Sunday, February 24, 2013

கே.எஸ் சிவகுமாரனின் ஞாபக வீதியில்…

"பவளக்கொடி படம் எப்படி?'' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன்"பேட்டி – மணி ஸ்ரீகாந்தன்


தமிழில் இலக்கியம், திறனாய்வுத் துறைகளில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மிகத் திறமையாக ஈடுபட்டு வரும் இவர் உங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் தான் கே. எஸ். சிவகுமாரன். மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடிக் கிராமத்தில் பிறந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட இவர் ஆங்கில இலக்கியப் புலமை மிக்கவர். ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் மிகிச் சிலத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.

ஓமான் நாட்டில் 1998 முதல் 2002ம் ஆண்டு வரை ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்திருக்கும் இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிருக்கிறார்.

அமெரிக்காவிலும் இப்பணி தொடர்ந்தது. கொழும்பு இலக்கிய வட்டாரங்களில் புகுந்து புறப்பட்டு வரும் கே. எஸ். பல நூல்களின் ஆசிரியர்.

நம் நாட்டின் பிரபல நாளேடுகளிலும் இலங்கை வானொலியிலும் முக்கிய பதவிகளை வகித்த இவரின் எழுத்துப்பணி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் அது இவரின் இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று தணிக்கைச் சபை உறுப்பினரான இவரை மாலை மயங்கும் ஒரு அந்திப்பொழுதில் நினைத்தாலே இனிக்கும் தமது அந்தக்கால அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“என்னடா புளியந்தீவுக்கு பக்கத்தில் சிங்களவாடி என்கிற பெயர் வருதே என்று பார்க்கிறீர்களா? அந்தக் காலத்தில்ல மட்டக்களப்பு பகுதியில் சிங்களவர்கள் முதலில் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

அதுதான் சிங்களவாடி என்ற பெயர் வரக் காரணம்!” என்று தனது ஊரின் பெயருக்கு விளக்கம் தந்த கே. எஸ். சிவகுமாரன் மேலும் தொடர்ந்தார்.

என் பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். என் அம்மம்மா கேரளாவைச் சேர்ந்தவராக  இருக்க வேண்டும்.
அவரின் பெயர் அம்மனி பிள்ளை.... பாருங்கள் பெயரிலேயே மலையாள வாடைவீசுகிறது! அம்மனி பிள்ளையின் கணவர் அதாவது என் அப்பப்பா கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புகையிலை வியாபாரம் செய்திருக்கிறார்.

அப்போதுதான் அம்முமபிள்ளையை இலங்கைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று புன்னகையுடன் ஆரம்பித்த சிவகுமாரன், என்னைப் பார்க்கும் போது அந்த மலையாள சாயல் தெரியலையா? என்று சிரிக்கிறார்.

சிறுவயதில் நீங்கள் செய்த குறும்பை கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன் என்று சிவகுமாரனை அந்த கறுப்பு- வெள்ளை காலத்து கலர் கனவுகளை நோக்கி அழைத்துச் சென்றோம்.

“வரலாற்றில் பதிவு செய்யுமளவுக்கு நான் பெரிய குறும்பு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவிப் பிள்ளை. ரொம்பவும் சமத்து என்றுதான் சொல்லவேண்டும். மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியில்தான் என் வீடு அமைந்திருந்தது. ‘லேக்ரோட்’ என்று அதைச் சொல்வார்கள். என் வீட்டிற்கு முன்னால்தான் மட்டக்களப்பு வாவி. எனக்கு சகோதரர்கள் ஐவர். பஞ்சபாண்டவர்கள் நாங்கள்.

