Tuesday, February 12, 2013

மனம் திறக்கிறார் கோபிநாத்  'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.'

'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது'

'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்'


'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று'


கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே  உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்டியோடு டீயை ருசித்து கொண்டிருக்கும் மனிதர்களோடு விஜய் டீவி புகழ் கோபிநாத்தும் டீ கிளாசோடு நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞன் கோபியை பார்த்து "ஆ... கோபி சார் நீங்களா உங்களை பேஸ்புக், டுவிட்டர்னு தேடிக்கிட்டிருக்கிறேன். நீங்க எங்கே சார் இங்கே?" என்கிறார் ஆச்சரியத்தோடு. "டேய் உன்ன யாருடா அங்கெல்லாம் தேடச்சொன்னது? நேரா ரங்கராஜபுரத்திற்கு வா நான் இந்த பெட்டிக்கடையில்தான் இருப்பேன்," என்று அலட்டல் இல்லாமல் பதில் வந்து விழுந்தது.


கோபிநாத் புதுக்கோட்டை அறந்தாங்கியை பிறப்பிடமாக கொண்டவர். அறந்தாங்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பகல்வியை கற்றிருக்கிறார். அதற்குப் பிறகு சென்னையில் சில காலம் படித்திருக்கிறாராம்.
"செய்தியாளர் என்பதுதான் என்னுடைய அடையாளம். மற்றவைகள் எல்லாம் அதில் இருந்து வந்த பிற அடையாளங்கள்தான். திரைக்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில் என்.டீவி, சி.என்.பி.சீ ஆகியவைகளில் செய்தியாளராக பணியாற்றியிருக்கிறேன்.

நான் தொலைக்காட்சிகளில் செய்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சமூகத்தின் பின்புலத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. சிகரம் தொட்ட தமிழர்கள், சிகரம் தொட்ட மனிதர்கள், மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்," என்று சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை.

ஏழு வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் நீயா, நானா? பற்றி கேட்டோம். "நீயா நானா ஒரு டீம் வொர்க். இரு துருவங்களைச் சேர்ந்த மனிதர்கள் அறிவு ரீதியாக மோதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அந்த நிகழ்ச்சி. மக்களின் மன ஓட்டத்தை முழுவதுமாக வெளிப்படுத்த ஒரு பொது மேடை அமைத்து கொடுத்திருக்கிறோம்.

பொசிடிவ்வை, நெகடிவ் வெறுப்பதும், நெகடிவ்வை பொசிட்டிவ் வெறுப்பது வாடிக்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சி பலவிதமான கருத்துக்களின் சங்கமம் என்றுதான் சொல்லவேண்டும். மறுத்து சொல்ல ஆளில்லாத நிலையில் நான் சொல்லும் கருத்தெல்லாம் சரியாகத்தான் தெரியும். ஆனால் ஒருத்தர் அந்தக் கருத்தை மறுத்துச் சொல்லும்போது எனது கருத்து மறுபரிசீலனை செய்யப்படுகிறது. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகவும் இருக்கிறோம். பொசிடிவ்வும், நெகடிவ்வும் சேராமல் நமக்கு மின்சாரம் வருமா? அது மாதிரிதான் இதுவும்.

ஆரம்பத்தில் ஒரு மணிநேரமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பிறகு 2 மணி நேரமாக மாற்றப்பட்டது. பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருப்பதால் நேரமும் அதிகரிக்கப்பட்டது. தமிழர்கள் இயல்பாகவே கருத்துக்களை முன்வைப்பதில் கில்லாடிகள். அதனால் நமது மக்கள் பேசுவதை பார்த்து நாம் ஆச்சரியப்பட அவசியமில்லை. அவர்களுக்கு இப்போது பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். நாங்கள் பேச்சாளர்களை தேர்வு செய்வதில்லை. சாதாரண மனிதர்களைத்தான் தெரிவு செய்கிறோம். அப்படி தெரிவு  செய்பவர்களிடம் பேச வைத்து ஒத்திகை எதுவும் பார்ப்பதில்லை. ஒத்திகையில் அவர்கள் எல்லாவற்றையும் பேசிவிட்டால் பிறகு அவர்கள் எப்படி மேடையில் பேசுவார்கள்? நான் அவர்களை நேரிடையாக நிகழ்ச்சியில்தான் சந்திக்கிறேன்," என்று சொல்லும் கோபியிடம், ஆச்சர்யம், அமானுஷ்யம் ஆகிய சொற்களை நீங்கள் உச்சரிக்கும்போது அது தனி அழகாக இருக்கிறதே, எப்படி கண்டு பிடித்தீர்கள்? என்று கேட்டோம்.

