந்த என்னைப் பார்த்த ஹந்தகம"இந்தப் பொண்ணு அந்த வேடத்துக்கு பொருந்தாது. ஏன் என்றால் போரில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்க மாட்டாள். நீங்க ஹேர் ஸ்டைலை சாதாரணமாக மாற்றினால் நடிக்கலாம்"என்றார் என்னிடம். அதன் பின்னர் ஹந்தகம தந்த திரைக் கதையை வாங்கிச் சென்று அம்மாவிடம் கொடுத்து படித்து பார்க்கச் சொன்னேன்.
ஆரம்பத்தில் என் வீட்டார் எவருக்கும் நான் சினிமாவில் நடிக்க போவதில் இஷ்டம் இல்லை. கதையை பார்த்த பிறகு அம்மா ஓகே சொல்ல என் கேச ஸ்டைலையும் மாற்றி இனி அவனில் நாயகி ஆனேன்"என்று விவரம் சொன்னார் சுபா.

"இனி அவன் படப்பிடிப்பு முழுவதையும் யாழ்ப்பாணத்திலேயே நடத்தி இருக்கிறார்கள். மொத்தமாகவே பட்டப்பிடிப்புக்கு பத்து நாட்கள் பிடித்தன. அதிகாலையில் தொடங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெறும். எனக்கும் இது முதல் படம் என்பதால் புது அனுபவம். படத்தில்  வசனங்கள் குறைவாக இருந்ததால் நிறைய டேக்குகள் போகவில்லை," என்று சொல்லும் சுபாஷினி, படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஷ்யமான சம்பவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு காட்சியில் நான் தூணில் தலை முட்டிக்கொண்டு அழவேண்டும். அதற்காக ஒரு தூணை செட் போட்டு நான் தலையை முட்டும் அந்த இடத்தில் 'ரெஜிபோம்' ஒட்டி பெயிண்ட் செய்து இருந்தார்கள். ஆக்ஷன் சொன்னதும் நான் வேகமாக சென்று தூணில் மோதினேன். 'டமார்'என்ற சத்தம்! என் நெற்றி அடிபட்டு வீங்கி விட்டது. காட்சி இயற்கையாக வரவேண்டுமே என்ற ஆர்வத்தில் ரிஜிபோமில் சரியாக முட்டாமல் தூணில் முட்டியதால் வந்த வினை இது! அதனால் அன்று படப்படிப்பு ரத்தானது.

படத்தின் மற்றொரு காட்சியில் நான் ஓடி வரும்போது இரண்டு பக்கமும் தீப்பற்றி எரிவதாக காட்டியிருப்பார்கள். அந்தக் காட்சியில் நான் ஓடி வரும்போது தடுக்கி கீழே விழுந்து விட்டேன். அய்யோ திரும்பவும் ஆரம்பத்திலிருந்தே ஓடி வரவேண்டுமே என்று நினைத்தபோது இயக்குநர் அசோக்க, 'நீ கீழே விழுந்து வந்ததுதான் நல்லா இருக்கு. அதனால் திரும்பவும் விழுந்து விழுந்து ஓடி வா' என்றார். அந்த காட்சியில் நடித்து முடித்த போதுதான், இதற்கு கீழே விழாமலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்."

'இனிஅவன்'படத்தின் சிறப்புக் காட்சியை அம்மாவுடன் சென்று பார்த்த சுபாஷினிக்கு தான் வெள்ளித் திரையில் தோன்றியதைப் பார்க்க பெரிய ஆச்சரியமாக இருந்ததாம். அம்மாவின் பாராட்டு தனக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாக மகிழும் சுபாஷினியின் ரோல்மாடல் நடிகை ப்ரியாமணிதானாம். துடுக்குத்தனமாக பருத்தி வீரனில் நடித்திருக்கும் ப்ரியாமணியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன சுபா, கடந்த வானவில் இதழில் வெளியாகி இருந்த ப்ரியாமணி ஆல்பத்தை தடவிக் கொடுத்து முத்தமிடவும் செய்தார்.

"நான் வத்தளை புனித அன்னம்மாள் பாடசாலையில் கல்வி கற்றப்போது பள்ளி விடுமுறை நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. வகுப்பில் டீச்சரும் இல்லை, சிஸ்டரும் இல்லை. எனக்கு ஒரே குஷி. உடனே வகுப்பறை பெஞ்சுகளை ஒதுக்கி வைத்து விட்டு வகுப்பறையை குட்டி மைதானமாக்கி விட்டு அங்கே இருந்த ஒரு மேசையின் பழகையை கழற்றி எடுத்து பேட் மாதிரி செய்து நண்பிகளோடு கிரிக்கெட் விளையாடினேன். நண்பி வீசிய பந்தை நான் விலாசித்தள்ள, பந்து கூரையில் தொங்கி கொண்டிருந்த அந்த லொட லொட ஃபேனில் பட்டு ஃபேனின் ஒரு சிறகு கழன்று விழுந்தது.

நானும் நண்பியும் அதிர்ந்து போனோம். அடுத்த நிமிடம் அந்த விடத்தை விட்டு எஸ்கேப். பிறகு அடுத்த நாள் காலையில் எங்களின் வகுப்புக்கு வந்த கமலா சிஸ்டர் முதல் நாள் நடந்த கூத்துக்களை குடைய ஆரம்பித்தார். நானும் நண்பிகளும் மேசையை சேதப்படுத்தியதை மட்டும் ஒப்புக்கொண்டோம். ஃபேனை நாங்கள் உடைக்கவில்லை என்று சத்தியம் செய்தோம். எங்கள் மீது சிஸ்டருக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் எங்களை மண் தரையில் முட்டிப் போட்டு உட்கார செய்து விட்டார். ஃபேனை உடைத்தவர் உண்மையை ஒத்துக்கொண்டால் எழும்பிப் போகலாம் என்றார். நாங்களும் பிடிவாதமாக மூன்று மணி நேரம் அப்படியே முட்டி போட்டிருந்தோம். சிஸ்டருக்கு எங்கள் மீது இரக்கம் வந்து எழும்பி போக சொல்லி விட்டார். உண்மையில் ஃபேனை உடைத்தது நான்தான் என்று புன்னகைக்கிறார் சுபாஷினி. அவரின் புன்னகை 'நாங்கள் அப்பவே அப்படி' என்பது போல இருந்தது.

1 comment:

  1. avnga padihathu wattala anamaal illa. kohikeada anamaal school

    ReplyDelete