அதில் நான்தான் கலைத்துறையில் கொஞ்சம் நாட்டம் உடையவன். பாடசாலை விடுமுறை நாட்களில் என் உறவினரும் நண்பருமான கே. சிவலிங்கத்துடன் சேர்ந்து என் வீட்டிலேயே நாடகம் போடுவேன்.
இளமைத் தோற்றம்

அந்த நாடகம் என் வீட்டில்தான் அரங்கேறும். பெரும்பாலும் நாடகங்களில் நான் வில்லன் வேடம்தான் போட்டிருக்கிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்லவன். நான் போடும் நாடகத்தை என் உறவுக்காரர்கள் மட்டுமே பார்த்து ரசிப்பார்கள்.

நாடகம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து சதம் வீதம் கட்டணமாக வசூலிப்போம். கிடைக்கும் தொகைக்கு புத்தகங்கள் வாங்குவோம்.

அப்படி வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேர்த்து வீட்டிலேயே ஒரு நூலகத்தை நடத்தினேன். அந்த நூலகத்துக்கு கிருஷ்ணா லைப்ரரி என்று பெயரும் வைத்திருந்தேன்.

ஒருநாள் நானும் எனது தம்பியும் சேர்ந்து பாடசாலையில் குத்துசண்டை பார்க்கப் போகிறோம் என்று அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்கப் போனோம். அதுவும் இரவுக்காட்சி.

இன்றைக்கு மாதிரி பெரிய தியேட்டர் எல்லாம் அப்போது கிடையாது. கொட்டகை தியேட்டர்தான். மண் தரையிலும் பெஞ்சிலும் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த கொட்டகைத் தியேட்டரின் பெயர் சீதா டோக்கீஸ்.

அன்று திரைப்படங்களை ஆங்கிலத்தில் டோக்கீஸ் என்றுதான் அழைப்பார்கள். தமிழில் பேசும் படம் என்று சொல்லலாம். கே. ஆர். ராமசாமி நாயகனாக நடித்த பவளக்கொடி படம் வெற்றிகரமாக அந்தக் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் தம்பியும் அதை ரொம்பவும் ரசித்துப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த போது நல்ல இருட்டு. பயத்தைப் போக்க வீடு வரைக்கும் படத்தில் இடம் பெற்ற ‘அன்னம் வாங்கலியோ அம்மா அன்னம் வாங்கலியோ’ என்ற பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

பிறகு இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் தம்பியும் படுத்துக் கொண்டோம். வீட்டாருக்கு தெரியாமல் படம் பார்த்துவிட்டோம். அதுவும் குறிப்பாக அப்பாவை ஏமாற்றிவிட்டோம் என்ற சந்தோஷம். தம்பியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

“டேய் தம்பி, நம்ம ‘பவளக் கொடி’ பார்த்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. எப்படியோ தப்பித்தோம்” என்று பெருமூச்சு விட்டபடி நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் காலை பாடசாலை செல்ல நானும் தம்பியும் தயாரானோம். அப்போது அப்பா எங்களிடம் வந்து, “அன்னம் வாங்கலியோ பாட்டு நல்லா இருக்காடா!” என்று கேட்டார். எனக்கு நெஞ்சு பகீரென்றது.

அடுத்த நொடியே ‘பவளக்கொடி எப்படி?’ என்றார். நானும் தம்பியும் மூச்சடைத்து நின்றோம். வீட்டுக்கு முன்னால் எங்களுக்கென்றே திமிசு கட்டையாக வளர்ந்திருந்த மல்லிகை செடியின் கிளையை ஒடித்து எனக்கும் தம்பிக்கும் செமத்தியாக பூசை கொடுத்தார்.

சீதா டோக்கீஸ்சில் படம் பார்த்த விசயம் அப்பாவுக்கு எப்படித் தெரியவந்தது என்று எனக்கு இது வரை தெரியவில்ல. ஒருவேளை அன்றிரவு நான் தூங்கும் போது தூக்கத்தில ஏதும் வாய் உளறி அன்னம் வாங்கலியோ... பாட்டை பாடிவிட்டேனோ தெரியவில்லை.