"அந்த வார்த்தையே ஒரு மிரட்சியானதுதான். நடந்தது என்ன இயக்குனர் சாய்ராம்தான் அந்த வார்த்தையை என்னிடம் சொன்னார். பிறகு அந்த வார்த்தையை பேசிய பிறகு அவரே என்னை பாராட்டவும் செய்தார். நான் எனது எழுத்துக்களிலும், பேச்சிலும் நிறைய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். நீங்கள் உட்பட எல்லோரும் இந்த ஆர்ச்சர்யம், அமானுஷ்யம் பற்றிதான் பேசுகிறீர்கள். flexiblity நெகிழ்வுத்திறன் என்ற வார்த்தையை நான் மட்டும்தான் ஊடகத்தில் பயன்படுத்துகிறேன்.

ஏனென்றால் இன்று ஊடகத்தின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. வட்டார வழக்குகள் குறைந்துப்போய் பொதுத் தமிழ் வந்து விட்டது. ஊடகம் சொல்வதுதான்  தமிழென்று ஆகிவிட்டது. அப்படி பார்த்தீர்கள் என்றாள் நெகிழ்வுதிறனில் தொடங்கி, சமூக விழுமியங்கள் வரை நான் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறேன். இப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்தவதற்கு காரணம், ஊடகத்தின் வழியாகத்தான் மொழி எல்லோருக்கும் போய்ச் சேருகிறது. திசைவழி என்ற வார்த்தையை கோபிநாத் சொல்கிறாரே என்று கோபிநாத்தை விரும்புகிறவர்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சொல்லைப் பற்றி ஆராயவும் செய்கிறார்கள். அதனால் அமானுஷ்யம் மட்டும் கோபிநாத் அறிமுகம் செய்தது அல்ல, அதை விட அழகான பல வார்த்தைகளை நான் அறிமுகம் செய்திருக்கிறேன்," என்று படபடத்தவர் மீண்டும் பேசினார்.
"தமிழில் நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று எதுவும் கிடையாது. தமிழே நல்ல தமிழ்தான். புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் பேசினால் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் மட்டுமே பேசுவார்கள். ஆனால் நாம் ஆங்கிலம் கலந்த ஒரு தமிழை பேசுகிறோம். அது மிகப் பெரிய குற்றமாகாது. ஏன் என்றால் எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் பலமான மொழி என்பது தெரியும். இதனால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது. இது ஒரு செம்மொழி. இதற்கு தன்னை காப்பாற்றி கொள்கிற, தன்னை தற்காத்துக் கொண்டு தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்கிற தன்மை உள்ளது. எல்லா இலக்கண அளவுகளும் அதுக்குள்ளேயே இருக்கு. அதனால் இந்த மொழியையெல்லாம் நாம் காப்பாற்ற முடியாது.

மொழிதான் நம்மள காப்பாற்றும். அதனால் யாரும் தமிழில் பேசும்போது நீங்கள் ரொம்ப அருமையாக நல்ல தமிழில் பேசுகிறீர்கள் என்று யாரையும் பாராட்டுவதை முதலில் நிறுத்தனும். ஏனென்றால் அது ஒரு கூடுதல் சிறப்பு மாதிரி தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசினால் பாராட்டுகிறார்கள். தாய்மொழியை பேசுவதற்கு எதற்கு பாராட்டனும்? ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறவர்கள் என்ற விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு முடிந்தவரை தமிழில் பேசுங்கள். தானாகவே மற்றவனும் பேசுவான்.

ரஷ்யன் லத்தீன் மொழியில் பேசனும் என்றுதான் ஆசைப்படுகிறான். ஒவ்வொருவரும் மற்ற மொழிகளின் மீது தீராத காதலோடுதான் இருக்கிறார்கள். அடுத்தவன் வீட்டு மல்லிகை அதிகம் மணக்கும் என்பதுபோல. இது யதார்த்தத்தில் இருக்கக்கூடிய உண்மை. ஏனென்றால் தன் மொழியின் மீது உள்ள ஆளுமை தெரியாதவர்களாக இருப்பதால், இந்த பிறமொழி காதல் உண்டாகிறது. மொழிக்கலப்பு என்பது இப்போது வந்த ஒன்றல்ல. அது கால காலமாக இருந்து வருகிறது. இனிமேலாவது மொழியை உணர்வுபூர்வமான ஒரு சடங்காக பார்க்காதீர்கள். அது கற்றலின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டியது.