என்னதான் அடித்தாலும் அப்பா ரொம்ப நல்லவர். எங்கள் ஊரில் ஒரு முஸ்லிம் தையல்காரர் இருந்தார். அவர் பெயர் சரியாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ‘டெய்லர் ஷா’ என்றுதான் நினைக்கிறேன். அவர் கடையில்தான் எனக்குப்பிடித்த உடையெல்லாம் தைத்துத் தருவார் அப்பா.

எனது உடையெல்லாம் மேல் நாட்டு பாணியில் தான் இருக்கும். ஈழத்து சிறுகதை படைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் இந்த டெய்லர் ஷாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தந்தையுடன் கே.எஸ். அருகே தம்பி
ஆனாலும் எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. காலப்போக்கில் எங்க ஊரிலிருந்து அந்த டெய்லர் மறைந்து போனார். கடையும்தான்.

இப்படி நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கே. எஸ்ஸிடம் தங்களின் அந்தக் கால காதல் அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றோம்.

“நான் சின்ன வயசிலேயே ரொம்பவும் பயந்தாங் கொள்ளி. ஆனால் படிப்பிலகெட்டி.

ஆரம்பக் கல்வியை தமிழ் பாடசாலையில் படித்துவிட்டு பிறகு ஆங்கிலப் பாடசாலையில் என்னை முதலாம் வகுப்பில் சேர்க்கும் போது பிரச்சினை எழுந்தது.
ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை படித்திருந்தால் தான் கற்பது இலகுவானது என்பது அவர்களின் வாதம்.
ஆனால் நான் ஆங்கிலத்தை வீட்டிலே கற்றுத் தேர்ந்துவிட்டேன். பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு எனது படிப்பைப் பார்த்த அதிபர் வியந்து என்னை இரண்டாம் வகுப்பில் விடாமல் மூன்றாம் வகுப்புக்கு உயர்ந்தினார். படிக்கும் காலத்தில் நான் ரொம்பவும் அழகாக இருந்திருக்கிறேன். (இப்போவும் வசீகரமாகத்தானே இருக்கிறீர்கள்!) அதனால் என்னோடு பெண் பிள்ளைகள் பேசுவற்கு ப்ரியப்படுவார்கள்.

ஆனால் நான்தான் அவர்களை விட்டு கொஞ்சம் விலகியே நின்றேன். அந்தளவிற்கு எனக்கு கூச்ச சுபாவம். எனக்கு பத்து, பதினைந்து வயதாகும் போதே எனக்குள் செக்ஸ் உணர்வு வர ஆரம்பித்து விட்டதை நான் உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அழகான பெண்பிள்ளை இருந்தாள். அவள் என்னோடு சேர்ந்துதான் விளையாடுவாள்.

குட்டைப் பாவாடை அணிவாள். அவள் மீது எனக்கு காதல் மாதிரி ஒரு ஈர்ப்பு. அதை அவளிடம் நான் சொல்லவில்லை. சொல்லவும் தெரியவில்லை என்பதுதான் சரி.

எப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று என் மனசு சொல்லும். அவள் என் அருகே வந்தாலேயே போதும் என் உடம்பில ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்வலை ஏற்படும். மனது கிடந்து தவியாய் தவிக்கும். ஆனால் என்ன செய்வது?

எனக்குத்தான் தைரியம் இல்லையே! அதைக் காதல் என்று சொல்வதைவிட ஒரு தலை காமம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னோடு படிக்கும் பொடியன்களுக்கும் அவள் மீது காதல்தான. எங்கள் வீட்டருகில் எங்களோடு கிரிக்கெட் விளையாட வரும் சாக்கில் அவளையும் எட்டிப்பார்ப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆத்திரம் பொத்திக்கொண்டுவரும்.

சின்ன வயதிலேயே எனக்கும், தம்பிக்கும் அப்பா நீச்சல் பழக்குவார். நான் கடைசிவரைக்கும் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை. தம்பி கற்றக்கொண்டான். படிக்கும் வகுப்பில் எனக்கு பிரச்சினை என்றால் தம்பிதான் எனக்காக சண்டை பிடிப்பான். அப்படியொரு பயந்தான்கொள்ளி நான்.

பிறகு நான் கொழும்பிற்கு வந்த பிறகு அவளையும் மறந்துவிட்டேன். அவள் இப்போது திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு எங்கேயோ சிறப்பாக ஆனால் என்னைப் போலவே வயதானவளாக வாழ்ந்து கொண்டிருப்பாள். ஹும்....

கொழும்பில் ஹேமாஸ் பில்டிங்கில் இயங்கிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உதவி பணிப்பாளராக நான் கடமையாற்றி வந்தேன். அங்கே என்னோடு பணியாற்றிய பெண்கள் அனைவருமே வசீகரமான உடைகளில் பளிச்சென வேலைக்கு வருவார்கள. என்னோடு வழிய வழிய வந்து பேசுவார்கள். எனக்கும் அவர்களோடு நெருங்கிப் பழக ஆசைதான்.

ஆனால் எனக்குள் இருந்த கூச்ச சுபாவம் அவர்களை என்னிடம் நெருங்கவிடாமல் செய்துவிட்டது. பிறகு ஒருநாள் ‘லயனல் வென்ட்’ அரங்கில் ஒரு நாடகம் பார்க்கச் சென்றேன். அதில் நடனம் ஆடிய ஒரு பெண்ணின் அழகில் நான் மயங்கிப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மு. தளையசிங்கத்துடன் கே.எஸ்.
ஒரு நாள் அவளை லோட்டஸ் ரோட் பஸ் தரிப்பில் கண்டேன். அது இப்போது மூடிக்கிடக்கிறது. பாதையில் செல்லும் பஸ்கள் எல்லாம் அங்கே தரித்து நின்று விட்டுத்தான் செல்லும். அந்த பஸ் தரிப்பில் அவள் தனியாக நின்று கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்ததும் அவளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை நெருங்கினேன். உடம்பில் திடீரென்று ஒரு படபடப்பு. நா வறண்டு போய்விட்டது.

பிறகு ஒருவாறு திக்கிமுக்கி “உங்கள் நாடகம் பார்த்தேன் பிரமாதம். நான் உங்கள் ரசிகன்” என்றேன். அவள் “தேங்ஸ்” என்றாள்.

அவ்வளவுதான். அதற்கு பிறகு அவளிடம் விடை பெற்று வந்துவிட்டேன். இதுதான் என் காதல் அனுபவங்கள் என்று தனது பழைய காதல் ஞாபகத்தில் மூழ்கிய சிவகுமாரனை நிகழ்காலத்துக்கு கொண்டு வர மறுபடியும் பேச்சு கொடுத்தோம். பேச்சு திருமணத்தின் பால் திரும்பியது.

“மூன்று முறை பெண் பார்க்கச் சென்றோம். மூன்றாவது பெண்ணைத்தான் எனக்குப் பிடித்திருந்தது. பட்டதாரிப் பெண்.

இருவரும் படித்தவர்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அந்தப் பெண்ணை மணந்தேன். அவள்தான் என் மனைவி என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன?”

கே. எஸ். திருமணம் 1966ம் ஆண்டு கொழும்பு கப்பிதாவத்தை கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது. கொஞ்சமாகத்தான் உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தார்களாம்.

அவர்களில் நான் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பிரமுகர், எஸ். பி. மயில்வாகனம் (ரேடியோ சிலோன் மயில்வாகனம்), தான் என்கிறார் இவர். திருமணத்தில் ஏதேனும் நடந்ததா என்றால், என் அலுவலக நண்பர்களுக்கு ஒரு ‘டீ பார்ட்டி’ வைத்தேன் என்கிறார். தேன்நிலவுக்கு எங்கும் போகவில்லையாம்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் என்றால், யோசித்துவிட்டு, கைலாசபதி என்றார். திறனாய்வுத்துறைக்குள் தன்னைப் பிடித்துத் தள்ளியவர் இவர்தான் என்று சொல்லும் கே. எஸ். சிவகுமாரன், தன்னால் மறக்க முடியாத மற்றொரு நபர் முன்னாள் டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியர் மேர்வின் டி சில்வா என்கிறார்.