கணனிக்குள் தமிழை கொண்டு வருவது, கணனி வழியாக தமிழை கொண்டுபோய் சேர்ப்பது என்ற காலக்கட்டத்தில நாம் இருக்கிறோம். இப்போ அதைதான் செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோரும் செந் தமிழில் பேசுங்கள் என்பதெல்லாம் எவ்வளவு தூரம் சரிபட்டு வரும் என்பது எனக்குப் புரியவில்லை. எனக்கு என் மொழியை அழகாக பேச முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ரொம்பவும் மொடர்னாக தமிழை பேசமுடியும். அதற்கான முன்னுதாரணங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மயில்வாகனம், கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழில் மிக அழகாக பேசுபவர்கள். இவ்வளவு ஸ்டைலாக எவனுக்கு தமிழ் பேச முடியும்? ஆனால் ஆங்கிலத்தில்தான் அழகாக பேச முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் என்பது ஒரு இசை மொழி. அதைப் பயன்படுத்த வாய்மொழியால் அந்த பழக்கத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. மொழி என்பது புரிதலுக்கானது என்று ஒருத்தன் நினைக்கிறான். மொழி என்பது எனது அடையாளம் என்று இன்னொருத்தன் நினைக்கிறான். மொழி என்பதை அடையாளமாக நினைப்பவன் மற்றவனுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

நான் மொழியை எனது அடையாளமாக நினைக்கவில்லை. என் மொழி மற்ற மொழிகளை விட சிறப்பானதாக இருப்பதனால் நான் தமிழில் பேசுகிறேன். எனினும் இந்த சிறப்பை ஒரு தகுதியாக பார்க்கவேண்டிய அவசியமில்லை. இதை சிறப்பு தகுதியாக பார்க்கவேண்டும் என்பதுதான் எனக்கு பிரச்சினையாக தோன்றுகிறது," என்ற கோபி செல் மணியடிக்க ஒரே வரியில் பதிலளித்துவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.
"நிறைய தேடல் என்னிடம் இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதி வைத்து பாடமாக்கி பிறகு கெமராவுக்குள் முன்பாக சொல்வது என் அகராதியிலேயே கிடையாது. டைரக்டர் விசயத்தை சொல்வார்,நான் அதை உள்வாங்கி கொண்டு பேச ஆரம்பிப்பேன் அவ்வளவுதான். என்னிடம் ஸ்கிரிப்ட் தந்தால் எனக்கு பேச்சே வராது", என்றவரிடம், உங்களுக்கு மற்றவர்களின் தாக்கம் இருக்கிறதா என்று வினவினோம்.

"நான் ஒன்றும் சுயம்பு இல்லை நிறைய பேரின் தாக்கம் எனக்குள் இருக்கிறது மனிதனே குரங்கோட தாக்கம்தானே!
இத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும் மனிதன் குரங்கின் தாக்கமாகத்தானே இருக்கிறான். ரவி பெர்ணாட்சாவில் தொடங்கி, கே.எஸ்.ராஜா, உதுமான்கனி, அப்துல் ஹமீது என்று எல்லோருடைய தாக்கமும் எனக்குள் இருக்கிறது. இதை தாண்டி முன்னால் உள்ள டீக் கடையில் கறிவேப்பிலை விற்கிற பாட்டி, பக்கத்து கடையில் வடை சுடுகிற அண்ணன், பரோட்டா மாஸ்டர் இவங்களுடைய தாக்கமும் என்னிடம் இருக்கிறது. தாக்கம் என்பது பெரிய மனிதர்கள், தலைவர்கள் ஏற்படுத்துவது அல்ல. எதிர்வீட்டுக்காரராகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ கூட இருக்கலாம்," என்றவரிடம் உங்களின் நிகழ்ச்சிகள் சிலவற்றில் உலக நாயகன் கமலை நீங்கள் கொஞ்சம் அதிகமாக புகழ்வதாக தெரிகிறதே என்று கோபியின் வாயைக் கிளறினோம். விழிகளை அகல விரித்த கோபி எம்மை நிமிர்ந்து பார்த்தார்.

"தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஒரு பெரிய கலைஞன். இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று ஒரு சாதாரண ரசிகனுக்குத் தெரியும்போது அது கமலுக்கு தெரியாதா? ஆனால் அப்படியும் அவர் அதில் சில ரிஸ்க் எடுக்கிறார் என்றால் தான் நிற்கிற ஊடகத்தின் வழியாக ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் பாராட்டுக்குறியவர்," என்று சொல்லி தமது நேர்காணலை கோபிநாத் நிறைவு செய்தார்.


3 comments:

  1. நல்ல பதிவு.....

    ReplyDelete
  2. மிகவும் அருமை ..மிக அழகாகச் சொல்லியுள்ளார் இலங்கை வானொலி அறிவிப்பளரின் தமிழ் பேச்சின் அழகை மிகவும் உண்மை அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு

    ReplyDelete