ஆனால் தன் வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க ஆகிருதி கொண்ட நபர் என்று தான் எவரையுமே காணவில்லை என்று சொல்லும் இவர், இந்த வயதில் வாழ்க்கையை கொஞ்சம் சலிப்புடன் பார்ப்பது மாதிரியும் தெரிகின்றது.

வாழ்வில் உங்களை உலுக்கி எடுத்த சம்பவம் ஒன்றைச் சொல்ல முடியுமா என்றால், வாழ்க்கையில் நான் எதிர்பார்த்தவை எதுவுமே நடக்காமற் போனதுதான் சோகம் என்கிறார் கே. எஸ்.

“வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தோல்விகளும் ஏமாற்றங்களும் தான் எஞ்சி நிற்கின்றன. எனினும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். பொருளாதார ரீதியாக எனக்குப் பிரச்சினை கிடையாது.

நல்லவற்றை சிந்தனை செய். நல்லவற்றையே பேசு; முடிந்தவரையில் நல்ல வழியிலேயே நட என்பது நான் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டு வந்திருக்கும் வழிமுறை. அப்படித்தான் தொடர்ந்தும் இருந்து வருவேன்.

என்பதோடு இதைத்தான் ஏனையோரிடமும் நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறும் கே. எஸ்.

தனக்கு நிறைவுதரும் விஷயம் தன் பேரப்பிள்ளைகள் தான் என்கிறார். இவருக்கு இரண்டு மகன்மார். இருவருமே வெளிநாடுகளில். ஆகவே, பேரப்பிள்ளைகளும் அங்கேதான். இவர் அங்கே சென்றிருக்கும் போதெல்லாம் மனமாற அவர்களுடன் விளையாடுவாராம்.

“நாம் சில சமயம் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என் பேரப்பிள்ளகளை நினைத்துக் கொள்வேன். என்னைக் கீழே புரட்டிப் போட்டு முதுகில் குத்தமாட்டார்களா என்றிருக்கும்.

இப்போதும் அவர்கள் என்னைக் குத்துவதைத்தான் விரும்புகிறேன்” என்று சொல்லும் கே. எஸ்.

மிக நிறைவைத்தரும் விஷயமாக எதைக் கருதுகிறார்?

“என்னிடம் கற்ற மாணவர்கள் அவர்கள் பெரிய பெரிய படிப்புகளை முடித்து பெரிய இடங்களில் இருக்கிறார்கள். எனினும் என்னை மறக்கவில்லை Face book மூலம் என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறார்கள்.

எனக்கு மட்டுமல்ல எந்த ஒரு ஆரியனுக்கும் நிறைவைத் தரும் விஷயம்தான் இது”

சாய்பாபா மீது நம்பிக்கை கொண்ட கே. எஸ். இறை நம்பிக்கை மிக்கவர். இறைவன் மக்களை மறைமுகமாக வழிநடத்துகிறான் என்று நம்பும் இவர், இறைவன் மனிதருடன் பேசுகிறான் என்கிறார். கே. எஸ்., பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!

2 comments:

  1. சிவகுமாரன் அவர்களின் இளைமைப் பிராய நினைவுகள் மற்றும் இளைஞனின் காதல் பிதற்றல்கள் (என்றும் நிறைவேறாத காதல்) யாவும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்ட நேர்மை பிடித்துள்ளது

    ReplyDelete
  2. மிக சுருக்கமாக ஆனால் வெகு சுவையாகவும் அன்னம் வாங்கலியோ பவளக்கொடி படப் பாடல் -குட்டைபாவாடை காதல் உட்பட எல்லாம் நல்லாகவே உள்ளது ....உடுவை


    ReplyDelete